• வெள்ளாளர்கள் அடிப்படையில் கங்கா குலத்தவர்கள். சூரிய குலத்தில் இருந்து கிளைத்தவர்கள். இந்த சூரிய குலத்தில் உதித்தவர் தான் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி
• ஸ்ரீ ராமருக்கு முடி சூட்டும்போது கிரீடம் எடுத்துத் தரும் உரிமையை வெள்ளாளர்கள் பெற்றிருந்தனர் என்பதை கம்பர் தன் ராமாயணத்தில் உணர்த்துகிறார்.
“அரியணை அனுமன் தாங்க அங்கதான் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க, இருவர் கவரி வீச
குறிசெரி குழலி வெண்ணெய்நல்லூர் சடையன் தன் மரபுலோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி “
• கொங்கர்களை கோசர் (கோசல தேச பின்னணி) என்றும் கங்கர் (கங்கா குலத்தவர்) என்றும் இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
• கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் செப்பேடு பட்டயங்கள் கல்வெட்டுகள் பல ""ஸ்ரீராமஜெயம்" என்ற வரியுடன் துவங்குகிறது.
• ராமாயண காலத்தில் கொங்கதேசத்தில் பல கோயில்களும் சுனைகளும் தோன்றின. ராசிபுரம் ஸ்ரீஅழியாஇலங்கையம்மன் கோயில் (ஆயா கோயில்), பொள்ளாச்சி ஸ்ரீ மாசாணியம்மன் கோயில் போன்றவை இவ்வாறானதே. ஜடாயு முக்தி கொங்கம்-ஆந்திர எல்லையில் நிகழ்ந்தது.
• ராமாயணத்தை தமிழுக்கு முதன்முதலில் மொழிபெயர்த்தவர் கம்பர். பாடுவித்தவர் வெண்ணெய்நல்லூர் சடையப்ப கவுண்டர். ராமாயணம் தமிழுக்கு வந்த பின்னரே வெள்ளாள ராசாக்களாகிய சோழர்கள் அதை தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுக்க பரப்பினர். இன்றும் ராமாயணம் கம்போடியா, தாய்லாந்து, பர்மா, மலேசியா, பிலிப்பின்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இன்றும் ராமாயணம் உள்ளது.
• மோரூர் கன்ன கூட்ட நல்லதம்பிக் காங்கேயன் பத்தர்பாடி எம்பெருமான் கவிராயரைக் கொண்டு “தக்கை ராமாயணம்” என்னும் இசைக் காவியத்தை படைத்தார். மிகவும் புகழ் பெற்ற ராமாயண காவியம் இது. கம்ப ராமாயணத்தை பல மடங்கு சுருக்கியும் அதன் சுவையை பல மடங்கு பெருக்கியும் கொடுத்தது. தக்கை என்னும் இசைக் கருவியை கொண்டு பாடப்படுவதாகும். சங்ககிரி வரதராஜா பெருமாள் கோயிலில் அரங்கேற்றப் பட்டது.
• ராமாயணம் நம் முன்னோர்களால் போற்றிப் பரப்பப்பட்ட காவியமாகும். ஒவ்வொரு ஊரிலும் அக்காலத்தில் இருந்த திண்ணைப் பள்ளியில் குழந்தைகளுக்கு வாழ்க்கை ஒழுக்கங்கள் ராமாயணம் மூலம் பால பாடமாக போதிக்கப்பட்டது.
• பொள்ளாச்சி ஆனைமலை கோபாலசாமி மலை மேல் தாடகநாச்சியம்மன் கோயில் என்ற சிறு கோயில் உண்டு. மலைஜாதி மக்கள் வம்ச பரம்பரையாக வழிபாட்டு வருகிறார்கள். அது ராமரால் கொல்லப்பட்ட தாடகை சாபவிமோச்சனமடைந்து தெய்வமாக அருளும் கோயில் என்று கூறுகிறார்கள்!
• கூனவேலாம்பட்டி ஆயா கோயில் (அழியாஇலங்கையம்மன்) செம்பூத்த கூட்ட கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் குலதெய்வமாக வழிபடுகிறார்கள். ராசிபுரம் விழியன் கூட்டத்தார் உட்பட பிற கூட்டங்களும் குடிகளும் இஷ்ட தெய்வமாக வழிபடுகிறார்கள். அந்த அம்மனின் கதை, ராவணனின் வேண்டுகோளுக்கிணங்க அன்னை பார்வதி இலங்கையை காவல் காத்து வந்த போது அனுமன் தூது வந்து உள்ளே நுழைகையில் அங்கிருந்து படிவ ரூபத்தில் இருந்த அம்மனை பிடுங்கி பாரதத்தை நோக்கி வீச, அம்மன் கூனவேலம்பட்டியில் விழுந்து இங்கே நிலைகொண்டதாக சொல்வர்.
• கொங்கதேச மன்னர்கள் ராமரைப் போலவே ராமராஜ்ய ஆட்சி செய்யவே முற்பட்டதை வரலாறுகள் மூலம் அறிய முடிகிறது. ஒழுக்கம் தவறி அதர்மம் அக்கிரமம் செய்த பட்டக்காரர்கள் இருப்பினும் அவர்கள் சேர மன்னர்களால் மட்டுமின்றி குடிகளாலேயே தண்டிக்கப்பட்டும், பதவி நீக்கம் செய்யப்பட்டு முறையான நல்ல தலைவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகி நல்லாட்சியைக் கொடுத்துள்ளார்கள. அதாவது, சொன்னசொல் தவறாமை, மூத்தோரை மதித்தல், பெற்றோர் சொல் தட்டாமை, குலகுருவை மதித்துப் போற்றல், குடிமக்களின் நலனுக்காக எதையும் தியாகம் செய்ய துணிதல், மனுதர்மம் தவறாமை, சகோதரர்கள் ஒற்றுமை, சொத்து நாடு என எதையும் விட தர்மமே தலை என்று எண்ணுகிற மாண்பு, கணவன் மனைவி உறவின் புனிதம், அன்பே மையமான மனித உறவுகள், அதிகாரத்தின் மூலம் மக்களை கட்டுப் படுத்தாமல் அன்பு தர்மம் மூலம் மக்களே நல்வழியில் நடக்க வைக்கும் ஆட்சி முறை போன்றவை ராமராஜ்யத்துக்கும் கொங்கதேசத்து மன்னர்களின் ராஜ்யத்துக்கும் இருந்த ஒற்றுமைகளாகும்.
• ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அவதாரம் முடித்து வைகுண்டம் திரும்பும்போது ஸ்ரீராமரை பிரிய முடியாத அவரது குடிமக்களும் அன்பர்களும் ஸ்ரீராமரோடு சேர்ந்து நதியில் இறங்கி வைகுண்டமடைவார்கள். அதே போல பல சம்பவங்கள் கொங்கதேச வரலாற்றில் நடந்துள்ளன. உதாரணமாக தலைய நாடு கன்னிவாடி கன்ன கூட்ட முத்துசாமி கவுண்டர் மறைந்தபோது அவரது குடிபடைகளாக வாழ்ந்த ஆண்டி, நாவிதர், பறையர் போன்றோர் எங்கள் கவுண்டரே மறைந்துவிட்டார் நாங்கள் மட்டும் ஏன் உயிரோடு இருக்கோணும் என்று அவர் சவத்தோடு சேர்ந்து தீயில் இறங்கி உயிர் விட்டனர். அந்த கோயில் இன்றளவும் ஏழுபடைக்கலக்காரி கோயில் என்று விளங்கி வருகிறது. இன்றும் நம் காணியாச்சி கோயில்கள் செல்லும்போது ஏதோ புராதன ராமராஜ்யத்துக்குள் நம் முன்னோர்களின் அரசாட்சிக்குள் செல்லும் உணர்வு ஏற்படுவது இயல்பு.
• கொங்கதேசத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு காணியிலும் பெருமாள் கோயில் உண்டு. இரண்டாம் நூற்றாண்டு பெருமாள் கோயில் கூட உண்டு. ரங்கநாதர் மற்றும் நரசிம்மர் தான் அதிகம் வழிபடப்பட்டிருந்தனர். ராமர் பல கோயில்களில் தனி சன்னதியில் உள்ளார். அக்காலத்திலேயே ராமருக்கு தனியே கோயில்களும் பட்டணங்களில் உண்டு. உதாரணம்:கோதண்ட ராமசாமி கோயில் ஈரோடு.
• மிகத் தொன்மையான ஆஞ்சநேயர் சிலைகள் கொங்கதேச பெருமாள் கோயில் பலவற்றில் உண்டு. சிருங்கேரி சாமியார்கள் துலுக்கர் படையெடுப்பில் இருந்து கோயில்களைக் காக்க புடைப்பு சிற்பங்களாக ஆஞ்சநேயர் சிலைகளை அதர்வண வேதப் பிரயோகம் செய்து பிரதிஷ்டை செய்திருந்தனர். சிறந்த உதாரணங்கள்: ஈரோடு ஆஞ்சநேயர், தாராபுரம் காடு அனுமந்தராயர், திருச்செங்கோடு ஆஞ்சநேயர் (கேட்பாரற்று கிடக்கிறது) போன்றவை.