http://www.dinamalar.com/world_detail.asp?news_id=5120
வாடிகன்:ஜெர்மனி, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில், கத்தோலிக்க பாதிரியார்கள், சிறுவர்களுடன் தகாத உறவு வைத்து கொண்டதற்காக, போப் பெனிடிக்ட் மன்னிப்பு கேட்டுள்ளார்.ஜெர்மனி, அயர்லாந்து, ஆஸ்திரியா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் கத்தோலிக்க பாதிரியார்கள், பல ஆண்டுகளாக சிறுவர்களுடன் தகாத உறவு வைத்துள்ளனர். இது தொடர்பாக வாடிகன் நகரில் உள்ள போப் பெனிடிக்ட்டுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
குறிப்பாக, அயர்லாந்தில் இந்த புகார்கள் அதிகம் காணப்பட்டது. அயர்லாந்து நாட்டின் சார்பில், இது குறித்து ஒரு கமிஷன் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது.ஒரு பாதிரியார் நூற்றுக்கும் அதிகமான சிறுவர்களுடன் உறவு கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளார். மற்றொரு பாதிரியார், இரண்டு வாரத்துக்கு ஒரு முறை சிறுவர்களுடன் உறவு கொள்வதை, 25 ஆண்டுகளாக செய்து வந்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார்.
போப் பெனிடிக்ட், ஜெர்மனியில் உள்ள முனிச் நகர பிஷப்பாக, 1977ம் ஆண்டு முதல் 1981ம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். அவர், பிஷப்பாக இருந்த கால கட்டத்திலும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.எனவே, ‘போப் பெனிடிக்ட் இச்சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, ஜெர்மனி பார்லிமென்ட் கீழ் சபையின் துணை தலைவர் உல்ப்கேங் தியர்ஸ், பெனிடிக்ட்டை சந்தித்து கோரினார்.நாளுக்கு நாள் பாதிரியார்கள் மீதான புகார்கள் அதிகரித்து வந்ததால் இதற்கு தீர்வு காண்பதற்காக கடந்த வாரம் போப் பெனிடிக்ட் வாடிகன் தேவாலயத்தின் உயர்மட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பாதிரியார்களின் தகாத உறவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தேவாலய நிர்வாகிகளுக்கும் அவர் சமீபத்தில் மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.போப் தனது கடிதத்தில் குறிப்பிடுகையில், ‘பாதிரியார்கள் தாங்கள் செய்த செயலை ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த செயல்கள் உங்கள் மதிப்பின் தரத்தை தாழ்த்தக்கூடியது. இந்த தகாத செயலால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
‘உங்களுக்கு நேர்ந்த இந்த துயரம் குறித்து வெட்கமும் வேதனையும் அடைகிறோம். அயர்லாந்து நாட்டு பாதிரியார்கள் செய்த துரோக செயல் குறித்து விசாரிக்கப்படும். அயர்லாந்து மக்கள், தேவாலயங்கள் மீது மீண்டும் நம்பிக்கை கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.போப்பின் இந்த எட்டு பக்க கடிதத்தால் மற்ற நாட்டு கத்தோலிக்கர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அயர்லாந்து நாட்டு சம்பவங்களை தான் போப் கண்டித்திருக்கிறார். அனைத்து நாடுகளுக்கும் இவரது மன்னிப்பு கடிதம் பொருந்தவில்லை என, அமெரிக்க கத்தோலிக்கர்கள் தெரிவித்துள்ளனர்.தவறு செய்த பாதிரியார்களை பதவி விலக வற்புறுத்தும் படி போப் இந்த கடிதத்தில் தெரிவிக்காததற்கு சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் அயர்லாந்தில் நடந்த கூட்டத்தில் கார்டினல் சீன் பிராடி, போப்பின் கடிதத்தை படித்து காண்பித்தார். அப்போது அவர் குறிப்பிடுகையில், ‘போப்பின் கடிதம் வரவேற்கத்தக்கது. அவர் குறிப்பிட்டுள்ளது போல், நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்.தேவைப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.