காவேரி ஆறு பிறப்பதற்கு முன்னமே புகார் நகரம் இருந்தது என்று பார்த்தோம். அந்தக் காவேரி பாரத நாட்டின் ஏழு நதிகளுக்குள் ஒன்று என்ற பெருமையைப் பெற்றது. கங்கை, யமுனை, நருமதை, சரஸ்வதி, காவேரி, குமரி, கோதாவரி என்று தமிழ் நிகண்டுகள் கூறுகின்றன. சரஸ்வதி மறைந்து போன அடையாளங்கள் உள்ளன. ஆனால் குமரி மட்டும் இன்று இல்லை.
ஆனால் அதுவும் சப்த நதிகளுள் ஒன்று எனச் சொல்லப்பட்டதால், பாரதம் எங்கும் புகழ் மணக்க அந்த நதி ஒரு காலத்தில் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. இந்த ஏழு நதிகளுமே, ஒரே காலக்கட்டத்தில் பெருமையுடனும், மக்களுக்கு உயர்வைவும் தந்திருக்க வேண்டும்.காவேரியின் காலம் இன்றிலிருந்து 9,000 ஆண்டுகளுக்கு முன் என்றால், அதே காலக் கட்டத்தில் குமரியும் இருந்திருக்க வேண்டும். ஏழு நதிகளும் கோலோச்சி இருக்க வேண்டும். இங்கே கவனிக்கக் வேண்டியது, சிந்து நதிக்கு முக்கியத்துவம் இல்லை என்பது.
தமிழன் சிந்து நதியுடன் சம்பந்தப்பட்டிருந்தால், எங்கேனும் அதைப் பற்றிய குறிப்பு வந்திருக்கும். ஆனால், புகாரில் வாழ்ந்த மக்கள், 700 கிலோ மீட்டருக்கும் அப்பாலில் இருந்த மலையிலிருந்து காவிரியைக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டி இருக்கின்றனர் என்றே தெரிகிறது. அந்தக் காவேரி நதியைத் தண்டமிழ்ப் பாவை என்றும் அகத்தியர் பாராட்டி இருக்கின்றார். அந்த நதி நுழைந்த புகார் நகரம் அதன் பெயரையே எடுத்துக் கொண்டது.இதெல்லாம் தமிழனின் வேர்கள் எங்கே என்பதை சந்தேஹமில்லாமல் சொல்லுகின்றன.
இனி புகார் நகரில் தமிழ்க் குடிகள் காலம் காலமாக வாழ்ந்து வந்தனர் என்பதற்குச் சான்றுகளைப் பார்ப்போம்.
சிலப்பதிகாரம் பாட ஆரம்பிக்கும் போதே, இளங்கோவடிகள் திங்களைப் போற்றி, ஞாயிறைப் போற்றி, மாமழையைப் போற்றி பிறகு புகார் நகரைப் போற்றித் தன் காப்பியத்தை ஆரம்பிக்கிறார். புகார் நகரைப் பற்றிப் போற்றும் போது, கடலால் சூழப்பட்ட உலகை, சோழன் தொன்று தொட்டு அவன் குலத்தோடு பொருந்தி. உயர்ந்து. பரந்து ஒழுகவே பூம் புகார் போற்றுதும், பூம் புகார் போற்றுதும் என்று போற்றுகிறார்.
அது மட்டுமல்ல, பொதிகை மலை ஆனாலும், இமயமலை ஆனாலும், எங்கெல்லாம் மக்கள் வாழ்ந்தார்களோ. அங்கிருந்து வேறு இடம் பெயர்ந்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை என்கிறார். இங்கும் பாரதம் தழுவிய ஒருமித்த நிலையைக் காட்டுகிறார். புகார் நகரிலும் மக்கள் ஆதியிலிருந்து எங்கே வாழ்ந்து வந்தார்களோ, அங்கேயே தொடர்ந்து வாழ்ந்து வரக்கூடிய பழங்குடியினராக இருந்தனர் என்கிறார்.
"பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய
பொதுவறு சிறப்பின் புகாரே யாயினும்
நடுக்கின்றி நிலை இய என்பதல்லதை ..."
என்று அவர் தங்கள் பதியிலிருந்து வேறு இடம் பெயராதவர்கள் என்றும், ஆதியில் தோன்றி சலிப்பின்றி அங்கேயே நிலை பெற்று இருந்தனர் என்றும் கூறுகிறார். இவ்வாறு தங்கள் ஊரை விட்டு அவர்கள் என்றுமே அகலாததற்குக் காரணத்தை உரை ஆசிரியர் அடியார்க்கு நல்லார்தருகிறார்.
புகார் நகரத்து மக்களுக்கு செல்வ வளம் இருந்தது. அதனால் செல்வம் தேடி வேறு இடம் பெயரவில்லை. அங்கே பகைவர் பயமில்லை. அதனால் மக்கள் இடம் பெயரவில்லை என்கிறார். கோவலன், கண்ணகி ஆகியோரது பெற்றோர், அவர்தம் மூதாதையர் என்று காலம் காலமாகப் புகார் நகரிலியே வாழ்ந்து வந்தனர் என்று சொல்கிறார்.
புகார் ஒரு துறை முகம். சிலப்பதிகாரம் நிகழ்ந்த காலத்திலேயே, அங்கே பல நாட்டு வணிகர்களும் வந்து வியாபாரம் செய்தனர் என்று வருகிறது. இமய மலையைத் தாண்டியும் மக்கள் வந்தனர் என்றும் தெரிகிறது. ( பகுதி - 10).அந்த நகரத்தின் வளத்துக்குக் குறைவில்லை என்பதை அறிய திருக்குறளில் சொல்லப்படும் ஒரு கருத்து உதவுகிறது.
நாடு என்னும் அதிகாரத்தில் நாடு என்றால் என்ன என்று சொல்லப்படுகிறது . குறைவு இல்லாத விளைபொருளும், தகுதி வாய்ந்த அறிஞரும், குறைவற்ற செல்வம் உடையவர்களும் கூடி வாழ்வதே நாடு ஆகும். அந்த நாட்டுக்கு உரிய உறுப்புகள், ஊற்று நீர், மழை நீர், தகுந்த மலை, அம்மலையிலிருந்து வரும் ஆற்று நீர், வலிமையான அரண் போன்றவை என்று குறள் - 737கூறுகிறது.
முன் பகுதியில் பார்த்தோமே, காந்தமன் என்னும் சோழ அரசன், அவனுக்கு ஒரு ஒரு குறை இருந்தது. நாடு என்று அந்த நாளில் மக்கள் கொண்டிருந்த அளவுகோலின்படி, சோழ நாட்டிலும், அதன் தலை நகரான புகார் நகரிலும் ஆற்று நீர் ஓடவில்லை. அதனால் அவர்கள் ஆறு இருக்கும் இடத்திற்கும் தங்கள் நகரத்தை மாற்றிக் கொள்ளவில்லை. ஆறு இல்லை என்பது மட்டுமே ஒரு குறையாக இருந்தது. மற்றபடி எல்லா நிறைகளும் அவர்களுக்கு இருந்திருக்கின்றன.
தொன்று தொட்டு வந்த நகரமாகவும், ஆதி தெய்வமான சம்புத் தெய்வம் குடி கொண்டிருக்கும் நகரமாகவும் புகார் விளங்கவே. அவர்கள் குறையை வேறு எப்படி சரி செய்யலாம் என்று பல காலமாக யோசித்திருப்பர். பாகீரதன் கங்கையைக் கொண்டு வந்ததைக் கேள்விப்பட்டவுடன், அதுவே அவர்களுக்கு ஒரு முன் உதாரணம் போல ஆயிற்று. குடகு மலையிலிருந்து காவேரியைக் கொண்டு வந்து விட்டனர். தங்கள் இருப்பிடத்தை விட்டு நீங்க வேண்டியிராத நிலைமையையும் பெற்றனர். மேலும் ஆறு ஒன்று ஓடவே, பஞ்சம் என்ற நிலை அந்த நகரத்துக்கு வரவில்லை.
சிலப்பதிகாரம் சொல்லும் காலக்கட்டம் கி-பி இரண்டாம் நூற்றாண்டு. பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அந்த நகர மக்கள் அமைதியாக, பகையும், பஞ்சமும் இல்லாமல் இருக்கவே, அங்கேயே வாழ்ந்து இருந்திருக்கின்றனர்.கடலுக்குள் முழுகிய காலம் 10,000 வருடங்களுக்கும் மேலாக இருக்கவே, அதன் தாக்கம் மறைந்தும், மறந்தும் போய் இருக்கிறது. அதைப் பற்றிய குறிப்பு சங்க நூல்களில் வரவில்லை. 11,500 வருடங்களுக்கு முன் ஒரு கடல் சீற்றமோ அல்லது கடல் நீர் மட்டம் ஏறி நிலத்தை உள்வாங்கிய நிலையோ ஏற்பட்டிருக்க வேண்டும். கடலுக்குள் தெரியும் பகுதி ஐந்து கிலோமீட்டர் தொலைவில் தான் இருக்கிறது. எனவே மிகப் பெரிய அளவில் கடல் சீற்றம் புகார் பகுதியில் நடைபெறவில்லை எனலாம். அதனாலேயே பழங்குடிகள் என்ற நிலையில் மக்கள் அங்கு தொடர்ந்து வாழ்ந்து வந்திருக்கின்றனர்.இங்கிருந்த குடிகளது மூலத்தை 3,500 வருடங்களுக்குள் அடக்கி, சிந்து சமவெளிப் பகுதியில் இருந்து விரட்டப் பட்டு வந்தனர் என்று சொல்வது கொடுமை.
திருக்குறளில், குடிமை என்னும் அதிகாரத்தில் சொல்லபப்டும் சில கருத்துக்கள் தமிழ்க் குடிகளது பழமையை மேலும் உறுதி ஆக்குகின்றன. திருக்குறள் பிற்பட்டு எழுந்த நூலாக இருக்கலாம். ஆனால், அது திருவள்ளுவர் காலத்துக்கும் முற்பட்டு வாழ்ந்த தமிழ்ச் சமுதாயத்தினரது வாழக்கை முறையைப் பிரதிபலிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக குறள் 955 - இல் 'பழங்குடியினர்' வறுமைக் காலத்திலும் தம் குணத்திலிருந்துக் குறைய மாட்டார் என்று சொல்லப்பட்டுள்ளது.
இந்தப் பழங்குடியினர் யார்? இதற்கு உரை எழுதிய பரிமேலழகர் பழங்குடியினர் என்றால் தொன்று தொட்டு வரும் குடியில் பிறந்தவர்கள் என்கிறார். அப்படித் தொன்று தொட்டு வருதல் என்றால் என்ன? அதற்கும் ஒரு விளக்கம் தருகிறார் பரிமேலழகர்.
" 'சேர, சோழ, பாண்டியர்' என்றாற்போலப் படைப்புக் காலம் தொடங்கி மேம்பட்டு வருதல்" என்கிறார்.
அதாவது சேர, சோழ, பாண்டியர் என்றாலே தொன்று தொட்டு வருபவர் என்று பொருளாகும். அவர்கள் மனிதப் படைப்பு ஆரம்பித்த காலத்திலிருந்தே இருந்து வருபவர்கள். அவ்வாறு ஆதி நாளிலிருந்து வழி வழியாக இருந்து வரும் குடிகள் பழங்குடிகள் என்கிறார்.
அந்தப் பழங்குடிகள் நான்கு வர்ணத்தவர் என்கிறார் பரிமேலழகர். குடிமை அதிகாரத்தின் விளக்கம் பற்றிச் சொல்லும் போதே இவ்வாறு கூறுகிறார். இவர்களுள் யார் உயர்ந்த குடிகள் என்ற பேச்சு வருகிறது. அதற்கு பிராமண வர்ணத்தவர் உயர்வு என்றோ, சூத்திர வர்ணத்தவர் தாழ்வு என்றோ சொல்லவில்லை. எல்லா வர்ணத்தவருமே பழங்குடிகள்.
அந்த வர்ணத்தவர்களில் யார் யாரெல்லாம், சிறந்த குணங்களோடு, அதாவது உயர் குடிப் பிறப்பாளராக இருந்தனர் என்கிறார்.
எவரெல்லாம், செப்பமுடன், அதாவது கருத்து, சொல், செயலில் மாறாமல் இருப்பர்களோ, ஒழுக்கம், மெய்ம்மை, நாணம் (பழி பாவங்களுக்கு நாணுதல்) உடையவர்களோ, முக மலர்ச்சி, இன் சொல், ஈகை, பிறரை இகழாமை என்று இருப்பவர்களோ அவர்கள் உயர் குடியில் பிறந்தவர்கள் எனபப்டுவர் என்கிறார் வள்ளுவர்.
பழங்குடிகளுக்கு இவையெல்லாம் குணங்கள் ஆகும் என்கிறார். இந்த குணங்கள் ஒரு நாளில் வந்து விடாது, வழி வழியாக மூதாதையர் அவ்வாறு இருந்து வந்ததால், அதுவே பழக்கமாக அவர்கள் சந்ததியருக்குவந்து விடும் என்கிறார். இதைதான் தொன்று தொட்டு வருவது என்று சொல்வது. தமிழ் நெறி விளக்கத்திலும் ( 112 ) 'வான்றோய் தொல்குடி மரபு' என்று சொல்லப்படுகிறது.
இதன் அடிப்படையில் புறநானூறிலும் ஒரு பாடல் வருகிறது ( 43). சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தானுடன், புலவர் தாமப்பல் கண்ணனார் தாயக்கட்டை போன்ற ஒரு விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அவர்களுக்குள் ஒரு கருத்து வேறுபாடு வருகிறது. கோபத்தில், மாவளத்தான் தன் கையில் இருந்த கவற்றினைப் புலவர் மீது வீசி விடுகிறான். அதைக் கண்ட மன்னன் பதறிப் போகிறான். அதைக் கண்ட புலவர் பாடல் ஒன்று பாடுகிறார். அதில் அவர் சொல்கிறார், மன்னனே, நீ புறாவுக்காக துலாக்கோலில் அமர்ந்தவன் மரபில் வந்தவன். அந்தக் குடியில் பிறந்தவர் தவறு செய்ய மாட்டார். எனவே இந்த விளையாட்டில் நான் தான் தவறு செய்திருப்பேன். உன் தம்பி தவறு செய்திருக்க முடியாது. அதனால் அவன் கவறு எறிந்தது சரியே என்கிறார்.
தொன்று தொட்டு வரும் குடி வழக்கத்தால் இப்படி சொல்கிறார்கள்.சில ஆயிர வருடங்கள் மட்டுமல்ல. பல்லாயிரக் கணக்கான வருடங்கள் நல்ல நாகரீகப் பண்பில் தோய்ந்து இருந்திருந்தால்தான் இப்படி அவர்கள் எழுதி இருக்க முடியும்.
காவேரி நதியின் தோற்றத்தைப் பற்றிய விவரங்களை நோக்குகையில், ஒரு முக்கிய செய்தி கிடைக்கிறது. பொதுவாக நதிகளைத் தேடி மக்கள் இடம் பெயர்ந்து சென்று அங்கு வாழ்ந்திருக்கின்றனர். சிந்து சமவெளி நாகரீகம் நதி நீர் நாகரீகமாக 5,000 வருடங்களுக்கு முன்னால் ஆரம்பமானது என்கிறார்கள். ஆனால் தமிழர் வாழ்க்கை நதி நீர் நாகரீகமல்ல. அவர்கள் எங்கே இருந்தார்களோ அங்கே வளம் இருந்திருக்கின்றது. நதியைத் தேடி அவர்கள் போகவில்லை. மாறாக, காவேரியை அவர்கள் பகுதிக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
காவேரியும், குமரியும் சேர்ந்த ஏழு நதிகளும் புண்ணிய நதிகள் என்று போற்றப்பட்டிருக்கின்றன.
அவற்றின் காலம் 9,000 ஆண்டுகளுக்கு முந்தின த்ரேதா யுகம் என்றும் தெரிகிறது. காவேரி வருவதற்கு முன்பே தமிழன் இருந்திருக்கிறான். நீர்ப் பஞ்சமென அவன் வேறிடம் தேடியும் போகவில்லை.
அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அந்தக் காரணம் இந்திரன்! ஆம். வேத மரபில் சொல்லபப்டும் இந்திரன் அவர்களுக்கு வளம் கொடுத்திருக்கிறான். அது எப்படி என்று பார்ப்போம்.