சரீரம் ஸூக்ஷ்மசரீரம் என இருவகைப்படும் . உயிர் முக்தியை
அடையும் வரை , அதற்கு ஒரே ஸுக்ஷ்மசரீரமே உண்டு . ஸ்தூல
சரீரமோ, உயிர் இருக்கும் உலகத்திற்குத் தக்கவாறு மாறுபடும் . ஆகலின் இவ்வுலகில் இருக்கும் எல்லாப்பிராணிகளின் உயிரும் ஒரு காலத்தில் ஸ்தூலசரீரத்தை விட்டு நீங்க நேரிடும் . ஆகலின்அவ்விரண்டற்கும் உள்ள ஸம்பந்தம் நிலைத்திராது . இக்கருத்தினை , வீயாது உடம்பொடு நின்ற வுயரு மில்லை . ( புறநா . 363 , 8 ) நில்லா வுலகத்து நிலைமை தூக்கி ( பொருநர் . 176 ; பெரும்பாண். 466 ) முதலிய அடிகள் கூறும் . ஒருகாலத்தில் உயிர் உடலைவிட்டு நீங்கும் என்பதை , யாக்கை இன்னுயிர் கழிவ தாயினும் . ( அகநா . 52 , 13) என்ற அடிகள் உணர்த்தும் .
உயிரை உடலைவிட்டு நீங்குமாறு செய்பவனைக் கூற்றம், கூற்று என்ற சொற்களாற் குறித்தனர் :
உயிர்செகு மரபிற் கூற்றத் தன்ன . ( மலைபடு . 209 ) உயிருண்ணுங் கூற்றுப் போன்றன . ( புறநா . 4 ) அவன் கடுஞ்சினத்தன் என்றும் , பக்ஷபாதமில்லாதவன் என்றும் , கால னனைய கடுஞ்சின முன்ப . ( பதிற் . 39 , 8) திருந்துகோன் ஞமன் . ( பரிபா . 5 , 61 ) என்ற அடிகள் அறிவிக்கும் .
தீயாரைப் பாசத்தாற் கட்டி அவன் கொண்டுபோவான்எனவும் , அவனுடைய ஆயுதம் கணிச்சி எனவும்
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன் பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ நல்லது செய்த லாற்றீ ராயினும் அல்லது செய்த லோம்புமின் . ( புறநா . 195) என்ற அடிகள் விளக்குகின்றன .
உடலை விட்டு நீங்கிய உயிர் மறுமைக்குச் செல்ல ஆண்மகன் ஈமச்சடங்கில் பிண்டம் முதலியவற்றைக் கொடுக்க வேண்டும் . ஆண்மகன் இல்லையேல் மனைவியே பிண்டம் அளிப்பாள் :
அவள் கைம்மைவிரதம் பூணுதலும் உண்டு என்பது , தன்னமர் காதலி புன்மேல் வைத்த இன்சிறு பிண்டம் யாங்குண் டனன்கொல் .(புறநா . 234 ) என்ற விடத்து உணர்த்தப்பட்டது .
முப்பத்து மூன்று தேவர்கள் எனப்பட்டவர் பன்னிரண்டு ஆதித்தியர்களும் , இரண்டு அச்வினர்களும் , எட்டு வஸுக்களும் பதினொன்று ருத்திரர்களும் ஆவர் என்பதை ஆசிரியனல்லந்துவனார் பரிபாடல் எட்டாம் பாடலிற் குறிக்கின்றனர் . இவரெல்லாம் மும்மூர்த்திகளுடனும் முருகனைக் காண வந்தனர் என்பதை ஆங்கே கூறுகின்றனர் .
தென்புலத்தாரைப் போற்றுதல் தேவர்களைப் போற்றுதலைக் காட்டிலும் சிறந்தது என்பதை அறிவிக்கவே தென்புலத்தார் தெய்வம் .... என்ற குறளில் ஆசிரியர் திருவள்ளுவனர் தென்புலத்தாரை முன்னர்ப் படித்தனர் . அவர் கோபமற்றவர் என்றும் , பரமசுத்தர் என்றும் , எப்போதும் பிரும்மசாரிகள் என்றும் அக்ரோயநா : சௌசபரா ; ஸததம் ப்ரம்ஹசாரிண : | என்ற மநுஸ்மிருதியடி கூறும் .
வருணன் நெய்தல் நிலத்திற்குத் தெய்வம் எனத் தொல்காப்பியங் கூறும் : -- வருணன் மேய பெருமண லுலகம் ( தொல் . அகத் . 5 )
தேவர்களுள் மன்மதன் ஒருவன் என்றும் அவனுடைய மனைவி இரதி என்பதும் , இரதி காம னிவளிவ னெனாஅ ( பரிபா . 19 , 48 ) என்ற அடியாற் குறிக்கப்பட்டன . மஹாப்பிரளயத்தில் ஜீவர்களனைவரும் கடவுளிடத்தில் லயிக்கின்றனர் என்பது தொல்லூழி தடுமாறித் தொகல் வேண்டும் பருவத்தால் பல்வயி னுயிரெல்லாம் படைத்தான்கட் பெயர்ப்பான் போல் ( கலித். 129 )