முகம்மது அக்பர் நோட்டேஜை
“சிறுபான்மையினர் எந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அவர்களது மத நம்பிக்கையும், ஆன்மீகமும் பாதுகாப்பாக இருக்கும். அவர்களது வழிபாட்டு உரிமையில் எந்த வித இடையூறும் இருக்காது. அவர்களது கலாச்சாரம், மதம், நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு முழு பாதுகாப்பும் வழங்கப்படும். பாகிஸ்தானின் குடிமக்கள் என்ற அளவில், அவர்களது ஜாதி, மதம் ஆகிய எந்த விதமான வகையிலும் பாரபட்சம் காட்டப்படாது” என்று குவாயிதே ஆஸம் முகம்மது அலி ஜினா நியு தில்லியில் ஜூலை 14, 1947இல் பத்திரிக்கையாளர் நடுவே சொன்னார்.
65 வருடங்களுக்கு பிறகு, பாகிஸ்தானின் சிறுபான்மையினர், முக்கியமாக இந்துக்கள், அவர்கள் காலம்காலமாக வாழ்ந்துவந்த இடங்களிலிருந்து சமீபகாலங்களில் துரத்தப்பட்டு வருகிறார்கள். ஏனெனில் அவர்களது மதம் இங்கே பாதுகாக்கப்படவில்லை. அவர்கள் தங்கள் தங்கள் வீடுகளில் இருப்பது கூட கடினமாக ஆகிவருகிறது. மேலும், அவர்கள் பாகிஸ்தானின் உண்மையான குடிமக்களாகக் கூட கருதப்படவில்லை. அதனால்தான் அவர்களை கடத்துவதும், அவர்களை கட்டாய மதமாற்றம் செய்வதும் அதிகரித்துவருகிறது. குவேயிதே ஆஸம், 1947இல் பேசிய பேச்சை கேட்க இங்கே யாருமில்லை. இங்கிருந்து இந்துக்கள் வெளியேற்றப்படுவதற்கு எதிராக குரல் எதுவும் எழவில்லை.
இந்துக்களின் வெளியேற்றத்தின் காரணங்களை புரிந்துகொள்ள பலுச்சிஸ்தானில் உள்ள இந்துவான ஷாம் குமாரிடம் பேசினேன். நவாப் அக்பர் கான் பக்தி( விக்கி இணைப்பு) என்ற கொல்லப்பட்ட மூத்த தலைவரின் கருத்தின்படி, இந்துக்கள் புராதன காலம் தொட்டு இந்த நிலத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அதாவது பலுச்சிஸ்தானில் வாழ்ந்து வருகிறார்கள். அதன் பிறகு பலூச்சிகள் இங்கே வந்து குடியேறினார்கள். ஆனால், இந்துக்களே இந்த நிலத்தின் பூர்வகுடிகள். மேலும், பலுச்சிஸ்தானின் மூத்த தலைவர்களும் அறிவுஜீவிகளும் இந்துக்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார்கள். (அருகே உள்ள) சிந்து மாகாணத்தில் அரபுகள் வருவதற்கு முன்னால், இந்துக்கள் பௌத்தர்களோடு சேர்ந்து வாழ்ந்து வந்தார்கள். ராஜா தாஹிரின் தோல்விக்கு பிறகு முஸ்லீம்கள் சிந்து மாகாணத்தில் குடியேற ஆரம்பித்தார்கள்.
பலுச்சிஸ்தானின் இந்துக்கள் ஆரம்ப காலம் முதலே, வியாபாரிகளாகவும் கடைக்காரர்களாகவும் இருந்தார்கள். இந்த நிலத்தின் வளமைக்காகவும், சமூக முன்னேற்றத்துக்காகவும் பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் தங்களது சொத்துக்களை செலவழித்தார்கள். ஆரம்ப காலம் தொட்டே, இந்துக்கள், பலுச்சிஸ்தானின் முன்னேற்றத்துக்காவும், சமூக செழிப்புக்காகவும் உழைத்து வந்திருக்கிறார்கள். மற்ற மாநிலங்களை விட பலுச்சிஸ்தானில் இந்துக்கள் செழிப்பாக இருந்தார்கள் என்ற காலம் இப்போது போயே போய்விட்டது. சிந்து மாகாணத்தில் ஆரம்ப காலம் தொட்டே இந்துக்களை கடத்துவதும், அவர்களிடமிருந்து பணம் பறிப்பதும் நடந்துவந்திருக்கிறது. அது போல பலுச்சிஸ்தானில் நடந்ததில்லை. 1970, 80, 90களில் சிந்து மாகாணத்தில் இது மிகவும் அதிகமாக இருந்தது. இந்த வியாதி பலுச்சிஸ்தானில் 1990களில் ஆரம்பித்தது. ஜெனரல் ஜியா உல் ஹக்கின் காலத்தில் மோசமான பிரச்னைகள் தோற்றுவிக்கப்பட்டன. கலாஷ்னிகோவ் துப்பாக்கி கலாச்சாரமும், ஹெராயின் போதைப்பொருள் கலாச்சாரமும் துவக்கப்பட்டன. இந்த மோசமான விஷயங்கள் மெல்ல மெல்ல பரவின. கடைசியில் இந்துக்களை கடத்துவதும், பணம்பறிப்பதும் துவக்கப்பட்டுவிட்டது. அந்த நோய், ஜெனரல் பர்வேஸ் முஷாரப் காலத்திலும், ஆசிப் அலி ஜர்தாரி ஆட்சியிலும் கேன்ஸராகவே ஆகிவிட்டது.
இன்னும் கூடவே மற்ற வியாதிகளும் தீவிரத்தன்மை அடைந்துள்ளன. பணத்துக்காக கடத்துவது, முக்கிய பிரமுகர்களை குறிவைத்து கொல்வது, இன வன்முறை, மதப்பிரிவு வன்முறை, காணாமல் போனவர்கள், கெட்டுப்போன உடலை தூக்கி எறிவது, பணம் பிடுங்குவது ஆகியவை. அதே வகையில் இந்துக்களை குறிவைத்து கடத்துவதும், அவர்களை திருப்பி கொடுக்க குடும்பத்தினரிடம் பணம் கேட்டு மிரட்டுவதும், கொடுக்க முடியாதவர்களை கொல்லுவதும் அதிகரித்துள்ளது. கூடவே, இந்துக்களை கட்டாயமாக மதம் மாற்றுவதும் சிந்து, பலுச்சிஸ்தான் மாகாணங்களில் அதிகரித்து வருகிறது. முக்கியமாக இளம் பெண்களையும் ஏன் முதிய இந்து பெண்களையும் கடத்தி கட்டாய மதம் மாற்றுவது அதிகரித்து வருகிறது.
இப்படிப்பட்ட மனித நேயமற்ற குற்றங்களை பார்த்துகொண்டு, அதிகார வர்க்கம், நீதித்துறை மற்ற அரசாங்க அமைப்புக்கள் கையாலாகாமல் வெறுமனே இருக்கின்றன. சொல்லப்போனால், அரசாங்கமே, அரசாங்கத்தில் உள்ளவர்களே இந்த சட்டப்பூர்வமற்ற, ஒழுக்கமற்ற, அரசியலமைப்புக்கு பொருந்தாத, சிறுபான்மையினருக்கு எதிராக இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நோக்கில், பலுச்சிஸ்தானின் அமைதியான இந்துக்கள், தங்களது சொந்த நிலத்திலேயே, தங்களை “வேண்டப்படாதவர்களாகவும் விரும்பத்தகாதவர்களாகவும்” கருதப்படுவதை பார்க்கிறார்கள். அவர்களது தாய்நாட்டை விட்டுவிட்டு ஓடும்படியும், இல்லையெனில் அவர்களது வியாபாரம், உயிர் உடமை ஆகியவை அழிக்கப்படும் என்றும் குறிப்பால் உணர்த்தப்படுகிறார்கள்.
இந்த காரணங்களால், உயர்மட்ட அதிகாரிகளின் கதவுகளை பலமுறை தட்டி பார்த்து, ஒன்றும் நடக்காததால், 21ஆம் நூற்றாண்டில் இந்துக்கள் அங்குமிங்கும் ஓடி பாதுகாப்பாக இருக்க அலைகிறார்கள். ஹஸரத் மூஸாவின் தேசம் வெளியேற்றப்பட்டதை பழைய ஏற்பாட்டில் சொல்லியிருப்பது போல இன்று இந்துக்கள் ஓடுகிறார்கள். ஹிட்லரின் ஜெர்மனியிலிருந்து யூதர்கள் துரத்தப்பட்டார்கள். ஆகவே, இந்துக்களின் வெளியேற்றத்தையும் அத்துடன் ஒப்பிடலாம்.
இறுதியாக, ஐக்கிய நாடுகள், மனித உரிமை கழகம், அகில உலக நீதி மன்றம் ஆகியவற்றுக்கு என்னுடைய மனு என்னவென்றால், இந்த விஷயத்தில் அவர்கள் தலையிட்டு இந்த அமைதியான சிறுபான்மையின் வெளியேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே.
The writer is a columnist at Daily Balochistan Express, Quetta and blogs at www.akbarnotezai.wordpress.com. He can be reached at akbarnotezai@yahoo.com adn on twitter @Akbar_notezai