ஆரம்பத்தை நோக்கி: பகுதி 2
நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு நபித்தோழர்களுக்குள் ஏற்பட்ட குழப்பத்தை மிக விரிவாக கூறும் ஒரு சொற்பொழிவு. WIN TV ல் கடந்த 2006 ஆம் ஆண்டு புனித ரமளானின் சஹர் (அதிகாலை) நேரத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அந்த சொற்பொழிவின் ஆரம்பப் பகுதிகள் நபித்தோழர்களின் உயர்வான குணங்களையும், நபி (ஸல்) அவர்களின் மீது நபித்தோழர்கள் வைத்திருந்த அன்பையும் விளக்கமாக கூறியது. வரலாறைத் தெரிந்து கொள்ள நான் ஆவலானேன்.
நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு யார் வழி நடத்துவது? என்ற கேள்வி எழ ஆரம்பமானது குழப்பம். நபி, மரணப் படுக்கையில் இருக்கும் பொழுதே வாரிசுரிமை விவாதம் துவங்கிவிட்டதாக புகாரி ஹதீஸ் கூறுகிறது. அபூபக்கர் சித்தீக் அவர்களின் காலத்தில் பதுங்கியிருந்த ரத்தவெறி உமர் அவர்களின் ஆட்சி காலத்தில் அடக்கி வைக்கப்பட்டு இருந்தது. இறுதியில் விஷம் தோய்த்த ஈட்டியாக உமர் அவர்களின் உயிரைப் பறித்து ஆட்சி அதிகாரங்களை கைப்பற்ற வெளிப்பட்டது ஒரே கொள்கையின் கீழ் சகோதரர்களாக, ஒழுக்கசீலர்களாக, மனிதநேயமிக்கவர்களாக, பெருந்தன்மை கொண்ட பண்பாளர்களாக முஹம்மது நபி (ஸல்) அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட நபித்தோழர்கள், ஒருவருக்கொருவர் நயவஞ்சகமாக, கொலை வெறி பிடித்தவர்களாக நடந்து கொண்டர்கள்.
புஹாரி ஹதீஸ் : 4024
சயீத் பின் முஸய்யப் (ரலி) அவர்கள் கூறியதாவது.
முதல் குழப்பமான உஸ்மான் (ரலி) அவர்களின் கொலை நடைபெற்றது. அது பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களில் ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. பிறகு இரண்டாம் குழப்பமான ஹர்ரா போர் நடைபெற்றது. அது ஹுதைபிய்யா உடன்படிக்கையில் பங்கு கொண்ட ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. பிறகு மூன்றாவது (குழப்பம்) நடைபெற்றது. மக்களுக்கு ஆற்றல் இருந்தும் (அந்தக் குழப்பம்) விலகவே இல்லை.
(ஸல் – “ஸல்லல்லாஹூ அலைவஸல்லம்” என்று கூறி முஹம்மது நபிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய நினைவூட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. தனது பெயர் உச்சரிக்கப்படும் பொழுதெல்லாம் இந்தப் பிரார்த்தனையைக் கூறவேண்டும் என்று முஹம்மது நபி முஸ்லீம்களுக்கு கட்டளையிட்டுள்ளார் .