இன்றைய தமிழ்மொழி, வரலாற்றுத் தமிழ்மொழி ஆகிய இரண்டின் அமைப்புக்களையும் தெளிவாகப் புரிந்துகொள்ள முதலில் தேவைப்படுவது - இன்றைய தமிழ்மொழித் தரவு, வரலாற்றுத் தமிழ் இலக்கியத் தரவு. முறையான தரவகமொழியியல் அடிப்படையில் இவை உருவாக்கப்படவேண்டும். தரவுகளை முறையாக உருவாக்குவது முதற்படியே!
அடுத்து - வரலாற்றுத் தமிழ்மொழியில் ( அதாவது இலக்கியங்களில்) இடம்பெற்றுள்ள அனைத்து சொற்களையும் பட்டியலிடவேண்டும்.
மூன்றாவது - ஒவ்வொரு சொல்லுக்கும் இலக்கணக் குறிப்பு தயாரிக்கவேண்டும். தொடர் அமைப்புக்கும் இலக்கணக் குறிப்பு தயாரிக்கவேண்டும்.
இதுபோன்று இன்றைய தமிழ்மொழித் தரவுக்கும் இலக்கணக் குறிப்புக்கள் தயாரிக்கப்படவேண்டும்.
பழந்தமிழ் இலக்கியத் தமிழை ஆய்வுசெய்வதற்குப் பழந்தமிழ் இலக்கணங்கள், உரையாசிரியர்கள் உரை ஆகியவற்றைப் பயன்படுத்தவேண்டும்.
இந்தப் பணிகள் தமிழுக்கு மேற்கொள்ளப்பட்டால்தான் தமிழ்மொழி ஆய்வானது நிறைவாக அமையும். இதற்கு ஒரு சில கோடிகளே செலவாகும். தமிழ்மொழி ஆய்வாளர்களையும் மொழியியல் ஆய்வளார்களையும் இதில் ஈடுபடுத்தவேண்டும். இப்பணிக்கு இன்றைய கணினிமொழியியல், தரவகமொழியியல் மிகவும் பயன்படும்.
இப்பணியே உண்மையில் தமிழ்மொழிக்கு - தமிழன்னைக்கு - ''உருவச்சிலை'' அமைப்பதாகும். இதைச் செய்யாமல், 'தமிழன்னைக்குச் சிலை'' என்று பளிங்குக்கல்லில் சிலை அமைத்தாலும், அது வெறும் அரசியலே!
தமிழ்மொழியின் அமைப்பை - அன்றிலிருந்து இன்றுவரை - தெரிந்துகொண்டு . . . அதற்கான இலக்கணத்தை உருவாக்குவதுதான் உண்மையான ''தமிழன்னைச் சிலை'' ஆகும்!
இத்துடன் கல்வெட்டுத் தமிழையும் நாட்டுப்புற இலக்கியங்கள், வாய்மொழி இலக்கியங்கள் ஆகியவற்றின் தமிழையும் இணைத்துக்கொள்வது தேவையானது ஆகும்! இன்றைய தமிழ் ஆய்வில் வட்டார வழக்குகளைப்பற்றிய ஆய்வையும் உள்ளடக்க வேண்டும்!