New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பதிற்றுப் பத்து


Guru

Status: Offline
Posts: 24778
Date:
பதிற்றுப் பத்து
Permalink  
 


பதிற்றுப் பத்து:

சங்க நூல்களிலேயே மிகப் பழமையானது பதிற்றுப் பத்து! அதில் திருமாலின் குறிப்புகள்... 

பதிற்றுப் பத்தில் மொத்தம் பத்து கவிஞர்கள்!
கபிலர், பரணர், காக்கைப்பாடினியார், அரிசில் கிழார்.....போன்று அத்தனை பேரும் புகழ் மிக்க பெருங் கவிஞர்கள்!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பத்து! அத்தனையும் தொகுத்து பதிற்றுப்பத்து!

பாடப்பட்டவர்கள் அனைவரும் சேர மன்னர்களே! 
சங்க இலக்கியத்தில் பாண்டியர்க்கு மட்டுமேயான ஒரு பெரு நூல் உண்டா என்றால், அவர்களுக்குக் கூட இல்லை! ஆனால் சேரர்களுக்கு இப்படி அமைந்துள்ளது வியப்பிலும் வியப்பே!

இமயவரம்பன் நெடுஞ்சரலாதன், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்று பலர்! பொதுவாக, சேர மன்னர்களின் தெய்வம் மாயோனே! மலையாள நாடு முழுதும் கண்ணனே பரவி இருப்பதைக் கொண்டு இதை உணரலாம்!

அழகிய இசைப் பாடல்களால் ஆன பதிற்றுப்பத்து!
துறை-தூக்கு-வண்ணம் என்று குறிப்புகளோடு!
திருமால் ஆலயங்களையும், அங்கு வந்து செல்லும் மக்கள் வாழ்வியலையும் காட்டுகிறது, இந்த மிகப் பழமையான எட்டுத் தொகை நூல்! பார்ப்போமா?



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பதிற்றுப் பத்து: 31 - கமழ்குரல் துழாஅய் 
(இதில் திருமால் கோயிலுக்கு வரும் அடியவர்கள் பற்றியும், அவர்கள் நோன்பு பற்றியும், வந்து வணங்கிய பின், அவர்கள் ஊருக்கு மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்லல் பற்றியும் குறிப்புகள் வருகின்றன! துழாய் என்னும் துளசிச் செடியும் பேசப்படுகிறது)


பாடப்பட்டோன்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்
பாடியவர்: காப்பியாற்றுக் காப்பியனார்

குன்றுதலை மணந்து குழூஉக்கடல் உடுத்த
மண்கெழு ஞாலத்து மாந்தர் ஓர்ஆங்குக்
கைசுமந்(து) அலறும் பூசல் மாதிரத்து
நால்வேறு நனம்தலை யொருங்கெழுந்(து) ஒலிப்பத்

தெள்உயர் வடிமணி எறியுநர் கல்லென 5

(குன்றுகள் பல தொடர்ந்து, அலை கடலினை ஆடை போலச் சூழக்கொண்ட உலகத்தில்; வழிபட வரும் மக்கள் தம் தலைமேற் கைகூப்பி, அத்தனை பேரும் ஒருங்கு கூடிச் செய்யும் பேர் ஆரவாரம்; ஓசையைக் கிளப்பும் மணியை இயக்குபவர் "கல்"லென ஓசை எழுப்ப..) - இது அப்படியே திருவேங்கட மலையில் இந்நாளில் மக்கள் வரிசையில் நிற்கும் காட்சியை நினைவு படுத்துகிறது அல்லவா?

உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி
வண்(டு)ஊது பொலிதார்த் திருஞெமர் அகலத்துக்
கண்பொரு திகிரிக் *கமழ்குரல் துழாஅய்*
அலங்கற் செல்வன் சேவடி பரவி

நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதிப் பெயர 10

(கமழ்குரல் துழாஅய் அலங்கல் = மணங் கமழ்கின்ற பூங் கொத்துக்களையுடைய துளசி மாலை;
துழாய் அலங்கல் செல்வன் = துழாய் மாலைச் செல்வன் = திருமால்;
கோயிலில் மக்கள் அவனைப் பரவிய செய்தி இடம் பெற்றுள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

உண்ணாப் பைஞ்ஞிலம் (உண்ணா நோன்பு மேற்கொண்டவர்கள்) குளிர்ந்த
நீர்த்துறைக்குச் சென்று படிந்து நீராடி;

திருஞெமர் அகலத்து = திரு வீற்றிருக்கும் மார்பின்கண்

 

வண்டூது பொலிதார் = வண்டு மொய்த்து விளங்கும்
கமழ்குரல் துழாஅய் = மணம் கமழும் துளசி மாலையும்;

 

கண் பொரு திகிரி = கண் கூசுமாறு ஒளி வீசும் சக்கரப் படை உடைய
செல்வன் சேவடி பரவி = செல்வனான திருமாலின் செவ்விய அடியில் வணங்கி ;

நெஞ்சு மலி உவகையர் = நெஞ்சு நிறைந்த மகிழ்ச்சி யுடையராய்;

துஞ்சு பதிப் பெயர - தத்தம் ஊர்கட்குத் திரும்பச் செல்ல)

....
....
அடங்கிய புடையல் பொலம்கழல் நோன்தாள்
ஒடுங்காத் தெவ்வர் ஊக்(கு)அறக் கடைஇப்
புறக்கொடை எறியார்நின் மறப்படை கொள்ளுநர்
நகைவர்க்(கு) அரணம் ஆகிப் பகைவர்க்குச்
சூர்நிகழ்ந் தற்றுநின் தானை 35
போர்மிகு குருசில்நீ மாண்டனை பலவே.

துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: கமழ்குரல் துழாய்

திருமாலை வழிபட்ட மக்களை மட்டுமன்றி, மன்னனையும் காட்டுகிறார்!
"மாய வண்ணனை மனன் உறப் பெற்ற, செல்வக் கடுங்கோ வாழியாதன்" - என்னும் சேரமன்னனைப் பற்றியும் பதிற்றுப்பத்து ஏழாம்பத்தின் பதிகம் குறிப்பிடுகின்றது! செல்வக் கடுங்கோ வாழி ஆதன், மாய வண்ணனான திருமாலை மனன் (மனத்தில்) உறப் பெற்றவனாம்! அதாவது....மனத்தால் வணங்கி மகிழ்பவனாம் = நெஞ்சகமே கோயில்!

மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த
நெடுநுண் கேள்வி அந்துவற்(கு) ஒருதந்தை
...
...
ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி
மாய வண்ணனை மனன்உறப் பெற்றவற்(கு)
ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்துப்
புரோசு மயக்கி 10
மல்லல் உள்ளமொடு மாசற விளங்கிய
செல்வக்கடுங்கோ வாழிஆதனை 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

குமரன் (Kumaran) said...

பதிற்றுப்பத்தில் வரும் முருகனைப் பற்றிய குறிப்பை முன்பு கூடலில் எழுதியிருக்கிறேன். மாயவண்ணனைப் பற்றிய குறிப்பையும் துழாய் அலங்கற் செல்வனைப் பற்றிய குறிப்பையும் இன்று கண்டேன். நன்றி இரவி. 

சங்ககால சேர மன்னர்களைப் பல புலவர்கள் புகழ்ந்து பாடிய பாடல்களின் தொகுப்பு பதிற்றுப் பத்து. 

வண்டு ஊது பொலி தார்த் திருஞெமர் அகலத்துப் கண் பொரு திகிரிக் கமழ் குரல் துழாஅய் அலங்கற் செல்வன்... ஆகா! தென்னக மாயோனும் வடபுல விஷ்ணுவும்/கிருஷ்ணனும் முற்காலத்தில் வெவ்வேறாக இருந்து பின்னர் ஒருங்கிணைக்கப்பட்டார்கள் என்றொரு வழக்கு இருக்கிறது! சங்க கால நூல்களில் காலத்தால் முந்தைய நூல்களில் ஒன்றான பதிற்றுப் பத்திலும் வடமொழி வேதங்களில் வரும் விஷ்ணுவின் அதே அடையாளங்கள் சொல்லப்பட்டிருப்பதைப் பார்த்தால் எப்போது மாயோனும் விஷ்ணுவும் வெவ்வேறாக இருந்தார்கள்; எப்போது இணைந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது! தரவுகளின் மீது கொள்கைகளைக் கொள்ளாமல் கொள்கைகளுக்கு ஏற்ப தரவுகளைக் காண்கிறார்களோ அவர்கள் என்ற கேள்வியும் எழுகிறது! அவர்களுக்கு ஏற்ப கிடைத்த தரவு எதுவோ? அனைத்தும் அறிந்தவன் இல்லை நான்! அவர்கள் சொல்லும் தரவுகளையும், அப்படி ஏதேனும் இருந்தால், அவற்றையும் பார்க்க வேண்டும். 

ஏழாம்பத்தின் பதிகம் என்கிறீர்கள். பதிகம் என்றால் பாடியவர் யார்? அது நூல் இயற்றப் பட்ட போதோ தொகுக்கப் பட்ட போதோ எழுதப்பட்டதா? பிற்காலத்தில் எழுதப்பட்டதா? பிற்காலம் என்றால் அதனை நீங்கள் சங்க காலத் தரவாக வைப்பதில்லையே! அதனால் கேட்கிறேன். 

மாயோன் என்றால் மாயங்கள் செய்பவனா கருநிறம் கொண்டவனா - என்ன பொருள் என்ற கேள்வி மனத்தில் ஓரத்தில் இருந்தது. கொற்றவையை மாயோள் என்று சங்க இலக்கியம் அழைக்கும் போதும் அதே கேள்வி தான். இங்கே தெளிவாக மாய வண்ணம் என்று சொல்லி மாயோன் என்றால் கருநிறம் கொண்டவன் என்ற பொருளைத் தெளிவாகத் தந்துவிட்டார்கள். கேள்விக்கும் விடை கிடைத்தது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard