New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புரட்டு - ஹாஜி சேரமான் பெருமான்


Guru

Status: Offline
Posts: 24762
Date:
புரட்டு - ஹாஜி சேரமான் பெருமான்
Permalink  
 


blank.gif
Vizhippunarvu Logo
blank.gif
blank.gifடிசம்பர் 2008
சைவப்புரட்டு - ஹாஜி சேரமான் பெருமான்
இரா. முருகவேள்

 

தமிழக வரலாற்றைத் தொகுப்பதில் பல்வேறு அரசியல் பின்னணிகளைக் கொண்ட பலர் தங்கள் பங்களிப்புகளைச் செய்துள்ளனர். ஆனால் வரலாற்றுக்கு காவிச் சாயம் பூசுவதையே நோக்கமாகக் கொண்டிருந்த சைவத் தமிழறிஞர்களே அதில் பெருமளவிலான வெற்றி கண்டனர். இனப் பெருமையையும் மதத்தையும் சரிவிகிதத்தில் கலந்து இந்துத்துவாவுக்கு ஒரு புதிய முகத்தை அளித்தனர் ‘சைவத் தமிழறிஞர்கள்’. பெரும்பாலும் இவர்கள் தொகுத்த வரலாறுகள் மாமன்னர்கள் கட்டிய மாபெரும் சிவாலயங்கள், ஆற்றிய சைவத் திருப்பணிகளும் நடத்திய போர்களும் மட்டும்தான் காணக் கிடைக்கின்றனவே தவிர பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதில் கொஞ்சமும் இடமேயில்லை. அப்பட்டமான உண்மைகளையும் அரைகுறை உண்மைகளையும் கொண்டுள்ள பெரிய புராணம் போன்ற மத இலக்கியங்கள், வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை என்று தமிழக மக்களை நம்பச் செய்தவர்கள் இவர்கள்.

தமிழக வரலாற்றில் தங்கள் வரலாற்றைத் தேடும் ஒடுக்கப்பட்ட மக்கள் தடுமாறிப் போவதற்கும் அன்னியமாய் உணருவதற்கும் இந்த சைவ முகமூடி அணிந்த இந்துத்துவா போக்கே காரணம். இது சம்பந்தமான ஒரு விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி நண்பர் கூதிலி லட்சுமணன் பல்வேறு நூல்களை என்னிடம் அளித்தார். அதை ஆய்வு செய்யும் பொழுது சைவத் தமிழறிஞர்களின் முகமூடி வெளிப்பட்டது. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் சேரமான் பெருமான். அதைப் பார்ப்போம்:

பெரிய புராணம் கூறும் கழற்றறிவார் என்னும் சேரமான் பெருமான் நாயனார் கதை உள்ளத்தை உருக்கக் கூடியது. சேர வம்சத்தின் கடைசி மன்னரான இந்தச் சேரமான் பெருமான் சிவபெருமான் மீது பெரும் பக்தி பூண்டவர். நாள் தவறாமல் உள்ளம் கசிந்துருகி சிவனுக்குப் பூசை செய்வார். இறைவனும், அவரது பூசையை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக தன் பாத சிலம்புகளை ஒலித்துக் குறிப்புக் காட்டுவார். அதன் பின்னரே தனது மற்ற இவ்வுலகக் கடமைகளைக் கவனிக்கச் சேரமான அணியமாவார்.

ஒருநாள் சேரமான் பூசை முடித்த பின்பும் எம்பெருமானின் பாதச் சிலம்புகள் ஒலிக்கவில்லை. மன்னர் துடித்தார். தனது பூசையை இறைவன் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவருக்குத் தோன்றியது. அந்தக் கணத்தில் இனிதான் இவ்வுலகில் வாழக் கூடாதென்று முடிவெடுத்தார். வாளையுருவி மார்பில் பாய்ச்சிக் கொள்ளப் போகும் தருணத்தில் எம்பெருமானின் பாதச் சிலம்பு அவசரமாக ஒலிக்கிறது. சேரமான் அமைதியடையவில்லை. அவரது உள்ளம் பதை பதைத்துக் கொண்டேயிருந்தது.

அனலிலிட்ட புழுவாகத் துடிக்கும் சேரமானின் வேதனையைக் காணச் சகிக்காமல் தாமதத்திற்கான காரணத்தை தன்னிலை விளக்கமாக சிவன் அசரீரியாகத் தெரிவித்தார். நம்பியாரூரார் என்னும் சுந்தர மூர்த்தி நாயனார் தில்லையில் பாடிய பாசுரங்களில் மயங்கிப் போய் தான் உரிய நேரத்தில் சிலம்பொலிக்க மறந்துவிட்டதாகக் கூறிய பின்பே சேரமானின் உள்ளம் அமைதியடைந்தது. ஆனால் ஈசனையே மதி மயங்கிப் போகச் செய்யக் கூடிய அந்த ஆரூராரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அவரைப் பிடித்துக் கொண்டது.



பாராளும் மன்னரான சேரமான் சிவன் தொண்டரான சுந்தரமூர்த்தி நாயனாரை தரிசிக்க உடனடியாகக் கிளம்பித் தில்லை செல்கிறார். அங்கே எம்பெருமானின் பொற்பாதங்களை வணங்கி பொன்வண்ணத்தந்தாதி என்ற நூலைப் பாடுகிறார். பின்பு சுந்தரமூர்த்தி நாயனாரைக் காண்கிறார். அவரோடு சோழ, பாண்டிய நாட்டுத் திருத்தலங்களுக்கு எல்லாம் செல்கிறார். நாடு திரும்பி பின் பல ஆண்டுகள் சிவநெறி வழுவாமல் அரசு செலுத்திய பிறகு சுந்தரமூர்த்தி நாயனாருடன் கைலாயம் சென்றார் என்று முடிகிறது சேரமான் பெருமான் நாயனாரின் கதை.



ஆயிரமாண்டுகளாக அடியார்களின் உள்ளங்களை ஆட்கொண்டு வந்திருக்கும் இந்தக் கதையில் நமக்கும் சந்தேகம் வந்திருக்கப் போவதில்லை. கறிவிரவு நெய்ச் சோற்றில் கல் போல அந்தச் சிறிய இடறல் மட்டும் இல்லாமலிருந்திருந்தால். . . . . சேரமான் பெருமான் நாயனார் சென்றது கைலாயம் அல்ல மெக்கா என்கின்றன கேரள இலக்கியங்களான கேரள மான்மியமும், கேரளோற்பத்தியும். ஆங்கிலேயரான வில்லியம் லோகான் எழுதிய மலபார் மேனுவலும் நாயனார் சென்றது மெக்காதான் என்று உறுதிப்படுத்துகிறது.



‘சேரமன்னர் வரலாறு’ என்ற நூலை எழுதிய ஒளவை துரைசாமிப் பிள்ளை இது முற்றிலும் தவறான செய்தி என்கிறார். கேரளோற்பத்தியும், கேரள மான்மியமும் காலத்தால் மிகவும் பிற்பட்டவை என்றும் எனவே அவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட மலபார் மேனுவல் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்றும் வாதிடுகிறார். சேரமான் பெருமான் குறித்து நமது சேக்கிழார் பிரான் மிக விரிவாக விளக்கமாகக் குறிப்பிட்டிருப்பதால் சேரமான் சென்றது ஈசன் வீற்றிருக்கும் கயிலைதான் என்று ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்ததாகும் என்பது துரைசாமிப் பிள்ளையின் கூற்றாகும். பெரிய புராணத்திற்கு ஆதரவாகவும், மலபார் மேனுவல் மற்றும் கேரள இலக்கியங்களுக்கு எதிராகவும் துரைசாமிப் பிள்ளை வைக்கும் வாதங்கள் அரைப்பக்கத்திற்கு முடிந்து விடுகின்றன. (சேரமன்னர் வரலாறு பக்கம் 338)

ஆனால் சேரமானின் மெக்கா யாத்திரை குறித்து மலபார் மேனுவல் தரும் ஆதாரங்கள் எளிதில் ஒதுக்கித் தள்ளிவிட்டுச் செல்ல கூடியவையாக இல்லை. அரேபியாவில் உள்ள கடற்கரை நகரான ஜாபரில் அப்துல் ரஹ்மான் சாமுரி என்பவரின் கல்லறை உள்ளது. மலபாரைச் சேர்ந்த இஸ்லாமியராக மாறிய ஒரு இந்து அரசனின் கல்லறை அது என்று கூறப்படுகிறது. இக்கல்லறை உள்ளூர் மக்களால் மிகவும் மதிக்கப்படுகிறது. சாமுரி என்பது சாமுத்ரி என்பதன் திரிபாகும். சாமுத்ரி என்பது கேரள அரசர்களுக்கு வழங்கப்படும் பெயர் என்று மாப்பிள்ளாக்கள் கூறுகிறார்கள் என்கிறார் லோகான். (மலபார் மேனுவல் பக்கம் 196)



அக்கல்லறையில் ஹிஜிரி 212&ம் ஆண்டு வந்து சேர்ந்தார். 216&ம் ஆண்டு காலமானார் என்று ஒரு குறிப்பு உள்ளது. மாதம் ஏறக்குறைய ஆகஸ்டை ஒட்டி வருகிறது. இந்தக் காலம்தான் வடகிழக்குப் பருவக் காற்று தொடங்கும் முன் மலபாரிலிருந்து கப்பல்கள் அரபு தேசத்திற்குப் புறப்படும் காலமாகும். தவிர இந்த ஆண்டுகள் கிபி 827&832ஐக் குறிக்கின்றன. (லோகான் மலபார் மேனுவல் பக்கம் 196) இந்த ஆண்டிற்கு ஒரு மிகப் பெரிய முக்கியத்துவமும் உள்ளது என்கிறார் லோகான். சேரமான் சற்றேறக் குறைய கி. பி. 825 வாக்கில் மலபாரிலிருந்து மெக்காவுக்குப் புறப்பட்டிருக்க வேண்டும். மலையாள ஆண்டான கொல்லம் ஆண்டு கி. பி. 825 ஆகஸ்டில் தான் தொடங்குகிறது. ஓணம் பண்டிகையும் ஏறக்குறைய இதே நாளில்தான் வருகிறது. (மலபார் மேனுவல் 231)

கொல்லம் ஆண்டுக்கும் சேரமான் அரேபியா சென்றதற்கும் உள்ள தொடர்பைப் புரிந்து கொள்ள அவரது முந்திய வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். சேரமான் பெருமான் சேர வம்சத்தின் கடைசி மன்னர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவருக்கு முன்பிருந்த மன்னர் சந்ததியில்லாமல் இறந்துவிட சேரமான் அதிகாரிகளாலும் மற்ற முக்கியஸ்தர்களாலும் மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிபி 600களின் இறுதியில் அரேபிய தீபகற்பமும் அண்டை நாடுகளும் அரேபியர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்துவிட்டன. அரபிக்கடல் மற்றும் இந்தோனேஷியா வரையான கடல்களில் அரபு வணிகர்களே ஆதிக்கம் செலுத்தினர். வணிகத்தோடு மதம் பரப்புதலையும் தொழிலாக கொண்டிருந்த ஏராளமான இஸ்லாமிய மதப்பிரச்சாரகர்களும் தொடர்ந்து கடல்களில் பயணம் செய்து கொண்டேயிருந்தனர்.

அப்படி இலங்கை வழியாகச் சேர நாடு வந்த ஷேக் உத்தீன் என்பவரை நமது சேரமான் பெருமான் சந்திக்கிறார். அதற்கு முன்பு ஒருநாள் சேரமான் ஒரு முழு நிலவு இரண்டாகப் பிரிந்து பின்பு மீண்டும் இணைந்தது போல் ஒரு கனவு காண்கிறார். இதற்கான விளக்கத்தை ஷேக் உத்தீனிடம் கேட்டதும் சேரமான் இஸ்லாத்தின் பால் ஆர்வம் கொண்டார். அது மேலும் வளர்ந்து மெக்கா செல்வதென முடிவு செய்கிறார். பின்பு தனது வாரிசுகள் மற்றும் முக்கியஸ்தர்கள் அனைவரையும் அழைத்து நாட்டைப் பல பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொன்றின் பொறுப்பையும் ஒவ்வொருவரிடமும் ஒப்படைத்துவிட்டுக் கிளம்பியதாக கதை சொல்கிறது.

இத்தோடு சேர மன்னர்கள் ஆட்சி முடிவிற்கு வந்து சேர நாடு திருவாங்கூர், கள்ளிக்கோட்டை, வள்ளுவ நாடு என பல பிரிவுகளாக ஆளப்படும் நிலை உருவாகிறது. ஓணத்தில் ஒரு சடங்கு உள்ளது. எஜானருக்கு மரியாதை செலுத்திவிட்டு சுதந்திரப் பிரகடனம் செய்வது, இது சேரமான் நாடு விட்டு சென்றதும் குறுநில மன்னர்கள் தாங்கள் சுதந்திரமடைந்ததைக் குறிப்பதாகும். அண்மைக் காலம் வரை கேரள மன்னர்கள் அரசுரிமைக்கு அடையாளமாக வாளைப் பெறும் போது மெக்காவிலிருந்து மாமா திரும்பி வரும் வரை என்று கூறியே ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. கேரளம் மருமக்கள் தாய முறையைப் பின்பற்றி வந்தது. அதன்படி மாமனின் சொத்திற்கு மருமகனே (அக்கா தங்கை மக்கள்) வாரிசு ஆவான். எனவே மாமன் திரும்பி வரும் வரை என்று கூறப்பட்டது.

எனவே சேரமானின் புறப்பாடு பழைய யுகத்தின் முடிவையும் ஒரு புது யுகத்தின் தொடக்கத்தையும் குறிப்பதாக உள்ளது என்று லோகான் கருதுகிறார். இந்தப் புது யுகத்தின் குறியீடாகத்தான் கொல்லம் ஆண்டு அந்த நாளிலிருந்து தொடங்குகிறது. எனவே சேரமான் மெக்கா சென்றது, கைலாயம் சென்றதைப் போன்ற ஒரு ஆதாரமற்ற கற்பனையாக இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவிற்கே வர வேண்டியுள்ளது. சேரமான் பெருமான் என்ற பெயரில் வேறு யாராவது சேர மன்னன் இருந்ததாகவும் செய்திகள் இல்லை. அதோடு சேரமானுக்கும் இஸ்லாத்திற்கும் இடையிலான தொடர்பு ஏதோ அவருடனே தொடங்கி அவருடனே முடிந்து போன ஒன்றாகவும் பார்க்க முடியாது என்பதற்கும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

ஜாபர் நகரில் தாயகம் திரும்பும் நிலையில் மரணப் படுக்கையில் விழும் சேரமான் என்னும் அப்துல் ரஹ்மான் சாமுரி இனிதான் பிழைக்க மாட்டோம் என்பதை உணர்ந்து கொண்டு கேரளப் பகுதிகளில் இஸ்லாத்தைப் பரப்புவதற்காகச் சில ஏற்பாடுகளைச் செய்கிறார். மாலிக் இபின் தினார் என்ற இஸ்லாமிய அறிஞரிடம் அவரை ஆதரிக்க வேண்டும் என்ற கோரும் கடிதங்களை கேரளத்திலிருக்கும் தனது பிரதிநிதிகளுக்குக் கொடுத்தனுப்புகிறார். தான் இறந்துவிட்டால் அதைத் தாயகத்தில் தெரிவிக்க வேண்டாமென்றும் கேட்டுக் கொள்கிறார். சேரமானின் மரணத்திற்கு பின்பு கேரளம் திரும்பும் மாலிக் இபின் தினார் அங்குள்ள மன்னர்களால் அன்«பாடு வரவேற்கப்படுகிறார்.

அவர்களது உதவியோடு மூன்று இடங்களில் மசூதிகளும் கட்டுகிறார். கேரள மன்னர்களின் ஆதரவை இஸ்லாம் பெற்றிருந்தது என்பதற்கு இதைவிட சிறந்த ஒரு உதாரணமும் இருக்கிறது. கோழிக்கோடு பகுதியை ஆண்ட சாமூத்ரி மன்னர் தனது கடற்படையில் பணிபுரிவதற்காக ஒவ்வொரு மீனவக் குடும்பமும் குடும்பத்தில் ஒருவரை அல்லது அதற்கு மேற்பட்டவரை இஸ்லாமியராக வளர்க்க வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு அண்மைக்காலம் வரை பின்பற்றப்பட்டு வந்தது. (மலபார் மேனுவல் 197)

இவையனைத்தும் சேரமானின் உத்தரவால் அல்லது அவர் மேலுள்ள மரியாதையால் மட்டுமே செய்யப்பட்டவை என்று கொள்ள பெருமளவு கற்பனை தேவைப்படும். இஸ்லாத்திற்கான தேவை மேற்கு கடற்கரையில் இருந்திருக்கிறது. கேரள மன்னர்களுக்கு ஏதோ ஒரு வகையில் இஸ்லாத்தை ஆதரிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்கிறது என்ற உண்மை எளிதாகவே புலப்படுகிறது. வணிகத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த கேரள ஆளும் வர்க்கங்களுக்கு இஸ்லாத்தின் மையப்படுத்தப்பட்ட தன்மையும், தொடர்புகளும், தேவைப்பட்டால் சாதியத்தில் உடைப்புகளை ஏற்படுத்த அது அளித்த வாய்ப்பும் அவசியமாக இருந்திருக்கக் கூடும். குறிப்பிட்ட சில சாதியினரே வணிகத்தில் ஈடுபட வேண்டும். படைகளில் பணிபுரிய வேண்டும் என்றெல்லாம் சைவம் விதித்திருந்த கட்டுப்பாடுகள் கடல் சார்ந்த, பரப்பளவில் சிறிய கேரள நாட்டை ஆண்ட மன்னர்களுக்கு, இடையூறாகத்தான் இருந்திருக்கும். எனவே சேரமானுக்கு முன்பிருந்தே இஸ்லாத்துடன் அறிமுகம் சேர நாட்டிற்கு இருந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கே வர வேண்டியிருக்கிறது.

இப்போது நாம் திரும்பவும் பெரிய புராணத்திற்கு திரும்பி சேக்கிழார் சேரமான் குறித்துக் கூறுவதைக் கொஞ்சம் பார்ப்போம். அறுபத்தி மூன்று நாயன்மார்களில் சேர நாட்டைச் சேர்ந்தவர்கள் இரண்டே இரண்டு பேர்தான். ஒருவர் நமது சேரமான். இன்னொருவர் விறன்மிண்ட நாயனார். பெரிய புராணத்தில் சேர நாட்டை விட சேரமான் சோழ பாண்டிய நாடுகளின் சைவத் திருத்தலங்களுக்கு மேற்கொண்ட புனித யாத்திரையைப் பற்றியே அதிகம் கூறப்படுகிறது. விறன்மிண்ட நாயனாரும் தில்லைவாழ் அந்தணர்களுடன் கலந்து ஒன்றாகிவிட்டவராகவே காட்டப்படுகிறார். இஸ்லாம், சேரநாடு உடைபடுவது போன்ற அக்கால சேர நாட்டின் வரலாற்று நிகழ்வுகள் எதற்கும் பெரிய புராணத்தில் இடமே இல்லை.

சேரமான் மெக்கா சென்றது நமக்குத்தான் புதிய செய்தியாகத் தோன்றுகிறதே தவிர கேரளத்தைப் பொறுத்த வரை அது அனைவரும் அறிந்த ஒன்றாகவே இன்று வரை இருந்து வருகிறது. எனவே சேக்கிழார் சேரமானின் சேர நாட்டின், இஸ்லாமியத் தொடர்புகள் குறித்து ஒன்றுமே அறியாமலிருந்திருப்பார் என்று எதிர்பார்க்க வாய்ப்பே இல்லை. சேக்கிழாரின் தந்திரம் சேரமானை சோழ பாண்டிய நாடுகளோடு சைவத்தின் அடிப்படையில் ஒன்றிணைத்து மற்ற வரலாற்றுச் செய்திகளை இருட்டடிப்புச் செய்வதாகவே உள்ளது.

சேக்கிழார் கையாண்ட தந்திரத்தைத் தான் சேர நாட்டு வரலாற்றை எழுதியப் பெரும்பாலான தமிழறிஞர்கள் செய்து வருகின்றனர். இந்த சேரமான் பெருமான் வரையிலான சேர நாட்டு வரலாற்றை தமிழகத்தின் மற்ற பகுதிகளின் வரலாற்றோடு இணைத்துவிட்டு, பிந்திய சேர நாட்டுச் செய்திகளை, அதன் சமூகப் பொருளாதார நிலையை கிறித்துவ இஸ்லாமிய வேர்களை அடியோடு புறக்கணிக்கும் போக்குத்தான் தொடர்ந்து வந்திருக்கிறது. தமிழகத்தின் வரலாற்றை சைவம் சார்ந்தே தொகுப்பதும் முரணாக உள்ளவற்றை அடியோடு மறுப்பதும், புறக்கணிப்பதுமே தொடர்ந்து வந்திருக்கிறது.

பெரிய புராண ஆய்வு என்ற ஆ. சா. ஞானசம்பந்தனின் நூல் சுமார் 730 பக்கங்கள் கொண்டது. ஏறக்குறைய அத்தனை பக்கங்களையுமே சேக்கிழாரின் பரந்து விரிந்த அறிவு, நுணுக்கம், இன்ன பிற தகுதிகளைப் பாராட்டவே ஆசிரியர் பயன்படுத்திக் கொள்கிறார். சேரமான் பெருமான் நாயனார் குறித்து இப்படியரு கதை இருக்கிறது என்று மேலோட்டமாக விவாதிக்கக் கூட ஆ. சா. ஞானசம்பந்தன் தயாராக இல்லை. கடந்த 100 ஆண்டுகளாக தமிழக வரலாற்றைத் தொகுப்பதில் இந்த இருட்டடிப்புச் செய்யும் போக்கே, சைவத்தின் மேன்மையை நிலை நாட்டும் போக்கே பெரும் செல்வாக்கு செலுத்தி வந்துள்ளது.

இந்த சைவ முகமூடி அணிந்திருக்கும் இந்துத்துவ வரலாற்றுப் பார்வை தமிழகத்தின், தலித்திய இஸ்லாமிய, கிறித்துவ, பழங்குடியின வேர்களை கவனமாகவே புறக்கணித்து வந்திருக்கிறது. இந்தப் பார்வை மாறாதவரை வரலாற்று மாணவர்களுக்கான புதிய கதவுகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்பே இல்லை.

http://www.keetru.com/vizhippunarvu/dec08/murugavel.php?__cf_chl_jschl_tk__=a476c3fa7be51b9796f057a6cd50396de4ef953f-1594124098-0-ATiguuAJcNcm-Akkx2yZqs9Fhcet0HpIKtQbpi2PzvY4ty57kleY9JU-twn2d0NosK6mUJV8n_u83bEZxUlkH-AqkuwTB3i12oY7e-vedfzV7K-iVzsfiHIIoZwbIsD4gCV6iA3508T0ZB2Zg1Gc7ZUix0BJLWdEi3Nko7nqnOVZcYzuqadC7M34f8FHY0CwjCP9fls5IS2Tu2cxK4Mevsq6kA7tr8l45oj99cwLUhWhB0gKngU73mexaZm3D_li0A6XtMNEPSx-cxF7PhajSEhheOziRWluixQkiXOe0sLGV8ANWsci6_8CWWZzTM65j61t5UspquOsYNfdvqRvZ_kbRciMrK-CXH8UBCY26WILaXlc6vm3acNJ71PohztI8w

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24762
Date:
Permalink  
 

கேரள வரலாறும் பெருமாள்களும்

 

அன்புள்ள ஜெ

கீழ்க்கண்ட கட்டுரையை கீற்று இணையதளத்தில் படித்தேன். ஏதோ ஒரு சிற்றிதழில் வெளிவந்தது இது.

முற்றிலும் முட்டாள்தனமான கட்டுரை. எப்படி இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதுகிறார்கள், எப்படி அடிப்படை வரலாற்றறிவுகூட இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பதை என்னால் கற்பனைசெய்யவே முடியவில்லை.

சேரமான் என்றால் பெருஞ்சேரன் என்றுதான் பொருள். பெரும்பாலும் எல்லா சேர மன்னர்களுக்கும் இந்த அடைமொழி இருக்கிறது. ஒரு சேர மன்னன் இஸ்லாம் மதத்துக்கு மாறியது உண்மையாக இருக்கலாம். அது ஸ்தாணு ரவி வர்மன் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பெரிய புராணத்தில் சொல்லப்படும் சேரமான் பெருமாள் வேறு ஒருவர்.

நாம் இந்திய வரலாறு பற்றி கருத்துக்களைச் சொல்லும்போது மிகக் கவனமாக இருந்தாகவேண்டியிருக்கிறது. ஏனென்றால் நமக்கு பல பகுதிகளைப்பற்றி போதுமான ஆதாரங்கள் கிடையாது. இத்தகைய அரைகுறையான கட்டுரைகளைப்படிக்கும்போது மக்கள் மத்தியில் வெறுப்பை மட்டுமே அவை வளர்க்கும் என்று எண்ணி மிக வருத்தம் கொள்கிறேன்.

http://www.keetru.com/vizhippunarvu/dec08/murugavel.php

 
இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
 
Veerappan, Srinarayanan (IS Consultant)”

 

அன்புள்ள வீரப்பன் அவர்களுக்கு,

ஓ எளிய உரையாடலைக்கூட தொடங்க முடியாத அளவுக்கு அடிப்படை ஞானம் இல்லாமல் எழுதப்பட்ட அபத்தமான கட்டுரை அது. தமிழில் இம்மாதிரியான கட்டுரைகள்தான் நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு எழுதப்படுகின்றன. வெறுப்பையும் அறியாமையையும் மட்டுமே ஆதாராமாகக் கொண்டவை. சேரமான் பெருமான் என்று ஒருவர் மட்டுமே இருக்க முடியும் என்று பேசும் அறிவாளியிடம் என்ன உரையாடலை நிகழ்த்துவது?

*

வரலாற்றைப்பொறுத்தவரை ஒரு எளிய முன்வரைவு நமக்கு அவசியமானது. தமிழக வரலாற்றை நாம் கீழ்க்கண்டவாறு புரிந்துகொள்ளலாம்.

1. சங்க கால தமிழகம்

சங்க காலப்படைப்புகளில் இருந்து கிடைக்கும் தரவுகளைக் கொண்டு நாம் உருவகித்துக்கொள்ளும் ஒரு காலகட்டம் இது. சிலப்பதிகாரம் வரைக்கும் சித்தரிக்கப்படும் தமிழகம் இது என்று சொல்லலாம். கரிகால்சோழன், பாண்டியன் தலையானங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் , சேரன் செங்குட்டுவன் ஆகியோர் இக்காலகட்டத்தின் மிகச்சிறந்த மன்னர்கள். இக்காலகட்டத்தில் சேரசோழ பாண்டிய அரசுகள் இருந்தாலும் அதேயளவுக்கு வலிமையாக இனக்குழுத்தலைவர்களும் நாடாண்டார்கள். பெரும்பாலான போர்கள் மூன்று முடிமன்னர்களும் சிறு ஆட்சியாளர்களை வென்று பெரிய அரசை உருவாக்கும் பொருட்டு நிகழ்த்தியவை

2. களப்பிரர் கால தமிழகம்

கிபி ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் தக்காண மையநிலத்தில் இருந்து வந்த சமணர்களான களப்பிரர் தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்ட காலகட்டம். கல்வெட்டு ஆதாரங்கள் போன்றவை அதிகம் கிடைக்காத காலகட்டம். சம்ஸ்கிருத சமண நூல்களை ஆதாரமாகக் கொண்டு இக்காலகட்டத்தைப்பற்றி ஆராய்ச்சிகள் செய்யலாமென்றாலும் அப்படி ஏதும் செய்யப்பட்டதாகத்தெரியவில்லை. திருக்குறள் முதலிய நீதிநூல்கள் உருவான காலகட்டம் இது.

3. பிற்கால தமிழகம், சோழ பாண்டியப்பேரரசுகள்

கிபி எட்டாம் நூற்றாண்டு வாக்கில் களப்பிரர் ஆட்சி முடிந்து உருவான தமிழ் முடிமன்னர்களின் ஆட்சி. வடக்கே பல்லவர்களும் தெற்கே சோழர்களும் களப்பிரரை வென்று தங்கள் அரசுகளை மீட்டனர். பேரரசுகள் உருவாயின. ஆரம்பத்தில் பல்லவப்பேரரசு. பின்னர் சோழப்பேரரசு. கடைசியில் சிறிதுகாலம் மட்டும் பாண்டியப்பேரரசு. நரசிம்மவர்ம பல்லவன், ராஜராஜ சோழன்,ராஜேந்திர சோழன், ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் போன்றவர்கள் இக்கால பெரும் மன்னர்கள்
 
4..டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு

1310ல்  டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபது மாலிக் காபூர் தெற்கே படைகொண்டு வந்து தமிழ்ப்பேரரசுகளை அழித்தார். பின்னர் கிட்டக்தட்ட அரை நூற்றாண்டுக்காலம் சுல்தான்களின் தளபதிகளால் தமிழகம் ஆளப்பட்டது.
5. நாயக்கர், மராட்டியர் காலம்

விஜயநகர மன்னர் குமாரகம்பணன் 1371ல் மதுரையைக் கைப்பற்றுவதுடன் தொடங்கும் இக்காலகட்டம்  1730 வரை நீள்கிறது. மதுரை, தஞ்சை,செஞ்சி ஆகியவற்றின் நாயக்கர் ஆட்சி நிறுவப்பட்டது.   ராணி மங்கம்மாளும் திருமலை நாயக்கரும் நாயக்கராட்சியின் சிறந்த மன்னர்கள். பின்னர் தஞ்சாவூர் மராட்டியரால் ஆளப்பட்டது

6. ஐரோப்பியர் காலம்

பாண்டிச்சேரியை பிரெஞ்சுக்காரர்களும் சென்னையை ஆங்கிலேயர்களும் உருவாக்குவதுடன் தொடங்கும் காலகட்டம். 1947 வரை நீண்டது

7.விடுதலைக்குப்பின்.

1947 தேசவிடுதலைக்குப்பின் தமிழகம் 1951ல் மொழிவழி மாநிலமாக உருவானது.

என்று ஏழு காலகட்டங்களாகப் பிரித்துக்கொள்கிறோம்.

கேரளவரலாற்றை சற்று மாறுபட்டு பிரித்துக்கொள்ளவேண்டும். சங்ககாலத்தில் சேரர்கள் தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்தார்கள். ஆகவே அதை பிளவுபடாத காலகட்டம் எனலாம். அதன்பின் சேரர் வரலாறு பல தனிப்பட்ட சிக்கல்களுடன் தனிப்பாதையில் இயங்குகிறது. அதைப்புரிந்துகொள்வது சிறிது கடினம். ஏனென்றால் தமிழக வரலாறில் பிற்காலத்தில் பேரரசுகள் உருவாயின. ஆகவே ஆலயங்களும் பேரிலக்கியங்களும் உருவாயின. அவை வரலாற்றாதாராங்களை அளிக்கின்றன. அதாவது தமிழக வரலாறு வென்றவர்களின் வரலாறு.

கேரள வரலாறு தோற்றவர்களின் வரலாறு . வென்றவர்களின் குறிப்புகள் அளிக்கும் சித்திரமே ஆய்வுக்குக் கிடைக்கிறது. உதிரிக்குறிப்புகள் வழியாகவே வரலாற்றை கற்பனைசெய்துகொள்ள முடிகிறது.

1. சங்க காலகட்டம்.

இக்கால சேர மன்னர்கள் அனைவரும் கேரளத்தவரே என்று கூறிவிட முடியாதென்றாலும் அன்றைய சேரநாட்டில் இன்றைய கேரள நிலம் பெரிதும் அடங்கியிருந்தது என்று சொல்லலாம். சேரர்களுக்கு இணையாகவே இக்காலத்தில் சிறு ஆட்சியாளர்கள்  ஆண்டிருந்தார்கள். வடக்கே எழிமலை தனி நாடாக விளங்கியிருந்தது. தெற்கே வேள்நாடு [குமரிமாவட்டம்] ஆய் மன்னர்களால் ஆளப்பட்டது. பண்டைய கேரளத்தில் கிடைக்கும் திடமான தொல்பொருட் சான்றுகள் ஆய் மன்னர்களைப்பற்றியவையே.

இக்காலகட்டத்தில் சேரமன்னர்களின் தலைநகரமான வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரம் இப்போதுள்ள கொடுங்கல்லூர் என்று சொல்லப்படுகிறது.  இங்குள்ள தொன்மையான சிவன் கோயில் திருவஞ்சைக்குளம் என்று சொல்லப்படுகிறது. இங்குள்ள தேவி கோயில் சேரன் செங்குட்டுவன் கட்டிய கண்ணகி கோயிலின் மறுவடிவமாக இருக்கலாம். தொல்பொருட் சான்றுகள் அனேகமாக ஏதுமில்லை
 

2. முதல் அறியப்படாத காலகட்டம்

களப்பிரர் காலகட்டத்தில் சேரநாடு எப்படி இருந்தது என்பதற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை. கப்பம் கட்டும் சிறுகுடி மன்னர்களால் ஆளப்பட்டிருக்கலாம். அனைத்து குலங்களிலும் மன்னர்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. உதாரணமாக வேள்நாட்டில் நாஞ்சில் குறவன் என்ற ஆட்சியாளர் இருந்திருக்கிறார். ஒருசில கோயில்கொடை கல்வெட்டுகளில் சில மன்னர்களின் பெயர்கள் மட்டும் உள்ளன.

3. சோழர் ஆதிக்க காலகட்டம்

இரணியலை ஆண்ட சேரன் பாஸ்கர ரவிவர்மனை பத்தாம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் வெல்வதுடன் தொடங்கும் இந்த காலகட்டம் முந்நூறு வருடம் நீடித்தது. சோழர் கால கல்வெட்டுக்கள் பல கிடைக்கின்றன.

4. இரண்டாவது அறியப்படாத காலகட்டம்

சோழர் ஆட்சி முடிந்தபின் பாண்டிய ஆட்சியின் சிறிய காலகட்டத்துக்குப்பின் என்ன நடந்தது என்பது மீண்டும் தெளிவாக இல்லை. ஒரு நூற்றாண்டுகளுக்குள் பல சிறு ஆட்சியாளர்கள் சுதந்திர மன்னர்களாக உருமாறினார்கள். திருவிதாங்கூர், கொல்லம், கொச்சி, கோழிக்கோடு மன்னர்கள் அவர்களில் வலிமைபெற்றவர்கள் ஆனார்கள்.

5. கேரள சிறுமன்னர்களின் காலகட்டம்

கேரளம் ஐம்பதுக்கும் மேற்பட்ட மன்னர்களால் ஆளப்பட்ட காலகட்டம். திருவிதாங்கூர், கொல்லம், கொச்சி, கோழிக்கோடு மன்னர்கள் அவர்களில் வலிமைபெற்றவர்கள் ஆனார்கள். கடைசியில் கோழிக்கோடு சாமூதிரியும் திருவிதாங்கூர் மன்னரும் இரு பெரும் மன்னர்களாக எஞ்சினார்கள்.
6. ஐரோப்பியர் காலம்

போர்ச்சுக்கல்காரர்கள் , டச்சுக்காரர்கள், வெள்ளையர்கள் கேரள அரசுகள் மீது மறைமுக ஆதிக்கம் கொள்ள ஆரம்பிப்பதுடன் தொடங்கும் இக்காலகட்டம் 1947 வரை நீடித்தது. கடைசியில் கோழிக்கோடு  சென்னை மாகாணத்தின் பகுதிகளாக ஆங்கிலேயரால் நேரடியாக ஆளப்பட்டது.. திருவிதாங்கூர் கப்பம்கட்டும் தனிநாடாக நீடித்தது. இக்காலகட்டம் பற்றி மிக விரிவான தகவல்கள் உள்ளன. திருவிதாங்கூரின் வரலாறு நாகம் அய்யா, சங்குண்ணி மேனன், வேலுப்பிள்ளை ஆகியோராலும் கொச்சி வரலாறு பத்மநாபமேனனாலும் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது.

7. விடுதலைக்குப்பின்.

1947ல் விடுதலைக்குப்பின் திருவிதாங்கூரும் கொச்சியும் இணைந்து திருகொச்சி என்ற பேரில் ஒரு ஆட்சிப்பகுதியாக நீடிக்க சென்னைமாகாணத்தின் பகுதியாக கோழிக்கோடுபகுதி இருந்தது. 1951ல் ஐக்கிய கேரளம் என்ற பேரில் இன்றைய கேரளம் உதயமாயிற்று.

இவ்வாறு கேரள வரலாற்றை பிரித்து ஒரு முன்வரைவை உருவாக்கிக் கொள்வது நல்லது.

கேரளத்தில் இன்றுள்ள இந்த வரலாற்றுப்பாடத்தின் முன்வரைவை உருவாக்கியவர் பேராசிரியர் இளங்குளம் குஞ்ஞன்பிள்ளை என்ற பேரறிஞர். அவரே இக்காலகட்டங்களை பகுத்து ஒரு வரிசையை உருவகம் செய்தார். அவர் காலகட்டத்தில் அதிகமான கல்வெட்டுகள் கண்டடையப்படவில்லை. பயணிகளின் ஆவணங்கள் அதிகமும் பரிசீலிக்கப்படவுமில்லை. அவர் அதிகமும் இலக்கிய ஆதாரங்களையும் தொன்மங்களையுமே கணக்கில் கொண்டார்

அவருக்கு முன்னர் இருந்த வரலாற்று வரைவுகள் வில்லியம் லோகனின் மலபார் மானுவல், வார்ட் ஆண்ட் கானரின் குறிப்புகள் மேலும் சில ஐரோப்பியரின் குறிப்புகள் போன்றவை. கேரளோர்ற்பத்தி என்னும் பண்டைய நூல் கேரள வரலாறு பற்றிய செவிவழிச்செய்திகளினால் ஆனது. கேரளம் ரேணுகாதேவியின் மகனாகிய பரசுராமனால் மழு வீசி கடலில் இருந்து மீட்கப்பட்டது என்பது போன்ற தொன்மங்கள் இதில் உள்ளன. கொட்டாரத்தில் பாச்சு மூத்தது என்பவரால் எழுதப்பட்ட திருவிதாங்கூர் சரித்திரம் கேரள உற்பத்தி நூலை பெரும்பாலும் அடியொற்றியது. இந்த முன்தரவுகளை பலவகையிலும் தொகுத்து ஒரு வடிவம் கொடுத்தவர் இளங்குளம் குஞ்ஞன்பிள்ளை.

அறியப்படாத காலங்களைப்பற்றிய இளங்குளம் குஞ்ஞன்பிள்ளையின் ஊகங்கள் இன்றளவும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அறியப்படாத காலங்களில் அவர் கேரளத்தின் பொற்காலங்களை கற்பனைசெய்ய முனைகிறார் என்பதே முக்கியமான குற்றச்சாட்டு. ஆனால் கேரள தேசியம் மெல்ல மெல்ல அடையாளம் காணப்பட்டுவரும் இன்று அவையெல்லாம்  அதிகாரபூர்வமான பாடங்களாக ஆகிவிட்டிருக்கின்றன.

முதல் அறியப்படாத காலகட்டத்தைச்சார்ந்த மூன்று முக்கியமான தொன்மங்கள் கிடைக்கின்றன. ஒன்று, குலசேகர ஆழ்வாரைப்பற்றியது. இரண்டாவது சேரமான் பெருமாள் நாயனார். மூன்று மெக்காவுக்குச் சென்ற சேரமான் பெருமாள். இந்த தகவல்களைத்தவிர சேரமன்னர்களின் ஆட்சியுரிமை பெருமாள்களால் வழங்கப்பட்டது என்ற ஒரு தொன்மமும் உள்ளது. நூற்றியெட்டு சேரமான் பெருமாள்கள் வரிசையாக ஆண்டதாகவும் நூற்றியெட்டாவது பெருமாள் மெக்காவுக்குச் சென்றதாகவும் ஒரு தொன்மம் சொல்கிறது

கிபி 825 ஐச்சேர்ந்த வாழப்பிள்ளி கல்வெட்டு குலசேகர ஆழ்வாரைப்பற்றிய குறிப்புகளை அளிக்கிறது. சேரமான் பெருமாள் நாயனாரைப்பற்றிய இலக்கிய ஆதாரங்களுக்கு உபரியாக கொடுங்கல்லூரில் உள்ள திருவஞ்சைக்குளம் ஆலயத்தில் கல்வெட்டுக்குறிப்பு ஒன்றும் உள்ளது. திருவஞ்சைக்குளம் கோயிலில் சேரமான் பெருமாள் சொற்காரோகணம் செய்த நாள் தமிழக சைவ மடங்களின் பங்களிப்புடன் பல நூற்றாண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதேபோல மெக்காவுக்குச் சென்ற சேரமான் பெருமாள் பற்றியும் சில உதிரி ஆதாரங்கள் உள்ளன. அரேபியக்கடற்கரை நகரான ஜாபரில் உள்ள கல்லறை ஒன்று சேரமான் பெருமாளுடையதாக இருக்கலாமென்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் சமகால அரேபிய ஆவணங்களில் இதைப்பற்றிய தகவல்கள் இல்லை. எனினும் வாய்மொழி ஆதாரம் வலுவாக இருப்பதனால் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கலாம் என்று இளங்குளம் குஞ்ஞன்பிள்ளை உள்ளிட்ட கேரள வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.

கிபி 800 முதல் கிபி 820 வரை ஆண்ட குலசேகர ஆழ்வார் களப்பிரர் ஆட்சிக்குப் பின்னர் கேரளம் கண்ட முதல்பெருமன்னர் என்றும் கொல்லம் ஆண்டை அவரே தொடங்கிவைத்தார் என்றும் இளங்குளம் குஞ்ஞன் பிள்ளை ஊகிக்கிறார். அதன் பின்னர் சேரமான் பெருமாள் என்று அழைக்கப்பட்ட மன்னர்களின் ஒரு வரிசை மகோதயபுரம் [மாக்கோதைபுரம்] என்று அழைக்கப்பட்ட கொடுங்கல்லூரை தலைநகரமாகக் கொண்டு கேரளநிலத்தை ஆண்டது என்று சொல்லும் இளங்குளம் குஞ்ஞன்பிள்ளை அவர்களே பெருமாள் வம்சம் என்று சொல்கிறார். இதை இரண்டாவது சேரப்பேரரசு என்று அவர் குறிப்பிடுகிறார். முதல் சேரப்பேரரசு இயமவரம்பன் நெடுஞ்சேரலாதனால் உருவாக்கப்பட்டு அவர் மகன் சேரன் செங்குட்டுவனால் விரிவாக்கம்செய்யப்பட்டது என்றும் அதன் தலைநகரமும் கொடுங்கல்லூர்தான் என்றும் சொல்கிறார்.

பெருமாள் வம்சத்தைச் சேர்ந்த ஒரு சேரமான் பெருமாள்தான் சைவ நாயன்மாரில் ஒருவரான சேரமான் பெருமாள் நாயனார். அவரது வாரிசுகளால் திருவஞ்சைக்குளத்தில் இன்றுள்ள ஆலயம் கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார். அதேபோல சேரமான் பெருமாள்களில் ஒரு மன்னர் இஸ்லாம் மதத்தை தழுவி மெக்கா சென்றிருக்கலாம் என்றும் இளங்குளம் உள்ளிட்ட கேரள வரலாற்றாசிரியர்கள் பலர் நினைக்கிறார்கள். அவர் யார் என்பதை இப்போது தெளிவாகச் சொல்ல முடிவதில்லை என்றாலும் கிபி 825 முதல் கிபி 844 வரை ஆண்ட ராஜசேகர வர்மன் அல்லது அவரது மகன் ஸ்தாணு ரவிவர்மனாக [கிபி 844-855] இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.  

பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் பெருமாள் வம்சம் சோழர்களுடனான போரில் முழுமையாக அழிக்கப்பட்டது என்பது இளங்குளம் குஞ்ஞன்பிள்ளையின் கருத்து. ராஜராஜசோழன் சேரநாட்டை கைப்பற்றி தன்னுடைய நேரடி ஆளுகைக்குக் கீழே கொண்டுவந்தார். 1090 முதல் 1102 வரை ஆண்ட ராமவர்ம குலசேகர பெருமாள் கடைசி பெருமாள் மன்னர் என்றும் அவர் மகோதயபுரத்தைக் கைவிட்டு கொல்லத்துக்கு வந்து ஒரு சிறு அரசை நிறிவினார் என்றும் சொல்லப்படுகிறது. இவர் திருவிதாங்கூரில் உள்ள திருவட்டாறில் வாழ்ந்தாரென்றும் பின்னர் இரணியலில் மறைந்தார் என்றும் சொல்லபப்டுகிறது. குலசேகரப்பெருமாள் அரண்மனை என்ற ஒரு கட்டிடம் சமீபகாலம் வரை  இரணியலில் இருந்தது.

இந்தப் பெருமாள்வம்சத்தின் வரலாறு வெறும் கற்பனை என்று பி.கெ.பாலகிருஷ்ணன் போன்ற வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். இதற்கு வலுவான தொல்பொருள் சான்றுகள் இல்லை. ஆனாலும் இந்த வரலாற்றில் உள்ள கேரள தேசியப்பெருமிதம் காரணமாகவோ என்னவோ இது ஓர் அங்கீகரிக்கப்பட்ட வரலாறாகவே உள்ளது.

இரண்டாவது அறியப்படாத காலகட்டம் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின் தொடங்குகிறது. சோழர்களின் ஆட்சியின் இறுதியில் கேரள நிலப்பகுதி பாண்டியர்களால் ஆளப்பட்டது என்பதற்கு சமீபமாக சில கல்வெட்டுகள்  கிடைக்கின்றன. பின்னர் பாண்டிய அரசு சுல்தானியப்படையெடுப்புகளால் அழிக்கப்பட்டபோது கேரளத்தில் ஒரு அராஜக நிலை உருவாகியிருக்கலாம். பிற்காலத்தில் கேரளத்தில் உருவாகி வந்த ஏராளமான ‘மன்னர்கள்’ இக்காலகட்டத்தில் உருவானவர்களே. இவர்களில் ஒருவரான ரவிவர்மன் குலசேகரப்பெருமாள் கடைசி பெருமாள் மன்னரான ராமவர்ம குலசேகர பெருமாளின் வாரிசு என்றும் அவர் பாண்டிய அரசை குறுகிய காலம் ஆண்டார் என்றும் சொல்லப்படுகிறது. 

சேரச் சிறுமன்னர்கள் பல வகைப்பட்டவர்கள். .கேரள நிலத்தில் இருக்கும் அளவுக்கு பலவகையான மன்னர்கள் எங்குமே இல்லை. புராதன சேர உதிரவழி கொண்டவர்கள் ஒரு வகை. சோழர்கள் காலத்தில் நியமிக்கப்பட்ட தளபதிகள் இரண்டாம் வகை. இதைத்தவிர குட்டிக்குட்டி அதிகாரங்கள் கொண்டவர்களும் மன்னர்களாக ஆனார்கள்கோயிக்கல் மன்னர்கள் என்று சிலர் சொல்லப்பட்டார்கள்.[ கோயில்கல் ] அவர்கள் சில கோயில் நிலங்கள் மீது அதிகாரம் கொண்ட கோயிலதிகாரிகள் மட்டுமே. நாடுவாழிகள் என்று சொல்லப்பட்டவர்கள் சோழத்தளபதிகள். அவர்களும் மன்னர்களாக தங்களைச் சொல்ல ஆரம்பித்தார்கள்.சில இடங்களில் வரிவசூல் உரிமை கொண்டிருந்த நிலப்பிரப்புக்குடும்பங்கள் ஸ்வரூபம் என்று சொல்லப்பட்டன. இவர்களும் பின்னர் மன்னர்களாக அறிவித்துக்கொண்டார்கள். உதாரணமாக பாண்டிய அரசர்களின் ஒரு சிறு வரிவசூல் தளபதிதான் பந்தளம் மன்னர்.

இவர்கள் அனைவருமே தங்களை புராதன சேர வம்சாவளியினர் என்றுதான் சொல்லிக்கொண்டார்கள். அத்தகைய ஐதீகப்பின்புலம் இல்லாமல் மக்களிடம் மன்னராக அங்கீகாரம் பெற முடியாது. ஆகவே பல வம்ச வரலாறுகளும் தொன்மங்களும் உருவாகி வந்தன. அவற்றில் ஒன்றுதான் பண்டைய சேரமான் பெருமாள் அவரே தன் நாட்டைப் பிரித்து இவர்களிடம் கொடுத்தார் என்ற கதை. பெருமாள்களிடமிருந்து உண்மையில் நாட்டை சோழர்கள் எடுத்துக்கொண்டார்கள்.

சிறந்த உதாரணம் திருவிதாங்கூர் அரச வம்சம். இவர்கள் திருப்பாம்பரம் ஸ்வரூபம் என்ற நிலப்பிரபுத்துவக் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள். இவர்களின் உண்மையான உதிரவழி என்ன என்பது தெரியவில்லை. இவர்கள் ஆண்ட பகுதி சங்க காலத்தில் ஆய் மன்னர்களின் நாடாக இருந்தது. சோழர்கள் சென்றபின்னர் சிலகாலம் சுல்தான்களின் தளபதிகளால் திருவிதாங்கூர் நிலப்பகுதி ஆளப்பட்டது. பின்னர் இவர்கள் தங்களை மன்னர்களாக அறிவித்துக்கொண்டு ஆண்டனர். பிற ஸ்வரூபங்களை மெல்ல மெல்ல அழித்தும், தங்களுடன் இணைத்தும் முழுமையதிகாரம் பெற்றனர்

திருவிதாங்கூரின் முழு ஆட்சியாளர்களாக இவர்கள் ஆனபோது சேரமான் பெருமாளின் நாடு இவர்களுக்கு அளிக்கப்பட்டதாகச் சொல்லிக்கொண்டார்கள். வஞ்சீச பால என்ற அடைமொழி [வஞ்சியின் மன்னர்கள்] சூட்டிக்கொண்டார்கள். இவ்வாறுதான் காயங்குளம், கொச்சி, கொல்லம், சிறையின்கீழ், ஆற்றிங்கல்,கொடுங்கல்லூர் மன்னர்கள் அனைவருமே சொல்லிக்கொண்டார்கள். அத்தனை மன்னர்களையும் வென்று திருவிதாங்கூர் கோழிக்கோடு மன்னரின் எல்லைவரை பரந்தபோது இவர்கள் கேரள வரலாற்றின் மிகப்பெரிய நாட்டுக்கு உரிமையாளர்களாக ஆனார்கள். தொல்சேர வம்சத்தின் தொடர்ச்சியாக இவர்கள் அரண்மனைசார்ந்த வரலாற்றாசிரியர்களால் சுட்டப்பட்டார்கள்.
பெருமாள்கள் யார், அவர்கள் உண்மையிலேயே இருந்தார்களா என்பதெல்லாம் கேரள வரலாற்றாய்வில் அரைநூற்றாண்டுக்காலமாக விவாதிக்கப்பட்டு வௌம் விஷயங்கள். பெருமாள்கள் பாண்டியர்கள் அல்லது சோழர்களின் வம்சத்தில்வந்த அரச பிரதிநிதிகள் மட்டுமே என்றும், அவர்கள் புராதன சேர அரசின் அழிவுக்குப்பின்னர் கேரளத்தை ஆள நியமிக்கப்பட்டவர்கள் என்றும் அவர்கள் தனித்த முடிமன்னர்கள் அல்ல என்றும் ஒரு தரப்பு உண்டு. கடைசிப்பெருமாள் ஆன ரவிவர்மன் குலசேகரப்பெருமாள் பாண்டிய அரியணைக்கு உரிமைகொண்டாடினான் என்பது இதற்கான ஆதாரமாகக் காட்டப்படுகிறது. பெருமாள்கள் என்ற பட்டப்பெயருடன் ஒருசில ஆட்சியாளர்கள் இருந்திருக்கலாமென்றும் அவர்களுக்கு கேரள நிலம் மீது தொன்மம் சார்ந்த அதிகாரம் இருந்தது என்றும் பரவலாக ஒப்புக்கொள்ளப்படுகிறது.

நாம் கேரள வரலாறு சார்ந்த இந்த முன்வரைவை மனதில்கொண்டு எந்த ஒரு கருத்தையும் அந்தப்பின்னணியில் பொருத்தி மட்டுமே ஆராய்ச்சி செய்யவேண்டும்.

சில வரலாற்று நூல்கள் – 3 -மதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard