New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உலகு உலகம்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
உலகு உலகம்
Permalink  
 


உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார். குறள் 140 : ஒழுக்கமுடைமை.
கலைஞர் மு.கருணாநிதி உரை:உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.
மு.வரதராசனார் உரை:உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே.
பரிமேலழகர் உரை:உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் - உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார், பல கற்றும் அறிவிலாதார் - பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார். (உலகத்தோடு பொருந்த ஒழுகுதலாவது, உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான் ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து, சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான் அவையும் அடங்க 'உலகத்தோடு ஒட்ட' என்றும் அக்கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின், அவ்வொழுகுதலைக் கல்லாதார் 'பல கற்றும் அறிவிலாதார்' என்றும் கூறினார்.ஒழுகுதலைக் கற்றலாவது, அடிப்படுதல். இவை இரண்டு பாட்டானும், சொல்லானும், செயலானும் வரும் ஒழுக்கங்கள் எல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை:அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும் உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதலை அறியார். இஃது ஒழுக்கமாவது உயர்ந்தாரொழுகின நெறியில் ஒழுகுதலென்பதூஉம் அவ்வொழுக்கம் கல்வியினும் வலி யுடைத்தென்பதூஉம் கூறிற்று.
ஞா.தேவநேயப் பாவாணர்
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் - உயர்ந் தோரொடு பொருந்த வொழுகுதலைக் கல்லாதார் ; பல கற்றும் அறிவிலாதார் - பல நூல்களைக் கற்றவரேனும் அறிவிலாதாரே . உலகம் என்றது வரையறைப்பட்ட இடவாகுபெயர் . அறநூல்களில் எல்லா வொழுக்க முறைகளும் சொல்லப்படாமையானும் , காலந்தோறும் பழையன கழிதலும் புதியன புகுதலும் நிகழ்தலானும் , ஒழுக்க வகையில் உயர்ந்தோரைப் பின்பற்றுதல் இன்றியமையாததாயிற்று . கல்வியால் அறிவும் அறிவால் ஒழுக்கமும் பயனாதலின் , உயர்ந்தோரொடு பொருந்த வொழுகலைக் கல்லாதார் பல நூல்களைக் கற்றும் அறிவில்லாதவரேயாவர் . ஒழுகுதலைக்கற்றலாவது பின்பற்றி யொழுகுதல் .
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:உலக மக்களோடு பொருந்துமாறு நடந்துகொள்ள வேண்டியதைக் கல்லாதவர்கள் பல நூல்களைக் பெற்றிருந்தாலும் அறிவில்லாதவர்களே யாவார்கள்.
Translation:
Who know not with the world in harmony to dwell,
May many things have learned, but nothing well.
Explanation:
Those who know not how to act agreeably to the world, though they have learn many things, are still ignorant.
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு. குறள் 425: அறிவுடைமை.
கலைஞர் மு.கருணாநிதி உரை:உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.
மு.வரதராசனார் உரை:உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாத அறிவு.
சாலமன் பாப்பையா உரை:உலகை நட்பாக்கிக் கொள்வது அறிவு; நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக மகிழ்வதும், நாளடைவில் வாடுவதும் இல்லாது. எப்போதும் ஒரே சீராக இருப்பது அறிவு.
பரிமேலழகர் உரை:உலகம் தழீஇயது ஒட்பம் - உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு ஒட்பமாம், மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு - அந்நட்பின்கண் முன் மலர்தலும் பின் கூம்புதலும் இன்றி ஒரு நிலையனாவது அறிவாம்.
('தழீஇயது', 'இல்லது' என்பன அவ்வத் தொழில்மேல் நின்றன. உலகம் என்பது ஈண்டு உயர்ந்தோரை. அவரோடு கயப்பூப்போல வேறுபடாது கோட்டுப் பூப்போல ஒரு நிலையே நட்பாயினான்,எல்லா இன்பமும் எய்தும் ஆகலின், அதனை அறிவு என்றார்.காரியங்கள் காரணங்களாக உபசரிக்கப்பட்டன.இதனைச் செல்வத்தில் மலர்தலும் நல்குரவில் கூம்பலும்இல்லது என்று உரைப்பாரும் உளர்.).
மணக்குடவர் உரை:ஒருவனுக்கு ஒள்ளிமையாவது உலகத்தோடு பொருந்தினது: அதனை நீர்ப்பூப்போல மலர்தலுங் குவிதலுமின்றி யொருதன்மையாகச் செலுத்துதல் அறிவு. இஃது உயர்ந்தாரோடு நட்புப் பண்ணுதலும் அறிவென்றது.
ஞா.தேவநேயப் பாவாணர்: உலகம் தழீஇயது ஒட்பம் -உயர்ந்தோரை நட்பாகத் தழுவிக் கொள்ளுதல் நல்லறிவாம்; மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு -அந்நட்பொழுக்கத்தில் வளர்தலுந்தளர்தலுமின்றி ஒருநிலைப்பட்டு உறுதியாய் நிற்றல் அறிவுடைமையாம். கோட்டுப்பூ, கொடிப்பூ, நிலப்பூ. நீர்ப்பூ என்னும் நால்வகைப் பூக்களுள், நீர்ப்பூ ஒருவேளை மலர்வதும் ஒருவேளைகுவிவதுமாக நிலைமாறுந் தன்மையது. ஏனைமூன்றும் மலர்ந்தபின் மீண்டுங்குவியாது ஒரே நிலையின வாவன. இங்ஙனம் ஒரு நிலைப்பட்டிருப் பதையே 'மலர்தலுங் கூம்பலுமில்லது' என்றார். 'உலகம் ' வரையறைப்பட்ட இடவாகுபெயர். 'தழீஇயது' இன்னிசையளபெடை. இதில் வந்துள்ளது ஒருமருங் குருவகம். மலர்தற்கும் கூம்பற்கும் செல்வ வறுமைகளும் கரணியமாகலாம். "கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி-தோட்ட கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை நயப்பாரும் நட்பாரும் இல்". (நாலடி. 215).
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: உயர்ந்தோர்களை நட்பாக்கிக் கொள்ளுவது ஒருவனுக்கு அறிவுடைமையாகும். உலகத்தினைத் தழுவி நடப்பதும் அதுவேயாகும். அந்நட்பின்கண் முன் மலர்தலும், பின் குவிதலும் இல்லாமல் ஒரே நிலையில் நிற்பது அறிவாகும்.
Translation:
Wisdom embraces frank the world, to no caprice exposed;
Unlike the lotus flower, now opened wide, now petals strictly closed.
Explanation: To secure the friendship of the great is true wisdom; it is (also) wisdom to keep (that friendship unchanged, and) not opening and closing (like the lotus flower).

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு. குறள் 426:
மணக்குடவர் உரை:யாதொருவாற்றா லொழுகுவது உலகம். அதனோடு கூடத்தானும் அவ்வாற்றா னொழுகுதல் அறிவாவது. அறிவாவாது எத்தன்மைத்து என்றார்க்கு முற்பட உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதல் அறிவு என்றார்.
பரிமேலழகர் உரை:உலகம் எவ்வது உறைவது - உலகம் யாதொருவாற்றான் ஒழுகுவதாயிற்று, உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு - அவ்வுலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றான் ஒழுகுவது அரசனுக்கு அறிவு. ('உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை,' எனக் கருதித் தான் நினைத்தவாறே ஒழுகின், பாவமும் பழியும் ஆம் ஆகலான். அவ்வாறு ஒழுகுதல் அறிவு அன்று என விலக்கியவாறு ஆயிற்று. இவை ஐந்து பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.).
மு. வரதராசன் உரை:உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
மு. கருணாநிதி உரை:உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.
சாலமன் பாப்பையா உரை:உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.
ஞா.தேவநேயப் பாவாணர்: உலகம் எவ்வது உறைவது - உயர்ந்தோர் எவ்வாறு ஒழுகுகின்றாரோ; அவ்வது உலகத்தோடு உறைவது அறிவு - அவ்வாறே அவரொடு பொருந்தியொழுகுதல் அறிவுடைமையாம். உயர்ந்தோரைப் பின்பற்றுவது பொதுமக்கட்கு ஒழுக்கவுயர்வாம்; அரசர்க்கு அதனொடு புகழும் பதவிப்பாதுகாப்புமாம்.
Translation:
As dwells the world, so with the world to dwell
In harmony- this is to wisely live and well.
Explanation: To live as the world lives, is wisdom.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். குறள் 260: புலான்மறுத்தல்.
கலைஞர் மு.கருணாநிதி உரை: புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்.
மு.வரதராசனார் உரை:ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
சாலமன் பாப்பையா உரை:எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.
பரிமேலழகர் உரை:கொல்லான் புலாலை மறுத்தானை - ஓர் உயிரையும் கொல்லாதவனுமாய்ப் புலாலையும் உண்ணாதவனை, எல்லா உயிரும் கைகூப்பித் தொழும் - எல்லா உயிரும் கை குவித்துத் தொழும். (இவ்விரண்டு அறமும் ஒருங்கு உடையார்க்கு அல்லது ஒன்றே உடையார்க்கு அதனால் பயன் இல்லை ஆகலின், கொல்லாமையும் உடன் கூறினார். இப்பேரருள் உடையான் மறுமைக்கண் தேவரின் மிக்கான் ஆம் என அப் பயனது பெருமை கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் ஊன் உண்ணாமையது உயர்ச்சி கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:கொல்லானுமாய்ப் புலாலையுண்டலையுந் தவிர்த்தவனைக் கை குவித்து எல்லாவுயிருந் தொழும். மேல் எல்லாப்புண்ணியத்திலும் இது நன்றென்றார்; அது யாதினைத் தருமென் றார்க்குக் கொல்லாதவன் தேவர்க்கும் மேலாவனென்று கூறினார்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:ஓர் உயிரினையும் கொல்லாதவனுமாகிப் புலாலையும் உண்ணாதவனை எல்லா உயிரும் கைகூப்பிக் தொழும்.
ஞா.தேவநேயப் பாவாணர்: கொல்லான் புலாலை மறுத்தானை - ஓருயிரையுங் கொல்லாதவனாய்ப் புலாலையும் உண்ணாதவனை; எல்லா உயிரும் கைகூப்பித் தொழும் - எல்லா மக்களும் கைகுவித்து வணங்குவர். கொல்லாதவன் புலாலுண்பவனாகவும் புலாலுண்ணாதவன் கொல்பவனாகவும் இருக்கலா மாதலால், அவற்றால் பயினின்மை கருதி ஈரறங்களையும் உடன் கூறினார். கைகூப்பித் தொழுதல் மற்ற வுயிர்கட் கியையாமையின் மக்களுயிர் எனக் கொள்ளப்பட்டது. உயிர் என்பது சொல்லால் அஃறிணை யாதலின், பல்லோர் படர்க்கையிற் செல்லாச் செய்யுமென்னும் முற்று இங்குச் செல்வதாயிற்று. ஈரறங்களையுங் கடைப்பிடிப்பார் , மறுமையில் (தேவர் நிலையில் ) மட்டு மன்றி இம்மையில் மக்கள் நிலையிலும் பிறரால் தெய்வமாக மதிக்கப் படுவர் என்பது கருத்து.
Translation:
Who slays nought,- flesh rejects- his feet before
All living things with clasped hands adore.
Explanation:All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். குறள் 1033: உழவு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.
மு.வரதராசனார் உரை:உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
சாலமன் பாப்பையா உரை:பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.
பரிமேலழகர் உரை:உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் - யாவரும் உண்ணும் வகை உழுதலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்கின்றாரே, தமக்குரியராய் வாழ்கின்றவர்; மற்றெல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர் - மற்றையாரெல்லாம் பிறரைத் தொழுது, அதனால் தாம் உண்டு அவரைப் பின்செல்கின்றவர். ['மற்று' என்பது வழக்குப்பற்றி வந்தது. தாமும் மக்கட்பிறப்பினராய் வைத்துப் பிறரைத் தொழுது அவர் சில கொடுப்பத் தம் உயிரோம்பி அவர் பின் செல்வார் தமக்குரியரல்லர் என்பது கருத்து.).
மணக்குடவர் உரை: உலகின்கண் வாழ்வாராவார் உழுதுண்டு வாழ்பவரே; மற்று வாழ்கின்றா ரெல்லாரும் பிறரைத் தொழுது உண்டு அவரேவல் செய்கின்றவர். இது செல்வமானது உழவினால் வருஞ் செல்வமென்றது.
Translation:
Who ploughing eat their food, they truly live:
The rest to others bend subservient, eating what they give.
Explanation: They alone live who live by agriculture; all others lead a cringing, dependent life.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். குறள் 91: இனியவைகூறல்.
மணக்குடவர் உரை:ஒருவன் இனியவாகச் சொல்லுஞ் சொற்கள் இன்பத்தைப் பயத்தலைக் காண்பான். அதற்கு மறுதலையாகிய வன்சொல்லை வழங்குவது எப்பயனை நோக்கியோ?
பரிமேலழகர் உரை:இன்சொல் - இன்சொலாவன; ஈரம் அளைஇப் படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் - அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் வாயிற்சொற்கள். (ஆல் அசைநிலை. அன்போடு கலத்தல் - அன்புடைமையை வெளிப்படுத்தல். படிறு இன்மை - வாய்மை. மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின் செம்பொருள் எனப்பட்டது. 'இலவாம் சொல்' என இயையும். 'வாய்' என வேண்டாது கூறினார், தீயசொல் பயிலா என்பது அறிவித்தற்கு. இதனான் இன்சொற்கு இலக்கணம் கூறப்பட்டது.).
மு. வரதராசன் உரை:ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.
மு. கருணாநிதி உரை:அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
சாலமன் பாப்பையா உரை:அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.
Translation:
Pleasant words are words with all pervading love that burn;
Words from his guileless mouth who can the very truth discern.
Explanation:Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous.

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல். குறள் 644: சொல்வன்மை.
மணக்குடவர் உரை:சொல்லைச் சொல்லுந் திறனறிந்து சொல்லுக; அதனின் மேம்பட்ட அறனும் பொருளும் இல்லை. தாமறியவே புறங்கூறாமையும் பயனில சொல்லாமையும் பொய்கூறாமையும் உளவாம்: ஆதலான் அறனாயிற்று; அரசன் மாட்டும் ஏனையோர்மட்டும் தகுதியறிந்து சொல்லுதலான் பொருளாயிற்று.
பரிமேலழகர் உரை:சொல்லைத் திறன் அறிந்து சொல்லுக - அப்பெற்றித்தாய சொல்லை, அமைச்சர் தம்முடையவும், கேட்பாருடையவுமாய திறங்களை அறிந்து சொல்லுக; அதனின் ஊங்கு அறனும் பொருளும் இல் - அங்ஙனம் சொல்லுதற்கு மேற்பட்ட அறனும் பொருளும் இல்லையாகலான். (அத்திறங்களாவன: குடிப்பிறப்பு , கல்வி, ஒழுக்கம், செல்வம், உருவம், பருவம் என்பவற்றான் வரும் தகுதி வேறுபாடுகள். அவற்றை அறிந்து சொல்லுதலாவது, அவற்றால் தமக்கும் அவர்க்கும் உளவாய ஏற்றத்தாழ்வுகளை அறிந்து அவ்வம் மரபாற் சொல்லுதல். அஃது உலகத்தோடு ஒட்ட ஒழுகலையும் இனிமையையும் பயத்தலின் அறனாயிற்று. தம் காரியம் முடித்தலின் பொருளாயிற்று. அறனும் பொருளும் எனக் காரணத்தைக் காரியமாக்கிக் கூறினார்.).
மு. வரதராசன் உரை:சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும்; அத்தகைய சொல்வன்மையைவிடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை.
மு. கருணாநிதி உரை:காரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும். அந்தச் சொல் வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:எவரிடம் பேசகிறோமோ அவர் குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், தோற்றம், வயது ஆகிய தகுதிகளை அறிந்து பேச்சு; அப்படிப் பேசுவதைவிட உயர்ந்த அறமும் பொருளும் வேறு இல்லை.
Translation:
Speak words adapted well to various hearers' state;
No higher virtue lives, no gain more surely great.
Explanation:Understand the qualities (of your hearers) and (then) make your speech; for superior to it, there is neither virtue nor wealth.

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல். குறள் 141: பிறனில் விழையாமை.
மணக்குடவர் உரை:பிறனுடைய பொருளாயிருப்பவளை விரும்பி யொழுகுகின்ற அறியாமை உலகத்து அறமும் பொருளும் அறிந்தார் மாட்டு இல்லையாம்.
பரிமேலழகர் உரை:பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை - பிறனுக்குப் பொருளாம் தன்மையுடையாளைக் காதலித்து ஒழுகுகின்ற அறியாமை, ஞாலத்து அறம் பொருள் கண்டார் கண் இல் - ஞாலத்தின்கண் அறநூலையும் பொருள் நூலையும் ஆராய்ந்து அறிந்தார்மாட்டு இல்லை. (பிறன் பொருள்: பிறன் உடைமை, அறம், பொருள் என்பன ஆகுபெயர். செவ்வெண்ணின் தொகை, விகாரத்தால் தொக்கு நின்றது. இன்பம் ஒன்றையே நோக்கும் இன்ப நூலுடையார் இத்தீயொழுக்கத்தையும் 'பரகீயம்' என்று கூறுவராகலின், 'அறம் பொருள் கண்டார் கண் இல்' என்றார்.எனவே அப்பேதைமை உடையார் மாட்டு அறமும் பொருளும் இல்லை என்பது பெறப்பட்டது.).
மு. வரதராசன் உரை:பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.
மு. கருணாநிதி உரை:பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.
Translation:
Who laws of virtue and possession's rights have known,
Indulge no foolish love of her by right another's own.
Explanation:The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property.

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர். குறள் 173: வெஃகாமை.
மணக்குடவர் உரை:சிற்றின்பமாகிய பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் செய்யார் பேரின்பமாகிய வீடுபேற்றைக் காமிப்பவர். இது வீடுபெற வேண்டுவார் செய்யாரென்றது.
பரிமேலழகர் உரை:சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யார் - பிறர்பால் வௌவிய பொருளால் தாம் எய்தும் நிலையில்லாத இன்பத்தை விரும்பி, அவர் மாட்டு அறன் அல்லாத செயல்களைச் செய்யார்; மற்று இன்பம் வேண்டுபவர் - அறத்தான் வரும் நிலையுடைய இன்பத்தை காதலிப்பவர். ['பாவத்தான் வருதலின் அப்பொழுதே அழியும்' என்பார், 'சிற்றின்பம்' என்றார். 'மற்றையின்பம்' என்பது 'மற்றின்பம்' என நின்றது.].
மு. வரதராசன் உரை:அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.
மு. கருணாநிதி உரை:அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:அறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்.
Translation:
No deeds of ill, misled by base desire,
Do they, whose souls to other joys aspire.
Explanation: Those who desire the higher pleasures (of heaven) will not act unjustly through desire of the trifling joy. (in this life).

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு. குறள் 179:
மணக்குடவர் உரை:அறத்தை யறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தானே தகுதியறிந்து அப்போதே சேரும், அறனறிதல்- விரும்பாமை யென்றறிதல். இது செல்வமுண்டாமென்றது.
பரிமேலழகர் உரை:அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் - இஃது அறன் என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரை; திரு திறன் அறிந்து ஆங்கே சேரும் - திருமகள் தான் அடைதற்கு ஆம் கூற்றினை அறிந்து அக் கூற்றானே சென்று அடையும். (அடைதற்கு ஆம் கூறு: காலமும், இடனும், செவ்வியும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் வெஃகாமையின் குணம் கூறப்பட்டது.).
மு. வரதராசன் உரை:அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.
மு. கருணாநிதி உரை:பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.
சாலமன் பாப்பையா உரை:பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவரிடம் போய் இருப்பாள்.
Translation:
Good fortune draws anigh in helpful time of need,
To him who, schooled in virtue, guards his soul from greed.
Explanation: Lakshmi, knowing the manner (in which she may approach) will immediately come to those wise men who, knowing that it is virtue, covet not the property of others.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும். புறங்கூறாமை. குறள் 183:
மணக்குடவர் உரை:காணாவிடத்துப் புறஞ்சொல்லிக் கண்டவிடத்துப் பொய்செய்து உயிரோடு வாழ்தலின் புறங்கூறாதிருந்து நல்குரவினாற் சாதல் அறநூல் சொல்லுகின்ற ஆக்க மெல்லாந் தரும்.
பரிமேலழகர் உரை:புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் - பிறனைக் காணாத வழி இகழ்ந்துரைத்துக் கண்டவழி அவற்கு இனியனாகப் பொய்த்து ஒருவன் உயிர்வாழ்தலின்; சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும் - அது செய்யாது சாதல் அவனுக்கு அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைக் கொடுக்கும். (பின் புறங்கூறிப் பொய்த்தல் ஒழிதலின், 'சாதல் ஆக்கம் தரும்' என்றார். 'ஆக்கம்' அஃது ஒழிந்தார் மறுமைக்கண் எய்தும் பயன். 'அறம்' ஆகுபெயர். 'தரும்' என்பது இடவழு அமைதி.).
மு. வரதராசன் உரை:புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.
மு. கருணாநிதி உரை:கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று.
சாலமன் பாப்பையா உரை:காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.
Translation:
'Tis greater gain of virtuous good for man to die,
Than live to slander absent friend, and falsely praise when nigh.
Explanation:Death rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point out.

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும். குறள் 501: தெரிந்துதெளிதல்.
மணக்குடவர் உரை:அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமுமென்னும் நான்கின் கூறுபாட்டினையும் ஆராய்ந்து, ஆராய்ந்தபின்பு ஒருவன் அரசனால் தெளியப்படுவான். முன்பு நான்கு பொருளையும் ஆராயவேண்டுமென்றார் பின்பு தேறப்படுமென்றார்.
பரிமேலழகர் உரை:அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் - அரசனால் தெளியப்படுவான் ஒருவன், அறமும் பொருளும் இன்பமும் உயிர்ப் பொருட்டான் வரும் அச்சமும் என்னும், நான்கின் திறம் தெரிந்து தேறப்படும் - உபதை நான்கின் திறத்தான் மனவியல்பு ஆராய்ந்தால் பின்பு தெளி்யப்படும். (அவற்றுள், அற உபதையாவது, புரோகிதரையும் அறவோரையும் விட்டு அவரால் இவ்வரசன் அறவோன் அன்மையின் இவனைப் போக்கி அறனும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம், இது தான் யாவர்க்கும் இயைந்தது, நின் கருத்து என்னை? எனச் சூளுறவோடு சொல்லுவித்தல், பொருள் உபதையாவது: சேனைத் தலைவனையும் அவனோடு இயைந்தாரையும் விட்டு, அவரான் இவ்வரசன் இவறன் மாலையன் ஆகலின், இவனைப் போக்கிக் கொடையும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம், இது தான் யாவருக்கும் இயைந்தது, நின் கருத்துஎன்னை? எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். இன்பஉபதையாவது, தொன்று தொட்டு உரிமையோடு பயின்றாளொரு தவமுதுமகளை விட்டு, அவளால், உரிமையுள் இன்னாள் நின்னைக் கண்டு வருத்தமுற்றுக் கூட்டுவிக்க வேண்டும்என்று என்னை விடுத்தாள், அவனைக் கூடுவையாயின் நினக்குப்பேரின்பமே அன்றிப் பெரும்பொருளும் கைகூடும் எனச்சூளுறவோடு சொல்லுவித்தல். அச்ச உபதையாவது, ஒருநிமித்தத்தின் மேலிட்டு ஓர் அமைச்சனால் ஏனையோரை அவன் இல்லின்கண் அழைப்பித்து, இவர் அறைபோவான்எண்ணற்குக் குழீயினார் என்று தான் காவல் செய்து, ஒருவனால் இவ்வரசன் நம்மைக் கொல்வான் சூழ்கின்றமையின் அதனை நாம்முற்படச் செய்து, நமக்கு இனிய அரசன் ஒருவனை வைத்தல்ஈண்டை யாவர்க்கும் இயைந்தது, நின் கருத்து என்னை?எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். இந்நான்கினும்திரிபிலன் ஆயவழி, எதிர்காலத்தும் திரிபிலன் எனக்கருத்தளவையால்தெளியப்படும் என்பதாம். இவ்வடநூற் பொருண்மையைஉட்கொண்டு இவர் ஓதியது அறியாது,பிறரெல்லாம் இதனைஉயிரெச்சம் எனப் பாடம் திரித்துத் தத்தமக்குத்தோன்றியவாறே உரைத்தார்.).
மு. வரதராசன் உரை:அறம், பொருள், இன்பம், உயிர்க்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.
மு. கருணாநிதி உரை:அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:அறத்தைக் காக்க அரசைக் கவிழ்ப்போம், சம்பள உயர்வு தராத அரசைக் கவிழ்ப்போம், உனக்காகவே வாழும் பெண் இவள் என்பது போல் கூறி அறம், பணம், பெண் என்னும் மூன்று பொய்க் காரணங்களால் சோதிப்பது, அவனது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது போல் நடிப்பது என இந்நான்கு சோதனைகளால் ஒருவனின் மன இயல்பை ஆராய்ந்து அவனைப் பதவிக்குத் தேர்வு செய்ய வேண்டும்.
Translation:
How treats he virtue, wealth and pleasure? How, when life's at stake,
Comports himself? This four-fold test of man will full assurance make.
Explanation:Let (a minister) be chosen, after he has been tried by means of these four things, viz,-his virtue, (love of) money, (love of) sexual pleasure, and tear of (losing) life.

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு. குறள் 513: தெரிந்துவினையாடல்.
மணக்குடவர் உரை:அன்புடைமையும் அறிவுடைமையும் ஒருபொருளை ஆராய்ந்து துணிவுடைமையும் அவாவின்மையுமென்னும் இந்நான்கு குணங்களையும் நிலை பெற உடையான்மேலதே வினையை விட்டிருக்கும் தெளிவு.
பரிமேலழகர் உரை:அன்பு - அரசன் மாட்டு அன்பும், அறிவு - அவனுக்கு ஆவன அறியும் அறிவும், தேற்றம் - அவை செய்தற்கண் கலங்காமையும், அவா இன்மை - அவற்றால் பொருள் கையுற்ற வழி அதன்மேல் அவா இன்மையும் ஆகிய, இந்நான்கும் நன்கு உடையான்கட்டே தெளிவு - இந்நான்கு குணங்களையும் நிலைபெற உடையான் மேலதே வினையை விட்டிருக்கும் தெளிவு. (இந்நான்கும் நன்குடைமை இவன் செய்கின்ற வினைக்கண் யாதும்ஆராய வேண்டுவதில்லை என்று அரசன் தெளிவதற்கு ஏதுஆகலின், அவனை, அதன் பிறப்பிடனாக்கிக் கூறினார். இவைமூன்று பாட்டானும் ஆடற்குரியானது இலக்கணம் கூறப்பட்டது.).
மு. வரதராசன் உரை:அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.
மு. கருணாநிதி உரை:அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம்.
சாலமன் பாப்பையா உரை:நிர்வாகத்தின்மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு.
Translation:
A loyal love with wisdom, clearness, mind from avarice free;
Who hath these four good gifts should ever trusted be.
Explanation:Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousness.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு. குறள் 725: அவையஞ்சாமை.
கலைஞர் மு.கருணாநிதி உரை:அவையில் பேசும்போழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும்.
மு.வரதராசனார் உரை:அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடைகூறும் பொருட்டாக நூல்களைக் கற்க்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:பெரியோர் அவையில் பயப்படாமல் பதில் சொல்வதற்கு, சொல்இலக்கண வழியில் பலவகைப் பிரமாணங்களைச் சொல்லும் தர்க்க சாஸ்திரத்தை விரும்பிக் கற்றுக் கொள்க.
பரிமேலழகர் உரை:ஆற்றின் அளவு அறிந்து கற்க - சொல்லிலக்கண நெறியானே அளவை நூலை அமைச்சர் உட்பட்டுக் கற்க; அவை மாற்றம் கொடுத்தற்பொருட்டு - வேற்றுவேந்தர் அவையிடை அஞ்சாது அவர் சொல்லிய சொற்கு உத்தரஞ்சொல்லுதற் பொருட்டு. (அளவை நூல், சொல் நூல் கற்றே கற்க வேண்டுதலின், அதற்கு அஃது ஆறு எனப்பட்டது. அளக்கும் கருவியை 'அளவு' என்றார், ஆகுபெயரான். அவர் சொல்லை வெல்வதொரு சொல் சொல்லலாவது, நியாயத்து வாதசற்ப விதண்டைகளும் சலசாதிகளும் முதலிய கற்றார்க்கே ஆகலின், அவற்றைப் பிழையாமல் கற்க என்பதாம், இதனான் அதன் காரணம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும். நூல் கற்றலாவது (1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக்கற்றலும், (2) வேதமும் ஆகமமும் கற்றலும், (3) உழவும் வாணிகமும் கற்றலும், (4) படைவாங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்குவகைப்படும்.
Translation:
By rule, to dialectic art your mind apply,
That in the council fearless you may make an apt reply.
Explanation:In order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar).

ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி. குறள் 477: வலியறிதல்.
மணக்குடவர் உரை:பொருளை அளவறிந்து கொடுக்கும் வழியாலே கொடுக்க; பொருளையுண்டாக்கி வழங்கும் நெறி அதுவாதலால். இது பொருளினது வலியறிந்து அதற்குத்தக்க செலவுசெய்ய வேண்டுமென்று கூறிற்று.
பரிமேலழகர் உரை:ஆற்றின் அளவு அறிந்து ஈக - ஈயும் நெறியாலே தமக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக, அது பொருள்போற்றி வழங்கும் நெறி - அங்ஙனம் ஈதல் பொருளைப் பேணிக் கொண்டொழுகும் நெறியாம். (ஈயும் நெறி மேலே இறைமாட்சியுள் 'வகுத்தலும் வல்லதரசு' குறள்.385) என்புழி உரைத்தாம் . எல்லைக்கு ஏற்ப ஈதலாவது, ஒன்றான எல்லையை நான்கு கூறாக்கி ,அவற்றுள் இரண்டனைத் தன் செலவாக்கி, ஒன்றனை மேல் இடர் வந்துழி அது நீக்குதற்பொருட்டு வைப்பாக்கி நின்ற ஒன்றனை ஈதல். பிறரும்,'வருவாயுள் கால் வழங்கி வாழ்தல்' (திரிகடுகம்.21) என்றார். பேணிக்கொண்டு ஒழுகுதல்: ஒருவரோடு நட்பிலாத அவனைத் தம்மோடு நட்புண்டாக்கிக் கொண்டு ஒழுகுதல். முதலில் செலவு சுருங்கின் பொருள் ஒருகாலும் நீங்காது என்பதாம்.).
மு. வரதராசன் உரை:தக்க வழியில் பிறர்க்குக் கொடுக்கும் அளவு அறிந்து கொடுக்கவேண்டும்; அதுவே பொருளைப் போற்றி வாழும் வழியாகும்.
மு. கருணாநிதி உரை:வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்.
சாலமன் பாப்பையா உரை:எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்.
Translation:With knowledge of the measure due, as virtue bids you give!
That is the way to guard your wealth, and seemly live.
Explanation:Let a man know the measure of his ability (to give), and let him give accordingly; such giving is the way to preserve his property.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல். குறள் 415:கேள்வி
மணக்குடவர் உரை:வழுக்குத லுண்டான விடத்து உதவும் ஊன்றுகோல் போலும்: ஒழுக்கமுடையார் கூறுஞ் சொற்கள். இது கேட்பது ஒழுக்கமுடையார்மாட்டென்பது கூறிற்று.
பரிமேலழகர் உரை:இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்று = வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்றுகோல் போல உதவும்; ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் - காவற்சாகாடு உகைப்பார்க்கு ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள். (அவாய்நிலையான் வந்த உவமையடையால் பொருள் அடைவருவிக்கப்பட்டது. ஊற்றாகிய கோல் போல உதவுதல் -தளர்ந்துழி அதனை நீக்குதல். கல்வியுடையரேனும் ஒழுக்கம் இல்லாதார் அறிவிலராகலின், அவர் வாய்ச்சொல் கேட்கப்படாது என்பதுதோன்ற, 'ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்' 'வாய்' என்பது தீச்சொல்அறியாமையாகிய சிறப்புணர நின்றது. 'அவற்றைக் கேட்க' என்பதுகுறிப்பெச்சம்.).
மு. வரதராசன் உரை:ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச்சொற்கள், வழுக்கல் உடைய சேற்றுநிலத்தில் ஊன்றுகோல்போல் வாழ்க்கையில் உதவும்.
மு. கருணாநிதி உரை:வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.
சாலமன் பாப்பையா உரை:கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும்.
Translation:Like staff in hand of him in slippery ground who strays
Are words from mouth of those who walk in righteous ways.
Explanation:The words of the good are like a staff in a slippery place.

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை. குறள் 635: அமைச்சு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும், செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக விளங்க முடியும்.
மு.வரதராசனார் உரை:அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.
சாலமன் பாப்பையா உரை:அறத்தை அறிந்து கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு எடுப்பதற்கு ஏற்ற துணையாவார்.
பரிமேலழகர் உரை:அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் - அரசனால் செய்யப்படும் அறங்களை அறிந்து, தனக்கு ஏற்ற கல்வியான் நிறைந்து அமைந்த சொல்லை உடையனாய்; எஞ்ஞான்றும் திறன் அறிந்தான் - எக்காலத்தும் வினை செய்யும் திறங்களை அறிந்தான்; தேர்ச்சித் துணை - அவற்குச் சூழ்ச்சித் துணையாம். (தன் அரசன் சுருங்கிய காலத்தும், பெருகிய காலத்தும், இடைநிகராய காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். 'சொல்லான்' என்பதனை 'ஒடு' உருபின் பொருட்டாய ஆன் உருபாக்கி உரைப்பாரும் உளர். இவை ஐந்து பாட்டானும் அமைச்சரது குணத்தன்மை கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:அறத்தினையும் அறிந்து, நிரம்பியமைந்த சொல்லினையும் உடையனாய் எல்லாக்காலத்தினும் செய்யுந் திறன்களையும் அறியவல்லவன் அரசற்குச் சூழ்ச்சித் துணையாய அமைச்சனாவான்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:செய்ய வேண்டிய அறம் இன்னது என்று அறிந்து ஏற்ற கல்வியால் அமைத்து சொல்லினையுடையவனாக, எக்காலத்திலும் தொழில் செய்யும் திறன்களையுடைய அமைச்சனே மன்னனுக்குச் சிறந்த துணையாவான்.
Translation: The man who virtue knows, has use of wise and pleasant words. With plans for every season apt, in counsel aid affords.
Explanation: He is the best helper (of the king) who understanding the duties, of the latter, is by his special learning, able to tender the fullest advice, and at all times conversant with the best method (of performing actions)
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன். குறள் 294: வாய்மை.
கலைஞர் மு.கருணாநிதி உரை:மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.
மு.வரதராசனார் உரை:ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
சாலமன் பாப்பையா உரை:உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்.
பரிமேலழகர் உரை:உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் - ஒருவன் தன்னுள்ளத்திற்கேற்பப் பொய் கூறாது ஒழுகுவானாயின், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் - அவன் உயர்ந்தோர் உள்ளத்தின்கண் எல்லாம் உளனாம். ('உள்ளத்தால்' என்பது வேற்றுமை மயக்கம். பொய் கூறாது ஒழுகுதலாவது மெய் கூறி ஒழுகுதல் அவனது அறத்தினது அருமை நோக்கி உயர்ந்தோர் எப்பொழுதும் அவனையே நினைப்பர் என்பதாம். இதனான் இம்மைப்பயன் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:தன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின் உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவான் இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவாரென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: ஒருவன் தனது மனதறியப் பொய் கூறாமல் நடந்து கொள்வானானால், அவன் உயர்ந்தோர் உள்ளங்களில் எல்லாம் உள்ளவனாவான்.
ஞா.தேவநேயப் பாவாணர் :உள்ளத்தால் பொய்யாது ஒழுகின்-ஒருவன் நெஞ்சாரப் பொய் சொல்லாது ஒழுகுவனாயின்; உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்-அவன் உயர்ந்தோ ருள்ளத்திலெல்லாம் உளனாவன். உயர்ந்தோர் உள்ளத்தில் உளனாதலாவது அவரால் மதிக்கப்படுதலும் என்றும் நினைக்கப்படுதலுமாம். 'உள்ளத்தான்' என்பது வேற்றுமை மயக்கம்.
Translation:
True to his inmost soul who lives,- enshrined He lives in souls of all mankind.
Explanation: He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men.
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். குறள் 441: பெரியாரைத் துணைக்கோடல்.
மணக்குடவர் உரை: அறத்தின் பகுதியறிந்து முதிர்ந்த அறிவுடையாரது கேண்மையை அவரவர் செய்தியாகிய திறங்களை யறிந்து ஆராய்ந்து கொள்க. இது புரோகிதரைக் கூட்டுமாறு கூறிற்று.
பரிமேலழகர் உரை:அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைதிறன்அறிந்து தேர்ந்து கொளல். அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை - அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை, தேர்ந்து திறன் அறிந்து கொளல் - அரசன் அதனது அருமையை ஓர்ந்து, கொள்ளும் திறன் அறிந்து கொள்க. (அறநுண்மை நூலானேயன்றி, உய்த்துணர்வானும் அறிய வேண்டுதலின், 'அறம் அறிந்து' என்றார். மூத்தல் - அறிவானும் சீலத்தானும் காலத்தானும் முதிர்தல். அறிவுஉடையார் நீதியையும் உலகஇயலையும் அறிதலை உடையார். திறன் அறிதலாவது நன்கு மதித்தல், உயரச் செய்தல், அவர் வரை நிற்றல் என்பன முதலாக அவர் பிணிப்புண்ணும் திறன் அறிந்து செய்தல்.).
மு. வரதராசன் உரை:அறம் உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பைக், கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.
மு. கருணாநிதி உரை:அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக.
Translation: As friends the men who virtue know, and riper wisdom share,
Their worth weighed well, the king should choose with care.
Explanation: Let (a king) ponder well its value, and secure the friendship of men of virtue and of mature knowledge.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard