New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க நூல்களிற் கூறப்படும் வேதங்களும் அங்கங்களும்


Guru

Status: Offline
Posts: 24762
Date:
சங்க நூல்களிற் கூறப்படும் வேதங்களும் அங்கங்களும்
Permalink  
 


1) வேதங்களும் அங்கங்களும்

நக்கீரனார்
இயற்றிய திருமுருகாற்றுப்படையில் , இருபிறப்பினர் ஆறு அங்கங்களைக்
கொண்ட வேதங்களை நாற்பத்கெட்டு ஆண்டுகளிற் கற்றனர் என்பதை
அறுநான் கிரட்டி யிளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிப வறனவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல . ( 179-182 )
என்ற அடிகளாற் குறிக்கின்றனர். ஒருவன் உபநயனம் செய்விக்கப்பட்ட பின்னரே வேதங்களைக் கற்க உரியன் ஆவான்; உபநயனமே அவனுக்கு இரண்டாம் பிறப்பு; அப்போது, காயத்ரீ தாய், ஆசிரியன் தந்தை; நான்கு வேதங்களைக் கற்றல் வேண்டும்; இல்லையேல் மூன்று, இரண்டு வேதங்களையேனும், இல்லையேல் ஒன்றையேனுங் கற்றல் வேண்டும் ; ஒவ்வொரு வேதத்தையுங் கற்கப் பன்னிரண்டு ஆண்டே காலம் ; எனத் தர்மசாஸ்திரங்கள் கூறுகின்றன .
( Cf. கௌதமதர் மஸூத்திரம் 1 , 1 , 6 ; 1 , 1 , 9 ; 1,3,51 ; 1 , 3 , 52 )

மூலங்கிழார் புறநானூற்று 166 ஆவது செய்யுளில் வேதங்கள் நான்கு , அங்கங்கள் ஆறு , அவை சிவபிரானிடமிருந்து தோன்றின என்பதை ,
நன்றாய்ந்த நீணிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகாது
ஒன்று புரிந்த வீரிரண்டின்
ஆறுணர்ந்த வொருமுது நூல் . (1-4 )
என்ற அடிகளிற் கூறுகின்றனர் . உலகில் உள்ளனவெல்லாம் கடவுளிடமிருந்தே தோன்றின என்பது ‘ யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே என்ற உபநிஷத்து வாக்கியத்திலும் , வேதங்களும் அவரிடமிருந்தே தோன்றின என்பது சாஸ்த்ரயோ நித்வாத் என்ற வ்யாஸஸுத்திரத்திலும் கூறப்பட்டன .

கடுவனிளவெயினனார் பரிபாடல் மூன்றாம் பாடவின்கண் இருபத்தோரு லகமும் , ஆங்குள்ள உயிர்களும் திருமாவிடமிருந்தே தோன்றின என மாயாவாய்மொழியாகிய வேதங் கூறும் என்பதை,
மூவே ழுலகமு முலகினுண் மன்பது
மாயோய் நின்றவயிற் பரந்தவை யுரைத்தே
மாயா வாய்மொழி . ( 9-11 )
என்ற அடிகளிற் கூறினர் . மாயாவாய்மொழி என்றவிடத்து மாயா என்ற அடைமொழி வேதம் நித்தியம் என்பதை அறவித்தலுங் காண்க . அவரே அப்பாடலிற் கடவுளை வேதத்து மறை நீ ( 66 ) என்பதும் , பகவத்கீதையில் ப்ரணவ : ஸர்வ உேவேஷ எனக் கண்ணபிரான் ஏழாவது அத்தியாயத்திற் கூறுவதும் ஒத்திருக்கின்றன . மறை என்பதற்கு உரைகாரர் உபநிடதம் எனப் பொருள் கூறியிருப்பனும் , அதற்குப் பிரணவம் என்ற பொருளுங் கொள்ளலாம் என்பதைப் பகவத்கீதை அறிவிக்கின்றது .

வேதங்களாற் கடவுள் அறியப்படுகிறார் என்பதைக் கீரந்தையார் பரிபாடலில் ,
நாவ லந்தண ரருமறைப் பொருளே . ( 2 , 57 )
என்றவிடத்து அருமறைப்பொருள் என்பதால் அறிவிக்கின்றனர் இதனை , பகவத்கீதையில்
வேசை : ச ஸர்வைரஹமேவ வே .: ( 15 , 15 ) என்றதனாற் கண்ணபிரானும் , சாஸ்த்ரயோநித்வாத் வேதாந்தஸுத்திரத்தான் வியாஸரும் கூறுகின்றனர் .

வேதங்கள் எழுதப்படாமல் குருமுகமாகவே கற்பிக்கப்பட்டு வந்தன என்பதைக் குறுந்தொகையில் பாண்டியன் எழுதி நெடுங்கண்ணனார் ,
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
எழுதாக் கற்பி னின்சொ லுள்ளும்
பிரிந்தோர் புணர்க்கும் பண்பின்
மருந்து முண்டோ . ( 156) என்றவிடத்து எழுதாக்கற்பு என்ற சொல்லாற் குறித்தனர் .
இக்கருத்தினையே பதிற்றுப்பத்திலும் புறநானூறு முதலியவற்றிலும் வழங்கப்படும் கேள்வி என்ற சொல்லும் அறிவிக்கும் :
உரைசால் வேள்வி முடித்த கேள்வி
அந்தண ரருங்கல மேற்ப . ( பதிற் . 64 , 4-5 )
வேள்வியிற் கடவு ளருத்தினை கேள்வி
உயர்நிலை யுலகத் தையரின் புறுத்தினை . ( பதிற் . 70 ; 18-9 )
கேள்வி கேட்டுப் படிவ மொடியாது
வேள்வி வேட்டனை யுயர்ந்தோ ருவப்ப ( பதிற் . 74 , 1-2 )
கேள்வி முற்றிய வேள்வி யந்தணர்க்கு . ( புறநா . 361 , 3 - 4 )
அந்தணரே வேதங்களைச் சிறப்பாகக் கற்றுப் பாடினர் என
மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியிற் கூறினர் :
சிறந்த வேதம் விளங்கப் பாடி
அந்தணர் பள்ளியும் ( 468-476 )
அந்தணர் வேதம் பாட (656 ) அவற்றின் கருத்தை விரித்து விளக்கியோரை வாய்மொழிப் புலவர் எனக் குன்றம்பூதனார் பரிபாடல் ஒன்பதாம் பாட்டிற் கூறினர் :

நான்மறை விரித்து நல்லிசை விளக்கும்
வாய்மொழிப் புலவீர் கேண்மின் ( 12-13 )
வேதங்கள் தர்மத்தைப்பற்றிக் கூறுகின்றன என ஓதலாந்தையார் ஐங்குறுநூற்றில் உணர்த்தினர் .
அறம்புரியருமறை ( 387 )

அந்தணரே வேதத்தைக் கற்பித்த காரணம்பற்றி வேதத்தை அந்தணர் மறை ( தொல் . எழுத் 102 ) எனத் தொல்காப்பியனாரும் , அந்தணரருமறை ( பரிபா. 2 , 57 ; 3 , 14 ) எனக் கீரந்தையாரும்

கடுவனிளவெயினனாரும் , அந்தணர் முதுமொழி ( கலித் . 126 , 4) என நல்லந்துவனாரும் , அந்தணர் நூல் ( திருக் . 543 ) எனத் திருவள்ளுவனாரும் கூறினர் .

வேதங்களைக் காக்கும் பிராம்மணர் வசிக்கும் இடத்திற் கிளிகளும் வேதவாக்கியங்களைக் கூறின என உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையிற் கூறினர் : -

வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும்
மறைகாப் பாள ருறைபதி (300-1)

வேதத்தில் உணர்த்தப்பட்ட வேள்விகளைப் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியும் சோழன் கரிகாற்பெருவளத்தானும் செய் ,ததாகப் புறநானூற்றுச் செய்யுட்கள் கூறும் :

நற்பனுவ னால்வேதத்து
அருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்ம்மலி யாவுதி பொங்கப் பன்மாண்
வீயாச் சிற்ப்பின் வேள்வி முற்றி ( 15 , 17-20 )

எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
வேத வேள்வித் தொழின்முடித் ததூஉம் ( 224, 8-4 )

பாலினது இயற்கைக் குணமாகிய இனிப்பு எவ்வாறு மாறாதோ அவ்வாறே வேதநெறி மாறாது என்பதை முரஞ்சியூர் முடிநாகராயர்,
பா அல் புளிப்பினும் பகலிருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி

நடுக்கின்றி நிலியரோ ( புறநா . 2 , 18-21 ) என்ற அடிகளிற் குறிப்பாய் உணர்த்துகின்றனர் .

பசுவின்கண் பால் குறைந்தால் உலகிற்கு எவ்வளவு கேடு உண்டாகுமோ, அவ்வளவு கேடு பிராம்மணன் வேதத்தை மறந்தால் உண்டாகும் எனக் குறிப்பாற் கூறி , அதற்குக் காரணம் அரசன் முறைப்படிப் பாதுகாவாமையே எனத் திருவள்ளுவனார்

ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின் ( 560 ) என்ற குறளிற் கூறினர் .

வேதத்தின் கரைகண்ட பார்ப்பனரைச் செல்வர் எனக் திரிகடுகம் 70 - ஆவது செய்யுளில் நல்லாதனாரும் , வேதங்களை அந்தணர் ஆராய்வார் என நான்மணிக்கடிகை 89 - ஆஞ் செய்யுளில் விளம்பிநாகனாரும் , அந்தணர் வேதத்தை அத்தியயனஞ் செய்தல் இன்பத்தைத் தரும் என இனியவை நாற்பது 8 - ஆஞ் செய்யுளில் பூதன் சேந்தனாரும் உரைத்தனர்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard