எழுதியவர் சந்தானம்/லண்டன் சுவாமிநாதன்
English version of this article is posted already.
இந்துக்கள், குறிப்பாக பிராமணர்கள், தினமும் யமனை வழிபடுகின்றனர். மரண தேவனை பயமில்லாமல் கும்பிடும் ஒரே இனம் இந்துக்களாகத் தான் இருப்பார்கள். பிராமணர்கள் தினமும் காலை, மதியம், மாலையில் சூரியனை நோக்கி சந்தியாவந்தனம் செய்வர். இதில் தெற்கு திசையை நோக்கி யமனைப் பார்த்து சொல்லும் மந்திரமும் வருகிறது. இதில் யமனைக் கருப்பன் என்று கூறுகிறது. காளி, கலி, சனிக் கிரஹம், கிருஷ்ணன், விஷ்ணு, ராமன் போல யமனும் ஒரு கருப்பன். வெள்ளைத் தோல் தெய்வங்கள் ஆரிய தெய்வங்கள் என்றும் கருப்புத்தோல் தெய்வங்கள் திராவிட தெய்வங்கள் என்றும் எழுதி இந்துக்களை பிளவுபடுத்தி இந்தியாவை சீர்குலைக்க எழுதிய வெள்ளைத்தோல் அறிஞர்களுக்கு யமன் சரியான அடி கொடுக்கிறான்.
யமனைப் பற்றி சங்கத் தமிழ் இலக்கியங்களிலும் பல குறிப்புகள் வருகின்றன. ஏற்கனவே இந்திரனையும் வருணனையும் தமிழர் தெய்வங்கள் என்று தொல்காப்பியம் கூறியதைக் கொடுத்தேன். இப்போது சங்கத் தமிழ் இலக்கியம் யமதர்மன் பற்றிக் கூறுவதையும் காண்போம். அதில் ஞமன் என்றும் கூறுவர்.
சங்கத் தமிழில் புறநானூறு மிகவும் பழமையான பகுதி. அதில் பாடல் 4,13,19,22,56,195, 226,294 ஆகியவற்றிலும் பதிற்றுப்பத்தில் பாடல் 13, 14 கலித்தொகையில் பாடல் 105, 120 ஆகியவற்றிலும் காலன் என்ற பெயரில் புறநானூறு பாடல் 23, 41, 240, பதிற்றுப்பத்தில் பாடல் 39 ,கலித்தொகையில் பாடல் 105, 143 ஆகியவற்றிலும் யமதர்மராஜா பவனி வருகிறார்.
ஞமன் என்ற பெயரும் எருமை வாஹனமும் பரிபாடலில் வருகிறது (3, 5, 8 ஆம் பாடல்கள்) மீளி, மறலி, கணிச்சிப்படையோன், மடங்கல், கூற்றம் என்ற பெயரிலும் யமன் பற்றி நிறைய குறிப்புகள் இருக்கின்றன.
ஆரிய திராவிட வாதத்தை நகைப்புள்ளாக்கும் யமனைப் பற்றிய குறிப்புகளை மட்டும் பார்ப்போம்:
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை, இரங்குவீர் மாதோ (புறம் 195)
பொருள்: கடுந்திறலோடு மழுப்படையுடன் கூற்றுவன் பாசத்தால் கட்டி இழுத்துச் செல்லும்போது வருத்தப்படுவீர்கள்.
இந்துமதத்தில் இன்றுள்ள நம்பிக்கையை 2000 ஆண்டுகளுக்கு முன் நரிவெரூவுத்தலையாரும் பாடிவிட்டார். எருமை வாஹனம் உடையவன் என்பதும் புராணக் கருத்தாகும்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை இடைக்காடனார் பாடிய பாடலிலும் (புறம் 42) ‘’கணிச்சி என்னும் படைக் கலத்தை உயிரை வருந்தச் சுழற்றி வரும் கூற்றம்’’ என்று யமன் வருணிக்கப்படுகிறான்.
ஒரு மன்னரின் சீற்றத்தை விவரிக்கும் போது, தமிழ், வடமொழி இலக்கியங்கள் மன்னனை யமனுக்கு ஒப்பிடுவது வழக்கம்.
திருக்குறளில் கூற்று/யமன் என்ற சொல் 326, 765, 1050, 1083ல் வரும். கலித்தொகை, பரிபாடல் ஆகிய இரண்டும் யமன் பற்றி மட்டுமின்றி ஏராளமான புராணக் கதைகளையும் உவமைகளையும் கையாளுகின்றன.
பிராமணர்கள் தினமும் மும்முறை சொல்லும் யம வந்தனத்தில் யமன் பற்றி 13 பெயர்கள் வரும். இதை தெற்கு திசை நோக்கி நின்றுகொண்டு சொல்லுவர். இறந்த மனிதர்கள் தென் திசைக்குச் செல்லுவர் என்னும் இந்து மதக் கருத்தை ஆணித் தரமாக, அழுத்தம் திருத்தமாகச் சொல்லி, ஆரிய திராவிட வாதத்துக்கு ஆப்பு வைக்கிறான் வள்ளுவன்:
‘’தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை’’ ( குறள் 43)
இந்துக்கள் தினமும் பஞ்ச யக்ஞம் செய்யவேண்டும் என்பதை வள்ளுவன் இரண்டே வரிகளில் சொல்லும் குறள் இது. ஆறாவது பகுதி தானியத்தை மன்னனுக்கு வரியாகச் செலுத்தவேண்டும்.
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போல் புதல்வர் பெறா அதீரும் (புறம்-9)
என்று சொல்லி நெட்டிமையார் என்னும் புலவரும் ஆரிய திராவிட வாதத்துக்கு செமை அடி கொடுப்பார். இறந்தோருக்கு திதி, தர்ப்பணம் செய்வதை அழகாக எடுத்துரைக்கிறார் புறநானூற்றுப் புலவர்.
சித்திரகுப்தன் யார்: யமனுடைய காரியதரிசி ஒரு தனி ஆள் அல்ல. சித்திரகுப்தன் என்றால் ‘’ரகசிய வரைபடம்’’ என்று தமிழில் பொருள். நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் செயல் வடிவம் பெரும் முன் சித்திரமாகப் படியும். அப்பொழுதே யமன் நமக்கு மதிப்பெண் போட்டு விடுகிறான். அதன் படியே, புண்ணிய பாபங்கள் ஏற்படும். அதன் அடிப்படையில் நாம் நரகத்துக்கோ, சுவர்க்கத்துக்கோ செல்கிறோம். இதையே சித்திர குப்தன் (ரகசிய=குப்த, வரைபடம்=சித்திர) என்போம். ஒரு கம்ப்யூட்டரும் மூளையும் கோடிக் கோடி கணக்குகளைப் போடும். சித்திரகுப்தன் கணக்கு சூப்பர், சூப்பர் கம்ப்யூட்டருக்கும் மேல்!
இந்துக்கள் ஏன் மரணதேவதையை வழிபடுகிறார்கள்?
மஹாபாரதத்தில் மிகவும் சுவையான கதை ‘’ஒரு பேயின் கேள்விகள்’’ ( யக்ஷப் ப்ரஸ்னம்) என்ற பகுதியாகும். இதில், ‘’உலகிலேயே அதிசயமான விஷயம் என்ன?’’ என்ற கடைசி கேள்விக்குப் பதில் கொடுத்த தருமன் ‘’ உலகில் தினமும் எவ்வளவோ பேர் இறந்து போகிறார்கள். அதைப் பார்த்த பின்னரும் எல்லோரும் தினமும் வாழப் போகிறோம் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறார்களே’’ என்பதாகும். ஆக நாம் எல்லோரும் எந்தக் கணத்திலும் இறக்கலாம் என்பதை நினைவு படுத்தவே இப்படி தினசரி ய்ம தர்மன் வழிபாடு போலும்.
திருவள்ளுவரும் மஹாபாரத ஸ்லோகத்தை ‘’நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு’’ (குறள் 336) என்ற குறளில் தந்துள்ளார்.
மற்றொரு காரணமும் உண்டு. இது கார்களில், வண்டிகளில் உள்ள ‘’ஷாக் அப்சார்பர்’’ போன்றது. குழந்தைகள் பிறக்கும் போது மகிழும் மனிதன், ஒரு உறவினர் இறக்கும்போது,உலகமே பறிபோய்விட்டது போல மயங்கி பறிதவிக்கிறான். இறப்பும் ஒரு இயற்கை நிகழ்வே என்பதை மறந்து விடுகிறான். தினமும் மரண தேவனை நினைத்து வழிபட்டால் அதுவே ‘’குஷன் மெத்தை’’ போல செயல்படும். மரண பயம் நீங்கும். நமது ஆயுளும் நூறு ஆண்டு நீடிக்கும். ஏனெனில் பிராமணர்களின் மதிய வேளை சந்தியாவந்தனத்தில் ‘’நூறாண்டுக்காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க’’ (பஸ்யேமஸ் சரதஸ் சதம், ஜீவேம சரதஸ் சதம், நந்தாம சரதஸ் சதம் என்ற மந்திரமும் வருகிறது. இதையே கண்ணதாசன் திரைப்படத்தில் பாடி இருக்கிறார்.
யமனைப் பற்றிய சில சுவையான குறிப்புகளையும் காண்போம்:
1.யமன் தென் திசைக்கு அதிபன். யமன் பற்றி உலகிலேயே பழமையான மத நூலான ரிக் வேதத்திலும் வருகிறது. யம என்ற வார்த்தைக்கு இரட்டையர் என்ற பொருளும் உண்டு. அவனுடன் பிறந்தவள் யமி.
2.யமன் தான் உலகில் இறந்த முதல் மனிதன் என இந்துமத நூல்கள் பேசும். யமனுக்கு உதவி செய்ய ஒரு கணக்குப் பிள்ளை உண்டு. அவன் பெயர் சித்திர குப்தன்.
3.யமனிடம் இரண்டு நாய்கள் உண்டு அதன் பெயர் சரமா. அதற்கு ஒவ்வொன்றுக்கும் நான்கு கண்கள்.
4.யமனுடைய மனைவியர் பெயர்கள் ஹேமமாலா, சுசீலா, விஜயா.
5. யமனுக்குப் பல கோவில்களும் தனி சந்நிதிகளும் இருக்கின்றன.
6.யமன் மிகவும் நியாயமானவன். அவரவர் புண்ணிய பாபத்தால் கிடைப்பதைப் பாரபட்சமின்றி கொடுப்பதால் அவனுக்கு தர்மராஜன் என்று பெயர்.
7.யமனுடைய அப்பா பெயர் விஸ்வவத். இதனால் யமனை வைவஸ்வதன் என்றும் அழைப்பர். அம்மா பெயர் சரண்யு.
8. இவன் கருப்பன் என்பதால் ‘’நீலாய’’ என்றும் அழைப்பர்.
யமனுடைய வாஹனமும் கருப்பு— எருமை!
9.யமன் கையில் உள்ள ஆயுதத்தை கணிச்சி என்று சங்கத் தமிழ் இலக்கியங்கள் பகரும். அவனுடைய கையில் பாசக் கயிறும் இருக்கும்.
10. யமனுடைய ‘பெர்சொனல் அஸ்ஸிஸ்டன்ட்’ சித்திர குப்தனின் கையில் இருக்கும் ரெஜிஸ்டருக்குப் பெயர் ‘’அக்ர சந்தனி’’.
ஆக, ஆரிய யமனும் இல்லை, திராவிட யமனும் இல்லை; ஒரே ஒரு யமன் தான்! அவன் இந்தியாவையும் இந்துமதத்தையும் சீர்குலைக்க எண்ணுவோரின் உயிர்குடிக்கும் இந்திய யமன்!!
(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்யாதீர்கள். தமிழ்த் தாய் பொறுக்கமாட்டாள்.)
Pictures are taken from various websites;thanks. contact swami_48@yahoo.com