மதச்சார்பின்மையை பற்றிய அவர்களின் புரிதலை "எம்மமதமும் சம்மதம்" என்ற சொற்பதத்திற்குள் அடக்கி விடலாம். "எல்லா மதத்திற்கும் சமமான ஜனநாயகம்" என்று இதற்கு பொழிப்புரை எழுதலாம். "மதம் ஒருவரின் அந்தரங்க விடயம்." என்ற அரச நிர்ணய சட்டத்தை நடைமுறைப் படுத்த கிளம்பினால் தான் பிரச்சினை கிளம்புகின்றது. இந்தியாவிலோ, இலங்கையிலோ அரசும் மதமும் இன்னமும் தனித்தனியாக பிரிக்கப்படவில்லை. இதனால் இணையம் என்ற பொதுத்தளத்தில் மதச்சார்பின்மையை வலியுறுத்தும் பதிவர்கள் மீது சேறு பூசப்படுகின்றது. மதக் கொள்கைகளை கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்களுக்கு, விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இன்னும் இல்லை.
இவர்கள் "கிறிஸ்தவ நாடுகள்" என புரிந்து கொள்ளும், மேற்குலகில் வாழும் மக்கள், தம்மை அப்படி அழைப்பதை விரும்புவதில்லை. இந்த நாடுகளில் வாழும் பெரும்பான்மையான மக்கள், தம்மை "எந்த மதத்தையும் சாராதவர்" (Agnostic) என்றே அழைத்துக் கொள்வார்கள். கிறிஸ்தவ பெற்றோருக்கு பிறந்தால் கிறிஸ்தவன் தானே, என்று கொடுக்கும் விளக்கம் எல்லாம் இங்கே செல்லுபடியாகாது. (அந்த விளக்கத்தின் படி பார்த்தால் இயேசு ஒரு கிறிஸ்தவன் அல்ல.) கிறிஸ்தவம் ஒரு உலகமயமாக்கப்பட்ட மதமாகி விட்டது. வறிய நாடுகளில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதே நேரம் செல்வந்த நாடுகளில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. மதத்திற்கும், வர்க்கத்திற்கும் இடையிலான தொடர்பை விளக்க இந்த ஒரு உதாரணம் போதும்.
மேற்குலக மதச்சார்பற்ற நாடுகளில், மதம் குறித்து எத்தகைய கருத்தையும் முன்வைக்கலாம். ஒருவர் எந்த மதத்தையும், கடவுளையும் பற்றி விரும்பிய படி கிண்டல் செய்யலாம், பரிகசிக்கலாம், கேலிச்சித்திரம் வரையலாம். அந்த உரிமையை அரசும், நீதிமன்றமும் உறுதிப்படுத்தி வருகின்றன. ஏதாவது ஒரு மதத்தை விமர்சித்ததற்காக "மத எதிர்ப்பாளன்" முத்திரை குத்த முடியாது. விமர்சகரை பாதுகாக்கும் சட்டம், முத்திரை குத்தியவரை ஆபத்தான பேர்வழியாக கருதுகின்றது. இவை "பரம்பரை கிறிஸ்தவ நாடுகள்" என்பதால், இங்கெல்லாம் கிறிஸ்தவ மதத்தை பற்றி அதிக விமர்சனங்கள் எழுவதில் வியப்பில்லை. அதனை இங்கே யாரும் கிறிஸ்தவ எதிர்ப்பு என்று பாமரத்தனமாக புரிந்து கொள்வதில்லை. "பாப்பரசர் ஒரு மாபியா கிரிமினல்" என்று கூறும் கத்தோலிக்கர்களை இங்கே காணலாம். உண்மையிலேயே வத்திக்கானுக்கும், மாபியாவுக்கும் இடையிலான தொடர்புகளை ஆய்வு செய்த நூல்கள் பல வெளியாகியுள்ளன.
ஒரு காலத்தில், ஐரோப்பா முழுவதும், கத்தோலிக்க மதம் மட்டுமே, ஒரேயொரு மதமாக ஆதிக்கம் செலுத்தியது. கத்தோலிக்க கிறிஸ்தவ சபை மக்களை சுரண்டி வாழும் ஒட்டுண்ணி நிறுவனமாகவே அவர்களுக்கு தெரிந்தது. கிராமத்தில் இருக்கும் சிறிய தேவாலயத்தின் பாதிரி கூட வரி வசூல் செய்யும் "கலக்டர்" போல நடந்து கொண்டார். ஒரு தேவாலயத்தின் உறுப்பினர் கொடுக்கும் பங்குப் பணம், ஒரு சாதாரண பக்தன் கொடுக்கும் காணிக்கை அல்ல. அதற்கும் மேலே. பாதிரிகள் அந்தப் பணத்தை வசூல் செய்து, பிராந்திய பிஷப்புக்கு அனுப்புவதும், அவர் அதை வத்திக்கானுக்கு அனுப்புவதும் இன்று வரை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இன்றைக்கும் கத்தோலிக்க திருச்சபை ஒரு சர்வதேச நிழல் அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இன்று பெருகி வரும் புரட்டஸ்தாந்து, பெந்தேகொஸ்தே சபைகளின் வியாபாரப் போட்டி வேறு.
ஐரோப்பாவில் இன்றைக்கும் கிறிஸ்தவர்களாக மத நம்பிக்கையுடன் வாழும் பலர் தேவாலயங்களுக்கு செல்வதில்லை. ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதம் மக்களின் மக்களின் மனங்களில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு கிராமங்களிலும், தேவாலயம் மக்களை கட்டுப்படுத்தும் அதிகார மையமாக இருந்துள்ளது. அந்த கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் தேவாலயத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். மாதாமாதம் வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை கொடுத்து விட வேண்டும். (குறைந்தது மொத்த வருமானத்தில் 10 %) அப்படி தனது பங்கை செலுத்தாதவர் கிறிஸ்தவனாக கருதப்பட மாட்டார். (தேவாலயம் அவரை கிறிஸ்தவன் அல்ல என்று பிரகடனம் செய்யும்). "ப்பூ... இதிலென்ன இருக்கிறது. நானும் தான் அடிக்கடி சர்ச்சுக்கு போவதில்லை. பணம் ஒன்றும் கொடுப்பதில்லை. என்னை யாரும் கிறிஸ்தவன் இல்லை என்று சொல்வதில்லையே..." என்று நீங்கள் வாதம் செய்யலாம். ஐயா, உங்களுடைய நிலைமை வேறு. அன்று ஐரோப்பிய மக்களின் நிலைமை வேறு. "கிறிஸ்தவன் இல்லை" என்று அறிவிப்பது, நமது காலத்தில் அரசாங்கம் ஒருவரது குடியுரிமையை பறிப்பதற்கு ஒப்பானது. அந்த நபரின் வாழ்வுரிமையே பறிக்கப்படுகின்றது.
தேவாலயம் எந்த அளவு பெரிய பணக்கார நிறுவனமாக இருந்திருக்கும் என்பதை நான் சொல்லத் தேவை இல்லை. (எனக்கு தெரிந்த, சிறிய தேவாலயம் ஒன்றின் கணக்கு வழக்குகளை பார்க்கும் நண்பர் ஒருவர், மாதம் 20000 யூரோ வருமானம் கிடைப்பதாக தெரிவித்தார்.) நிலப்பிரபுத்துவ காலத்தில், தேவாலயத்திற்கு என்று ஏக்கர் கணக்கில் நிலங்கள் சொந்தமாக இருக்கும். அவற்றில் விவசாயிகள் குடிமை வேலை செய்ய வேண்டும். (ஆண்டவன் பெயரில் அடிமை உழைப்பு). இதைத் தவிர தேவாலய கட்டிட தொழிலாளர்கள், சாமிப்படம் பொறித்த கண்ணாடிகள் செய்து கொடுப்பவர்கள், சிற்பக் கலைஞர்கள் கூலி கேட்டால், ஆண்டவனுக்கு செய்யும் கடமையாக கருதிக் கொள்ளுமாறு கூறி விடுவார்கள். கிறிஸ்தவ நிறுவனம் மெழுகுதிரி உற்பத்தி போன்ற பல தொழிற்துறைகளில் ஏகபோகம் கொண்டாடியது. சுருக்கமாக சொன்னால், மத்திய காலத்தில் கத்தோலிக்க திருச்சபை ஒரு தேசங்கடந்த பன்னாட்டு வர்த்தக கழகமாக இயங்கி வந்தது.
மதகுருக்களும், நிலப்பிரபுக்களும் சேர்ந்தே ஆட்சி நடத்தினார்கள். நிலப்பிரபுக்கள் செய்த அக்கிரமங்களை மதகுருக்கள் கண்டுகொள்ளவில்லை. அதே போல மதகுருக்கள் செய்த துஷ்பிரயோகங்களை நிலப்பிரபுக்கள் கண்டுகொள்ளவில்லை. அப்படித் தான் கத்தோலிக்க தேவாலயங்களை சேர்ந்த பாதிரிகளின் காம இச்சைக்கு அப்பாவி சிறுவர்கள் பாதிக்கப்பட்டனர். இப்போது கத்தோலிக்க நண்பர்கள் நியாயம் கற்பிப்பது போல போல "ஒரு சில கெட்ட பாதிரிகளின் செயல்" அல்ல. (பிடிபட்ட பின் தானே கள்வன்?) ஒரு இரகசிய நிறுவனம் இதையெல்லாம் தானே வெளிவிட்டிருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா? 20 ம் நூற்றாண்டிலும் வத்திகான் இரகசியங்களை வெளியே சொன்னவர்கள் மர்மமான முறையில் மரணமடைந்தார்கள். அது குறித்து இதுவரை எந்த விசாரணையும் இல்லை.
தேவாலய நிர்வாகத்தின் சர்வாதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்டவர்கள் கிறிஸ்தவ மதத்தில் இருந்து வெளியேற்றப் பட்டார்கள். "மதத்தில் இருந்து வெளியேற்றுவது" என்றால் எத்தகைய தீய விளைவுகள் ஏற்படும் என்று எல்லோருக்கும் தெரியும். தமிழ் சினிமாவில் எங்கோ ஒரு குக்கிராமத்தில், பஞ்சாயத்து கூடி ஊருக்கு உள்ளே வரக்கூடாது என்று தண்டனை கொடுப்பார்களே, அது போன்றது. தேவாலய உறுப்புரிமை நீக்கப்பட்டவர்களுடன் ஊர் மக்கள், உறவினர்கள் தொடர்பு வைக்க மாட்டார்கள். பட்டினி கிடந்தாலும் யாரும் உணவு கொடுக்க மாட்டார்கள். அவர்கள் ஊருக்கு வெளியே இரந்துண்ணும் பிச்சைக்காரர்களாக வாழ வேண்டும். இத்தகைய நடைமுறை 19 ம் நூற்றாண்டில் கூட சில இடங்களில் தொடர்ந்தது.
கத்தோலிக்க மதம் அதிகாரம் செலுத்திய நாடுகளில் எல்லாம் கைதிகளை சித்திரவதை செய்வது, சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருந்தது. உங்களது கற்பனைக்கு எட்டாத வழிகளில் எல்லாம் சித்திரவதை செய்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒன்று. கசாப்புக் கடையில் செய்வது போல தோலை உரித்து எடுப்பார்கள். அப்போதெல்லாம் ஆன்மிகம் போதிக்கும் மதத் தலைவர்கள் சித்திரவதையை பார்த்து ரசிப்பார்கள். (அவர்கள் தானே விசாரணை அதிகாரிகள் ) அந்தக் காலத்தில் சித்திரவதை செய்ய பயன்பட்ட உபகரணங்களை இன்றைக்கும் ஐரோப்பிய அருங்காட்சியகங்களில் காணலாம்.
எப்படியானவர்களை சித்திரவதை செய்தார்கள்? கொலைகாரர்களையும், கொள்ளைக்காரர்களையுமா? இல்லை சாதாரண அப்பாவி மக்களை. மத நிறுவனத்திற்குள் நடந்த முறைகேடுகளை எடுத்துச் சொன்னவர்கள். தேவாலயத்தில் போதிக்கப்படும் கருத்துகளை விமர்சித்தவர்கள். மாற்றுக் கருத்து கொண்டவர்கள். கத்தோலிக்க மதத்தில் இருந்து பிரிந்து செல்ல விரும்பியவர்கள். மதத் தலைவர்களின் வானளாவிய அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்தியவர்கள். மதகுருக்களின் (பாலியல்) துஷ்பிரயோகங்களை எதிர்த்தவர்கள். அவர்கள் மட்டுமல்ல, மூலிகைகளைப் பயன்படுத்தும் இயற்கை வைத்தியம் தெரிந்த மருத்துவர்கள் கூட கொல்லப்பட்டார்கள். (ஏனென்றால் அவர்கள் சூனியம் செய்பவர்களாம்.) கொடுமைக்குள்ளான அப்பாவிகளின் பட்டியல் நீண்டு செல்கின்றது.
மக்களும் எத்தனை காலத்துக்கு தான் கிறிஸ்தவ மதம் செய்த கொடுமைகளை பொறுத்துக் கொள்வார்கள்? மக்கள் விரோத மத நிறுவனத்தின் அநீதிக்கு எதிராக பொங்கி எழ மாட்டார்களா? பிரெஞ்சுப்புரட்சி வெடித்த பொழுது அரச குடும்பம் மட்டும் தாக்கப் படவில்லை. எத்தனையோ தேவாலயங்கள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டன. பாதிரிகள், கன்னியாஸ்திரிகள் பெருந்திரள் மக்கள் கூட்டத்தின் முன் சிரச்சேதம் செய்யப்பட்டார்கள். அன்று அந்த மக்களுக்கு, கிறிஸ்தவ மத நிறுவனம் மீது எவ்வளவு வெறுப்பு இருந்திருக்க வேண்டும் என்று உணர முடிகின்றதா? இங்கே இந்த உண்மைகளை எழுதும் என்னை "கிறிஸ்தவ மத எதிர்ப்பாளன்" என்று தூற்றுவீர்கள் என்றால், நீங்கள் கொடுமைக்காரர்களின் பாவகாரியங்களுக்கு துணை போகின்றீர்கள் என்று அர்த்தம்.
எமது நாடுகளில் கற்பிக்கப்படும் அறிவியல் பாடங்கள் எல்லாம் ஆங்கிலேயர் அறிமுகப் படுத்தியவை. அதனால் கிறிஸ்தவ ஐரோப்பிய நாடுகள் என்றென்றும் அறிவியலில் சிறந்து விளங்கியதாக கருதுவது தவறு. கிறிஸ்தவ மதம் ஒரு நாளும் அறிவியலை வளர்க்கவில்லை. தீராத தலைவலி என்று வைத்தியரிடம் போனால், அவர் தலையில் ஓட்டை போட்டு அசுத்த ஆவியை வெளியேற்றுவார். இது உயர்தர வகுப்பு மாணவர்களின் பாடப் புத்தகத்தில் இருந்து எடுத்துக் காட்டிய உதாரணம். பூமி உருண்டை என்று சொன்னதற்காக கலீலியோவுக்கு தண்டனை கொடுத்த கதை எல்லோருக்கும் தெரியும். உண்மையில் இன்று நீங்கள் கற்கும் அறிவியல் பாடங்கள் எல்லாம் கிரேக்க, அரேபிய மூல நூல்களில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை.
நூலகங்களில் கிறிஸ்தவ மதத்தை ஆய்வு செய்யும் ஆயிரக்கணக்கான நூல்கள் கிடைக்கின்றன. பல நூல்களில் பைபிளுக்கு அப்பால் கிறிஸ்தவ மத வரலாறு குறித்து ஆராய்ந்துள்ளன. ("பைபிளில் இவ்வாறு எழுதியுள்ளது ....." என்றெல்லாம் சொல்லி விட்டால் அது விஞ்ஞான விளக்கம் ஆகி விடாது.) எனது கட்டுரைகளின் உசாத்துணையாக அவற்றை பல இடங்களில் குறிப்பிட்டுளேன். அவையெல்லாம் ஆயிரம் ஆண்டு கால கிறிஸ்தவ பாரம்பரியம் கொண்ட அறிஞர்களால் எழுதப்பட்டவை. (அதே போல யூதர்கள் சம்பந்தமான தகவல்களை யூத ஆய்வாளர்களே எழுதியுள்ளனர்.) இவற்றை எனது கட்டுரைகளில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் என்னில் மட்டும் குற்றம் காண விளையும் நண்பர்களின் உள் நோக்கம் என்ன? அவர்கள் யாரும் எனது கட்டுரைகளில் எழுதியுள்ளவை தவறானது என்று நிரூபிக்கவில்லை. மதவாதிகளின் வழக்கமான பாணியிலேயே விமர்சனங்களை எதிர்கொள்ளுகின்றனர். விமர்சிப்பவர் மீது முத்திரை குத்துவது, மிரட்டுவது அல்லது தூற்றுவது. மதம் ஆட்சி செய்த காலங்களில் அது தானே நடந்தது.
பிரான்ஸில் கத்தோலிக்க மதத்தை சீர்திருத்தி, அடக்குமுறை செய்யும் அதிகார வர்க்கத்தை ஒழித்து, சமத்துவத்தையும், சகோதரத்தையும் வலியுறுத்தியவர்கள் அழிக்கப்பட்டார்கள். ஓடுகாலிகள், துரோகிகள் என்ற அர்த்தம் வரும் வண்ணம் "ஹெரதிக்" என்ற பட்டம் சூட்டி, அவர்கள் மீது போர் தொடுத்தார்கள். "அன்னை மரியாள் எனக்கு காட்சி தந்தாள்" என்று சொன்னதற்காக 16 வயது இளம் பெண்ணை கத்தோலிக்க மதகுருக்கள் சித்திரவதை செய்து கொன்றார்கள். ஏனென்றால் தங்கள் கண்ணுக்கு புலப்படாத கடவுள் எப்படி சாதாரண பட்டிக்கட்டுப் பெண்ணுக்கு தெரியவரும், என்ற வெறும் "ஈகோ" பிரச்சினை. (ஆமாம், இல்லாத கடவுளைக் கண்டேன் என்று சொன்னால் நம்புவார்களா?) அதுவும் எப்படிக் கொன்றார்கள்? உயிரோடு நெருப்பு மூட்டிக் கொன்றார்கள். ஐரோப்பாவில் கத்தோலிக்க மதம் கொன்று குவித்த மக்களின் தொகையை கணக்கிட்டால் கோடிக்கணக்கை தாண்டும். அதனை இனப்படுகொலை என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பது? கத்தோலிக்க மதம் செய்த கொலைகளுக்காக 2000 ம் ஆண்டு பாப்பரசர் மன்னிப்புக் கேட்டார். கத்தோலிக்க மதவெறிக் கொலைஞர்களால் கொல்லப்பட்ட அப்பாவிகளின் ஆன்மா ஆயிரம் வருடங்களுக்கு பின்னர் தான் பரிசுத்தமானது. ஆனால் கொடூரமான கொலைகாரர்கள் எவராவது தண்டிக்கப்பட்டதாக வரலாற்றில் எங்கேயும் எழுதப்படவில்லை.
நான் கடந்த இருபது வருடங்களாக 100 % கிறிஸ்தவ நாட்டில் வாழ்ந்து வருகிறேன். கிறிஸ்தவ மதம் இந்த நாட்டின் வரலாற்றில் ஒரு பகுதி. இந்த நாட்டவர்களின் மொழி, பண்பாடு, வாழ்க்கை நெறி போன்றவற்றில் கிறிஸ்தவ மதம் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். கிறிஸ்தவ மதம் குறித்த அறிவு சிறிதளவேனும் இல்லாமல் பல சொற்களின், சொற்பதங்களின் அர்த்தங்களை கூட உங்களால் புரிந்து கொள்ள முடியாது. உள்நாட்டு மக்களின் கலாச்சாரத்தை புரிந்து கொள்ள முடியாது. மக்களின் மனோபாவம் கூட கிறிஸ்தவ சிந்தனையின் படி மாறியுள்ளது. இதிலிருந்து அவர்கள் மெல்ல மெல்லத் தான் மீள முடியும். (இன்றைய சராசரி ஐரோப்பியன் தன்னை மதச்சாற்பற்றவனாக காட்டிக் கொள்ள விரும்புகிறான்.)
இந்தியாவிலும், இலங்கையிலும் வரலாற்றுப் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால் குறுகிய வட்டத்திற்குள் வாழும் சிலர் என்னோடு விதண்டாவாதம் செய்ய விளைகின்றனர். கடந்த காலம் பற்றி அறிந்திராதவர்களுக்கு நிகழ்காலத்தை புரிந்து கொள்ள முடியாது. அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் வரலாறு ஒரு முக்கிய பாடம். வரலாற்றுப் பாடத்தில் சித்தியடையாத ஒரு மாணவன் பல்கலைக்கழகம் செல்ல முடியாது. பள்ளிகளில் கற்பிக்கப்படும் வரலாற்றுப் பாடத்தில் குறைந்தது இரண்டு அத்தியாயங்கள் ஆவது கிறிஸ்தவ மதம் குறித்து இருக்காதா? இரண்டாயிரம் ஆண்டுகள் ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்திய கிறிஸ்தவ மதத்தை ஒதுக்கி விட்டு வரலாற்றுப் பாடம் நடத்த முடியுமா? நண்பர்களே ஒரு கணம் சிந்திப்பீர்.
யூத மதமும் ஐரோப்பிய வரலாற்றில் தவிர்க்கவியலாத பகுதி தான். ஐரோப்பாக் கண்டத்தில் இரண்டாவதாக யூத மதமே இருந்தது. நீண்ட காலமாக கிறிஸ்தவ மதத்தால் அடக்கப்பட்டு வந்தது. ஐரோப்பிய நாடுகள் எங்கும் யூதர்கள் மதச் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். ஐரோப்பிய பொருளாதார வளர்ச்சியில் யூதர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. 20 நூற்றாண்டில் இஸ்ரேலை ஸ்தாபித்தவர்கள் ஐரோப்பாவில் இருந்து சென்ற யூதர்கள் தான். அதனால் ஐரோப்பாவில் யூத மதம் குறித்த தகவல்கள் அதிகமாக கிடைப்பதில் வியப்பில்லை. ஆம்ஸ்டர்டாம் நகரில் ஐரோப்பிய யூதர்களின் வரலாற்றை ஆவணப் படுத்தி வைத்திருக்கும் மியூசியம் ஒன்றுள்ளது. அப்படி இருக்கையில் யூதர்களைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது எனக் கூற முடியுமா? அதே நேரம் தமிழர்கள் மத்தியில் ஏற்கனவே யூதர்கள் குறித்து பரப்பப்பட்டுள்ள தவறான கருத்துகளை நானும் மறுபதிப்பு செய்ய முடியாது.
நண்பர்களே! ஒரு கிறிஸ்தவ நாட்டில் இருபதாண்டு கால வாழ்பனுபவம், எத்தனை பாடங்களை எனக்கு கற்பித்திருக்கும்? குறிப்பிட்ட கால உயர்தர பாடசாலைக் கல்வியை இங்கே தான் பெற்றேன். அதிலே தவிர்க்கவியலாத கிறிஸ்தவ வரலாற்றை படிக்காமல் கல்வியை பூர்த்தி செய்திருக்க முடியாது. அதைவிட நாள் தோறும் ஊடகங்கள் கிறிஸ்தவ மதம் குறித்து புதிது புதிதாக எதையாவது அறிவித்துக் கொண்டிருக்கின்றன.இன்றைய ஐரோப்பியர்கள் மதச்சார்பற்ற சமுதாயமாக மாறி விட்டதால், கிறிஸ்தவ மதத்தின் குறைகளை எடுத்துக் கூறும் செய்திகளும் அதிகம் வருகின்றன. ஒரு சில மத அடிப்படைவாதிகளைத் தவிர வேறு யாரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை.
இந்த நாடுகளில் பொது இடங்களில் மதச்சார்பற்ற கொள்கை கடைப்பிடிக்கப் படா விட்டால், அது குறித்து முறைப்பாடுகள் வந்து குவியும். ஆம்ஸ்டர்டாம் நகரில் பேரூந்து வண்டியோட்டும் (எகிப்தை சேர்ந்த) கிறிஸ்தவ சாரதி சிலுவை மாலை அணிந்து வேலைக்கு வருவதை நிர்வாகம் கண்டித்தது. அவர் அதற்கெதிராக நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால் தீர்ப்பு சொன்ன நீதிபதியோ, "பொதுப் போக்குவரத்து துறையை சேர்ந்த ஊழியர் மதச் சின்னம் அணிவது கூடாது" என்று தடை விதித்தார். இத்தாலி பாடசாலைகளில் சிலுவைகளும், இயேசு படங்களும் வைத்திருப்பதற்கு எதிராக சில பெற்றோர் முறைப்பாடு செய்தனர். நீதிமன்றம் அவர்களுக்கு சார்பாக தீர்ப்பு வழங்கினார். இது இப்படியிருக்க மதச்சார்பற்ற நாடென்று கூறிக் கொள்ளும் இந்தியாவில் பேரூந்து வண்டிகளில், அலுவலகங்களில், கல்வி நிலையங்களில் சாமிப்படங்கள் வைத்திருக்கிறார்கள்.
ஐரோப்பாவில் இன்று தேவாலயங்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் பல தேவாலயங்கள் பராமரிக்கப்படாமல் மூடப் பட்டு கிடக்கின்றன. நான் வாழும் ஆம்ஸ்டர்டாம் நகர மத்தியில் உள்ள தேவாலயங்கள் அருங்காகாட்சியகமாக மாற்றப்பட்டு விட்டன. எனது வீட்டின் அருகில் உள்ள தேவாலயம் ஒன்று வழக்கறிஞர்களின் அலுவலகமாக செயற்படுகின்றது. லண்டன் மாநகரில் சில தேவாலயங்களை இஸ்லாமியரும், இந்துக்களும் வாங்கி தமது வழிபாட்டுத்தலமாக மாற்றியுள்ளனர். வெள்ளையின ஐரோப்பியரை விட, வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறிய ஆசிய, ஆப்பிரிக்க கிறிஸ்தவர்களே இன்று தேவாலயங்களுக்கு அதிகம் செல்கின்றனர். இதனால் கிறிஸ்தவ சபைகளும் அவர்களை குறி வைத்தே பிரச்சாரம் செய்கின்றன. வீடு தேடி வந்து "எங்களுடைய சபைக்கு வாருங்கள், பைபிள் படியுங்கள்." என்று கூப்பிடுவார்கள். நான் அவதானித்த வரையில் அவர்கள் வெள்ளையர்களை அதிகம் நாடுவதில்லை. காரணம் அங்கே போனால் என்ன மரியாதை கிடைக்கும் என்று அவர்களுக்கே தெரியும்.
இருபதாண்டு காலம் கிறிஸ்தவ/யூத சமூக அமைப்பினுள் வாழும் நான், அந்த மதங்களைப் பற்றி அதிகம் எழுதுவது தானே முறை? எனக்கு அதிகம் தெரிந்த ஒன்றைப் பற்றி தானே நான் எழுத முடியும்? நான் வாழும் சுற்றாடலில் நடப்பதை அறிவிப்பது தானே ஒரு பதிவரின் கடமை? இதைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்? கார்ல் மார்க்ஸ், பகுனின், போன்ற தத்துவவியலாளர்கள் கிறிஸ்தவ மதத்தை கற்ற பின்னர் தான் அந்த மதத்தை கேள்விக்குட்படுத்தினர். பைபிளை மட்டும் படித்து விட்டு, கிறிஸ்தவ மதத்தை புரிந்து கொள்ள முடியாது. அடுத்த தடவை கிறிஸ்தவ இறையியல் குறித்து நான் படித்த ஐம்பதுக்கும் குறையாத நூல்களின் பட்டியலை தருகிறேன். நான் ஏட்டுப் படிப்புடன் மட்டும் நின்று விடவில்லை. நான் விஜயம் செய்த கிறிஸ்தவ மதம் சம்பந்தமான அருங்காட்சியங்களின் விபரங்களை தருகிறேன். பைபிளில் குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு சுற்றுலாப்பயணியாக சென்றிருக்கிறேன்.
நண்பர்களே! நீங்கள் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்பவராக இருந்தால், முதலில் அந்த மதத்தை பற்றி மேலும் அறிந்து கொள்ள முயற்சியுங்கள். மதங்களின் வரலாறு முழுவதையும் சீர் தூக்கிப் பார்த்தால், அவை மக்களுக்கு செய்த தீமைகளே அதிகமாக இருக்கும். எப்போதும் தமது மதத்தை பற்றி நல்ல அம்சங்களை மட்டுமே மதவாதிகளும் பிரச்சாரம் செய்வது, அவர்களை கடவுளிடம் இருந்து அந்நியப்படுத்துகின்றது. ஆன்மீகவாதிகளிடம் கடவுள் யார் என்று தத்துவ விளக்கம் கேட்டால், அது தான் உண்மை என்பார்கள். இங்கேயுள்ள மதவாதிகள் உண்மையைப் பார்த்து கண்களையும், காதுகளையும் மூடிக் கொள்கிறார்கள்.