வீரன் வாஞ்சியைப் பற்றி வருடா வருடம் பொய்களை பேசுகிறார்கள். நானும் வருடா வருடம் இந்த பதிவை பகிர்கிறேன். என்ன ஒன்று, ஒருமுறை அவதூறு பேசியவர்கள் இதைப் படித்து விட்டு வாயை மூடிக்கொண்டு போய் விடுகிறார்கள். அடுத்தது புதிதாக சிலரை தயார் செய்து அனுப்புகிறார்கள். அவர்களுக்கும் அதே கதிதான்.
பின்வரும் இந்த கட்டுரை சற்று நீளமானது. காலச்சுவடு இணையதளம், எழுத்தாளர்கள் sriram sengottai, ஜெயமோகன் போன்ற பலரின் எழுத்துக்களில் இருந்து சான்றுகளுடன் தொகுக்கப்பட்டது. தேடிக்கண்டுபிடித்ததை தவிர அடியேனின் பங்கு ஏதுமில்லை.
யார் வாஞ்சி குறித்து பேசினாலும் இந்த பதிவை காண்பிக்கவும்.
ஜெய் ஹிந்த்!
********************************************
Sathya GP கேட்டுக்கொண்டதற்கு இணங்க, முழுமையாக ஒரே பதிவில்
கொடுங்கோலன் ஆஷ் கொலை - வீரத் தியாகி வாஞ்சி தற்கொலை உண்மை பின்னணி என்ன?- பகுதி 1
"ஓரிர வினிலே ஆறிரு மணிக்கென்
அரங்குள் யான்நன் குறங்குங் காலவண்
செறிந்து மிஸ்டர் சிதம்பரம் பிள்ளையென்
றறைந்த சத்தமொன் றனேக தடவை
கேட்டு விழித்துப் பார்த்தேன். அரங்குமுன்
சிறையின் ஜூனியர் சப்அஸிஸ் டெண்டு
சர்ஜன் நின்று சௌக்கியம் உசாவி
‘கலெக்டர் ஆஷுவைத் தெரியுமா?’ என்றான்.
‘நன்றாகத் தெரியும்’ என்றேன். ‘எப்படி?’
என்றான். ‘யான் இவண் ஏகியதற்கும்
தூத்துக் குடியில் தோன்றிய ‘சுதேசிக்
கப்பல் கம்பெனி’ செத்தொழிந் ததற்கும்
அவன்கா ரண’மென் றறைந்தேன். ‘ஒருவன்
அவனை நேற்று மணியாச்சி ஜங்ஷனில்
சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டுச்
செத்தான்’ என்றான். ‘நல்லதோர் செய்தி
நவின்றாய் நீ நலம் பெறுவாய்’ என்றேன்.
உனக்கிவ் வருஷக் கரோஒ நேஷனில்
விடுதலை இலையெனப் பகர்ந்தான். ‘விடுதலை
என்றுமில் லெனினும் நன்றே’ என்றேன்."
மேற்கண்டவாறு தனது சுய சரிதையில் எழுதி இருப்பவர் வேறு யாரும் அல்ல. கப்பலோட்டிய தமிழனாக கம்பீரமாக நின்று, விஞ்ச் , ஆஷ் போன்ற வெள்ளை இன அதிகாரிகளால் வஞ்சகமாக சிறையில் அடைக்கப்பட்ட செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்கள் தான்.
அவருக்கு ஆஷ் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு? அல்லது ஆஷ்க்கு இவர் மீது ஏன் வெறுப்பு என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
ஆஷ்- வாஞ்சி பகுதி - 2
பிப்ரவரி 1908இல் தூத்துக்குடி கோரல் ஆலைத் தொழிலாளர் ஏறத்தாழ ஓராயிரம் பேர் கூலி உயர்வு, வார விடுமுறை முதலான கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் செய்தனர். இதன் பின்னணியில் சுதேசி இயக்கமும் வ.உ.சியும் இருந்தது வெளிப்படை.
போராட்டம் வலுப்பதைக் கண்ட அரசு நிர்வாகம் 144 சட்டப் பிரிவை அமலாக்கியதோடு, சிவகாசியிலிருந்து கூடுதல் போலீஸ் படையையும் வரவழைத்தது. நிலைமையை எதிர்கொள்ளும் பொறுப்பு, தலத்திலிருந்த அதிகாரியான ஆஷுக்கு!
"ஜாயின்று மேஜிஸ் டிரட்டாக என்னகர்
காயிதம் தந்‘தெனைக் காண்க வா’ என்றனன்.
உயிரனைய என்நண்பர் ஓட்டத்தில்வந்து ‘நின்
உயிரினை நீக்குதற் குபாயம் செய்துளன்;
காண்க நீ போகேல். காலையிற் கேட்டேம்;
வீண் கதை யென்றுநீ விளம்பலொழி;"
என்று வ.உ.சி. சுயசரிதையில் கூறுகிறார்.
ஆனால் வ.உ.சி இதற்கெல்லாம் அஞ்சுகிறவரா என்ன?
‘உயிரினை நீக்கும் ஊழ்வலி வந்திடின் நம்மால் தடுக்கவும் நண்ணுமோ? செல்லாது சும்மா இருந்திடின் சுகமோ’ என்று துணிவாக ஆஷைக் காணச் சென்றார்.
ஆசுவைக் கண்டதும், ‘அழகிய மில்லினை
மோசம் செய்ததென் மொழிகுவாய்’ என்றான்.
கொடியபல செய்து கூலி யாட்களை
மடியும் விதத்தினில் வருத்திவந் ததனால்
வேலையை நிறுத்தினர்; வேண்டுவ கேட்டுளேன்;
நாலு தினத்தினில் நன்மையாம் என்றேன்.
படையின் செருக்கைப் பகர்ந்தான். எழுந்தேன்
படையிலா ரிடத்ததைப் பகர்தல் நன்றென்றே!"
தொழிலாளர் ஒற்றுமையும் வ.உ.சியின் தலைமையும் வேலைநிறுத்தத்திற்கு வெற்றி தந்தன. அனைத்துக் கோரிக் கைகளையும் வென்று 7 மார்ச் 1908இல் தொழிலாளர் வேலைக்குத் திரும்பினர். ஆஷ் இதைத் தம் தனிப்பட்ட தோல்வியாகக் கருதியிருந்தால் அது இயல்பே.
12 மார்ச் 1908இல் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக அடுத்த நாள் திருநெல்வேலி நகர், தூத்துக்குடி, தச்சநல்லூர் ஆகிய ஊர்களில் பெரும் மக்கள் எழுச்சி ஏற்பட்டது. ‘திருநெல்வேலி கலகம்’ என்று அரசு ஆவணங்களில் அறியப்படும் இவ்வெழுச்சியின்போது திருநெல்வேலி நகரில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. சி.எம்.எஸ். கல்லூரி தாக்கப்பட்டது. நகர்மன்ற அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. ஆவணங்கள் எரிந்தன. அஞ்சல் அலுவலகம் தீக்கிரையானது. தந்திக் கம்பிகள் அறுபட்டன. நகர்மன்றத்தின் எண்ணெய்க் கிடங்கு இரண்டு நாளுக்கு நின்று எரிந்தது. காவல் நிலையமும் தப்பவில்லை. பிணைக் கைதிகள் மூவர் விடுவிக்கப்பட்டனர். போலீஸ் சுட்டதில் நால்வர் இறந்தனர்.
தூத்துக்குடியிலும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. கோரல் ஆலைத் தொழிலாளர் மட்டுமல்லாமல், பெஸ்ட் அன் கோ பணியாளர், நகர்மன்றத் துப்புரவு ஊழியர், கசாப்புக் கடைக்காரர், ஜட்கா ஓட்டுநர், சவரத் தொழிலாளர் என அனைவரும் வேலைநிறுத்தம் செய்தனர். 144 செயலில் இருந்த பொழுதும் அன்று பிற்பகல் வண்டிப்பேட்டையில் ஒரு மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நிகழ்ந்தது. கூட்டம் கலைய மறுத்தபொழுது கூட்டத்தைத் தாக்குமாறு குதிரைப் படையினருக்கு ஆணையிட்டார் ஆஷ்.
"ஆசு படையுடன் அணுகி அவரை
மோசம் செய்திட மூட்டிக் கலகம்
தடியால் அடிப்பித்தான் சார்ந்தநம் மவரை;
வெடியால் சுட்டான் வெளிவர விடாது.
ஆசுவின் குதிரையை அடித்தவர் தள்ளினார்.
நாசமென் னுயிர்க்கென நவின்றவன் ஓடினான்!"
என்கிறது வ.உ.சி. சுயசரிதை.
ஆஷைக் கூட்டம் தாக்கியபோது, சுடும் ஆணை வழங்கியதால் சிலர் குண்டடிபட்டனர் என்கிறது திருநெல்வேலி கெசட்டியர். யாரும் இறந்ததாகத் தெரியவில்லை. கைதான முப்பத்தாறு ‘கலகக்காரர்க’ளில் நால்வர் மட்டுமே தண்டனையிலிருந்து தப்பினர்.
- இன்னும் வரும்
ஆஷ்- வாஞ்சி பகுதி - 3
திருநெல்வேலி எழுச்சி நாடு தழுவிய தலைப்புச் செய்தியாயிற்று. மாவட்ட கலெக்டர் விஞ்சு, இணை மாஜிஸ்திரேட் ஆஷ் பெயர்கள் இச்செய்திகளில் இடம்பெற்றன. கடும் கண்டனத்துக்கும் உள்ளாயின.
எழுச்சி ஒடுக்கப்பட்டதும் அதில் கலந்துகொண்டவர்களை விசாரித்துத் தண்டிக்கும் படலம் தொடங்கியது. வ.உ.சி. மற்றும் தோழர்கள்மீது குற்றப் பத்திரிகை தாக்கலானது. வ.உ.சிக்கு ஆதரவான ஆறு வக்கீல்கள்மீது நன்னடத்தை ஜாமீன் கேட்டார்கள்.
‘நடக்கையென்பதே நண்ணிடா’ என்று கர்ஜனை செய்தது வ உ சிங்கம்.
எழுச்சியில் பெருமளவு ஈடுபட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி நகர மக்களை ஒட்டு மொத்தமாகத் தண்டிப்பதற்காகத் தண்டக் காவல்படை அமர்த்தப்பட்டு வரியும் விதிக்கப் பட்டது. (எவ்வளவு கொடுமை பாருங்கள்)
எழுச்சி ஒடுக்கப்பட்டு , சுதேசிகள் நிலைகுலைந்திருந்த சூழலில், அலுவலக நேரம் முடிந்த பிறகு சுதேசிக் கப்பல் கம்பெனியின் அலுவலகத்தில் நுழைந்த ஆஷ், கம்பெனியின் பங்குதாரர் பதிவேட்டைக் காட்டுமாறு அங்கிருந்த கடைநிலை ஊழியரை மிரட்டியதாக வந்த ‘இந்து’ நாளிதழ்ச் செய்தி வெளியிட்டதாக தெரிகிறது!
தூத்துக்குடி, 23 மார்ச் 1908
பெறல்
ஆர். ஆஷ் அவர்கள்
அன்பார்ந்த ஐயா,
சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி லிட் பணித்தபடி அதன் கௌரவ சட்ட ஆலோசகராக இதை எழுதுகிறேன்.
சென்ற சனிக்கிழமை (21ஆம் தேதி) பின்மாலை டாக்டர் வான்லாங்கென்பெரியுடன் (சுதேசிக்) கம்பெனியின் அலுவலகத்திற்குத் தாங்கள் சென்று, கம்பெனிச் சட்டப்படி ஒரு ரூபாய்க் கட்டணத்தைக் கொடுத்துப் பங்குதாரர் பதிவேட்டைக் காட்டு மாறும், அவ்வாறு காட்டாவிட்டால் அபராதம் விதிக்கப்படுமென்றும் கம்பெனி ஊழியரிடம் தாங்கள் கூறியதாக நிர்வாக இயக்குநர்கள் அறிய வருகிறார்கள். தங்கள் நோக்கம் அலுவல்பூர்வமானதா அல்லவா என்பது தெரியவில்லை. இன்றைய சூழ்நிலையில் கம்பெனி ஊழியர்களுக்கு இந்த நிகழ்ச்சி அச்சமளிக்கின்றது. பதிவேட்டைப் பார்வையிட வேண்டுமென்று எழுதித்தெரிவித்திருந்தால் அலுவலக நேரத்தில் எந்தச் சமயத்திலும் மகிழ்ச்சியுடன் கம்பெனி அதிகாரிகள் தங்களை வரவேற்றிருப்பார்கள். சென்ற சனிக்கிழமையன்று, பதிவேட்டுக்குப் பொறுப்பான குமாஸ்தா அலுவலக நேரம் முடிந்துவிட்டதால் தங்கள் வருகைக்கு முன்னரே சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குதாரர்களும் பங்குதாரர்களல்லாதவர்களும் அலுவலக நேரத்தில் பதிவேட்டைப் பார்வையிடுவதற்குக் கம்பெனி எப்போதும் தயாராக உள்ளது.
தங்கள் உண்மையுள்ள,
கே.ஆர். குருசாமி அய்யர்,
வக்கீல்.
எனவே பொதுப்புத்தியில் சுதேசிக் கப்பல் கம்பெனியின் வீழ்ச்சி ஆஷின் பெயரோடு இணைந்திருந்ததில் எந்த வியப்புமில்லை.
இந்தச் சமயத்தில் கலெக்டர் விஞ்சு ஆஷுக்கு எழுதிய இரண்டு கடிதங்கள் இருவருமே சுதேசி இயக்கத்தையும் வ.உ.சி.யின் கப்பல் கம்பெனியையும் முறிப்பதில் வெள்ளை அதிகாரிகள் என்ற கடமையையும் மீறிக் காட்டிய தனிப்பட்ட வெறுப்பும் விரைவும் புலப்படுகின்றன.
அந்த கடிதங்கள் அடுத்த பதிவில் வரும்.
ஆஷ்- வாஞ்சி பகுதி - 4
விஞ்சு, ஆஷுக்கு எழுதிய அந்த கடிதங்கள் இவைதான்.
திருநெல்வேலி, 19 மார்ச் 1908
அன்பார்ந்த ஆஷ்,
இப்பொழுதுதான் அட்கின்சனுக்கு (தலைமைச் செயலர்) எழுதி, நமது மூன்று நண்பர்களின் மீதும் (வ.உ.சி., சிவா, பத்மநாப அய்யங்கார்) இராஜ துரோக நடவடிக்கை எடுக்க அரசாங்க அனுமதி பெற்று அவர்கள் மூவரும் சிறையில் வசதியாக இருக்க வழிசெய்யும்வரையில் கோதாவரி மாவட்டத்தின் கலெக்டராக நீங்கள் அரசிதழில் அறிவிக்கப்பட்டாலும் காட்டன் தம் விடுப்பைத் தள்ளிப்போட முடியுமானால் உங்கள் இடமாற்றத்தை எதிர்க்க எனக்கு எந்தக் காரணமுமில்லை என்று தெரிவித்திருக்கிறேன் . . .
தங்களை என் தனிச்செயலாளராக அமர்த்திக்கொள்ள முடியவில்லை என்பதில் எனக்கு வருத்தம்தான். நம்மிருவருக்கும் கடுமையான வேலைதான். எனக்கு நீங்கள் மிகச் சிறப்பாகத் துணைநின்றதற்கு நான் என்றுமே நன்றி பாராட்டுவேன் . . .
என்றும் உங்கள்,
எல்.எம். விஞ்சு
*
சென்னை, (நாளிடப்படாத கடிதம்; டிசம்பர் 1908 தொடக்கமாயிருக்கலாம்)
அன்பார்ந்த ஆஷ்,
நீங்கள் சாத்தூர் செல்லும் வழியில் இன்னொரு முறை உங்களைச் சந்திக்க வாய்ப்பில்லாமல் போனதற்கு மிக வருந்துகிறேன். நீங்கள் சாத்தூருக்கு மாற்றப்படவுள்ளீர்கள் என்று மேதகு ஆளுநர் தம் மாவட்ட வருகையை முடித்துவிட்டுச் செல்வதற்கு முந்திய நாள் என்னிடம் கூறினார். இது இவ்வளவு விரைவில் நடந்திருக்குமெனத் தெரிந்திருந்தால் முன்பே தந்தி அனுப்பியிருப்பேன். ஆளுநரின் மாவட்ட வருகை நன்றாக நடந்தேறியது . . . நான் விடைபெற்றபோதே (மாவட்டத்தின்) கௌரவமான பிரமுகர்களோடு சுமுகமான உறவுகள் மீட்கப்பட்டுவிட்டன. தண்டக் காவல் வரியான ரூ. 60,000த்தில் ரூ. 40,000 திருநெல்வேலி மக்களால் செலுத்தப்பட்டுவிட்டது. தூத்துக்குடியில் இப்பொழுதுதான் வசூல் தொடங்கியுள்ளது.
சுதேசிகளின் வளங்கள் முடியும் தறுவாயில் உள்ளது என்று அறிகிறேன். அவர்களுடைய நீராவிக் கப்பல் கொழும்பில் ஜப்தி செய்யப்பட்டுள்ளதென்றும் அறிகிறேன். கம்பெனி திவாலாகும் நாள் அதிகத் தொலைவில் இல்லை . . .