"தோழர்களே! மக்கள் எல்லாரும் தத்தமது ஜாதிப் பட்டங்களை, அதாவது முதலியார், செட்டியார், கவுண்டர், படையாச்சி, நாயுடு போன்ற பேருக்குப் பின் சேர்த்துக் கொள்ளும் சொல்லை எல்லாம் போட்டுக் கொள்ளாமல் விட்டுவிட வேண்டும் என்று சொல்லி வந்திருக்கின்றோம். அதன்படியே நாங்களும் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்களையும் அப்படியே வாலைத் (ஜாதிப் பட்டத்தை) துறக்கும்படியே செய்து இருக்கின்றோம். அப்படிக் கூறிச் செயலிலும் காட்டிய நான் இன்று மக்களை மீண்டும் ஜாதிப் பட்டம் போட்டுக் கொள்ளச் சொல்லலாமா என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றேன்.இப்படி நான் சொல்வதால் இவன் தன் கொள்கையில் இருந்து பல்டி (தலைகீழாய்க் குதித்தல்) அடித்துவிட்டான் என்று என்னைப் பலர் ஏளனம் செய்யலாம். அது பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் என் சுயநலத்திற்காக எந்தவித நலத்தினையும் எனக்கு எதிர்பார்த்து பல்டி அடிக்கவில்லை. பொது நலத்துக்காகப் பல்டி அடிக்கின்றேன்.
தோழர்களே! இதை நீங்கள் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். நாம் ஜாதி ஒழிய வேண்டும், ஜாதியைக் காட்டக் கூடிய ஜாதிப் பட்டத்தைவிட வேண்டும் என்று கூறி விளங்கிக் கொண்டு வந்தபோது, பார்ப்பனர்கள் ஜாதிப் பட்டத்தை விடாப் பிடியாகப் போட்டு கொண்டு வந்தனர்.
கல்வி, உத்தியோகங்களில் பார்ப்பனர் தம் ஆதிக்கமே அதிகமாக இருக்கின்றது. 100 க்கு 3 பேராக உள்ள பார்ப்பனர் 100 க்கு 70, 80 உத்தியோகங்களில் இருக்கின்றார்கள். கல்லூரிகளிலும், தொழில் படிப்பிலும் பார்ப்பன மாணவர்களே மிகுதியாக இருக்கின்றார்கள். 100 க்கு 97 பேராக உள்ள நமக்குக் கல்வியிலும், உத்தியோகத்திலும் உரிய பங்குகள் இல்லையே என்று புள்ளி விவரங்களோடு எடுத்துக்காட்டி, கூப்பாடுகள் தொடர்ந்து போட்டுக் கொண்டு வந்தால் நம்மவர்களுக்கும் உணர்ச்சி வந்து எதை எடுத்தாலும் பார்ப்பனர் அல்லாதார் உணர்ச்சியே தலை எடுக்க ஆரம்பித்துவிட்டது.
இதன் காரணமாக நம்மவர்களும் கல்வி உத்தியோகங்களில் பார்ப்பனருடன் போட்டி போடுவது மட்டும் அல்லாமல், 100 க்கு 97 உள்ள எங்களுக்கு எங்கள் எண்ணிக்கைக்குத் தக்கவாறு உத்தியோகத்திலும் பங்கு வேண்டுமென்று கூப்பாடு போட்டு, அதை ஓரளவு செயல்படும்படியும் செய்து விட்டனர். இதன் காரணமாக 100 க்கு 3 பேராக பார்ப்பான் 100 க்கு 70, 80 பதவிகள் அனுபவித்து வந்த நிலை மளமளவென்று குறைலாயிற்று.
இன்று கல்லூரிகளில் சேரச் சென்றாலோ, உத்தியோகத்திற்கு விண்ணப்பித்தாலோ, இண்டர்வியூவில் (நேர்காணல்) ஜாதியை அறிந்து கொண்டு சேர்த்துக் கொள்கின்றனர்.
அதன் காரணமாகப் பார்ப்பனர்கள் தந்திரம் செய்து தங்கள் பேருக்குப் பின்னால் ஜாதிப் பட்டத்தைப் போடுவதை விட்டு விட்டனர்.
அத்தோடு மட்டும் அல்லாமல் ஜாதி இன்னது என்று இண்டர்வியூலோ, விண்ணப்பத்திலோ நேர்முகம் மட்டும் அல்லாமல் மறைமுகமாகக் கூட கேட்கக் கூடாது என்று அரசாங்கம் மூலமே கூறச் செய்துவிட்டனர்.
இந்த நிலையில், ஜாதி கண்டுகொள்ள முடியாமல் போகின்றதனால், பார்ப்பனர்களே மீண்டும் உத்தியோகங்களிலும் கல்லூரிகளிலும் நிரம்ப இது ஏதுவாகின்றது. எனவே தான் நாம் இனிக் கல்வி, உத்தியோகங்களைப் பொறுத்தாவது விண்ணப்பிக்கும் போது ஜாதிப் பட்டத்தைப் போட்டுக் கொண்டால் அதன் மூலம் தேர்வு செய்பவர்களுக்குப் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் (திராவிடர்) என்று தெரிந்து கொள்ள முடியும். இதன்படிக் கூறலாமா என்று எண்ணிக் கொண்டிருக்கின்றேன். (விடுதலை 29.5.1960)
"நான் ஆயுதப் பிரயோகம் செய்யவேண்டும் என்றும், அக்கிரகாரங்கள் கொளுத்தப்பட வேண்டும் என்றும் சொன்னதும், சொல்லி வரு வதும் உண்மை. ஆனால் அவை இப்பொழுது அல்ல. அதற்கான காலம் இன்னும் வரவில்லை. வரக்கூடாதென்றே ஆசைப்படுகிறேன்.
அப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுவதற்குக் காலம் எப்போது வரும் என்றால் அரசியல் சட்டத்தைக் கொளுத்துவது முதலிய இன்னும் நான்கைந்து கட்டங்கள் நடத்தி, அவைகளால் ஒன்றும் பயனில்லை, வெற்றிக்கு அவை பயன் படவில்லை என்று கண்டு, பலாத்காரத்தைத் தவிர வேறு வகையில்லை என்ற முடிவுக்கு வந்தபிறகுதான் நாம் அவற்றில் இறங்க வேண் டியவர்களாக இருக்கிறோம்." 26.11.57 - பெரியார்.