New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொல்காப்பியத்தில் பாடாண்திணை -அமரர் கண் முடியும் அறுவகையானும்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
தொல்காப்பியத்தில் பாடாண்திணை -அமரர் கண் முடியும் அறுவகையானும்
Permalink  
 


தொல்காப்பியத்தில் பாடாண்திணை

  https://www.vallamai.com/?p=56274 
 

— முனைவர்  சி.சேதுராமன்.

 

தொல்காப்பியம் இரண்டாம் தமிழ்ச் சங்கத்தின் இலக்கண நூலாகத் திகழ்ந்தது என்று இறையனார் களவியல் என்னும் அக இலக்கண நூல் குறிப்பிடுகிறது. மக்களின் பழக்க வழக்கங்களையும் மொழியின் சொல்லையும் சொற்றொடர்களையும் வழங்கி வந்த முறைகளையும் நன்கு ஆராய்ந்து முடிவு, தெளிவு ஆகியவை வழுவாதவாறு அமைத்துக் காக்கின்ற இலக்கணமாகத் தொல்காப்பியம் ஆக்கப்பட்டுள்ளது என்பது நோக்கத்தக்கது.

தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அகத்திணை, புறத்திணை என்ற இயல்கள் முதலில் இடம்பெற்றுள்ளன. அவற்றையடுத்துக் களவு, கற்பு என்ற இயல்களும் பொருளியல் என்பது ஐந்தாவது இயலாகவும் அமைந்துள்ளது. யாப்பிலக்கணத்தையும் அணியிலக்கணத்தையும் பொருள் இலக்கணத்தொடு சேர்க்காமல் பிற இலக்கணத்தை; தனித்தனியாகக் கூறுவர். ஆனால் தொல்காப்பியர் யாப்பிலக்கணத்தைச் செய்யுளியல் என்றும் அணி இலக்கணத்தை உவமயியல் என்றும் கூறியுள்ளார். ஆறாவதாக மெய்ப்பாட்டியலும் ஏழாவதாக உவமவியலும் எட்டாவதாகச் செய்யுளியலும் ஒன்பதாவதாக மரபியலும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அமைந்துள்ளன.

அகத்திணை – புறத்திணை
தமிழ் மக்கள் வாழ்க்கையில் ஒழுக்கம் வலியுறுத்தப்படுகிறது. அவ்வொழுக்கம் தொடர்புடைய மனைவி, மக்கள் உற்றார், உறவினரோடு ஏற்படுவது அகவொழுக்கம். மன்னன், அயலார், பொதுமக்கள் என்பவரோடு ஏற்படுவது புறவொழுக்கம் எனப்படுகிறது. திணை என்பது ஒழுக்கம் என்பதால் அகவொழுக்கம் அகத்திணையிலும் புறவொழுக்கம் புறத்திணையிலும் கூறப்பட்டன.

புறவொழுக்கத்தைக் கூறும் புறத்திணையியலில் முதலாவதாகக் கூறப்படும் வெட்சி என்னும் ஒழுக்கம், அறவழியில் நடக்கும் மன்னன் ஒருவன்தான் படையெடுத்துச் செல்லும் செய்தியைத் தன் பகைவனுக்கு முன்னரே அறிவிப்பதாகும். திடீரென்று படையெடுத்துப் போனால் பகைவர் நாட்டிலுள்ள பெண்டிரும், பிணியுடையோரும், சிறுவரும் பிறரும் அஞ்சி அல்லலுற்று அலமருதல் வேண்டத் தகுந்ததில்லை என்ற அறவுணர்வுதான். பகைவர் எனினும் அவரிடம் அறவுணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படைக் கருத்தை உணர்த்துவதே வெட்சி ஒழுக்கமாகும். இத்தகைய அடிப்படை உணர்வுதான் இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

புறத்திணை இயலில் இரண்டாவதாகச் சொல்லப்படுவது வஞ்சித்திணை. வஞ்ச நெஞ்சப் பகைவனின் நாட்டின் மேல் படையெடுத்துச் செல்வதே அது. மூன்றாவது உழிஞைத் திணை. பகை நாட்டிலுள்ள அரணை வளைத்துக் கைப்பற்றிக் கொள்வது. நான்காவது தும்பைத் திணை. போர்க்களத்தில் இருபடையும் பொருது வெற்றி தோல்வி அடைவது. ஐந்தாவது வாகைத் திணை. வெற்றிக் கொண்டாட்டம் நடத்துவது. ஆறாவது காஞ்சித்திணை. நிலையாமை பற்றி எண்ணிச் செயற்படுவது. ஏழாவது பாடாண்திணை. இஃது முன்னோர் கூறிய குறிப்பில் பரவலும் புகழ்தலும் செய்வது ஆகும்.

பாடாண்திணை
பாடாண் என்பது புலவரது பாடுதல் வினையாகிய தொழிலையோ அவர்களாற் புகழ்ந்து பாடப்பெறும் ஆண்மகனையோ குறிப்பதன்று. புலவர்களாற் பாடப்பெறும் புகழினை விரும்பிய தலைவர்கள் தம்முடைய அறிவு, திரு, ஆற்றல், ஈகை முதலிய பெருமிதப் பண்புகளை ஆளுதற் தன்மையாகிய ஒழுகலாற்றைக் குறித்து வழங்குவதே பாடாண் என்னும் சொல்லாகும். புலவராற் பாடப் பெறும் தலைமக்களது ஒழுகலாறாகிய பண்புடைமையினைப் பாடாண் எனும் சொல் உணர்த்திற்று என்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும்.

பாடாண்திணை தனக்கென ஒரு தனிநிலை பெறாது பிற திணைகளை நிலைக்களனாகக் கொண்டு அவ்வவற்றில் புகழுக்கு ஏற்ற ஒவ்வொன்றின் பகுதியே பாடாணாக அமையும். அகத்திணை, புறத்திணை இரண்டும் மக்களின் ஒழுக்கம் பற்றிக் கூறுவனவாகும். ஆதலால் பாடாண் திணையும் மக்களுக்கு உரியதாகவே ஆதல் வேண்டும். இது கருதியே பாடாண் பாடல்கள் எல்லாம் மக்களில் தக்காரின் புகழாகவே வரும் என்று கூறினர்.

பாடாண் திணையும் கைக்கிளையும்:
பாடாண் திணைப் பகுதி கைக்கிளையென்னும் அகத்திணைக்குப் புறனாகும். இது எட்டு வகையுடையதாகும் என்பதை,
‘‘பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
நாடுங்காலை நாலிரண்டுடைத்தே’’(தொல்.புறத்.,20)
என்ற நூற்பாவில் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

கைக்கிளையில் காதற் சிறப்பு ஒருவருக்கே ஆகிவரும். அதுபோலப் பாடாண்திணையிலும் சிறப்பானது தகுதியுடைய ஒருவருக்கே உரித்ததாக வரும். கைக்கிளையில் காதற்கூற்று, பாராட்டும் தலைவனிடத்ததாகும். பாடாண்திணையில் புகழும் கூற்று புகழ்வோனிடத்திலேயே அமையும். கைக்கிளையில் இழுக்கு நீக்கித் தருக்கியலே சொல்லி இன்புறுதல் உரிது. பாடாணில் பழி தழுவாத புகழ்ச்சி ஒன்றே பயின்று வரும். கைக்கிளைக்கும் பாடாணுக்கும் நிலமும் பொழுதும் வரையறையில்லை. ஒருதலையாய் வெளிப்படையாக அமையுமதனால் படாண்திணை கைக்கிளைக்குப் புறனாக அமைந்தது.

ஒரு நிலத்திற்கு உரியதாக அன்றி ஒருதலைக் காமமாகி வருவது கைக்கிளை என்னும் அகத்திணையாகும். அதுபோன்று ஒரு பாலுக்கு உரித்ததன்றி ஒருவரை ஒருவர் ஏதேனும் ஒரு பயன் கருதிய வழிப் பாடப்பெறுவது பாடாண்திணையாகும். இயற்பெயர் கூறப்படுதலும் கழிபேரிரக்கமல்லாது வெளிப்படையாக வருவதுமாகிய பண்பு இவ்விரண்டிற்கும் பொருந்தும். பாட்டுடைத் தலைவன் வணங்கிப் பாடும் புகழ்ச்சியும் வேண்டப் பாடும் புலவர்கள் பரிசிற்பொருளை வேண்டும் முறையில் அமைந்தது பாடாண்திணை ஆதலால் இஃது ஒருதலைக் காமமாகிய கைக்கிளை என்ற அகத்திணைக்குப் புறனாயிற்று.

இல்லற வாழ்வில் ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியும் மேற்கொள்ளுதற்குரிய அன்புரிமைச் செயல்களாகிய அகவொழுக்கங்களும், அரசியல் வாழ்விலே போர் வீரர்கள் மேற்கொள்ளுதற்குரிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்றும் அறுவகைப் புறத்திணை ஒழுகலாறுகளும் ஆகிய இவ்வொழுக்கங்களை நிலைக்களமாகக் கொண்டே ஒருவர் ஒருவரைப் பாடுதல் இயலும். வெட்சி முதலிய அறுவகை ஒழுகலாறுகளும் அவற்றிற்குக் காரணமாகிய உள்ளத்துணர்வுகளும் பாட்டுடைத் தலைவர்பால் நிகழ்வனவாகும்.

பாடாண் திணையில் பாடுதல்வினை புலவர்பாலும், அவ்வினைக்குக் காணமாகிய பண்பும் செயலும் பாட்டுடைத் தலைவர்பாலும் நிகழ்வன. வெட்சி முதலிய ஆறு திணைகளும் தலைமக்களுக்குரிய பண்புகளையும் செயல்களையும் நிலைக்களங்களாகக் கொண்டு தோன்றுந் தனிநிலைத் திணைகளாகும். பாடாண் திணையோ தலைமக்கள்பால் நிகழும் மேற்குறித்த திணை நிகழ்ச்சிகளைத் தனக்கு நிலைக்களங்களாகக் கொண்டு தோன்றும் சார்புநிலைத் திணையாகும்.

தலைமக்களுக்குரிய கல்வி, தறுகண், இசைமை, கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதப் பண்புகளாய்ப் புலவராற் பாடுதற்கு அமைந்த மாந்தரது ஒழுகலாறு பாடாண் திணையாகும் எனக் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும். பாடாண் அல்லாத வெட்சி முதலிய பிற திணைகளும் புலவராற் பாடப்படுவனவே எனினும் புலவராற் பாடப்பெறுதல் வேண்டும் என்னும் உள்ளக் குறிப்புப் பாட்டுடைத் தலைவர்பால் தோன்றாத நிலையில் அவர்பால் தன்னியல்பில் நிகழும் போர்ச்செயல் முதலியவற்றைப் புலப்படுத்துந் திறத்தால் அவை வெட்சி முதலிய தனிநிலைத் திணைகளாகும் எனவும் அச் செயல்களைக் கருவாகக் கொண்டு புலவர்கள் பாடும்போது அங்ஙனம் தாம் பாடப்பெறுதலால் உளவாகும் புகழை விரும்புங் கருத்துடன் பாட்டுடைத் தலைவர்பால் தோன்றும் உயர்ந்த உள்ளக் குறிப்புப் பாடாண் என்னும் சார்புநிலைத் திணையாகும் எனவும் பகுத்துணர்தல் வேண்டும்.

புலமையுடையோர் பலரும் தமது உரையினாலும், பாட்டினாலும் உயர்வாகப் புகழும் வண்ணம் ஆற்றல் மிக்க போர்த்துறையிலும் அன்பின் மிக்க இல்வாழ்க்கையிலும் புகழுடன் வாழும் நன்மக்களது பண்பின் ஆளுதற் தன்மையே தொல்காப்பியர் கூறிய பாடாண் திணை எனில் மிகவும் பொருத்தமுடையதாகும்.

வெட்சிப் பாடாண் – வெட்சியடியாகப் பிறப்பது
‘‘ஒன்னர் முன்னிலை முருக்கிப் பின்னின்று
நிரையொடு வரூஉம் என்ஐக்கு
உழையோர் தன்னினும் பெருஞ்சாயலரே’’(புறம்.,262)
பகைவருடைய தூசிப் படையை முறியடித்துப் பெயர்ந்து போகும் தன் படைக்குப் பின்னே நின்று ஆநிரையோடு வருகிறான் என் தலைவன். அவனுக்கு அருகேயிருந்து உடன் வரும் வீரர்கள் அவனைக் காட்டிலும் பெரிய பொலிவு உடையவராய் உள்ளனர் என்று கூறித் தலைவனையும் வெட்சியடியாகப் புகழப்படுவதால் இது வெட்சிப் பாடாண்திணை ஆயிற்று எனலாம்.

இவ்வாறே உழிஞைப் பாடாண் உழிஞையடியாகப் பிறப்பது:
‘‘ஒருவீர் தோற்பினும் தோற்பது உம்குடியே
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே, அதனால்
குடிப்பொருள் அன்று நும்செய்கை’’ (புறம்.,45)
என்று நலங்கிள்ளி முற்றுகையிட்டிருந்தான். நெடுங்கிள்ளி கோட்டையை அடைத்திருந்தான். எனவே இது உழிஞையாயிற்று. கோவூர்க்கிழார், ‘‘உம்முள் ஒருவர் தோற்பினும் தோற்பது உம்குடியே! இருவரும் வெல்லுதல் இயற்கையும் அன்று; ஆதலால் நும் செய்கை உம் குடிக்குத் தக்க ஒரு செயல் அன்று’’ என்று குடியைப் புகழ்வதால் இது உழிஞைப் பாடாண்திணையாகும். இவ்வாறே பிற திணைகளை நிலைக்களனாகக் கொண்டு பாடாண்திணை வரும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
RE: தொல்காப்பியத்தில் பாடாண்திணை -அமரர் கண் முடியும் அறுவகையானும்
Permalink  
 


அமரர் கண் முடியும் அறுவகை
பாடாண்திணையின் பகுதியாகத் தொல்காப்பியர்,
‘‘அமரர்கண் முடியும் அறுவகையானும்
புரைதீர் காமம் புல்லிய வகையினும்
ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப’’
எனறு குறிப்பிடுகின்றார்.

இதற்கு இளம்பூரணர், ‘‘அமரர் கண் முடியும் கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவராற்றுப்படை, புகழ்தல், பரவல் என்பனவற்றினும், குற்றம் தீர்ந்த காமத்தைப் பொருந்திய வகையினும், அவையிற்றின் ஒரு கூற்றின் பாகுபாடு பாடாண் திணையாதற்குப் பொருந்தும் என்பர் புலவர்’’ என்று உரைகூறுகிறார். ஆனால் நச்சினார்க்கினியர், அறுவகை என்பதற்கு, முனிவர், பார்ப்பார், ஆநிலை, மழை, முடிவேந்தர், உலகு என ஆறு என்று குறிப்பிடுகின்றார். இருவரும் ஒரே வகையைக் குறிப்பிடாது மாறுபட்டுக் குறிப்பிடுகின்றனர்.

இளம்பூரணர் வணக்க வகைகளைக்(கொடிநிலை உள்ளிட்டவை வணக்க வகைகள்) கூறுகிறார். ஆனால் நச்சினார்க்கினியர் வணங்கப்படும் பொருள்களைக் (செயற்கையான தேவர்கள், முனிவர்கள், பார்ப்பார் உள்ளிட்டவை வணங்கப்படும் பொருள்கள்) குறிப்பிடுகின்றார். இந்நூற்பாவிற்கு உரை எழுதிய நாவலர் அவர்கள்,

‘‘தொல்காப்பியர் தாம் கருதிய ‘ஆறுவகை’’யினைத் தம் நூலில் எங்கு, எவ்வாறு காட்டியுள்ளார் என்பதை இரண்டு உரைகாரர்களுமே விளக்கினார் இல்லை. தாம் கூறக் கருதிய தொகைப் பொருள் இவையெனத் தாமே வகைசுட்டி விளக்காமல் கூறுபவரல்லர் தொல்காப்பியர்….தொல்காப்பியர் தொகை சொன்னால் வகை கூறியுமிருப்பர். வகை கூறாமல் தொகை மட்டும் கூறுவது அவர் இயல்பு அன்று. அவ்வாறு இல்லாதிருந்தால் தொல்காப்பியம் இன்றுவரை நின்றிராது. தொல்காப்பியர் முன்னர் திணை ஒவ்வொன்றிலும் பெயர் சுட்டிக் கூறியுள்ளார். அவையே வகையாம். வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்பன வகையாம். இந்த வகை அறுதானே, இந்த வகைக்குத்தாம் தொல்காப்பியர் தொகை கூறுகிறார். அந்தத் தொகையே அறுவகை எனப்படுகிறது” என்று குறிப்பிட்டு,

தொல்காப்பியர் குறிப்பிடும் அமரர் என்பதற்கு,‘‘அமர் என்பது போர். அமரர் என்பது போர் செய்யும் வீரரைக் குறிக்கும். வெட்சி, ஆநிரை கொள்ளும் போர். வஞ்சி, படையெடுத்துச் செல்லும் போர், உழிஞை, அரணை வளைத்துச் செய்யும் போர். தும்பை தன் வலிமையையே தன் துணையாகக் கொண்டு செய்யும் போர். வாகை போரில் வெற்றி கொள்ளுதல். காஞ்சி, போரில் இழந்த இழப்பைக் கண்டு நிலையாமையை எண்ணுதல் இவையாவும் போர் பற்றியன. பாடாண் என்பது அப்போர் பற்றிய போர் வீரரது வீரம் குறித்து அவர்பாற் சென்று முடியும் புகழ்ச்சி. பாடாண் முன்பு குறித்த ஆறின் அடியாக வரும் என்பதைத் தொல்காப்பியர் குறிப்பிடுவதேயாகும்’’ என்று குறிப்பிடுகின்றார். நாவலர் குறிப்பிடும் இதுவே பொருத்தமான உரையாக அமைந்திலங்குகின்றது.

வழக்கில் திணைப் பகுதிகள் பாடாணாய்ப் பயிலுமிடத்து அதனதன் கூறுபட நின்று வாழ்த்துதலும், புகழ்தலும் சொல்லுமிடத்தும் பண்டைச் சான்றோர் கூறியுள்ள இயற்பாக்களே அன்றி இசைவகை வண்ணக் கூறுகளும் விலக்கப்படாது என்று தொலகாப்பியர் குறிப்பிடுகிறார்.

காமப்பகுதி:
பாடாண் திணையில் காமப்பகுதி கடவுளோடும் மக்களிடத்தும் நீக்கார் என்று கூறுவர். (காமப் பகுதி கடவுளும் வரையார் ஏனோர் மருங்கினும் என்மனார் புலவர்) இது இயற்பெயருடனும் வரலாம் என்று குறிப்பிடுவர். இக்காமப்பகுதி மக்களுக்கேயன்றி கடவுளோடு கடவுள் காதல் கொண்ட பாடாணுக்கும்(‘அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்’-கம்ப.மிதிலை.,35 இராமன்-சீதை காதல்) கடவுள் மனிதரோடு காதல் கொண்ட பாடாணுக்கும்(‘ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின், மடவரல் வள்ளியொடு நகை யமர்ந்தன்றே’திருமுருகு.,100-102 முருகன்-வள்ளி காதல்)வரும். இவ்விரு முறையும் புலனெறி வழக்கில் வருதல் உண்டு. அதற்கு விலக்கில்லை.

இக்காமப்பகுதி குழவிப் பருவத்தும் உரியதாகும்.(குழவி மருங்கினும் கிழவதாகும்)இதுவே பிள்ளைத் தமிழ் இலக்கிய வகைக்கு அடிப்படையாயிற்று என்பது நோக்கத்தக்கது. கடவுள்-கடவுளோடும், கடவுள் மானுடரோடும் கொள்ளும் காமப் பகுதியோடு காதற்பருவம் பெறாத சிறாரிடத்திலும் தூய காமப் பகுதி உரியதாகும்.

பேதைப் பருவமுடைய சிறாரிடத்துக் காதற் செவ்வி கருத முடியாது. காம உணர்வு குழவிக்கில்லை. எனினும் அக்குழவியிடத்தில் தூய காதல் கொள்வாருடைய அன்பின் தன்மை பற்றிய பாடாண் அக்குழவியின் மேல் சார்த்தி வருவதே இங்கு கூறப்படுவதாகும். ஊரின் காமப் பகுதி நிகழ்தலும் உரித்து என்று கூறுவர். இதற்கு தலைமக்களின் ஊர்ச்சிறப்பும் உயர்குடிப் பிறப்பும் பாராட்டுதற்குரியனவாகும். அப்பாராட்டுப் புலனெறி வழக்கொடு பொருந்தும் என்பர். இதனைத் தொல்காப்பியர்,
‘‘ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப
வழக்கொடு சிவணிய வகைமையான’’ (புறத்.,30)
என்று குறிப்பிடுகிறார். இது உலா இலக்கிய வகைத் தோற்றத்தைக் குறிப்பிடுகிறது. இவை அனைத்தும் வழக்கில் பொருந்தி வரும்.

கடவுள் வாழ்த்தோடு வருவன:
திணைகள் யாவும் மக்களின் ஒழுக்கம் குறித்தே வருமாயினும், பாடாண்திணை வகையில் ஒருசில தலைமக்களின் பாராட்டுடனும் வரும். ஆனால் குறிப்பிடப்படும் சில, கடவுள் வாழ்த்தொடு பொருந்தியே வரும். அவை கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற மூன்றும் ஆகும்.(‘‘கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற; வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்; கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே-)

கொடிநிலை என்பது கொடியெடுத்துப் படைக்கு முன்னர் செல்லுதல். இது வெட்சிப் பாடாணாய்க் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும். இதற்கு,
‘‘புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை கருதிப்
போகுங் காலை
கொள்ளும் கொடியெடுத்துக் கொன்றவையும்
கொடுமர முன்செல்லும் போலும்’’ (சிலப்.,வேட்டுவ வரி, 13.பா)
என வரும் சிலப்பதிகாரப் பகுதியை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இதில் நிரை கருதிப் போதல் வெட்சி. அதற்குக் கொடியெடுத்து முன் செல்லல் கொடிநிலை. கொற்றவை பரவல் கடவுள் வாழ்த்து ஆகும்.

கந்தழி என்பது மாற்றாரது அரணை அழித்த வெற்றியைக் குறிக்கும். இக்கந்தழி என்பதை காந்தள் என்று பொருள் கொண்டு காந்தள் மலரைச் சூடிக் கொண்டு ஆடும் ஆட்டத்திற்குக் காந்தள் என்று பெயர் வந்தது. வேலைக் கையிலேந்திய வேலன் முருகனைத் துதித்து வெறியாடுவது காந்தள் எனப்டும் காந்தள் வெட்சிப் பாடாணாய்க் கடவுள் வாழ்த்தொடு வரும் என்று அறிஞர் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. வள்ளி என்பது வள்ளல் தன்மையைக் குறிக்கும். வள்ளி என்பதனைப் பெண்கள் ஆடும் வள்ளிக் கூத்து என்றும் குறிப்பிடுவர். வள்ளி ஒரு கொடிக்குப் பெயர். ஆதலால் கூத்தைக் குறிக்க வாடாவள்ளி என்று கூறப்பட்டது. ‘‘கொடி வாடும்’’; ‘‘கூத்து வாடாது’’. எனவே வாடாவள்ளி என இது கூறப்பட்டது. வள்ளி வெட்சிப் பாடாணாய்க் கடவுள் வாழ்த்தொடு வரும்.

இளம்பூரணர் கந்தழி என்பதற்கு விளக்கம் கூறாமல்,
‘‘அன்றெறிந்தானும் இவனால் அரண்வலித்து’’
என்ற வெண்பாமாலைப் பாட்டை உதாரணமாகக் காட்டி அமைவர;. அப்பாட்டு உழிஞை வகையாகும். நச்சினார்க்கினயர் கந்தழி என்பதற்கு, ‘‘ஒரு பற்றுக் கோடின்றி அருவாகித்தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள்’’ என்று பொருள்கூறுவர். தொல்காப்பியரால் கொடிநிலையும் வள்ளியும் வெட்சித் திணையில் விளக்கப்பட்டன. அவற்றைப் போலவே காந்தள் என்பதும் வெட்சித் திணையில் வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டயர்ந்த காந்தள்’’ என விளக்கப்பட்டது. கந்தழி என்பது எங்கும் விளக்கப்படவில்லை. காந்தள் முருகக் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வந்ததாகும். முதலன மூன்றும் என்பன கொடிநிலை, காந்தள், வள்ளி என்பனவேயாகும் இவற்றால் கந்தழி கொள்ளத் தகுந்ததில்லை. காந்தள் என்பதே கொள்ளத் தகுந்தது; பொருத்தமானதும் ஆகும்.

கந்தழி என்பதற்கு, நாவலர் பாரதியார், ‘‘காந்தள் என்பது ஏடு பெயர்த்து எழுதுவோரால் பொருட் பொருத்தம் கருதாமல் கந்தழி என எழுதப்பட்டது போலும். அவ்வாறு வந்த கந்தழியை உரையாசிரியர்கள் இருவரும் அப்படியே ஏற்றுத் தம்முள் மாறுபட்டு உரை கண்டனர் எனத் தெரிகிறது. இதனாலும் கந்தழி துறையாகாமல் காந்தள் வலியுறுவது காண்க’’ என்று குறிப்பிடுவது பொருந்துவதாக உள்ளது.

கொற்றவள்ளை:
மன்னனின் புகழினை விளக்கமாகக் கூறியும் பகைவர் அழிவுக்கு இரங்கியும் பாடும்பாடல் கொற்ற வள்ளை எனப்படும். இதுவும் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும். இதற்கு, ‘‘கொற்றம் என்பது வெற்றி. வள்ளை என்பது உலக்கைப்பாட்டு. பெண்டிர் தம் அரசனின் வெற்றிக்கு மகிழ்ந்து உலக்கைக் குற்றோடு ஒத்துப்பாடும் பாட்டு கொற்றவள்ளை எனப்படும். கொற்றவள்ளை வஞ்சி வகையைச் சேர்ந்தது. இது கடவுள் வாழ்த்தொடு பொருந்தியும், கடவுள் வாழ்த்தின்றி தலைமக்கள் புகழ் மட்டும் சுட்டியும் வரும்’’ என்றும் பொருள் கூறுவர்.

பாடாண் திணையின் துறைகள்:
பாடாண் திணை 10 துறைகளைக் கொண்டது. அவையாவன,

1. கொடுப்போர் ஏத்தல்: கொடைகொடுக்கும் வள்ளல்களைப் புகழ்தல், கொடார்ப்பழித்தல்: பெருஞ்செல்வராயிருந்தும் வழங்காதவரைப் பழித்தல், அதாவது ஈயார் பழியாம்; ஈவோர் புகழாம். எனவே அதுவும் பாடாண்திணையாயிற்று.
2. இயன்மொழி வாழ்த்து-நெருங்கிப் பொருந்திப் புகழ்வது இயன்மொழி ஒருவனிடம் உள்ள சால்பை உரைப்பது இயன்மொழியாகும்.
3. வாயில்நிலை: சேய்மையினின்று வந்த வருத்தம் தீர வாயில் காவலனிடம் கூறுதல்.
4. கண்படைநிலை: பரிசில் பெறுவோர் உறங்கக் கருதிக் கூறுவது. இதனை, ‘‘பரிசில் மாக்களும் துயில்கமா சிறிதே’’ என்ற தொடராலேயே பொருள் விளங்கக் காணலாம்.
5. வேள்வி நிலை: கபிலை நிறமுள்ள பசுவைக் கருதிய வேள்வி. பசுவின் நெய்யால் வேள்வி செய்வதுண்டு. ஏனெனில் பசுக்களை வேள்வித் தீயிலிட்டுக் கொன்று அவற்றின் ஊனை உண்பது தமிழர் முறையில்லை. இதனை,
‘‘அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று’’(குறள்259)
என்ற திருக்குறள் விளக்குவது நோக்கத்தக்கது. நெய் முதலிய பொருள்களை வேள்வித்தீயில் இட்டு ஆயிரம் வேள்விகள் செய்து முழப்பதைக் காட்டிலும் ஒரு விலங்கின் உயிரைக் கொன்று அதன் ஊனை உண்ணாதிருப்பது நல்லது என்பது நம்முன்னோரின் உயர்ந்த கொள்கையாகும். அதனால் பசுக்களின் நெய்யைக் கொண்டு வேள்வி நிகழ்த்துதலையே தொல்காப்பியர் இதில் குறிப்பிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
6.விளக்குநிலை: வேலும் கோலும் குறித்த விளக்கு நிலை. அதாவது இருள்நீக்கி ஒளி உதவும் விளக்குப் போன்று தீது நீக்கி நன்மை பயப்பது வேலும் கோலுமாகும். வேல் காவலுக்கும், கோல் முறை செய்தலுக்குமாக வந்த ஆகுபெயர்கள். (‘‘செஞ்ஞாயிற்றுத் தெறல் அல்லது, பிறிது தெறல் அறியார் நின்நிழல் வாழ்வோர்…அறம்துஞ்சும் செங்கோல்-முறைசெய்யும் கோலைக் காட்டும். ஏமக்காப்பு-காவல் செய்யும் வேலைக் காட்டும்’’…புறம்.,20)
7. வாயுறைவாழ்த்து: வாய்மை, தீமையிலாத சொலல். அத்தீமையில்லாதவை உறைந்த வாழ்த்தே வாயுறை வாழ்த்தாகும். வாய்-வாய்மொழி. உறை-மருந்து. வாயுறை என்பது சொல் மருந்து எனப் பண்புத்தொகையாகும். வாய்க்கண் தோன்றிய மருந்து என வேற்றுமைத் தொகையுமாம் என்பர் நச்சினார்க்கினியர். வாய்மொழியாகிய மருந்தைக் கொண்டு தீமை நீக்குவது என்பது கருத்து.
8. செவியுறை வாழ்த்து: செவியில் அறிவுறுத்தல் செவியுறை வாழத்தாகும். இதனை செவியறிவுறூஉம் எனவும் கூறுவர். ‘‘செவியுறை -செவிமருந்து அடங்கி வாழ்வார்க்குப் புகழாதல் வாழ்த்தின் பாற்பட்டது’’ என்பர் நச்சினார்க்கினியர். செவிமருந்தினால் நலம் பயக்கச் செய்வது கருத்து.
9. புறநிலை வாழ்த்து: வழிபடும் தெய்வம் உன்னைப் புறங்காப்ப பழியில்லாத இல்லறச் செல்வத்தோடு புதல்வர்ச் செல்வமும் பெற்று வழிவழி சிறந்து வாழ்வீராக என்பது புறநிலை வாழ்த்தாகும்.
10. கைக்கிளை: ஒருதலைக் காதலாகும். இதற்கு நாவலர் அவர்கள், ‘‘பாடாண் துறைகள் அடுத்த சூத்திரத்தில் கூறப்படுவதாலும் தொல்காப்பியர் கையாளும் முறையாலும் இங்கு கூறுபவை பாடாண் திணையின் சிறப்பு வகைகளாம்; துறைகளாகா. இன்னும் ‘‘நாடுங்காலை நாலிரண்டு உடைத்தே’’ என முன்னே எண் கொடுத்துத் தெளிவாக்கியுள்ளார் தொல்காப்பியர். இத்தொகு நிலையைத் ‘‘தொக்க நான்கு’’ எனப் பிறவற்றிலிருந்து பிரித்து வேறு கூறியுள்ளார். எனவே இங்கு கூறப்பட்டவை பாடாண் திணையின் சிறப்பு வகைகளே என்று கொள்ளவேண்டும்’’ என்று குறிப்பிடுகிறார்.

பாடாண் திணையின் பிற துறைகள்:
பாடாண் திணையின் துறைகளாகத் தொல்காப்பியர் மேலும் பத்துத் துறைகளைக் குறிப்பிடுகிறார். அவை பின்வருமாறு:

1. துயில் எடை நிலை: துயில் எழுப்பும் நிலை. துயிலும் அரசர்க்குக் குற்றமற்ற அவர் நல்ல புகழைக் கருதிப் புகழ்வோர் எடுத்துரைப்பது. இது நாளடைவில் பள்ளிஎழுச்சி என்ற சிற்றிலக்கிய வகைக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
2. ஆற்றுப்படை: ஆற்றுப்படுத்தல் – வழிகாட்டல். கூத்தர், பாணர், பொருநர், விறலி என்னும் நால்வகை இரவலரும் தனித்தனியாகப்ப் பரிசில் பெற்று மீளும்போது, இரவலன் ஒருவன் பரிசில் பெற விரும்பி வள்ளலைத் தேடிச் செல்லும் அவனுக்கு வழியிடையில் இடைப்படத் தோன்றி, பெற்றுவரும் மிக்க பரிசில் வளத்தை அவனுக்குத் தெரிவித்து அவனும் அவ்வள்ளல்பால் சென்று பரிசில் பெறச்சொல்லும் துறையாகும். (கூத்தர்-ஆடல் செய்வோர், பாணர்- இசைபாடுவோர், பொருநர்- நாடகத்தில் குறித்த ஒருவனைப் போல நடிப்பவர், (பொருந்-ஒப்பு), விறலி-இசைக்கேற்ப ஆடுபவள் விறல் என்பது உள்ளுணர்வை மெய்ப்படக் காட்டும் திறம். அத்திறமை உடையவர; விறலியர;). இத்துறை ஆற்றுப்படை என்ற இலக்கியத்திற்கு வழிகோலியது.
3. பெருமங்கலம்: பிறந்தநாள் விழா. மன்னனுக்கோ, தலைவனுக்கோ சிறந்த நாள் என்பது அவன் பிறந்த நாள் ஆகும். அதில் அவன் சினம் அகற்றி விழாக் கொண்டாட வேண்டும். அன்று பகைவரையும், தவறு செய்தோரையும் சினத்தல் கூடாது. சிறைவீடு செய்தல், கொடை வழங்குதல் வேண்டும். இது ஒரு துறையாகும்.
4. மண்ணு மங்கலம்: மண்ணுதல்-நீராடுதல், மங்கலம்- விழாக் கொண்டாடுதல். சிறந்த புகழுடைய முடிசூட்டு விழாவின்போது நடக்கும் நீராட்டுவிழா.
5. குடைநிழல் மரபு: உலகியல் ஒழுக்கத்தை உயர்த்தும் வேந்தனது குடைநிழல் முறை கூறல்.
6. வாள்மங்கலம்: பகைவரை வெற்றி கொள்ளக் கருதி வேலை, வாளை நீராட்டும் மங்கல விழாவாளும் வேலும் மன்னர்கள் ஒன்றெனக் கருதுவர்.
7. எயில் அழித்த மண்ணுமங்கலம்: நிலைத்த மதிலை அழித்தபின் நீராடும் மற விழா. பகைவர் மதிலின் குடுமியைக் கைக்கொண்ட பின் பெருமிதம் கொண்டாடும் நீர்விழா உழிஞைத்திணயில் ஒரு துறை. அது மதிலை அழியாது கைப்பற்றிய விழா. இங்கு பாடாண்திணையில் வரும் இத்துறை மதிலை அழித்துவிட்டுக் களியாட்டம் நடத்துவது. கைக்கொண்டது அங்கு. அழித்தது இங்கு. விழாவெல்லாம் நீராடியே தொடங்குவது மரபு. இதனை,
‘‘கடுந்தேர்க் குழித்த ​ஞெள்ளல் ஆங்கண்
​ வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்ழப்
பாழ்செய்தனை, அவர் நனந்தலை நல்எயில்’’(புறம்.,15)
என்ற பாடல் விளக்குகின்றது. பகைவரது பரந்த இடத்தையுடைய நல்ல மதிலை அழித்து, விரைந்ததேர் குழிசெய்த வீதியில் வெளியவாயையுடைய கழுதையாகிய புல்லிய இனத்தைப் பூட்டி உழுது பாழ் செய்தாய் என்று இப்பாடலில் மதில் அசெய்து கூற்படுவது நோக்கத்தக்து.
8. அரசனது முன்வாயிலில் வந்து பரிசில் கேட்கும் நிலை. இதற்கு,
‘‘வான்தோய் நீள்குடை வயமான் சென்னி!
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்
ஆசாகென்னும் பூசல்போல
வல்லே களைமதியத்தை உள்ளிய
விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை
பொறிப்புணர் உடம்பில் தோன்றி என்
அறிவுகெட நின்ற நல்கூர்மையே’’(புறம்.,266)
என்ற பாடல் சான்றாக அமைகின்றது. சென்னியே சான்றோர; கூடியிருந்த அவையில் வந்து நேர;ந்த ஒருவன், யான் உற்ற துன்பத்திற்கு நீர் துணையாய் இருந்து எனக்குப் பற்றுக் கோடாக வேண்டும் என்ற ஆரவார வேண்டுகோளைக் கேட்ட சான்றோர் அவன் துன்பத்தை விரைவில் தீர்த்தனர். அதுபோல என் வறுமையை நீ விரைவில் தீர்ப்பாயாக. என்னைக் கருதி வந்த விருந்தினரைக் கண்டு விருந்தளிக்க முடியாமல் ஒளிந்து கொள்ளும் திருந்தா நிலையுடையது என் இல்வாழ்க்கை. என் உடம்பில் தோன்றி என் அறிவு கெடும்படி நின்ற என் வறுமையை விரைவில் தீர்ப்பாயாக என்றார் புலவர். இதில் முன்வாயில் நின்று பரிசில் கேட்ட நிலை கூறப்படுவது நோக்கத்தக்கது.
9. இருவகை விடை: 1. புரிசில் பெற்ற பின்னும் ஈந்தோனைப் புகழ்ந்து தானே விடை கேட்டல், 2. ஈந்தோன் விடை கொடுத்தல். இவை உலக வழக்கில் பயின்று வரும் இருவகை விடையாகும்.
10. காலத்தை எண்ணிக் கூறும் வாழ்த்து: நாள் நிமித்தம், புள்நிமித்தம், பிற நிமித்தங்களால் தலைவனுக்கு நேரும் தீமைக்கு அச்சமும் நன்மைக்கு உவகையும் கொண்டு குறைவில்லாமல் ஆராய்ந்து ஏற்புடைய காலத்தை எண்ணிக் கூறும் வாழ்த்து.
‘‘காலனும் காலம் பார்க்கும்…………
………………………………………
அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும்
எயிறு நிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்
களிறு மேற்கொள்ளவும் காழக நீப்பவும்’’(புறம்.,41)
யமனும் உயிர்க்கொள்ளக் காலம் பார்க்கும். அஞ்சத் தகுவனாகிய பறவைகள் குரலிசைப்பவும், பல் நிலத்திலே வீழவும், எண்ணெயைத் தலையிலே தேய்க்கவும், பன்றி மேல் ஏறவும், ஆடையைக் களையவும் ஆகிய செயல்களால் நாள், புள் நிமித்தங்களும் பிறவும் இப்பாடலில் வந்தன. இவற்றால் தலைவனுக்கு நேரும் தீமைக்கு அச்சப்படுதல் இயல்பு. அதனால் அதனை அறிந்து வாழ்த்தினைக் கூறுகின்ற முறைமை இப்பாடலில் அமைந்துள்ளது நோக்கத்தக்கது.

உலகியலில் வரும் ஒழுக்க நடத்தைகளில் கருத்துக் கொண்டு மூன்று காலமும் தழுவிப் பாடாண் துறைகள் வரும். இங்கு கூறப்பட்ட துறைகள் பலதிறப்பட்ட புறத்திணைகளுக்கு உரியன. எனினும் தலைவன் புகழ், வாழ்த்துக்களாய் வருதலால் பாடாண் துறைகளாய் முடிகின்றன.

பாடாண்திணையில் வாழ்த்தல், புகழ்தல், முன்னோர் கூறிய குறிப்பு ஆகிய மூன்றிடத்திலும் இயற்பாக்களோடும், இசைப்பா, வண்ணக் கூறுகளும் வந்து வழங்கும். தூய காதல் பகுதியாகிய ஏழாவதும் எட்டாவதும் கடவுளோடு கடவுள், கடவுளோடு மனிதர் குழவிக் கைக்கிளை ஆகிய முறைகளில் வருவதுண்டு. பாடாணில் ஊர்சிறப்பும், உயர்குடிப் பிறப்பும் கூறுத் உண்டு. அப்போது உண்மைப் பெயர் சொல்லிப் பாடுவதுண்டு. அகத்திணையிற்றான் உண்மைப் பெயர் சுட்டக் கூடாது. பாடாண்திணையில் கடவுள் வாழ்த்தோடு பொருந்தி வருவது கொடிநிலை, காந்தள், வள்ளி என்பன. கொற்றவள்ளை என்பதும் கடவுள் வாழ்த்தோடு பொருந்தியும் கடவுள் வாழ்த்தின்றியும் வரும். பாடாண் திணை சிறப்பு வகையில் எட்டாகத் தொல்காப்பியரால் மொழியப்பட்டுள்ளன. பாடாண் துறைகளாகப் பத்துவகைகளையும் தொல்காப்பியர் மொழிந்துள்ளார்.

 

முனைவர் சி.சேதுராமன்
தமிழாய்வுத் துறைத்தலைவர்
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.)
புதுக்கோட்டை-1
மின்னஞ்சல்: Malar.sethu@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard