New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கீழடி நாகரிக மக்களின் புலப்பெயர்வு :-


Guru

Status: Offline
Posts: 25266
Date:
கீழடி நாகரிக மக்களின் புலப்பெயர்வு :-
Permalink  
 


கீழடி நாகரிக மக்களின் புலப்பெயர்வு :-
இற்றைக்கு 2600 ஆண்டுகளுக்கு முன்னர் கீழடியில் ஒரு நகர நாகரிகம் இருந்தமையும், அந்த நாகரிகத்தின் வியத்தகு கூறுகளையும் கடந்த சில ஆண்டுகளாக நாம் அறிந்து வந்துள்ளோம். இத்தகைய நகர நாகரிகம் எவ்வாறு முடிவுக்கு வந்தது? , எப்போது முடிவுக்கு வந்தது? என்ற புதிர்களுக்கான தீர்க்கமான முடிவு அறிவியல் முறையில் இப்போது தெரியவந்துள்ளது. அண்மையில் `Current Science` எனும் ஆய்விதழில் வெளிவந்த, "Luminescence chronology of sediments from the prehistoric civilisation sites along the Vaigai river, India" என்ற தலைப்பிலான கட்டுரையிலேயே கீழடி நாகரிகத்தின் முடிவு பற்றிய தெளிவான சான்றுகள் கிடைத்துள்ளன. கீழடியில் குறிப்பிடத்தக்க எதுவுமேயில்லை என ஒன்றிய அரசு ஓர வஞ்சனை செய்து அகழாய்வினை மூன்றாம் கட்டத்துடன் மூடி விட்ட பின்னர்; தமிழ்நாடு அரசானது பொறுப்பேற்று 4ஆம் கட்டம் முதல் 10 ஆம் கட்டம் வரை அகழாய்வினை நிகழ்த்திப் பல நூற்றுக் கணக்கான வியத்தகு கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தமை தெரிந்ததே! இத்தகைய நிலையில் ஐந்தாம் கட்ட அகழாய்வின் போது, பள்ளிச்சந்தை திடல் மேட்டில் தோண்டப்பட்ட இரண்டு அகழாய்வுக் குழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மாதிரிகளே இந்த முடிவினைத் தந்துள்ளன. ஐந்தாம் கட்ட அகழாய்வு நடந்தபோது வெளிவந்த கட்டடத் தொகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டால் படிவதைப் போன்ற மண் படிமங்கள் காணப்பட்டதை அடுத்து , அந்த மாதிரிகள் `Optically Stimulated Luminescence` { OSL } எனும் முறையின் கீழ் ஆய்வு செய்யப்பட்டன. தமிழ்நாடு தொல்லியல் துறையும் Physical Research Laboratory { Ahmedabad } உம் இணைந்து இந்த ஆய்வினைச் செய்து, குறித்த ஆய்வுக் கட்டுரையினை வெளியிட்டுள்ளன { ஆய்வுக் கட்டுரையினை முதலாவது பின்னூட்டத்தில் காண்க}.
இற்றைக்கு 1170 ஆண்டுகளுக்கு முன்னர் கீழடிப் பகுதியில் பெரியதொரு தொடர் வெள்ளப்பெருக்கு இடம் பெற்றுள்ளது. இந்தக் கடும் வெள்ளப் பெருக்கின் காரணமாக, அதே காலப் பகுதியில் கீழடி வாழ் மக்கள் அப் பகுதியினை விட்டு வெளியேறிருக்கலாம் எனவும் அதனுடன் கீழடி நகரம் கைவிடப்பட்டிருக்கலாம் எனவும் குறித்த ஆய்வுக் கட்டுரை சான்றுகளுடன் கூறுகின்றது. குறித்த காலத்தில் வையை ஆற்றின் போக்கு எவ்வாறு இருந்தது என்பதையும் இந்த ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுகின்றது. அப்போது வையை ஆறானது ஆற்றல்மிக்கதாகவும், பரந்த வடிநிலப் பகுதிகளையும் வெள்ளச் சமவெளிப் பகுதிகளையும் உள்ளடக்கியிருந்ததுடன்; வையைஆறானது புவியின் மேலோட்டில் ஏற்பட்ட மாற்றங்களாலும் வெள்ளப் பெருக்கின் காரணமாகவும் பல முறை தனது பாதையினை மாற்றியுள்ளமையினையும் இந்த ஆய்வு குறிப்பிடுகின்றது. கீழடி நகர நாகரிகத்தின் அழிவு ஒரு தொடர் வெள்ளப் பெருக்கின் மூலமே இடம் பெற்றுள்ளது எனவும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து (ஏறத்தாழ 80 ஆண்டுகள்) இடம் பெற்ற வெள்ளப் பெருக்கால் அவ்வப்போது குடியிருப்புகள் அழிந்தமை பற்றி இங்கு கூறப்படுகின்றது . இற்றைக்கு 1250 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய வெள்ளப்பெருக்கு, 1170 -1140 இற்கு இடைப்பட்ட காலத்தில் இங்கு வாழ்ந்த மக்களை முற்று முழுதாக இடம் பெயரச் செய்தது எனக் கட்டுரை கூறுகின்றது.
…….........................................
#எனது_பின்னிணைப்புகள் {இப் பதிவில் இனி வருவன, மேலே குறிப்பிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் இடம் பெறுவனவல்ல}.
👆இந்த ஆய்வுக் கட்டுரையானது வையை ஆற்றின் (வைகை ஆற்றின்) அப்போதைய பாய்ச்சலையும், பரந்தளவினையும் சொல்லும் போது, பரிபாடலில் வருகின்ற வையை ஆற்றின் ஓட்டம் பற்றிய வருணனைகள் மனக் கண்ணில் ஒப்பிட்டுப் பார்க்கப்பட வேண்டியவை.
`நிறை கடல் முகந்து உராய், நிறைந்து, நீர் துளும்பும்` எனப் பாடத் தொடங்கும் ஆசிரியன் நல்லந்துவனார் ஒரு கட்டத்தில் `வையைக்கரையே உடைந்துவிடும் என்று பறையொலி கேட்பது போல் ஊரே பேசிக்கொண்டது` என்ற பொருளில் பாடுவது நினைவுக்கு வருகின்றது. அன்று ( இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்) கரை உடையவில்லை, ஆனால் அவர்கள் பேசியது, ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் கழித்து (இற்றைக்கு 1170 ஆண்டுகளுக்கு முன்) நடந்து விட்டது.
👉இன்னுமொன்றையும் நினைத்துப் பார்கின்றேன், முன்னொரு பதிவில் எழுதியதுதான், காலப்பொருத்தம் கருதி, படியெடுத்து மீண்டும் தருகின்றேன்.
# மதுரைக்காஞ்சி,நெடுநல்வாடை போன்ற சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரமும் குறிப்பிடும் மதுரையானது தற்போதைய மதுரையன்று என்பது பல அறிஞர்களின் கருத்து. சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் மதுரையானது திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்கேயும், திருப்புவனத்திற்கு மேற்கேயும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய மதுரையானது திருப்பரங்குன்றத்திற்கு வடகிழக்குத் திசையில் காணப்படுகிறது. இப்போதைய கீழடிதான் சங்க கால மதுரை என்பதற்கான பின்வரும் சான்றுகளை அறிஞர்கள் முன்வைக்கின்றனர்.👇
1) சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் மதுரையானது திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்கேயும், திருப்புவனத்திற்கு மேற்கேயும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கீழடியும் சரியாக திருப்பங்குன்றத்திற்கு நேர் கிழக்கேயும், திருப்புவனத்திற்கு மேற்கேயும் (சங்க இலக்கியங்கள் குறிப்பிடுவதுபோல) காணப்படுகிறது.
2) அமைவிடம் சரியெனக் கொண்டால் பின் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நகர அமைப்பிற்கான கட்டிடங்கள், தொழிற்சாலைகள் உட்பட ஏராளமான குறிப்புகள், இன்றைய கீழடி அகழாய்வுச் சான்றுகளுடன் ஒத்துப் போகின்றன.
3) சிலப்பதிகாரத்தில் கோவலனும், கண்ணகியும் கவுந்தி அடிகளுடன் பூம்புகாரிலிருந்து மதுரை நோக்கிச்சென்ற பாதையும் சரியாகக் கீழடிக்குச் செல்லும் பாதையுடன் பொருந்திப்போகின்றது.
4) தற்போதைய மதுரையில் 10ம் நூற்றாண்டிலிருந்தே கல்வெட்டுச்சான்றுகள் கிடைக்க, பழைய மதுரையாக இப்போது கருதப்படுகின்ற கீழடியில் 10ம் நூற்றாண்டிற்கு முன்னரான சான்றுகள் சங்ககாலம் வரைக் காணப்படுகிறன. 👉எனவே 10ம் நூற்றாண்டளவில் மதுரை கீழடியிலிருந்து தற்போதைய மதுரைக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என உய்த்துணரமுடிகிறது. #


__________________


Guru

Status: Offline
Posts: 25266
Date:
Permalink  
 

தமிழின் தனித்துவம் :-
கீழடி அறிக்கையினை ஒன்றிய அரசின் கீழ் வருகின்ற இந்தியத் தொல்லியல் துறையானது (ASI ) ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளது. தனது துறையின் கீழ் பணியாற்றும் தொல்லியல்துறை ஆணையாளர் ஒருவரால் கையளிக்கப்பட்ட அறிக்கையினை வரலாற்றில் முதல் முறையாக இன்னொரு ஐவர் கொண்ட குழுவினை அமர்த்தி, ஆய்வு செய்து `ஏற்றுக்கொள்ள முடியாது`என அறிவித்துள்ளது. இவர்களுடைய மறுப்புக்கான காரணங்களில் ஒன்றாகச் சொல்லப்பட்ட ஒன்றினை மட்டுமே இப் பதிவில் பார்க்கப் போகின்றோம். அமர்நாத் இராமகிருசுணனால் கையளிக்கப்பட்ட அறிக்கையில் கீழடியில் தனித்துவமான ஒரு பண்பாட்டுத் தொடர்சி காணப்பட்டது என்பதனைக் கூறியுள்ளார். அதனையும் மறுப்புக்கான ஒரு காரணமாக ஐவர் குழு கூறியுள்ளது. சற்று விளக்கமாகச் சொன்னால், தமிழருக்கு எனத் தனித்துவமான ஒரு பண்பாடு இருந்தது என்பதனை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் சொல்வது கீழடிக் கண்டுபிடிப்புகளை இந்தியாவின் ஏனைய பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகளோடு தொடர்புபடுத்தியே சொல்ல வேண்டும், இராமயாணம்- மகாபாரதம் போன்ற இலக்கியங்களோடு தொடர்புபடுத்தியே சொல்ல வேண்டும், தனியே சங்க இலக்கியங்களோடு தொடர்புபடுத்துவதனை ஏற்க முடியாது எனக் கூறியுள்ளனர். இன்னமும் சொன்னால்👉 `ஒற்றைப் பண்பாடு` எனக் கட்டியெழுப்பப்படும் அரசியலுக்குள் தமிழ்ப் பண்பாடு- நாகரிகம் என்பவற்றினை அடங்கிப் போகுமாறு மறைமுகமாக ஒன்றிய அரசின் குழு சொல்லியுள்ளது. இதற்கான தமிழரது எதிர்வினையாக ஒன்றே ஒன்றுதான் இருக்க முடியும்.
அந்த எதிர்வினை👉 தமிழ்ப் பண்பாட்டின் தனித்துவத்தினை உயர்த்திப் பிடிப்பதாகவே இருக்க வேண்டும்.

தமிழின் தனித்துவங்கள் சில வருமாறு 👇👇
👉`பிறப்பொக்கும் ` - தமிழருக்கு பிறப்பிலடிப்படையிலான சாதி வேறுபாடுகளில்லை, இன்றும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே சாதிப் பெயர் வால்கள் மாந்தரின் பெயர்களில்லை. இது ஒரு தனித்துவம்.

👉`எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே` - வேறு எந்த மொழியிலும் இத்தகைய சிறப்பு இல்லை. இத் தனித்துவத்தினை தொடர்ந்தும் தக்க வைப்பதாயின், வடமொழிச் சொற்களைத் தவிர்த்துத் தூய தமிழ்ச் சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

👉`கற்கை நன்றே` -தமிழர் கல்விக்குக் கொடுக்கும் முகன்மையும் , தமிழரது கல்வி அடைவும் உலகறிந்ததே.

👆இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம், நீட்சி கருதி இத்துடன் முடிக்கின்றேன். ஒன்றே ஒன்றினை மட்டும் நினைவில் கொள்வோம், எமது கலை-பண்பாடு- நாகரிகம் என்பனவற்றின் தனித்துவத்தினைக் காக்க நாம் இன்னமும் அதிகமாகப் போராட வேண்டும். எமது பண்பாட்டுத் தனித்துவத்தின் தொன்மையினை விட, அதன் தொடர்ச்சியே எமக்கு முகன்மை.



__________________


Guru

Status: Offline
Posts: 25266
Date:
Permalink  
 

 தற்போதைய மதுரையின் மற்றொரு பெயர் - கடம்பவனம், அதாவது கடம்ப மரங்கள் 

🌳 நிறைந்த காடு. தல புராணங்களின் படி, குல சேகர பாண்டியன் எனும் அரசன் கடம்பவனத்தினை அழித்துக் நாட்டினை ( நகரினை) உருவாக்கினான் எனச் சொல்லுகின்றன. குலசேகர பாண்டியனின் காலம் 1268 இல் தொடங்குகின்றது. கீழடியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மூன்று திசைகளில் பரவினர் என இந்தாய்வு கூறுகின்றது. முதலில் சிதறி வெவ்வேறு இடங்களில் தற்காலிகமாகக் குடியேறி, பின்னர் சில ஆண்டுகளின் பின் இழப்புகளிலிருந்து மீண்டு ஓரளவு நிலை பெற்ற பின்பு, கடம்ப மரங்கள் நிறைந்த காட்டினை அழித்து, தற்போதைய மதுரை உருவாக்கப்பட்டுள்ளது. கீழடி வழித்தோன்றல்களில் ஒரு பகுதியினர் இங்கு குடியேறித் தமது பழைய நகரப் பெயரான மதுரையினை புதிய நகருக்கும் வைத்துள்ளனர். கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்குச் சரியாகவே வருகின்றது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 25266
Date:
Permalink  
 

 'சிலப்பதிகாரம் காட்டும் ஊர்கள்' என்ற தலைப்பில் கண்மணி என்பவர் எழுதிய நூல் (முனைவர் பட்டத்திற்காக அவர் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை அல்லது அதன் விரிவாக்கம்') கண்ணகியும் கோவலனும் பூம்புகாரிலிருந்து மதுரை செல்லும் வழியை விரிவாக ஆராய்ந்து வரைபடத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தற்போதைய மதுரைதான் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் மதுரை என்பதை பல்வேறு அகச் சான்றுகளுடன் எழுதியுள்ளார். இன்னும் சொல்லப்போனால் கோவலன் பொற்கொல்லரை சந்தித்து பேசிய இடம் தற்போது எந்தத் தெரு போன்ற விவரங்களையும் எழுதி முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். அவையெல்லாம் தவறாகி விட்டனவா? தற்போதைய கீழடிதான் சிலப்பதிகாரக் காலத்து மதுரை என்பதற்கு மேலும் தரவுகள் வேண்டாமா?

//மாறவர்மன் அரிகேசரி (கூன் பாண்டியன்) காலத்தில் (7-ஆம் நூற்றாண்டு) வைகையாற்றில் கட்டப்பட்ட தடுப்பணை ஒன்று இந்த சாலைக்கு அருகில் இருந்ததற்கான கல்வெட்டு ஆதாரம் உள்ளது, தற்போது அந்த தடுப்பணை இல்லை.//

கீழடியில் இருந்து தற்போதைய நகருக்கு மாறியது ஏதேனும் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கா ? கல்வெட்டுச் சான்று உண்டா  இராசமாணிக்கனார் எழுதிய 'பத்துப்பாட்டு ஆராய்ச்சி ' எனும் நூல் காண்க, போதிய விளக்கங்கள் அங்குண்டு.



-- Edited by Admin on Sunday 4th of January 2026 08:11:48 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard