New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இசை ஹராம் என தெளிவான ஆதாரம் இருக்கும் போது சமகால இஸ்லாமிய சிந்தனையாளர்கள் எந்த அடிப்படையில் அ


Guru

Status: Offline
Posts: 24625
Date:
இசை ஹராம் என தெளிவான ஆதாரம் இருக்கும் போது சமகால இஸ்லாமிய சிந்தனையாளர்கள் எந்த அடிப்படையில் அ
Permalink  
 


இசை ஹராம் என தெளிவான ஆதாரம் இருக்கும் போது சமகால இஸ்லாமிய சிந்தனையாளர்கள் எந்த அடிப்படையில் அதனை ஹலால் என்கின்றார்கள்?.

இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு மூன்று காரணங்கள்:

  1. நான் ஏற்கனவே இஸ்லாத்தின் பார்வையில் இசை, பாட்டு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதற்கு சகோதரர் அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி அவர்கள் அதிலிருந்த சில தவறுகளைச் சுட்டிக் காட்டி, ஒரு மறுப்பு சொல்லியிருந்தார்கள்.எனவே அதற்கு பதில் சொல்லும் கடமை இருப்பதனால் இந்த கட்டுரையை எழுதுகின்றேன்.சகோதர் அப்துல்லாஹ் அவர்களுக்கு எனது ஆழ்ந்த நன்றிகள். அறிவுபூர்வமான கலந்துரையாடல்கள், விமர்சனங்களைத்தான் இன்று தஃவா களம் வேண்டி நிற்கின்றது. அந்த வகையில் அவர் எனது ஆக்கங்களுக்கான விமர்சனங்களை முன்வைப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது. அல்லாஹ் அவரின் அறிவை விசாலப்படுத்தி, அவர் மூலம் இந்த மார்க்கமும், சமூகமும் பயன்பெற வேண்டும் என அல்லாஹ்வைப் பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
  2. நவீன இஸ்லாமிய சிந்தனையாளர்கள் குற்றம் பிடிக்கப்படுகின்ற இடங்களில் இதுவும் ஒன்று. அதாவது அவர்கள் அல்லாஹ் ஹராமாக்கிய ஒன்றை ஹலாலாக்குகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு. எனவே அதனைக் களைவதற்கான ஒரு முயற்ச்சியாகவும் இதனை எழுதுகின்றேன்.
  3. இன்று கலை, இலக்கியம் என்பது பொழுதுபோக்கு அம்சம் என்பதையும் தாண்டி முஸ்லிம்களின் இருப்பை தீர்மானிக்கின்ற ஒரு அம்சமாக மாறியுள்ளது என்பது மறுப்பதற்கில்லை. எனவே உலகளாவிய முஸ்லிம்களும் குறிப்பாக இலங்கை முஸ்லிம்களும் கலையை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். கலை பற்றிய இஸ்லாத்தின் பார்வை இன்று முஸ்லிம் சமூகத்தில் சிதைவுக்குற்படுத்தப்பட்டிறுக்கின்றது என்பது மறுப்பதற்கில்லை. எனவே அது குறித்த தெளிவான ஒரு பார்வைக்கு முஸ்லிம் சமூகம் வரவேண்டியுள்ளது. அத்தெளிவை அடைந்துகொள்வதற்காகவும் இக்கட்டுரையை எழுதுகின்றேன்.

அடுத்ததாக ஏன் இவர்கள் இசையை ஹலால் ஆக்க இவ்வளவு முயற்சிக்கின்றார்கள்? என்ற கேள்வியும் மக்களிடம் எழுவதுண்டு. இக்கேள்வியுடன் கூடவே இவர்கள் மேற்கைத் திருப்திப்படுத்துவதற்காகத்தானா இவ்வளவு முயற்ச்சியும் செய்கின்றார்கள் என்ற சந்தேகமும், குற்றச்சாட்டும் எழுவதுண்டு. மேற்கை திருப்திபடுத்த வேண்டும் என்ற எந்த ஒரு தேவையும் நமக்கில்லை.

உண்மையில் நான் ஏன் இசை, பாட்டு ஹலால் என்ற கருத்தை உள்வாங்கிக் கொண்டேன் எனில் அது ஹராம் என்று சொல்லி முன்வைக்கப்பட்ட ஆதாரங்களில் போதிய திருப்தி எனக்கு இல்லாமையும், ஹலால் என்று சொல்வதற்கு முன்வைக்கப்படும் ஆதாரங்கள் பலமாக காணப்படுவதும். இது முதலாவது காரணம்.

அடுத்து இசை, பாட்டு என்பவற்றை ஹறாமாக்குவதன் மூலம் இன்றைய உலகை இந்த ஜாஹிலிய்யத்திலிருந்து பாதுகாக்க முடியாது. மாறாக சிறந்த மாற்றீடுகள் வழங்குவதன் மூலம்தான் அதனை செய்யலாம் என்ற எனது நம்பிக்கை.

இறுதியாக இசையை ஹலாலாக்குவதன் மூலம் மோசமான சினிமா பாடல்களை கேட்பதற்கு அனுமதிவழங்குகின்றேன் என்ற கருத்தல்ல. ஆபாசமும், விரசமும், ஷிர்க்கும், மோசமான விடயங்களும் காணப்படும் இன்றைய அதிகமான பாடல்கள் ஹறாம் என்ற கருத்தில்தான் நான் இருக்கின்றேன். அது கூடாது என்றுதான் மக்களுக்கும் கூறுகின்றேன்.

ஆனால் எல்லா வகையான இசையையும், பாட்டையும் மொத்தமாக ஹறாமாக்குவதன் மூலம் இதிலிருந்து சமூகத்தை பாதுகாக்க முடியாது. மாற்றமாக சிறந்த மாற்றீடுகள் வழங்குவதன் மூலமே சமூகத்தை பாதுகாக்க முடியும் என்று கருதுகின்றேன். முஸ்லிம்களிடம் சிறந்த மாற்றீடு உருவாக வேண்டும் என்பதற்காகத்தான் அவற்றை ஆகுமாக்குகின்றேன். மாறாக சினிமாப் பாடல்களை கேட்க வைப்பதற்காக அல்ல.

இசைய இரசிப்பதும், பாடுவதும் மனித இயல்பில் காணப்படும் விடயங்கள். அந்த இயல்பை நடைமுறைப்படுத்த ஆகுமான வழிமுறைகள் காட்டிக் கொடுக்கப் படவேண்டும் இல்லை எனில் மனிதர்கள் அதனை ஹறாமான வழியில் நடைமுறைப் படுத்துவார்கள். இசை, பாட்டு ஹறாம் என சொல்லிக் கொண்டு சினிமாப் பாடல்களை ரசிக்கின்ற எத்தனையோ மனிதர்களை நான் பார்த்திருக்கின்றேன்.

 
 
Music
 

இந்த முன்னுரையுடன் நாம் விடயத்திற்கு வருவோம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
RE: இசை ஹராம் என தெளிவான ஆதாரம் இருக்கும் போது சமகால இஸ்லாமிய சிந்தனையாளர்கள் எந்த அடிப்படையில்
Permalink  
 


இசை ஹராம் என்பதை புகாரியில் வரும் பின்வரும் ஹதீஸ் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது. [இந்த ஹதீஸ் ஆதார பூர்வமற்றது என்ற கருத்தும் அறிஞர்களினால் கூறப்பட்டிருந்தாலும், இது ஆதாரபூர்வமான ஹதீஸ் என்ற அறிஞர்களின் கருத்தைத்தான் நான் எடுத்துருக்கின்றேன்.]

அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்கி அல்அஷ்அரீ(ரஹ்) கூறினார்

‘அபூ ஆமிர் (ரலி)’ அல்லது ‘அபூ மாலிக் அல்அஷ்அரீ (ரலி)’ என்னிடம் கூறினார்கள் நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்:

என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள்.

(ஸஹீஹுல் புகாரி: 5590. , அத்தியாயம்: 74. குடிபானங்கள்)

எனினும் சமகால இஸ்லாமிய சிந்தனையாளர்கள் இசை கூடும் என்று சொல்கின்றார்கள்.இவர்களுடைய இந்த பத்வாவை இவரைப் போன்றவர்கள் {கட்டுரையாளர்] எப்படி எந்தவித மறுப்பிமின்றி ஏற்றுக் கொள்கின்றார்கள். நபி ஸல் அவர்களைவிடவும் இவர்களுக்கு இவர்களின் அறிஞர்கள்தான் பெரிதா? எப்படி இவ்வளவு தெளிவாக ஹதீஸ் இருக்கும் போது இவ்வளவு தைரியமாக ஹராமான ஒன்றை ஹலாலாக்குகின்றார்கள் என்ற கேள்வி பொதுவாக ஆலிம்களிடம், பொதுமக்களிடம் காணப்படுகின்றது.

இந்த நியாயமான கேள்விக்கு என்ன பதில்?. என்னைப் பொருத்தவரை சமகால இஸ்லாமிய அறிஞர்கள் மார்க்கத்திற்கு உண்மையாகவே இருக்கின்றார்கள். தங்களின் உலக நலன்களுக்காக மார்க்கத்தை விற்பவர்களாக அவர்கள் இல்லை என்பது நூறுவீதம் உறுதி. அதே நேரம் அல்லாஹ் ஹராமாக்கிய ஒன்றை மனோ இச்சைப் பிரகாரம் ஹலாலாக்கும் தைரியம் அவர்களுக்கு இல்லை. அதே போல ஹலாலாக்கிய ஒன்றை ஹராமாக்கும் தைரியமும் இல்லை. எனவே அவர்கள் இசை ஹராமில்லை ஹலால் என்ற முடிவுக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு நியாயமான காரணம் இருக்க வேண்டும். அக்காரணம் என்ன என்று இப்போது பார்ப்போம்.

 

இந்த ஹதீஸில் நான்கு விடயங்கள் குறிப்பிடப் படுகின்றது.

 
  1. விபச்சாரம்
  2. பட்டு
  3. மது
  4. இசை.

விபச்சாரத்தைப் பொறுத்தவரை அது மிகவும் தெளிவான ஹராம். இஸ்லாத்தில் முழுமையாக அது தடை செய்யப்பட்டுள்ளதே தவிர அதற்கு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அனுமதி அளித்ததாக காணமுடியாது.

அதே போல பட்டு. இதுவும் ஆண்களுக்கு ஹராமாக்கப் பட்ட ஒன்று. இதனை நிர்பந்தமான சூழலில் அணிவதற்கு நபி ஸல் அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள். குரானும் இதனை தெளிவு படுத்துகின்றது.

إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنزِيرِ وَمَا أُهِلَّ بِهِ لِغَيْرِ اللَّـهِ ۖ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَلَا إِثْمَ عَلَيْهِ ۚ إِنَّ اللَّـهَ غَفُورٌ رَّحِيمٌ 

(١٧٣)

தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கிருக்கிறான்;. ஆனால் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை.ஆனால் நிர்ப்பந்தத்தில் உண்ணும்போது விருப்பத்துடனும், தேவைக்கதிகமாகவும் உண்ணக் கூடாது. நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்.

(பகரா : 173)

இந்த ஆயத்தில் கூறப்பட்டுள்ள படி ஒருவர் நிர்ப்பந்திக்கப்பட்டால் மாத்திரமே ஹராமான ஒரு விடயத்தைச் செய்ய முடியும். அதுவும் விருப்பமின்றி செய்ய வேண்டும், தேவைக்கதிகமாக செய்யவும் கூடாது.

மதுபானமும் அது போல்தான். நிர்ப்பந்தமான ஒரு சந்தர்ப்பத்தைத் தவிர வேறு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் குடிக்க முடியாது. அப்படி குடிப்பதாக இருந்தால் வெறுப்புடனும், தேவையான அளவு மட்டுமே குடிக்க வேண்டும்.

எனவே இங்கு சொல்லப்பட்ட விபச்சாரம், பட்டு, மதுபானம் ஆகியவற்றை நபி ஸல் அங்கிகரித்ததாக, அச்செயல் நடை பெறும் போது தடுக்காமல் இருந்ததாக, தடுக்க முனைந்த ஒரு மனிதரை தடுக்க வேண்டாம் எனச் சொன்னதாக எங்கும் காண முடியாது. மாற்றமாக இவ்விடயத்தில் இஸ்லாமிய சட்டம் மிகக் கடுமையாகவே உள்ளது.

ஆனால் இசை விடயத்தில், பாட்டு விடயத்தில் இந்தக் கடுமையை காண முடியவில்லை. மாற்றமாக நபி ஸல் அங்கீகரித்த, ஊக்குவித்த, தடுக்க வந்த அபூபக்கர் ரழி அவர்களை தடுக்க வேண்டாம் என்று சொன்ன அறிவிப்புகள்தான் காணப்படுகின்றது.

ஆயிஷா(ரலி) அறிவித்தார். புஆஸ்(எனும் பழமையான போர்) பற்றி அன்ஸார்கள் புனைந்துள்ளவற்றை அன்ஸாரிகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் என்முன்னே பாடிக் கொண்டிருந்தபோது அபூ பக்ர்(ரலி) வந்தார்கள். அவ்விரு சிறுமியரும் பாடகிகள் அல்லர். ‘அல்லாஹ்வின் தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா?’ என்று அபூ பக்ர்(ரலி) கேட்டார்கள். இது நடந்தது ஒரு பெருநாளின் போதாகும். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அபூ பக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நம்முடைய பெருநாளாகும்” என்று கூறினார்கள் [முஸ்லிம் 892]

இங்கு தப் எனப்படும் ரபானும் இசைக்கருவியாகத்தான் கருதப்பட்டுள்ளது. அதனை அபூபக்கர் ரழி சைத்தானின் இசைக்கருவிகள் என்று குறிப்பிடுகின்றார்கள். எனவே சிலர் சொல்வது போல ரபான் இசைக்கருவி எனும் வட்டத்திற்குள் அடங்காது என்ற கருத்துத் தவறு. எனவே இங்கு பாட்டு மட்டும் பாடப் படவில்லை. மாற்றமாக பாட்டுடன் இசையும் சேர்த்தே இசைக்கப்பட்டுள்ளது.

ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்: என் அருகே இரண்டு சிறுமியர் “ தஃப்” எனும் *கொட்டு அடித்துக் கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள் தம் ஆடையால் போர்த்திக் கொண்டிருந்தனர். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து அவ்விருவரையும் விரட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் தம் முகத்தைவிட்டும் ஆடையை விலக்கி அபூ பக்ரே! அவ்விருவரையும்விட்டு விடுவீராக! ஏனெனில் இவை பெருநாள்களாகும்” என்று கூறினார்கள். அந்த நாள்கள் மினாவின் நாட்களாக அமைந்திருந்தன.

*(புகாரி 987)

அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் தனக்கு நெருங்கிய ஒருப் பெண்ணை அன்சாரித் தோழர்களில் ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். (அப்பொது) நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் ஆயிஷாவிடம், ‘திருமணம் நடத்துகிறாய். கேளிக்கை ஏதும் இல்லையா? அன்சாரிகளுக்கு கேளிக்கைப் பார்ப்பது மிகவும் விருப்பமானதாச்சே!’ என வினவினார்கள்.

அறிவிப்பாளர்: உர்வா (ரலியல்லாஹு அன்ஹு)

நூல்: ஸஹிஹுல் புகாரி.

இந்த ஹதீஸ்கள் அனைத்தும் பாட்டையும், இசையையும் அனுமதிக்கின்றன என்பது தெளிவு. இதனால்தான் விபச்சாரம், பட்டு, மதுபானம் ஆகியவற்றில் எடுத்த கராரன, உறுதியான ஹராம் என்ற முடிவை எம்மால் இசை, பாட்டு விடயத்தில் எடுக்க முடியவில்லை. உண்மையில் இங்கு பலர் நினைப்பது போன்று தெளிவாக இசை ஹராம் என்று வந்திருக்கும் ஹதீஸை புறக்கணிக்கவோ, அல்லது ஏற்றுக்கொள்ள மறுக்கவோ இல்லை. மாற்றமாக இந்த முரண்பாட்டை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதில் ஏற்பட்ட வித்தியாசமான பார்வைதான் இந்த முடிவை பெற்றுக்கொள்வதற்கான காரணம்.

சிலர் இந்த சிக்கலை இலகுவாக தீர்ப்பதற்கு சில முடிவுகளை சொல்வார்கள். அதாவது இங்கு நபி [ஸல்] அவர்கள் பாடுவதைத்தான் அனுமதித்துள்ளார்கள் இசையை அல்ல என்று. ஆனால் மேலே உள்ள ஹதீஸ்களைப் பார்க்கும் போது அங்கு இசையையும் சேர்த்துத்தான் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவு. தப் எனப்படும் ரபானும் இசைக்கருவியாகத்தான் கருதப்பட்டுள்ளது. அதனை அபூபக்கர் ரழி சைத்தானின் இசைக்கருவிகள் என்று குறிப்பிடுகின்றார்கள்.. எனவே இங்கு பாட்டு மட்டும் பாடப் படவில்லை. மாற்றமாக பாட்டுடன் இசையும் சேர்த்தே இசைக்கப்பட்டுள்ளது.

எனவே அவ்வாதம் செல்லுபடியற்றதாக மாறுகின்றது. பாட்டுடன் இசையும் இசைக்கப்பட்டது என்பதை மேற்சொன்ன ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.

அடுத்து நபி [ஸல்] அவர்களின் காலத்தில் பயன் படுத்திய இசைக் கருவிகளை மட்டும் பாவிக்கலாம். ஏனையவற்றைப் பாவிக்க முடியாது என்று இன்னும் சிலர் குறிப்பிடுவார்கள். அதாவது தப்பை(ரபான்) மட்டும்தான் பாவிக்கலாம் ஏனையவற்றைப் பாவிக்கக் கூடாது என்று.இதுவும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தல்ல. ஏனெனில் நபி ஸல் அவர்கள் காலத்தில் பாவித்த ஒன்றைத் தவிர மற்றவற்றை ஏனைய காலங்களில் பாவிக்கக் கூடாது என்று சொல்வதாக இருந்தால் அதற்கு தெளிவான ஆதாரம் காண்பிக்க வேண்டும். ‘தப்’ உம் இசைக்கருவிகளில் ஒன்றாகவே கருதப்படும். எனவே நபி ஸல் அவர்கள் அதனை அனுமத்துள்ளார்கள் எனில் அது தவிர்ந்த ஏனையவற்றை பயன்படுத்தக் கூடாது எனச் சொன்னால் அதற்கு தெளிவான ஒரு ஆதாரம் காண்பிக்கவேண்டும். ஆனால் அப்படி ஒரு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை.

அடுத்து இன்னும் சிலர் இது பெரு நாள் தினத்திலும், திருமண நிகழ்வுகளின் போது மட்டும் அனுமதிக்கப் பட்ட ஒன்று, ஏனைய நாட்களில் கூடாது என்று சொல்வார்கள்.

இதுவும் பொருத்தமில்லாத கருத்து. ஏனெனில் அப்படி சொல்வதாக இருந்தால் அதற்கு வேறு தெளிவான ஆதாரம் காண்பிக்கவேண்டும். அதாவது நபி ஸல் அவர்கள் இவ்வனுமதி பெருநாட்களில், திருமண நாட்களில் மாத்திரமென்றோ அல்லது ஏனைய நாட்களில் கூடாதென்றோ குறிப்பிட்டுருக்க வேண்டும் ஆனால் அப்படி எந்த ஒரு ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே அந்தவாதமும் செல்லுபடியற்றதாக மாறுகின்றது.

அதே நேரம் இந்த முடிவுக்கு முன்னால் இன்னுமொரு கேள்வியும் தோன்றுகிறது. அதாவது திருமணம், பெருநாள் போன்ற தினங்களில் இசை, பாட்டு என்பவற்றில் ஈடுபட முடியும் எனில் ஹறாமான ஒன்றை அந்நாட்களில் செய்ய முடியுமா? என்பதுதான்.

மதுபானம் அருந்த முடியுமா? பட்டாடை அனிய முடியுமா? போன்ற கேள்விகள் தோன்றும். எனவே அது முடியாது என்பது தெளிவு. அப்படி எனில் இசையை, பாட்டை மட்டும் எப்படி இதன்போது அனுமதிக்கலாம் என்று ஒரு கேள்வி தோன்றும்.

எனவே நபி ஸல் அவர்களின் அந்த அனுமதியை பெருநாள் தினங்களில், திருமணவைபவங்களில் மட்டும் என சுருக்கி விளங்கிக் கொள்வது பொறுத்தமில்லை. அப்படி புரிந்துகொண்டால் நாம் மேலே சொன்ன கேள்வி இயல்பானது.

மாற்றமாக இதனை இவ்வாறு புரிந்துகொண்டால் இந்த சிக்கலை இலகுவாக நீக்கலாம். அதாவது சூரா லுக்மானின் 6ம் வசனத்தில் அல்லாஹ் பின்வருமாறு சொல்கிறான். “மனிதர்களில் சிலர் அறிவில்லாமல் அல்லாஹ்வின் பாதையைவிட்டும் மனிதர்களை வழிகெடுப்பதற்காக வீணான வார்த்தைகளை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர். மேலும் அல்லாஹ்வின் பாதையை இழிவாக எடுத்துக்கொள்கின்றனர்”.

அதாவது அல்லாஹ்வின் பாதையைவிட்டும் மனிதர்களை வழிகெடுப்பதற்காக அன்றைய காபிர்கள் மேற்கொண்டுவந்த செயலை இது சித்தரிக்கின்றது. குர்ஆனின் பக்கம் மனிதர்கள் சென்றுவிடாமல் இருப்பதற்காக, அவர்களைத் திசை திருப்புவதற்காக இதனை மேற்கொண்டனர்.

அதற்கான ஒரு சாதனமாக அன்றிருந்த பாட்டு, கவிதை போன்றவற்றை அவர்கள் பயன்படுத்திக்கொண்டனர். இதனை இந்த் ஆயத்திற்கு சஹாபாக்களால் வழங்கப்பட்ட விளக்கத்திலிருந்து புரிந்துகொள்ளலாம்.இவை மட்டுமல்ல குர்ஆனை விட்டும் மக்களை திசைதிருப்புவதற்காக அந்நிய நாட்டவர்களினதும், அவர்களின் மன்னர்களினதும், ரோம மன்னர்களினதும் கதைகளையும் மக்காவாசிகளுக்கு கூறிவந்தனர்.

எனவே இச்சதிவேலையிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய ஒரு பாரிய பொறுப்பு நபி ஸல் அவர்களுக்கு இருந்தது. எனவே அந்தவகையில் குர்ஆனின் இந்த ஆயத்தை கவனத்தில் கொண்டு இசையையும், பாட்டையும் நபி ஸல் அவர்கள் தடுத்தது ஆச்சரியத்திற்குரியதொன்றல்ல. ஏனெனில் அன்று பாட்டும், இசையும் குர் ஆனை விட்டும் மக்களை திசைதிருப்புவதற்கான காபிர்களின் முக்கியமான சாதனமாக இருந்தது. இந்தப் பின்னணியில்தான் இசையும், பாட்டும் தடுக்கப்பட்டதே தவிர பாட்டு என்பதற்காக, இசை என்பதற்காகத் தடுக்கப்படவில்லை. அதனால்தான் நபி ஸல் அவர்களின் ஆதார பூர்வமான ஹதீஸ்களில் நபி ஸல் அவர்கள் குர்ஆனைவிட்டும், மார்க்கத்தைவிட்டும் அவை மனிதர்களை வழிகெடுக்காத சந்தர்ப்பங்களில் அவற்றை அனுமதித்தார்கள் என்பதைக் காண்கின்றோம்.

அவ்வனுமதியிலும் வழிதவறிவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். அதனால்தான் ஒரு பெண் நாளை நடக்கவிருப்பதையும் அவர் அறிவார் எனப் பாடிய போது அவ்வாறு பாடவேண்டாம் எனத் தடுத்ததைப் பார்க்கின்றோம்.

எனவே நபி ஸல் அவர்கள் இசை, பாட்டு என்பவை அடிப்படையில் ஹறாம் என்பதற்காகத் தடை செய்யவில்லை. மாற்றமாக அதனை தீங்கிற்கு இட்டுச் செல்லும் சாதனமாகப் பயன்படுத்தும் போது தடுத்திருக்கின்றார்கள். அது இல்லாத போது அனுமதித்திருக்கின்றார்கள். எனவே யாரும் இந்த அனுமதியை விஷேட நிகழ்வுகளின்போது மதுபானம் அருந்துதல், பட்டாடை அனிதல் போன்ற அடிப்படையிலேயே ஹராமான விடயங்களில் ஈடுபடுவதற்கான ஆதாரமாகக் கொள்ளக்கூடாது. கொள்ளமுடியாது.

நாம் இவ்விடத்தில் மற்றொரு விடயத்தையும் புரிந்துகொள்ளவேண்டும். அதாவது

அடிப்படையிலேயே ஹராமான ஒன்று தேவைக்காக அனுமதிக்கப் படுவதில்லை. மாற்றமாக நிர்பந்தத்திற்காக மட்டும் சில நிபந்தனைகளோடு அனுமதிக்கப்படும்.

இஸ்லாமிய ஷரீஆவில் பின்வருமாறு ஒரு சட்ட விதி காணப்படுகின்றது.

إن ما حرم لذاته لا يباح إلا للضرورة، أما ما حرم لسد الذريعة فيباح للحاجة

அதாவது அடிப்படையில் ஹராமான ஒன்று நிர்ப்பந்தத்தின் போது மாத்திரமே அன்றி வேறு சந்தர்ப்பங்களில் அனுமதிக்கப்படமாட்டாது. தீங்குக்கு இட்டுச் செல்லும் எனும் நோக்கில் [சத்துஸ் ஸரீஆ] ஒரு விடயம் தடை செய்யப்பட்டிருந்தால் அது தேவையின் போது அனுமதிக்கப்படும். உதாரணமாக பெண்ணின் பாதுகாப்புக் கருதி மஹ்ரமுடந்தான் ஒரு பெண் பிரயாணம் செய்யவேண்டும் என்பது இஸ்லாமிய சட்டம். மஹ்ரமின்றி பிரயாணம் செய்தல் அடிப்படையில் ஹராமான ஒன்றல்ல. ஆனால் வர இருக்கும் தீங்கை தடுக்கும் நோக்கில் அது ஹராமாக்கப் படுகின்றது. ஒரு பெண் தனியாகப் பிரயாணம் செய்யவேண்டியேற்படுகின்றது. அப்பிரயாணத்தினால் அவளுக்கு எந்தத் தீங்கும் இல்லையெனில் அதனை அனுமதிக்கலாம். அதுபோல்தான் இசையும் பாட்டும். அது அடிப்படையில் ஹராமான ஒன்றல்ல. ஆனால் அது பிழையான நோக்கத்திற்கு பயன்படுத்தப் படும்போது தடுக்கப்படுகின்றது. நல்லவிடயங்களுக்கு பயன்படுத்தப்படும் போது அனுமதிக்கப்படுகின்றது.

விபச்சாரம் முழுமையாக தடுக்கப்பட்ட ஒன்று. நிர்ப்பந்தமான சூழலில் அதனை அனுமதித்தல் என்ற ஒன்று இல்லை. பட்டு ஆண்களுக்கு அடிப்படையில் ஹராமான ஒன்று. ஆனால் இஸ்லாம் அதனை நிர்ப்பந்தமான சூழலில் அனுமதித்துள்ளது. அதே போல் மதுபானம் அடிப்படையில் ஹராமான ஒன்று அதனையும் இஸ்லாம் நிர்ப்பந்தமான சூழலில் அனுமதித்துள்ளது. நிர்ப்பந்தமல்லாமல் தேவைக்கு இவற்றை ஆகுமாக்க முடியாது. உதாரணத்திற்கு பெருநாள் தினங்களில், வைபவங்களில் மதுபானம் அருந்தலாம், பட்டாடை அணியலாம் என்று சொல்லமுடியாது.

ஆனால் இசையை, பாட்டைப் பொறுத்தவரை திருமண வைபவங்களில் ஆகுமாக்கப்பட்டுள்ளது. இது அடிப்படையிலேயே ஹராமான ஒன்றாக இருந்தால் பெருநாள், திருமணம் போன்ற தேவைகளின் போது ஆகுமாக்கப் பட்டிருக்காது. மாற்றமாக கடுமையாக தடை செய்யப் பட்டிருக்கும்.

இந்தப் பின்னணியில்தான் நாம் இதனை பார்க்கவேண்டியுள்ளது. அதாவது இசை, பாட்டு அடிப்படயில் ஹராமான ஒன்றல்ல. மாற்றமாக அது தீங்குக்கு இட்டுச் செல்லும் என்ற பின்னணியில் “சத்துஸ் ஸரீஆ” அடிப்படையில் ஹராமாக்கப் பட்ட ஒன்று. முஸ்லிம் சமூகம் ஒரு உன்னத நோக்கத்திற்காக அனுப்பப் பட்ட ஒரு சமூகம். அந்த சமூகம் கேளிக்கைகளிலும், ஆடல் பாடல்களிலும் மூழ்கி, மார்க்கத்தைவிட்டும் விலகித்தூரம் சென்று தனது அடிப்படைப் பனியை மறந்து விடக் கூடாது. அந்தப் பின்னணியில்தான் நபி ஸல் அவர்கள் அவரின் சமூகத்தை அதில் சிக்கவிடாமல் பாதுகாத்து வந்தார்கள். அதே நேரம் முழுமையாக பொழுது போக்கு அம்சங்களில் இருந்து அந்த சமூகத்தை ஒதுக்கி வைக்கவுமில்லை. திருமணம், பெருநாள் போன்ற முக்கியமான நிகழ்வுகளில் அதனை அனுமதித்தார்கள்.

உண்மையில் இன்று இந்த இசை,பாட்டு என்பன வெறும் பொழுதுபோக்கு அம்சம் என்பதையும் தாண்டி இன்று அரசியல், பொருளாதாரம், கல்வி என பல பகுதிகளில் கால் பதித்துவிட்டது. உலகின் போக்கை தீர்மானிக்கின்ற முக்கியமான சக்திகளில் ஒன்றாக மாறிவிட்டது. எனவே இன்று முஸ்லிம்கள் இதனை பொழுதுபோக்கு அம்சம் என்ற வட்டத்திற்குள் மாத்திரம் சுருக்கிப் பார்த்திட முடியாது. மாறாக இதனை முஸ்லிம்களின் இருப்பை, செல்வாக்கை தீர்மானிக்கின்ற முக்கிய அம்சமாக, இஸ்லாத்திற்கெதிரான பிரச்சாரங்களுக்கு முகம் கொடுப்பதற்கான முக்கிய சாதனமாகக் கருத வேண்டியுள்ளது. அத்தோடு இன்றைய உலகில் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்வதற்கான சிறந்ததொரு சாதனமாகவும் அது மாறியுள்ளது. எனவே அதனை முஸ்லிம்கள் இன்று புறக்கணிப்பது சிறந்த முடிவல்ல என்பதே எனது அபிப்பராயம். முஸ்லிம்கள் அத்துறையை வளர்த்தெடுக்க வேண்டும். சிறந்த மாற்றீடுகளை உலகுக்கு வழங்கவேண்டும்.

இறுதியாக இசை, பாட்டு என்பன தன்னளவிலே ஹறாம் என்ற கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. மாற்றமாக அது தன்னளவில் ஹலால் ஆன ஒன்று என்ற கருத்தைத்தான் நான் பலப்படுத்துகின்றேன். அவற்றை எதற்காக, எப்படி, பயன்படுத்துகின்றோம் என்பதைப் பொறுத்துத்தான் அது கூடுமா? கூடாதா என்ற முடிவுக்கு வரவேண்டும். ஆபாசம், வன்முறை, ஒழுக்க சீர்கேடு போன்ற மோசமான விடயங்களுக்காக பயன்படுத்தப்படும் எனில் அது கண்டிப்பாக ஹராமாகும். அதேநேரம் அவற்றை நல்லவிடயங்களுக்காக, நல்ல விதத்தில் பயன்படுத்தினால் கூடும் என்பதிலும் சந்தேகமில்லை.

இஸ்லாமிய அறிஞர்களைப் பொருத்தவரை இஸ்லாமிய வரையரையை மீறி, மார்க்கத்தை விட்டும் மனிதர்களை வழிகெடுக்கின்ற விதத்தில் இவற்றைப் பயன்படுத்துவது ஹராம் என்பதில் அனைவரும் உடன் படுகின்றனர். யாரும் அதனை மறுக்கவில்லை.

ஆனால் இஸ்லாமிய வரையரைக்குள் நின்று இவற்றைப் பயன்படுத்துவது கூடுமா? கூடாதா என்பதில்தான் கருத்துவேறுபாடு காணப்படுகின்றது.

சிலர் எப்படி இருந்தாலும் கூடாது என்று சொல்கின்றனர். இன்னும் சிலர் பாட்டு மட்டும் பாடலாம் இசை எதுவும் கூடாது என்கின்றனர். இன்னும் சிலர் பாடலில் ‘தப்’ மாத்திரம் பயன்படுத்தலாம், ஏனைய இசைக்கருவிகள் கூடாது என்கின்றனர். இன்னும் சிலர் பாடலில் தப் மற்றும் ஏனைய இசைக்கருவிகளை சில வரையரைகளுடன் பயன்படுத்தலாம் என்று சொல்கின்றனர்.

மேலே நான் முன்வைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இதில் இறுதியாகச் சொல்லப்பட்ட கருத்தைத்தான் நான் சரிகான்கின்றேன்.

இறுதியாக புகாரியில் வரும் இசை ஹராம் என்ற ஹதீஸை இசை, பாட்டு என்பன தன்னளவிலே ஹராம் என்ற கருத்திற்கான ஆதாரமாகக் கொள்வது பொருத்தமில்லை. மாற்றமாக இஸ்லாத்தை விட்டும், குர் ஆனை விட்டும் மனிதர்களைத் தூரப்படுத்துவதற்காக அவை பயன் படுத்தப்படும் போதுதான் ஹராமாக மாறுகின்றது என்ற புரிதல்தான் மிகச்சரியான புரிதல். அல்லாஹ்வே நன்கறிந்தவன்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard