New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிந்து சமவெளி குறியீடுகள் படிக்கப்பட்டது என்றொரு மோசடி


Guru

Status: Offline
Posts: 24774
Date:
சிந்து சமவெளி குறியீடுகள் படிக்கப்பட்டது என்றொரு மோசடி
Permalink  
 


சிந்து சமவெளி குறியீடுகள் படிக்கப்பட்டது என்றொரு மோசடி

தேமொழி

Mar 28, 2020

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வரை (3300–1300 பொது காலத்திற்கு முன்னர் / பொ.கா.மு / BCE) சற்றொப்ப இரண்டாயிரம் ஆண்டுகள் சிறந்து விளங்கியது சிந்து சமவெளி நாகரிகம். இது இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் சிந்து ஆற்றங்கரையில் உருவான நகர நாகரிகம். பண்டைய உலகில் புகழ் பெற்று விளங்கியிருந்த சுமேரிய, எகிப்து, சீன நாகரிகங்கள் போன்று, வெண்கலக் கால உலகின் சிறந்து விளங்கிய ஆற்றங்கரை நகர நாகரிகம். சுட்டக் களிமண் செங்கற்களால் சீரிய முறையில் அமைக்கப்பட்ட கட்டடங்களும், நேரான வீதிகளும், பொதுமக்கள் குழுமும் இடங்களும், நீர்த் தேக்கங்களும், குளமும், திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டிருந்த நகரின் கழிவுநீர் வடிகால்களும், நீர்நிலைகளும், வணிக முத்திரைகளும் இன்றைய நாகரிகத்தில் வாழும் பலரையும் கூட வியப்பில் மூழ்கச் செய்யும். சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு, நீரற்றுப் போன இந்த நகரத்தில் வாழ்ந்த மக்கள் புதிய நீர்நிலைகளைத் தேடி இடம் பெயர்ந்து கங்கைச் சமவெளியில் குடியேறினார்கள் என்றும், சிந்து ஆறு தனது தடத்தை மாற்றிக் கொண்டதால் நீரற்று உழவுத்தொழில் நலிவடைந்து மக்கள் நகரைக் கைவிட்டு வெளியேறி இந்தியா முழுவதும் பரவினர் என்பதும் ஆய்வாளர்களின் கருத்து.

siragu civilizations

ஆனால், இன்றுவரையிலும் உண்மையில் என்ன நடந்திருக்கலாம் என்பதை உறுதி செய்ய முடியாத நிலையில்தான் மறைந்துபோன சிந்துசமவெளி நாகரீகத்தின் வரலாறு இருக்கிறது. சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய முத்திரைகளின் எழுத்துக்கள் என்னதான் கூறுகின்றன என்பதும் பொதுமக்கள் மற்றும் ஆய்வாளர்களின் ஆர்வத்தைத் தூண்டிய வண்ணமே இருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டாகச் சிந்து சமவெளிப்பகுதியில் அகழாய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பல தடயங்களும், ஆயிரத்திற்கும் மேலான நகரக் குடியிருப்புகளும் அவற்றில் பல ஆயிரக்கணக்கான மக்களும் வாழ்ந்து வந்தனர் என்பது மட்டுமே இப்பொழுது நமக்கு உறுதியாகத் தெரியும் தகவல். சிந்துசமவெளி நாகரிகத்தில் திராவிடக் கூறுகள் உள்ளன என்பது பெரும்பாலான ஆய்வாளர்கள் முடிவு. சிந்துவெளியின் மறைவுக்குப் பிறகு கைபர், போலன் கணவாய்கள் வழி இந்தியாவிற்குள் ஆரியர் குடியேறினர் என்ற கோட்பாட்டை மறுதலிக்கும் இந்துத்துவ தீவிரவாதிகள் சிந்துவெளி நாகரிகத்தை வேத கால நாகரீகம் என்றும் அது சரஸ்வதி-சிந்து நாகரிகம் என்று அழைக்கப்பட வேண்டும் என்று கூறி வருவதும் ஒவ்வொரு இந்தியரும் அறிந்ததே.

சிந்துவெளிக்கு உரிமை கொண்டாடும் சரஸ்வதி:

இந்தியாவின் 2020 ஆண்டின் நிதிநிலை அறிக்கையை வெளியிட்ட நடுவண் அரசின் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்த அறிக்கையில் சிந்துசமவெளி குறியீடுகள் படிக்கப்பட்டுவிட்டன என்ற கருத்தொன்றையும் குறிப்பிட்டார். “சரஸ்வதி சிந்து நாகரிகத்தின் பட்டறைகளும், ஹரப்பன் முத்திரைகளும் குறிப்பிடத்தக்கவை. சரஸ்வதி சிந்து நாகரிகம் சுமார் கி.மு 4000-வது ஆண்டுக்கு முற்பட்டது. குறிப்பாக இந்த முத்திரைகள் கி.மு 3300-வது ஆண்டைச் சேர்ந்தவை. `ஷ்ரேனி’ என்றால் `பட்டறை’ என்றும் முத்திரையில் காணப்படும் `சேட்டி’ எனும் சொல்லுக்கு மொத்த வியாபாரி’ என்றும் பொருள், `பொத்தார்’ எனும் சொல்லின் பொருள் `கருவூலத்தில் கனிமங்களின் அளவை மதிப்பிடுபவர்’ என்று கண்டறியப்பட்டுள்ளது. சரஸ்வதி சிந்து நாகரிகத்திலிருந்து வரும் சொற்கள் அனைத்தும் ஹைரோகிளிஃபிக்ஸ் ஆகும். இதுபோன்ற சுவாரஸ்யமான சொற்கள் மூலம் நாம் வர்த்தகம் மற்றும் வர்த்தகம் தொடர்பான தொழில்துறையை அறிந்துகொள்ள வேண்டும். உலோகம் மற்றும் வர்த்தகம் மற்றும் பலவற்றில் திறமையான திறன்களைக் கொண்ட இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ச்சியான நாகரிகமாக இருந்து வருவதை வார்த்தைகள் காட்டுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் இத்தகைய தொழில்கள் இருந்துள்ளது தெரிகிறது. தொழில் முனைவுதான் இந்தியாவின் வலிமை. அதுவே சிந்து-சரஸ்வதி நாகரிகம்” என்று குறிப்பிட்ட அமைச்சர் நிர்மலா சீதாராமன் சரஸ்வதி சிந்து நாகரிகத்தையொட்டிய ஹரப்பா காலத்தைய பகுதியான அகமதாபாத் அருகில் உள்ள லோதலில் சிறப்பு மிக்க அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

இந்தியா என்னும் “இந்த நாடு இந்து நாடு. இந்த நாட்டு மக்கள் இந்து மக்கள். இந்த நாட்டின் கலாச்சாரம் இந்து கலாச்சாரம். இந்த நாட்டின் தத்துவம் இந்துத்துவம். வேதங்களும், இதிகாசங்களும், உபநிடதங்களும், புராணங்களும் இந்த நாட்டின் பழம் பெருமைகளையும், பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் விளக்கிக் கூறுவன. சிந்து-சரஸ்வதி நாகரிகம் என்பது நமது வேத நாகரிகமே. இங்கே ஆரிய-திராவிட இன வாதங்கள் வெள்ளையரால் ஏற்பாடு செய்யப் பட்ட பொய்யும் புளுகும் புனைசுருட்டும் கலந்த, சற்றும் ஆதாரம் இல்லாத கட்டுக் கதைகள்” என்ற கருத்து கொண்டவர்கள் இந்து தீவிரவாதிகள். நிதிநிலை அறிக்கையில் சிந்துவெளி நாகரிகத்தை, சரஸ்வதி சிந்து நாகரிகம் என்று மீண்டும் மீண்டும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுக் கொண்டே இருந்தது இந்துத்துவா பிரிவின் கோணத்தை வலியுறுத்தும் முயற்சியன்றி வேறில்லை. சிந்துவெளி நாகரிகம் என்பதை வேதப் பண்பாட்டின் “சரஸ்வதி சிந்து நாகரிகம்” எனப் பெயர்சூட்டிப் பரப்பிக் கொண்டிருப்பது இந்துத்துவ வாதிகள் தொடர்ந்து பல ஆண்டுகளாகச் செய்யும் முயற்சிகளில் ஒன்று. அந்த முயற்சியின் அதிகாரப்பூர்வமான குரலாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் குரல் அவையில் எதிரொலித்ததாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுவரை சிந்துசமவெளி குறியீடுகள் படிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. அவற்றைப் படிப்பதற்குக் கடந்த ஒரு நூற்றாண்டாக பல்வேறு ஆய்வாளர்கள் முயன்று வருகிறார்கள் என்பதுதான் நிலைமை. இவ்வாறு வலதுசாரி இந்துத்துவா வாதிகள் உருவாக்கிய புரட்டுகளைப் புரட்டிப்போட்ட ஆய்வாளர்களும் உள்ளனர். அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் மைக்கேல் விட்சலும், ஸ்டீவ் ஃபார்மரும்.

சிந்து சமவெளி குறியீடுகளைப் படிக்கும் முயற்சிகள்:

மைக்கேல் விட்சல் சமஸ்கிருதம் மற்றும் இந்தியவியல் துறையின் ஆய்வாளர். ஸ்டீவ் ஃபார்மர் அடிப்படையில் உயிர்களின் நரம்பியல் துறை சார்ந்தவர். மூளை, அதில் தோன்றும் எண்ணங்கள், சிந்தனைவழி உருவாகும் மெய்யியல், மற்றும் மாயையால் உருவாகும் சமயக்கோட்பாடுகள், உலக சமய வரலாறு குறித்த ஒப்பாய்வு, அவற்றை இக்காலத்தின் கணினிவழி ஆராயும் முறை என்று பலதரப்பட்ட வகையில் விரிவான ஆய்வெல்லைகளைக் கொண்டவர். இவர்கள் இருவரையும் இணைக்கும் புள்ளி சிந்துசமவெளிச் சின்னங்களில் இவர்கள் மேற்கொள்ளும் ஆய்வு. ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பார்போலா, ஜானதன் மார்க் கெனோயர், கிரிகோரி போஷல், பிரியான் வெல்ஸ் போன்றோர் சிந்துசமவெளியின் எழுத்து என்று கூறும் கருத்திற்கு முற்றிலும் மாறாக “சிந்துவெளி குறியீடுகள் ஒரு எழுத்துமுறையே அல்ல, அது மொழி அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கவில்லை” (nonlinguistic symbol systems) என்பதில் ஒத்த கருத்துடையவர்கள் மைக்கேல் விட்சலும் ஸ்டீவ் ஃபார்மரும். அது மட்டுமன்றி இந்துத்துவ கட்டுக்கதைகளைத் தவிடுபொடியாக்கும் வகையில் சிந்து சமவெளி நாகரிக அகழ்வாராய்ச்சியில் கிடைத்த முத்திரைகளுக்கும் இந்து சமயத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை. ரிக்வேதம், இந்து சமயம், வேதகால நாகரிகம் ஆகியவற்றுக்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் இவர்கள் முன்வைக்கும் கருத்து. இந்து தீவிரவாதிகள் புனைகதைகள் மூலமும் புரட்டுகள் மூலமும் இந்திய வரலாற்றைக் கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்று இந்தியா வலதுசாரிகளை நேரிடையாகவே குற்றம் சாட்டுபவர்கள் இந்த ஆய்வாளர்கள்.

இந்துத்துவ வாதிகளும் தங்கள் பங்கிற்கு, “ஸம்ஸ்க்ருதப் பேராசிரியர்!” விட்சல் ஒரு ஹிந்து விரோதி, அவரது செயல்பாடுகள், இந்திய விரோத நடவடிக்கைகள் ஆகியவைதான் மைக்கேல் விட்சலின் மேதாவிலாசம் மற்றும் யோக்யதாம்சங்கள் என ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மைக்கேல் விட்சலை கரித்துக் கொட்டுவது வழக்கம். ஸ்டீவ் ஃபார்மர் என்று இவருக்கு ஒரு அடிப்பொடி இருக்கிறார், அவரும் மேற்சொன்ன புனிதப் பணியில் இவருடன் சேர்ந்து கொள்பவர் என்று அவருடன் இணைந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் கலிபோர்னியா ஆய்வாளர் ஸ்டீவ் ஃபார்மரும் தொடர்ந்து அடுத்துத் தாக்கப்படுவார். இவ்வாறு இந்துத்துவ வாதிகளுக்கு எரிச்சல் மூட்டும் வகையில் இவர்கள் என்னதான் செய்துவிட்டார்கள் என்ற கேள்விக்குப் பதில்… இந்துத்துவ வாதிகளது ‘குதிரைவால் முத்திரை’ என்ற வரலாற்றுப்போலியை இவர்கள் தோலுரித்துக் காட்டிவிட்டார்கள் என்பதுதான். இது சுமார் 20 ஆண்டுகளுக்கு முந்தைய கதை என்பதால் இன்றைய இளைய தலைமுறையினரில் இதை அறிந்திருப்போர் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. “ஹரப்பாவில் ஒரு குதிரை விளையாட்டு: சிந்து சமவெளி குறியீடுகள் படிக்கப்பட்டது என்றொரு புரட்டு” என்பதை, “Horseplay in Harappa: The Indus Valley decipherment hoax” என்ற தலைப்பில் இந்து நாளிதழின் ஃப்ரண்ட்லைன் இதழில் எழுதியுள்ளார்கள் மைக்கேல் விட்சலும் ஸ்டீவ் ஃபார்மரும். இந்தக் கட்டுரையை இந்திய வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் அவர்களும் இந்தியில் மொழி பெயர்த்துள்ளார். பல்லாயிரம் முறை தரவிறக்கப்பட்டு ஆவலுடன் படிக்கப்பட்டதும், நவீன இந்திய அரசியல் வகுப்புகளில் பாடமாக வைக்கப்பட்ட பெருமையும் இக்கட்டுரைக்கு உண்டு. இந்தக் கட்டுரையால் கட்டுடைக்கப்பட்ட இந்துத்துவ வாதிகளின் கட்டுக்கதை என்னவென்பதைப் பார்ப்போம்.

சிந்து சமவெளி குறியீடுகளைப் படித்துக் காட்ட வந்த ராஜாராம்:

siragu book cover

இந்தியா செய்தி நிறுவனம் 1999 ஆம் ஆண்டில் சிந்துசமவெளியின் குறியீடுகள் கொண்ட 2000 முத்திரைகள் படிக்கப்பட்டுவிட்டதாக ஒரு செய்தி வெளியிட்டது. தொடர்ந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுப் பரபரப்பாக்கியது.  அக்காலத்திலும் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சிதான் இந்தியாவில் நடந்து கொண்டிருந்தது. அட்டல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தார் என்பதையும் கவனத்தில் கொள்ளலாம். ‘தி டிசைஃபார்ட் இண்டஸ் ஸ்கிரிப்ட்’ என ஒரு நூலை நட்வர் ஜா மற்றும் என்.எஸ். ராஜாராம் என்பவர்கள் எழுதி இருந்தனர் (The Deciphered Indus Script: Methodology, Readings, Interpretations; by N. Jha/Natwar Jha & N. S. Rajaram/Navaratna Srinivasa Rajaram). அதுநாள் வரை பெரிதும் அறிந்திருக்கப்பட்டிராத நட்வர் ஜா வேதங்கள் குறித்த விற்பன்னராக மக்கள் மத்தியில் அக்காலத்தில் அறிமுகமானார். என்.எஸ். ராஜாராம் அமெரிக்காவில் 1980களில் பொறியியல் துறையில் பணியாற்றி 1990களில் இந்துத்துவா பரப்புரையாளர் என்ற வண்ணத்துப் பூச்சியாக உருமாற்றம் பெற்றார். இந்திய வரலாற்றைச் செப்பனிடுவது அவரது பணியாக மாறியது. இந்த நோக்கில் ஏற்கனவே 1995இல் டேவிட் ஃபிராலி என்பவருடன் இணைந்து எழுதிய நூலில் ஆரியர்கள் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கிய நகர நாகரிகம் கொண்ட மக்கள் என்று குறிப்பிட்டார். கால்நடை வளர்ப்பதையே தொழிலாக, குதிரைகளுடன் நாடோடிகளாகப் புலம் பெயர்ந்து கொண்டிருந்த ஆரியர்கள் என்ற கருத்தை மறுக்கும் நோக்கமும், ஆரியர்களைச் சிந்துசமவெளி நாகரிகத்துடன் இணைக்கும் முயற்சியும் இதன் அடிப்படை. சிந்து நதி நாகரீகம் ரிக் வேத சரஸ்வதி நாகரீகம் என்று காட்டும் முயற்சி என்பதை இந்தியா வரலாறு அறிந்தவருக்குப் புரிவதில் சிக்கல் இருக்காது.

siragu first writing

என்.எஸ். ராஜாராம் அவருடைய ‘தி டிசைஃபார்ட் இண்டஸ் ஸ்கிரிப்ட்’ நூலில் மனிதகுல வரலாற்றில் எழுத்து குறித்துக் கிடைத்திருக்கும் மிக மிகத் தொன்மையான தடயம் ஒன்றையும் படித்துள்ளார். பாகிஸ்தானில் கிடைத்த, காலத்தில் மிகத் தொன்ம குறியீடு என்று அறியப்பட்ட, மனித குல வரலாற்றின் முதல் எழுத்துத் தடயம் எனக் கருதப்படும் 5500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தடயம் ஒன்றில் இருக்கும் எழுத்துக்கள் கூறுவது ‘ஆசீர்வதிக்கப்பட்ட புனித நிலம் சரஸ்வதி நதியால் சூழப்பட்டிருக்கிறது’ ( Ilavartate vara) என்ற ரிக் வேதம் குறிப்பிடும் வாசகம் என்று கூறியுள்ளார். ‘சிந்துவெளி-சரஸ்வதி’ நாகரீகம் என்பது ரிக்வேத கால நாகரிகமே, உலகிலேயே நாகரிகத்தின் தொட்டில் எனக் கூறினால் அது ‘சிந்துவெளி-சரஸ்வதி’ நாகரீகம் என்றுதான் கூற வேண்டும். இப்பகுதியிலிருந்துதான் கணிதம் வானியல் தத்துவம் அறிவியல் போன்றவை எல்லாம் கிரேக்க பாபிலோனிய ஐரோப்பிய ரோமானிய நாகரீகங்களுக்குப் பரவியது என்பதுதான் நூலின் மையக் கருத்து என்று சுருக்கமாகக் கூறலாம் என இந்த நூல் குறித்து மைக்கேல் விட்சலும் ஸ்டீவ் ஃபார்மரும் குறிப்பிடுகிறார்கள். அதாவது படிக்கப்பட்ட சிந்துவெளி எழுத்துக்கள் கூறாவதாகச் சொல்லப்பட்டவை இந்துத்துவா மக்களின் தேசிய கனவுகளை உறுதிப்படுத்தும் செய்தி. மேற்கொண்டு, இந்தியவியல் ஆய்வாளர்கள் நூலில் என்.எஸ். ராஜாராம் கூறிய எழுத்துக்களைப் படிக்கும் வழிமுறையை ஆராய்ந்ததில், அதில் கூறப்படும் படிக்கும் முறையைப் பின்பற்றுவோமானால் மனதிற்குத் தோன்றும் எதையுமே சிந்துவெளி குறியீடுகளில் இருப்பதாகப் படிக்க இயலும், அவ்வளவு ஏன் தொன்ம ஆங்கில நார்ஸ் செய்திகளைக் கூட அதில் இருப்பதாகக் காட்ட வழியுண்டு என்று ஆய்வாளர் சிலர் கூறியிருக்கிறார்கள்.

அதைவிட, அந்த நூலில் இந்தியவியல் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்தது நூல் அளித்த தரவுகளே. சிந்துவெளி நாகரிகத்தையும் ரிக் வேதகால வாழ்வுமுறையையும் இணைக்கும் வகையில் புதிய இணைப்புச் சங்கிலி தரவுகள் நூலில் நிறைந்திருந்ததும் அவை இந்துத்துவ சார்பாளர்களின் வரலாற்றைத் திருத்தும் பாணியில் அமைந்திருந்ததையும் ஆய்வாளர்கள் கவனிக்கத் தவறவில்லை. தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் ஆய்வுகள் அடிப்படையில் நன்கு வளர்ச்சியடைந்த முதிர்ந்த சிந்துவெளி நாகரீகத்தின் காலம் என்பது பொ.கா.மு. 2600 – பொ.கா.மு. 1900 இடைப்பட்ட காலம். சமஸ்கிருதம் என்ற மொழி பயன்பாட்டின் 2000 ஆண்டுகளுக்கு முந்தியது சிந்துவெளி எழுத்துகள்.

சிந்துவெளிக்குத் தேவை ஒரு குதிரை:

சிந்துவெளி நாகரிகத்தையும் ரிக் வேத வாழ்வியலையும் பிரித்து வேறுபடுத்தும் ஒரு தெளிவான குறிப்பு ‘குதிரை.’ சிந்துவெளி முத்திரைகளில் நிறைந்திருப்பவை ‘பாஸ் இண்டிகஸ்’ என அறியப்படும் திமில் கொண்ட காளைகள் (Humped bull, or zebu, or Bos Indicus). குதிரைகள் அப்பொழுது இந்திய நிலப்பரப்பில் இல்லை, சிந்துவெளி நாகரிகத்தில் பயன்படுத்தப்படவுமில்லை, ஆகையால் குதிரைகள் சிந்துவெளியில் கண்டு எடுக்கப்பட்டுள்ள முத்திரைகளிலும் கிடையாது. அதாவது, விளக்கமாக, கீழடியில் அண்மையில் திமில் எருதின் எலும்புகள் கண்டு எடுக்கப்பட்டது போல குதிரையின் எலும்புகள் சிந்துவெளியில் கிடைத்ததில்லை. குஜராத்தின் சுர்க்கோட்டடா பகுதியில் கிடைக்கப் பெற்ற குதிரை எலும்புகள் பிற்காலத்தையவை ( 2100 பொ.கா.மு.- 1700 பொ.கா.மு.) மட்டுமல்ல, அவை கால்நடையாக வளர்ப்பில் உருவான குதிரை (Equus caballus). இந்தியப் பகுதியில் கடந்த 12,000 ஆண்டுகளில் இயற்கையாகத் திரியும் காட்டுக் குதிரை இருந்ததில்லை. குதிரை வளர்ப்பும் 3500 பொ.கா.மு. முன் துவங்கவுமில்லை. ஆகவே, சுர்க்கோட்டடா குதிரை ஒரு இறக்குமதி விலங்கு, உள்ளூரில் வளர்க்கப்பட்ட விலங்கு. இந்த தடயம் குறித்தும் ரிச்சர்ட் மெடோ (Richard Meadow), எஸ். பெக்கானி (S. Bökönyi) போன்ற பிற ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர், அவர்கள் சுர்க்கோட்டடா குதிரை தடயத்தை ஏற்பதாக இல்லை. ஆயிரக்கணக்கான சிந்துவெளி முத்திரைகள் மற்றும் கிடைத்த மற்ற பிற தொல் தடயங்களில் காளைகள், எருமைகள், மயில்கள், யானைகள், புலிகள் மற்றும் காண்டாமிருகங்கள் வரை பல விலங்குகளின் உருவங்கள் கிடைத்துள்ளன… குதிரையைத் தவிர.

siragu The humped bull - Bos indicus

ஆனால், இந்து சமயத்தின் தொன்ம நூலான இந்தோ-ஐரோப்பிய மொழியில் உருவான ரிக் வேதத்தில் எங்கும் குதிரைகள் துள்ளி ஓடும், அசுவம் பலி கொடுத்து அவி சொரிந்து ஆயிரம் வேட்டல் காட்டப்படும், அஸ்வின் என்ற குதிரை வீரர்கள் இருப்பார்கள், அக்னியும் உஷையும் குதிரைகள் இழுக்கும் தேரில் சவாரி செய்வார்கள். சரஸ்வதி ஆறு தேர் போல ஓடும். குதிரைக்கென்றே ரிக் வேதத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. குதிரையைப் பலி கொடுக்கும் முறையைப் பற்றி மண்டலம் 1, பாடல் 162 மிக விரிவாக விளக்குகிறது. சொல்லப்போனால், குதிரையைக் குறித்து ரிக் வேதம் பேசுவது போல வேறு எந்த விலங்கினையும் அந்த அளவு பேசுவதில்லை என்றும் கூறப்படுகிறது. சிந்துவெளி தொல்லியல் ஆய்வுகள் படியோ சிந்துவெளியில் குதிரைகளும் கிடையாது, அவை இழுக்கும் தேரும் கிடையாது. ஆகவே தொல்லியல் மரபணு தரவுகளின் அடிப்படையில் ஆரியர்களுடையது சிந்துசமவெளி நாகரிகம் எனப் பேசவும் வழியில்லை.

தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர் எம். கே. தவலிக்கர் (Madhukar Keshav Dhavalikar) ரிக் வேதத்தின் காலம் குறித்து அதன் அகச் சான்றுகள் மூலம் விளக்குவது மேலும் தெளிவுபடுத்தும். ரிக் வேதம் எக்காலத்தில் உருவானது என்று அறிய உதவும் குறிப்புகள் இரண்டு. அவற்றில் ஒன்று குதிரை மற்றொன்று இரும்பு. ஆரியர்கள் என்றால் குதிரை விரும்பிகள். செம்பு என்ற உலோகம் சமஸ்கிருதத்தில் ‘அயஸ்’ (ayas) என்று குறிப்பிடப்பட்டது. பிற்காலத்தில் இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ‘கிருஷ்ண அயஸ் (‘krsna ayas’ or black copper) என்று உலோகத்தை வேறுபடுத்திக் குறிப்பிடும் முறை வந்தது.  ஆகவே தொல்லியல் தரவுகளின் அடிப்படையில் ‘மட்டுமே’ முடிவு செய்வதாக இருந்தால், இந்தியாவில் குதிரை வளர்ப்பின் துவக்கம் 1900 பொ.கா.மு. இந்தக்காலம் என்பது சிந்துவெளியின் இறுதிக் காலமான 1900 -1500 பொ.கா.மு. என்ற காலகட்டம். வட இந்தியாவில் இரும்பின் துவக்கம் 1500-1400 பொ.கா.மு. ஆகவே, குதிரையையும் இரும்பையும் குறிப்பிடும் ரிக்வேதத்தின் காலமென்பதை 2000-1400 பொ.கா.மு. இடைப்பட்ட காலமென்பதை இதன் மூலம் வரையறுக்கலாம். எனவே, தொல்லியல் தடயங்களின் அடிப்படையில் அசுவம் என்ற குதிரையையும் கிருஷ்ண அயஸ் என்று இரும்பையும் குறிப்பிடும் ரிக் வேதம் சிந்துவெளி காலத்திற்குப் பிந்தியது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24774
Date:
Permalink  
 

குதிரை முத்திரை மோசடி:

siragu rajarams horseplay

இவ்வாறு குதிரை குறித்த தடயமே இல்லாத சிந்துவெளி காலத்தைய முத்திரைகளில் உள்ள குறியீடுகளில் குதிரை குறித்த செய்திகளைப் படித்துக் காட்டியிருந்தார்கள் ஜாவும் என்.எஸ். ராஜாராமும். தங்கள் குதிரை கருத்தை நிறுவும் வகையில் “மெக்கே 453″ என்ற சிந்துவெளி முத்திரையில் குதிரை உருவம் இருப்பதாக ஒரு படத்துடன் குறிப்பிட்டிருந்தார்கள். அதுதான் சிந்துவெளியின் குதிரை முத்திரையாக உலகிற்கு முதன் முதலில் அறிமுகமானது. இந்தியவியல் ஆய்வாளர்களுக்கிடையே குழப்பம் துவங்கி விவாதங்கள் தோன்றின. மைக்கேல் விட்சலும், ஸ்டீவ் ஃபார்மரும் தொடர்ந்த சில வாரங்களுக்குள் ஜாவும் என்.எஸ். ராஜாராமும் தந்த குதிரை முத்திரை ஒரு மோசடி எனக் குறிப்பிட்டனர். என்.எஸ். ராஜாராமின் நூலில் கொடுக்கப்பட்டிருந்த, பார்ப்பதற்கு முதல் பார்வையில் அசப்பில் ஒரு மான் போலத் தோற்றமளிக்கும் விலங்கு கொண்ட மெக்கே 453 (Mackay 453, from ‘Further Excavations of Mohenjo-Daro,New Delhi, 1937-1938′ Book) என்ற சிந்துவெளி முத்திரை உண்மையில் விலங்கின் கழுத்து அருகே உடைபட்ட ஒரு சிதைந்த முத்திரை (ஆனால் என்.எஸ். ராஜாராம் தனது நூலில் அது ஒரு சிதைந்த முத்திரை என்று குறிப்பிட்டாரில்லை). அது வாலுடன் கூடிய உடலின் பின்பகுதி மட்டுமே இருக்க, ஆனால் உடலின் முன்பகுதி சிதைந்துவிட்ட ஒரு எருதின் உருவம். இதைக் கணினி வழி மாற்றி (கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்) மோசடி செய்திருந்தார்கள் ஜாவும் என்.எஸ். ராஜாராமும் என்று மைக்கேல் விட்சலும், ஸ்டீவ் ஃபார்மரும் விளக்கினார்கள்.

siragu Mackay 453

தனது நூலில் கொடுக்கப்பட்ட குதிரை முத்திரை படத்தைக் கணினி உதவியால் மாற்றியதாக என்.எஸ். ராஜாராம் நூலில் எங்கும் குறிப்பிடாவிட்டாலும், அவர் ஆய்வாளர்களுடன் (ஜூலை 30, 2000 அன்று) நடத்திய ஒரு செய்தி பரிமாற்றத்தில் படிப்பவருக்காகப் படத்தைக் கணினி உதவியுடன் மேம்படுத்தியதாகக் கூறினார் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. மெக்கே 453 என்ற முத்திரையின் படம் மிகத் தெளிவாகவே மூல நூலில் வெளியிடப்பட்டிருந்தது, அதை ஸ்டீவ் ஃபார்மர் வெளியிட்டார். அத்துடன் அஸ்கோ பார்போலா நூலில் கிடைத்த மெக்கே 453 என்ற முத்திரையின் பிரதியை உருவாக்கிய அச்சு ‘M-772 A’ என்பதையும் ஒப்பிட உதவியாக வெளியிட்டார். இரண்டையும் பார்க்கும் எவருக்குமே அந்த முத்திரையில் இருப்பது சிந்துவெளியில் பரவலாகக் கிடைக்கும் ஒற்றைக் கொம்பு எருதின் உடைந்த வடிவம்தான் என்பது தெளிவாகப் புரியும். அதற்கு தொல்லியல் ஆய்வாளர்கள், இந்தியவியல் ஆய்வாளர்கள் விளக்கங்கள் தேவையிருக்காது.

siragu Mackay 453 impression and seal

சிந்துவெளியில் ரிக் வேதம் சொல்லும் குதிரை தடயங்கள் தேவை என்ற நிலையில், இந்துத்துவா சார்பாளர்கள் முன்பகுதி சிதைந்த காளை மாட்டின் பின் பாதியை, வரைந்த ஒரு குதிரையின் முன் பாதியுடன் இணைத்து பொய்யான சிந்துவெளி முத்திரை தடயங்களை உருவாக்கும் நிலைக்குச் சென்று தங்கள் தேவைக்கேற்ப ஆதாரத்தையும் உருவாக்கிக் கொண்டு விட்டார்கள். என்.எஸ். ராஜாராமின் இந்த பித்தலாட்டக் குதிரையை ‘பில்ட்டவுன் ஹார்ஸ்’ (Piltdown Horse) என்று ஆய்வாளர்கள் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்கள். ஏனெனில், ‘பில்ட்டவுன் மேன்’ (Piltdown Man) என்ற ஒரு தொல்லியல் புரட்டும் ஆய்வுலகில் இதற்குமுன் சென்ற நூற்றாண்டில் நடந்திருந்தது. அது போன்ற ஒரு ஏமாற்றுவேலை என்று குறிக்க பில்ட்டவுன் ஹார்ஸ் என்ற பெயர் சூட்டப்பட்டதும் பொருத்தமே. அதன் பிறகு என்.எஸ். ராஜாராமின் சிந்துசமவெளி குதிரை முத்திரைக் கருத்துக்கு ஆதரவு கூறும் எந்த ஒரு சிந்துவெளி ஆய்வாளரையும் அடையாளம் காட்டுவோருக்கு 1000 டாலர் வழங்கப்படும் என்றும் அறிவிப்பை வெளியிட்டார்கள் ஆய்வாளர்கள். 1000 டாலர் பணமுடிப்பைப் பெற எவரும் ஆர்வம் காட்டவில்லை. ஐராவதம் மகாதேவன் அவர்களும் (ஆனால் நேரடியாக அவர் பெயரை நூலில் குறிப்பிடவில்லை என்றாலும்) முன்னரே அது காளையின் முத்திரை போல இருக்கிறது என்று என்.எஸ். ராஜாராமிடம் குறிப்பிட்டிருக்கிறார் என்பதையும் என்.எஸ். ராஜாராம் தனது நூலில் பதிவு செய்துள்ளார். இந்தியவியல் ஆய்வாளர்கள் யாருமே ஏற்றுக்கொள்ளாத நிலையில் என்.எஸ். ராஜாராம் தனது கருத்தில் உறுதியாக, வால் அடர்த்தியான இந்த விலங்கின் உருவத்தைக் குதிரை அல்ல என நீங்கள் கருதுவீர்கள் என்றால் அது உங்கள் முடிவு என்று கூறியதுடன் அவர்களது ஆய்வு முறை திறந்த மனம் கொண்டதாக இல்லை என்று குற்றம் சாற்றிக் கடந்துவிட்டார்.

என்.எஸ். ராஜாராம் அவரது குதிரை முத்திரையை அவர் கைவிட முடியாத காரணம், நூலில் சிந்துவெளிக் குறியீட்டைப் படிக்கும் முறைக்கும் அதில் அடிப்படை இருக்கிறது. அந்த முத்திரையின் குறியீட்டை “arko-hasva or arko ha as´va” (“Sun indeed like the horse”) என்பது அதைப் படிக்கும் முறையாம். அதில் உள்ள ‘அசுவம்’ அல்லது ‘குதிரை’ (as´va) என்பதைப் படிக்க இயலாமல் போனதால் குதிரைக் குப்புறத் தள்ளிய தோடு நில்லாமல், குழியையும் பறித்த கதையாகவும் ஆகியது. சிந்துவெளி முத்திரையைப் படித்த நூலே பொருளற்றது ஆனது. மோசடிக் குதிரையைக் காட்டி சிந்துவெளி வேதகால நாகரீகம் என்று சாதிக்கவும் முடியாமல் போனது. பொ.கா.மு. 2000க்கு பிற்பட்டது என நூலின் அகச்சான்றால் வரையறுக்கப் பட்ட ரிக் வேதத்தின் காலத்தைப்  பழமையாகக் காட்ட முயன்ற கனவையும் அந்த சிதைந்த முத்திரை சிதைத்துவிட்டுப் போனது. ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த மொழியியல் ஆய்வுகளையும், அவை தரும் சமஸ்கிருதத்தின் இந்தோ-ஐரோப்பியத் தொடர்புகளையும் ‘பொய்-அறிவியல்’(pseudo-science) என்று வகைப்படுத்துபவர் என்.எஸ். ராஜாராம். அதனால் ரிக் வேதம் குறித்த மொழியியல் ஆய்வு முடிவுகளையும் அவர் ஏற்பதில்லை. ஜாவும் என்.எஸ். ராஜாராமும் குறியீடுகளைப் படித்த விதமும் இடமிருந்து வலமாகப் படித்திருந்தனர், ஆனால் சிந்துவெளி குறியீடுகள் வலமிருந்து இடமாக எழுதப்பட்டவை என்பது ஆய்வாளர்கள் முடிவு. இவர்கள் படக் குறியீடுகளை எழுத்துகளாகவும், பல குறியீடுகள் ஒரே ஒலியைக் குறிப்பதாகவும், ஒரே குறியீட்டை அவர்கள் விரும்பியவாறு பல ஒலிப்புகளாகவும் படித்திருந்தனர். இவ்வாறான ஒரு எளிதான படிக்கும் முறையை வகுத்துக் கொண்டு ஜாவும் என்.எஸ். ராஜாராமும் சிந்துவெளிக் குறியீடுகளில் படித்தவை எவையும் சிந்துவெளி பற்றிய செய்தி எவற்றையும் அறியத் தரவில்லை. மாறாக சிந்துவெளிக் குறியீடுகளில் ரிக் வேத வாசகங்களைப் படித்துக் கொண்டிருந்தனர். அவை ஏன் முத்திரைகளாக உருவாக்கப்பட வேண்டும் என்ற விளக்கமும் கொடுக்கப்படவில்லை. சிந்துவெளி நாகரீகம் ரிக் வேத காலம் என்றால், ரிக் வேதம் முழுவதும் குதிரை பற்றிய குறிப்புகள் இருக்கையில் ஏன் ஒரே ஒரு முத்திரையை அதுவும் உடைந்த முத்திரை மட்டுமே இவர்களால் குதிரை முத்திரை எனக் காட்ட முடிகிறது என்பதற்கு விளக்கமும் இல்லை.

siragu naga stone

இது போன்று சிந்து சமவெளி குறியீடுகள் படிக்கப்பட்டது என்ற மற்றொரு பித்தலாட்டமும் உண்டு. அவர்கள் கூற்றின்படி, நாகாலாந்து மாநிலத்தில் கிடைத்த, 3000 ஆண்டு பழமையான ‘நாகா முத்திரை’ ஒன்று சிந்துசமவெளி எழுத்துக்கள் சொல்வது என்னவென்று படிக்க உதவியதாம். இவர்கள் இதை பண்டைய எகிப்து மொழியைப் படிக்க உதவிய ‘ரோசட்டா கல்’ (Rosetta Stone)என்ற இரு மொழிக் கற்பலகைக்கு இணையாகக் கூறுகிறார்கள். ராமன், சீதை, இலட்சுமணன், அனுமன் உருவங்கள் கொண்ட இந்த நாணயத்தில் மும்மொழிகளில் அமைந்துள்ளதாகவும், இதில் உள்ள பிராமி மொழி குறிப்புதான் சிந்து சமவெளி குறியீடுகளைப் படிக்க உதவியதாகவும் கூறப்பட்டது.

ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியா என்ற மத்திய அரசின் தொல்லியல் நிறுவனத்தின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல் ஒன்றிலும் என்.எஸ். ராஜாராம் சிந்து சமவெளி நாகரிகத்தைச் சரஸ்வதி நாகரிகம் எனக் குறிப்பிட வேண்டும் எனவும், சரஸ்வதி ஆற்றங்கரையிலிருந்துதான் இந்து நாகரிகமே தோன்றியது எனவும் கூறியுள்ளதாகத் தெரிகிறது. வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர் குறிப்பிடுவது வேதங்களில் நகர வாழ்வு குறித்த குறிப்புகள் எதுவும் இல்லை. நாடோடி காட்டுமிராண்டிக் கூட்டத்தின் படையெடுப்பு, பண்பட்ட நாகரீகம் கொண்டிருந்த இந்திய மக்களின் சமூகவியலில் ஊடுருவியது என்ற ஆரியர் வருகை கோட்பாடு கூறுவதை ஏற்காதவர்களாகவும், வேதங்களின் மொழி இந்து சமவெளி மொழி என்று கூறுவதும் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது. அண்மைய மரபணு ஆய்வு முடிவுகள் எந்த வகையிலும் இவர்களுக்கு ஏனோ சென்று சேர்வதில்லை. சரஸ்வதி ஆறு பாய்ந்தது என்பது வேதநூல்கள் அடிப்படையில் உருவான ஒரு கருத்து.  எனவே, சிந்துவெளி நாகரிகத்தைச் சரஸ்வதி-சிந்துவெளி நாகரீகம் என்று பெயர் சூட்ட விரும்புபவர்களுக்கு இருக்கும் ஒரே வழி: ரிக் வேதம் குறிப்பிடும் அந்த சரஸ்வதி நதி குறித்த சரியான அறிவியல் தடயங்களை முதலில் நிறுவுவது மட்டும்தான். வரலாறுகளைத் திருத்தி எழுதிக் கொண்டிருப்பது உதவாது. ஆய்வில் அரசியல் நோக்கம் கலப்பது கேடு தரும். முடிவைத் தயார் செய்து கொண்டு தேவையான தடயங்களைத் தேடி எடுப்பது அல்லது உருவாக்குவது ஆய்வு நெறியும் அல்ல.

மைக்கேல் விட்சலும், ஸ்டீவ் ஃபார்மரும் மட்டும் “We fear for India and for objective scholarship” என்று கவலை தெரிவித்து ஜாவும் என்.எஸ். ராஜாராமும் எழுதிய நூல் குறித்த தங்கள் கட்டுரையை முடிக்கவில்லை, இந்தியப் பின்புலம் கொண்ட நோபல் அறிவியலாளர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனும் “Indian Science Congress was a circus” என்று கருத்து தெரிவித்து இனிதான் கருத்தரங்கில் பங்கு பெற விரும்பவில்லை என்று சொல்லிச் சென்றதையும் எச்சரிக்கையாக நினைவில் கொள்ள வேண்டும்.

Graphics source credits:Frontline, Harappa.com

____________________

References:

[1] Michael Witzel and Steve Farmer, Horseplay in Harappa: The Indus Valley decipherment hoax, [cover story] Frontline, October 13, 2000: 4-11.

http://www.people.fas.harvard.edu/~witzel/RAJARAM/Har1.pdf

 

[2] Romila Thapar, Hindutva and History: Why do Hindutva Ideologues Keep Flogging a Dead Horse? Frontline, October 13, 2000:15–16.

http://www.safarmer.com/frontline/horseplay.pdf

 

[3] Michael Witzel and Steve Farmer, New evidence on the ‘Piltdown Horse’ hoax, Frontline, November 24,2000: 126-129.

http://www.safarmer.com/frontline/taleoftwohorses.pdf

 

[4] Steve Farmer and Michael Witzel, ‘Indus Valley Fantasies: Political Mythologies, Academic Careerism, and the Poverty of Indus Studies.’ October 8, 2010.

http://www.safarmer.com/IndusValleyFantasies.pdf

 

[5] Steve Farmer, The first Harappan forgery: Indus inscriptions in the nineteenth century (2003).

http://www.safarmer.com/firstforgery.pdf

 

[6] Steve Farmer, The Bogus Indus Valley ‘Horse Seal’.

http://www.safarmer.com/horseseal/update.html

 

[7] Steve Farmer, Richard Sproat, and Michael Witzel, ‘The collapse of the Indus-script thesis: The myth of a literate Harappan civilization.’ EJVS 11-2 (13 Dec. 2004): 19-57.

http://www.safarmer.com/fsw2.pdf

 

[8] Andrew Lawler, The Indus Script–Write or Wrong? Science 17 Dec 2004. Vol. 306, Issue 5704, pp. 2026-2029

https://science.sciencemag.org/content/306/5704/2026.abstract

 

[9] N. Jha and N.S. Rajaram, The Deciphered Indus Script: Methodology, readings, interpretations, Aditya Prakashan, New Delhi, 2000.

 

[10] N. Jha and N.S. Rajaram, The deciphered Indus script. Methodology, readings, interpretation, Aditya Prakashan, New Delhi, 2000.

http://www.people.fas.harvard.edu/~witzel/R&J.htm

 

[11]‘Earliest writing’ found, Dr David Whitehouse, BBC, May 4, 1999.

http://news.bbc.co.uk/2/hi/science/nature/334517.stm

 

[12] Tony Joseph, Horse sense on Harappa: An excerpt from Tony Joseph’s book “Early Indians”,Caravan Magazine, January 07, 2019.

https://caravanmagazine.in/history/horse-sense-harappa-tony-joseph-early-indians

 

[13] Michael Witzel and Steve Farmer, http://michaelwitzel.org/ –and– http://www.safarmer.com/

 

[14] Harappa.com, https://www.harappa.com/slideshows/around-indus-90-slides-2

____________________

 

References Pertained to Hindutva Ideology:

[1] Dinesh Agrawal (Department of Materials Science and Engineering, Pennsylvania State University), Debunking The Aryan Invasion Theory, Sanskriti Magazine, March 14, 2014

https://www.sanskritimagazine.com/india/debunking-the-aryan-invasion-theory/

 

[2] Amish Tripathi, Science validates Vedic history-Indus Valley script deciphered, reveals India’s true past.India Today Magazine – Note:This is a fictional piece for a section in India Today magazine, November 30, 1999 & Republished Issue Date: December 23, 2013.

https://www.indiatoday.in/magazine/nation/story/20131223-indus-valley-script-vedic-history-naga-stone-1144609-1999-11-30

 

[3] N.S.Rajaram and David Frawley, Vedic “Aryans” and the origins of civilization: A literary and scientific perspective Paperback – 1995

https://www.amazon.com/Vedic-Aryans-origins-civilization-perspective/dp/1896064000

 

[4] அரவிந்தன் நீலகண்டன், ஹரப்பா ‘குதிரை முத்திரை’: மோசடியாக ஒரு மோசடி, திண்ணை, டிசம்பர் 15, 2002.

https://old.thinnai.com/?p=20212156

 

[5] தமிழ்செல்வன், ‘மைக்கேல் விட்சல் சென்னை விஜயம்: ஒரு பார்வை.’ ஜூலை 16, 2009.

http://www.tamilhindu.com/2009/07/witzel-visit-an-account/



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard