பெரியார் காந்தி இறந்த போது காந்தி தேசம் என்று இந்தியாவிற்குப் பெயர் வைக்கச் சொன்னார் என்பது பெரியாரின் பெருந்தன்மைக்கு உதாரணமாகச் சொல்லப்பட்டது. நான் கூட அவருடைய பிந்தையக் காலப் பேச்சுக்களைப் படிப்பதற்கு முன்னால் அப்படித்தான் நினைத்தேன். இது பெரியார் 1957ல் பேசியது.
"ஆளுக்கொரு காந்தி பொம்மையை உடையுங்கள்; வீட்டில் மாட்டியுள்ள படத்தை ரோட்டில் வீசி எறியுங்கள்."
"காந்தி ஒன்றும் அபூர்வ புருஷர் அல்லர். பார்ப்பான், அப்படிப் பாமர மக்கள் நம்பும்படி-மகாத்மா ஆக்கினான். இப்போதல்ல; அப்போதே நான் குடி அரசில் இதை எழுதி இருக்கிறேன். ரிஷிகளுக்கு எவ்வளவு அறிவோ அவ்வளவுதான் காந்திக்கும். அவரைப் பார்ப்பனர்கள் மகாத்மா ஆக்கிவிட்டார்கள் ! மகாத்மாவேஷத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே அவருக்கு வேலை சரியாய்ப்போகிறது’ என்று எழுதியிருக்கிறேன்."
"காந்தி நாடு’ என்று வைக்கலாம் என்று சொன்னேன். முதலில் இந்தியா என்பதே கற்பனைச் சொல்; இப்படிக் கற்பனைச் சொல்லை வைத்துக்கொண்டு உயிரை வாங்கு வதைவிட உனக்குத்தான் காந்தியிடம் அதிக மரியாதை இருக்கிறது என்றாயே-அவர் பெயரை வைத்துவிட்டுப்போயேன் என்று யோசனை சொன்னேன். சுயநலக்காரர்கள் அதை வைக்கவில்லை; என்ன செய்வது என்று யோசனை கேட்டார்கள், சொன்னேன். அது போலவேதான், ‘காந்தி சகாப்தம்‘ என்று வைக்கச் சொன்னேன். நமக்கென்று வருடமே இல்லை. வெள்ளைக்காரன் கிறிஸ்து பிறந்து 1957 வருடம் என்று வைத்திருக்கிறான். நமக்கு இருப்பது பிரபவ, விபவ என்ற ஆரிய கதைப்படி உள்ள 60 வருடங்கள்தாம். இதைக் கொண்டு, காலத்தைக் கண்டுபிடிக்கமுடியாது. நான் பிரமாதி ஆண்டில் பிறந்தேன். இப்பொழுது கணக்குப் பார்த்தால் 19 வயதுதானே ஆகவேண்டும்! எனக்கு எழுபதி தொன்பது என்று கண்டுபிடிக்கவேண்டுமானால் என் தாடியைப் பார்த்துத்தான் சொல்ல வேண்டும். சரித்திரத்திலேயே புரட்டு ஏற்பட இது ஒரு காரணம், கல்வெட்டில்- கலியுகாதி, பிரபவ வருடம்’ என்று போட்டிருப்பான். கலியுகாதி’ என்பது பித்தலாட்டம்; அறிவுக்குப் பொருத்தமும் ஆதாரமும் அற்றது. பிரபவ என்று சொன்னால்- எந்த பிரபவ என்று சொல்லமுடியாது. இப்படி நமக்கென்று ஒரு சகாப்தம் இல்லாமல் அழிப்பதைவிட, காந்தி பெயரைத்தான் வையேன்! என்று யோசனை சொன்னேன். அவ்வளவுதான். காந்தி துரோகம் செய்தாரா, இல்லையா என்று உங்கள் அறிவைக்கொண்டு யோசியுங்கள்."