New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அந்தணர் – பார்ப்பனர் – பிராமணர் - சிலசங்கஇலக்கியச்சான்றுகள்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
அந்தணர் – பார்ப்பனர் – பிராமணர் - சிலசங்கஇலக்கியச்சான்றுகள்
Permalink  
 


 

அந்தணர்பார்ப்பனர்பிராமணர் - சிலசங்கஇலக்கியச்சான்றுகள்

ஆரியத்தின் சாதியம் ஐந்து அடிப்படைகளைக் கொண்டது;

 1. பிறப்பு அடிப்படை

2. குறிப்பிட்ட சாதியினர் குறிப்பிட்ட தொழில்தான் செய்ய வேண்டும் என்ற விதி

3. பிற பிரிவினருடன் கலவாமை / தனித்துவம் காத்தல்

4. தீண்டாமை

5. இவற்றை மீறுவோருக்குக் கடும் தண்டனைகள்

தொல்காப்பிய நால்வகைத் தொழிற்பிரிவுகளில் இந்த ஐந்து அடிப்படைகளுமே இல்லை. மேலும், தொல்காப்பியர் மிகத் தெளிவாகப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்;

’ஊரும் பெயரும் உடைத் தொழிற் கருவியும்

யாருஞ் சார்த்தி அவைஅவை பெறுமே’ (மரபியல் 75)

-இதன் பொருள், ’ஊர், பெயர்,தொழிற் கருவி ஆகியவை அவரவருக்கு ஏற்ப அனைவருக்கும் உரிமையுடையவையே’ என்பதாகும். எந்தப் பிரிவினர் என்ன தொழில் செய்ய வேண்டும் என்பது திணிக்கப்பட்ட ’தர்மம்’ அல்ல என்பதை இந்த விதி விளக்குகிறது.

‘தலைமைக் குணச்சொலும் தத்தமக் குரியதோர்

நிலைமைக் கேற்ப நிகழ்த்துப வென்க’ (மரபியல் 76) -என்கிறார் தொல்காப்பியர்.

தலைமைப் பண்பைப் பொறுத்தவரை, அவரவரும் தமது நிலைமைக்கேற்பவே நிகழ்த்திக் கொள்ள வேண்டும் என்கிறது இவ்விதி. தலைமைப் பண்பு என்பது, பிறப்பினால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது, தொடர்புடையவர், குறிப்பிட்ட சூழலில் எந்த நிலையில் இருக்கிறார் என்பதைப் பொறுத்தே முடிவு செய்யப்படும்.

மேற்கண்ட இரு விதிகளும் மிக விரிவாகப் பொருள் கொள்ளத்தக்கவை ஆகும். நால்வருணத்தின் அடிப்படைகளுக்கும் இவ்விதிகளுக்கும் முரண்பாடுகள் மட்டுமே இருக்கின்றன.

மேலும், நால்வருணக் கோட்பாடு வகுத்த அதிகாரப்படிநிலை,

1. பிராமணர்

2. சத்ரியர்

3. வைசியர்

4. சூத்திரர்  -என்பதாகும்.

தொல்காப்பியம் வகுத்த நான்குவகைப் பிரிவுகளின் அதிகாரப்படிநிலை,

1. அரசர்

2. அந்தணர்

3. வணிகர்

4. வேளாளர்

-என்பது. இதில், பிராமணர் என்ற பிரிவே இல்லை. பிராமணர் இருக்க வேண்டிய இடத்தில் அரசர் உள்ளார். அவருக்குப் பிறகே, அந்தணர் வருகிறார். அந்தணர் என்றால், அது ஆரிய பிராமணரைக் குறிப்பதாக, கற்பனையாகப் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது.

அந்தணர் என்போர் யார் என விரிவாகக் காண்போம்.

தமிழர் மரபில் அந்தணர், ஐயர், பார்ப்பனர் ஆகியோர் யாவர் என்ற கேள்விக்கு விடை கண்டால் மட்டுமே, சங்க இலக்கியங்கள் பதிவு செய்த வாழ்வியலைப் புரிந்துகொள்ள முடியும்.

ஐயர் என்ற சொல் ’தலைவர் / சமூகத் தலைவர்’ எனும் பொருளைக் குறிப்பதாகும்.

’பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் “ஐயர் யாத்தனர் கரணம் என்ப’ என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். கற்பு மணத்தைச் சமூகத் தலைவர்கள் உருவாக்கினர் என்ற பொருளிலேயே இச்சொல் கையாளப்பட்டுள்ளது. ’ஐயை’ என்பது தலைவியைக் குறிக்கும். ’ஐயா’ என்பது மரியாதையுடன் ஒருவரை விளிக்கும் சொல். இவ்வகையில்தான், ஐயர் என்னும் சொல், தலைவர் என்ற பொருள் தாங்கி நின்றது.

சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்ட ஒன்றாகும். சிந்துவெளித் தமிழரின் எழுத்துக்களைப் படித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார் முனைவர்.இரா.மதிவாணன்.

சிந்துவெளி எழுத்துக்கள் அனைத்தும் தூய தமிழ்ச் சொற்களாக இருப்பதை இந்நூல் வாயிலாக உணரலாம். இந்நூலில் உள்ள அகர வரிசைச் சொற்களில் ஒன்று, ‘அய்யன்’ என்பதாகும். (Indus Script Dravidian / Dr.R.Mathivanan / Tamil Chanror Peravai / 1995 / பக் – 137)

(அ)ய்யஅன்  (அ)ய்ய(ன்) மாசோண(ன்) மன்னன்  (அ)ய்ய(ன்) வைகா சானஅன்

(அ)ய்ய(ன்) காங்கணஅன் (அ)ய்ய(ன்)  (மேலது நூல் – பல்வேறு பக்கங்களில்)

ஐயர், என்றால் அதுவும் பிராமணர்தான், என்றால், சிந்துவெளித் தமிழரும் ஆரிய பிராமணர்தான் என்பார்களோ, திராவிடக் கோட்பாட்டாளர்கள்!

மேற்கண்ட நூலில் உள்ள ’சானஅன்’ என்னும் சொல் விரிவான ஆய்வுகளுக்குட்படுத்தப்பட வேண்டியதாகும். ஏனெனில், இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ள இடங்களில், அந்தனன், அய்யன் போன்ற, அறிவுத் துறைச் சொற்கள் உடன்வருகின்றன.

சாணார், என்போர் சான்றோர். இவரே, பின்னாட்களில் நாடாரெனும் சாதியரானார் என்ற கருத்து நெடு நாட்களாகக் கருத்துலகில் உள்ளது. சிந்துவெளிச் சொற்களில், சானாஅர், அந்தனஅர், அய்யஅன் ஆகிய மூன்று சொற்களுக்கும் இந்த உறவு உள்ளதாகத் தெரிகிறது.

ஆரியர் வருகைக்கு முன்னரே, அய்யன் என்னும் சொல்லைத் தமிழர்கள் பயன்படுத்தினர் என்பது கவனிக்கத்தக்கது.

ஐயர் என்பது, பிராமணரில் ஒரு பிரிவினரைக் குறிப்பதாகப் பின்னாட்களில் அப் பிராமணர்களாலேயே மாற்றிக்கொள்ளப்பட்டது.

அந்தணர் என்னும் பிரிவினர் தமிழ்ச் சமூகத்தின் அறிவாளர்கள் ஆவர். அரசு உருவாக்கத்தின்போது, அரசர்களுக்கான அறிவுரைகள் வழங்கியும், மெய்யியல் துறைகளில் ஈடுபட்டும் வந்தவர்கள் அந்தணர் ஆவர். இவர்கள் தமிழர்களே.

சான்றாக, பதிற்றுப் பத்து தொகை நூலில் இரண்டாம் பதிகம் பாடிய குமட்டூர் கண்ணனார் ஒரு அந்தணர்(பதிற்றுப் பத்து தெளிவுரை – புலியூர் கேசிகன்). இவர் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் எனும் சேரப் பேரரசரின் அவையில் இருந்தவர். குமட்டூர் கன்ணனார் பாடிய பதிகங்களைப் படித்தாலே, அக்காலத் தமிழரின் ஆரிய எதிர்ப்பின் வீரியம் விளங்கும்.

இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன், இமையம் வரை படையெடுத்துச் சென்று ஆரிய மன்னரைக் கண்டவிடத்தில் எல்லாம் அழித்து வெற்றி வாகை சூடியவன். இவ்வரலாற்றை கூறும் பதிகத்தில், இமையவரம்பன் ஆளும் நாட்டின் எல்லையை, ’இமிழ்கடல் வேலித் தமிழகம்’ என்று குறிக்கிறார் கண்ணனார். மேலும், ஆரிய அரசர்கள் தமிழ் அரசனான இமையவரம்பனுக்கு அடிபணிந்து கப்பம் கட்டிய செய்திகளையும் குமட்டூர் கண்ணனார் பதிவு செய்துள்ளார்.

குமட்டூர் கண்ணனார் எனும் அந்தணர், ஆரியர் அழிவுற்ற காட்சிகளைப் பின்வருமாறு விவரிக்கிறார்;

’இமையவரம்ப மன்னனே, நீ படையெடுத்துச் சென்ற நாடுகள் எப்படி அழிந்தன தெரியுமா? இமைய மலைச் சாரலிலே கவரி மான்கள் தாம் உண்ட நரந்தம் புல்லைக் கனவில் எண்ணிப் பார்த்தபடிப் படுத்திருக்கும். (அதுபோல செம்மாந்து இருக்கும்) ஆரியர் நிறைந்த பகுதிகளையும் பிற பகுதிகளையும் தாக்கி அழித்தாய். மரணம் வந்து தாக்கிய பிறகு பிணமானது, ஒவ்வொரு நொடியும் அழிந்து கொண்டேயிருக்குமே, அதேபோல் தமது தலைவர்களை இழந்த நாடுகள் கணத்துக்குக் கணம் அழிந்துகொண்டிருந்தன.

வயல்கள் எல்லாம் பாழ்பட்டு அங்கே காட்டு மரங்கள் வளரத் தொடங்கிவிட்டன. அவர்களது கடவுள்கள் எல்லாம் காட்டுக்குள் சென்றுவிட்டன. காடுகளின் ஓரங்களில், உனது படையினர் இளம் பெண்களோடு வெற்றிக் களிப்பில் ஆடி மகிழ்கின்றனர்’அந்தணர் எல்லாரும் ஆரியப் பார்ப்பனர் என்றால், ஆரியர் அழிந்த நிகழ்வை இவ்வளவு மகிழ்வுடன் பாடியுள்ள குமட்டூர் கண்ணனார் ஆரியரா?

தாம் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர் என்பதைக் குமட்டூர் கண்ணனார் குறிப்பிடுகிறார்.

‘எமது ஆடைகள் பருந்தின் நனைந்த இறக்கைகள் போலக் காணப்பட்டன. எம் உடைகளை மண் தின்று கந்தலாக்கியிருந்தது. அப்படி வந்த எமக்குப் பட்டாடைகள் கொடுத்தாய் அரசே. வளைந்த மூங்கில் போலத் தோன்றும் எம் பாணர் மகளிர் அனைவருக்கும் ஒளிவீசும் அணிகலன்கள் வழங்கினாய்’ என்ற வரிகளிலிருந்து குமட்டூர் கண்ணனார் பாணர் குலத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது.

பாணர்கள் ன்போர், இசை, கூத்து ஆகிய கலை நிகழ்வுகளின் வல்லுநர்கள். ஆயினும், அவர்கள் நேரடி உற்பத்திசாராத மரபினர் என்பதால், அவர்கள் வறுமையில் வாடியதும் உண்டு. அரசுருவாக்கம் நிகழத் தொடங்கிய பின்னர், அரசர்களைப் பாடியும் அவர்களுக்கு அரசு நடத்தும் முறைமை கற்றுக் கொடுத்தும் தமது இருத்தலை உறுதிப்படுத்தினர் பாணர்கள். விறலியர், கூத்தர் ஆகிய பிற பிரிவினரும் இதே நிலையை ஒத்தவர்களே.

இதேவேளை, பாணர் உள்ளிட்ட உற்பத்தி சாரா பிரிவினர் தமிழ்ச் சமூகத்தின் வர்க்க நிலையில் பின் தங்கியே இருந்தனர். உற்பத்தியில் ஈடுபட்ட வேளாண் மாந்தரும் அவரையொத்த பிறரும் வர்க்க நிலைமையில் மேம்பட்டிருந்தனர். பின் தங்கிய வர்க்கத்தினராக இருந்தாலும், பாணர்களைத் தமிழ் அரசர்கள் தமக்கு நெருக்கமாக வைத்துப் போற்றினர்.

எனது இக்கூற்றை மெய்ப்பிக்கும் தொல்காப்பிய விதி ஒன்றைக் காண்போம். அகத்திணையியலில் தலைவனது சமூகப் பங்களிப்புகளாகக் கூறப்பட்டுள்ளவை;

‘கல்வி கற்றல், போர்ப் பயிற்சி பெறல், சிற்பக் கலை கற்றல், இவற்றிற்காக வெளியூர் செல்லுதல், முரண்பட்ட இரு அரசர்களிடையே பகை நீக்குதல், அரசர்களிடையே தூதராகச் செல்லுதல், அரசர்களுக்குத் தூதாகச் செல்லும்போதே அரசரது வலிமை, செய்யப் போகும் வேலையின் தன்மை, துணையாக வருவோரின் வலிமை ஆகியவற்றை ஆராய்தல்....’உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் கூறப்பட்டுள்ளன (அகத்திணையியல் 44).

இவ்விதியில், ’தலைவன்’ என்ற சொல் இருப்பதால் இவ்விதி அரசனுக்கானது என்று பொருள் கொள்ளல் தவறு. தலைவன் எனும் சொல்லைத் தொல்காப்பியர் அனைத்துப் பிரிவினருக்கும் கையாண்டுள்ளார். அதாவது, குழுத் தலைவன், குடும்பத் தலைவன் என்று அனைத்து அலகுகளின் தலைமையில் உள்ளவன் என்று பொருள். இந்தத் தலைவன், அரசருக்காக செய்ய வேண்டிய / செய்யத்தக்க பங்களிப்புகள்தான் அகத்திணையியலில் கூறப்பட்டது.

அரசு உருவாக்கத்தின்போதும் சமத்துவச் சமூக அமைப்பின் கூறுகளை முன்னிறுத்தியவர் நம் தமிழர் என்பதற்கான சான்று மேற்கண்ட தொல்காப்பிய விதி.

இந்த வகையிலேயே குமட்டூர் கண்ணனார் உள்ளிட்ட எண்ணற்ற அறிவாளர்கள் அரசருக்கு நெருக்கமாக இருந்தனர்.

ஆரியரது அரசக் கோட்பாடுகளோ இதற்கு நேர் எதிரானவை.

 ’அரசாட்சி நடத்துவது என்பது உதவியாளர்களை வைத்துக்கொண்டால்தான் சாத்தியமாகும். அரசன் அமார்த்யாயர்களை அமர்த்திக்கொள்ள வேண்டும்.அவர்கள் அபிப்ராயங்களைக் கேட்க வேண்டும்’ என்றான் சாணக்கியன். அமார்த்தியாயர்கள் என்போர் ஆரிய பிராமணர் ஆவர். அவர்களிலும் வர்க்கத்தால் மேம்பட்டோர் ஆவர். அர்த்த சாத்திர விதிகளின்படி, ’அரசன் அமார்த்தியாயருக்குத் தெரியாமல் எதுவும் செய்யக் கூடாது. அரசனுக்கு உணவு அளிக்கும் உரிமை அரசிக்குக் கூட இல்லை. அமார்த்யாயர்களின் மேற்பார்வையில்தான் உணவு அளிக்கப்பட வேண்டும். அரசன் தன் வாரிசுகளுடன் கூட நெருக்கமாக இல்லாதவாறு பல விதிகள் விதிக்கப்பட்டன.

எல்லாவற்றிற்கும் மேலாக, அரசருக்கும் மக்களுக்குமான உறவு வெகு தொலைவில் இருந்தது. அமார்த்யாயர் எனப்பட்ட ஆரிய பிராமணரே, உண்மையான / மறைமுக ஆட்சியாளர்களாக இருந்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வேதம், கடவுள் ஆகியவற்றின் பெயரால் ஆரிய பிராமணர்கள் செய்து முடித்தனர்.

இந்தக் காலத்தில்தான், தமிழர் மரபு சமூகத்தின் கடைநிலை மாந்தரையும் அரசருக்கு ஆலோசனை சொல்லும் உரிமை உடையவராக அங்கீகரித்தது. அர்த்த சாத்திரம் எழுதப்பட்ட காலம் தொல்காப்பியத்திற்குப் பிந்தியது என்றாலும், அர்த்த சாத்திரத்தின் கூறுகள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே ஆரியரிடையே வழக்கத்தில் இருந்தனவே.

ஆரிய பிராமணரான அமார்த்தியாயர் தமது சிறப்புத் தகுதிகளாகக் கூறிகொண்டவற்றில் ’நிமித்தம் பார்க்கும் திறன்’ ஒன்றாகும். அரசருக்கு நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்துச் சொல்வது இதன் முக்கியப் பணி.

நிமித்தம் என்பது வானியல் அறிவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இந்த வானியல் அறிவும் தமிழரிடமிருந்து ஆரியர் திருடியதே. இது குறித்த ஆழமான ஆய்வு நூல், அறிஞர் குணா எழுதிய ’வள்ளுவத்தின் வீழ்ச்சி’ ஆகும். தமிழர் அறிவைத் தமது பிழைப்புக்காக மூட நம்பிக்கையாக மாற்றியவரே ஆரிய பிராமணர் என்பதை உணர்த்துவதற்காகவே இதை இங்கே குறிப்பிடுகிறேன். ஆயினும், அறிஞர் குணா அவர்களின் அரசியல் நிலைகளில் எனக்கு மாறுபாடுகள் உண்டு.

சங்ககாலத்தில் நிமித்தம் பார்ப்பதைப் பிழைப்பாகக் கொண்டு செயல்பட்டோரும் தமிழகத்தில் ‘பார்ப்பார்’ என்று அழைக்கப்பட்டனர். இப் பார்ப்பாரில் ஒரு பகுதியினர், தொல்காப்பியர் காலத்திலும் சங்க காலத்தின் பிற்பாதிக் காலம் வரையிலும் சமூகத்தின் கடைநிலை மாந்தராகவே இருந்தனர். தமிழகத்திற்கு வந்தேறிய ஆரிய பிராமணரில் பலரும் தமிழகப் பார்ப்பாரோடு கலந்தனர். ஆகவே, பார்ப்பார் எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பிரிவினரில் தமிழரும் உண்டு, ஆரிய பிராமணரும் உண்டு. பார்ப்பார் எனும் சொல், குலத் தொழிலைக் குறிக்கும் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டது.

 தமிழகத்திற்குப் பிழைப்பு தேடி வந்த எல்லா ஆரிய பிராமணரும், உயர் நிலையில் வைக்கப்படவில்லை. அவர்களது நிலை, தமிழர் அரசுகள் வீழ்ந்த பிறகுதான் உயர்ந்தது.

 பார்ப்பாரின் சமூகச் செயல்பாடுகளாகத் தொல்காப்பியர் கூறுபவை;

’தலைவன் (கணவன்) தலைவியைப் (மனைவியை) பிரிந்து செல்லும்போது அவனிடம் சென்று ‘நீ பிரிந்து சென்றால் தலைவியின் வேட்கை மிகும்’ எனக் கூறுதல், தலைவன் செல்வதற்கு வாய்ப்பான நிமித்தம் பார்த்துக் கூறல், தலைவியிடம் சென்று ’தலைவன் பிரிந்து சென்றான்’ எனக் கூறல், இவை போன்ற பிற செயல்கள் அனைத்தும் பார்ப்பாருக்கு உரியனவாகும்’ (தொல்காப்பியம், கற்பியல்-36)

 அகநானூற்று பாடல் ஒன்று பார்ப்பாரைப் பற்றிப் பின்வருமாறு விவரிக்கிறது:

 ’உப்பு வணிகரின் பொதிகளைச் சுமக்கும் கழுதைகளைப் போல் பாறைகள் கிடக்கும் இடத்தின் வழியாக, தூது செல்வதையே பல காலமாகத் தொழிலாகக் கொண்டுள்ள பார்ப்பான் (’தூதொய் பார்ப்பான்’) செல்கிறான். அப் பார்ப்பான், மடியிலே வெள்ளிய ஓலைச் சுவடியை வைத்திருக்கிறான். அவன் வருவதைப் பார்க்கும் மழவர்கள் ’இவன் கையில் வைத்திருப்பது பொன்னாக இருக்கலாம்’ எனக் கருதுவர்.அப்போதே அவனைக்கொன்றும் வீழ்த்துவர். இறந்துகிடக்கும் அப்பார்ப்பானுடைய ஆடைகள் கந்தலாக இருப்பதைக் கண்டதும் அம் மழவர்கள், வெறுப்பில் தம் கைகளை நொடித்தபடியே செல்வர்’  (அகநாநூறு 337)

 குறுந்தொகைப் பாடல் ஒன்று பார்ப்பாரை வம்புக்கு இழுக்கிறது.

‘பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பூ முருங்க மரத்தின் தடியில் கமண்டலத்தை உடைய, நோன்பிருந்து உண்ணும் வழக்கமுடைய பார்ப்பன மகனே, உங்களுடைய எழுத்து வடிவம் இல்லாத கல்வியாகிய வேதத்தில் (’எழுதாக் கற்பு’) உள்ள இனிய உரைகளில், பிரிந்து சென்ற தலைவன் தலைவியை மீண்டும் புணரச் செய்யும் மருந்து உள்ளதா?’(குறுந்தொகை 156)

 பார்ப்பார் எனப்பட்டோர் தூது செல்வதற்கும் அதற்கேற்ற நிமித்தம் பார்ப்பதற்கும் பயன்படுத்தப்பட்டனர் என்பவற்றை இப்பாடல்கள் விளக்குகின்றன. மேலும் அவர்களைப் பிற சமூகத்தினர் இழிவாக நடத்தியமையும் இப்பாடல்களிலிருந்து புலனாகின்றன. குறிப்பாக, குறுந்தொகைப் பாடல், வேதத்தைக் கேலி செய்கிறது என்றே கொள்ளலாம். தமிழ் மொழி தொன்மை இலக்கணங்களுடன் செம்மாந்து இருக்கும்போது, பார்ப்பாரின் வேதங்கள் எழுத்து வடிவம் கூட இல்லாமல் வெறும் வாய்வழியாகவே வேதங்கள் பாடி பரப்பபட்டதை அப்பாடல் குத்திக் காட்டுகிறது. மேலும், வேதங்களின் அடிக் கருத்தியல் மறுபிறப்புக் கொள்கையைக் கொண்டவை. இப்பிறப்பில் இன்பம் இல்லை என்பவை. அக வாழ்க்கையை எதிர்த்தவை. ஆதலால்தான், ’பார்ப்பான் மகனே...உன் வேதம் புணர்ச்சிக்கு உதவுமா?’ எனக் கேட்கிறார் புலவர்.

 இப்பாடல்களில் குறிப்பிடப்படும் பார்ப்பார் அனைவரும் ஆரியர் அல்லர். குறுந்தொகைப் பாடலில் வரும் ’பார்ப்பான் மகன்’ மட்டும் ஆரிய பிராமணன் எனத் தெரிகிறது.

 நான்கு வேதங்களை முன்னிறுத்தல், வேள்விகள் நடத்தி ஆரியக் கடவுள் கோட்பாட்டைத் தமிழ் அரசரிடம் பரப்புதல், நோன்பு இருத்தல், நிமித்தம் என்ற பெயரில் சோதிடக் கருத்துகளை அதிகரித்தல், இல்லறத்தை வெறுக்கச் செய்து மறுபிறப்புக் கொள்கையை வலியுறுத்தல் ஆகியவை ஆரியர் மேற்கொண்ட திட்டமிட்ட பண்பாட்டுப் படையெடுப்புகளாகும். இப் படையெடுப்பில் தமிழ்ப் பார்ப்பாரும் அந்தணரும் நேரிடையாகப் பாதிக்கப்பட்டனர். அரச உருவாக்கம் ஆரியரது பண்பாட்டுப் படையெடுப்பை விரைவுபடுத்தியது.

 ஆகவே, பார்ப்பார் எனும் சாதி முற்றும் முழுதாக ஆரிய இறக்குமதி அல்ல. அதேவேளை, பார்ப்பார்கள் வானியல் அறிவாளர் குலத்தினராக இருந்து ஆரியப் பார்ப்பனர் வருகையினால் முக்கியத்துவம் இழந்து சிதைந்தவர் எனலாம்.

 குறிப்பாக, அந்தணர் எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டது, தமிழ் மெய்யறிவாளர்களைத் தானே தவிர, ஆரிய பிராமணர்களை அல்ல. தொல்காப்பியர், தமிழ்ச் சமூகத்தின் பிரிவுகளில் ஆரிய பிராமணர்களைக் குறிப்பிடக் கூட இல்லை. ஆனால், மிகத் தவறான புரிதல்களால், திராவிடக் கோட்பாட்டாளர்கள், ‘தொல்காப்பியரே ஓர் ஆரிய பிராமணர்தான்’ என்று பரப்பிவிட்டார்கள்.

 மூலமான சான்றுகளைப் படித்து, மெய்யான தமிழர் வரலாற்றை அறிய வேண்டியது தமிழர் கடமை!

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard