New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நான்மறை சொல்லினும் மெய்தனை அறி?


Guru

Status: Offline
Posts: 24601
Date:
நான்மறை சொல்லினும் மெய்தனை அறி?
Permalink  
 


நான்மறை சொல்லினும் மெய்தனை அறி?

குயவனின் இளமங்கையர் இருவரும் சாகட்டும்

[கட்டுரை ஆசிரியர் பெரியண்ணன் சந்திரசேகரன் சங்கத் தமிழ்மொழி, காப்பிய வடமொழி, வேதவடமொழி ஆகியவற்றில் நேரடி ஆய்வுத்தேர்ச்சி பெற்றவர்; மொழியியல்வழியாக வேதங்களிற் காணும் அயல்மொழிச் சொற்களைக் கொண்டு அதன்வழி வரலாற்றுக்காலத்துக்கு முந்திய தென்னாசியப் பொழிலின் மொழி நிலைமையைக் கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்; அவர் அண்மையில் அது தொடர்பாக Electronic Journal of Vedic Studies என்ற ஆய்வுத் தவணையத்தில் வெளியிட்டுள்ள Pleonastic Compounding : An Ancient Dravidian Word Structure என்ற கட்டுரையைப் பார்க்கவும்]

 

முன்னுரை:

வேதங்களைப்பற்றிப் பேசும்பொழுது இலக்கியங்களானாலும் சரி இன்றைய சமயக் கட்டுரைகளானாலும் சரி சிலவற்றை மீண்டும் மீண்டும் சொல்வதைக் கேட்கலாம்.  வேதத்திலே சொல்லாத உண்மைகள் இல்லையென்று கூறுவதும் அதிலே வன்முறை கொண்ட மறமேதும் இல்லை மென்மைகொண்ட அறம்மட்டுமே சொல்லியுள்ளது என்று கூறுவதும் இன்னும் இராமன், சிவன், முருகன் போன்ற எந்தக் கடவுளைப் பாடும்பொழுதும் அந்தக் கடவுள் வேதங்களின் வடிவம் அல்லது தொடக்கம் என்று கூறுவதும் மிகவும் வழக்கமாகக் கேட்கும். இது இறைவழிபாட்டுப் பாடல் இயற்றுவோரிடையே ஒரு வழக்கக்கடன் என்னுமாறு ஆகிவிட்டது.

ஆனால் உண்மை என்னவென்றால், அந்தக் கூற்றுக்கள் பல பொருந்தாதவை; அவை மரபிலே நம்பிக்கையடியாக ஊன்றிப்போய்விட்ட வழக்குகளே.

அதனைக் கண்டுணர நாம் புறநானூற்றுப் பாடல் ஒன்று வேதங்களிலே அறம் மறம் இரண்டும் பற்றிச் சொல்வதையும் வேதத்திலே அதற்கு எதிராகச் சான்றுகள் உள்ளமையும் காண்போம்.

புறநானூற்று 362-ஆம் பாடல் சிறுவெண்தேரையார் என்ற புலவர் போர்முகத்திலே நின்று அந்தணர்களைக் கூவி ஆங்கே நிகழ்கின்ற போரைச் சுட்டிச் சொல்வதாக அமைந்துள்ளது. அந்தப்பாட்டுப் பாடுவது: “கணங்கொள்தானை … தாக்குரல் கேண்மின்அந்தணாளிர்நான்மறைக் குறித்தன்றுஅருள்ஆகாமையின்” (புறநானூறு: 362:8-10); அதன்பொருள், “கூட்டங் கொண்ட தானையிடத்தேயிருந்து … பகைவரைத் தாக்குதற்குச் செய்யும் முழக்கத்தைக் கேட்பீராக, அந்தணர்களே! இஃது அருட்செயலன்மையால் நும் நான்மறைக்கண் குறிக்கப்படுவதன்று” என்பதாகும்.  அத்தாவது, நான்மறைகளாகிய நால்வேதங்களில் போர்போன்ற அருளற்ற செயல்கள் குறிப்பதில்லை என்று நினைக்கிறது. ஆனால் இந்தப் பாட்டிற் சொல்லியுள்ளது உண்மையா என்று நேரடியே வேதத்தினை ஆராய்ந்து காண்போம்.

நால்வேதங்கள் இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்ற வேதங்கள் ஆகும்; அவற்றுள் மிகப் பழையது இருக்குவேதம் (Rig Veda); அதன்பாடல்கள் வெவ்வேறு புலவர்களால் கி.மு. 1500-1200 என்கின்ற காலக்கட்டத்திலே இயற்றினவையாகும்[ii] (விற்றுசல், 1999, பக்கம் 2). மற்ற மூன்று வேதங்கள் கணிசமாக இருக்குவேதத்தையே சார்ந்தவை. அதர்வணவேதம் பேய்பிசாசு விரட்டல், நோய்ப்பிணி தீர்ப்புப் போன்றவற்றைப் புதிதாகச் சேர்த்துள்ளது. இருப்பினும் அவையெல்லாமே கி.மு. 1000-க்கு முந்தியவை. இன்று வழக்கொழிந்த கடவுளர்களைப் பாடிப்பரவி வேள்வி வேட்கும் நெறியில் ஒழுகும் பண்பாட்டு நிலைமையைத் தழுவியவை.  இங்கே புழங்கியுள்ள வேதப்பதிப்புக்களுக்குக் கட்டுரையின் இறுதியில் உள்ள வரிசையைக் காணவும். இங்கேயுள்ள மொழிபெயர்ப்புக்கள் நேரே வடமொழியினின்றும் பெயர்த்தவை; ஆயினும் மற்ற அறிஞர்களின் ஆய்வுகளைக் கவனித்துச் செய்தவை.

இப்பொழுது நால்வேதங்களில் மிகப்பழையதான இருக்குவேதத்தினைப் பார்த்தால் அவற்றின் பாடல்களில் காணும் ஒருதவறாத வழக்கம் போர்களாகும். இந்திரன் பொருத போர்களையும் அப்போர்களிலே இந்திரன் எப்படி எதிரிகளைக் கொன்று வென்றான் என்பதையும் மீண்டும் மீண்டும் இருக்குவேதச் செய்யுள்கள் பாடும். சான்றாகச் சம்பரன் என்ற எதிரியை அதிதிக்குவன் என்பவன் பொருட்டாக இந்திரன் கடுமையானவனாய் (உக்கிரனாய்) மலையிலிருந்து கீழே வீசினான் என்பதை இருக்குவேதத்துப் பாடல் “அதிதி2க்வாய சம்ப3ரம் கி3ரேர் உக்3ரோஅவாப4ரத்” (1:130:7) என்ற சொற்களாற் சொல்லும்.

இப்படிப்பட்ட பாடல்கள் ஒருபால் இருக்கவும் மறுபாற் சில பாடல்கள் எதிரியின் குடும்பத்தாரைக்கூட அழிக்குமாறு வேண்டிப் பாடும். குயவன் என்பவன் இருக்குவேதத்திலே வெவ்வேறு இடங்களில் பாடும் மிகவும் நன்குதெரிந்த ஒரு எதிரி. அப்பாடல்களுள் ஒன்று “பாலிலே குளிப்பவர்கள் குயவனின் இளமங்கையர்; அவர்கள் இருவரும் சிப்பா யாற்றின் சரிவிலே சாகட்டும்” என்ற வேண்டுதலையைக் “க்ஷீரேண ஸ்நாத: குயவஸ்யயோஷேஹதே தே ஸ்யாதாம் ப்ரவணே சிபா2யா:” (1.104.3) என்ற சொற்களாற் சொல்லுகின்றது[iii].

அடுத்து வேதங்களிலே நோயோட்டும்பொழுது நோய் தங்களைவிட்டு மற்ற நாட்டாரையும் இனத்தாரையும் சென்றடையுமாறு வேண்டிக்கொள்ளும் மொழிகளையும் காணலாம். முன்பே கூறினதுபோல் அதர்வணவேதம் இதுபோல் நோய்தீர்ப்புப் பேய்பிசாசு விரட்டல் போன்றவற்றில் மிகுந்துள்ளது. அதன் ஒரு படலம் தக்குமம் என்ற நோயை விரட்டும் மொழிகள் கொண்டது;  அந்த நோய் காய்ச்சல், இருமல், சிவந்த தோற்கொப்புளங்கள் போன்ற அறிகுறிகள் கொண்டது என்பதனை அதே படலத்தின் சில செய்யுளாலேயே அறிகிறோம் (5:22:3). அதனை விரட்டும் ஒரு செய்யுள் காண்போம்:

தக்மந் மூஜவதோ கச்ச2, பல்ஹிகாந் வா பரஸ்தராம் |

சூத்3ராம் இச்ச2 ப்ரப2ர்வ்யம், தாம் தக்மந் வீவ தூ4நுஹி ||” (அதர்வண வேதம்: 5: 22:7)

“தக்குமமே! மூசவந்தர்களிடம் செல், அல்லது தொலைவாகப் பல்கிகர்களிடமோ (செல்); காமம்மிஞ்சிய சூத்திரப்பெண்ணைக் குறிக்கொள், அவளைக் கொஞ்சம் அலைக்கழி!” என்று பொருள்படும். இங்கே மூசவந்தர், பல்கிகர் ஆகியோர் வடமேற்கிலே இன்றைய ஆப்புகானித்தான் பக்கம் வாழ்ந்த வெவ்வேறுநாட்டார் ஆவர்; அவர்கள் இடக்குறிப்புக்களைப் பேராசிரியர் விற்றுசலின் வேதக்கால இனக்குடிகள் வரைவிலே காணவும் (http://www.people.fas.harvard.edu/~witzel/Local-map1.jpg). சூத்திரர் வேதக்காலத்திலே ஆரியமக்களுக்கு அடங்கிப்போய்க் கீழ்நிலையில் வைத்திருந்த குடிகள்; கிரேக்க மன்னன் அலெக்குசான்றர் காலத்திலே கூட வடமேற்கு இந்தியாவிலே சூத்திரோய் என்ற இனக்குடி இருந்ததாகக் கிரேக்கர் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. (விற்றுசல், 1999, பக்கம் 39).  நோய்நொடிகளை விரட்டும்பொழுதுகூட அவற்றை மற்ற மக்கள்மீது ஏவுவதுகண்டபின்னும் அருளாகாமை நான்மறைகளில் குறிப்பதில்லை என்று புறநானூற்றுப் புலவர் பாடமாட்டார்!

வேதம்பற்றிய மரபுநிலைமை இப்படியானதற்குப் பலகாரணங்கள் உண்டு.

முதற்காரணம் இருக்குவேதம் பாடின வடமொழி பேச்சிலே வழக்கொழிந்து போகவும் அதன் பொருள் விளங்காமல் போகிவிட்டது. இருக்குவேதத்து வடமொழி பிற்காலக் காப்பியங்களான வால்மீகி இராமாயணம் மகாபாரதம் போன்றவற்றின் வடமொழியினின்றும் மிகவும் வேறுபட்டது. எனவே அந்தக் காப்பிய வடமொழி தெரிந்தும் வேதம்விளங்காமல் போகிவிடும்.

அடுத்து வேதம்பாடின ஆரியர்களின் வழித்தோன்றல்கள் மதம்மாறி விட்டார்கள்: அத்தாவது, வேதங்களில்  பாடியுள்ள கடவுளர்களை விட்டுவிட்டு முற்றிலும் வேறுபட்ட கடவுளர்களைப் பேணத் தொடங்கினார்கள்[iv].  சான்றாகப் பூசன் (Pūṣan), மித்திரன், வருணன் போன்ற தலைசிறந்த வேதக்கடவுளர் மறந்து பின்னர் அவற்றில் சொல்லாத கிருட்டிணன், இராமன், சிவன் போன்றோர் ஆரியரிடையே ஊன்றினர். அதனால் இன்னும் வேதங்களின் பொருள் விளங்காமல் மறைந்தது. ஆயினும் பொருள்தெரியாவிடினும் வேதத்தினைச் செய்வினைகளில் (சடங்குகளில்)  ஓதுவதையும் அதன் பெருமதிப்பினையும் கைவிடவில்லை. எனவே வெறுமனே அதனைப் பேணிப்பாராட்டல் என்பதையேகூடப் பெரிதாகக் கருதினர். இந்த மதிப்பால் பின்னால் ஏற்றுக்கொண்ட கடவுளர்களைப் பாராட்டும்பொழுதுகூட அவர்களை வேதத்தோடு இணைத்துப் பாடுவதும் வழக்கமாகிவிட்டது.|
இப்படியேதான் பிற்காலத்திலே அவரவர்கள் தாங்கள் நல்லது என்று நினைப்பதெல்லாம் வேதங்களிலே நவின்றுள்ளதென்றும் உலகவரலாற்றில் வழக்கமான போர்போன்றவைகூட அவற்றிலே சொல்வதில்லை என்றும் ஒரு நம்பிக்கை மரபும் சேர்ந்துகொண்டது.

இங்கே குறிப்பிடவேண்டியது என்னவென்றால், நான்மறைகளிலே மேற்கண்ட செய்திகளைச் சுட்டிக்காட்டுவதால் அவற்றை இகழ்வதாக யாரும் நினைக்கவேண்டியதில்லை. இதன் நோக்கம் மக்கள் தத்தம் காலநிலைகளில் நிலவிய கொள்கைகளை நான்மறைகளின்மேல் ஏற்றிப் பேசியுள்ளனர் என்பதனையும் அந்தப் பிழைகளை இனிமேலாவது தவிர்த்து மெய்யினை அறியவேண்டும் என்பதே. அல்லாவிட்டால் வரலாற்றுக் குழப்பம், சமுதாயக் குழப்பம், மூடநம்பிக்கைகள் பெருகும்; மேலும் இதே பழக்கந்தான் சமயத்தலைவர்களின் சொற்களை ஆராய்வதிலும் தொடரும்; இதனால் சமுதாயத்திலே இறைக்கோட்பாட்டுகள் வழியாக மக்களை ஏமாற்றும் வழக்கமும் பெருகும்; அவை எல்லாவற்றாலும் தனியாளுக்கு இன்னல்களும் மக்களிடையே சண்டைசச்சரவுகள் போன்றவையுந்தாம் பெருகும்.

முடிவுரை:

நான்மறைகள் மிகவும் தொல்பழமையான மொழிக்கருவூலங்கள். அவற்றிலே தென்னாசியப்பொழில்பற்றி மொழியியல், இறையியல், வரலாறு போன்ற பல்வேறு துறைகளின் நோக்கில் அரிய சான்றுகள் பொதிந்துள்ளன. தமிழர்களின், திராவிடர்களின் வரலாறும் அவற்றிலே பல்வேறுமுகமாகப் பொதிந்துள்ளன. எனவே அவற்றை மிகுந்த பண்போடு ஆனால் நடுநிலைமையோடு பேணி உண்மைகளை ஆராய்ந்து நம்மையும் நம் சமுதாயத்தையும் நெறிப்படுத்திக்கொள்வது நம் கடமையாகும்.

வேதப் பதிப்புச் சான்றுகள்

Rig Veda: 1.104: http://flaez.ch/cgi-bin/rv.pl?nr=104&txt=shppgr

  • Witzel, Goto, Doyoma: 2007: Rig Veda, Das Heilige Wissen, Erster und zweiter Liederkreis, Verlag der Weltreligionen.
  • Gelder, K.F.: Der Rig-Veda aus dem Sanskrit ins Deutsche übersetzt,  http://www.thombar.de/1_lk.htm

Atharva Veda Samhita, edited by K.L. Joshi, according to the translations of W.D. Whitney and Bhashya of Sayanacharya, Vol. I, Parimal Publications,  Delhi, 2000.


 புறநானூறு, 201-400, ஔவை சு. துரைசாமிப்பிள்ளை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1996.

[ii] விற்றுசல், மைக்கல் . “Early Sources for South Asian Substrate Languages”, 1999:http://www.people.fas.harvard.edu/~witzel/MT-Substrates.pdf .

[iii] கோற்றோவின் மொழிபெயர்ப்பு இது. ஆனால் கிரிப்பித்து (Griffith) யாற்றின் ஆழத்தில் என்றும், கேல்றுனர் (Geldner)  யாற்றின் வெள்ளவோட்டத்திலே என்றும் பொருள்கொள்வர்.

[iv] வேதக் கடவுளர்பற்றி அறிய Hillebrandt, Alfred, 1853-1927. : Vedic mythology, translated from the original German by Sreeramula Rajeswara Sarma என்ற நூலை ஓதவும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

40. தமிழ் வேதம்,  தமிழர் வளர்த்த வேதம்

தொல்காப்பியம் ‘நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசான்’ முன்னர் அரங்கேறியது என்பது தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியார், இவை ‘தைத்திரியமும், பௌடிகமும்,    தலவகாரமும் சாம வேதமும்’ என கூறுகின்றார். இவை ரிக் யஜுர் சாம அதர்வணம் என்பது பொருந்தாது என்கிறார்.  எனவே நச்சினார்க்கினியர் கூறும் இவை நான்கும் எவை என்பதை நாம் காணலாம்.

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் ‘சந்தோகன் பௌழியன் ஐந் தழலோம்பு தைத்திரியன் சாம வேதி’ என சொல்கிறார். ’பந்தார் மெல்விரல்’ எனும் பாசுரத்தில் ‘சந்தோகா! பௌழியா! தைத்திரியா சாமவேதியனே!’ என்கிறார். கோக்கருநந் தடக்கன் எனும் மன்ன்னின் செப்பேட்டில் நாம் ’பவிழிய சரணத்தார்’ ‘தயித்திரிய சரணத்தார்’, ‘தலவகாரச் ச்ரணத்தார்’ எனும் வார்த்தைகளை பார்க்கிறோம். இவை யாவை?

மார்க்சிய ஆராய்ச்சியாளரும் சட்டவல்லுநருமான வெ.கிருஷ்ணமூர்த்தி வேத இலக்கியத்தின் வளர்ச்சியையும் கிளை பிரிதலையும் விளக்கியுள்ளார். பழமையான வேத இலக்கியங்கள் சம்ஹிதைகள் ஆகும். இவற்றுக்குப் பின்னால் பிராமணங்கள் , ஆரணியகங்கள் ஆகியவை உருவாகின. பின்னர் மேலும் விரிவடைந்து உபநிடதங்கள் தோன்றின. உபநிடதங்கள், பிரம சூத்திரம், தரிசன்ங்கள் எனப்படும் ஒரு பிரிவும், கல்ப சூத்திரங்கள் எனப்படும் மற்றொரு பிரிவும் உண்டாகியது. இந்த கல்ப சூத்திரங்கள் எனும் பிரிவிலேயே ஸ்ரௌத சூத்திரங்கள், க்ருஹ்ய சூத்திரங்கள், தர்ம சூத்திரங்கள் ஆகிய மூன்று வகைகள் உருவாகின. இவற்றின் பிரிவாக பின்னர் ஸ்மிருதிகள் இணைக்கப்பட்டன. இவை ஒவ்வொன்றும் ஒன்றோடொன்றாக பின்னலமைப்புகளாக தொடர்புகள் உருவாக்கப்பட்டு அமைக்கப்ப்ட்டன.

உதாரணமாக ரிக்வேத சம்ஹிதையுடன் ஐத்ரேய மற்றும் கௌக்ஷிதகி பிராமணம் அதே பெயர்களில் ஆரணியக நூல்கள் அதே பெயர்களில் உபநிடதங்கள் பின்னர் வசிஷ்ட தரும சூத்திரம் இந்த சம்ஹிதையுடன் தொடர்புடையது. யஜுர்வேதம் சுக்ல யஜுர்வேதம், கிருஷ்ண யஜுர் வேதம் என இரண்டாக பிரிக்கப்படும். அதில் கிருஷ்ண யஜுர் வேத சம்ஹிதைக்கு தைத்திரிய பிராமணம், தைத்திரிய ஆரணியகம் மற்றும் தைத்திரிய உபநிடதம். தரும சூத்திரங்களாகுபவை ஆபஸ்தம்பம், வைகானச ஸ்மார்த்த சூத்திரம், வாஜசனீயம் ஆகியவை.  இப்படி ஒரு பெரும் இலக்கிய பின்னல் தொகுப்பையே வேத இலக்கியம் என சொல்லும் வழக்கமும் உண்டு.

இங்கு ஒரு முக்கிய அணி சேர்தலை காணலாம். அவை ஞான காண்டம் கர்ம காண்டம் என்ற விதத்தில் அமைகின்றன. உபநிடதங்கள் ஞான காண்டம் என்றால் கர்ம காண்ட நூல்கள் பிராமணங்களை மட்டுமன்றி அவற்றுடன் இணைத்து உருவாக்கப்பட்ட கல்ப சூத்திரங்கள் அவைகளில் வகைப்படுத்தப்பட்ட ஸ்ரௌத சூத்திரங்கள், க்ருஹ்ய சூத்திரங்கள் தரும சூத்திரங்கள் ஆகிய அனைத்தும் இணைந்தவை ஆகும். இவற்றுள் ஸ்ரௌத சூத்திரங்கள் அரச உரிமையுடன் இணைந்த யாகங்கள் குறித்தவை. கருஹ்ய சூத்திரங்கள் தனிமனித குடும்ப சடங்குகள் குறித்தவை. தரும சூத்திரங்கள் தனிமனித –சமுதாய உறவுகள் குறித்தவை. இந்த தரும சூத்திரங்களே இன்று நாம் கடுமையாக தாக்கும் ‘சாதிக்கொரு நீதி’ என்கிற கருத்தாக்கத்தை அடிப்படையாக கொண்டவை. பேரரசுகள் உருவான போது சமூக ஒழுங்கை வேண்டிய அரசர்கள் இந்த தருமசூத்திரங்கள் கற்பிக்கப்படுவதை ஆதரித்தனர். இந்த முழு தொகுப்பையும் வேதம் என அழைப்பது பொதுவில் இருந்தது  என்பதை நாம் ஏற்கனவே கண்டோம்.

பவிழியம் என பார்த்திவ சேகரபுரம் செப்பேடும் பௌடிகம் என நச்சினார்க்கினியாரும் பௌழிய என பெரிய திருமொழியும் சொல்வது எதை? விதி விலக்காக பிராமணங்களுக்கு பிறபட்ட பவிஷ்ய புராணத்தை தன் முதல் நூலாக கொண்டிருக்கும்  ஆபஸ்தம்ப சூத்திரத்தை என்கிறார் வெ.கிருஷ்ணமூர்த்தி. இந்த சூத்திர நூல் தனி ஒருவரால் எழுதப்பட்டதில்லை. யஜுர்வேத பிரிவைச் சேர்ந்தவர்களால் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதற்கு இந்த சூத்திரத்திலேயே உள் ஆதாரமாக ‘வாஜசனீய பிராமணம்’ மேற்கோள் காட்டப்படுகிறது.. இது யஜுர்வேத்த்தின் பிராமணம் ஆகும். மேலும் ஆபஸ்தம்பிய வகுப்பு அந்தணர்கள் தென்னிந்தியாவைத் தவிர வேறெங்கும் காணப்படவில்லை. ஆக பவிழியம் அல்லது பௌடிகம் அல்லது பௌழியம் எனப்படுவது ஆபஸ்தம்ப சூத்திரத்தையே குறிக்கும். வேத பண்பாட்டில் தமிழ்நாட்டுக்கென்றே  தனித்தன்மையுடன் உருவான ஒன்றாக இது உருவாகியிருக்க வேண்டும்.

இதே போல தைத்திரியம் கிருஷ்ண யஜுர் வேதத்தைச் சார்ந்த்தாகும். தலவகாரர் என்பது க்ருஹ்ய சூத்திரத்தின் உபகர்ம பகுதியில் சொல்லப்படும் 13 மகரிஷிகளில் ஒருவரின் பெயராகும். தலவாகாரம் என்பது சாம வேத பிரிவினில் எழுந்த கௌதம தரும சூத்திரங்களை அடிப்படையாக கொண்டதாகும் என்கிறார் வெ.கிருஷ்ணமூர்த்தி.

ஆக பவுடியம், தைத்திரீயம், தலவாகரம் என்பவை தெளிவாக தரும சூத்திரங்களை குறிப்பவை ஆகும். அவை ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்களை குறிப்பவை அல்ல. மாறாக அவற்றை அடியொற்றியதாகக் கூறி  எழுந்த வாழ்வியல் சட்ட நூல்களான தரும சாத்திரங்களை குறிப்பவை ஆகும். இந்த நூல்கள் மனுவுக்கு முந்தையவையும் ஆகும். தொல்காப்பியம் வாழ்வியலை வரையறுக்கும் இலக்கண நூல் என்பதை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இது தெளிவாக விளங்கும்.

இனி சாமவேதத்துக்கு வருவோம். இந்த வேதத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு தனி சிறப்பான உறவு உள்ளது. நம்மாழ்வார் சாமவேத சாரமாக செய்த  திருவாய் மொழியில் ‘எங்கும் எழுந்த நல் வேதத் தொலி  நின்றோங்கு  தென் திருப்பேரையில் வீற்றிருந்த’ என்கிறார். இங்கு ’நல் வேத்த்தொலி’ என நம்மாழ்வார் குறிப்பிடுவது  சாம வேத சாகையில் வரும் கான்ங்களையே. இன்றைக்கும் தென் திருப்பேரை (வ.உ.சிதம்பரனார் மாவட்டம்) கிராமத்தின் அந்தணர்கள் அனைவரும் சாம சாகையை சேர்ந்தவரே. திராவிடத்தின் தனித்தன்மையாகிய ‘ழ’காரம் இந்த சாமசாகை ஓதுதலில் (பாடுதலில்) காணப்படுகிறது.

ஆக தனித்தமிழ் வேதம் என்கிற போலிப் பெருமைக்கு அப்பால் வேதம் வளர்த்த தமிழகம் என்கிற உண்மை பெருமையே நமக்கு இன்னும் சிறப்பளிக்கிறது.

 

மேலதிக விவரங்களுக்கு:

  • ·         வெ.கிருஷ்ணமூர்த்தி, தமிழ்வேதம் – ஓர் ஆய்வு, ஆய்வு வட்டக் கட்டுரைகள், சென்னை-7, 1995 பக்.51-68
  • ·         T.N. மகர பூஷணம் அய்யங்கார், ஸ்ரீ ஜைமினி ஸாமவேத தலவகார ஸாகையின் ஸாராம்ஸங்கள், in Vedas : Traditional and Modern Perspectives, (Gen. Editor Dr.V.Kameswari), குப்புசாமி சாஸ்திரிகள் ஆராய்ச்சி மையம், மைலாப்பூர், சென்னை, 
  • http://www.tamilpaper.net/?p=3906


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

யார் தமிழ் எதிரி? எவர் தமிழ் உணர்வற்றவர்?

 

கலாம் சமஸ்கிருதம் பற்றிய பதிவில் தனித்தமிழ் நடை குறித்து நான் சொன்ன ஒரு கருத்தை வைத்துப் பலரும் கும்மியடிக்கக் காண்கிறேன். என் தமிழ் உணர்வும், தமிழ்ப்பற்றும் பற்றி எனது பதிவுகளையும், இதற்கு முன் திண்ணையில் எழுதிவந்தவற்றையும் படித்தவர்கள் நன்கு அறிவார்கள்.

முதலில் நான் தமிழில் நல்ல கலைச்சொற்களை அறிமுகப்படுத்தும் முயற்சிக்கு எதிரானவனில்லை, ஆரவாரமில்லாமல் இத்தகைய சொற்களைப் பயன்படுத்தி வழிகாட்டி வருபவன். (உதாரணமாக, பத்ரியின் சம்ஸ்கிருதம் பற்றிய பதிவில் cryoptology என்பதற்கு நான் முதலில் பயன்படுத்தியிருந்த "குறியீட்டு இயல்" என்ற சொல்லே வந்தது கண்டு மகிழ்ந்தேன்). ஆனால் அதே நேரம் தமிழ்ப்படுத்துகிறேன் என்று பல பெயர்ச்சொற்களை தமிழில் படுத்தும் போக்கை ஏற்காதவன். ஸ்டாலின் என்ற பெயரை இசுடாலின் என்று இங்கே ஒருவர் எழுதுகிறார். இதே போக்கில் ஸ்விட்ஸர்லாண்ட் என்பதற்கு இசுவிச்சர்லந்து என்பதையும் ஸ்பெய்ன் என்பதற்கு இசுபெயின் என்பதையும் என்னால் (கொஞ்சமாவது பொதுப் புத்தியும், அழகியல் பற்றிய பிரக்ஞையும் உள்ள யாராலும்) ஏற்க முடியாது. நான் சொல்ல வந்தது இதைத்தான். தமிழைக் குறித்தோ அதன் தொன்மை குறித்தோ எந்த விமர்சனத்தையும் நான் வைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட 'புனிதப் பசு" பதிவர் ஒருவரது புரியாத நடையைக் கொடுந்தமிழ் நடை என்று சொன்னது மாத்திரம் தான் நான் செய்தது.

இதே அடிப்படையில் தமிழில் இயல்பாகப் புழங்கும் சம்ஸ்கிருதச் சொற்களை வேண்டுமென்றே நீக்கி, அபத்தமான “தனி”த் தமிழ் என்பதாக எழுதுவதையும் எதிர்க்கிறேன். திரு. பத்ரி அவர்களும் இதில் என்னுடன் உடன்படுகிறார்.

இன்றைய காலகட்டத்தில், இந்த வக்கிரமான தனித் தமிழ் கருத்தை தூக்கிப் பிடிக்கும் எண்ணத்தின் பின்னால் ஒளிந்திருப்பவை இந்தத் தவறான புரிதல்கள் தான் -


  • சம்ஸ்கிருதமும், தமிழும் ஒன்றுக்கொன்று எதிரிகள். அவற்றுக்கு இடையே வரலாற்று ரீதியான மோதல் உள்ளது.
  • வட இந்தியர்கள் மற்றும் சம்ஸ்கிருதத்தை எதிர்க்காத அல்லது உயர்வாக மதிக்கும் எல்லா சாதிகளையும் சேர்ந்த எல்லா இந்தியர்களும் பார்ப்பனர்கள். தமிழ் எதிரிகள், துரோகிகள், தமிழர்களை அடிமைப் படுத்தத் துடிப்பவர்கள். (இதன் ஆணிவேர் ஆரிய திராவிட இனவாதத்தில் உள்ளது).
  • சம்ஸ்கிருதம் பிராமணர்களின் மொழி. அதில் நல்லது என்று எதுவுமே இல்லை. அது தீயது. அது அரக்கன். அது பாம்பு.

இவை அனைத்தும் எவ்வளவு பெரிய அண்டப் புளுகுகள், இந்திய தேசிய சிந்தனைக்கு எதிரானவைகள், தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கே எதிரானவைகள் என்பதைச் சொல்லத் தேவையில்லை. மொழிப் பாதுகாப்பின்மை பற்றிய ஒரு கேவலமான தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி அதில் கொஞ்ச காலம் வெற்றிகரமாகக் குளிர் காய்ந்த அரசியல் கொள்கைகளின் எச்சங்கள் தான் இவை. இவற்றின் காலம் மலையேறிவிட்டது என்று எல்லாத் தமிழர்களும், குறிப்பாக ஒருங்கிணைந்த, வலுவான இந்திய தேசியத்தின் ஊக்கத்தால் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் உயர்ந்த நிலை அடைந்திருக்கும் தமிழர்கள் உணர வேண்டும். உரத்துச் சொல்ல வேண்டும்.

இரண்டாயிரம் ஆண்டு தமிழ் இலக்கியத்தின் பாரம்பரியத்திற்கே எதிரானது இந்த “தனித் தமிழ்” ஜல்லி. தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலம்பு, திருக்குறள், கம்பராமாயண காலத்திலிருந்து இந்த நூற்றாண்டு வரை ஒரு உயிர்த் துடிப்புள்ள மொழி செய்துவரும் அற்புதமான பரிசோதனைகளின் பரிமாணங்கள் தான் சம்ஸ்கிருத மற்றும் பிற மொழிச் சொற்களின் இயல்பான கலப்புகள். இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாதவர்கள் குருட்டுத் தனமான மொழித் தீவிரவாதிகளே அன்றி மொழியை வளர்ப்பவர்கள் அல்லர்.

என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கி வந்துள்ள பின்னூட்டங்களைப் புறக்கணித்து சில எதிர்க்கருத்துக்களுக்கு மட்டும் இங்கே பதில் சொல்கிறேன். இந்த அரிய தகவல்களில் சிலவற்றை எனக்கு அருளி உதவிய சான்றோர் ஒருவருக்கு நன்றியுடன் கடமைப் பட்டுள்ளேன்.

சம்பந்தர்:

தமிழன் என்பவர் எழுதுகிறார்:

"திருஞானசம்பந்தப் பெருமானே தமிழில் வடமொழி ஆதிக்கத்தைக் கண்டு வெறுப்படைந்தவர்தான். தன்னைப் பல இடங்களில் தமிழ்ஞானசம்பந்தன் என்றே அழைத்துக் கொள்கின்றார்.தனக்கு பூணூல் அணிவித்தபோது கூட காயத்திரி மந்திரம் வேண்டாம் என்று தமிழிலே சைவ வாழ்த்து பாடச்சொல்கிறார்."

இது எப்படி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய், திரிபுவேலை என்று பார்ப்போம். திருஞானசம்பந்தருக்குப் பூணூல் அணிவித்த சடங்கு முடிந்ததும் அங்கே வந்திருந்த வேத பண்டிதர்களுக்குப் பாடியதாகச் சொல்லப்படும் பஞ்சாக்கரப் பதிகத்தில் வரும் இந்தப்பாடல்:

மந்திரம் நான்மறை யாகி வானவர்

சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன

செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்கு

அந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே

'நமசிவய' என்ற திருவைந்தெழுத்தே மந்திரங்கள் அனைத்திற்கும் மூலம் என்றும், தீ வளர்த்து ஓம்பியிருக்கும் வேதியர் முப்போதும் ஓதும் சந்தியாவந்தன மந்திரத்திலும் மூலமாயிருப்பது அதுவே என்கிறார். ஏனெனில் ஐந்துமுகம் கொண்ட வேதமாதாவான காயத்ரி தேவியே சதாசிவபத்னியான மனோன்மணி. காயத்ரி அஷ்டோத்திரத்திலே மனோன்மண்யை நம: என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. காயத்ரி தியான மந்திரத்தில் வரும் 'முக்தா, வித்ரும, ஹேம, நீல, தவளம்' என்ற இந்த ஐந்து வண்ணங்கள் பஞ்சபூதங்களையும் சதாசிவத்தையும் சுட்டுகின்றன. மாணிக்கவாசகர் சிவபுராணத்திலே 'நிறங்கள் ஓர் ஐந்துடையாய்' என்றதும் அதனால்தான். இதிலே காயத்ரி மந்திரம் வேண்டாம் என்று எங்கே சொல்கிறார்?


sambandhar_palani.jpg

மேலும் 'திருஞானசம்பந்தர் வடமொழி ஆதிக்கத்தைக் கண்டு வெறுப்படைந்தவர்தான்' என்றொரு அடாத பொய்யைச் சொல்லி இருக்கிறார்.
இதையெல்லாம் மிசினரிமார்தான் இட்டுக்கட்டிச் சொல்வார்கள்.

பதிகத்துக்குப் பதிகம் இறைவனை வேத உருவாகக் கண்டவர் 'வேதநெறி தழைத்தோங்க' (சேக்கிழார் வாக்கு) வந்த திருஞானசம்பந்தர். வேதம் என்பதை “மெய்யறிவு” என்பதாக மட்டுமல்ல ரிக், யஜுர், சாம, அதர்வ வேதங்கள் என்ற பொருளிலேயே ஏராளமான பாடல்களில் பாடியுள்ளார் –

“வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாக.. “
“வேதமொடு ஆறங்கம் ஆயினானை.. “
“சாகை ஆயிரம் உடையார்.. “ (ஆயிரம் கிளைகள் உள்ள “ஸஹஸ்ர சம்ஹிதா” என்று ரிக்வேதத்தை குறிப்பிடுவார்கள்)

திருமூலர்:

சம்ஸ்கிருத ஐம்பது எழுத்துக்கள் அடிப்படையில் ஒலிக்குறிப்புகளாகும். இவை பலவித சேர்க்கையில் (combination) அண்டசராசரங்களின் தோற்றத்திற்கும் அடிப்படையாகும். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால் ஐந்தெழுத்தின் சூட்சுமத்தையும் புரிந்து கொள்ள முடியும் என்று பாடுகிறார் திருமூலர்.

ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும்
ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின்
ஐம்பது எழுத்தும் ஐந்தெழுத் தாமே


வள்ளலார்:

வள்ளலாரது திருவடிப் புகழ்ச்சியின் பாடல்களில் பல முழு சம்ஸ்கிருதத்தில் உள்ளன என்று சொல்லியும் சில மூடர்கள் அவர் சம்ஸ்கிருத வெறுப்பாளர் என்று இன்னும் வாதிடுகின்றனர். அந்த நூலின் முதற்பாடல் இதோ –

பரசிவம்சின்மயம் பூரணம் சிவபோக பாக்கியம் பரமநிதியம்

பரசுகம் தன்மயம் சச்சிதா னந்தமெய்ப் பரமவே காந்தநிலயம்

பரமஞா னம்பரம சத்துவம கத்துவம் பரமகை வல்யநிமலம்

பரமதத் துவநிரதி சயநிட்க ளம்பூத பௌதிகா தாரநிபுணம்

பவபந்த நிக்ரக வினோதச களம்சிற் பரம்பரா னந்தசொருபம்

பரிசயா தீதம்சு யம்சதோ தயம்வரம் பரமார்த்த முக்தமௌனம்

படனவே தாந்தாந்த மாகமாந் தாந்தநிரு பாதிகம் பரமசாந்தம்

பரநாத தத்துவாந் தம்சகச தரிசனம் பகிரங்க மந்தரங்கம்

பரவியோ மம்பரம ஜோதிமயம் விபுலம் பரம்பர மனந்தமசலம்

பரமலோ காதிக்க நித்தியசாம் பிராச்சியம் பரபதம் பரமசூக்ஷ்மம்

இதில் மெய் என்பது தவிர அத்தனையும் செஞ்சம்ஸ்கிருதச் சொற்கள். அற்புதமான ஞான, யோக தத்துவங்கள் அடங்கிய இந்த நூலை இங்கே படிக்கலாம்.


vallalar.jpg


சன்மார்க்கம், சமரசம், அத்துவிதம் போன்ற வடசொற்களைத் தவிர்த்து தனித்தமிழில் அமைக்குமாறு சிலர் சொல்ல 'நிறைமொழி மாந்தர் ஆணையிற்' பிறந்த எல்லாம் மறைமொழிகள்தாம். அதில் மொழி பேதமில்லை, மாற்ற முடியாது என்று வள்ளலார் சொன்னார் என்று படித்திருக்கிறேன்.

இப்போது வள்ளலாரே சமஸ்கிருதச் சொற்களின் கலப்பைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

சன்மார்க்கம் என்ற அடிப்படைக் கலைச்சொல் ஒன்று. அதனோடு இணைக்கும் சமரசம், சுத்தம் என்பனவாகிய சொற்கள். இத்தகைய சொற்களை வள்ளலார் உண்டாக்கவில்லை. இவைகளையெல்லாம் வடமொழி எனத் தள்ளிவிட்டு, பழகுதமிழில் இக்கொள்கையை அமைத்திருக்கலாமே என்பது சிலரின் ஆசை.

மெய்ப்பொருளியற் கலைச்சொற்கள் மக்களாலோ, ஒரு இனத்தாராலோ உண்டாக்கப் பெற்றவை அல்ல. பரநாதத் தலத்தே விளங்கும் பரநாதம், பரவிந்து என்ற இரண்டும் இணைய அவ்விணைப்பின் மூலம் (அனந்த தாத்பர்யங்களை உள்ளடக்கி) பல்வேறு பொருள் நிலைகளை உள்ளடக்கி எழுந்த சொற்களே அவை ஆதலின் அவைகளை மாற்றுதல் இயலாது என்று குறிப்பிடுகிறார். அவைகள் வடமொழிச் சொற்கள் அல்ல, வடலுறு சொற்கள் என்பது வள்ளலார் வழக்கு.

ஆதாரம்: சிதம்பரம் இராமலிங்கரின் சித்திவளாகம் - பக்கம் 26/27.

இந்தப்புத்தகம் வள்ளலாரின் வலைத்தளத்திலேயே இருக்கிறது.

வடலுறு சொற்கள்: வடக்குத் திசையிலிருந்து இங்கே கொண்டு வரப்பட்டவை அல்ல; ஆலவிதை போன்ற பீஜமான சொற்கள். 
வடம் என்றால் ஆலமரம். 

தொழுவூர் வேலாயுத முதலியார்:

சமஸ்கிருதம் ஏதோ பிராமணர்களின் தனிச்சொத்து தனிமொழி என்றொரு பிம்பத்தை உருவாக்கி அதை அழித்துக் கொண்டிருப்பது சமீபத்தில்தான். 19' ம் நூற்றாண்டு வரை சமஸ்கிருதத்தை அனைத்து சாதியினரும் கற்றுத் தேர்ந்திருந்தனர். இதற்குச் சான்றாக சமீபத்தில் என் நண்பர் ஒருவர் மூலம் கிடைத்த ஓர் அரிய புத்தகத்தைக் கீழே பாருங்கள்:



Sankar3.jpg


சங்கரவிஜயம் என்ற இந்தப் புத்தகத்தை 1879'ம் ஆண்டில் சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்த்திருப்பவர் தொழுவூர் வேலாயுத முதலியார். வெளியிட்டவர் தண்டலம் ஆறுமுக முதலியார். இந்த தொழுவூர் வேலாயுத முதலியார் சமரச சன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்த முன்னோடிகளில் ஒருவர். வள்ளலாருக்கு மிக அணுக்கமானவர். சிதம்பரம் ராமலிங்கம் என்றே தம்மை அழைத்துக் கொண்டவரை வள்ளலார் என்று பெயரிட்டு அழைத்தவரும் இவர்தான்.

வெங்கட் சாமிநாதன் முன்பு சிஃபி.காமில் ஒரு கட்டுரையில் வருந்தியிருந்தார் – “தமிழ் இங்கு வளர்க்கப் படவில்லை, வெறுமனே தமிழ் கோஷப் படுத்தப் பட்டுள்ளது என்று”. ஒரு குறிப்பிட்ட கூட்டத்தின் இந்த எதிர்வினைகள் அதை உண்மையென்று நிரூபிக்கின்றன.

தமிழ் கோஷப் படுத்தப் பட்டது மட்டுமல்ல, வேஷப் படுத்தவும் பட்டுள்ளது. அதனால் நாசப் படுத்தப் படுகிறது. அதைச் செய்பவர்கள் தான் தமிழ் எதிரிகள். தமிழ் உணர்வு இல்லாதவர்கள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard