New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பழமையான மொழி தமிழ்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
பழமையான மொழி தமிழ்
Permalink  
 


 பகிர்

தமிழர் நாகரிகம் போற்றும் கொற்கை, அழகன்குளம், கொடுமணல், பொருந்தல், கீழடி முதல் ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் வரையிலான ஒரு நீள்பார்வை.

தமிழக வரலாற்றை மிகவும் ஆய்ந்து முடிவெடுக்கக்கூடிய நிலையில் நாம் உள்ளோம். தமிழகத்தில் நடைபெற்ற கீழடி அகழாய்வு, தமிழக மக்கள் அனைவரையும் அகழாய்வு மற்றும் தொல்லியல் துறையின் பக்கம் கவனத்தை ஈர்த்துள்ளது என்றால், அதற்கு நாம் மிகவும் தலைவணங்கக் கடமைப்பட்டுள்ளோம்.

உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் மொழிதான் என்பதை, அண்மைக்கால கண்டுபிடிப்புகளும், கல்வெட்டுச் சான்றுகளும் நிரூபித்து வருகின்றன. அகழாய்வுச் சான்றுகள் நமக்கு மிகவும் உறுதுணையாக அமைகின்றது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்து, தொல்லியல் துறை துவங்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை அகழாய்வுகள் தொடர்ந்தன. அவை சுதந்திர இந்தியாவிலும் தொடர்ந்தன. அவற்றின்வாயிலாக, நமது பண்பாட்டைப் போற்றும் தரவுகளை வழங்கிய பல அகழாய்வுகளைத் தமிழகம் சந்தித்துள்ளது. தமிழ்நாடு தொல்லியல் துறையின் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்ற முனைவர் இரா. நாகசாமி தொடங்கி, அவருக்குப் பிறகு அப்பொறுப்புக்கு வந்த இயக்குநர்கள் அனைவரும், தங்களது காலகட்டங்களில் சிறப்பான அகழாய்வுகளை முன்னெடுத்து, பல அரிய தரவுகளை வெளிஉலகுக்கு வழங்கினர். அவற்றில் முதன்மையானது தமிழகத் தொல்லியல் துறை மேற்கொண்ட கொற்கை அகழாய்வு.

அதைத்தொடர்ந்து, நிலஅகழாய்வுகளும், ஆழ்கடல் அகழாய்வுகளையும் மேற்கொண்டு, புதையுண்ட தமிழக வரலாற்றையும், கடல்கொண்ட வரலாற்றையும் செம்மையாக வெளிப்படுத்தினர். சிலம்பு கூறும் பூம்புகார், ஆழிப்பேரலையால் அடித்துக்கொண்டு சென்றது என்பது உண்மைதானா எனக் கண்டறிந்து வெளிப்படுத்திய பெருமை தமிழகத் தொல்லியல் துறைக்கு உண்டு. ஆனால், இவை அனைத்தும் செய்திகளாகவே நின்றதற்குக் காரணம் விளங்கவில்லை. தற்போது, தொல்லியல் அகழாய்வின் நிலையையும், பிற தொடர் அகழாய்வையும், அவை வெளிப்படுத்தும் தமிழின் தொன்மையையும், தமிழர் நாகரிகத்தையும் அவை எவ்வாறெல்லாம் கொண்டு செல்கின்றன என்பதையும், அதை மக்களும், அரசும் எவ்வாறெல்லாம் போற்றுகின்றது என்பதையும் இங்கு விரிவாகப் பார்ப்போம்.

அத்துடன், தமிழக அகழாய்வுகளின் வாயிலாக, நமது தொல்தமிழ் எத்தகைய பழமையானது என்பதையும், அதன் காலத்தையும் இங்கு வெளிப்படுத்தப்பட்ட அகழாய்வுகளின் தரவுகளின் அடிப்படையில் காண்போம்.

அகழாய்வு என்றாலே முதன்மையானதும், முக்கியமானதும் மட்கலன்கள்தான். மக்கள் அன்றாட பயன்பாட்டுக்குப் பயன்படுத்திய மட்கலன்கள் காலத்தால் அழியாது, நின்று நிலைத்த சான்றாக அமைவதால், அனைத்து அகழாய்வுகளிலும் மண்ணடுக்குகளில் காணப்படும் தொல்பொருள்களாகத் தொல்லியல் வல்லுநர்கள் கவனத்தில் கொண்டது மட்கலன்களைத்தான். அவற்றையே முதன்மைச் சான்றாக எடுத்துக்கொள்வர். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான், அகழாய்வுகளில் மட்கலன்களின் மேலே, தமிழி எழுத்துப் பொறிப்புகள் உள்ள மட்கலன் ஓடுகளில், கலப்பு மொழியின்றி தனித்தமிழ் மொழியாக அதிக அளவில் கிடைத்துள்ளதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஆய்வுகளின் முடிவுகள் அவ்வப்போது கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் மாறிக்கொண்டே வருகின்றன. ஆதன், சாத்தன், கோவிவன், கண்ணன், என்ற பெயர்களைக் குறிப்பிடலாம்.

தமிழக ஆய்வாளர்கள் மத்தியில், தமிழ் மொழி வளர்ச்சிக்கும், பண்டைய தமிழ் எழுத்துகளுக்கும் உரியவர்கள் சமணர்கள் என்ற கருத்து ஒரு காலத்தில் நிலவிவந்தது. ஏனெனில், தமிழகத்தில் காணப்பட்ட பெரும்பான்மையான தமிழி கல்வெட்டுகள், சமணர் படுக்கைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டவையே என்பது காரணமாக அமைந்தது எனலாம். குறிப்பாக, மாங்குளம், ஆனைமலை, திருப்பரங்குன்றம் என்று மதுரையைச் சுற்றிலும் சுமார் 15-க்கும் மேற்பட்ட சமணர் குன்றுகளும், அங்கு காணப்பட்ட கல்வெட்டுகளும், அதன் அருகே வெட்டப்பட்ட சமணப் படுக்கைகளும் அமைந்திருந்ததே ஆகும்.

அதற்கேற்ப, தமிழக இலக்கியங்களில் குறிப்பிட்டுக் கூற வேண்டுமெனில், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவை சமணர்கள் படைத்த இலக்கியங்களாகும். சீவகசிந்தாமணியும் சமண இலக்கியமே. இலக்கியங்களிலும் பெரும்பாலானவை சமண சமயத்தைச் சார்ந்தவையா இருந்தன. சமணர் படுக்கைகளில் காணப்பட்ட கல்வெட்டுகளும் களப்பிரவாதத்தைக் கடைப்பிடித்ததால், அம்மொழி வடக்கிலிருந்து வந்திருக்கலாம் என்று கருத இடமளித்தது. மேலும், சமணர் படுக்கைகளில் தமிழி கல்வெட்டுகளில் காணப்பட்ட வாசகங்கள், வடமொழி சாயல் கொண்டவையாக அமைந்திருந்ததும் காரணமாகும். குறிப்பாக, நிகமம் என்ற சொல் வணிகக்குழுவைக் குறிக்கும் வடசொல்லாகும். இவற்றையெல்லாம் சான்றாகக் கொண்டே இத்தகைய ஒரு நிலைப்பாட்டில் அவர்கள் இருந்தனர்.

அகழாய்வுகள் அதிகரிக்க அதிகரிக்க, தமிழ் மொழி தமிழருக்கே உரியது என்றும், உலக மொழிகளுக்கெல்லாம் தாயாக விளங்கிவந்த மொழிதான் தமிழ் மொழி என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெறத் துவங்கியது. தமிழகத்தில், முதன்முதலாக அறியப்பட்ட அகழாய்வில் சேகரிக்கப்பட்ட தொல்பொருளான எழுத்துப் பொறிப்புடன் கூடிய மட்கலன், இதற்குத் தக்க சான்றாக அமைந்தது. 1969-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை மேற்கொண்ட கொற்கை அகழாய்வில், மண்ணடுக்கிலேயே கிடைத்த எழுத்துப் பொறித்த மட்கலன் தடயமே முதன்மைச்சான்றாக நமக்குக் கிடைத்தது.

அந்த மட்கலன் ஓட்டை வேதியியல் ஆய்வகத்தில் கார்பன் 14 முறையில் ஆய்வு செய்தபோது, முதல் தமிழ் எழுத்தின் காலம் பொ.ஆ.மு.785 என்று கண்டறியப்பட்டு, அது தொடர்பான அறிக்கையும் வெளியிடப்பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு, அப்போதைய மத்திய அரசின் கல்வெட்டுப் பிரிவின் இயக்குநர்களாக இருந்த கே.வி. ரமேஷ், கட்டி போன்ற வல்லுநர்கள், தமிழ் மொழிதான் மிகவும் பழமையானது என்றும், தென்தமிழகத்தில் இருந்துதான் தமிழ் மொழி இந்தியாவின் வடக்கே வந்திருக்க வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்தனர். ஆனால், இதனை யாரும் அப்போது ஏற்கவில்லை.

காலப்போக்கில், தமிழக அகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருள்களில் கீறல் குறியீடுகளும், அதனை அடுத்து எழுத்துப் பொறிப்புகளும் அதிக அளவில் காணப்பட்டன. மண்ணடுக்கிலேயே எழுத்துப் பொறிப்புகளும், அதன் மேல்நிலையில் கீறல் குறியீடுகளும் காணப்பட்டது ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. இதற்குச் சான்றாக, தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளில் மாங்குடி, அழகன்குளம், கொடுமணல், பொருந்தல் என பல அகழாய்வுகளைக் கூறலாம். இந்த அகழாய்வுகளிலெல்லாம், மண்ணடுக்குகளிலேயே மேலிருந்து கீழாக்க கணக்கிடும்போது, முதலில் எழுத்துப் பொறிப்புள்ள மட்கலன் ஓடுகளும், அடுத்து வரும் மண்ணடுக்குகளில் கீறல் குறியீடுகள் கொண்ட மட்கலன் ஓடுகளும் காணப்பட்டதை, இங்கு நினைவில் கொள்வது அவசியமாகும்.

tamil history 1

‘குறுமாங்கல யாதன் யியானை’ என்ற வாசகம் உடைய நீண்ட தொல்தமிழ் எழுத்துப் பொறித்த மட்கலன் ஓடு, மாங்குடி அகழாய்வில் மண்ணடுக்கிலேயே காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அடுத்து, அழகன்குளம் சாத்தன் என்ற எழுத்துப் பொறித்த ரோமானிய மட்கலன்; தேரிருவேலி அகழ்வாய்வில் நெடுங்கிள்ளி என்ற பெயர் பொறித்த மட்கலன் என, தொடர்ச்சியாகப் பல தொல்பொருள் சான்றாதாரங்களைத் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை வெளிப்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் செய்திகளாகவே நின்றுபோயின.

3000 ஆண்டு பழமையான தமிழ்

இவையெல்லாம் எதை எடுத்துக்கூறுகின்றன என ஒப்பிட்டுப் பார்த்தால், ஆய்வாளர்களும் தமிழின் மீது பற்று உள்ளவர்களும் எளிதில் உணர்ந்துகொள்ள வழிவகுக்கும். நமது தமிழ், காலம் காலமாகவே தனித்தமிழாக சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே மிகவும் சிறப்புபெற்ற மொழியாக விளங்கியதால்தான், பல நீதி இலக்கியங்களையும், மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான அறநெறிகளைப் புகட்டும் இலக்கியங்களும், திருக்குறள் போன்ற எக்காலத்துக்கும் பொருந்தும் அறநூலையும் வழங்க முடிந்தது என்பதையும் கருத்தில் கொண்டு, முந்து தமிழ் மூத்த தமிழ் நம் தொல்தமிழ் என்பதை இனியாவது உலகெங்கும் பறைசாற்றுவோமாக.

tamil history 2

தமிழக அகழாய்வுகளில், ஈரோட்டுக்கு அருகே அமைந்த கொடுமணல் அகழாய்வும், தஞ்சைக்கு அருகில் அமைந்த வல்லம் அகழாய்வுகளும் திருப்புமுனையாக அமைந்தது எனலாம். கொடுமணல் அகழாய்வில்தான், அங்கு கிடைத்த வண்ணம் தீட்டப்பட்ட மட்கலன் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டது என்பது உறுதியானது. அத்தகைய வண்ணம் தீட்டப்பட்ட மட்கலன்கள் ஆந்திர நாட்டைச் சேர்ந்தது என்று அதுநாள்வரை நம்பப்பட்டு வந்தது.

அகழாய்வுகளில் அதிக அளவில் செம்பழுப்பு நிறப் பூச்சு கொண்ட மட்கலன்கள் கிடைத்துள்ளன. எனவே, தமிழகத்திலேயே இம்மட்கலன் தயாரித்து, பிற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு இருத்தல் கூடும். மேலும், இக் கருத்தை வலியுறுத்துவதுபோல, தமிழ் பிராமி எழுத்துப் பொறித்த, செம்பழுப்பு நிறப் பூச்சு கொண்ட கறுப்பு சிவப்பு பானை ஓடுகள், கொடுமணல் அகழாய்வில் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்க சான்றாகும்.

பெரும்பாலும், சிவப்பு மற்றும் கறுப்பு நிற மட்கலன்களின் மேல், செம்பழுப்பு நிறப் பூச்சு பூசப்பட்டவையே அதிக அளவில் கிடைத்துள்ளன. இம்மட்கலன்கள் பெரும்பாலும் அளவில் சிறியவை. குவளை, குடுவை போன்ற அமைப்புகளிலும், குடம் அமைப்பில் உள்ள சிறிய மட்கலன்களும் கிடைத்துள்ளன. விளிம்பு இல்லாத நிலை. இதன் மேல் காணப்படும் வண்ணப்பூச்சு, வளைந்த கோடுகள், நேர்க் கோடுகள், குறுக்குக் கோடுகள், குறுக்கு நெடுக்காகப் போடப்பட்ட கோடுகள் என மட்கலத்தில் வெளிப்புறத்தில் மட்டுமே காணப்படும். இக்கோடுகள், வெண்மை நிறத்தில் மட்டுமே வரையப்பட்டவை. இம்மட்கலன்கள், பெருங்கற்கால பண்பாடு மற்றும் வரலாற்றுக் காலத்தின் துவக்கக் காலகட்டங்களில் காணப்படுகின்றன. நன்கு பளபளப்பு தீட்டப்பட்ட மேல் பகுதி விளிம்பு இல்லாத குவளைகளே அதிக அளவில் காணப்படுகின்றன. மேசை மீது வைத்துப் பயன்படுத்தப்படும் மட்கலன்களாக (Tableware),  பெருங்கற்காலம் முதலே தயாரித்து வந்துள்ளனர். அந்த வகையைச் சார்ந்த மட்கலன்கள், சமூகத்தின் மேல்தட்டு மக்கள் பயன்படுத்தும் மட்கலன்கள் வகையைச் சேர்ந்தவை.

செம்பழுப்பு நிற மட்கலனை, 1819-ல் மலபாரில் நடைபெற்ற அகழாய்வில்தான் ஜே. பேபிங்டன் என்பவர் முதன்முதலில் கண்டறிந்தார். தொப்பிக்கல் வகை பெருங்கற்கால புதைகுழியில் இம்மட்கலன் காணப்பட்டதாக அவர் குறித்துள்ளார். இவரைத் தொடர்ந்து, வால்அவுஸ் (1875), ஆர்டிங் (1889-94), கோவிந்த மேனன் (19-ஆம் நூற்றாண்டு) ஆகியோரும் கண்டறிந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும், இது குறித்த தெளிவான அறிக்கை ஒன்றை, பி.எச். கோபன்பெர்க் என்பவர், 1897-ஆம் ஆண்டு இந்தியக் கலை மற்றும் தொழிற்சாலைகளின் வளர்ச்சி பற்றி ஆய்வு செய்து ஆய்வேட்டில் வெளியிட்டுள்ளார். இவரது அறிக்கையில், தென்னந்தியாவில் மேற்கொண்ட மட்கலன் பகுப்பாய்வில், சிவப்பு நிற வண்ணம் தீட்டப்பட்ட மட்கலன்கள், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மட்டுமே அதிக அளவில், பல்வேறு வடிவில் காணப்படுகின்றன என்றும், இவற்றை கோயம்புத்தூர் மட்கலன்கள் என்று பகுத்துக்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார் (The Journal of Indian Arts and Industry, 1884-1917). மேலும், கொடுமணல் அகழாய்வில் அதிக அளவில் சேகரிக்கப்பட்ட மட்கலனாகவும் இவை  அமைந்ததும், இக்கருத்துக்கு வலுசேர்ப்பதாக அமைகிறது. அத்துடன், கொடுமணல், போளுவாம்பட்டி, பேரூர் போன்ற அகழாய்வுகளிலும், இவரது கருத்துக்கு ஏற்ப வண்ணம் தீட்டிய பளபளப்பான சிவப்பு நிற மட்கலன்கள் அதிகம் சேகரிக்கப்பட்டுள்ளதாக பிற அகழாய்வாளர்களும் குறித்துள்ளனர்.

இத்தகைய மட்கலன், அக்காலகட்டத்தில் ஆந்திர மாநிலத்தில் மட்டுமே கிடைத்துவந்ததால், அதை ‘ஆந்திர நாட்டு வண்ணம் தீட்டிய மட்கலன்’ (Andhra Rusett coated Painted Ware) என மார்டிமர் வீலர் குறிப்பிட்டார். பின்னர் தமிழகத்தில் நடைபெற்ற மேற்பரப்பு ஆய்விலும், அகழாய்வுகளிலும் அதிக அளவில் காணப்பட்டதால், இம்மட்கலனுக்குத் தவறாகப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது என்று பி.கே. தாப்பர் குறிப்பிட்டார். பின்னர், கொடுமணல் அகழாய்வில் தமிழி எழுத்துகளுடன் இம்மட்கலன் காணப்பட்டதால், இவை தமிழகத்திலேயே தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவியது. இம்மட்கலன்கள், தமிழக அகழாய்வுகளில் கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, ஈரோடு மாவட்டங்களில் அதிக அளவில் கிடைத்துள்ளதால், அதனை தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட மட்கலன்களாகவே பின்னர் உணர்ந்தனர். கொடுமணல் அகழாய்வில் அதிக அளவில் வண்ணம் தீட்டிய மட்கலன்கள் காணப்பட்டதும், அவற்றில் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள் காணப்பட்டதும், அவை தமிழக மட்கலன் வகையைச் சார்ந்தது என்பதை அச்சான்றுகள் தெளிவுபடுத்துகின்றன. தமிழகத்தில் நடைபெற்ற அழகன்குளம் அகழாய்விலும் குறிப்பிடத்தக்க அளவில் இம்மட்கலன்கள் கிடைத்துள்ளன. எனவே, தமிழகத்தில் மட்டுமே அகழாய்வுகளில் கீறல் குறியீடுகளும், அதனை அடுத்து எழுத்துப்பொறிப்புகளும் கிடைத்துவந்தன. வடஇந்தியாவில் எழுத்துப்பொறிப்புள்ள மட்கலன்கள் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எழுத்துகள் வளர்ச்சி

கொடுமணல் அகழாய்வுகளில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட கீறல் குறியீடுகள், எழுத்துப் பொறிப்புகள் கொண்ட மட்கலன்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில், 500-க்கும் மேற்பட்ட மட்கலன்களில் தமிழ் எழுத்துப்பொறிப்புகள் காணப்படுகின்றன. எனவே, கீறல் குறியீடுகளை அடுத்து, எழுத்துகள் வளர்ச்சி பெற்று வந்தன என்பது தமிழக அகழாய்வுகள் கூறும் உண்மையாகும். இம்மட்கலன்களின் காலக்கணிப்பைக் கொண்டு, தமிழ் எழுத்துகள் பொ.ஆ.மு.5-6-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பதை வரையரை செய்தனர்.

எனவே, முதல்கட்டமாக தமிழ் எழுத்துப்பொறிப்புகள் அதிக அளவில் கொடுமணல் அகழாய்வில் சேகரிக்கப்பட்டது என்பதும், அவற்றில் பிற எழுத்துகள் கலவாமல், தூய தமிழ் வரி வடிவம் கிடைத்தது ஒருபடி மேலே போய், நமது ஆய்வுகளுக்கு உறுதுணையாக இருந்தது. அதே காலகட்டத்தில்தான், அழகன்குளம் அகழாய்வில் எழுத்துப்பொறித்த ரோமானிய மட்கலன் ஓடுகள் மற்றும் கறுப்பு சிவப்பு மட்கலன் ஓடுகள், அவற்றில் கப்பல் உருவம் பொறித்த மட்கலன் என பல சான்றுகள் நமக்குக் கிடைத்தன.

tamil history 3

அடுத்து பழநி அருகே பொருந்தல் பகுதியில் மேற்கொண்ட அகழாய்வில், நமது பண்பாட்டை விளக்கும் வகையில், விவசாயத்தை முன்னேடுத்த தமிழர்கள் தமது மட்கலன்களில் அது சார்ந்த குறியீட்டையும், சித்திர எழுத்தையும் பொறித்து, வயிர என்ற தமிழ் எழுத்துப்பொறிப்புள்ள மட்கலனுடன், நெல் உமிகளும் இருந்ததைக் கண்டறிந்து வெளிப்படுத்தினர். இதன் காலம், பொ.ஆ.மு.500.

tamil history 4

எனவே, தற்போது தமிழ் எழுத்துப்பொறிப்புகள் 2800 ஆண்டுகள் முந்தியவை என்று முதன்முதலாக பெறப்பட்ட சான்றுகளையும், கொற்கை அகழாய்வு பற்றிய தகவல்களையும் முழுவதுமாக மறந்துவிட்டனர். இருப்பினும், அனைவரின் கவனத்தையும் பொருந்தல் அகழாய்வு ஈர்த்தது. பொருந்தல் அகழாய்வுக் கூற்றுப்படி, தமிழ் எழுத்துகளின் காலம் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என நிறுவினர். இவற்றில் உற்றுநோக்கத்தக்கது என்னவெனில், காலச் சான்றுகள் சிறிது சிறிதாக நெருங்கிக்கொண்டே வந்தன. இக்கருத்துகளை தொல்லியல் வல்லுநர்கள் மட்டுமே ஏற்றனர். பொதுமக்களோ அன்றி, வரலாற்று ஆசிரியர்களோ, மற்ற தமிழ் ஆர்வலர்களோ ஏற்க மறுத்தனர்.

tamil history 5

தமிழர்கள், கடல்கடந்து வாணிகம் புரிந்தவர்கள் என்ற பெருமையைக் கொண்டவர்கள். சங்க காலம் முதலே தமிழர்கள் கடல்கடந்து பல சாதனைகளைப் புரிந்தவர்கள் என்பதற்குப் பல சான்றுகள் அயல்நாடுகளில் கிடைத்து வருவதைக் கொண்டு உணரலாம். அழகன்குளம் அகழாய்வில் ரோமானியர் மட்கலன் ஓட்டில் கப்பல் உருவம் பதித்த கீறல் குறியீடு ஒன்றும், பாய்மரக்கப்பல் கீறப்பட்ட மட்கலனும் கிடைத்துள்ளது, குறிப்பிடத்தக்க கடல்வணிகத்தை உறுதிசெய்யும் சான்றுகளாகும். இவை மட்டுமின்றி, தமிழ் எழுத்துகள் பொறித்த மட்கலன்கள் அயல்நாடுகளிலும் காணப்பட்டன. குறிப்பாக, ஓமனில் கிடைத்த தமிழ் எழுத்துப் பொறித்த மட்கலன், அடுத்து பெரும்பதன்கல் என்ற பதப்படுத்தும் கல் ஒன்றில் தமிழ் கல்வெட்டுகளுடனும் கிடைத்துள்ளன. இதுபோன்ற பல சான்றுகளைக் காணலாம்.

(பகுதி 2-ல் நிறையும்)



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

தமிழ் தொன்மையான மொழி என்பதற்குப் பல சான்றுகள் கிடைத்தன. ஆனால், தொல்லியல் ஆய்வாளர்கள் எடுத்து வழங்கிய சான்றுகளை மக்களுக்குத் தெரிவிக்க மனமில்லையா, அல்லது தெளிவு பெறவில்லையா என ஐயமாகவே இருந்ததது.

திருக்கோயிலூர் அருகே அமைந்த ஜம்பை என்ற சிற்றூரில் உள்ள குன்றின் மேல் காணப்பட்ட பாறையில், தொல் தமிழ் கல்வெட்டு ஒன்றை, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை கண்டறிந்து செய்தி வெளியிட்டது. அக்கல்வெட்டு வாசகமாவது, ‘சதிய புதொ அதியன்நெடுமான் அஞ்சி ஈத்த பாலி’.

இதை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், வடக்கே அசோகன் பாறைக் கல்வெட்டில் காணப்படும் சத்தியபுத்தர என்பதுதான் இங்கு காணப்படும் சதிய புதொ என்று குறித்தனர். எனவே, தொல்தமிழானது, ஒன்று அசோகனது சமகாலம் என்றும் அல்லது அதற்கு முன்னரே பழக்கத்தில் இருந்த தொன்மையான மொழி என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்தனர். இதன் காலத்தை, பொ.ஆ.மு.1-ஆம் நூற்றாண்டு எனவும் குறித்தனர். ஆனால், பொது ஆண்டுக்கு முன் கொண்டு செல்ல தயங்கினர். அதற்கான காரணமும் விளங்கவில்லை. இவ்வெழுத்துகள் தொல்காப்பியத்துக்கும் முந்தையதாகவே இருக்க வேண்டும். ஏனெனில், சகடம் முதலில் வராது என்று சொன்னவர் தொல்காப்பியர்.

Tamil history-6புலிமான்கோம்பை என்ற ஊரில், தமிழ்ப் பல்கலைக் கழக மாணவர்களின் ஆய்வில் கிடைத்த நடுகல் கல்வெட்டும், சங்க கால சேர மன்னர்களின் அரச வம்சாவளியைத் தெளிவாக எடுத்துரைக்கும் கரூர் – புகளூர் கல்வெட்டும் பிற தொன்மையான தமிழ் கல்வெட்டுகள் ஆகும். இவற்றில், தூய தமிழ் வரி வடிவில் மிகவும் தெளிவாக அமைந்துள்ளதைக் காணலாம்.

  1. முதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய்
  2. கோ அதன் செல்லிரும் பொறை மகன்
  3. பெருங்கடுங்கோன் மகன் ளங்கடுங்கோ
  4. ளங்கோ ஆக அறுத்த கல்.

Tamil history-7புலிமான்கோம்பை கல்வெட்டு, தொல்காப்பியர் சாயலில், சமூகச் சூழலைக் குறிக்கும்படியான எழுத்துகள் பொறிக்கப்பட்டு காணப்பட்டது. புலிமான்கோம்பை நடுகல் கல்வெட்டில், ஆகோள் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. தொல்காப்பியர் காலத்தில், அவரது நூலில் குறிப்பிட்ட ஆகோள் பூசை என்று மேய்த்தல் சமூகத்தைப்பற்றிய குறிப்புடன் காணப்படுவதை இங்கு ஒப்புநோக்க வேண்டும். இக்கல்வெட்டின் காலத்தை, ஐராவதம் மகாதேவன் போன்ற வல்லுநர்கள் பொ.ஆ.மு.4-ஆம் நூற்றாண்டு எனக் குறித்தனர். அப்போதும், கொடுமணலோடு ஒப்பிட்டு தமிழ் எழுத்துகள் அசோகனுக்கும் முந்தையது எனக் கருத்து தெரிவித்தனர். இவை அனைத்தும் முழுமனதாக வெளிஉலகுக்கு வெளிப்படத் தவறிவிட்டன.

Tamil history-8*

தொல்தமிழ்

தமிழ் எழுத்தை பழைய தமிழ் என்றே அழைக்கலாம் அல்லது சங்ககாலத் தமிழ் என்றும் தொடர்ந்து குறிக்கலாம். ஆனால் பிராமி என்றோ, பிரம்பி என்றோ, பிற மொழிகளில் இருந்து வந்தது என்றோ குறிப்பிடுவதைத் தவிர்த்தல் வேண்டும் என்ற கருத்தை முற்றிலும் ஏற்கத் துணிவு வரவில்லை.

Tamil history-9தமிழி என்றோ, தமிழ் பிரம்பி என்றோ அழைத்தது போதும். நமது பண்டையத் தமிழ் மொழியை தொல்தமிழ் என்றே நாம் அழைத்தல் வேண்டும். ஆய்வுகளின் முடிவுகள் வருவதற்கு முன்னர், பொ.ஆ.மு. முதல் நூற்றாண்டில், சமண சமய நூலான ‘சமவயங்கசுத்த’, இந்தியாவில் வழங்கிவரும் மொழிகள் பதினெட்டு என்றும், அவற்றுள் ஒன்று தமிழி என்றும் குறிப்பிடுகிறது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் கிடைத்த பழமையான கல்வெட்டுகளில் உள்ளது தமிழிதான் என்று அப்போதைய ஆய்வாளர்கள் கருதினர். தற்போது, ஆணித்தரமான, ஆதாரப்பூர்வமான ஆய்வின்படி, நமது மொழி மிகவும் தொன்மையான மொழி என்பதும், பிறமொழிக் கலப்பு இல்லாத தனித்துவம் வாய்ந்த தொன்மையான மொழி என்பதும் தெளிவாக எடுத்துணரப்பட்டுள்ளது.

புலிமான்கோம்பை கல்வெட்டில் காணப்படும் ஆகோள் பூசல் என்ற பண்பாடு, தமிழகத்தில் தொடர்ந்து காணப்படுவதை நமது பண்டைய நடுகல் பண்பாட்டிலும் காணமுடிந்தது. ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டல் என்பது தொல்காப்பியர் காலத்து மேய்த்தல் சமுதாயத்தை அடிப்படையாக கொண்டு அமைந்த ஒன்று என்பதை இவை தெளிவுபடுத்துகின்றன. தமிழகத்தில் மிகவும் பழமையான கல்வெட்டுகளாக, தருமபுரி மாவட்டத்தில் காணப்படும் இருளப்பட்டி – பாப்பம்பாடி கல்வெட்டுகளைக் குறிக்கலாம். இவை காலத்தால் பொ.ஆ.4-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அத்தகைய மேய்த்தல் சமுதாய மக்கள் நிலவிவந்த சமூகமாகத் திகழ்ந்த தமிழகம், தொடர்ந்து தனது பழமையான நாகரிகத்தை நிலைநாட்டி வந்துள்ளது என்பதற்குத் தொடர் சான்றுகள், தமிழகத்தில் நிறைய கிடைத்துள்ளதையும் இங்கு ஒப்பிட்டுக் காணலாம்.

எனவே, தமிழர் நாகரிகம் இன்றைக்கு சுமார் 2800 ஆண்டுகள் பழமையானது என்பதும், நமது மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் என்பதாலும், நமது தமிழகத்தில் காணப்படும் பழமையான கல்வெட்டுகளைத் தொல்தமிழ் என்றே அழைக்காலம் என்ற கருத்தையும் முன்வைத்து, அதற்குரிய சான்றுகளும் இங்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிந்து தெளிவுபெறுவோம்.

Tamil history-10சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வுத் தரவுகளில், தமிழ் எழுத்துப்பொறிப்புகள் கொண்ட கறுப்பு சிவப்பு மட்கலன்கள் சில கிடைத்துள்ளன. அவற்றில், பண்டைய தமிழ் எழுத்துப்பொறிப்புகள் காணப்படுகின்றன என்ற செய்திகள் வெளிவந்தன. அதனைத் தொடர்ந்து, பல அகழாய்வுத் தரவுகளைப் பற்றிய காலக்கணிப்புக்காக அமெரிக்காவுக்கு அனுப்பியதில், அதன் காலம் பொ.ஆ.மு.600 என்ற தகவல் தெரிந்ததும்தான், நமது தமிழ்மொழி காலத்தால் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை பொதுமக்கள் கவனிக்கத் துவங்கினர். இங்கு, ஆதன், குவிரன்-ஆதன் என்ற இரண்டு சொற்கள் காணப்பட்டன.

தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை மேற்கொண்ட பல தமிழக அகழாய்வுகள் வெளிப்படுத்திய தகவல்கள், கீழடி அகழாய்வு முடிவுகள் வந்த பிறகுதான், அவை அனைத்தும் உண்மை என்பதை ஏற்கத் துவங்கினர். காரணம், அகழாய்வு முடிவுகள் அனைத்தும் முறையாக வெளிப்படுத்தப்பட்டு, மக்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு அகழாய்வுச் செய்திகளும், அன்றைய நாளிதழ் செய்திகளாகவே மலர்ந்து உதிர்ந்தன. அப்போதைய அரசியல் பிரமுகர்களும், இதனைக் கவனிக்கத் தவறிவிட்டனர்.

அகழாய்வுச் சான்றுகளின்படி, தொல்தமிழ் எழுத்துகளின் காலம்

  1. கொற்கை அகழாய்வு – தமிழ்நாடு அரசு – பொ.ஆ.மு.785 (2800 ஆண்டுகள்).
  2. கீழடி அகழாய்வு – மத்திய அரசு – பொ.ஆ.மு.600 (2600 ஆண்டுகள்).
  3. பொருந்தல் அகழாய்வு – தமிழ்ப் பல்கலைக் கழகம் – பொ.ஆ.மு.500 (2500 ஆண்டுகள்).

மதுரை மாவட்டம்கிண்ணிமங்கலம்தொல்தமிழ் கல்வெட்டு.

Tamil history-11ஏகன் ஆதன் கோட்டம் என்ற எழுத்துப்பொறித்த தொல்தமிழ் கல்வெட்டு, மதுரை மாவட்டம், கிண்ணிமங்கலத்தில் கிடைத்தது. இக்கல்வெட்டைப் படித்தவுடன், திருவாசகத்தில் வரும் ‘ஏகன் அநேகன் இறைவனடி’ என்ற வாசகம் நினைவுக்கு வருகிறது. பல தெளிவான சொல் தடயங்கள் நாளுக்கு நாள் வெளியாகிக்கொண்டிருப்பது, உண்மையிலேயே தமிழின் தொன்மை 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை உறுதி செய்வதாகவே அமைகிறது. பிறமொழிக் கலப்பில்லாத தமிழ் மொழியைப் பல கல்வெட்டுகள் தற்போது வெளிப்படுத்தி வருகின்றன. ஏகன் ஆதன் கோட்டம் என்ற சொல், பிற்காலங்களிலும் தொன்றுதொட்டு கோயிலைக் குறிப்பதே ஆகும். கீழே காணப்படும் வட்டெழுத்துக் கல்வெட்டில், ஏகநாதன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏகன் ஆதன், பிற்காலத்தில் ஏகநாதன் என திரிந்திருக்கலாம். மேலும், இரண்டு கல்வெட்டுக்கும் கால இடைவெளி உள்ளது. கோட்டம் என்பதை கோயிலாகக் கருதினால், அது மண்தளி எனக் குறிப்பிடுகின்றனர். மண்தளியாக இருந்தால், கல்தூணில் கல்வெட்டு வந்துள்ளது. இதனைச் சற்று சிந்திக்க வேண்டும். கல்தூணில் வேலைப்பாடுகள் அமைந்துள்ளது. ஏகன் என்ற சொல்லும், ஆதன் என்ற சொல்லும், பல தொல்தமிழ் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளதை, அகழாய்வுகளில் கிடைத்த கல்வெட்டுகளும் பானை ஓடுகளும் வெளிப்படுத்தியுள்ளன.

ஆதிச்சநல்லூர் அகழாய்வுத் தரவுகள், தமிழினத்தின் பெருமை போற்றும் பல துல்லியமான சான்றுகளை நல்கிய அகழாய்வு ஆகும்.

Tamil history-12ஆதிச்சநல்லூர் அகழாய்வில், கொற்றவை பெண் தெய்வ உருவ பொம்மை பொறிக்கப்பட்ட மட்கலன் ஓடு வெளிக்கொணரப்பட்டது. இம்மட்கலன், பெண் தெய்வ வழிபாட்டை எடுத்துக்கூறும் சான்றுகளுள் மிகவும் பழமையானதாகும். இதில், ஒருபறம் மான், மற்றொறு பக்கம் மயில் போன்ற பறவையும், கரும்புப் பயிறும் காட்டப்பட்டுள்ளது. ஒரு பெண் இரண்டு கைகளையும் தொங்கவிடப்பட்ட நிலையில் காட்டப்பட்டுள்ளதையும் காணலாம். அதனை கொற்றவை என ஆய்வாளர்கள் குறித்துள்ளனர். மான் காட்டப்பட்டுள்ளதால், இதனை கொற்றவை என்று குறித்தனர். நாகரிகத்தின் உச்ச நிலையை அடைந்த மக்கள் வாழ்ந்த பகுதியாகவே ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது என, அப்பகுதியை ஆய்வுசெய்த அலெக்ஸாண்டர் ரே மற்றும் ஜாகர் ஆகியோர் தங்களது கருத்துகளாகப் பதிவுசெய்துள்ளனர்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் சுமார் 9000 தொல்பொருள்கள் தரவுகளாகச் சேகரிக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் அகழாய்வுத் தொல்பொருள்களைக் கொண்டு, அக்கால மக்கள் சிறந்த தொழில்நுட்ப அறிவைப் பெற்றுத் திகழ்ந்துள்ளனர் என்பதை அறியமுடிவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு, தமிழக மக்கள் மிகச் சிறந்த நாகரிகமான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என்பதைத் தெளிவுபடுத்திய அகழாய்வு ஆகும்.

தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளில் குறிப்பிட்ட பல அகழாய்வுகள், அயல்நாட்டினரோடு தமிழர்கள் கொண்டிருந்த தொடர்பையும், வணிகம் மேற்கொண்ட பெருமையையும் வெளிக்காட்டின. தமிழகக் கடற்கரைத் துறைமுகப்பட்டிணங்களில் இருந்து, பாண்டியர்களின் முத்துகளையும், விலையுயர்ந்த மணிகளையும், ரோமானியர்களும் சீன தேசத்து மக்களும் பெற்றுச் சென்றுள்ளனர் என்பதை அறியமுடிகிறது. பொருந்தல், கொடுமணல். கொற்கை போன்ற அகழாய்வுகள் மட்டுமின்றி, அரிக்கமேடு, அழகன்குளம், கரூர், பூம்புகார் அகழாய்வுகளிலும் இதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

கீறல் குறியீடுகளே தமிழ் எழுத்துகளின் முன்னோடி

பண்டைய தமிழக நாகரிகம், உலகின் தலைசிறந்த முதன்மையான நாகரிகங்களுள் ஒன்று என்பதை பல அகழாய்வுத் தரவுகள் கொண்டு இங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மட்கலன்களும் அவற்றில் காணப்பட்ட எழுத்துப்பொறிப்புகளும் காலத்தால் முற்பட்டவை என்பதும், அவை இன்றைக்கு சுமார் 2800 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளன. தமிழ் மொழி ஒன்றுதான், ஒலி ஓசையில் தொடங்கி, பின்னர் கீறல்களாக மாற்றம் பெற்று, வரி வடிவத்தை அடைந்து, இன்று பல சொற்களைக் கொண்டதாக வடிவமெடுத்து, அவையே சொற்றொடர்களாகப் பரிணாம வளர்ச்சியைப் பெற்றது என்றால் அது மிகையல்ல. தமிழக அகழாய்வுகளும் சான்றுகளைத் தொடர்ச்சியாக வழங்கியுள்ளதை ஆய்வாளர்களும், இன்றைய இளம் தலைமுறையினரும் உணருதல் வேண்டும். கீறல் குறியீடுகளே தமிழ் எழுத்துகளின் தோற்றத்தின் முன்னோடி என்பதும், தமிழக அகழாய்வுகளில் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

முந்தைய அகழாய்வுகளை மனத்தில் கொள்ள மறுத்தாலும், அண்மைக்கால அகழாய்வான கீழடி அகழாய்வுத் தரவுகளை, சிந்து சமவெளி நாகரிகத் தரவுகளுடன் ஒப்பிட்டுக் காணலாம். கீழடியில் காணப்பட்ட தொல்பொருள்களான சதுரங்க தாயக்கட்டை என்பது சிந்து சமவெளி ஆய்விலும் சேகரிக்கப்பட்டுள்ளதை ஒப்பீடு செய்யலாம். இவை, தமிழர் நாகரிகம் சிறப்பாக இருந்தது என்பதற்குச் சான்று. ஆனால், சிந்து சமவெளி நாகரிகத்தைப் போன்று பரந்து விரிந்த நகர நாகரிகத்தைப் பெற்றது என்பதற்குப் போதிய சான்றுகள் கீழடி அகழாய்வுகளில் இதுவரை காணப்படவில்லை.

இதற்கு முந்திய காலகட்டங்களில், தமிழகத் தொல்லியல் துறை மேற்கொண்ட அழகன்குளம் அகழாய்வு, பல அரிய தரவுகளையும், அயல்நாட்டாரோடு கொண்ட தொடர்பையும், வணிகத்தைப் பற்றிய தகவல்களையும் வெளிப்படுத்தியது. ரோமானியப் பெண்ணின் உருவங்கள் பொறித்த மட்கலன், ரோமானியப் பெண் உருவ சுடுமண் உருவங்களும் கிடைத்துள்ளன. வடஇந்தியத் தொடர்பை வெளிப்படுத்தும், வடஇந்திய பளபளப்பான கறுப்பு நிற மட்கலன் ஓடுகள் கிடைத்துள்ளன. ஆனால், கீழடியில் வடஇந்தியத் தொடர்பை வெளிப்படுத்தும் வடஇந்திய பளபளப்பான கறுப்புநிற மட்கலன் ஓடுகள் இதுவரை கிடைக்கவில்லை. கீழடி அகழாய்வுப் பகுதியை, தமிழர் நாகரிகத்தைப் போற்றும் இடமாகவும், தொல்தமிழர் வாழ்விடமாகவும் கருதலாம்.

Tamil history-13மத்திய அரசின் அரிக்கமேடு அகழாய்வு, நாகரிகமான மக்கள் வாழ்ந்த வணிக நகரம் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். இங்கு கட்டடப் பகுதிகளும், சாயப்பட்டறையும் இருந்துள்ளதற்கான சான்றுகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கீழடி அகழாய்வில் காணப்பட்ட சதுரங்கக் காய்கள், தமிழக அகழாய்வுகளில் பல இடங்களில் நீள்செவ்வக வடிவில் சேகரிக்கப்பட்டுள்ளன. சதுரங்கம், தமிழர்களின் பழமையான விளையாட்டாகும். எனவே, தமிழர் நாகரிகம் மிகவும் பழமையானது என்றும், அவர்கள் பயன்படுத்திய மொழிதான் தொல்தமிழ் என்றும், அத்தமிழ் காலத்தால் இன்றைக்கு சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதும் உறுதியாகச் சொல்லலாம். அதற்குறிய சான்றுகள்தான் இங்கே விளக்கப்பட்டன.

*

நிறைவாக, நம் தமிழின் தொன்மையைப் பற்றியும், உலக மக்களிடையே தமிழ்ச் சொற்களின் வழக்கு எவ்வாறு இன்றளவும் மாறாமல், தூய தமிழாக உருவெடுத்து வழங்கப்பட்டு வருகின்றன என்பதையும் சற்று கவனித்தால், நம் தமிழின் பெருமையை நாம் போற்றுவதைக் காட்டிலும், அயல்நாட்டார் எவ்வாறெல்லாம் போற்றி மகிழ்ந்து, அதனை மிக உச்சம் கொண்டு வைத்துள்ளனர் என்பதைக் கண்ட பிறகாவது, நம் தாய்த் தமிழைப் போற்ற மறந்ததை மறந்து, போற்ற முன்வருவோம் எனக் கருதுகிறேன்.

உலகிலேயே மூத்த மொழி தமிழ் மொழிதான் என்பதற்கு, பல நாடுகளில் தற்போது காணப்படும் தமிழ் மொழிச் சான்றுகளே ஆதாரங்கள் ஆகும். இச்சான்றுகளைக் காணும்போது, தமிழ் எவ்வாறெல்லாம் பரவிச் சென்றுள்ளது என்பதை உணர்தல் வேண்டும்.

இரண்டாம் உலகப் போரில் இனி எழவே முடியாது என்று கருதிய நாடு ஜப்பான். நல்லவை எங்கிருந்தாலும் அதனைத் தனதாக்கி, அதன்வழி நடந்து, தன்னை செம்மைப்படுத்திக்கொள்வதில் வல்லவர்கள் ஜப்பானியர்கள். அத்தகு சிறப்புமிக்க நாட்டின் ஒரு பல்கலைக் கழகத்தின் முகப்பில் எழுதிவைக்கப்பட்டுள்ள வாசகம், வியக்கத்தக்கது. தமிழருக்கும் தமிழுக்கும் பெருமை சேர்ப்பதாகும். அந்த வாசகம், ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’. இதை, தமிழிலும் அவர்கள் நாட்டு ஜப்பானிய மொழியிலும் எழுதி வைத்துள்ளனர். இது, தமிழின் தொன்மைக்கும் புகழுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு.

மேலும், ஜப்பான் மொழியில் 1000-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் ஜப்பான் மொழியில் கலந்து, தூய தமிழாக இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன. மதுரா என்று தமிழ்ச் சொல்லை, பல பகுதிகளுக்குப் பெயராக வைத்து பெருமைப்படுத்தியுள்ளனர். ஒரு தீவுக்கு குறில் என்று பெயர் வைத்து அழைக்கின்றனர்.

நமது பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் சபையில் பேசும்போது, கணியன் பூங்குன்றனாரின் இந்த யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற வரியைச் சுட்டிக்காட்டி, உலகில் தொன்மையான மொழி தமிழ் என்பதையும், அத்தகு பெருமை வாய்ந்த தமிழகம், இந்தியாவில் அமைந்துள்ளது என்றும் பெருமைபடக் கூறினார்.

உலகப் புகழ்பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சியின் முகப்பில் ‘நல்வரவு’ என்ற தமிழ் வாசகம் அனைவரையும் வரவேற்பது மிகவும் உணர்ச்சிபூர்வமானதாக அமைந்துள்ளது. மேலும், நயாகரா நீர்வீழ்ச்சி செல்லும் தூரத்தைக் குறிக்க, நயாகரா நீர்வீழ்ச்சி லேக் ஏரியில் இருந்து (Lake Erie) ஒன்டாரியா லேக்வரை செல்வதாகக் குறித்துள்ளனர். லேக் ஏரி என்பதில் லேக் ஆங்கில வார்த்தை. அதனை அடுத்து வரும் ஏரி என்பது தமிழ் வார்த்தை ஆகும். எனவே, தமிழர்கள் உலகெங்கும் பரவி தமிழ் மொழி பேசி வந்துள்ளனர் என்பதால்தான், அதன் எச்சமாக ஏரி என்ற சொல் இங்கு கையாளப்பட்டுள்ளதைக் காணலாம். கனடாவில் வேலூர், சேலம் போன்ற ஊர்களின் பெயர்களும் சில பகுதிகளில் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், உலக நாடுகளில் கயா என்ற இடத்தில், அன்னை என்ற சொல் இன்றளவும் அதே பொருளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேற்கிந்தியத் தீவுகளில் ஒரு தீவு, அரிமா என்ற தூய தமிழ்ப்பெயரால் அழைக்கப்படுகிறது. அலாஸ்காவில் இனியன் தீவு என்று ஒரு தீவு உள்ளது

பிரேஸில் நாட்டில், மரக்காணம் என்று ஒரு பகுதிக்குப் பெயர் அமைந்துள்ளது. உலக நாடுகளில் தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளிலும், சீன நாட்டிலும், தமிழ் எழுத்துகள் கொண்ட மட்கலன்கள், ஓடுகள், கல்வெட்டுகள் பல கிடைத்துள்ளன. கம்போடியாவில், கட்டப்பட்ட அங்கோர்வாட் கோயில் தமிழக மன்னனால் கட்டப்பட்டது என்பது பெருமைக்குரியது.

உலகில் உள்ள பல தீவுகளில் வசிக்கும் மக்கள், நமது தமிழ் மொழியைத் தாய்மொழியாகவும் தெளிவாகப் பேசி வருகின்றனர். மேலும், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளையும், பண்பாட்டையும் போற்றும் வகையில், ஆடை அலங்காரத்தையும் இன்றளவும் பின்பற்றி வருகின்றனர்.

ஜெருசலேம் என்ற கிறிஸ்தவ மக்களின் புனிதத்தலமாகத் திகழும் ஒலிவு மலையில், கிறிஸ்துவின் முக்கியமான பத்து கட்டளைகளை, பலகைக் கற்களில் பொறித்து வைத்துள்ளனர். அதற்காக, உலகம் உள்ள மொழிகளில் 23 மொழிகளைத் தேர்வுசெய்து, அம்மொழிகளில் அந்தப் பத்து கட்டளைகளை கல்லில் பொறித்து வைத்துள்ளனர். அந்த 23 மொழிகளில் முதலாவதாக உள்ளது நம் தமிழ் மொழிதான்.

லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கு மகாத்மா காந்தி தீவிர ரசிகர். அவரது எழுத்துதான் தன்னை அகிம்சை வழிக்குச் செல்லத் தூண்டியது என்பது அவரது கருத்து. ஒருமுறை லியோ டால்ஸ்டாய் கொல்கத்தா வந்தார். அப்போது அவரை வரவேற்ற காந்தி, உங்களது எழுத்துதான் என்னை அகிம்சை வழிக்கு இட்டுச் சென்றது. இதுபோன்ற கருத்துகளை எங்கிருந்து பெறுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர், தென்னிந்தியாவில் உள்ள தமிழகத்தில், தமிழ்ப் புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் இருந்துதான் இதுபோன்ற கருத்துகளை எடுக்கின்றேன் என்றார். மேலும்,

‘இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல். (314)

என்ற குறள்தான் அகிம்சைக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறினார். காந்தி மிகவும் அசந்து, ஆச்சரியப்பட்டார்.

அத்தகு பெருமை வாய்ந்தது தமிழும், தமிழ் சார்ந்த இலக்கியங்களும். இதை நம்மைத் தேடிவந்து கற்ற அயல்நாட்டார், நன்கு உணர்ந்து போற்றி வழிபடும் மொழியாகத் தமிழ் உள்ளது.

*

மார்டின் சைபர் ஸ்மித் என்பவர் தமிழ் மொழியை ஆய்வு செய்தவர். இவர் உலக மொழிகள் பலவற்றையும் ஆய்வு செய்து, ஒவ்வொரு மொழிக்கும் ஒரு பத்தி எழுதி, ஒரு நூலை உருவாக்கினார். அந்நூலின் பெயர் – A Guide to 20th century of world Litrature. இந்நூலில் தமிழுக்கு மட்டும் மூன்று பக்கங்கள் ஒதுக்கி எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள குறிப்பில், நான் ரசித்த மொழிகளில் தமிழ் மொழிபோல் வேறு உலக மொழிகள் எதுவும் இல்லை. தமிழ் மொழியில்தான் இசை இலக்கியம், பொருண்மை, நயம் என பலவற்றையும் ஒருங்கிணைத்த பாடல்கள் உள்ளன என எழுதியுள்ளார். அவர் தமிழுக்கு எழுதிய குறிப்பில் உள்ள பாடல் வரியானது, குறுந்தொகை பாடலாகும். அப்பாடல்,

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

பிழைப்பதற்காக, எத்தனை மொழிகளையும் நம் இளைஞர்கள் படிக்கட்டும். அது நமக்கும் நாட்டுக்கும் வீட்டுக்கும் சிறப்பு. ஆனால், சுவாசிக்கவும், வாழ்வதற்காகவும், தமிழைப் படிக்க வேண்டும். உலக மக்கள் போற்றும், நம் தொன்மையான தாய்மொழியைப் பாதுகாப்போம்; போற்றுவோம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard