மோரியர் என்பவர்கள் தங்கள் தேர்ச் சக்கரம் உருண்டு வர ஏதுவாக வெள்ளி மலையை உடைத்து வந்த விவரம் புறநானூறில் உள்ளது என்ற செய்தியை முன் பகுதியில் கண்டோம். மோரியர் குறித்த விவரம் மொத்தம் 4 இடங்களில் சங்கப் பாடல்களில் வருகிறது. அவற்றின் அடிப்படையில் ஒரு பழந்தமிழ் வரலாற்றை ஆராய்ச்சி செய்துள்ளனர். அவை சரியல்ல என்றும் அந்த சரித்திரத்தில் வேறு ஒரு பழமையான சரித்திரம் மறைந்திருக்கிறது என்றும், அது மட்டுமல்ல அது நடந்த பூகோளப் பகுதியே வேறு என்றும், அதன் அடிப்படையில் தமிழ் மொழிக்கும், மங்கோலிய, ஹங்கேரிய மொழி போன்றவற்றுக்கும் சில தொடர்புகள் ஏற்பட்டன என்பவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.
சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்று சொல்லும் ஆராய்ச்சியாளர்கள் தமிழுக்கும், மங்கோலிய மொழிக்கும் உள்ள சில் ஒற்றுமைகளைக் காட்டி அதன் அடிப்படையில் சிந்து சமவெளி மக்களில் ஒரு பகுதியினர் மங்கோலியப் பகுதிக்குச் சென்றிருக்கலாம் என்று கருதுகின்றனர். அதாவது மங்கோலியர்களுக்கும், தமிழர்களுக்கும் ஒரு பழைய தொடர்பு இருக்கிறது என்கிறார்கள்.
மங்கோலியா என்னும் நாடு இமய மலைக்கு வடக்கே சீனப் பிரதேசஙகளுக்கு வட மேற்கில் உள்ளது.
இங்கு புழங்கி வரும் மங்கோலிய மொழியில் உள்ள சில சொற்கள் தமிழ்ச் சொற்களை ஒத்துள்ளன. இதனால், சிந்து சமவெளி மக்கள் ஆரியர்களால் விரட்டப்பட்ட பொழுது, அவர்களுள் ஒரு பகுதியினர் மங்கோலியப் பகுதிக்குச் சென்றிருக்கலாம். சிந்து சமவெளி திராவிடர்கள் பேசிய மொழியின் மிச்சம் இன்னும் அவர்களிடம் இன்று வரை இருந்திருக்கலாம் என்பதே இவர்கள் கூற்று. சமீபத்தில் நடந்த செம்மொழி மாநாட்டில் இது குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரையும் வாசிக்கப்பட்டது. இந்த மங்கோலிய மொழியின் தொடர்பை முழுவதும் அறிந்து கொண்டால், தமிழன் சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து வந்தவனா அல்லது தமிழகப் பகுதியிலிருந்து வந்தவனா என்பதை நிலை நிறுத்தலாம். இந்தக் கட்டுரையில் இதை ஆராய்வோம். .
முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். மொழித் தொடர்பு என்பது நாட்டுக்கு நாடு மக்கள் தொடர்பு கொள்வதால் ஏற்படுகிறது. தொல்காப்பியரும் திசைச்சொல் என்று குறிப்பிட்டுள்ளார். பல திசைகளிலிருந்தும் சொற்கள் வருகின்றன. அதாவது பல திசைகளிலிருந்தும் மக்கள் ஒரு நாட்டுக்கு வரும்போது அவர்கள் பேசும் மொழியில் உள்ள சில சொற்கள் நம் மொழியுடன் கலந்து விடுகின்றன. இவையே திசைச் சொற்கள் ஆகும். நம் தமிழும் பிற மொழிகளுடன் கலக்கும் வாய்ப்பு பல முறை இருந்திருக்கின்றது.