என்ற சிறப்புப் பெயர் பெற்ற நல்லந்துவனார் என்னும் புலவர். இவரே இக்கலித்தொகை என்ற நூலில் நெய்தல் திணைக்கு உரிய பாடல்களைப் பாடி இக்கலித்தொகை என்னும் நூலினைத் தொகுத்தவர்.
ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து
தேறு நீர் சடைக்கரந்து திரிபுரம் தீ மடுத்து
கூறாமல் குறித்து அதன் மேல் செல்லும் கடுங்கூளி
மாறாப்போர் மணிமிடற்று எண் கையாய் கேள் இனி
படுபறை பல இயம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ
கொடுகொட்டி ஆடுங்கால் கோடு உயர் அகல் அல்குல்
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ
மண்டு அமர் பல கடந்து மதுகையான் நீறு அணிந்து
பண்டரங்கம் ஆடுங்கால் பணை எழில் அணை மென் தோள்
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ
கொலை உழுவைத் தோல் அசைஇக் கொன்றைத் தார் சுவற்புரளத்
தலை அம் கை கொண்டு நீ காபாலம் ஆடுங்கால்
மு(ல்)லை அணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ
என ஆங்கு
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை
மாண் இழை அரிவை காப்ப
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி.
அந்தணர் என்போர் அறவோர் என்றது அருந்தமிழ். ஒழுக்க நெறியை நன்கு அறிந்தவரே அந்தணர். ஆறு என்றால் வழி என்று ஒரு பொருள் உண்டு. ஒழுக்க வழிமுறைகளையும் வாழ்க்கை வழிமுறைகளையும் நன்கு அறிந்தவர்களே அந்தணர்கள் என்று சொல்லத் தகுந்தவர்கள். பிறப்பால் அந்தணர் என்று பெயர் பெற்றவர்கள் அல்லர். அப்படி 'ஆறு (வழி) அறியும் அந்தணர்களுக்கு அரிய மறைகள் பலவும் சொன்னவன் இறைவன்' என்கிறது இந்தப் பாடலின் முதல் அடி. கல்லால மரத்தின் கீழ் தென்முகக் கடவுளாக சிவபெருமான் அமர்ந்து அந்தணர்களுக்கு அருமறைகள் உரைத்ததாக பழங்கதைகள் கூறும். அச்செய்தியினை இந்தப் பாடலின் அடி கூறுகின்றது. மறைகள் பற்பல என்றும் எண்ணில்லாதவை என்றும் முன்னோர் சொல்லுவார்கள். அம்மறைகளை நான்காகத் தொகுத்து நான்மறைகள் என்று உரைக்கும் மரபு தோன்றுவதற்கு முன்னர் இருந்த நிலையை 'நான்மறைகள் பகர்ந்து' என்று சொல்லாமல் 'அருமறைகள் பல பகர்ந்து' என்பதால் இந்தப் பாடல் கூறுவதாகத் தோன்றுகிறது.
அருமறைகளுக்கு ஆறு அங்கங்கள் உண்டு. அந்த ஆறங்கங்களை அறிந்த அந்தணர்கள் என்பதையே 'ஆறு அறி அந்தணர்' என்று இந்தப் பாடலடி கூறுவதாகச் சொல்பவரும் உண்டு. 'ஆறு அறி' என்ற இடத்தில் அது வினைத்தொகையாக அமைகின்ற காரணத்தால் 'ஆறு அறியும், ஆறு அறிந்த, ஆறு அறியப் போகும்' என்று முக்காலத்திற்கும் பொருள் தரும்படி அமைந்திருக்கிறது. அருமறை பல இறைவன் அந்தணர்க்குப் பகர்ந்த பின்னர் அவர்கள் ஆறு அறிந்தார்கள் என்று சொன்னாலும் பொருந்தும். அந்த வகையில் அருமறைகளின் அங்கங்ளான ஆறங்களையும் அருமறையை இறைவனிடம் இருந்து அறிந்த பின்னர் அறிந்தனர் அந்தணர் என்றாலும் பொருத்தம் ஆகும்.
அருமறையைக் கொண்டவர்களைப் பார்ப்பார் என்று அழைக்க வேண்டும்; அந்தணர் என்று அழைக்கக் கூடாது என்று சில அன்பர்கள் இக்காலத்தில் கூறத் தொடங்கியிருக்கிறார்கள். சங்க இலக்கியங்களைக் கண்டால் இவ்விரு சொற்களும் ஒரு பொருட் பன்மொழியாக, ஒத்த பொருள் கொண்ட இரு சொற்களாகத் தான் விளங்குகின்றன என்பதற்கு இந்தப் பாடலின் முதல்
அடியும் ஒரு சான்று.
கங்கை என்ற பெயருக்குத் தெளிவுடையவள் என்ற பொருள் உண்டு. கங்கை நீர் வெண்ணிறமாகவும் யமுனை நீர் கருநிறமாகவும் இருக்கும் என்றும் கங்கையும் யமுனையும் சரசுவதியும் கலக்கும் முக்கூடலுக்குச் சென்றவர்கள் கூறக் கேட்டிருக்கிறோம். அப்படி தெளிந்த நீர் கொண்ட கங்கை என்பதனைத் தேறு நீர் என்கிறார் புலவர். அப்படி தெளிந்த நீரான கங்கையைத் தன் சடையின் ஒரு பகுதியில் முடிந்து வைத்துக் கொண்டவன் சிவபெருமான். பகீரதனுக்காக உலகிற்கு வந்த கங்கையைத் தன் சடையில் முடிந்து அவள் விரைவினைச் சிவபெருமான் தடுத்த நிகழ்வினை இந்த அடி கூறுகின்றது.
கொடுஞ்செயல்கள் பல புரிந்து எங்கும் திரிந்து கொண்டிருந்த திரிபுரங்களையும் அதில் வாழ்ந்தவர்களையும் தன் சிரிப்பினாலேயே கொளுத்தியவன் சிவபெருமான். அந்த நிகழ்வினை 'திரிபுரம் தீ மடுத்து' என்ற பகுதியால் சொல்கிறது இந்தப் பாடல் அடி.
கூளி என்பது ஒரு கடுமையான போர் வகை. அதனை மிகத் திறமையாக ஆற்றும் ஆற்றல் கொண்டவன் சிவபெருமான். அப்போரில் சிவபெருமான் தோற்றதே இல்லை. அந்தப் போரினைப் பற்றி விவரித்துச் சொல்வது இயலாது. அப்படியே சொன்னாலும் அவை முழுவதும் அப்போரினைப் பற்றியும் அப்போரினில் சிவபெருமானின் திறமையைப் பற்றியும் சொல்லி முடியாது. அது வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாத நிலையை உடையது. அதனை 'கூறாமல் குறித்து, அதன் மேல் செல்லும், கடும் கூளி மாறாப் போர்' என்கிறது இந்தப் பாடல் அடிகள்.
சிவபெருமானது போர்த்திறமை மட்டுமின்றி அவனது எச்செயலும் சொல்லுக்கும் நினைவிற்கும் எட்டாதவை. இறைவனுக்கு உருவமில்லை என்றும் இறைவனுக்கு உருவத்தை மனிதர்கள் உருவகித்துக் கொண்டார்கள் என்றும் சில அன்பர்கள் இப்போது சொல்லிக் கொள்கிறார்கள். சிவபெருமானுக்கு உருவமும் உண்டு; அவன் அருவுருவினனும் கூட. அவனுடைய உருவத்தைக் குறிக்கும் படி 'மணி மிடற்றன்' என்றும் 'எண் கையாய்' என்றும் இந்தப் பாடல் கூறுகின்றது.
பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆலால விடத்தை உண்டதால் கருமணி போன்ற மிடற்றினைப் பெற்றான் சிவபெருமான். அவனுக்கு எட்டு குணங்களும் உண்டு; எட்டு கைகளும் உண்டு. எண்குணத்தான் ஆகிய சிவபெருமானுக்கு எட்டு கைகளும் உண்டு என்பதை 'எண் கையாய்' என்ற சொல் உணர்த்துகிறது.
சொல்லுக்கும் நினைவிற்கும் எட்டாத இறைவன் இப்போது மணிமிடற்றையும் எண் கைகளையும் தாங்கி உருவத்துடன் எதிரே நிற்கிறான். அவனை முன்னிலையாக வைத்து இந்தப் பாடல் பாடப்படுகின்றது என்பது 'கேள் இனி' என்னும் முன்னிலைச் சொற்களால் புரிகிறது.
வடமொழி புராணங்கள் கூறும் பல செய்திகளை இப்பாடலின் முதல் அடிகள் கூறுகின்றன. சங்க இலக்கிய தொகை நூல்கள் முதலில் ஆக்கப்பட்டன; பின்னர் கடவுள் வாழ்த்துப் பகுதிகள் இணைக்கப்பட்டன என்று ஒரு கருத்து உள்ளது. கடவுள் வாழ்த்துப் பகுதிகள் பிற்காலத்தவை ஆதலால் அவை வடமொழி நூல்களின் கருத்தினைச் சொல்வது இயல்பு என்றும் ஒரு கருத்து சொல்லப்படுகிறது. அந்த கருத்து மற்ற நூல்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால் இந்த கலித்தொகை நூலினைத் தொகுத்த பரங்குன்றத்து வாழ்ந்த மதுரையாசிரியர் நல்லந்துவனாரே இந்தக் கடவுள் வாழ்த்துப் பாடலையும் பாடியுள்ளதால் இந்த நூலும் கடவுள் வாழ்த்துச் செய்யுளும் ஒரே காலத்தவை என்று அறியலாம்.