முசிறிசு (Muziris) இந்திய- உரோம வணிகத்தில் கி.மு. முதல் நூற்றாண்டில் வளமான துறைமுகமாக விளங்கியது. ஒரு காலப்பகுதியில் அது காணாமல் போனது. கேரளக் கடற்கரையில் உள்ள பட்டணம் என்னும் சிற்றூர் மறைந்த துறைமுகமாக இருக்கக்கூடும் என்று அண்மைய அகழ்வாராய்ச்சி மூலம் தெரிகிறது. அதற்குமுன் அதற்கு என்ன நேர்ந்தது?
கொச்சிக்கு வடக்கில் 25 கி.மீ. தொலைவில் பட்டணம் உள்ளது. கேரளத்தின் மற்ற சிற்றூர்களைப் போலவே அதுவும் செழிப்புள்ள அமைதியான சிற்றூர். அது முக்கியமான ஊரைப்போல் தோன்றினாலும் பரபரப்பு இல்லாதது. அதிலுள்ள நெருக்கமான தெருக்கள் ஒன்றில் “அதிரா” (Athiira) என்னும் 10 அகவைச் சிறுமி வாழ்கிறாள். அவள் வீடு சிறியது. அதில் தட்டுமுட்டுச் சாமான்களும் குறைவாக உள்ளன. அந்தச் சிறுமி வைத்திருக்கும் பொருள்களில் பலவகை உருள் மணிகளைக் (Beads) கோர்த்த கழுத்து ஆரம் (Necklace) ஒன்று.
அந்த உருள்மணிகள் எல்லாம் ஒழுங்கில்லாதவையாகவும், பலவகை வண்ணங் களிலும் உள்ளன. இந்தக் கட்டுரையாளருடன் சென்ற தொல்பொருள் ஆய்வாளர், பி.செ. செரியன் (P. J. Cherian) அந்த ஆரத்தைப் பார்த்து அது 2000 ஆண்டுப் பழமையானது என்று சொல்லும் வரையில் அதை ஓர் இயல்பான ஆரமாகவே கருதியிருந்தனர். உரோமர்களுக்கென்று சிற்பவேலை செய்யப்பெற்ற நகைகளைப் போலவே “அதிரா” அதில் குறை மதிப்பு மணிகளோடு புடைப்புச்சித்திர வேலைப்பாடு கொண்ட வெறுமையான மணிகளையும் இடையிடையே சேர்த்திருந்தாள்.
ஆண்டுப் பண வருவாய்
“அதிரா” கலைப்பொருள்களைச் சேகரிப்பவள் இல்லை. இப்படிப்பட்ட பழங்கால உருள்மணிகளை அவள் வீட்டுத் தோட்டத்திலும், தெருக்களிலும், அக்கம் பக்கத்திலும் இருந்து கண்டெடுத்தாள். “அதிரா” வீட்டுக்கு அருகில் ஒரு பெரிய வீட்டில் மரு.கிருட்டின குமார் என்பவர் இருக்கிறார். “ஒவ்வொரு முறை மழை பெய்த பிறகும் நிலத்திற்கு அடியில் இருந்து நீர் மேலே வரும்., அப்பொழுது அத்துடன் சில உருள் மணிகள் தரைமட்டத்திற்கு வருகின்றன. அவற்றை நாம் பொறுக்கிக் கொள்ளலாம்” என்கிறார் அவர். அவர் சேர்த்து வைத்திருக்கும் பொருள்களில் ஒள்ளிய உலோகத் துண்டுகளும் உள்ளன.
பட்டணம் ஒரு சாதாரணச் சிற்றூர் இல்லை. அதன் செம்மண் நிலத்தடியில் கழகக் காலப் பாவலர்கள் பலபடச் சித்திரித்துள்ள முசிறி (Muziris) அக்காலத்தில் தமிழகத் துக்கு அடிக்கடி வந்து சென்ற உரோமர்களின் ஆவணங்களில் ‘முசிறிசு’ (Muziris) என்று குறிப்பிடப்பெற்றுள்ள பழங்காலத் துறைமுகம் புதைந்து உள்ளது.
வாணிகம் செழித்தோங்கியிருந்த அந்த வாணிக நடுவம் ஒரு காலக்கட்டத்தில் தரைமட்டத்தில் கூட ஒரு தடயமும் இல்லாமல் முழுமையும் மறைந்து போனது. தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு இதைவிட மேலும் அதிகத் தடுமாற்றத்தைத் தந்தது என்னவென்றால், மூன்றாண்டுகளுக்குமுன் முதன்முதலாக நம்பத் தகுந்த சுவட்டை (Trail) அவர்கள் கண்டுபிடிக்கும்முன், அதன் புதையிடத்தைக் கண்டுபிடிக்கக் கொடுக்கப்பட்ட ஊகம் (Guesses) பல தடவை தவறாகப் போனதுதான். அவர்கள் “முசுறிசு”வை அடைவதற்குப் பட்டணத்தை அடைந்தது ஒரு பெரிய கதை என்றுதான் சொல்லவேண்டும்.
இந்தியாவுக்கும் மேற்கத்திய வாணிக நிறுவனங்களுக்கும் இடையில் நடைபெற்ற வாணிகத்தின் காலம் கி.மு.(B.C.E) 6ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். மக்களும் பொருள்களும் நிலத்திற்கும் கடலுக்கும் குறுக்காகக் கடந்ததோடு சீனாவுக்கும் நடுவண் ஆசியாவுக்கும் இடையில் இருந்த சில்க்ரூட் (SilkRoote) என்னும் தரைவழித் தடத்தின் வழியாகக் கூடக் கடந்தனர். அது கி.மு. (B.C.E) முதல் நூற்றாண்டில் கேரளக் கடற்கரை வாணிகத்தில் பரபரப்பாக இருந்தபோது உரோமானியர்கள் வாணிகத்தில் மேலோங்கியதன் தொடக்கமாக இருக்கலாம்.
வடகிழக்குப் பருவக் காற்றின்போது ‘முசுறிசு’விலிருந்து உரோம் நகரை நோக்கிச் செல்வது எளிதாக இருந்தது. ஆனால் தென்மேற்குப் பருவக்காற்றின்போது உரோம் நகரிலிருந்து ‘முசுறிசு’க்குத் திரும்புவது கடினமாக இருந்தது. முழுப் பயணமும் விரைவாக ஆனால் தீங்கு உள்ளதாக இருந்தது. உரோம வாணிகத்தைப் பற்றி ஆய்வு செய்யும் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் இலியோனெல் கேசன் (Lionell Casson) என்பவர் உரோமர்கள் வேகத்தைவிடப் பாதுகாப் புக்கு ஏற்றபடி வடிவமைக்கப்பெற்ற சரியான வகைக் கப்பலைப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார். கப்பல்கள் வழக்கமாகச் செப்டம்பர் மாதத்தில் ‘முசிறிசு’வை வந்தடை யும். திசம்பர் அல்லது சனவரித் தொடக்கம் வரையில் அந்தத் துறைமுகத்தில் நிலைகொண்டு இருக்கும்.
உரோம் நகரில் இருந்து நாணயங்கள், மஞ்சள் மணிக்கல் (Topaz), பவழம், செம்பு, கண்ணாடி, திராட்சைச் சாறு (Wine), கோதுமை ஆகியவற்றை முசுறிசுவில் இறக்குமதி செய்தனர். முத்து, வைரங்கள், நீல மணிக்கல் (Sapphire), தந்தம், பட்டு, மிளகு, விலைமிகுந்த கற்கள் ஆகியவற்றை மேற்குக் கடற்கரையிலிருந்து ஏற்றுமதி செய்தனர். 500 டன் எடையுள்ள கப்பலில் ஏற்றிய சரக்கு களின் மதிப்பு எகிப்தின் செழிப்பான 240 ஏக்கரின் விலைக்குச் சமமாக இருக்கும் என்று கேசன் மதிப்பீடு செய்கிறார். பெடரிக்கோ உரோமானிசு (Fedrico Romanis) என்னும் மற்றொரு தொல்பொருள் ஆய்வாளர், ஒரு கப்பல் 68,000 பொன் நாணயங்களின் மதிப்புக்குக் குறையாமல் சரக்குகளை ஏற்றிச் சென்றது என்று மதிப்பீடு செய்கிறார்.
வாணிகம் மருட்சி தரும் அளவுக்கு ஊதியம் தருவதா யிருந்தாலும் அதே அளவுக்குத் தீங்கும் உள்ளதாக இருந்தது. 20 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பெற்ற வியன்னா பாப்பிரசு (Vienna papyrus) என்னும் அரிய ஆவணத்தி லிருந்து முசுறிசுக்கும் அலெக்சாண்ரியாவுக்கும் இடையில் வாணிகம் சிறப்பாக நடைபெற்றது எனவும் இரு சார்பு வாணிகர்களும் அதைப் பாதுகாப்பாகச் செய்தனர் என்றும் தெரிய வருகிறது.
முசுறிசுவில் இந்தவகை வாணிகத்தை ஓம்பும் அளவுக்குப் பரபரப்பும் குடியிருப்பு இடமும் இருந்திருக்க வேண்டும். ஆனால் அது திடுமென மறைந்துபோனது. அது ஏன் மறைந்தது
என்னும் கேள்விக்கு விடை காணும் முன்பு தொல்பொருள் ஆய்வாளர்கள் அது எங்கே நிலைபெற்று இருந்தது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.
பட்டணத்துக்கு ஏழு கி.மீ. வடக்கில் உள்ள கொடுங் கல்லூர் (KodunGallor) என்னும் நகரம்தான் முசுறிசு என்று பலர் பலகாலமாக எண்ணிவந்தனர். ஒரு வேளை 1857இல் வில்லியம் உலோகன் என்பவர் எழுதிய “மலபார் கையேடு” என்னும் நூலின் தாக்கமாக அப்படிப்பட்ட எண்ணம் அவருக்கு உண்டாகி இருக்கலாம். பெரியாறு ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள கொடுங்கல்லூரில் வரலாற்று இடைநிலைக் காலப் படிமை நினைவுச் சின்னங்கள் பல இருந்ததால், உலோகன் அதுதான் முசுறிசுவாக இருக்கலாம் என்று எண்ணினார். எப்படியிருந்தாலும் இதற்கு இயற்பொருள் சான்று தேவைப்பட்டது.
1945இல் முதன்முதலில் கொடுங்கல்லூரில் ஆராய்ச்சி யாளர்கள் அகழாய்வுகள் செய்தனர். அதிலிருந்து பழங்கால வாணிகத் தொடர்புக்கான சான்று ஒன்றும் கிடைக்க வில்லை. கொடுங்கல்லூருக்கு வடக்கில் 2 கி.மீ. தொலை வில் உள்ள சேரமான் பரம்பு (Cheraman Parambu) என்னும் இடத்தில் 1969இல் இந்தியத் தொல்பொருள் ஆய்வுக்குழு வினர் (Archaeological survey of india) மற்றோர் அகழாய்வு செய்தனர். அதில் 13, 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமைச் சின்னங்கள் கிடைத்தன. இவற்றிலும் முசுறிசு பிடிபடவில்லை.
எதிர்பாரா உதவி
தொடர்பில்லாத முன்னேற்றத்தின் மூலம் உதவி கிடைத்தது. 1990களில் சுற்றுச்சூழல் வல்லுநர்களும், தொல் பொருள் ஆய்வாளர்களும் கேரளக் கடற்கரை நெடுகிலும், அதன் படி மலர்ச்சியைப் பற்றி (Evolution) ஆராய்ந்தனர். 1993க்கும் 1997க்கும் இடைப்பட்ட காலத்தில் சாசன் பால் (Shajan Paul) என்னும் ஆய்வாளர், தாம் முனைவர் பட்டம் பெறும் முயற்சியின் ஒரு பகுதியாக நடுவண் கேரளப் பகுதியை அளவாய்வு (Survey) செய்தார். அப்பொழுது பெரியாறு ஆறு தன் போக்கை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. அவர் அப்படி
எண்ணியதற்குக் காரணங்கள் இருந்தன. அவர் கொடுங் கல்லூருக்கு அருகில் இருந்த கடற்கரை ஓரப் பகுதியை ஆய்வு செய்தார். அப்போது அது உள்நோக்கி நகர்ந்து இருக்கவேண்டும் என்றும், அதனால் கடற்கரைப் பகுதியை வெள்ளம் சூழ்ந்து இருக்க வேண்டும் என்றும், பிறகு அது வடிந்து நிலப்பகுதி வெளிப்பட்டிருக்கவேண்டும் என்றும் கருதினார். 1950இல் இருந்து பின்நோக்கிய 5000 முதல் 3000 ஆண்டுக் காலத்தின்போது (இப்பொழுதுள்ள நிலைக்கு முன்பு -1950க்கு முன்பு - கரியகக் கரிம (Radio - Carbon) ஆண்டுகளுக்கு முன்பு) அதனால் புதிய நீர்க் கால்வாய்கள் உண்டாகி இருக்கவேண்டும் என்றும் தெரியவந்தது.
இந்தப் புரிந்து கொள்ளுதல் இன்றியமையாததாக மாறிற்று. அந்த வாசகங்களில் குறிப்பிட்டுள்ளபடி முந்தைய ஆய்வுகள் பெரியாறு ஆற்றின் வடகரையிலும் அதன் கழிமுகத்திற்கு அருகிலும் நடைபெற்றன. பெரியாறு ஆறு தன் தடத்தை மாற்றிக் கொண்டு இருந்தால் முழுமை யாகவே புதிய இடங்கள் தோன்றியிருக்கும்.
1998இல் இப்படிப்பட்ட சூழ்நிலையில் சாசன் பட்டணத்தில் உள்ள தன் நண்பரும் பொறியாளரும் ஆகிய வினோத் என்பவரைக் கண்டார். அந்த நண்பர் தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் தென்னங் கன்றுகளை நடுவதற்குப் பள்ளம் தோண்டியபோது பழங்காலத்திய செங்கற்சுவர் நிலத்தடியில் இருப்பதைக் கண்டார். அதைச் சாசனிடம் கூறினார்.
சாசனும் அவருடைய நண்பர் வி.செல்வக்குமாரும் இந்திய - உரோம வாணிக ஆய்வில் புகழ்பெற்ற வல்லுநரான பேரா. விமலா பெக்லெ (Prof. Vimala Begley) என்பவரும் கொடுங்கல்லூர்ப் பகுதியை முன்பே அளவாய்வு (Survey) செய்துள்ளனர். அவர்கள் பட்டணத்தை எண்ணிப்பார்த்த தில்லை. எப்படி இருப்பினும் கொடுங்கல்லூருக்கு அருகில் பட்டணம் இருப்பதாலும், பட்டணம் என்னும் இடத்தின் பெயர் துறைமுகப்பட்டினம் என்று பொருள் தருவதாலும், இந்த முறை அதன்மீது ஆய்வு செய்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று சாசன் எண்ணினார். பெரியாறு ஆறு தன் தடத்தை வடமேற்குப் பகுதிக்கு மாற்றியிருந்தால் அதன் முந்தைய போக்கு பட்டணத்துக்கு நெருக்கமாக இருந்திருக்கும் என்றுகூட அவர் ஊகம் செய்தார்.
உண்மை நிலை காட்டும் பொருள் அறிகுறி
அவர் அந்தச் செங்கற் சுவரைப் பார்க்கப் பட்டணம் சென்றார். அப்போது அவருக்குப் பெருவியப்பு ஏற்படும்படி ஏராளமான மட்பானை உடைசல்களை அங்கே கண்டார். அவை சூளையில் ஏற்றி ஒரே சீராகச் சுடப்பட்டு இருந்தன. அவை தென்னிந்தியாவின் பழங்காலப் பானைவகைப் பண்பை ஒத்திருந்ததைக் கண்டார். அவை உள்ளூரில் செய்யப் பட்டவை இல்லை என்பதை உறுதி செய்துகொண்டார். பட்டணம் ‘முசுறிசு’டன் நெருங்கிய தொடர்புகொண்ட தாக இருக்கவேண்டும் என்று தெரியவந்துள்ளது.
சாசனும் செல்வக்குமாரும் ஒரு தேர்வாய்வு அகழ் வாய்வைச் (Trial Excavation) செய்வதற்கு ஆறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. “இந்தக் காலத்தின் போது உரோம மண்பாண்ட ஆராய்ச்சி வல்லுநர் உரோபர்ட்டா தோம்பர் (Roberta tomber) பி.செ. செரியன் (P.J. Cherian) ஆகியோரைக் கொண்ட தகுந்ததொரு தனிக் குழுவை அமைத்தோம். நாங்கள் இன்னும் அதிக அளவில் நிலத்தின் மேலுள்ள சான்றுக்காக ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறோம். எங்களுடைய எதிர்காலத் தேடுதல் முறையாக நிறுவன உதவியோடு தாக்குப்பிடித்து இயங்கக் கூடியபடி இருக்கவும் விரும்புகிறோம்” என்று சாசன் விளக்கினார்.
நாங்கள் அந்தச் சிற்றூரின் இட அமைப்பையும், இயற்கைக் காட்சிப் பரப்பையும் துய்த்தபடி அதைச் சுற்றி நடந்து சென்றோம். அதன் வடகிழக்குப் பகுதி மணல் மேடாக இருந்தது. அது தொன்மைப் பொருளுக்கு வள முள்ள இடமாக உள்ளதைக் குறிக்கிறது. ஒரு மனை யிடத்தின் உரிமையாளரிடம் கலந்து பேசினோம். அவர் இசைவின் பேரில் அதில் ஒவ்வொன்றும் மூன்று மீட்டர் ஆழமுள்ள இரண்டு பள்ளங்களைத் தோண்டினோம். நாங்கள் அதிக வியப்படையும்படி அதில் கலைப்பொருள்களைக் கண்டோம். அரிக்க மேட்டில் உரோமக் கலைப்பொருள்கள் உள்ள மனையிடத்தில் அவற்றைப் போன்ற பொருள்களைக் காணலாம். நாங்கள் “முசுறிசுக்கு அருகில் நெருங்கிவிட்ட தாக நிறைவடைகிறோம்” என்று செல்வக்குமார் கூறுகிறார். திரு.செல்வக்குமார் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் இப் பொழுது தொல்பொருள் ஆய்வாளராகப் பணி செய்கிறார்.
இந்த ஆய்வுக்குப் பிறகு எங்கள் குழு வளர்ந்தது. கேரள வரலாற்று ஆராய்ச்சிக் குழு (Kerala Council for Historical Research) ஆதரவில் அதை இப்பொழுது பெரிய குழுவாக அமைத்துள்ளோம்.
2007ஆம் ஆண்டு மிக முக்கியமான ஆண்டு
நாங்கள் 2007ஆம் ஆண்டு அகழாய்வின்போது ஒற்றை அடிமரக் கட்டையைக் குடைந்து செய்த சிறுபடகு, பல மரக் கம்பங்கள்/ கட்டுத் தறிகள் ஆகியவற்றைக் கண்டோம். அந்தச் சிறுபடகின் காலம் கரியம் வழிக் காலக் கணக்கீட்டுப்படி (Carbon Dating) கி.மு. (B.C.E) முதல் நூற்றாண்டு என்று நிறுவப்பட்டுள்ளது. அதே காலத்தவை யாகிய மிளகு, அரிசி, ஏலக்காய், சாம்பிராணி, திராட்சை விதைகள் போன்ற நிலைத்திணை எச்சங்கள் (Botanical Remains) ஏராளமாகக் கிடைத்தன. பட்டணம் ஒரு காலப் பகுதியில் இந்தியப் பெருங்கடல் வாணிகத்தில் செழிப்புமிக்க இடை இணைப்புத் துறைமுகமாக விளங்கியது.
உரோமானியர் வளர்ச்சிக்கு முன்பே பட்டணத்தில் மக்கள் தொடர்ந்து வாழ்ந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இன்னும் அகழ்ந்து எடுக்காத மிக முற்பட்ட கால மண் அடுக்குப் படிவம் கி.மு. 10ஆம் நூற்றாண்டுக்கும் 15ஆம் நூற்றாண்டுக்கும் (இரும்புக் காலம்) இடைப்பட்ட தாக இருக்கலாம்.
பட்டணம் அகழாய்வுக் குழுவின் இயக்குநர் செரியன் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார். “பட்டணம்தான் “முசுறிசு” என்னும் அடையாளத்தை அடக்கத்தோடு பேணிவர விரும்புகிறோம். அந்த மனையிடத்துக்கு “முசுறிசு” வுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாகச் சான்றுகள் குறிப்பிடுகின்றன. ஆனால் கீழ்த்திசை முதல் வாணிக நடுவம் பட்டணத்தின் எந்தப் பகுதி என்பது எங்களுக்குத் தெரிய வில்லை. அதனுடைய புறநகர் மனையிடங்கள் எங்கே இருக்கக் கூடும்? நெல்கைண்டா பைகேர், திண்டிசு என்று (அடையாளம் காணப்பட வேண்டிய) ஆவணத்தில் குறிப்பிடப் பெற்றுள்ள மற்ற துறைமுகங்கள் இணைச் சிறப்புப் பெற்றவை. அவற்றைப் பற்றி நாங்கள் தெரிந்து கொள்வது தேவை” என்று அவர் கூறுகிறார்.
இந்தியத் தொல்பொருள் ஆய்வுக் குழு புதுச்சேரி பல்கலைக் கழகம் போன்ற மேலும் பல நிறுவனங்கள் எங்கள் குழுவில் சேர்ந்துள்ளதால் பட்டணத்தில் அகழாய்வுப் பணி தொடர்கிறது. மக்கள் வாழிடங்களுக்கு நடுவில் அகழாய்வு செய்வது எளிது இல்லை. “பட்டணம் என்பது மக்கள் வாழ்கின்ற ஒரு சிற்றூர். நாங்கள் அந்த ஊர் மக்களோடு வேலை செய்தாக வேண்டும்” என்கிறார் செரியன். அகழாய்வு காரணமாகச் சிற்றூர் மக்கள் இடம்பெயரத் தேவையில்லை என்று அவர்களை நம்பும்படிச் செய்வதில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். “மரபுவழி மேலாண்மைக்கு மக்கள் - நட்பு முறையில் ஒரு மாற்றுமுறை காண்பது அறைகூவலாக உள்ளது” என்கிறார் அவர்.