ஒரு நாளுக்கு முன்னாடிதான் கவிஞர் கண்ணதாசனின் சுயவரலாறான “வனவாசம்” புத்தகத்தைப் படித்து முடித்தேன். அதில் கண்ணதாசன் கருணாநிதியின் குள்ளநரித்தனத்தை அப்போதே தோலுறித்து காட்டியுள்ளார். அதை விட இது நாள் வரை பண்பாளர், பக்குவமான அரசியல்வாதி என்று நான் படித்து வந்த அண்ணாத்துரையின் நிஜ முகத்தையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். ஆனால் இந்த உண்மைகளை பற்றியெல்லாம் தற்கால பத்திரிகைகள் எதுவும் எழுதுவதில்லை. அதனால், நான் உட்பட இன்றைய தலைமுறையினருக்கு திராவிட தலைவர்களின் உண்மையான உருவங்கள் தெரியவில்லை. கருணாநிதியும் அண்ணாவும் எப்படி குள்ளநரி தந்திரம் செய்து நேர்மையான திராவிட தலைவர்களையும் பிரமுகர்களையும் கீழே தள்ளிவிட்டு தாங்கள் மட்டும் பதவி ஏணியில் ஏறினார்கள் என்பதை அருமையாகயும் நாசுக்காகவும் விளக்கியுள்ளார் கண்ணதாசன்.
கண்ணதாசன் “வனவாசத்தில்” தன்னை ‘அவன்’ என்றே கூறிப்பிட்டுள்ளார். அவர் கருணாநிதியைப் பற்றி எழுதிய விமர்சனங்களை படிப்பதற்கு முன்பு அவர்கள் இருவரும் ஆரம்பத்தில் எவ்வாறு நட்பாக இருந்தார்கள் என்பதை கீழே காணுங்கள். அதன் மூலம் அவர் ஏதோ காழ்ப்புணர்ச்சியால் கருணாநிதியைப் பற்றி எழுதவில்லை என்பதனை நாம் புரிந்து கொள்ளலாம்.
கருணாநிதியுடனான நட்பு
கண்ணதாசன் எழுதுகிறார்….
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் இருக்கும்போதுதான் நடிகர் எம்.ஜி. சக்கரபாணியின் தொடர்பு அவனுக்கு கிடைத்தது. அவர்தான் கருணாநிதி என்கிற பெயரை முதலில் அவனுக்கு அறிமுகப்படுத்தினார். கருணாநிதியின் வசனங்களைப் பற்றி, அவனிடம் அடிக்கடி சொல்லுவார். ஒருநாள் சேலம் அம்பிகா தியேட்டருக்கு, அவனும் சக்கரபாணியும் ‘அபிமன்யு’ படம் பார்க்கப் போனார்கள். அந்தப் படத்தின் வசனங்களைக் கருணாநிதி எழுதியதாகச் சக்கரபாணி சொன்னார்.
அந்த வசனங்கள் இன்றுவரை அவனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு நாளல்ல… ஆறு நாட்கள் சேர்ந்தாற்போல அந்தப் படத்தை அவன் பார்த்தான். “காணாமல் காதல்” என்பார்கள். அந்தக் ‘காதலே’ பிறந்துவிட்டது அவனுக்குக் கருணாநிதியின் மீது…! “மாடர்ன் தியேட்டர்ஸுக்கு அவரை வரவழைக்க வேண்டுமென்று, சக்கரபாணியிடம் சொன்னான்.
அன்று கருணாநிதியை அவன் முதன்முதலாகக் “கோயம்புத்தூர் லாட்ஜில்” சந்தித்ததும், ஒரு காதலியைக் காணும் உணர்ச்சியே அவனுக்கு ஏற்பட்டது. அன்று முதல் கருணாநிதியும் அவனை உயிருக்குயிராக நேசிக்கத் துவங்கினார். ‘மாடர்ன் தியேட்டர்ஸில்’ மாதம் ஐந்நூறு ரூபாய் சம்பளத்தில் அவர் வேலைக்கமர்ந்தார்.
ஒரு நாளாவது ஒருவரை ஒருவர் காணாமலிருந்தால் எதையோ பறிகொடுத்தது போலிருக்கும். ஒருவர் கையில் இன்னொருவர் தலை வைத்துத் தூங்குகிற அளவுக்குப் பாசம் வளர்ந்தது. அவரைப் பற்றி யாராவது தவறாகப் பேசிவிட்டால், அவனால் பொறுக்க முடியாது. அவருக்கும் அப்படியே.
பார்த்தீர்களா, இருவரும் எவ்வாறு ஆரம்பத்தில் நட்பாக இருந்துள்ளார்கள் என்று. தவிர கவிஞர் அக்கால கட்டத்தில் அண்ணாவின்பால் மிகவும் ஈர்க்கப்பட்டார். அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டார். அதனாலேயே கடவுள் பக்தியை விட்டார், சுயமரியாதை கொள்கைகளை ஏற்றார். தொடர்ந்து திராவிட இயக்க தலைவர்கள் இரவு நேர சாகசங்களை படியுங்கள். எச்சரிக்கை, மனதை திடப்படுத்திக் கொண்டு படியுங்கள்.
கருணாநிதி மற்றும் அண்ணாவின் இரவு நேர சாகசங்கள்
கவிஞரே! நீங்கள் தொடருங்கள்,
அந்நாளில் திராவிட முன்னேற்றக் கழகம் பிரபல இயக்கமாக இல்லை. வாடகைக் கார் டிரைவர்களுக்கும், அந்தக் கழகத்தைப் பற்றியோ, அதன் தலைவர்களைப் பற்றியோ எதுவும் தெரியாது. அவனும் தலைவனும் ஓர் நாள் இரவு, ஒரு பெரிய வாடகைக் காரை வைத்துக்கொண்டு பெண் வேட்டையில் ஈடுபட்டார்கள்.
ஒரு நாலைந்து பெண்கள் – கிராமத்துப் பெண்கள் – வேறு பெயரில் சொல்வதானால் நாட்டுக்கட்டைகள், மடமடவென்று வந்து காருக்குள் ஏறிக்கொண்டார்கள். காமுகன் பசிக்கு ருசியா தெரியும்? அத்தனையையும் ஏற்றிக்கொண்ட வாடகைக் கார், நேரே சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கம் உள்ள ஹோட்டலை நோக்கிப் புறப்பட்டது.
திராவிட விடுதலை வீரர்கள் திராவிட நாடு அந்தப் பெண்களிடம் இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தார்கள். காமக்கடலில் மூழ்கி எழுந்தார்கள். ஆனால் காரில் போவதற்குக்கூட பணம் கொடுக்காமல், அவர்களை வெளியே அனுப்பிவிட்டார்கள்.
அன்றும் அதற்குப் பிறகும், நடைபெற்ற களியாட்டங்களை, ஒவ்வொன்றாக விவரிக்கத் தேவை இல்லை. அது சுவைக்குறைவாகவும் போய்விடக்கூடும்.
ஆனால் சில பெண்கள், அவ்வப்போது நறுக்குத் தெறித்தாற்போல் கேட்ட கேள்விகளை அவனால் மறக்க முடியவில்லை.
“மேடையில் என்னென்னவோ பேசுகிறீர்கள்! அதெல்லாம் ஊருக்குத்தான் உபதேசமா?”
“நீங்களே இப்படி நடப்பதைப் பார்த்தால், யாரை நம்புவதென்றே தெரியவில்லை.”
“உங்கள் கையில் நாடு கிடைத்தால் – சட்டசபையெல்லாம் பெண்களாகவே இருப்பார்கள்.”
இப்படி ஆணித்தரமான பொன்மொழிகள் பலவற்றை அவர்கள் சந்தித்த பெண்கள் உதிர்த்திருந்தார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்கள் பலரும், ஒழுக்கமற்றவர்களென்றும் காமுகர்களென்றும் எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தும்போது அவனுக்குக் கொஞ்சம்கூட கோபம் வருவதில்லை!
காரணம் – அதுதான் உண்மை! அரசியலையே அவர்கள் வேடிக்கையாகத்தான் நடத்தினார்கள். கட்சியினுடைய ஆரம்ப காலமான அக்காலத்திலும் ஒரு தலைவர் இன்னொரு தலைவரைக் கேலி செய்வதே வாடிக்கையாக இருந்தது! “நீ இப்படி செய்யலாமா?” என்று ஒருவரைக் கேட்டால், “ஏன் அவர் மட்டும் என்ன யோக்கியராம்?” என்று” பளிச் சென்று பதில் சொல்வார்கள்.
பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்கின்ற தொண்டர்கள் அன்றும் சரி, இன்றும் சரி, அவ்வளவு உத்தமமானவர்கள். அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்குப் பரிதாபமாக இருக்கும். “இந்தத் தலைவர்களை நம்பியா நீங்கள் இந்த வேலையில் ஈடுபட்டிருக்கிறீர்கள்!” என்று கேட்கத் தோன்றும். தவறுகளையே செய்து கொண்டிருக்கும் தலைவர்கள், அந்த உத்தமமான தொண்டர்களை மிரட்டுவார்கள்.
உள்ளூரிலேயே ‘ஐம்பது ரூபாய் கொடுத்தால்தான் கூட்டத்திற்கு வருவேன்’ என்பார்கள். வாடகைக் காருக்குப் பணம் கொடுக்கும்படி மிரட்டுவார்கள். தன் மனைவியின் தாலிச்சரட்டை விற்றுவிட்டு, தலைவரின் வழிச்செலவுக்குப் பணம் கொடுத்த ஒரு தொண்டனை அவன் அறிவான். ஈட்டிக்காரனிடம் எழுதிக் கொடுத்துக் கடன் வாங்கி ஒரு கூட்டத்தை நடத்தினான் ஒரு தோழன். அந்தக் கூட்டத்தில் பேசுவதாக இருந்த ஒரு பேச்சாளர் பணத்தையும் வாங்கிக்கொண்டு வெளியூருக்குப் போய்விட்டார்.
கூட்டத்திற்கு அவர் வராததால் ஏமாந்த அந்தத் தோழன் ‘கோ’வென்று அலறி அழுது கொடிகளையெல்லாம் பிய்த்துக் கீழே போட்டான். ஜனநாயகத்தின் போலித்தனம் அவனுக்குத் தெரியலாயிற்று.
அவனுடைய நண்பர் (வேறு யார் கருணாநிதி தான்) சரியான அரசியல்வாதி! தமிழ் நாட்டில் பிச்சைக்காரர்கள் இருப்பதுபற்றி அற்புதமான வசனங்கள் எழுதுவார். ஆனால் ஒரு பிச்சைக்காரனுக்குக்கூட கையைவிட்டுக் காலணாக் கொடுத்ததில்லை.
தொழிலாளர்களையும், அவர்கள் ரத்தம், நரம்புகளையும் பற்றித் துள்ளும் தமிழில் கட்டுரைகள் தீட்டுவார். அவரிடம் ஊழியம் பார்ப்பவர்களுக்கு மிகக் குறைந்த அளவு சம்பளமே கொடுப்பார்.
தான் முன்னேறுவதுபோல் இன்னொருவனும் முன்னேறி விடாமல் இருக்க சகலவிதமான வழிகளையும் கையாளுவார். ஏன், வயிற்றுப்பாட்டுக்காக விபச்சாரத் தொழில் புரிந்து கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் பணத்தைக் கொடுத்துக் காரியமும் முடிந்தபின், சத்தம் போட்டு அந்தப் பணத்தையே திருப்பி வாங்கி வந்தவர் அவர்.
சென்னை ராயப்பேட்டையின் குறுகலான சந்து. அந்தச் சந்திலேதான் அந்தப் பெண்ணின் தகப்பனாரான நாட்டு வைத்தியர், தன் மூன்று பெண் மக்களோடு குடியிருந்தார். மூத்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. மற்றும் இருவர் கன்னியர். அவனும் அந்தத் ‘துள்ளுத்தமிழ்த் தோழனும்’ இன்னும் ஒரு தற்கால எம்.எல்.ஏ.யும் இரவு 9 மணிக்கு அந்த வீட்டில் நுழைந்தார்கள்.
மூவருக்குமாக ரூபாய் நூற்றைம்பது தரப்பட்டது. இளைய பெண்ணொருத்தியை அந்தப் பிரமுகர் சேர்த்துக் கொண்டார். அந்தச் சிறிய வீடு, மறைவு தட்டிகளால் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. இரவு பதினொரு மணி இருக்கும். ஒரு பகுதியிலிருந்து பரபரப்பான பேச்சுக்குரல் எழுந்தது. நேரம் ஆக ஆக, அது வாக்குவாதமாக வளர்ந்தது. ‘கலாரசிகர்’ வெளியிலே வந்தார். கையிலிருந்த துண்டைத் தலையிலே கட்டிக்கொண்டார். நாட்டு வைத்தியரைத் தட்டி எழுப்பினார்.
“உன் பெண் சரியாக நடந்துகொள்ளவில்லை. மரியாதையாகப் பணத்தைத் திருப்பிக்கொடு” என்றார். “போலீசைக் கூப்பிடுவேன்” என்று மிரட்டினார். போலீஸ் வந்தால் தன் கதி என்ன என்பதை அந்தக் கலாரசிகர் மறந்தே போனார். இறுதியில் ரூபாய் நூற்றைம்பதையும் பெற்றுக்கொண்டு தான் ஆளை விட்டார். பின், ஒரு வாரம்வரை அதை ஒரு வெற்றி விழாவாகவே அவர் கொண்டாடினார். அந்த ரூபாயும் அன்று மிஞ்சியதுதானே தவிர, அடுத்து அதே மாதிரிக் காரியத்திற்குத்தான் பயன்பட்டது.
விடுதலை இயக்கத்தின் பிரமுகர்களைக் கவனியுங்கள். எப்படியோ அப்பாவிப் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட்ட அரசியல்வாதிகளின் யோக்கியதையைக் கவனியுங்கள். சமுதாயத்தின் இருண்ட பகுதியை ஒளிமயமாக்கப் புறப்பட்ட அவர்கள், பொழுது இருண்டபிறகுதான் தங்கள் வாழ்க்கையைத் தொடங்குவார்கள்.
எந்தெந்தத் துயரங்களிலே இந்தச் சமுதாயம் ஆழ்ந்து கிடக்கிறதென்று அவர்கள் புலம்புவார்களோ, அந்தத் துயரங்கள் பலவற்றிற்கு அவர்களே தான் காரணம் ஆனார்கள்.
அந்த நேரத்தில் அவன் அவர்களைப்பற்றி அதிகம் ஆராய விரும்பவில்லை. காரணம் அவனும் உடன்பட்டேதான் அந்தக் காரியங்களில் இறங்கினான். பணக்கார மைனர்களைப் போன்று, பகலிரவு பாராமல் அவர்கள் ஆடினார்கள்.
இந்த நேரத்தில் அவனுக்குச் சில செய்திகள் தரப்பட்டன. நாம் மட்டும் தவறு செய்யவில்லை! முக்கியத் தலைவரே (யாரென்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்) அதைத்தான் செய்கிறார் – என்று அந்தச் செய்திகள் கூறின! கலாரசிகரும், இன்றைய எம்.எல்.ஏ. ஒருவரும், அந்த நிகழ்ச்சியினை அவனுக்கு விரிவாகவே கூறினார்கள். அந்த எம்.எல்.ஏ. முக்கியத் தலைவரின் பத்திரிக்கையிலே வேலை பார்த்தவர். ஆதலின், அவர் சொன்னவற்றை அவன் நம்பினான். அது இது:
ஓர் இரவு, முக்கியத் தலைவர் தூக்கம் பிடிக்காமல் முன்னும் பின்னும் நடக்கிறார். வெளியிலே இருவர் போயிருக்கிறார்கள். அவர்களை அவர் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார். மணி பத்தடிக்கிறது. பதினொன்று! கோயிலில் அர்த்த ஜாம மணி அடிக்கிறது. மணி பனிரெண்டு! அதற்குள் தலைவர் ஏழெட்டுத் தடவை வெற்றிலை போட்டுத் துப்பிவிட்டார். அதோ அவர்கள் வரும் சத்தம் கேட்கிறது.
கதவு திறக்கப்படுகிறது. மூன்று ஆடவர்கள் உள்ளே நுழைகிறார்கள். “ஆடவர்கள்தானா? அழகு மயில் வரவில்லையா!” ஓர் ஆடவனின் தலைக்கட்டு அவிழ்க்கப்படுகிறது. ஆண் உடைகள் களையப் பெறுகின்றன. என்ன ஆச்சரியம்! அந்த உடைக்குள் ஓர் அழகிய மயிலல்லவாஅ ஒளிந்து கொண்டிருக்கிறது! அழைத்து வந்தோர் குறிப்பறிந்து வெளியேறுகிறார்கள். பகுத்தறிவுத் தலைவரின் அறை பண்டாரச் சன்னியின் மடமாகிறது. பொழுது விடிவதற்குமுன்னே பூவை திரும்புகிறாள்.
இந்த நிகழ்ச்சியைப்பற்றி அறிந்த கட்சிப் பிரமுகர்கள் இதற்குக் கொடுத்த பெயரென்ன தெரியுமா? ‘சுந்தரகோஷ்’ என்பதாகும். ‘வேலைக்காரி’ படத்தில் ஆண்வேடம் தாங்கிய பெண்ணொருத்தி ‘சுந்தரகோஷ்’ என்று அழைக்கப்படுவதையே அவர்கள் அப்படிக் குறிப்பிட்டார்கள்.