கோவையின் கல்லூரி மாணவர்கள் சந்தித்து அரட்டையடிக்க வாய்ப்புள்ள இடங்களில் முதன்மையானது தேநீர் கடைகள். கோவையின் டீ மாஸ்டர்கள் கணக்கில் அசகாய சூரர்கள். “மாஸ்டர், டூ பை த்ரீ… சிக்ஸ் பை 15.. ஒன் பை போர்” என்று விதம் விதமாக வேண்டுகோள் வந்தாலும் குழம்ப மாட்டார்கள். அதிலும், காந்திபுரம் ஆறாவது குறுக்குச் சந்தில் முன்பு ஒரு கில்லாடி கேரள சேட்டன் இருப்பார்.. அவருக்காகவே அந்தக் கடையில் கூட்டம் அள்ளும்.
மேற்படி நாயர் கடையில் இருந்து சில மீட்டர்கள் தள்ளி இருந்த அந்தக் கட்டிடத்தின் முன் அப்போதே விலையுயர்ந்த கார்கள் அணிவகுத்து நிற்கும். பளபளப்பான மேட்டுக்குடி மக்களுக்கு இந்த அழுக்கு சந்துக்குள் என்ன தான் வேலை?
“டேய்… மார்ட்டினை பார்க்க வந்திருருப்பானுக டா.. மார்ட்டின் தெரியுமில்லெ? எமத் திருடன்” நண்பர்கள் குசுகுசுத்தது நினைவில் இருக்கிறது.
மார்ட்டின்…!
கோவையின் அசிங்கம். தற்போது மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கொத்தா மற்றும் சிலிகுரி மாவட்டத்தில் நடந்த வருமானவரித் துறையினரின் சோதனைகளில் சுமார் 80 கோடி ரூபாய் ஹவாலா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்படி சோதனைகளில் லாட்டரி மார்ட்டினின் நெருங்கிய தொழில் கூட்டாளியான நாகராஜன் மற்றும் செந்தில் குமார் மண்டல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லாட்டரி மாஃபியா மார்ட்டின்சோதனைகளில் கிடைத்த ரொக்கத்தைத் தவிர, சுமார் 1200 வங்கிக் கணக்குகளின் விவரங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த வங்கிக் கணக்குகளின் மூலம், மத்திய கிழக்கிலிருந்து வங்க தேசத்தின் வழியே சிக்கிம் மாநிலத்திற்கு நுழைந்துள்ள ஹவாலா பணம், மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி மாவட்டத்தின் மூலம் தென் மாநிலங்களுக்குப் பாய்ந்துள்ளது. இவ்வாறு கொண்டு வரப்பட்ட கருப்புப் பணம், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வைத்து ரியல் எஸ்டேட் தொழிலின் மூலம் வெள்ளையாக்கப்படுவதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டுள்ள நாகராஜனுக்கு சொந்தமான டீசல் மார்க்கெட்டிங் ஏஜென்சி என்ற நிறுவனம் 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் உருவாக்கப்பட்ட ஒரு உப்புமா கம்பெனி. துவங்கிய சில மாதங்களிலேயே இந்தக் கம்பெனியும் ஜார்கண்டைச் சேர்ந்த ஸ்மார்ட் அசோசியேட்ஸ் என்ற மார்ட்டினின் கம்பெனியும் இணைகின்றன.
இணைப்பிற்குப் பின் 2013 பிப்ரவரி மாதம், சட்டப்படியான ஆவணங்களின் படியே டீசல் மார்க்கெட்டிங் நிறுவனம், மார்ட்டினின் இரண்டு மகன்களுக்கு சுமார் 1000 பங்குகளை கைமாற்றிக் கொடுத்துள்ளது. இந்த பரிவர்த்தனைக்குப் பின் வேறு தொழில் முகாந்திரங்கள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்கள் மற்றும் பினாமிகளின் கட்டுப்பாட்டில் பல உப்புமா நிறுவனங்களைத் துவக்கியுள்ள மார்ட்டின், அவற்றை ஹவாலா கருப்புப் பண சுழற்சிக்காகவே பயன்படுத்தி வந்துள்ளார்.
போலி லாட்டரியின் மன்னன் என்று வருணிக்கப்படும் மார்ட்டினின் சொத்து மதிப்பு சுமார் 7000 கோடிகளாக இருக்கலாம் என்று பத்திரிகை செய்திகள் மதிப்பிடுகின்றன. ஆனால், பினாமிகளின் பேரிலும் இன்னும் இரகசியமான வகைகளிலும் பல்லாயிரம் கோடி ரூபாய்களை அவர் குவித்து வைத்திருப்பது நிச்சயம். உலகெங்கிலும் உள்ள பணக்காரர்களின் சொத்து மதிப்பில் கருப்பு எவ்வளவு வெள்ளை எவ்வளவு என்பதை எவரும் அறிய முடியாது. இந்தியாவிலோ இன்னும் மோசம்.
மனைவி லீமா ரோசுடன் லாட்டரி தாதா மார்ட்டின்இன்றைக்கு தமிழகத்தில் சட்டப்பூர்வ லாட்டரி தடை செய்யப்பட்டிருப்பதாக சொன்னாலும், போலி லாட்டரி எந்த தடையுமின்றி புழக்கத்தில் தான் உள்ளன. மாவட்ட வாரியாக லாட்டரி முகவர்கள், அவர்களுக்குக் கீழ் வட்டார முகவர்கள், இவர்களுக்கு கீழே விற்பனை பிரதிநிதிகள் என்று இந்த இரகசிய வலைப்பின்னல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. லாட்டரி மோகத்திற்கு அடிமையானவர்களை தடைக்குப் பின்னும் அறிந்து வைத்திருக்கும் விற்பனை பிரதிநிதிகள், அவர்களிடம் துண்டுச் சீட்டில் எழுதிய எண்களை விற்கிறார்கள். காலையில் இவ்வாறு விற்கப்படும் போலி லாட்டரி சீட்டுகளுக்கான முடிவுகள் அன்று மாலையே அறிவிக்கப்படுகின்றன.
முடிவுகள் மாவட்ட – வட்டார முகவர்களின் வழியே விற்பனை பிரதிநிதிக்கு சொல்லப்பட்டு அவர்கள் மூலம் அந்த குறிப்பிட்ட எண் கொண்ட சீட்டை வாங்கியவருக்கு சொல்லப்படுகிறது. இதில் போட்ட காசைத் தொலைத்து வாழ்க்கையை இழந்தவர்கள் ஏராளமானவர்கள் – ஆனால், எவரும் வாயைத் திறக்க முடியாது. லாட்டரி வலைப்பின்னலின் ஒவ்வொரு கண்ணியும் நெருக்கமாகவும் இரசியமாகவும் உள்ளதோடு ஒரு மாஃபியா கும்பலைப் கட்டுக்கோப்புடன் போல் செயல்படுகிறது. காசைத் தொலைத்தவர்கள் ஒருவேளை எதிர்த்தால், அவர்களை நேரடியாகவும், லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கிய போலீசு மற்றும் அரசு அதிகாரிகள் மூலமும் ’தட்டி’ வைப்பார்கள்.
லாட்டரி தடை செய்யப்பட்ட மாநிலங்களில் இவ்வாறாகவும், தடையில்லாத மாநிலங்களில் சட்டப்பூர்வமாகவும் செயல்பட்டு பல்லாயிரக்கணக்கான கோடிகளைக் குவித்துள்ளனர் லாட்டரி மாஃபியாக்கள். இந்த மாஃபியா கும்பல்களிலேயே பெரிய கும்பலின் தலைவர் தான் சாண்டியாகோ மார்ட்டின்.
1988-ல் லாட்டரி தொழிலுக்குள் மார்ட்டின் இறங்குவதற்கு முன் பர்மாவில் சாதாரண தொழிலாளியாக இருந்தார் என்று சொல்வார்கள். அதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தார், அவரது பூர்வாசிரமம் என்னவென்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. பொதுவில் இத்தகைய திடீர் முதலாளிகள் உழைத்து முன்னேறினார்கள் என்பதற்காகவே இத்தகையை பழங்கதைகள் நேர்த்தியான திரைக்கதையாக தயாரிக்கப்படுகின்றன.
பச்சமுத்து கட்சியில் சேர்ந்தார் லீமா ரோஸ்கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தவர் பத்திருபது ஆண்டுகளில் பல ஆயிரம் கோடிகளின் அதிபதி என்றால் அது நேர்மையான வழியில் இருக்க முடியுமா என்ன? இந்நிலையில், தமிழகத்தில் 2003-ம் ஆண்டு வாக்கில் லாட்டரி தடை அமுலுக்கு வந்த போது மார்டினின் சாம்ராஜ்ஜியத்தின் மதிப்பு 14 ஆயிரம் கோடி என்பது வியப்பு ஏற்படுத்தவில்லை.”எப்படி இவன் அம்மாவை பகைத்துக் கொண்டான்?” என்பதே பலருடைய வியப்புக்கு காரணம்.
ஆட்சியில் யார் அமர்ந்தாலும் உடன் போய் ஒட்டிக் கொண்டு தன்னையும் தனது லாட்டரி சாம்ராஜ்யத்தையும் பாதுகாத்துக் கொள்வது மார்டினுக்கு கைவந்த கலை. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய “இளைஞன்” திரைப்படம் மார்டினின் தயாரிப்பில் வெளியானது என்பது சிலருக்குத் தெரிந்திருக்கலாம் – ஆனால், அந்த பாடாவதி படத்திற்கு கருணாநிதி எழுதிய மொக்கை வசனத்திற்கு வழங்கப்பட்ட சம்பளம் 45 லட்சம். அந்த தொகை தான் கருணாநிதி வாங்கிய சம்பளத்திலேயே அதிகமானதாம்.
45 லட்சத்தை சும்மா தூக்கிக் கொடுக்க மார்டின் ஒன்றும் இனா வானா அல்ல – 2011-ம் ஆண்டு கேரள அரசு மார்டின் மீது வழக்குத் தொடுத்த போது அப்போதைய தமிழக அட்வகேட் ஜெனரல் பி.எஸ் ராமன் மார்டினுக்காக கேரள நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். பின்னர் கேரள அரசே தமிழக அரசிற்கு கண்டனம் தெரிவித்து கடிதம் அனுப்பிய பின், ராமனை அந்த வழக்கிலிருந்து திரும்ப பெற்றார் கருணாநிதி.
தொன்னூறுகளின் துவக்கத்தில் அ.தி.மு.கவுடன் இணக்கமான உறவைப் பேணி தனது லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேன் தொழிலை வெற்றிகரமாக நிலைநாட்டிக் கொண்ட மார்டின், பின்னர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் தனது விசுவாசத்தை இடம் மாற்றிக் கொண்டார். மீண்டும், 2001-ல் அ.தி.மு.க் ஆட்சிக்கு வந்ததும் அங்கே ஒட்டிக் கொள்ள கடும் முயற்சிகள் செய்துள்ளார் மார்டின். அப்போது நடந்த பேரம் படியாததால் தான், 2003-ல் லாட்டரி தொழிலை தடை செய்து மார்டினை நெருக்கடிக்குள் தள்ளியது அ.தி.மு.க அரசு.
மார்ட்டினின் மூத்த மகன் சார்லஸ் மார்ட்டின்மீண்டும் தி.மு.க ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டாலும், லாட்டரியை மீண்டும் திறந்து விட்டு மக்களின் ஆத்திரத்தை சம்பாதித்துக் கொள்ள கருணாநிதி தயங்கினார். ஆனால், அதற்குள் மார்டினின் வலைப்பின்னல் தமிழகத்தைத் தாண்டி மற்ற தென்னிந்திய மாநிலங்களில் வலுவாக நிலை கொண்டிருந்தது. தமிழகத்தில் ரியல் எஸ்டேட் – நில ஆக்கிரமிப்பு மற்றும் அது தொடர்பான கட்டப்பஞ்சாயத்துகளை தி.மு.கவின் ஆதரவோடு தக்க வைத்துக் கொண்டார் மார்ட்டின்.
இந்த சமயத்தில் கோவை காந்திபுரம் ஆறாவது குறுக்குச் சந்தில் அமைந்திருந்த லாட்டரி தலைமை அலுவலகம் ரியல் எஸ்டேட் கொள்ளைகளின் குவிமையமாக மாற்றமடைந்திருந்தது. கோவை மாவட்டம் மட்டுமின்றி கொங்கு பெல்ட்டில் எங்கே கோடிகளில் நில பேரங்கள் நடந்தாலும், அதில் மார்டினின் கை இருக்கும் என்று சொல்லுமளவிற்கு தனது செல்வாக்கை நிலை நாட்டியிருந்தார். மற்ற மாநிலங்களில் சட்டவிரோத லட்டரித் தொழிலில் ஈட்டிய கள்ளப்பணத்தை வெள்ளையாக்க தமிழகத்தின் ரியல் எஸ்டேட் தொழிலை பயன்படுத்திக் கொண்டார்.
தமிழகத்தில் சட்டப்பூர்வ லாட்டரி தடைசெய்யப்பட்டிருந்தாலும், தனது வலுவான வலைப்பின்னலின் மூலம் சட்டவிரோத லாட்டரிகளை நடத்தி வந்திருக்கிறார் மார்ட்டின் – அத்தனைக்கும் 2006 – 2011 காலகட்டத்தில் தி.மு.கவின் நேரடி மற்றும் மறைமுக ஆசி இருந்தது. அந்த உதவிக்கான கைமாறுதான் 45 லட்ச ரூபாய் சம்பளம்.
பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க பதவிக்கு வந்ததும் மார்ட்டின் குடும்பத்தின் மேல் சராமாரியாக வழக்குகள் பாய்ந்தன. மார்ட்டினின் மீதே நில அபகரிப்பு வழக்குகள் அடுக்கடுக்காக பாய்ந்தன. இந்த வழக்குகளில் இருந்து தப்பிக்க அம்மாவின் ஆசியோடு மார்ட்டின் தனது மனைவியின் மூலம் கருணாநிதியின் மகள் செல்வியின் மீது ஒரு வழக்கை பதிந்தார் – தனது கணவருக்கு நில அபகரிப்பில் தொடர்பு ஏதும் இல்லை என்றும், கருணாநிதியின் மகள் செல்வியே எல்லாவற்றுக்கும் காரணம் என்று அதில் மார்டினின் மனைவி லீமா ரோஸ் குற்றம் சாட்டியிருந்தார்.
ஜெயலலிதா எதிர்பார்த்ததும் இது தான் – அதாவது, எப்போது வேண்டுமானாலும் கருணாநிதி குடும்பத்திற்குள் சட்டம் தன் கடமையைச் செய்வதற்கான கதவை மார்ட்டினைக் கொண்டு திறந்து வைத்துக் கொண்ட ஜெயலலிதா, அதன் பின் மார்ட்டினின் மேலான வழக்குகளின் தீவிரத்தைக் குறைத்துக் கொண்டார்.
பா.ஜ.கவில் சேர்ந்தார் சார்லஸ் மார்ட்டின்ஏறக்குறைய இதே நேரத்தில் மார்ட்டினின் மற்ற மாநில போலி லாட்டரி தொழிலும் தொய்வடைந்திருந்தன. கர்நாடக அரசில் நல்ல செல்வாக்கோடு இருந்த மார்ட்டின் அங்கே நடந்த ஆட்சி மாற்றங்களுக்குப் பின் புதிய அதிகார பீடங்கள் உடனான பேரங்கள் படியாமல் முரண்பட்டிருந்தார். கேரள ’காம்ரேடுகளின்’ கட்சிக்கு 2 கோடி ரூபாய் மொய் வைத்து முந்தைய ’இடது’ முன்னணி அரசின் உள்வட்டங்கள் வரை நுழைந்து வருமளவிற்கு செல்வாக்கோடு இருந்தவருக்கு அடுத்து வந்த காங்கிரசின் மேல்மட்டத்தோடு பேரம் படியவில்லை.
கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக மார்டினின் போலி லாட்டரி தொழிலை கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்த கர்நாடக அரசு, மார்ட்டினின் நெருங்கிய கூட்டாளியான பார் ராஜனை கடந்த ஜூன் மாதம் கைது செய்தது. கேரள அரசாங்கம் 2011-ம் ஆண்டு முதலே வழக்கு மேல் வழக்காக தொடுத்து மார்ட்டினின் லாட்டரி தொழிலை நெருக்கடிக்குள் தள்ளி விட்டிருக்கிறது. இதற்கிடையே சிக்கிம் மாநில அரசு தமக்குச் சேர வேண்டிய 4500 கோடி ரூபாய் வருவாயை மார்ட்டின் கையாடி விட்டதாக வழக்கு ஒன்றைத் தொடுத்திரக்கிறது. இவை தவிர வருமான வரித்துறையினரால் 32-க்கும் மேற்பட்ட வழக்குகள் மார்ட்டினின் மேல் பதியப்பட்டுள்ளன.
தனது சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ள அரசியல் கட்சிகளே ஒரே வழி என்று தீர்மானித்த மார்ட்டின், தன்னைப் போலவே சிந்தித்து தனது கல்வி வியாபாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள இந்திய ஜனநாயக கட்சி என்ற பெயர்பலகை கட்சி நடத்தி வரும் எஸ்.ஆர்.எம் பச்சமுத்துவின் கட்சியில் தனது மனைவி லீமா ரோஸை இணைய வைக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்த மோடியின் மேடையை லீமா ரோஸ் வீர வாளும் கையுமாக அலங்கரித்தார்.
தமிழர் விடியல் கட்சியின் மேடையில் டைசன் மற்றும் திருமுருகன் காந்திமனைவியின் மூலம் பாரதிய ஜனதா கூட்டணி கட்சியில் நுழைந்த மார்ட்டின் தனது மூத்த மகன் சார்லஸ் ஜோஸ் மார்டினை பாரதிய ஜனதா கட்சியிலேயே நுழைத்துள்ளார். இன்னொரு மகன் டைசனை வைத்து தமிழர் விடியல் கட்சி என்ற இன்னொரு பெயர் பலகை அமைப்பைத் துவங்கி தமிழ்நாட்டின் தமிழ் மற்றும் ஈழ “உணர்வாளர்களோடு” நெருங்கியுள்ளார். இதே டைசனால் மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்திக்கு 50 லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது என அந்த அமைப்பிலிருந்து விலகிய உமர் சமீபத்தில் குற்றச்சாட்டை முன்வைத்தது நினைவிருக்கலாம். மேலும் இதே டைசன் பல்வேறு ‘போரட்டங்களில்’ கலந்து கொண்டு போஸ் கொடுக்கும் ஃபோட்டோக்களை மேற்படி தமிழ் உணர்வாளர்கள் மரியாதையுடன் வெளியிடுகின்றனர்.
காலையில் கக்கூசு ஒழுங்காக போகவில்லை என்றாலும் கருணாநிதியை காரணம் காட்டும் உணர்வாளர்கள், தற்போது லாட்டரி மார்ட்டின் வழக்குகளில் சிக்கியுள்ள நிலையில் தி.மு.கவை விமரிசிக்காமல் கள்ள மௌனம் சாதிப்பதே உமரின் குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை நிரூபிக்கிறது. தமிழகத்தைப் பொறுத்த வரை ‘உணர்வாளர்கள்’ என்ற பெயரில் செயல்படும் பல்வேறு பெயர்ப்பலகை குழுக்களின் யோக்கியதை இதுதான். இதற்கு மேல் நாம் உள்ளே நுழைந்து எதையும் புதிதாக கண்டுபிடிக்கவோ நிரூபிக்கவோ அவசியமில்லை.
ஜெயாலலிதா, கருணாநிதி, போலிக் கம்யூனிஸ்டுகள், தமிழ் உணர்வாளர்கள், பாரதிய ஜனதா என்று ஓட்டுக்கட்சிகள் மற்றும் தமிழ் சார்ந்த குட்டிக் குழுக்கள் வரை மார்ட்டினின் பணம் விளையாடுகிறது. உங்கள் முன்னே தெரிவிக்கப்படும் பல்வேறு ‘அரசியல்’ கொள்கைகள் – போராட்டங்கள் – களப்பணிகளின் ஸ்பான்சரே மார்ட்டின்தான் என்றால் அந்த அரசியலின் யோக்கியதை என்ன என்பதை விளக்க வேண்டுமா?
ஆளும் வர்க்கம், அரசு மட்டுமல்ல அரசியல் கொள்கை சாரந்து பேசும் கட்சிகளும் காலாவதியாகி வருகின்றன. புரட்சிகர அமைப்புகளின் தலைமையில் மக்கள் அதிகாரம் மலர்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதற்கு மார்ட்டினின் லாட்டரி கொள்ளைப் பணமும் அந்த கொள்ளைப் பணம் பேசும் ‘கொள்கைகளும்’ ஒரு சான்று!
– தமிழரசன்.
செய்தி ஆதாரங்கள்:
- Company raided in Kolkata had links to ‘lottery king’ Santiago Martin
- Hawala crackdown: Probe into Dawood link yields 1,200 bank accounts, Middle East numbers
- Hawala Crackdown: Rs 80 crore recovered, ‘Dawood link’ under lens
- Lottery king Santiago Martin’s son joins BJP
- Explained – Profile: Santiago Martin, from labourer in Myanmar to Lottery King
- Martin Lottery Agencies Limited
- Illegal Lottery: Total business Rs 7,200 crore