New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 2.1 பல்லவர்கள் யார்?


Guru

Status: Offline
Posts: 25222
Date:
2.1 பல்லவர்கள் யார்?
Permalink  
 


2.1 பல்லவர்கள் யார்?

கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்கள் அரசியல் இறைமை பெற்றிருந்தனர். பல்லவர்கள் வடக்கில் சாளுக்கிய வம்சத்தினரையும், தெற்கில் தமிழ் மன்னர்களையும் பணிய வைத்தார்கள். பொதுவாகப் பல்லவர்கள் அரசியலிலும், பண்பாட்டிலும் முக்கியத்துவம் பெற்று விளங்கி வந்தார்கள். இப்பெயர் பெற்ற பல்லவர்களைப் பற்றிய சான்றுகள் கிடைத்துள்ளன. இருப்பினும் இப்பல்லவர்கள் தமிழ்நாட்டினைச் சார்ந்தவர்களா? அல்லது அயல்நாட்டைச் சேர்ந்தவர்களா? அல்லது வட இந்தியாவிலிருந்து வந்தவர்களா? பின்பு இவர்கள் எங்கிருந்துதான் தமிழ்நாட்டிற்கு வந்தனர்? ஏன் வந்தனர்? என்னும் கேள்விகளுக்கு ஆராய்ச்சியாளர்களால் இன்னும் சரிவரப் பதில் காண முடியவில்லை. இக்கேள்விகளுக்கான பதில்களைப் பல்லவர்கள் எழுதி வைத்துச் சென்ற செப்பேடுகள், கல்வெட்டுகள் ஆகியவற்றைக் கொண்டு ஒருவாறு கோர்வை செய்து கொள்ளலாம்.

பல்லவர்களைப் பற்றிய பல்வேறு கருத்துகள் வரலாற்று ஆசிரியர்களிடம் நிலவுகின்றன. இக்கருத்துகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவையாவன:

1. பல்லவர்கள் அயல்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

2. பல்லவர்கள் வடஇந்தியாவைச் சேர்ந்தவர்கள்

3. பல்லவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்

இம்மூன்று பிரிவுகளை ஒன்றன்பின் ஒன்றாகக் காண்போம்.

2.1.1 பல்லவர்கள் அயல்நாட்டைச் சேர்ந்தவர்கள்

பாரசீகத்தைச் சேர்ந்த பகலவர்களே பல்லவர்கள் என வின்செண்ட் ஸ்மித் கூறுகிறார். சாதவாகன அரசு வீழ்ச்சி அடைந்ததும் பகலவர்கள் தொண்டை மண்டலத்தில் குடிபுகுந்து பல்லவ அரசைத் தோற்றுவித்தனர் என்றும் அவர் கூறுகிறார். ஜோவேயு துபிரில் (Joureau Duberial) என்பவரும் இக்கருத்தினை ஆதரிக்கின்றார்.

a0312201.jpg

காஞ்சியிலுள்ள வைகுண்டப் பெருமாள் கோயிலில் மணிமுடியை அளிக்கும் சிற்பம் ஒன்று உள்ளது. இம்மணிமுடி பாக்டீரிய (Bactria) மன்னர் டெமிட்டிரியஸின் (Demetrius) மணிமுடியை ஒத்திருக்கின்றது. எனவே, பல்லவர்கள் பாக்டீரிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று வெங்கட சுப்பைய ஐயர் கருதுகின்றார்.

சோழ மன்னர் பம்பரையினருக்கும், இலங்கைச் சாகவம்சத்திற்கும் தொடர்புடையவர்கள் பல்லவர்கள் என்ற கருத்தும் உண்டு. தொண்டைமான் நெடுமுடிக்கிள்ளி என்ற சோழ இளவலுக்கும் மணிபல்லவத்து நாக கன்னிகை பீலிவளை என்பவளுக்கும் பிறந்தவன் தொண்டைமான் இளந்திரையன். இச்செய்தி மணிமேகலைக் காப்பியம் வாயிலாக அறியப்படுகிறது. (மணிமேகலை, தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை, 3-11). இத்தொண்டைமான் இளந்திரையனே பத்துப்பாட்டில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை என்னும் பாட்டுக்குத் தலைவன் என்று கருதப்படுகிறான். நாககன்னிகை பீலிவளையின் ஊர் மணிபல்லவம். மணிபல்லவம் என்னும் சொல்லின் இறுதியான பல்லவம் என்ற சொல்லே பல்லவர் எனத் திரிந்தது என்பர். மணிபல்லவம் என்பது பழங்காலத்தில் இலங்கைக்கு அருகில் இருந்த ஒரு தீவு என இலங்கையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் இராசநாயகம் என்பவர் கூறுகிறார்.

2.1.2 பல்லவர்கள் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள்

K.P.ஜெயஸ்வால் என்பவர் பல்லவர்கள் வட இந்தியாவைச் சேர்ந்த பிராமணர்கள் என்கின்றார். போரில் வலிமை பெற்றிருந்த பிராமணர்கள் வட இந்தியாவிலிருந்து தெற்கு நோக்கி வந்து அரசியலில் ஈடுபட்டனர். அவ்வாறு வந்தவர்கள் வாகாடகர் என்னும் வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவ்வாகாடகர்களே காஞ்சியில் புகுந்து பல்லவப் பேரரசைத் தோற்றுவித்தனர் என்கிறார்கள். இப்பல்லவர்கள் அஸ்வமேத வேள்விகளைச் செய்தனர் என்றும், சமஸ்கிருத மொழியை ஆதரித்து வந்தனர் என்றும் கூறுகின்றனர்.

2.1.3 பல்லவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்

சோழ மண்டலத்தில் வாழ்ந்து வந்த குறும்பர், கள்ளர், மறவர் ஆகியோரிடையில் இனக்கலப்பு ஏற்பட்டது. இவர்களுக்கிடையில் புதிதாகத் தோன்றிய ஒரு இனமே பல்லவர்கள். எலியட், செவ்வேல் முதலிய ஆராய்ச்சியாளர்கள் குறும்பர்கள் ஆடுமாடுகளை மேய்ப்பவர்கள்; இவர்களின் மன்னரே பல்லவர் என்று கருதுகின்றனர். இப்பல்லவர்கள் காலப்போக்கில் காஞ்சியை உரிமையாக்கிக் கொண்டு ஆட்சியைத் தொடங்கினர்.

பல்லவர்கள் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த குறும்பர்களுடன் தொடர்புடையவர்கள் என்று சத்தியநாத ஐயர் என்னும் வரலாற்று ஆசிரியர் கருதுகின்றார். அசோகரது கல்வெட்டுகளில் புலிந்தர் என்னும் இனத்தவர் அவனது பேரரசில் வாழ்ந்து வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. புலிநாடு, புலியூர்க் கோட்டம் என்னும் இரு கோட்டங்கள் தொண்டை மண்டலத்தில் இருந்தன. இப்பகுதியில் புலிந்தர்கள் வாழ்ந்து வந்தனர். புலிந்தரும் குறும்பரும் ஒருவரே. புலிந்தர்களுக்குப் பலடர் என்னும் மற்றொரு பெயரும் உண்டு. பலடர் என்னும் சொல் பல்லவர் என்று மருவியிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.

எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் என்பவர் பல்லவர்கள் சாதவாகன மன்னர்களின் கீழ்ச் சிற்றரசர்களாகவும், அரசு அலுவலர்களாகவும் பணியாற்றிய ஓர் இனத்தவர் என்று கூறுகிறார். கி.பி. 3ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சாதவாகனர்கள் வீழ்ச்சியுற்றனர். அந்நிலையில் காஞ்சியை அரசு இருக்கையாகக் கொண்டு பல்லவர்கள் ஆட்சியைத் தொடங்கினர். பல்லவர் என்ற சொல்லும் தொண்டையர் என்ற சொல்லும் ஒரே பொருளையே உணர்த்துகின்றன. அதோடு சாதவாகனர்களின் ஆட்சி முறையும், முற்காலப் பல்லவர்களின் ஆட்சி முறையும் ஒத்திருந்தது கவனிக்கத்தக்கது.

எது எவ்வாறு இருப்பினும் பல்லவர்கள் தமிழர்கள் என்னும் கொள்கையினை முன்பின் பாராது மறந்து விடலாம். ஏனெனில் பல்லவர்கள் தமிழை ஆட்சி மொழியாகக் கொள்ளவோ அல்லது அதற்கு ஆதரவு அளிக்கவோ இல்லை. பல்லவர்கள் சாதவாகனப் பேரரசர்களுக்கு அடங்கி அப்பேரரசின் தெற்கில் ஆண்டு வந்த அரசர்கள் என்பதே பொருத்தமுடையது எனலாம்.

a0312202.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 25222
Date:
Permalink  
 

2.2 பல்லவர் வரலாற்றுச் சான்றுகள்

பல்லவர்களைப் பற்றிப் பலதரப்பட்ட கருத்துகள் நிலவி வந்தாலும் பல்லவ மன்னர்களையும் அவர்களின் ஆட்சியையும், அவர்கள் செய்த போரையும், அவர்கள் சார்ந்திருந்த சமயத்தையும் பற்றிப் பல வரலாற்றுச் சான்றுகள் நமக்குக் கிடைத்துள்ளன. அவைகளை நான்கு வகைகளாகப் பிரித்துக் காணலாம். அவையாவன:

1. இலக்கியச் சான்றுகள்

2. நினைவுச் சின்னங்கள்

3. பட்டயங்களும் கல்வெட்டுகளும்

4. அயல்நாட்டுச் சான்றுகள்

2.2.1 இலக்கியச் சான்றுகள்

அப்பர் பாடிய சைவத்திருமுறையில் பல்லவரையும் சமணரையும் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுந்தரர் பாடிய தேவாரத்தின் வாயிலாகப் பல்லவர்கள் பேரரசர்கள் என்னும் உண்மையை அறியலாம்.

நந்திக்கலம்பகம், பாரத வெண்பா என்னும் நூல்கள் மூன்றாம் நந்திவர்மனின் வீரத்தையும், கொடையையும், அவன் செய்த போர்களையும் குறிப்பிடுகின்றன.

முதலாம் நரசிம்மவர்மன் சாளுக்கியரைப் போரில் வென்று அவர்களின் தலைநகராகிய வாதாபியை வென்றான். இவனுக்குப் படைத் தளபதியான பரஞ்சோதியார் என்பவர் பின்பு சிறுத்தொண்ட நாயனார் என்று சைவ நாயன்மார்களில் ஒருவராகச் சிறப்பிக்கப்பட்டார் என்ற செய்தியினைப் பெரிய புராணம் எடுத்துரைக்கின்றது.

முதலாம் மகேந்திரவர்மன் முதலில் சமணனாக இருந்து பின்பு சைவனாக மாறியவன் எனப் பெரியபுராணம் கூறுகிறது.

பெரியபுராணம் என்னும் நூல் இயற்றிய சேக்கிழார், பல்லவர்கள் ஆட்சி செய்த தொண்டை மண்டலத்தைச் சார்ந்தவர். ஆதலால் பல்லவர் காலத்துத் தமிழகத்தின் நிலையை அவர் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றார். மேலும் முதலாம் நரசிம்மவர்மன் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்த நிகழ்ச்சியையும், சோழநாடு பல்லவர்களுக்கு உட்பட்டிருந்த நிலையையும் பெரிய புராணத்தில் அவர் உணர்த்துகிறார்.

வைணவப் பெரியோர்கள் பாடியருளிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்திலும் பல்லவர் பற்றிய சான்றுகள் கிடைக்கின்றன.

அவந்தி சுந்தரி கதையில் சிம்மவிஷ்ணு காஞ்சியைக் களப்பிரர்களிடமிருந்து கைப்பற்றினான் என்று கூறப்பட்டிருக்கின்றது.

2.2.2 நினைவுச் சின்னங்கள்

பல்லவ மன்னர்கள் எழுப்பிய கற்கோயில்களும், குடைந்த குகைக் கோயில்களும் பல்லவர் வரலாற்றைப் பறை சாற்றும் அழியாச் சான்றுகளாகும். அவற்றுள் மாமல்லபுரம், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் உள்ள கற்கோயில்கள் முக்கியமானவைகளாகும்.

முதலாம் பரமேசுவரவர்மன் சிறந்த சிவத்தொண்டன். காஞ்சிபுரத்திற்கு அண்மையில் கூரம் என்னும் இடத்தில் சிவன் கோயில் ஒன்று எழுப்பினான். மாமல்லபுரத்திலும் சில கோயில்கள் செதுக்கி வைத்தான்.

முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில்தான் மாமல்லபுரம் நகரமே அமைக்கப்பட்டது. மேலும் காஞ்சிபுரத்தில் இராசசிம்மன் எனப்படும் இரண்டாம் நரசிம்மவர்மன் எழுப்பிய கைலாசநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியது.

a0312203.jpg
 
a0312204.jpg

முதலாம் மகேந்திரவர்மன் சித்தன்னவாசலில் குகைக்கோயில் அமைத்துள்ளான். இக்குகைக் கோயிலில் உள்ள ஓவியங்கள் புகழ் பெற்றவை.

2.2.3 பட்டயங்களும் கல்வெட்டுகளும்

பல்லவர்கள் விட்டுச் சென்ற செப்புப் பட்டயங்கள் அவர்கள் வரலாற்றை அறிய உதவும் காலக் கண்ணாடிகளாகும். அவர்கள் காலத்துக் கோயில்களில் இடம்பெறும் கல்வெட்டுகள் வரலாற்று உண்மைகள் பலவற்றைத் தருகின்றன. அண்டைநாட்டு மன்னர்கள் வரைந்த பட்டயங்களும், கல்வெட்டுகளும் பல்லவர்கள் வரலாற்றை அறியத் துணை புரிகின்றன.

பல்லவர்களுடைய கல்வெட்டுகள் மகேந்திரவாடி, தளவானூர், பல்லாவரம், திருச்சிராப்பள்ளி, திருக்கழுக்குன்றம், வல்லம், மாமண்டூர், மண்டகப்பட்டு, சித்தன்னவாசல், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வயலூர் என்ற இடத்தில் இராசசிம்மன் தூண் கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது.

தளவானூர்க் குகைக் கல்வெட்டுகளில் மகேந்திரவர்மப் பல்லவன், தொண்டை மாலையணிந்தவன் எனக் குறிப்பிடப்படுகின்றான்.

பல்லவர்களின் ஆட்சியானது காஞ்சிபுரத்திலிருந்து வடக்கில் கிருஷ்ணா நதி வரையில் பரவிற்று என்பதற்கான சான்றுகள் மயிதவொளு, ஹீரஹதஹள்ளி என்னும் ஊர்களில் கிடைத்துள்ள சிவஸ்கந்தவர்மனின் பிராகிருத மொழிச் செப்பேடுகளில் காணப்படுகின்றன.

பல்லவ சமஸ்கிருதச் செப்பேடுகளில் 16 பல்லவ மன்னரின் பெயர்கள் காணப்படுகின்றன. அவர்களின் காலம் கி.பி. 330-575 ஆகும் எனத் தெரிகிறது.

மகேந்திரவர்மன் முதலில் சமணனாக இருந்தான். பின்பு திருநாவுக்கரசரிடம் ஈடுபாடு கொண்டு சைவ சமயத்தைத் தழுவினான். இவன் சிவலிங்க வழிபாடு உடையவன் என்று திருச்சிராப்பள்ளிக் கல்வெட்டுக் கூறுகின்றது.

சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தனிடம் பரமேசுவரவர்மன் தோல்வியுற்றான் எனவும், பல்லவ குடும்பத்தையே சாளுக்கியர்கள் அழித்துவிட்டனர் எனவும் விக்கிரமாதித்தனுடைய கடவால் செப்பேடுகள் (கி.பி. 674) தெரிவிக்கின்றன.

இரண்டாம் நந்திவர்மன் தனது பன்னிரண்டு வயதில் அரசு கட்டில் ஏறினான் என்று வைகுண்டப் பெருமாள் கோயில் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கின்றது.

பட்டத்தாள் மங்கலம் செப்பேடுகள் இரண்டாம் நந்திவர்மனின் தந்தை இரணியவர்மன் என்றும், இம்மன்னன் இளமையிலே அரசாட்சி ஏற்றுக் கொண்டான் என்றும் கூறுகின்றன.

காசாக்குடிக் கல்வெட்டுகள் இரண்டாம் நந்திவர்மன், சிம்மவிஷ்ணுவின் தம்பியான பீமவர்மனின் வழிவந்தவன் என்றும், மக்களால் அரசாட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்றும் தெரிவிக்கின்றன.

சாளுக்கிய மரபின் அழிவிற்கும் தாழ்விற்கும் பல்லவரே பொறுப்பாளிகள் என்று சோரப் பட்டயம் கூறுகிறது.

2.2.4 அயல்நாட்டுச் சான்றுகள்

a0312205.jpg

கி.பி. 640இல் சீனப் பயணியான யுவான்-சுவாங் பல்லவர் தலைநகராகிய காஞ்சிக்கு வந்தார். அவர் காஞ்சியைப் பற்றியும், அங்கு நிலவிய சமயங்களைப் பற்றியும் தமது குறிப்பில் விளக்கியுள்ளார். மேலும் அவர் காஞ்சியின் உயர்ந்த நிலையைப் பலவாறு போற்றிக் கூறுவதோடு, காஞ்சி ஆறு கல் சுற்றளவுடையது என்றும் கூறுகிறார்.

இலங்கையைச் சார்ந்த மகாவம்சம் என்ற வரலாற்று நூல், பல்லவர் இலங்கை மீது படையெடுத்துச் சென்ற நிகழ்ச்சியைக் கூறுகின்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 25222
Date:
Permalink  
 

 

  • 2.3 பல்லவ மன்னர்கள் (கி.பி. 250-890)

    பல்லவ மன்னர்களின் அரசியல் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு அவர்கள் வெளியிட்ட பட்டயங்கள் துணை புரிகின்றன. பல்லவ மன்னர்கள் தொடக்க காலத்தில் (கி.பி. 250-575) வெளியிட்ட பட்டயங்கள் பிராகிருத மொழியிலும், இடைக்காலத்தில் (கி.பி. 575-730) வெளியிட்ட பட்டயங்கள் சமஸ்கிருத மொழியிலும், பிற்காலத்தில் (கி.பி. 731-890) வெளியிட்ட பட்டயங்கள் கிரந்தத் தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், பட்டயங்களைப் பிராகிருத மொழியில் வெளியிட்டவர்களை முற்காலப் பல்லவர்கள் என்றும், சமஸ்கிருத மொழியில் வெளியிட்டவர்களை இடைக்காலப் பல்லவர்கள் என்றும், கிரந்தத் தமிழில் வெளியிட்டவர்களைப் பிற்காலப் பல்லவர்கள் என்றும் மூன்று பிரிவினராக வரலாற்றாசிரியர்கள் பிரிக்கின்றனர்.

    இவர்களைப் பற்றி ஒருவர் பின் ஒருவராக நாம் கீழே காண்போம்.

    2.3.1 முற்காலப் பல்லவர்கள் (கி.பி. 250-575)

    முற்காலப் பல்லவர்கள் பிராகிருத மொழியில் பட்டயங்களை வெளியிட்டனர். இவர்கள் தொடக்கத்தில் தமிழகத்திற்கு வடக்கே சாதவாகனப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்ட சிற்றரசர்களாய் விளங்கினார். அப்பேரரசுக்குத் திறை செலுத்திக் காஞ்சிபுரத்திலிருந்து ஆட்சி செலுத்தினர். சாதவாகனப் பேரரசு கி.பி.225இல் வீழ்ச்சியுற்றது. அதற்குப் பின்னர்க் காஞ்சிபுரத்தில் பல்லவரே முழு ஆட்சிப் பொறுப்பையும் சுமார் கி.பி. 250 அளவில் ஏற்றுக்கொண்டனர். நாளடைவில் அவர்களுடைய ஆட்சியானது காஞ்சிபுரத்திலிருந்து கிருஷ்ணாநதி வரை விரிவடைய ஆரம்பித்தது. பல்லவர்கள் சாதவாகனருடன் தொடர்பு கொண்டிருந்ததால், சாதவாகனரின் மொழியாகிய பிராகிருத மொழியிலேயே தொடக்க காலத்தில் பட்டயங்களை வெளியிட்டனர். இப்பட்டயங்கள் மயிதவொளு, ஹீரஹதஹள்ளி என்னும் ஊர்களில் கிடைக்கப்பெற்றன.

    இப்பட்டயங்கள் வரலாற்று உண்மைகளை அவ்வளவாகத் தரவில்லை. ஆகையால், இவைகளைக் கொண்டு அக்காலத்துப் பல்லவ மன்னர்களைப் பற்றியும், அரசியல் பண்பாட்டு நிலைகளைப் பற்றியும் அவ்வளவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும் பப்பதேவன், சிம்ம வர்மன், சிவஸ்கந்தவர்மன், விஷ்ணுகோபன் என்போர் முற்காலப் பல்லவர் என்று கூறப்படுகின்றனர். இவர்களுள் சிவஸ்கந்தவர்மன் முக்கியமானவன்.

    • சிவஸ்கந்தவர்மன்

    சிவஸ்கந்தவர்மன் கி.பி. 4ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சிபுரத்திலிருந்து அரசாண்டான். அப்போது அவனுடைய அரசு வடக்கே கிருஷ்ணா நதியிலிருந்து தெற்கே தென்பெண்ணை நதிவரையில் பரவியிருந்தது.

    சிவஸ்கந்தவர்மன் வழிவந்தவன் விஷ்ணுகோபன் ஆவான் என ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஏனென்றால் கி.பி. 4ஆம் நூற்றாண்டின் இடையில் காஞ்சியை விஷ்ணுகோபன் ஆண்டு வந்ததாகச் சமுத்திரகுப்தன் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. (சமுத்திர குப்தன் என்பவன் கி.பி. 335 முதல் 380 வரை வட இந்தியாவில் குப்தப் பேரரசை ஆண்டு வந்த அரசன் ஆவான்.)

    2.3.2 இடைக்காலப் பல்லவர்கள் (கி.பி. 575-730)

    இடைக்காலப் பல்லவர்கள் சமஸ்கிருத மொழியில் பட்டங்களை வெளியிட்டனர். இக்காலத்தின் தொடக்கத்தில் தமிழகம் இருளில் மூழ்கியிருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்நிலைக்குக் காரணம் களப்பிரர்களின் படையெடுப்பு என்கின்றனர். குமாரவிஷ்ணு, ஸ்கந்தவர்மன், வீரவர்மன், இரண்டாம் ஸ்கந்தவர்மன், சிம்மவர்மன், சிம்மவிஷ்ணு முதலியோர் இக்காலத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். புகழ் பெற்ற முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன், முதலாம் பரமேசுவரவர்மன், இரண்டாம் நரசிம்மவர்மன் முதலியோரும் இக்காலத்தைச் சார்ந்தவர்களே ஆவர்.a0312206.jpg

    • சிம்மவிஷ்ணு (கி.பி. 575-615)

    இடைக்காலப் பல்லவர்களை மகா பல்லவர்கள் என்றும் கூறுவர். ஏனெனில் இவர்கள் தமிழகத்திற்குப் புகழ் சேர்த்தனர். இடைக்காலப் பல்லவ மன்னருள் முதல்வன் சிம்மவிஷ்ணு ஆவான். முதலில், தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த களப்பிரர்களை அடக்கினான். பின்பு சோழருடன் போராடி வெற்றிவாகை சூடினான்; சேரனையும், இலங்கை வேந்தனையும் புறங்கண்டான்.

    • முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 615-630)

    சிம்ம விஷ்ணுவை அடுத்து அவனது புதல்வனான முதலாம் மகேந்திரவர்மன் பதவி ஏற்றான். இவனுக்கு மகேந்திர விக்ரமன் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவன் விசித்திரசித்தன் எனப் புகழப்பட்டான். தென்னிந்திய வரலாற்றில் பல்லவர் காலத்தில் கலையும், கல்வியும் சிறப்புற்று விளங்கின. இவற்றைத் துவக்கி வைத்த பெருமை மகேந்திரவர்மனுக்கு உண்டு. இவன் சாளுக்கியரை வென்றான்; கங்கர்களை அடக்கினான்.

    முதலாம் மகேந்திரவர்மன் பொதுப்பணிகளில் ஈடுபட்டு நாட்டு மக்களுக்கு நன்மைகள் பல செய்தான். இவன் முதலில் சமணனாக இருந்தான். பின்னர், சைவ சமயத் தொண்டரான திருநாவுக்கரசர் முயற்சியால் சைவ சமயத்திற்கு மாறினான். கட்டடக் கலை, சிற்பக்கலை, சித்திரக் கலை, இசைக்கலை ஆகியவற்றிற்கு இவன் ஆற்றிய தொண்டுகள் அளவிடற்கு அரியன.

    • முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி. 630-668)

    முதலாம் மகேந்திரவர்மனுக்குப் பின்னர் அவனது மகன் முதலாம் a0312213.jpgநரசிம்மவர்மன் அரியணை ஏறினான். இவனது காலத்தில் அரசியல், பண்பாடு ஆகியவை சிறப்புப் பெற்று விளங்கின. இவன் வாதாபியை ஆண்டு வந்த சாளுக்கியரை வென்றான். இதனால் இவனை வாதாபி கொண்டான் என்றனர். இவ்வெற்றிக்குக் காரணமான தளபதி பரஞ்சோதியே பிற்காலத்தில் சிறுத்தொண்ட நாயனார் எனப் போற்றப் பெற்றார்.

    முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் அரிய பெரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவன் சாளுக்கியரை வென்றதோடு பாண்டியருடனும், இலங்கையருடனும், கங்கருடனும் போர் புரிந்து வெற்றி பெற்றான். யுவான்-சுவாங் என்ற சீனப் பயணி இவனது ஆட்சிக் காலத்தில் காஞ்சிபுரத்திற்குக் கி.பி. 640இல் பயணம் செய்தார். அவர் தமது குறிப்பில் காஞ்சி மாநகரைப் பற்றிச் சிறப்புறக் கூறியுள்ளார்.

    முதலாம் நரசிம்மவர்மன் கட்டடக் கலை, சிற்பக்கலை ஆகியவற்றின் a0312207.jpgவளர்ச்சிக்குச் செய்த தொண்டுகள் அளவிடற்கரியன. பல்லவ நாட்டில் மலையைக் குடைந்து பல குகைக்கோயில்களை அமைத்தான். நாமக்கல் மலையடியில் தென் மேற்கு மூலையில் உள்ள நரசிங்கப் பெருமாள் குகைக்கோயில், மாமல்லபுரத்தில் உள்ள மகிடாசுர மண்டபம், வராக மண்டபம் ஆகிய குகைக் கோயில்கள் இவன் அமைத்தன ஆகும். முதன்முதலாக ஒரே கல்லில் ஆன ஒற்றைக்கல் கோயில்களை அமைத்த பெருமை இவனையே சாரும். மகாபலிபுரத்தில் உள்ள பஞ்சபாண்டவர் தேர்கள் எனப்படும் ஒற்றைக்கல் கோயில்கள் ஐந்தும் இவனால் அமைக்கப்பட்டனவே ஆகும்.

    a0312208.jpg

    முதலாம் நரசிம்மவர்மனுக்கு மாமல்லன் என்ற பட்டப் பெயரும் உண்டு. இப்பட்டப் பெயர் கொண்டு மகாபலிபுரம் மாமல்லபுரம் என்றும் அழைக்கப்பட்டது. மகாபலிபுரம் இவன் ஆட்சிக் காலத்தில் ஒரு சிறந்த துறைமுகப் பட்டினமாக விளங்கியது.

    முதலாம் நரசிம்மவர்மனுக்குப் பின்பு அவன் மகன் இரண்டாம் மகேந்திரவர்மன் பல்லவ அரசனாக முடிசூட்டிக் கொண்டான். இவன் இரண்டு ஆண்டுகளே (கி.பி. 668-670) அரசாண்டான்.

    • முதலாம் பரமேசுவரவர்மன் (கி.பி. 670-695)

    இரண்டாம் மகேந்திரவர்மனுக்குப் பின்பு அவனுடைய மகன் முதலாம் பரமேசுவரவர்மன் பட்டத்திற்கு வந்தான். இவன் சாளுக்கிய அரசன் முதலாம் விக்கிரமாதித்தனோடும் அவனுக்குத் துணையாக வந்த மேற்குக் கங்க அரசன் பூவிக்கிரமனோடும் செய்த போரில் தோல்வியுற்றான். இவன் சிறந்த சிவத் தொண்டனாக விளங்கினான். காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள கூரம் என்னும் இடத்தில் இவன் கட்டிய சிவன் கோயில் புகழ் வாய்ந்தது.

    • இரண்டாம் நரசிம்மவர்மன் (கி.பி. 695-722)

    முதலாம் பரமேசுவரவர்மனுக்குப் பின்னர் அவனுடைய மகன்a0312209.jpg இரண்டாம் நரசிம்மவர்மன் பதவி ஏற்றான். இவனுக்கு இராசசிம்மன் என்னும் மற்றொரு பெயரும் உண்டு. இவன் காலத்தில் பல்லவப் பேரரசிற்கும், சாளுக்கியப் பேரரசிற்கும் இடையில் நடைபெற்று வந்த போர் ஓய்ந்திருந்தது. இதனால் உள்நாட்டில் அமைதி நிலவியது. இதைச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு கலைத்தொண்டில் ஈடுபட்டான் இராசசிம்மன். இவனுக்குப் பெரும்புகழையும், சைவ சமய வரலாற்றில் அழியாத இடத்தையும் பெற்றுக் கொடுத்தது காஞ்சிபுரத்தில் இவன் எழுப்பிய கைலாசநாதர் கோயில் ஆகும். மகாபலிபுரத்தில் சிறந்து விளங்கும் கடற்கரைக் கோயிலும் இவன் எழுப்பியதே ஆகும்.

    • இரண்டாம் பரமேசுவரவர்மன் (கி.பி. 722-730)

    இரண்டாம் நரசிம்மவர்மனுக்குப் பின்பு அவனுடைய மகன் இரண்டாம் பரமேசுவரவர்மன் அரியணை ஏறினான். இவனது ஆட்சிக் காலத்தில் சாளுக்கியருக்கும் பல்லவருக்கும் இடையே பகைமை உச்சக்கட்டத்தை அடைந்தது. அப்போது சாளுக்கிய நாட்டை ஆண்டு வந்த இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சியின் மீது போர் தொடுத்தான். இப்போரில் இரண்டாம் பரமேசுவரவர்மன் தோல்வியுற்றான். இவனுடன் சிம்மவிஷ்ணுவின் பரம்பரையில் வந்த மகாபல்லவர்களின் ஆட்சி முடிந்தது. அதன் பின்பு சுமார் கி.பி. 731 அளவில் சிம்மவிஷ்ணுவின் தம்பியாகிய பீமவர்மன் பரம்பரையில் வந்த பிற்காலப் பல்லவ மன்னர்களின் ஆட்சி தொடங்கியது.

    2.3.3 பிற்காலப் பல்லவர்கள் (கி.பி. 731 – 890)

    பிற்காலப் பல்லவர்கள் எனக் கூறும்போது பல்லவருக்குள்ளே வாரிசு உரிமைப் போர் ஏற்பட்டது. சிம்மவிஷ்ணுவின் பரம்பரையில் பல்லவ நாட்டை இறுதியாக ஆண்ட இரண்டாம் பரமேசுவரவர்மனுக்குச் சித்திர மாயன் என்னும் மைந்தன் இருந்தான். வயதில் சிறுவனாக இருந்ததால் இவன் அரசபதவிக்கு வருவதைப் பெரியோர்களும், குடிமக்களும் விரும்பவில்லை. யார் அரசபதவிக்கு வருவது என்பது பற்றிக் குழப்பம் ஏற்பட்டது. மக்கள், உயர் அதிகாரிகள், சிம்மவிஷ்ணுவின் தம்பியான பீமவர்மன் பரம்பரையில் வந்த இரணியவர்மன் அரசபதவிக்கு வருவதையே விரும்பினர். இரணியவர்மன் இக்கோரிக்கையை மறுத்துவிட்டுத் தனது மைந்தன் இரண்டாம் நந்திவர்மனை ஆட்சியில் அமர்த்துவதற்கு வாரிசு உரிமைப் போரில் இறங்கினான். இப்போரில் இரணியவர்மன் வெற்றி பெற்றான்.

    • இரண்டாம் நந்திவர்மன் (கி.பி. 731-795)

    பன்னிரண்டு வயதே நிரம்பிய இரண்டாம் நந்திவர்மன் பல்லவ நாட்டிற்கு மன்னன் ஆனான். இவன் ஆட்சிக்கு வந்ததும் சாளுக்கியருடன் போர் செய்ய வேண்டியதாயிற்று. அரசபதவி கிடைக்காமல் போன சித்திரமாயன் வெகுநாள் பகைவரான சாளுக்கியரின் உதவியை நாடி, காஞ்சியைக் கைப்பற்றி அரச பதவியை இரண்டாம் நந்திவர்மனிடமிருந்து கைப்பற்றினான். இருப்பினும் இரண்டாம் நந்திவர்மன் இராஷ்டிரகூட மன்னரின் உதவியை நாடி மீண்டும் காஞ்சியைச் சித்திரமாயனிடமிருந்து கைப்பற்றினான்.

    தனது சொந்த நாட்டை இழந்த சித்திரமாயன் பாண்டிய நாட்டின் a0312210.jpgஉதவியை நாடினான். அப்போது பாண்டிய நாட்டை அரிகேசரி பராங்குச மாறவர்மன் ஆண்டு வந்தான். கொங்கு நாட்டைப் பல்லவரிடமிருந்து கைப்பற்ற வேண்டுமென்ற ஆசை அவனுக்கு இருந்தது. அரிகேசரி பராங்குச மாறவர்மன் பாண்டிய படையுடன் பல்லவ நட்டைத் தாக்கத் தொடங்கினான். தற்போதைய தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டுப் பகுதியில் பல போர்கள் நடைபெற்றன. இரண்டாம் நந்திவர்மன் நந்திபுரம் (கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது) கோட்டையில் தங்கி இருந்தபோது சிறைபிடிக்கப்பட்டான். இதனை அறிந்த அவனுடைய படைத்தலைவன் உதயசந்திரன் பெரும்படையுடன் நந்திபுரம் வந்து இரண்டாம் நந்திவர்மனைச் சிறைமீட்டான். இரண்டாம் நந்திவர்மன் அரச பதவியை மீண்டும் பெற்றான்.

    பல போர்களில் ஈடுபட்ட பிற்காலப் பல்லவர்கள் சமய, கலைத் தொண்டுகளிலும் ஈடுபட்டார்கள். இரண்டாம் நந்திவர்மன் சுமார் 65 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். இம்மன்னன் அதிக பகைமையை வளர்த்துக் கொண்ட போதிலும் சமயம், கலை இவைகளில் அக்கறை கொண்டிருந்தான். இம்மன்னன் வைணவ சமயத்தைத் தழுவினான். இவனது ஆட்சியில் திருமங்கை ஆழ்வார் என்னும் பெரியார் வாழ்ந்தார்.

    இரண்டாம் நந்திவர்மன் காஞ்சியிலுள்ள வைகுண்ட பெருமாள் a0312211.jpgகோயிலைக் கட்டினான். அதோடு மட்டுமல்லாமல் காஞ்சியில் பரமேஸ்வர விண்ணகரம்முத்தீச்சுவரர் ஆலயம் முதலிய கோயில்களையும் கட்டினான். இவனது காலத்தில் கல்வியின் நிலை ஓங்கி இருந்தது. கல்வி நிலையங்கள் நிறையத் துவங்கப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டாம் நந்திவர்மன் அவன் காலத்துப் பட்டயங்களைக் கிரந்தத் தமிழில் வெளியிட்டான். இதனால் தமிழ்மொழி இவனது ஆட்சியில் சிறப்புப் பெற்றது.

    • தந்திவர்மன் (கி.பி. 796-846)

    இராஷ்டிரகூடர்களின் ஆதரவுடன் இரண்டாம் நந்திவர்மன் ஆட்சியைப் பெற்றதால் இராஷ்டிரகூட இளவரசி ரேவாவை இரண்டாம் நந்திவர்மன் மணம் புரிந்து கொண்டான். இவர்களுக்குப் பிறந்தவன் தந்திவர்மன் என்பவன் ஆவான்.

    தந்திவர்மன் ஆட்சிக் காலத்தில் இராஷ்டிரகூட நாட்டில் வாரிசு உரிமைப் போர் நடைபெற்றது. முதலாம் கிருஷ்ணனின் மகன்கள் இரண்டாம் கோவிந்தன்துருவன் ஆகிய இருவருக்கும் இடையே வாரிசு உரிமைப் போர் தொடங்கிற்று. தந்திவர்மன் இரண்டாம் கோவிந்தனுக்கு ஆதரவு அளித்தான். வாரிசு உரிமைப் போரில் துருவன் வெற்றியடைந்தான். தனது பகைவனுக்கு ஆதரவு அளித்த தந்திவர்மனைத் துருவன் பழிவாங்க எண்ணினான்; காஞ்சியைத் தாக்கிக் கைப்பற்றிக் கொண்டான். இதனால் தந்திவர்மன் இராஷ்டிரகூடர்களின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டு கப்பம் செலுத்தினான். துருவன் இறந்தபின்னர் இரண்டாம் கோவிந்தன் மகன் மூன்றாம் கோவிந்தன் இராஷ்டிரகூட மன்னன் ஆனான். இராஷ்டிரகூட மன்னராட்சி மாறியவுடன் தந்திவர்மன் கப்பம் கட்ட மறுத்துவிட்டான். எனவே மூன்றாம் கோவிந்தன் பல்லவ நாட்டின் மீது போர் தொடுத்தான். இப்போரிலும் தந்திவர்மன் தோல்வியுற்றான். இதன் காரணமாகப் பல்லவப் பேரரசு சிற்றரசாக மாறியது.

    • மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 846-869)

    தந்திவர்மனுக்கும் கதம்ப இளவரசிக்கும் பிறந்தவன் மூன்றாம் நந்திவர்மன். இவன் ஆற்றல் மிக்கவனாக விளங்கினான். இழந்த பல்லவப் பேரரசினை மீட்டான். இவனது வெற்றியை நந்திக்கலம்பகம் விளக்குகின்றது.

    மூன்றாம் நந்திவர்மன் சிறந்த போர்த்திறம் படைத்தவன். இவனுக்கு நந்திபோத்தரசன், நந்தி விக்கிரமவர்மன், விஜய நந்தி, விக்கிரமவர்மன் என்று பல பெயர்கள் உண்டு. நந்திக் கலம்பகத்தில் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் எனப் பாராட்டப்படுகிறான். தெள்ளாறு என்னும் இடத்தில் நடந்த போரில் பாண்டியரை வெற்றி பெற்றதால் இவ்வாறு பாராட்டப்படுகிறான். நந்திக்கலம்பகம் அவனுக்காகவே எழுந்த இலக்கியம் ஆகும்.

    தெள்ளாற்றில் மட்டுமின்றி, வெள்ளாறு, கடம்பூர், வெறியலூர், தொண்டி, பழையாறு ஆகிய இடங்களிலும் பகைவரை வென்றான். மூன்றாம் நந்திவர்மன் நந்திக்கலம்பகத்தில் ‘அவனி நாராயணன்’ என்றும், ‘ஆட்குலாம் கடற்படை அவனி நாரணன்’ என்றும், ‘நுரை வெண்திரை நாற்கடற்கு ஒரு நாயகன்’ என்றும் பாராட்டப் பெறுகின்றான். இவன் காலத்தில் மல்லையிலும், மயிலையிலும் துறைமுகங்கள் அமைந்திருந்தன. இம்மன்னன் கடல் கடந்துசென்று அயல் நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தான்.

    மூன்றாம் நந்திவர்மன் இராஷ்டிரகூடர்களைத் தோற்கடித்தான். பாண்டியருடன் போர்செய்து வெற்றி வாகை சூடினான். பாண்டியரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல்லவ நாட்டுப் பகுதிகளை மீட்டான். வடக்கிலும், தெற்கிலும் பல்லவப் பேரரசிற்கு ஏற்பட்ட ஆபத்துகள் இவனது ஆட்சிக் காலத்தில் ஒழிந்தன.

    • நிருபதுங்கவர்மன், அபராசிதவர்மன் (கி.பி. 869-890)

    மூன்றாம் நந்திவர்மனுக்குப் பின்பு அவனது முதல் மனைவியின் மூத்த மகன் நிருபதுங்கவர்மன் முடி சூட்டிக் கொண்டான். மூன்றாம் நந்திவர்மனின் இன்னொரு மனைவியின் மகன் அபாரசிதவர்மன் அரச பதவியைக் கைப்பற்ற எண்ணினான். இதனால் பல்லவ அரசாட்சிக்கு வாரிசு உரிமைப் போர் தொடங்கியது.

    நிருபதுங்கவர்மன் இரண்டாம் வரகுண பாண்டியனின் உதவியைக் கோரிப் பெற்றுக்கொண்டான். கங்கரும் சோழரும் அபராசிதவர்மனுக்குத் துணைநின்றனர். வாரிசு உரிமைப் போரில் அபராசிதவர்மன் வெற்றி பெற்றுப் பல்லவ நாட்டு அரியணையைக் கைப்பற்றிக் கொண்டான்.

    அபராசிதவர்மன் பதினெட்டு ஆண்டுகள் அரசு புரிந்தான். நிருபதுங்கவர்மன் இழந்த நாட்டை மீண்டும் பெற முயன்றான். ஆனால் அதில் அவனுக்கு வெற்றி கிட்டவில்லை. அப்போது தலையெடுத்து வந்த சோழருடைய ஆதரவை அபராசிதவர்மன் பெற்றிருந்ததே அதற்குக் காரணம் ஆகும்.

    இவனது ஆட்சிக் காலத்தில் இரண்டாம் வரகுண பாண்டியன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். இப்பாண்டியன் தன் தந்தை சீமாற சீவல்லபன் இழந்த சோழநாட்டுப் பகுதியை மீட்க எண்ணி, அந்நாட்டின் மீது படையெடுத்துச் சென்று வெற்றி கொண்டான். இழந்த பகுதியை மீட்டுக் கொண்டான். இவ்வெற்றியால் பாண்டியன் செல்வாக்கு உயர்ந்தது. பாண்டியரால் பல்லவ நாட்டிற்கு ஆபத்து வரும் என எண்ணிய அபராசிதவர்மன் பெரும்படையுடன் சோழ நாட்டுப் பகுதியில் இருந்த பாண்டியருடன் போர் புரியச் சென்றான். கங்க அரசன் முதலாம் a0312212.jpgபிருதிவிபதியும், விசயாலய சோழனுடைய மகன் ஆதித்த சோழனும் அபராசிதவர்மனுக்குத் துணையாகச் சென்றனர். கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருப்புறம்பயம் என்னும் இடத்தில் நடந்த போரில் முதலாம் பிருதிவிபதி கொல்லப்பட்டான். அபராசிதவர்மனும், ஆதித்த சோழனும் வெற்றி பெற்றனர். இரண்டாம் வரகுண பாண்டியன் தோல்வியடைந்து மதுரை திரும்பினான். அபராசிதவர்மன் போரில் தனக்கு வெற்றி தேடித் தந்த ஆதித்த சோழனுக்கு, சோழநாட்டில் உள்ள சில ஊர்களைப் பரிசாக வழங்கினான்.

    எனினும் சோழ மன்னன் முதலாம் ஆதித்தன் தனக்குப் பலன் கருதியே இப்போரில் அபராசிதவர்மனுக்குத் துணை நின்றான். விரைவில் அவன் பல்லவ நாட்டைத் தாக்கி அபராசிதவர்மனை வென்று பல்லவ நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். இச்செய்தியை வீரராசேந்திரனின் கன்னியாகுமரிக் கல்வெட்டு ஒன்றின் மூலம் அறிகிறோம். நிருபதுங்கவர்மன், அபராசிதவர்மன் இருவருக்குப் பின் பல்லவர் ஆட்சி சிறுசிறு தலைவர்களின் கைக்கு மாறித் திறன் குன்றி மறைந்து போயிற்று. அச்சமயத்தில் இராஷ்டிரகூட மன்னன் படையெடுத்து வந்து காஞ்சிபுரத்தைக் கைப்பற்றிக் கொண்டான்.



__________________


Guru

Status: Offline
Posts: 25222
Date:
Permalink  
 

  • 2.4 பல்லவர் செய்த போர்கள்

    சாதவாகனர்களின் ஆட்சி குன்றிவரும்போது பல்லவர்கள் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றினார்கள் எனக் கண்டோம். பல்லவர்கள் தமிழகத்தை ஆளத் தொடங்கிய நாள் முதல் அம்மன்னர்களின் கடைசி வழிவந்தவர்களான நிருபதுங்கன், அபராசிதன் வரையிலும் அண்டை நாடுகளை ஆண்டு வந்த அரசர்களுடன் போர் செய்து வந்தார்கள். அவையாவன:

    1. சாளுக்கியருடன் போர்

    2. இராஷ்டிரகூடருடன் போர்

    3. கங்கருடன் போர்

    4. சோழருடன் போர்

    5. பாண்டியருடன் போர்

    6. இலங்கையருடன் போர்

    7. களப்பிரருடன் போர்

    8. வாகாடருடன் போர்

    9. சேரருடன் போர்

    2.4.1 சாளுக்கியருடன் போர்

    சாதவாகனப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், கி.பி. ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கதம்ப நாட்டிற்கு வடக்கே சிற்றரசராக இருந்து தனியரசராக மாறியவர்கள் சாளுக்கியர். இவர்கள் வாதாபியைத் தலைநகராகக் கொண்டு சாளுக்கிய அரசினை உண்டாக்கினார்கள். வாதாபி தென்னிந்தியாவில் இக்காலக் கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள பாகல்கோட் மாவட்டத்தில் உள்ளது. சாளுக்கியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையே அடிக்கடி போர்கள் நடைபெற்றன.

    • முதலாம் மகேந்திரவர்மன் – இரண்டாம் புலிகேசி போர்

    சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி வட இந்தியாவில் வெற்றிமேல் வெற்றி கொண்ட ஹர்ஷரைத் தோற்கடித்தான். இந்நிலையில் முதலாம் மகேந்திரவர்மன் இரண்டாம் புலிகேசியின் படையெடுப்பைச் சந்திக்க வேண்டியதாயிற்று. ஏற்கெனவே கதம்பர்களை அடக்கி அவர்களுடன் இரண்டாம் புலிகேசி நட்புறவு கொண்டிருந்தான். அவர்களின் உதவியுடன் பல்லவ மன்னனான முதலாம் மகேந்திரவர்மனைப் பழிவாங்கி, தமிழகத்தில் சாளுக்கியரின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என எண்ணிப் படையெடுத்தான். இதனைக் கண்ட முதலாம் மகேந்திரவர்மன் காஞ்சிக் கோட்டைக்குள் மறைந்து கொண்டான். பல்லவ நாட்டினுள் சுமார் 30 கி.மீ தூரம் இரணடாம் புலிகேசியின் படை நுழைந்ததும் திடீரென மகேந்திரவர்மன் தாக்கினான். உதவி பெறும் நிலையில் இல்லாத சாளுக்கியர் புறமுதுகு காட்டி ஓடினர். இதனைக் காசாக்குடிச் செப்பேடு உணர்த்துகிறது. மற்றும் பல கல்வெட்டுகள் இதற்குச் சான்று பகர்கின்றன.

    • முதலாம் நரசிம்மவர்மன் – இரண்டாம் புலிகேசி போர்

    முதலாம் நரசிம்மவர்மன் பல்லவ மன்னனாகப் பதவியேற்றான். ஏற்கெனவே இரண்டாம் புலிகேசி பல்லவரிடம் தோல்வியடைந்துள்ளதால் ஆட்சி மாறியதும் மீண்டும் காஞ்சியின் மீது படையெடுத்தான். இப்போரில் சாளுக்கியருக்கு மிகுந்த சேதம் ஏற்பட்டது. இதனை உதயசந்திர மங்கலப் பட்டயங்கள், வேலூர்ப் பாளையப் பட்டயங்கள் ஆகியவை கூறுகின்றன. முதலாம் நரசிம்மவர்மன் சாளுக்கியரின் தலைநகரான வாதாபியை அழித்தான். அங்கு ஒரு வெற்றித் தூணையும் நாட்டினான். ஆதலால் முதலாம் நரசிம்மவர்மனை வாதாபி கொண்டான் என்பர். மணிமங்கலத்தில் ஒருமுறையும், வாதாபியில் இரு முறையும் முதலாம் நரசிம்மவர்மன் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை வெற்றி கொண்டான். இதன் மூலமாகச் சாளுக்கிய நாட்டினைச் சுமார் 13 ஆண்டுக் காலம் பல்லவரே ஆட்சி செய்தனர்.

    2.4.2 இராஷ்டிரகூடருடன் போர்

    இராஷ்டிரகூடர் தொடக்கத்தில் சாளுக்கியரின் கீழ்ச் சிற்றரசர்களாக இருந்தனர். பின்பு கி.பி. எட்டாம் நூற்றாண்டில் தன்னாட்சி புரியும் பேரரசர்களாக விளங்கினர். கர்நாடக மாநிலத்தில் பாயும் காவிரி ஆறு முதல் வடக்கே நர்மதை, மகாநதி ஆகிய ஆறுகள் வரை இவர்கள் ஆட்சி பரவியிருந்தது. பல்லவ நாட்டை இறுதிக் கால கட்டத்தில் அரசாண்ட பல்லவர்களுக்கும் இராஷ்டிரகூடர்களுக்கும் இடையே போர்கள் நடைபெற்றன.

    • தந்திவர்மன் – துருவன் போர்

    தந்திவர்மன் பல்லவ மன்னனாக இருந்த சமயத்தில் இராஷ்டிரகூட நாட்டில் இரண்டாம் கோவிந்தன் என்பவனுக்கும் துருவன் என்பவனுக்கும் இடையே வாரிசு உரிமைப் போர் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் முதலாம் கிருஷ்ணனின் மகன்கள் ஆவர். இப்போரில் தந்திவர்மன் இரண்டாம் கோவிந்தனுக்கு ஆதரவு அளித்தான். போரில் துருவன் வெற்றியடைந்தான். பின்பு துருவன் காஞ்சியைக் கைப்பற்றிக் கொண்டான். தந்திவர்மன் இராஷ்டிரகூடர்களின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டான்.

    • தந்திவர்மன் – மூன்றாம் கோவிந்தன் போர்

    துருவன் இறந்த பின்னர் இரண்டாம் கோவிந்தன் மகனாகிய மூன்றாம் கோவிந்தன் இராஷ்டிரகூட மன்னன் ஆனான். இராட்டிரகூட நாட்டில் ஆட்சி மாறியவுடன் தந்திவர்மன் இராஷ்டிரகூடர்களின் மேலாண்மையை அவமதித்தான். அதனால் மூன்றாம் கோவிந்தன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தான். இப்போரிலும் தந்திவர்மன் தோற்கடிக்கப்பட்டான். இதன் விளைவாகப் பல்லவப் பேரரசு ஒரு சிற்றரசாகத் தாழ்வடைந்தது.

    • மூன்றாம் நந்திவர்மன் – முதலாம் அமோகவர்ஷன் போர்

    தன்னுடைய தந்தையாகிய தந்திவர்மன் தோல்வி அடைந்தது, பல்லவப் பேரரசு ஒரு சிற்றரசாகத் தாழ்ந்த நிலை அடைந்தது ஆகிய இந்த அவல நிலையைப் போக்க மூன்றாம் நந்திவர்மன் இராஷ்டிரகூட நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். இராஷ்டிரகூட அரசனான முதலாம் அமோகவர்ஷன் என்பவனை வென்றான்; தான் ஒரு பேரரசன் என்பதை நிலைநாட்டினான்.

    2.4.3 கங்கருடன் போர்

    கங்கர் என்போர் பண்டைக் காலத்தில் கங்கபாடி என்னும் நாட்டை, தழைக்காடு என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தவர்கள் ஆவர். தென்னிந்தியாவில் இப்போதுள்ள கர்நாடக மாநிலத்தின் தென்பாகத்தில் இருந்த பண்டைய நாடே கங்கபாடி ஆகும். வடக்கே மரந்தலை நாடும், கிழக்கே தொண்டை நாடும், தெற்கே கொங்கு நாடும், மேற்கே கடலும் இந்நாட்டின் எல்லைகள் ஆகும். பல்லவர் – சாளுக்கியர் போரில், சாளுக்கியருக்கு உறுதுணையாக நின்றவர்கள் கங்கர்கள். எனவே பல்லவர்கள் அடிக்கடி கங்கர்களோடு போரிட்டு வந்தனர்.

    • முதலாம் மகேந்திரவர்மன் – துர்விநீதன் போர்

    சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியும், கங்க அரசன் துர்விநீதன் என்பவனும் உறவினர்கள். பல்லவ-சாளுக்கியப் போரில் இரண்டாம் புலிகேசிக்குத் துர்விநீதன் உதவியளித்தான். துர்விநீதனை அடக்குவது தனது கடமை என எண்ணி முதலாம் மகேந்திரவர்மன் கங்கர்களுடன் போரிட்டு அவர்களைப் பணிய வைத்தான்.

    • முதலாம் நரசிம்மவர்மன் – துர்விநீதன் போர்

    இரண்டாம் புலிகேசி இறந்த பின்னர் (கி.பி. 642) சாளுக்கிய நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. புலிகேசியின் புதல்வர்களான முதலாம் விக்கிரமாதித்தன், ஆதித்தவர்மன் ஆகியோருக்கு இடையே வாரிசு உரிமைப் போர் தொடங்கியது. கங்க நாட்டு அரசன் துர்விநீதன் தன் மகள் வயிற்றுப் பேரனான முதலாம் விக்கிரமாதித்தனுக்கு ஆதரவு அளித்தான். முதலாம் நரசிம்மவர்மன் ஏற்கெனவே கொங்கு நாட்டைக் கங்கர்களிடமிருந்து கைப்பற்றி, அதற்குத் துர்விநீதனின் ஒன்றுவிட்ட தம்பியை அரசனாக்கியிருந்தான். இந்தக் காரணங்களால், துர்விநீதன் முதலாம் நரசிம்மவர்மன் மீது படை எடுத்தான். இப்போரில் துர்விநீதன் வெற்றி பெற்றான்; முதலாம் விக்கிரமாதித்தனைச் சாளுக்கிய நாட்டுக்கு அரசனாக்கினான். ஆயினும் துர்விநீதனின் இவ்வெற்றியால் பல்லவ நாட்டிற்கும், ஆட்சிக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.

    • முதலாம் பரமேசுவரவர்மன் – பூவிக்கிரமன் போர்

    சாளுக்கிய நாட்டின் அரசனாகப் பதவியேற்ற முதலாம் விக்கிரமாதித்தன், தனது தந்தை இரண்டாம் புலிகேசிக்கு ஏற்பட்ட இழிவை அகற்றவேண்டும், வாதாபியை அழித்தமைக்குப் பல்லவர்களைப் பழிவாங்க வேண்டும் என்று கருதினான். எனவே பல்லவ நாட்டின் மீது படை எடுத்தான். மேற்குக் கங்க அரசன் பூவிக்கிரமன் என்பவன் முதலாம் விக்கிரமாதித்தனுக்கு உதவியாக வந்தான் அப்போது பல்லவ நாட்டை முதலாம் பரமேசுவரவர்மன் ஆண்டு வந்தான். நடைபெற்ற போரில் முதலாம் பரமேசுவரவர்மன் பூவிக்கிரமனிடம் தோல்வி அடைந்தான். இப்போரில் பூவிக்கிரமன் பல்லவரின் வைரக் கழுத்தணியைக் கைப்பற்றிக் கொண்டான். இதனால் பல்லவப் பேரரசு தாழ்வடைந்தது.

    • இரண்டாம் நந்திவர்மன் – ஸ்ரீ புருஷன் போர்

    இரண்டாம் நந்திவர்மனின் சமகாலத்தவன் கங்க நாட்டு மன்னன் ஸ்ரீ புருஷன் என்பவன் ஆவான். இவன் சாளுக்கிய அரசன் இரண்டாம் விக்கிரமாதித்தனுடன் சேர்ந்து, பல்லவ நாட்டின் மீது படை எடுத்து வந்தான். போரின் தொடக்கத்தில் கங்க மன்னன் இரண்டாம் நந்திவர்மனை வெற்றி கண்டான்; பல்லவரின் வெண்கொற்றக் குடையையும், பெருமானபு என்ற விருதையும் பறித்துக் கொண்டான். ஆனால் போரின் முடிவில் வெற்றி இரண்டாம் நந்திவர்மனுக்கே கிடைத்தது. போரில் இறுதி வெற்றி பெற்ற இரண்டாம் நந்திவர்மன் கங்க மன்னனிடமிருந்து உக்கிரோதயம் என்ற மணிமாலையையும், பட்டவர்த்தனம் என்ற பட்டத்து யானையையும் கைப்பற்றிக் கொண்டான்.

    இவ்வாறாகப் பல்லவர்கள் சோழர், பாண்டியர், களப்பிரர், வாகாடர், சேரர், இலங்கையர் ஆகியோருடனும் போர் புரிந்தனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 25222
Date:
Permalink  
 

2.5 தொகுப்புரை

இப்பாடத்தின் வாயிலாகப் பல்லவர்கள் யார் என்பது பற்றியும், பல்லவ அரசர்களைப் பற்றிய பல்வேறு கருத்துகள் பற்றியும் படித்து நன்கு அறிந்திருப்பீர்கள்.

பல்லவர்கள் தமிழகத்தை ஆண்டு இருந்தாலும், தமிழ் மொழியை ஆட்சி மொழியாகக் கொள்ளவில்லை என்பது பற்றியும் அறிந்து கொண்டீர்கள்.

பல்லவர்கள் தங்கள் அரசியலைப் பற்றிப் பட்டயங்கள், கல்வெட்டுகள் மூலம் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை நன்கு புரிந்து கொண்டீர்கள்.

பல்லவ மன்னர்கள் தங்களின் பட்டயங்களை வெளியிடும்போது பிராகிருதம், சமஸ்கிருதம். கிரந்தத் தமிழ் என்னும் மொழிகளைப் பயன்படுத்தினர் என்பதைப் புரிந்து கொண்டீர்கள். இதன் காரணமாகப் பல்லவ மன்னர்களை, வரலாற்று ஆசிரியர்கள் முற்காலப் பல்லவர்கள், இடைக்காலப் பல்லவர்கள், பிற்காலப் பல்லவர்கள் என மூவகையாகப் பிரித்து விவரித்தனர் என்பதையும் விளங்கிக் கொண்டீர்கள்.

இப்பல்லவ மன்னர்களுள் சிறந்து விளங்கியவர்கள் யார் என்பது பற்றியும் படித்துப் புரிந்து கொண்டீர்கள். மேலும் பல்லவ மன்னர்கள் தமது அரசாட்சியை விரிவுபடுத்த எண்ணி அண்டை நாட்டாருடன் போர் புரிந்தனர் என்றெல்லாம் படித்துணர்ந்தீர்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 25222
Date:
Permalink  
 

  • 3.1 பல்லவர்களின் நிருவாக முறை

    உலகம் வியக்கும் வண்ணம் சிறந்த ஆட்சி முறையினைப் பெற்றிருந்த பாரம்பரியத்தை உடையது தமிழ்நாடு. எவ்வாறு எனில் சங்க காலத்தில் தமிழகத்தில் சிறந்ததொரு நிருவாக முறை இருந்ததாக ஆராய்ச்சியாளர் கூறுவர். அப்போது தமிழகம் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என முப்பெரும் பிரிவுகளாகப் பிரிந்து காணப்பட்டது. இருப்பினும் அம்மூன்று நாடுகளிலும் நல்லதொரு ஆட்சி நடைபெற்று வந்தது. மன்னர்கள் அறம் தவறாமல் நாட்டு மக்களை வழிநடத்திச் சென்றனர்.

    சேர மன்னர்களைப் பற்றிப் பதிற்றுப்பத்து, அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம் போன்ற சங்க இலக்கிய நூல்கள் புகழ்ந்து கூறுகின்றன.

    சோழ மன்னர்களைப் பற்றிப் புறநானூறு, பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை என்னும் நூல்கள் கூறுகின்றன.

    பாண்டிய மன்னர்களைப் பற்றிய சிறப்புச் செய்திகள் புறநானூற்றில் காணப்படுகின்றன. மேலும் மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை ஆகிய நூல்களிலும் பாண்டிய மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இவ்வாறாகச் சங்க காலத்தில் தமிழகம் சிறந்து விளங்கியது.

    அதுபோலவே, வட இந்தியாவில் ஆட்சி செய்த மௌரியர்கள் ஆட்சியும் மிகச் சிறப்பு வாய்ந்திருந்தது என வரலாற்று ஆசிரியர் கூறுவர்.

    இங்கு நாம் காண இருக்கும் பல்லவர்களின் ஆட்சியும் மேலே கூறப்பட்டவர்களின் அரசியல் கூறுகளைப் பெற்றிருந்தது என்பர். இவ்வாறான பல்லவர் ஆட்சி பிற்காலச் சோழர்கள் நல்லதொரு நிருவாக முறையை அவர்கள் நாட்டில் ஏற்படுத்துவதற்குத் துணை நின்றது எனலாம்.

    3.1.1 மத்திய அரசாங்கம்

    மத்திய அரசாங்கம் என்று கூறும்போது மன்னன், அமைச்சர்கள், அதிகாரிகள் போன்றோர் ஆட்சிப் பொறுப்பை ஏற்று வந்தனர்.

    • மன்னன்

    பேரரசின் தலைவனாக மன்னன் விளங்கினான். அரச பதவி பரம்பரை பரம்பரையாகச் சென்றது. குறிப்பாக மூத்த மகன் அரச பதவியை ஏற்றான். அரசனுக்கு வாரிசு இல்லையென்றால் உறவினர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வழக்கம் நிலவியது. சில சமயங்களில் மக்களே மன்னனைத் தேர்ந்தெடுத்தனர். இதனை இரண்டாம் பரமேசுவரவர்மன் மகன் சித்திரமாயன் மன்னன் ஆவதற்குத் தகுதியற்றவன் எனக் கருதப்பட்டு, வாரிசு உரிமைப் போர் தொடங்கி முடிவில் இரண்டாம் நந்திவர்மன் மன்னன் ஆன நிகழ்ச்சி காட்டுகிறது. துவக்கத்தில் வாரிசு உரிமைப் போர் எதுவும் ஏற்படாவிட்டாலும், பிற்காலத்தில் வாரிசு உரிமைப் போர் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

    மன்னன் இறைவனுக்குச் சமமாகக் கருதப்பட்டான். இருப்பினும் மன்னன் மரபுகளுக்கும் நெறிமுறைகளுக்கும் கட்டுப்பட்டவன் ஆனான்; நிருவாகம், இராணுவம் போன்றவைகளுக்குத் தலைவனாக விளங்கினான்; மேலும் நீதியின் இருப்பிடமாகத் திகழ்ந்தான். இருப்பினும் ஒரு சில அரசர்கள் ஆட்சியின்போது நெறிமுறை தவறி வாழ்ந்தது உண்டு.

    • அமைச்சர்கள்

    அரசனுக்கு ஆலோசனை வழங்குவது அமைச்சர்களது கடமையாகும். அவர்கள் அரசியலில் அரசனுக்குத் துணை புரிந்து வந்தனர்.

    அரசனின் ஆணையை அமைச்சர்கள் செயல்படுத்திக் கொண்டிருந்தனர். மேலும் அயல்நாட்டுக் கொள்கையை வகுப்பது அவர்களின் முக்கியமான கடமைகளில் ஒன்றாக விளங்கியது. ஆமாத்தியர் என்ற அமைச்சர் குழு மன்னனுக்கு இருந்தது. இரண்டாம் நந்திவர்மனது தலைமை அமைச்சர் பிரம்மஸ்ரீ ராஜன், மூன்றாம் நந்திவர்மனது அமைச்சர்கள் நண்பன் இறையூர் உடையன், தமிழ்ப் பேரரரையன் ஆகியோர் பெயர்களைக் கல்வெட்டுகளில் நாம் காணமுடிகிறது. தகுதியுடைய பிராமணப் பெருமக்களும், வேறு பெருமக்களும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர் என்பதும் தெரியவருகிறது.

    • அதிகாரிகள்

    பல்லவர் ஆட்சியல் பல நிருவாகத் துறைகள் காணப்பட்டன. அதுபோன்ற துறைகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். ரகசியகர்த்தா என்ற உயர் அதிகாரி பல்லவ அரசருக்கு அந்தரங்கச் செயலாளராக விளங்கினான். வருவாய், நிலவரித்திட்டம், நில அளவை போன்ற துறைகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு உதவுவதற்குக் கிராம அதிகாரி, கால்நடை அதிகாரி, வன அதிகாரி, படை அதிகாரி போன்றோர் செயலாற்றினர். சாசனங்களைச் செப்பேடுகளில் பொறிக்கும் பொறுப்பை மேற்கொண்டிருந்த அலுவலர் தபதி எனப்பட்டான். தானங்களையும், நிவந்தங்களையும் ஆவண வடிவத்தில் எழுதுபவன் காரணத்தான் அல்லது காரணிகன் எனப்பட்டான். இன்று கிராமங்களில் கர்ணம் எனக் கூறுப்படுபவன் காரணிகனே ஆவான்.

    • நாட்டுப் பிரிவுகள்

    பல்லவர் ஆட்சியில் நிருவாக நலன் கருதிப் பல நிலப் பிரிவுகளாகப் பேரரசு பிரிக்கப்பட்டிருந்தது. பேரரசு மண்டலங்களாகவும், மண்டலங்கள் கோட்டங்களாகவும், கோட்டங்கள் நாடுகளாகவும், நாடுகள் ஊர்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன.

    மண்டல நிருவாகம் ஆளுநர்களின் தலைமையின் கீழ் இருந்தது. நாளடைவில் இவ்வாளுநர்கள் வழிவழியாக அம்மண்டலங்களை வழிநடத்திச் செல்லலாயினர். ஒரு காலகட்டத்தில் பல்லவப் பேரரசின் வடக்கிலும் தெற்கிலும் பகைவர்கள் அதிகமாக நெருங்கிக் கொண்டிருந்த காரணத்தால் இந்த ஆளுநர்களுக்குப் பல்லவப் பேரரசர்கள் அதிக அதிகாரம் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    3.1.2 உள்ளாட்சி முறை

    சோழர்கள் காலத்தில் கனிந்த ஊராட்சி முறை சங்க காலத்தில் முளைத்துப் பின் பல்லவர், பாண்டியர் ஆட்சிக் காலங்களில் வளர்ந்து கொண்டிருந்தது எனலாம். பல்லவர் காலத்தில் நாடுகளிலும், ஊர்களிலும் சபைகள் அல்லது அவைகள் காணப்பட்டன. ஒவ்வொரு சபையிலும் மக்கள் பிரதிநிதிகள் ஆகிய உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் ஆள்வார் அல்லது பெருமக்கள் என அழைக்கப்பட்டனர். கல்வி அறிவு உடையவர்கள் அதுபோன்ற பொறுப்பில் இருந்தனர். ஊர் அவையில் பல பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு பிரிவும் வாரியம் எனப்பட்டது. அவ்வகையான வாரியங்களுள் ஏரிவாரியம், கோயில் வாரியம் முதலியன முக்கியமானவைகளாக இருந்தன. அவ்வாரியங்கள் தனித்தனி நிருவாகப் பொறுப்பினை ஏற்றிருந்தன. பொதுவாகப் பெருமக்கள் என்று அழைக்கப்படும் ஆள்வார் ஊரின் உழவுத் தொழிலுக்கான பாசனம், கோயில் பணி, அறங்கூறல் முதலிய பல்வேறு பணிகளைக் கவனித்து வந்தனர்.

    • வரி

    நாட்டினை நல்ல முறையில் நடத்திச் செல்ல வேண்டும் என்றால் அந்நாட்டிற்கு வருவாய் தேவை. இந்த வருவாய் இன்றியமையாதது என்பதை உணர்ந்த பல்லவப் பேரரசர்கள் பதினெட்டு வகையான வரிகளை நாட்டு மக்களிடம் இருந்து வசூலித்தனர். இதற்கான சான்றுகளை நாம் அவர்களது பட்டயங்களைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.

    சான்று:

    தென்னை, பனை, பாக்கு ஆகிய மரங்களைப் பயிரிடும் உரிமை பெற அரசாங்க வரி விதிக்கப்பட்டது.

    கள் இறக்கவும், சாறு இறக்கவும், பனம்பாகு காய்ச்சவும், கடைகளில் பாக்கு விற்கவும் வரி விதிக்கப்பட்டது.

    நூல் நூற்போர், வலைஞர், ஆடை நெய்வோர், கால்நடை வைத்துத் தொழில் செய்வோர் வரி செலுத்தி வந்தனர்.

    நிலங்கள் அளந்து திட்டமிடப்பட்டன. நிலங்களை அளப்பதற்குத் தனி அதிகாரிகள் இருந்தனர். அரசின் வருவாயில் நிலவரியே முக்கிய இடத்தை வகித்தது.

    சில சமயங்களில் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டம் அதாவது அபராதம் மூலமாகவும் அரசாங்கத்திற்கு வருவாய் வந்தது.

    கோயில்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட நிலங்களுக்குத் தேவதான நிலம் என்று பெயர். இதுபோன்ற நிலங்களுக்கு வரிவிலக்கு இருந்தது.

    • நில அளவைகள்

    பல்லவர் காலத்தில் விளங்கிய நில அளவைகள் குழி, வேலி என்பன. குறிப்பிட்ட நிலத்தை அளந்து, கள்ளி, கல் போன்றவற்றை நட்டு அதன் எல்லைகளை வகுத்தனர். மேலும் கலப்பைநிவர்த்தனம், பட்டிகா, பாடகம் என்பனவும் நில அளவைகளாக வழங்கின. நிவர்த்தனம் என்பது 100 அல்லது 125 முழம் அளவுள்ள ஒரு கோல், இது நிலத்தை அளப்பதற்காக அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.

    • முகத்தல் அளவைகள்

    முகத்தல் அளவைகளாகக் கருநாழி, நால்வாநாழி, மாநாய நாழி, பிழையா நாழி, நாராய நாழி, உழக்கு மற்றும் சிறிய அளவைகளான பிடி, சோடு, மரக்கால்பதக்கு, குறுணி, காடி, கலம் என்பனவும் பயன்பட்டன.

    • நிறுத்தல் அளவைகள்

    பொன் நிறுக்கும் அளவைகளாகக் கழஞ்சு, மஞ்சாடி என்பன இருந்தன.

    • நாணயங்கள்

    பல்லவர் காலத்து நாணயங்கள் பொன்னாலும், வெள்ளியாலும், செம்பாலும் செய்யப்பட்டிருந்தன.

    a0312301.jpg

    • நீதித்துறை

    பல்லவப் பேரரசில் நீதித்துறையின் தலைமையிடத்தை மன்னரே வகித்தார். கோட்டங்களிலும், கிராமங்களிலும் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காஞ்சி போன்ற பெரு நகரங்களில் இருந்த நீதிமன்றங்கள் அதிகரணங்கள் எனப் பெயர் பெற்றன. அவற்றின் தலைவர்கள் அதிகரண போசகர் எனப்பட்டனர். சிற்றூரில் இருந்த நீதிமன்றங்கள் கரணங்கள் எனப்பட்டன. அதன் தலைவர்கள் கரண அதிகாரிகள் எனப்பட்டனர். சிற்றூரில் இருந்த மன்றங்களில் வழக்குகளை ஆட்சி (Traditional evidence), ஆவணம் (Document evidence), அயலார் காட்சி (Eye witness) ஆகிய சான்றுகளின் அடிப்படையில் விசாரித்துத் தீர்ப்புக் கூறினர்.

    • படை

    கதம்பர், சாளுக்கியர், பாண்டியர் ஆகியோர் பல்லவப் பேரரசினைச் சிதைவுறச் செய்வதற்கு முயன்று கொண்டிருந்த காலம் அது. இதன் காரணமாகப் பல்லவ மன்னர்கள் சிறந்த படை ஒன்றினைப் பெற்றிருந்தனர். அதில் காலாட்படை, யானைப்படைகுதிரைப்படை, மிக வலிமை வாய்ந்த கப்பல்படை ஆகிய நால்வகைப் படைகளும் இருந்தன. படைக்கு மன்னர் தலைமை வகித்தார். அவரோடு வீரமும், போர் ஆற்றலும் மிக்க சேனைத் தளபதிகளும் இருந்தனர். சிம்மவர்மன் காலத்தில் விஷ்ணுவர்மன், முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் வாதாபி கொண்ட பரஞ்சோதி (சிறுத்தொண்ட நாயனார்), இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் உதய சந்திரன், மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் பூதி விக்கிரமகேசரி என்னும் கொடும்பாளூர்ச் சிற்றரசன் ஆகியோர் சிறந்த படைத்தலைவர்களாக விளங்கிப் பல்லவ நாட்டைக் காத்தனர். மகாபலிபுரம் வழியாகக் குதிரைகள் அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. மகாபலிபுரம், காவிரிப் பூம்பட்டினம், நாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்கள் கப்பல் படையை இயக்குவதற்கு உதவின. மாமல்லனான நரசிம்மவர்மன் இலங்கை நாட்டு மானவன்மனுக்கு அரசுரிமை கிடைக்க ஈழத்தின் மீது படையெடுத்தான். போர்க் காலங்களில் பல்லவப் பேரரசின் பேராண்மையை ஏற்றுக் கொண்ட சிற்றரசர்கள் பேரரசருக்குப் படை உதவி அளித்தனர்.

    சிறந்த அமைச்சர்களையும், அதிகாரிகளையும் நல்ல முறையில் அமர்த்திப் பல்லவ பேரரசர்கள் நாட்டில் அமைதி காத்து வந்தனர்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard