"அரசனானவன் தனது யுத்த ஆரம்பத்திற்கேனும் குடிபடை அமைத்தலுக்கேனும் தனதுயிர் நிலை காப்புக்கேனும் ஒவ்வொருவரைத் தெரிந்தெடுத்துக் காரியத் தலைவர்களாக்க வேண்டும்.
அரசரது தன்மகன் மகங்களைக் குறைவற நடாத்துகின்றவனும், அரசனது பொருளை அபகரிக்காது பாதுகாக்கின்றவனும், அரசன் இன்பத்திற்கு இடையூறு செய்யாதவனும் அரசன் உயிருக்கு ஓர் தீங்கும் வராமல் காக்கிக்கின்றவனுமாகியவன் எவனோ அவனே நற்குடியிற் பிறந்தவன் எனப்படும்.
இத்தகைய குடிப்பிறப்பையும் அவனவன் குணாகுணச் செயலையுங் கண்டறியாது வாட்டசாட்டமுள்ள ரூபமுடையவனாகவும் கற்றவனாகவும் இருக்கின்றான் என்று எண்ணி அரண்மனை ஏவலில் வைப்பது அரயன் தீங்கடைவதற்கு ஆதாரம் எனப்படும்.
அதாவது பிச்சையேற்றே வளர்க்கும் குடும்பத்திற் பிறந்த பிள்ளையாயினும், அந்தரங்க விபச்சாரத்திற்விடுத்து அதினாற் சீவிக்கும் குடும்பத்திற் பிறந்தப் பிள்ளையாயினும், தனக்குந் தனது இஸ்தீரிகளுக்கும் யாது மனக்கேடு வந்தாலும் அதை ஒரு பொருட்டாகக் கருதாமல் செல்வபொருள் கிடைத்தால் போதும் என்று அலையும் குடும்பத்தில் பிறந்த பிள்ளையாயினும், ஒருவன் கல்விகற்று அரசனது ஆளுகை உத்தியோகத்தில் அமர்ந்து விடுவானாயின் தான் பிறந்த குடும்ப மிலேச்ச செய்கைகள் மாறாமல் பொருளாசை அதிகரிப்பால் அரண்மணையிலுள்ள நூறு குடிகளைக்கெடுத்து தான் தனவந்தனாகத் தோன்றுவான்.
இவனது மிலேச்ச செய்கைகளை நாளுக்கு நாள் அறிந்துவந்த அரசன் இவனை நீக்கும்படி ஆரம்பிப்பானாயின் அவ்வரசனுக்கும் அரசாங்கத்திற்கும் தீங்கு விளைவிக்கத்தக்க தனது மிலேச்ச குணத்தைக் காட்டிவிடுவான்.
அங்ஙனமின்றி பித்தளையைத்தீட்டி பிரகாசிக்கக் காட்டியபோதிலும் அதைப் பொன்னென்று நம்பாமல் உரைக்கல்லும் ஆணியுங்கொண்டு சோதிப்பதுபோல் அரச அங்கத்திற் சேர்ப்பவர்களின் உருவங்களை நோக்கி சேர்க்காமல் அவரவர்கள் குடும்ப குணாகுணாச் செயல்கள் அறிந்து சேர்த்தல் வேண்டும்."
- அயோத்திதாசர்
பௌத்தத்தை முன்வைத்து குலப்பெருமை பேசுவதும், “இயல்பாகவே அறிவின்றி தாழ்ந்துள்ள சில வகுப்பாரும் உண்டு. சாதித் தலைவர்களின் விரோதத்தினால் தாழ்த்தப்பட்டுள்ளவர்களும் நாளதுவரையில் தாழ்த்திவருகிறவற்றுள் தாழ்ந்தவர்களுமாகிய ஓர் வகுப்பாரும் உண்டு. அவர்கள் யாரென்பீரேல் – குறவர், வில்லியர், சக்கிலியர்,மலமெடுக்குந் தோட்டிகள் இயல்பாகவே தாழ்ந்தநிலையிலுள்ளவர்கள்.” என்று ஆவேசம் கொள்வதும்தான் அயோத்திதாசரின் பூர்வ பௌத்தமாய் இருக்கிறது.
பௌத்தத்தை பூர்வ பிராமணியமாகவே அயோத்திதாசர் வரையறுக்கிறார். வேஷ பிராமணர்கள் குறித்து கட்டுக்கதையொன்றை இட்டு நிரப்பி அதை வரலாறாக மாற்றி தனது பௌத்தத்தை பூர்வ பிராமணத் தத்துவமாக முன்னிறுத்தும் அயோத்திதாசரை என்னவென்று சொல்வது?
அடையாள அரசியலால் புரட்சியாளராகக் காட்டப்பட்ட அயோத்திதாசரின் பௌத்தம் பார்ப்பனியம் முன்வைக்கும் பௌத்தம் மட்டுமல்ல அது மிக மோசமான குணாதிசயங்களையும் குலப்பெருமையையும் முன்னெடுக்கும் பௌத்தம்.
திரிப்பதும்
கட்டுக்கதையாற்றுவதும்தான்
அயோத்திதாசரின்
ஒரிஜினல் பிராமணப் பௌத்தமா?
சிந்தியுங்கள் தோழர்களே சிந்தியுங்கள்.
சிந்தித்தப்பின் கேள்வி வந்தால் அதை முன்வையுங்கள்.
பதில் வராவிடில் அதை ஒர்ஜினல் பிராமண மௌனம் என கவனத்தில் கொள்ளுங்கள்.