சென்னை மோனோ ரயில் திட்டத்தின் கீழ் அமையவுள்ள வண்டலூர் முனையத்துக்கான இடத்தினை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. கிளாம்பாக்கம் என்னும் இடத்தில் 26 ஏக்கர் பரப்பிலான இடத்தில் மோனோ ரயில் நிலையம் அமைகிறது.
சென்னையில் வண்டலூர் – வேளச்சேரி, பூந்தமல்லி – கிண்டி கத்திப்பாரா மற்றும் பூந்தமல்லி வடபழனி – ஆகிய 3 தடங்களில் ரூ.8350 கோடியில் மோனோ ரயில் திட்டத்தினை அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு, அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதில் இரு நிறுவனங்கள் தற்போது போட்டிக் களத்தில் உள்ளன. அவற்றை வரும் டிசம்பருக்குள் இறுதி செய்து, பணிகளை நாடாளுமன்ற தேர்தலுக்குள் தொடங்கி விட தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே, மோனோ ரயில் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளையும் தமிழக அரசு தொடங்கியுள்ளது. வண்டலூரில் அமையவுள்ள மோனோ ரயில் முனையத்தினை கட்டுவதற்கான இடத்தினை தமிழக அரசு அதிகாரிகள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து தமிழக அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வண்டலூரில் அமையவுள்ள மோனோ ரயில் முனையத்துக்கான இடம் தேர்வு செய்யும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. முதலில், வண்டலூர் அருகில் உள்ள 100 ஏக்கர் இடத்தை அரசு பரிசீலித்தது. பின்னர், சில காரணங்களுக்காக அது கைவிடப்பட்டது, தற்போது, வண்டலூர் அருகில் உள்ள கிளாம்பாக்கம் கிராமத்தில் 26 ஏக்கர் இடத்தை அரசு தேர்வு செய்துள்ளது. இந்த இடத்தில் வண்டலூர் முனையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.
டெண்டர் இறுதி செய்யப்பட்டதும் கட்டுமானப் பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.