New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வீரன் வாஞ்சி


Guru

Status: Offline
Posts: 24768
Date:
வீரன் வாஞ்சி
Permalink  
 


வீரன் வாஞ்சியைப் பற்றி வருடா வருடம் பொய்களை பேசுகிறார்கள். நானும் வருடா வருடம் இந்த பதிவை பகிர்கிறேன். என்ன ஒன்று, ஒருமுறை அவதூறு பேசியவர்கள் இதைப் படித்து விட்டு வாயை மூடிக்கொண்டு போய் விடுகிறார்கள். அடுத்தது புதிதாக சிலரை தயார் செய்து அனுப்புகிறார்கள். அவர்களுக்கும் அதே கதிதான்.
பின்வரும் இந்த கட்டுரை சற்று நீளமானது. காலச்சுவடு இணையதளம், எழுத்தாளர்கள் sriram sengottai, ஜெயமோகன் போன்ற பலரின் எழுத்துக்களில் இருந்து சான்றுகளுடன் தொகுக்கப்பட்டது. தேடிக்கண்டுபிடித்ததை தவிர அடியேனின் பங்கு ஏதுமில்லை.
யார் வாஞ்சி குறித்து பேசினாலும் இந்த பதிவை காண்பிக்கவும்.
ஜெய் ஹிந்த்!
********************************************
Sathya GP கேட்டுக்கொண்டதற்கு இணங்க, முழுமையாக ஒரே பதிவில்
கொடுங்கோலன் ஆஷ் கொலை - வீரத் தியாகி வாஞ்சி தற்கொலை உண்மை பின்னணி என்ன?- பகுதி 1
"ஓரிர வினிலே ஆறிரு மணிக்கென்
அரங்குள் யான்நன் குறங்குங் காலவண்
செறிந்து மிஸ்டர் சிதம்பரம் பிள்ளையென்
றறைந்த சத்தமொன் றனேக தடவை
கேட்டு விழித்துப் பார்த்தேன். அரங்குமுன்
சிறையின் ஜூனியர் சப்அஸிஸ் டெண்டு
சர்ஜன் நின்று சௌக்கியம் உசாவி
‘கலெக்டர் ஆஷுவைத் தெரியுமா?’ என்றான்.
‘நன்றாகத் தெரியும்’ என்றேன். ‘எப்படி?’
என்றான். ‘யான் இவண் ஏகியதற்கும்
தூத்துக் குடியில் தோன்றிய ‘சுதேசிக்
கப்பல் கம்பெனி’ செத்தொழிந் ததற்கும்
அவன்கா ரண’மென் றறைந்தேன். ‘ஒருவன்
அவனை நேற்று மணியாச்சி ஜங்ஷனில்
சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டுச்
செத்தான்’ என்றான். ‘நல்லதோர் செய்தி
நவின்றாய் நீ நலம் பெறுவாய்’ என்றேன்.
உனக்கிவ் வருஷக் கரோஒ நேஷனில்
விடுதலை இலையெனப் பகர்ந்தான். ‘விடுதலை
என்றுமில் லெனினும் நன்றே’ என்றேன்."
மேற்கண்டவாறு தனது சுய சரிதையில் எழுதி இருப்பவர் வேறு யாரும் அல்ல. கப்பலோட்டிய தமிழனாக கம்பீரமாக நின்று, விஞ்ச் , ஆஷ் போன்ற வெள்ளை இன அதிகாரிகளால் வஞ்சகமாக சிறையில் அடைக்கப்பட்ட செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்கள் தான்.
அவருக்கு ஆஷ் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு? அல்லது ஆஷ்க்கு இவர் மீது ஏன் வெறுப்பு என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
ஆஷ்- வாஞ்சி பகுதி - 2
பிப்ரவரி 1908இல் தூத்துக்குடி கோரல் ஆலைத் தொழிலாளர் ஏறத்தாழ ஓராயிரம் பேர் கூலி உயர்வு, வார விடுமுறை முதலான கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் செய்தனர். இதன் பின்னணியில் சுதேசி இயக்கமும் வ.உ.சியும் இருந்தது வெளிப்படை.
போராட்டம் வலுப்பதைக் கண்ட அரசு நிர்வாகம் 144 சட்டப் பிரிவை அமலாக்கியதோடு, சிவகாசியிலிருந்து கூடுதல் போலீஸ் படையையும் வரவழைத்தது. நிலைமையை எதிர்கொள்ளும் பொறுப்பு, தலத்திலிருந்த அதிகாரியான ஆஷுக்கு!
"ஜாயின்று மேஜிஸ் டிரட்டாக என்னகர்
காயிதம் தந்‘தெனைக் காண்க வா’ என்றனன்.
உயிரனைய என்நண்பர் ஓட்டத்தில்வந்து ‘நின்
உயிரினை நீக்குதற் குபாயம் செய்துளன்;
காண்க நீ போகேல். காலையிற் கேட்டேம்;
வீண் கதை யென்றுநீ விளம்பலொழி;"
என்று வ.உ.சி. சுயசரிதையில் கூறுகிறார்.
ஆனால் வ.உ.சி இதற்கெல்லாம் அஞ்சுகிறவரா என்ன?
‘உயிரினை நீக்கும் ஊழ்வலி வந்திடின் நம்மால் தடுக்கவும் நண்ணுமோ? செல்லாது சும்மா இருந்திடின் சுகமோ’ என்று துணிவாக ஆஷைக் காணச் சென்றார்.
ஆசுவைக் கண்டதும், ‘அழகிய மில்லினை
மோசம் செய்ததென் மொழிகுவாய்’ என்றான்.
கொடியபல செய்து கூலி யாட்களை
மடியும் விதத்தினில் வருத்திவந் ததனால்
வேலையை நிறுத்தினர்; வேண்டுவ கேட்டுளேன்;
நாலு தினத்தினில் நன்மையாம் என்றேன்.
படையின் செருக்கைப் பகர்ந்தான். எழுந்தேன்
படையிலா ரிடத்ததைப் பகர்தல் நன்றென்றே!"
தொழிலாளர் ஒற்றுமையும் வ.உ.சியின் தலைமையும் வேலைநிறுத்தத்திற்கு வெற்றி தந்தன. அனைத்துக் கோரிக் கைகளையும் வென்று 7 மார்ச் 1908இல் தொழிலாளர் வேலைக்குத் திரும்பினர். ஆஷ் இதைத் தம் தனிப்பட்ட தோல்வியாகக் கருதியிருந்தால் அது இயல்பே.
12 மார்ச் 1908இல் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக அடுத்த நாள் திருநெல்வேலி நகர், தூத்துக்குடி, தச்சநல்லூர் ஆகிய ஊர்களில் பெரும் மக்கள் எழுச்சி ஏற்பட்டது. ‘திருநெல்வேலி கலகம்’ என்று அரசு ஆவணங்களில் அறியப்படும் இவ்வெழுச்சியின்போது திருநெல்வேலி நகரில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. சி.எம்.எஸ். கல்லூரி தாக்கப்பட்டது. நகர்மன்ற அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. ஆவணங்கள் எரிந்தன. அஞ்சல் அலுவலகம் தீக்கிரையானது. தந்திக் கம்பிகள் அறுபட்டன. நகர்மன்றத்தின் எண்ணெய்க் கிடங்கு இரண்டு நாளுக்கு நின்று எரிந்தது. காவல் நிலையமும் தப்பவில்லை. பிணைக் கைதிகள் மூவர் விடுவிக்கப்பட்டனர். போலீஸ் சுட்டதில் நால்வர் இறந்தனர்.
தூத்துக்குடியிலும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. கோரல் ஆலைத் தொழிலாளர் மட்டுமல்லாமல், பெஸ்ட் அன் கோ பணியாளர், நகர்மன்றத் துப்புரவு ஊழியர், கசாப்புக் கடைக்காரர், ஜட்கா ஓட்டுநர், சவரத் தொழிலாளர் என அனைவரும் வேலைநிறுத்தம் செய்தனர். 144 செயலில் இருந்த பொழுதும் அன்று பிற்பகல் வண்டிப்பேட்டையில் ஒரு மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நிகழ்ந்தது. கூட்டம் கலைய மறுத்தபொழுது கூட்டத்தைத் தாக்குமாறு குதிரைப் படையினருக்கு ஆணையிட்டார் ஆஷ்.
"ஆசு படையுடன் அணுகி அவரை
மோசம் செய்திட மூட்டிக் கலகம்
தடியால் அடிப்பித்தான் சார்ந்தநம் மவரை;
வெடியால் சுட்டான் வெளிவர விடாது.
ஆசுவின் குதிரையை அடித்தவர் தள்ளினார்.
நாசமென் னுயிர்க்கென நவின்றவன் ஓடினான்!"
என்கிறது வ.உ.சி. சுயசரிதை.
ஆஷைக் கூட்டம் தாக்கியபோது, சுடும் ஆணை வழங்கியதால் சிலர் குண்டடிபட்டனர் என்கிறது திருநெல்வேலி கெசட்டியர். யாரும் இறந்ததாகத் தெரியவில்லை. கைதான முப்பத்தாறு ‘கலகக்காரர்க’ளில் நால்வர் மட்டுமே தண்டனையிலிருந்து தப்பினர்.
- இன்னும் வரும்
ஆஷ்- வாஞ்சி பகுதி - 3
திருநெல்வேலி எழுச்சி நாடு தழுவிய தலைப்புச் செய்தியாயிற்று. மாவட்ட கலெக்டர் விஞ்சு, இணை மாஜிஸ்திரேட் ஆஷ் பெயர்கள் இச்செய்திகளில் இடம்பெற்றன. கடும் கண்டனத்துக்கும் உள்ளாயின.
எழுச்சி ஒடுக்கப்பட்டதும் அதில் கலந்துகொண்டவர்களை விசாரித்துத் தண்டிக்கும் படலம் தொடங்கியது. வ.உ.சி. மற்றும் தோழர்கள்மீது குற்றப் பத்திரிகை தாக்கலானது. வ.உ.சிக்கு ஆதரவான ஆறு வக்கீல்கள்மீது நன்னடத்தை ஜாமீன் கேட்டார்கள்.
‘நடக்கையென்பதே நண்ணிடா’ என்று கர்ஜனை செய்தது வ உ சிங்கம்.
எழுச்சியில் பெருமளவு ஈடுபட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி நகர மக்களை ஒட்டு மொத்தமாகத் தண்டிப்பதற்காகத் தண்டக் காவல்படை அமர்த்தப்பட்டு வரியும் விதிக்கப் பட்டது. (எவ்வளவு கொடுமை பாருங்கள்)
எழுச்சி ஒடுக்கப்பட்டு , சுதேசிகள் நிலைகுலைந்திருந்த சூழலில், அலுவலக நேரம் முடிந்த பிறகு சுதேசிக் கப்பல் கம்பெனியின் அலுவலகத்தில் நுழைந்த ஆஷ், கம்பெனியின் பங்குதாரர் பதிவேட்டைக் காட்டுமாறு அங்கிருந்த கடைநிலை ஊழியரை மிரட்டியதாக வந்த ‘இந்து’ நாளிதழ்ச் செய்தி வெளியிட்டதாக தெரிகிறது!
தூத்துக்குடி, 23 மார்ச் 1908
பெறல்
ஆர். ஆஷ் அவர்கள்
அன்பார்ந்த ஐயா,
சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி லிட் பணித்தபடி அதன் கௌரவ சட்ட ஆலோசகராக இதை எழுதுகிறேன்.
சென்ற சனிக்கிழமை (21ஆம் தேதி) பின்மாலை டாக்டர் வான்லாங்கென்பெரியுடன் (சுதேசிக்) கம்பெனியின் அலுவலகத்திற்குத் தாங்கள் சென்று, கம்பெனிச் சட்டப்படி ஒரு ரூபாய்க் கட்டணத்தைக் கொடுத்துப் பங்குதாரர் பதிவேட்டைக் காட்டு மாறும், அவ்வாறு காட்டாவிட்டால் அபராதம் விதிக்கப்படுமென்றும் கம்பெனி ஊழியரிடம் தாங்கள் கூறியதாக நிர்வாக இயக்குநர்கள் அறிய வருகிறார்கள். தங்கள் நோக்கம் அலுவல்பூர்வமானதா அல்லவா என்பது தெரியவில்லை. இன்றைய சூழ்நிலையில் கம்பெனி ஊழியர்களுக்கு இந்த நிகழ்ச்சி அச்சமளிக்கின்றது. பதிவேட்டைப் பார்வையிட வேண்டுமென்று எழுதித்தெரிவித்திருந்தால் அலுவலக நேரத்தில் எந்தச் சமயத்திலும் மகிழ்ச்சியுடன் கம்பெனி அதிகாரிகள் தங்களை வரவேற்றிருப்பார்கள். சென்ற சனிக்கிழமையன்று, பதிவேட்டுக்குப் பொறுப்பான குமாஸ்தா அலுவலக நேரம் முடிந்துவிட்டதால் தங்கள் வருகைக்கு முன்னரே சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குதாரர்களும் பங்குதாரர்களல்லாதவர்களும் அலுவலக நேரத்தில் பதிவேட்டைப் பார்வையிடுவதற்குக் கம்பெனி எப்போதும் தயாராக உள்ளது.
தங்கள் உண்மையுள்ள,
கே.ஆர். குருசாமி அய்யர்,
வக்கீல்.
எனவே பொதுப்புத்தியில் சுதேசிக் கப்பல் கம்பெனியின் வீழ்ச்சி ஆஷின் பெயரோடு இணைந்திருந்ததில் எந்த வியப்புமில்லை.
இந்தச் சமயத்தில் கலெக்டர் விஞ்சு ஆஷுக்கு எழுதிய இரண்டு கடிதங்கள் இருவருமே சுதேசி இயக்கத்தையும் வ.உ.சி.யின் கப்பல் கம்பெனியையும் முறிப்பதில் வெள்ளை அதிகாரிகள் என்ற கடமையையும் மீறிக் காட்டிய தனிப்பட்ட வெறுப்பும் விரைவும் புலப்படுகின்றன.
அந்த கடிதங்கள் அடுத்த பதிவில் வரும்.
ஆஷ்- வாஞ்சி பகுதி - 4
விஞ்சு, ஆஷுக்கு எழுதிய அந்த கடிதங்கள் இவைதான்.
திருநெல்வேலி, 19 மார்ச் 1908
அன்பார்ந்த ஆஷ்,
இப்பொழுதுதான் அட்கின்சனுக்கு (தலைமைச் செயலர்) எழுதி, நமது மூன்று நண்பர்களின் மீதும் (வ.உ.சி., சிவா, பத்மநாப அய்யங்கார்) இராஜ துரோக நடவடிக்கை எடுக்க அரசாங்க அனுமதி பெற்று அவர்கள் மூவரும் சிறையில் வசதியாக இருக்க வழிசெய்யும்வரையில் கோதாவரி மாவட்டத்தின் கலெக்டராக நீங்கள் அரசிதழில் அறிவிக்கப்பட்டாலும் காட்டன் தம் விடுப்பைத் தள்ளிப்போட முடியுமானால் உங்கள் இடமாற்றத்தை எதிர்க்க எனக்கு எந்தக் காரணமுமில்லை என்று தெரிவித்திருக்கிறேன் . . .
தங்களை என் தனிச்செயலாளராக அமர்த்திக்கொள்ள முடியவில்லை என்பதில் எனக்கு வருத்தம்தான். நம்மிருவருக்கும் கடுமையான வேலைதான். எனக்கு நீங்கள் மிகச் சிறப்பாகத் துணைநின்றதற்கு நான் என்றுமே நன்றி பாராட்டுவேன் . . .
என்றும் உங்கள்,
எல்.எம். விஞ்சு
*
சென்னை, (நாளிடப்படாத கடிதம்; டிசம்பர் 1908 தொடக்கமாயிருக்கலாம்)
அன்பார்ந்த ஆஷ்,
நீங்கள் சாத்தூர் செல்லும் வழியில் இன்னொரு முறை உங்களைச் சந்திக்க வாய்ப்பில்லாமல் போனதற்கு மிக வருந்துகிறேன். நீங்கள் சாத்தூருக்கு மாற்றப்படவுள்ளீர்கள் என்று மேதகு ஆளுநர் தம் மாவட்ட வருகையை முடித்துவிட்டுச் செல்வதற்கு முந்திய நாள் என்னிடம் கூறினார். இது இவ்வளவு விரைவில் நடந்திருக்குமெனத் தெரிந்திருந்தால் முன்பே தந்தி அனுப்பியிருப்பேன். ஆளுநரின் மாவட்ட வருகை நன்றாக நடந்தேறியது . . . நான் விடைபெற்றபோதே (மாவட்டத்தின்) கௌரவமான பிரமுகர்களோடு சுமுகமான உறவுகள் மீட்கப்பட்டுவிட்டன. தண்டக் காவல் வரியான ரூ. 60,000த்தில் ரூ. 40,000 திருநெல்வேலி மக்களால் செலுத்தப்பட்டுவிட்டது. தூத்துக்குடியில் இப்பொழுதுதான் வசூல் தொடங்கியுள்ளது.
சுதேசிகளின் வளங்கள் முடியும் தறுவாயில் உள்ளது என்று அறிகிறேன். அவர்களுடைய நீராவிக் கப்பல் கொழும்பில் ஜப்தி செய்யப்பட்டுள்ளதென்றும் அறிகிறேன். கம்பெனி திவாலாகும் நாள் அதிகத் தொலைவில் இல்லை . . .
என்றும் உங்கள்,
எல்.எம். விஞ்சு
 


__________________


Guru

Status: Offline
Posts: 24768
Date:
Permalink  
 

ஆஷுக்கு விஞ்சு எழுதிய இரண்டு கடிதங்களும் சுதேசி இயக்கத்தை ஒடுக்குவதில் அவருக்கு ஆஷ் உற்ற கையாளாக இருந்துள்ளதைக் காட்டுகிறது.
வ.உ.சி. முதலான தலைவர்களை ‘நமது மூன்று நண்பர்கள்’ என்று குறிப்பிட்டு, அவர்கள் சிறையில் ‘வசதியாக’ இருக்க வேண்டும் என்று குரூர நகைச்சுவையுடன் விஞ்சு குறிப்பிடுகிறார். மேலும் சுதேசிக் கப்பல் கம்பெனி நொடித்துப்போகவுள்ளதை ஆவலுடன் வரவேற்கத் தயாராக இருந்ததும் தெரிகிறது.
வெள்ளை அரசுக்கு அறைகூவலாக அமைந்த சுதேசிய முயற்சியை ஒடுக்குவதில் அதிகாரிகள் என்ற கடமைக்கும் மேலாகத் தனிப்பட்ட, இனவாத வெறுப்புடன் விஞ்சும் ஆஷும் செயல்பட்டனர் என்பது இக்கடிதங்கள்வழி உறுதிப்படுகின்றது.
இந்தியாவிலிருந்து விடைபெறும்பொழுதுகூட விஞ்சு ஆஷுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
இதற்கிடையில் மாவட்ட நிலைமைகள் மேலும் மோசமாயின. திருநெல்வேலி எழுச்சியின் காரணமாக நூறு பேருக்கு மேல் தண்டிக்கப்பட்டனர். 1908 ஜூலையில் அமர்வு நீதிபதி ஏ.எஃப். பின்ஹே வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சிவாவுக்குப் பத்தாண்டுக் கடுங்காவல் தண்டனையும் விதித்தார். இதன் பின்னணியில் இருந்தவர்கள் ஆஷ், விஞ்சு என்பது் அந்த கால கட்டத்தில் அனைவருக்கும் தெரிந்து தான் இருந்தது.
அடுத்த பகுதியில் , யார் இந்த வாஞ்சி?
ஆஷ்- வாஞ்சி பகுதி - 5
1886ஆம் ஆண்டளவில் பிறந்த வாஞ்சி, திருவிதாங்கூர் தேவஸ்தானத்தில் மணியக்காரராகப் பணியாற்றி ஓய்வுபெற்றிருந்த ரகுபதி அய்யரின் மகன். மனைவி பொன்னம்மாள். தங்களுடைய கைக்குழந்தையை அண்மையில்தான் பறிகொடுத்திருந்தனர். வாஞ்சியின் அரசியல் ஈடுபாடுகளும் கமுக்கமான செயல்பாடுகளும் தந்தை மகனுக்கிடையே கடுமையான புகைச்சலை ஏற்படுத்தியிருந்தன. வாஞ்சிக்குக் கடைசிக் கடன்களைச் செய்யவும் மறுத்துவிட்டார் அவருடைய தந்தை. திருவிதாங்கூர் சமத்தானத்தின் புனலூரில் சிறிது காலம் வனக் காவலராகவும் வாஞ்சி வேலை பார்த்திருந்தார்.
மிகத் தீவிர தேச பக்தராக இருந்த வாஞ்சி, வ உ சி மற்றும் சுதேசி இயக்கத்தின் மீது அடக்கு முறையை ஏவி விட்ட ஆஷ் மற்றும் விஞ்சு மீது கோபம் கொண்டதில் வியப்பு இல்லை.
ஆஷ் தன் மனைவியுடன் கொடைக்கானல் பயணம் செல்லும் தகவல் கிடைத்ததும், வாஞ்சி அந்த வாய்ப்பை பயன் படுத்தி கொண்டார்.
10:38க்கு மணியாச்சி சந்திப்பை அடைந்தது தொடர்வண்டி. இன்றுபோல் அன்றும் மணியாச்சி கிராமத்திலிருந்து கொஞ்சம் தொலைவில் கரிசல் காட்டில் அமைந்திருந்தது மணியாச்சி சந்திப்பு. 10:48க்கு போட் மெயில் வர வேண்டும். அதற்காகக் காத்திருந்த ஆஷ் இணையர் முதல் வகுப்புப் பெட்டியில் ஒருவரையொருவர் பார்த்தவாறு எதிரெதிரே அமர்ந்திருந்தனர்.
குடுமிவைத்து நன்றாக உடையணிந்திருந்த ஓர் இளைஞரும் மலையாளிகளைப் போல் வேட்டி அணிந்திருந்த ஒருவரும் முதல் வகுப்புப் பெட்டியை நெருங்கினர். அதில் ஏறிய இளைஞர் தன் கோட்டிலிருந்து ஒரு பெல்ஜியத் தானியங்கிக் கைத்துப்பாக்கியை எடுத்து ஆஷை நோக்கி நீட்டினார். அவரைத் திசைதிருப்பும் முகமாக ஆஷ் தன் தொப்பியை எடுத்து வீசினார். கைத்துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட குண்டு ஆஷ் நெஞ்சில் பாய்ந்தது. அவர் நிலைகுலைந்தார். குண்டடிபட்டவர் கலெக்டரானதால் ரயில் வண்டி நெல்லைக்குத் திரும்பியது. ஆனால் கங்கை கொண்டான் நிலையத்தருகே தன் மனைவியின் கைகளில் கடைசி மூச்சை விட்டார் ஆஷ்.
ஆஷைச் சுட்ட பின்பு நடைமேடையில் ஓடிய இளைஞர் அங்கிருந்த கழிவறைக்குள் புகுந்துகொண்டார். வெட்டவெளியில் வேனிற்காலக் காற்றின் இரைச்சலில் கைத்துப்பாக்கியின் வேட்டொலி எவருக்கும் கேட்கவில்லை. வாயில் துப்பாக்கி வைத்துச் சுட்டுகொண்டு இறந்தபோன இளைஞரின் சட்டைப் பையில் கீழ்க்காணும் கடிதம் கிடைத்தது.
"ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்துவருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்துவருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும்பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்துகொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும்பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமை.
இப்படிக்கு,
R. வாஞ்சி அய்யர்
R. Vanchi Aiyar of Shencotta
கொலைக்கான காரணம் அரசியல் என்பது வெளிப்பட்டது. கடித வாசங்கங்கள் பீதியூட்டின. அவ்வாண்டு கடைசியில் நிகழவிருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னனின் முடிசூட்டு விழாவிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகக் கொலை நிகழ்ந்த தருணம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இந்தக் கடிதம் என்ன விளைவுகளை ஏற்படுத்துமோ என்று அஞ்சிய இந்திய அரசின் உள்துறை, தவிர்க்க முடியாத காரணமிருந்தாலேயொழிய நீதிமன்ற விசாரணையின் பொழுதுகூட அதை வெளிப்படுத்தக் கூடாது என்று ஆணையிட்டது.
-இன்னும் வரும்
ஆஷ்- வாஞ்சி பகுதி -6
(இந்த தொடர் கட்டுரையின் முக்கிய பகுதி இதுதான். நண்பர்கள் கவனமுடன் படிக்கவும்)
தமிழகத்தை மட்டும் அல்ல, ஒட்டு மொத்த இந்தியாவையும் உலுக்கிய ஒரு சம்பவமாக அது அமைந்தது.
தென்னிந்தியாவில் தேசிய இயக்கப் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட முதல் வெள்ளை அதிகாரி ஆஷ். கடைசி நபரும் ஆஷ்தான் என்று பிந்தைய வரலாறு காட்டியது.
அதற்குப் பிறகு வாஞ்சி பற்றிய விவரங்கள், பின்னணி, அவருக்கு உதவியவர்கள் பற்றியும் விசாரணை தொடங்கியது.
அவர் அண்மையில் பரோடா, புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு இரகசிய நடவடிக்கையாக சென்றுவந்திருந்ததாகத் தெரிந்தது. செங்கோட்டை, ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் கைப்பற்றப்பட்ட கடிதங்கள் இரத்தப் பிரமாணம், காளி பூஜை முதலான அனைத்து அம்சங்களும் கொண்ட இரகசிய சங்கம் ஒன்று இருந்ததைப் புலப்படுத்தின.
‘பரங்கி நாசினி அச்சியந்திர சாலை’யில் அச்சிடப்பட்ட, வெள்ளையரைக் கொல்லத் தூண்டும் இரண்டு துண்டறிக்கைகள் - ‘ஆரியர்களுக்கோர் ஆப்த வாக்கியம்’, ‘அபிநவ பாரத சமாஜத்தில் சேர்ந்துகொள்ளப் பிரமாணம்’ ஆகியவையும் கைப்பற்றப்பட்டன. பாரதி எழுதிய நூல்களும் நடத்திய சில இதழ்களும் போலீசார் கையில் அகப்பட்டன.
அதற்கு முந்தைய சில ஆண்டுகளாகப் பல அரசியல் கொலைகளும் குண்டுவெடிப்புகளும் நிகழ்ந்த வங்காளத்தின் இரகசிய சங்கங்களோடு இருந்த தொடர்புகளையும் போலீசார் துப்பறிந்தனர்.
" நெல்லை மாவட்டத்தில் 1908இல் கோலோச்சிய சுதேசி இயக்கத்தோடு ஆஷ் கொலைக்கு நேர்த் தொடர்பு இருந்ததையும் புலனாய்வுகள் காட்டின."
ஆஷைக் கொல்லச் சூழ்ச்சி செய்ததாகப் பதிநான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர். போலீசுக்கு அஞ்சி தர்மராஜ அய்யர் நஞ்சுண்டும் , வெங்கடேசுர அய்யர் கழுத்தை வெட்டிக்கொண்டும் தற்கொலை செய்துகொண்டனர்.
வ.உ.சி.யின் உற்ற துணைவரும் கொலை நிகழ்ந்த நாளில் வாஞ்சியுடன் இருந்தவர் என நம்பப்பட்டவருமான மாடசாமி பிள்ளை கடைசிவரை சிக்கவில்லை. அவரைப் பற்றி உலவிவரும் கதைகளுக்கு இன்றுவரை குறைவில்லை.
காலனியாதிக்க காலத்துச் சதி வழக்குகள் அப்ரூவரின் சான்றை அடிப்படையாகக் கொண்டிருப்பது வழமை. வ.உ.சி.யின் சொந்த ஊரான ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் பிள்ளை ஆஷ் கொலைச் சதி வழக்குக்கு அப்ரூவரானார்.
அவர் கொடுத்த வாக்குமூலம் இந்த விவகாரத்தில் முக்கியமானது.
"இந்தியாவை நாசப்படுத்தும் வெள்ளையராட்சியை ஒழிக்க வேண்டுமானால் எல்லா வெள்ளையரையும் கொல்ல வேண்டுமென்றும், 1908இல் நிகழ்ந்த நிகழ்ச்சிகளுக்கும் சுதேசிக் கப்பல் கம்பெனியை நசுக்குவதில் தலைமையேற்ற ஆஷைக் கொல்ல வேண்டுமென்றும் வாஞ்சி கூறியதாக சோமசுந்தரம் பிள்ளை வாக்குமூலம் அளித்தார்."
வழக்கு விசாரணையின்பொழுது சென்னை நீதிமன்றத் தலைமை நீதிபதி சார்ல்ஸ் ஆர்னால்டு ஒயிட், நீதிபதி எயிலிங்கு ஆகியோர் அப்ரூவரின் வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்டனர்.
இன்னும் முக்கியமாக ,மூன்றாம் நீதிபதி செட்டூர் சங்கரன் நாயர் "சுதேசி இயக்கத்துக்கும் ஆஷ் கொலைக்கும் நேர்க் காரண காரியத் தொடர்பைக் கண்டார்."
நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்த சுதேசி இயக்க எழுச்சியையும், அதையொட்டி வ.உ.சி. தொடங்கிய சுதேசிக் கப்பல் கம்பெனி முயற்சியையும், கோரல் ஆலையில் வ.உ.சி. முன்னின்று நடத்திய வேலைநிறுத்தத்தையும், திருநெல் வேலிக் கலகத்தையும் தொடர்ச்சியாக விவரித்த சங்கரன் நாயர், பாரதி எழுதிய ‘கலெக்டர் வின்ச் சிதம்பரம் பிள்ளைக்குச் சொல்லுதல்’, ‘கலெக்டர் வின்ச்சுக்கு ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை சொல்லிய மறுமொழி’ என்ற பாடலை மேற்கோள் காட்டி, ‘இந்தக் கசப்பான பகையின் நேரடியான விளைவே திரு. ஆஷ் கொலையாகும் . . . வ. உ. சி., சுப்பிரமணிய சிவா ஆகியோரின் கைது மற்றும் சுதேசிக் கப்பல் கம்பெனி விவகாரம் ஆகியவையே இக்கொலைக்கு முக்கியக் காரணமாகும்’ என்று அறுதியிட்டுக் கூறினார்.
ஆஷ் கொலை விசாரணையில் சதி அம்சம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் பதினால்வரில் ஒன்பது பேருக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
ஆஷ் விவகாரம் இதோடு முடிந்துவிடவில்லை. புதுச்சேரியில் தஞ்சமடைந்திருந்த பாரதியார் , வ.வே.சு. அய்யர் முதலானோர் இக்கொலையோடு நேரடியாகத் தொடர்புபடுத்தப்பட்டனர். ஒரு பெரும் போலீஸ் படையும் ஒற்றர் படையும் புதுச்சேரியில் நிறுத்தப்பட்டன. தென்னிந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக ஆஷ் கொலை கடைசிவரை நின்றது.
-இன்னும் வரும்
 


__________________


Guru

Status: Offline
Posts: 24768
Date:
Permalink  
 

ஆஷ்- வாஞ்சி பகுதி 7
பின் வருவது Sriram sengottai அவர்கள் எழுதியது.
2012 ஆகஸ்ட் 1: செங்கோட்டை சென்றிருந்தபோது, ஆற்றங்கரைத் தெருவில் எங்கள் இல்லத்தில் இருந்து 4 வீடு தள்ளியிருக்கும் பெரியவர் செங்கோட்டை வி.ஜனார்த்தனன் ஐயா வீட்டுக்கு வழக்கம் போல் சென்று கதவைத் தட்டினேன். காலை நேரம் எழுந்து மெதுவாக வந்து அமர்ந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். இவர், பணி ஓய்வு பெற்ற நல்லாசிரியர். அகவை 82 தொட்டவர். செங்கோட்டை தொடர்பான ஊர்க் கதைகளை, சுதந்திரப் போராட்ட நினைவுகளை, திருவிதாங்கூர் சமஸ்தான சங்கதிகளை என் சிறுவயது முதல் எனக்குச் சொன்னவர் இவர். இவரிடம் இருந்து கட்டுரைகளை மலையாள மொழிபெயர்ப்புகள் பலவற்றினை கேட்டுப் பெற்று மஞ்சரி இதழ்களில் பிரசுரம் செய்திருக்கிறேன். வாசகர் விரும்பும் அருமையான எழுத்து நடை இவருக்கு!
இம்முறை எங்கள் பேச்சு பழைய பள்ளிக்கூடங்கள், அந்நாளைய படிப்பு, கல்லூரி என்று வந்தது. அப்போது வாஞ்சிநாதனின் படிப்பு பற்றியும் பேச்சு வந்தது. நானும்கூட ஒரு முறை வாஞ்சிநாதன் குறித்த கட்டுரையினை எழுதியபோது, திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.ஆனர்ஸ் படிப்பில் வாஞ்சிநாதன் படித்ததாக எழுதியிருந்தேன். கிடைத்த தகவல் அப்படி. ஆனால், இதை கடுமையாக மறுத்தார் ஐயா வி.ஜனார்த்தனன்.
1900 ஆம் ஆண்டுகளில் செங்கோட்டையில் மலையாளம் சொல்லித் தரும் பள்ளி ஒன்று இருந்தது. அதற்கு மலயான்ஸ்கூல் என்று பெயர். நாங்களும் துவக்க காலத்தில் அப்படித்தான் அழைத்தோம். இன்றும் இந்தப் பள்ளி இருக்கிறது. ஆனால் வாஞ்சிநாதன் பெயரில். காரணம் வாஞ்சியின் வீட்டுக்கு அருகே இருந்த பள்ளி. வாஞ்சி பயின்ற பள்ளி. அதனால் அவன் பெயரே இதற்கு இடப்பட்டுள்ளது. இது அல்ல விஷயம். அன்றைய நாள்களில் பள்ளிக் கல்வி முடிப்பதே பெரும்பாடு. அதையும் மீறி கல்லூரிக்குள் காலெடுப்பதெல்லாம் கனவுதான் பலருக்கு. பொருளாதார ரீதியில் மிகப் பெரும் நிலையில் இருப்போரே கல்லூரியில் காலெடுத்து வைக்க முடியும். ஏழைக் குடும்பத்தில் பிறந்த வாஞ்சியால் திருவனந்தபுரம் கல்லூரியில் நுழைந்திருக்கவே முடியாது. இது தவறான பதிவு. இதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை. யார் இப்படிக் கிளப்பியது என்று தெரியவில்லை.
வாஞ்சி அந்தக் கல்லூரிப் படிப்பு வயதில் இங்கே புனலூரில் காட்டு இலாகாவில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான்.... இப்படியாகப் பேச்சு போனது.
வீட்டுக்கு வந்து மாடியில் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி, வாஞ்சிநாதன் குறித்து இணைய தளங்களில் எழுதப் பட்டிருந்த துர்பிரசாரங்கள் குறித்து யோசித்தேன். வாஞ்சி ஒரு சாதி வெறியாளன் என்று நிறுவுவதற்காக ஒரு கதையைக் கட்டியிருக்கிறார்கள்.
ஆஷ் துரையை 'ரொம்ப நல்லவன்’ ஆக்க மிகவும் முயற்சி செய்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் வரலாறு பெரும்பாலும் கிறிஸ்துவ ஆதிக்க மேல்நாட்டு மக்களின் பாதிப்பில் எழுதப் பட்டவை. இங்குள்ள வரலாறுகள் பெரும்பாலும் கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப, அதற்குத் தகுந்தபடி புனைந்து எழுதப் பட்டவை. பரப்பப் பட்டவை. அதில் ஒன்று, வாஞ்சிநாதன் விஷயத்திலும் நடந்துள்ளது. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தை நசுக்க, சுதந்திர வேட்கை கொண்ட வீரர்களை மனிதாபிமானமே சிறுதும் இல்லாமல் படாதபாடு படுத்திய ஆஷ் துரையை நல்லவனாகச் சித்திரிக்க, வாஞ்சி பலியாடு ஆக்கப்பட்டான்.
கதை இதுதான்... பிரசவ வலியால் துடித்தபடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணை அக்ரஹாரத்தின் வழியே விட மறுத்தானாம் வாஞ்சி. அப்போது ஆஷ் துரை அங்கே வந்து அக்ரஹாரத்தின் வழியே அந்தப் பெண்ணை அழைத்துச் செல்ல வழி செய்தானாம்... இதனால் ஆஷ் துரை மீது வஞ்சம் வைத்த வாஞ்சி, அவனை சுட்டுக் கொன்றானாம்...
இப்படியொரு கதையைப் புனைந்தவர்களைக் காட்டிலும், அதைச் சொல்லிக்கொண்டு திரியும் நபர்கள்தானே சாதி வெறி பிடித்தவர்கள்! கட்டிய மனைவி பிரசவ காலத்தில் தவிப்பதையும், மாமனார் வீடு சென்ற அவளைக் காணவும் பொழுதின்றி, தாம் மேற்கொண்ட பாரதமாதா சங்கத்தின் விடுதலைப் போராட்டப் பணிகளில் முழு ஈடுபாடு காட்டிய சிற்றிளைஞன் வாஞ்சிக்கு இப்படியோர் அவப்பெயர் சூட்ட வேண்டுமானால், இவர்களின் உள்ளத்திலும் அறிவிலும் சாதி வெறி எப்படிப் புரையோடிப் போயிருக்க வேண்டும்!?
இந்தக் கதையில் இது எந்த அக்ரஹாரத்தில் நடந்தது என்று குறிப்பில்லை. பிரசவ வேதனையில் அந்தப் பெண் வந்தபோது, சரியாக அதே நேரம் ஆஷ் துரையும் வந்தது எப்படி என்று கூறவில்லை. இவை எல்லாவற்றையும் விட முக்கியமான அம்சம், ஊரின் பூகோள அமைப்பைப் புரிந்துகொள்ளாமல் விடப்பட்டிருக்கும் கதைதான்!
செங்கோட்டை அந்தக் காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. அதற்கும், பிரிட்டிஷ் இந்தியாவுக்கும் தொடர்பு இல்லை. 1956ல் மொழி வாரி மாகாணங்கள் அமையப் பெற்ற போதுதான், கன்னியாகுமரி, நாகர்கோவில் சில பகுதிகள், செங்கோட்டை ஆகிய பகுதிகள் தமிழகத்துடன் இணைந்தன. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சமவெளிப் பரப்பாக இருந்தாலும், சமஸ்தானத்துடன் இருந்த பகுதி என்பதால் அங்கே பிரிட்டிஷ் அதிகாரிகள், ராணுவத்தினர் நுழைவதற்கு அனுமதி தேவை.
திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் ஒரு உடன்படிக்கை இருந்தது பிரிட்டிஷாருக்கு. தேடப்படும் சுதந்திரப் போர் வீரர்கள் சமஸ்தானத்தில் எங்காவது ஒளிந்திருந்தால் அவர்களைப் பிடித்து பிரிட்டிஷார் வசம் ஒப்படைக்க வேண்டும். இது உடன்படிக்கை. மற்றபடி, திருவிதாங்கூர் ஒரு சுதந்திரமுள்ள, அதே நேரம் அடிமைப்பட்ட நிலை என இரண்டுங்கெட்டான் நிலையில் இருந்தது.
இத்தகைய சூழலில், திருநெல்வேலி சப்-கலெக்டர் அந்தஸ்தில் இருந்த அதிகாரி ஆஷ் துரை, தென்காசி வரை மட்டுமே வர இயலும். குற்றாலத்தில் குளிக்க உரிமை இருந்தது. அதைத் தாண்டி அவர்கள் சமஸ்தானப் பக்கம் வரவும் முடியாது. இன்றும் செங்கோட்டை நகருக்கு ஒரு கி.மீ. வெளியே பிரானூர் பார்டர் என்று ஒரு பகுதி உள்ளது. அதுதான் சமஸ்தானத்தின் நுழைவாயில். பார்டரைத் தாண்டி ஆங்கிலேயர்கள் வர இயலாது. அவர்களுக்கு ஆட்சி அதிகாரமும் கிடையாது.
அவ்வாறு இருக்க, வாஞ்சிநாதன் இருந்த திருவிதாங்கூர் ஆட்சிக்கு உட்பட்ட செங்கோட்டையில் ஆஷ் துரை கட்டளை இட்டு ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை பிரசவத்துக்காக அக்ரஹாரம் வழியே செல்ல வைத்தார் என்று புனையப்பட்ட கதை எவ்வளவு மோசமான சாதி வெறியில் உமிழப் பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இன்றைய செங்கோட்டை ஊரின் அமைப்பில், அக்ரஹாரங்கள் இருந்த பகுதியில் நீங்கள் நின்று பாருங்கள் புரியும். மொத்தம் ஏழு அக்ரஹாரங்கள் இருந்துள்ளன. சிவன் கோவில் தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, பெருமாள் கோவிலை ஒட்டிய இரண்டு மாட வீதிகள், கிருஷ்ணன் கோவில் பின்னுள்ள ஒரு மாடத் தெரு... இப்படி. இந்தப் பகுதிகள் ஊரில் இருந்து ஒதுக்குப் புறமாக தனித்திருக்கும். ஊரின் பிரதான கொல்லம் சாலை அக்ரஹாரங்களைச் சுற்றி வெளியே செல்லும். ஊருக்கு வெளிப்புறமாக தனித்திருக்கும் அக்ரஹாரங்கள் என்பதால், மருத்துவமனைகள் இருக்கும் செங்கோட்டை நகருக்குச் செல்வதற்கு நீங்கள் அக்ரஹாரங்களை அவசியம் கடந்துதான் செல்ல வேண்டும் என்ற நிலை இல்லவே இல்லை.
அப்படி இருக்கும்போது, எங்கிருந்து அந்த கீழ்ச் சாதிப் பெண் வந்தாள் என்ற விவரம் யாராலும் சொல்லப் படவுமில்லை. அந்தப் பெண்ணை மருத்துவம் பார்க்க அக்ரஹாரம் வழியேதான் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவசிய நிலை இல்லாத போது, எதற்காக அப்படி அழைத்துச் சென்றார்கள் என்ற குறிப்பும் இல்லை.
இப்படி எல்லாம் சிறுமைக் கற்களை எய்து, ஒரு சுதந்திரப் போராட்ட வீரனை மட்டும் இந்த சாதி வெறியர்கள் கொச்சைப் படுத்தவில்லை, இந்திய சுதந்திரப் போராட்டத்தையே கொச்சைப் படுத்துகிறார்கள். காரணம், இந்திய சுதந்திரத்தால், கிறிஸ்துவ மதம் பரப்பும் செயல் தடைப் பட்டதாக எண்ணினார்கள் அவர்கள். சுதந்திரப் போராட்டத்தில் சாதி பார்த்து பாரத மாதா சங்கம் அமைக்கவில்லை. 1911ல் மாண்டு போன வாஞ்சிநாதனும், அவனுடன் கதை முடிந்துபோன பாரத மாதா சங்கமும் இத்தகைய சிறுமதியாளர்கள் வளர்த்துவிட்ட சாதி வெறிச் சங்கமுமில்லை, சாதி வெறி மனிதமும் இல்லை.
மாவீரன் மாடசாமியின் வரலாற்றைப் படியுங்கள். கல்கி எழுதிய பொங்குமாங்கடல் சிறுகதையைப் படியுங்கள். தினமணியின் முதல் ஆசிரியர் தென்காசி எஸ். சொக்கலிங்கத்தின் வரலாற்றைப் பாருங்கள். எத்தகைய சுயநலமற்ற தியாகத் திருவுள்ளங்கள் இந்த சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களே இத்தகைய புனைகதைகளைக் கேட்டு எழுதுவது வேதனையிலும் வேதனை.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard