New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நற்குணக் கடல்: ராம தரிசனம்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
நற்குணக் கடல்: ராம தரிசனம்
Permalink  
 


நற்குணக் கடல்: ராம தரிசனம்

 

தவத்திலும், கல்வியிலும் சிறந்த நாரத மகரிஷியைப் பார்த்து முனிபுங்கவர் வால்மீகி கேட்கிறார் - "உலகில் தலைசிறந்த குணவான் யார்? வீரன் யார்? தர்மத்தை அறிந்துணர்ந்தவன், செய்ந்நன்றி மறவாதவன், சத்தியத்தில் உறுதியாக நிலைபெற்றவன் யார்?" (வால்மீகி ராமயணம், 2-ஆம் சுலோகம்) பின்னர் இப்படி பல நற்குணங்களின் பட்டியலை அடுக்கிக் கேள்வி கேட்டுக் கொண்டே போகிறார். இறுதியில் நாரதர் இவை எல்லாவற்றுக்கும் ஒரே விடையாக "ராமன் என்று மக்களிடையே புகழ்பெற்றவன்" (ராமோ நாம ஜனை: ஸ்ருத:) என்று பதிலளிக்கிறார்.

கம்பராமாயணம் 2-ஆம் பாடலில், கம்பர் கூறுகிறார் -

சிற்குணத்தர் தெரிவுஅரு நல்நிலை
எற்கு உணர்த்த அரிது; என்ணிய மூன்றினுள்
முற்குணத்தவரே முதலோர்; அவர்
நற்குணக் கடல் ஆடுதல் நன்று அரோ.


சாத்விகம், ராஜசம், தாமசம் என்ற மூன்று குணங்களையும் கடந்த ஞானியர் நிலையை என்னால் உணர்த்த முடியாது; இவற்றுள் முதலாவதான சத்துவகுணத்தின் முழு உருவமாகத் தோன்றிய ஸ்ரீராமனுடைய நற்குணங்களாகிய கடலில் மூழ்குவதே நன்று.

"எல்லையொன்றின்மை எனும் பொருள் அதனைக்
கம்பன் குறிகளால் காட்டிட் முயலும் முயற்சியைக் கருதியும்.."


என்று பாரதி சொன்னது எல்லையற்ற பரம்பொருளை அல்ல, ஸ்ரீராமனுடைய எல்லை காணமுடியாத குணக்கடலைத் தான் என்றே எண்ணத் தோன்றுகிறது. அன்புக்கு எல்லை உண்டா? பாசத்திற்கு எல்லை உண்டா? பக்திக்கு எல்லை உண்டா? ஞானத்திற்கு எல்லை உண்டா? தொண்டுக்கு எல்லை உண்டா? 4 முழம் அன்பு, 3 கிலோ பாசம் என்று யாராவது சொல்லுவார்களா?

எல்லையில்லாத இந்த மனிதப் பண்புகளுக்கு ராமன், சீதை, லட்சுமணன், பரதன், அனுமன், குகன் என்றெல்லாம் குறியீடுகளால் காட்ட விழைந்தான் அல்லவா கம்பன்? அதைத் தான் பாரதி குறிப்பிடுகிறான் என்று கொள்ள வேண்டும்.

கற்றுக் கடக்க முடியாத கரைகாணாக் கடல் காகுத்தன் கல்யாண குணங்கள். அதனால் தான் "கற்பார் இராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ?" என்று கேட்டார் நம்மாழ்வார்.

"அனுபம குணாம்புதி சந்த்ரஸி!" (ஒப்பற்ற குணங்களாகிய கடலுக்குச் சந்திரனே) என்று அழைத்துப் பாடினார் தியாகராஜர். கடல் அலைகள் சந்திரனைக் கண்டு பொங்கி மகிழ்வது போல, நற்குணங்கள் ராமனுக்காக அலைபாய்கின்றனவாம். இந்து தத்துவ மொழியில் கடல், சந்திரன் இரண்டும் மனத்தின் குறியீடுகள், இரண்டும் ஒன்றே என்பது உட்கருத்து.

நூற்றாண்டுகள் கழித்து ஸ்ரீஅரவிந்தர் கம்பனின் அதே கருத்தை எதிரொலிக்கிறார் -

.. It was Rama's business to be not necessa-rily as perfect, but as largely representative of sattvic man, faithful husband, obedient son, a tender and perfect brother, father, friend — of the outcast Guhaka, of animal leaders, Sugriva and Hanuman, of the vulture Jatayu, friend of even rakshasa Vibhishana. All that he was in a brilliant, striking but above all spontaneous and inevitable way... with a certain harmonious completeness.

His business was to destroy Ravana and to establish Rama Rajya... an order proper to the sattvic civilised human being who governs his life by finer emotions, moral ideals, such as truth, obedience, cooperation and harmony, the sense of domestic and public order — to establish this in a world still occupied by anarchic forces. 

(From : Rama As An Avatar Of The Sattvic Human)



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

சத்யகாமன், சத்யசங்கல்பன், சத்யபராக்ரமன் என்பனவெல்லாம் ராமனுக்குரிய அடைமொழிகள். "தருமத்தின் தனிமூர்த்தி" என்பான் கம்பன். "ராமோ விக்ரஹவான் தர்ம:" என்பான் வால்மீகி.


ram04.jpg


சத்தியத்தின் வேர்ச்சொல்லான "சத்" என்பதன் பொருள் "உள்ளது". அதாவது என்றும் உள்ளது எதுவோ அது உண்மை. அதுவே தருமம். சத்தியம், தருமம் இரண்டும் ஒரே உண்மையின் இரு பக்கங்கள் தான். அதனால் தான் ஈசாவாஸ்ய உபநிஷத் "சத்ய தர்மாய த்ருஷ்டயே" என்று முடிகிறது.

"உண்டெனும் தருமமே உருவமாய் உடைய நிற்-
கண்டுகொண்டேன் இனிக் காண என் கடவெனோ?"


என்று உயிர்விடும் நேரத்தில் வாலிக்கு இந்த ராம தரிசனம் மூலமாக இந்த ஞான தரிசனம் கிடைக்கிறது.

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்


என்று வள்ளுவர் குறிப்பிடுவது இந்த "உண்மை"க் குணமான சத்துவ குணத்தைத் தான். சத்துவ குண சொரூபன் ராமன். அவனது வழி தருமம், சத்தியம். அதனால் தான் அவன் தன் உயிர்க்கு மட்டும் அல்ல, மன்னுயிர்க்கெல்லாம் துணையாகிறான்.

ராமனுக்கு முடிசூட்டும் செய்தியைச் சொன்ன தசரதனிடம் வசிஷ்டர் கூறுகிறார் -

பொன் உயிர்த்த பூ மடந்தையும் புவியெனும் திருவும்
"இன்னுயிர்த்துணை இவன்" என நினைக்கின்ற இராமன்
தன் உயிர்க்கு என்கை புல்லிது; தற்பயந்து எடுத்த
உன்னுயிர்க்கென நல்லன், மன்னுயிர்க்கெலாம் உரவோய்! 

(மந்திரப் படலம், 37)

இங்கே பூமடந்தை என்னும் திருமகளும், புவிமடந்தையாகிய நிலமகளும், அவள் உருவாகவே தோன்றிய சீதையும் எல்லாரும் ஒன்று தான். அதனால் இவர்கள் அனைவர்க்கும் துணையானாலும் ராமன் தன் ஏகபத்தினி விரதத்தை பங்கம் செய்யவில்லை!

மகாபாரதத்தில் தருமர் யட்சன் உரையாடலில் "ஒரு மனிதனுக்கு உற்ற துணைவர்கள் யார்?" என்று யட்சன் கேட்க "தருமம் தாய், சத்தியம் தந்தை, கருணை நண்பன், அமைதி மனைவி.. " என்பதாக தருமர் பதிலளிக்கிறார்.
இதே கருத்தில், இருளில் காட்டில் ராமன் செல்கையில் இந்த நற்குணங்களாகிய விளக்குகளே அவன் துணையாயிற்று என்பதாக கம்பன் அழகாகச் சொல்லுவான் -

தையல் தன் கற்பும், தன் தகவும், தம்பியும்,
மையறு கருணையும், உணர்வும், வாய்மையும், 
செய்யதன் வில்லுமே, சேமமாகக் கொண்டு
ஐயனும் போயினான், அல்லின் நாப்பணே. 

(தைலம் ஆட்டு படலம், 47)

மனிதர்களாகவே வந்த சீதை, ராமனுடைய திரு அவதாரங்கள் மானுடப் பண்புகளை மனித குலம் முழுமைக்கும் நினைவூட்டிக் கொண்டிருக்கும், "ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்" என்று வால்மீகியின் ராமன் தன்னைக் கூறிக் கொள்கிறான். "மானுடம் வென்றதன்றே!" என்று கம்பன் மெய்சிலிர்க்கிறான்.

ஸ்ரீராமன் புகழ்பாடும் சந்திரோதயம்
சீதாவின் முகம் தேடும் அருணோதயம்!



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஜயராமன் said...

ராமனையும் சந்திரனையும் ஒருமித்து தங்கள் பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது.

சந்திரன் என்கிற வடமொழி வார்த்தைக்கே மனதை மகிழ்விப்பவன் என்பதே பொருள். எல்லா வேட்கையையும் தணித்து குளிர்விப்பதால் சந்திரன். கர்மசூழல் என்னும் வெட்பத்திலிருந்து காத்து நம்மை குளிர்விப்பதால் அவனும் ராமசந்திரன்.

ராமனும் ஒரு சந்திரன்தான். அதனாலேயே அவனை ராமசந்திரன் என்கிறோம்.

வால்மீகி நாரதைரை பார்த்து ராமாயண ஆரம்பத்தில் பதினாறு குணங்களை சொல்லி அப்படிப்பட்டவன் யார் என்று கேட்கிறார்... க: னு அஸ்மின்... என்று தொடங்கி...

சந்திரனுக்கும் பதினாறு கலைகள் உண்டு. பிரதமை, துவிதியை என்று தொடங்கி அந்த பதினாறு கலைகளிலும் சந்திரன் வளர்கிறான். ராமனுக்கும் இங்கே பதினாறு குணங்கள் சொல்லப்படுகின்றன. ராமனும் ஒரு சந்திரனே...

நன்றி



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ராம தரிசனம், கரிசனத்தோடு அழகாய் எழுதி இருக்கீங்க ஜடாயு சார்.

ரம்யம்=ராமம்
ரம்யமானவன் ராமன்.
ஜெயராமன் சார் சொல்வது போல், குளிர்விப்பவன் ஆதலால் ரம்யமானவன்; ஆதலால் ராமன்.

பாருங்கள்,
சூர்யகுல திலகம், சந்திரன் போல் தாபங்களை எல்லாம் குளிர்வித்து சாந்தி செய்கிறது! ஹ்ருத் தாப நாசினி என்று சந்திர புஷ்கரிணியைச் சொல்லும் வழக்கம் உண்டு.

அவதாரங்களில் மூன்று ராமன்கள்!
முன்பு பரசுராமன்
பின்பு பலராமன்.
இவர்கள் திருநாமங்களில் பரசுவும், பலமும் ஒட்டிக் கொண்டதால் குளிர்விக்கும் தன்மை சற்று பின் தள்ளப்பட்டு விடுகிறது!
அதனால் தானோ என்னவோ ராமனோடு, சந்திரனையும் சேர்த்து, ராமச்சந்திரனாய் நம் அனைவாரையும் குளிரப் பண்ணினார்கள்.

கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Muse (# 5279076) said...

ரம்யமாய் ராமனைப் பற்றி ஜடாயு கட்டுரை வடிக்கிறார். ராமன் சூரிய குலத்தில் உதித்த சந்திரனா? இல்லை சந்திர குலத்தில் தோன்றிய சூரியனா?

கம்பன் பருக களி ஏறுகிறது.

ராமனைப் பற்றி கம்பன் சொல்லும் கவி ஒன்று:

"கண்ணினும் கரந்துளன்; கண்ட காட்டுவார்
எண்ணிறைந் திடும் உணர் வாகி, உண்மையால்
மண்ணினும் வானினும் மற்றை மூன்றினும்
எண்ணினு நெடியவன் ஒருவன், எண்ணிலான்"

என்ன ஒரு தமிழ். என்ன ஒரு இனிமை. என்ன ஒரு பரவசம்.

ஜெயராமன் பல நாட்களுக்கு முன் என்னை ராமாயணம் படிக்க வேண்டினார். கம்பனின் ராமாயணமாய் படிக்க விரும்புகின்றேன். 

கம்ப ராமாயணத்தை நல்ல பதவுரையுடன் எந்த பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளார்கள்? 

தகவல் சொன்னால் தன்யனாவேன்.

தவப்புதல்வன் வவேசு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். கவிஞன் கம்பனை வியப்பதா, வரகவி வவேசுவை வியப்பதா என்றே தெரியவில்லை.

"எந்தையிறந்தானென்று மிருந்தே னுலகெல்லாந்
தந்தன னென்னுங் கொள்கை தவிர்ந்தேன்; றனியல்லேன்;
உய்ந்து மிருந்தாள் நீயென நின்றே னுரைகாணேன்;
வந்தன னையாவந்தன னையா வினிவாழேன் !"

என்பதை ஆங்கிலத்தில்

"I died not when I heard our father's death,
Though he a kingdom gave, for in they love,
I learned to forget his loss: but, thee now dead
What's life to me? I come, my brother, I come"

"I come, my brother, I come" என்று ராமபிரான் சொல்லும்போது சடாரென்று கையை பிடித்து நிறுத்திவிடத் துடிக்கிறது. எந்தவிதமான பக்தியும் இல்லாத பத்தங் கெட்ட எனக்கே இப்படி என்றால் படிக்கும் பக்தர்களுக்கு என்ன உணர்வாகும்?

வாய்க்குமாயின், என் மரணத்தறுவாயில் கம்பனின் ராமாயணமும், யோக வாசிஷ்டமும் கேட்க விரும்புகிறேன். 

இரண்டும் ராமனோடு தொடர்புடையதாய் அமைந்திருப்பது அதிசயமாய் இருக்கிறது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard