ஜெயமோகனின் “ராஜன் குறை என்பவர் யார்?” என்ற கட்டுரைக்கு மறுப்பு 

ஜெயமோகனின் அவர் வலைத்தளத்தில், ஜூலை 4 ஆம் தேதி “ராஜன் குறை என்பவர் யார்?” என்று ஒரு கட்டுரையை பிரசுரித்துள்ளார். அதனால் அவருடைய வாசகர்களுக்கு நான் யார் என்பதே தெரியாது, அதனால் அறிமுகம் செய்கிறார் என்ற பொருள் உருவாகிறது. ஆனால் மிகவும் பிழையாக அறிமுகம் செய்கிறார். அவருடைய வலைத்தளத்தில்தான் மறுப்பு எழுதவேண்டும். ஆனால் அவர் சொற்களை முழுமையாக மறுத்து, கண்டித்து எழுதும் கட்டுரையை அவர் பிரசுரிப்பார் என்று தோன்றாததால் நான் சமீபத்தில் அவர் கதை,கட்டுரைகள் குறித்த விமர்சனங்களை பிரசுரித்த உயிர்மை இணையதளத்திலேயே பிரசுரிக்கிறேன்.

அவருடைய வாசகர் எம்,ராஜேந்திரன் என்பவர் எழுப்பியுள்ள கேள்விக்கு பதிலாகத்தான் ஜெயமோகன் இந்த கட்டுரையை எழுதியுள்ளார். அந்த வாசகர் நான் ஒரு அப்செஷன் போல தொடர்ந்து ஜெயமோகனைப் பற்றி எழுதி வருவதாக குறிப்பிட்டுள்ளார். அவர் எந்த கட்டுரைகளை படித்தார் என்று தெரியவில்லை. வியப்பாக இருக்கிறது. நான் ஜெயமோகனின் குறிப்பிட்ட கட்டுரை, கூற்று அல்லது படைப்பு குறித்துதான் எழுதுவேனே தவிர ஜெயமோகனைப் பற்றி இதுவரை எதுவுமே எழுதியதில்லை. அவருடைய மாஸ்டர் கட்டுரை குறித்து எழுதியபோதுதான் அவருடைய புனைவெழுத்தாக நான் படித்த விஷ்ணுபுரம் மற்றும் சில கதைகளுக்கும் அவருடைய கட்டுரைகளில் வெளிப்படும் பல்வேறு பார்வைகளுக்கும் தொடர்பிருக்கிறது; அதற்கும் மாஸ்டர், விதி சமைப்பவர்கள், தேர்வு செய்யப்பட்டவர்கள் போன்ற கட்டுரைகளில் வெளிப்படும் பாசிச மனோவியலுக்கும் தொடர்பிருக்கிறது என்று எழுதினேன். இதுவும் கூட எழுத்துருவாக நான் அறிந்த ஜெயமோகன் மட்டுமே. அதனால் அவரைப்பற்றி நான் எதுவும் எழுதுவதில்லை என்பதே உண்மை. ஆனால் இந்த உயர்பண்பிற்கு நேரதிராக ஜெயமோகன் என் எழுத்துக்களை பற்றி, அவர் மீது நான் வைக்கும் விமர்சனங்கள் பற்றி எதுவுமே எழுதியதில்லை. எப்போதுமே என் ஜாதி அடையாளத்தையோ, வேறு  மேலும் பல்வேறு சமூக அடையாளங்களையோ குறித்துதான் எழுதுவார். என்னை அறிமுகப்படுத்தும் இந்த கட்டுரையிலும் முழுவதும் என்னைக் குறித்த தனிப்பட்ட கிசுகிசு பாணியிலான புனைவுகளை மட்டுமே எழுதியுள்ளார். “ஆளை ஆளை பார்க்கிறார்; ஆட்டத்தை பார்த்திடாமல் ஆளை ஆளை பார்க்கிறார்” என்று ஒரு பாட்டு உண்டு. அதுபோல என் விமர்சனங்களில் நான் கூறியுள்ள கருத்துக்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் ஒரு தனிநபர் தாக்குதலை மட்டுமே தொடுத்துள்ளார்.

அது மட்டுமல்ல. என்னுடைய பல கட்டுரைகளில் ஜெயமோகனுடன் நான் தத்துவார்த்தமாக, கருத்தியல் ரீதியாக எப்படி வேறுபடுகிறேன் என்பதை விளக்கியுள்ளேன். அவரை கருத்தியல் எதிரி என்றே குறிப்பிட்டு கெளரவித்து கண்டித்தும், விமர்சித்தும் வருகிறேன். இதெல்லாம் காலம் காலமாக பின்பற்றப்படும் அறிவுலக நடைமுறை என்பது என் கருத்து. மேலும் அது போல அவரை முன்வைத்து எழுதுவதன் மூலம் எதிர்நிலையில் என் கருத்துக்களை தொகுத்துக்கொள்ள முடிகிறது; வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ள முடிகிறது. என் கட்டுரைகளை படித்த பலரும் ஜெயமோகன் எழுத்திற்கான எதிர்வினை என்பதற்கு அப்பால் என் கட்டுரைகளில் பல சிந்தனைக்குரிய அம்சங்கள் அடங்கியுள்ளன என்பதைக் கூறியுள்ளார்கள். உதாரணமாக வேளச்சேரியில் வெளி மாநில தொழிலாளர்கள் ஒரு வங்கி கொள்ளை சம்பவத்தையொட்டி என்கெளண்டர் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்ட போது, ஜெயமோகன் காவல்துறைக்கும். அந்த நிகழ்வை கண்டிக்கும் மனித உரிமையாளர்களுக்கும் நடுநிலையில் நின்று காவலர் தரப்பில் உள்ள பிரச்சினைகளையும் கவனிக்கவேண்டும் என்று எழுதினார். நான் அத்தகைய நிலைபாடு எவ்வளவு தவறானது என்பதை விளக்கி மூன்றுவிதமான கட்டுரைகள் எழுதினேன். அவற்றில் அடங்கியிருந்த சிந்தனைகள் குறித்து பலர் என்னுடன் விவாதித்தார்கள். அதாவது ஜெயமோகனுக்கு மறுப்பு அல்லது கண்டனம் என்பதைக் கடந்து அதில் பல முக்கியமான கோட்பாடு சார்ந்த அம்சங்களை விவாதித்திருந்தேன் என்பதால் அந்த விவாதங்கள் நிகழ்ந்தன. எனவே ஜெயமோகன் எழுத்தை விமர்சிப்பது, கண்டிப்பது என்பது முகாந்திரமே தவிர என் எழுத்து என்றுமே என் சிந்தனைகளை தொகுத்து வெளிப்படுத்தும் முயற்சிகள்தான். என் கருத்தியல் நிலைகளுக்கு நேர் எதிராக அவர் எழுதும்போது அந்த எழுத்து என்னை எழுதத் தூண்டுகிறது. பெரும்பாலும் முகநூலில்தான் எழுதியுள்ளேன். சமீபகாலமாக உயிர்மை பத்திரிகை மற்றும் இணையதளத்தில் எழுதுகிறேன்.

அப்படி அவரை கருத்தியல் ரீதியாக ஏன் கணித்து மீண்டும் மீண்டும் அவர் எழுத்துக்களை விமர்சித்து எழுதுகிறேன் என்று கேட்பவர்களுக்கான விளக்கத்தை அவரே கட்டுரையின் துவக்கத்திலேயே தருகிறார். நான் அமெரிக்காவுக்கு ஆய்வு படிப்பிற்காக சென்றதைக் குறிப்பிடும் அவர் அதற்கான ஒரு வியத்தகு காரணத்தைத் தருகிறார்: “அதன்பின் அவர் அமெரிக்காவுக்கு ஆய்வுக்காகச் சென்றார். அமெரிக்காவின் பல்கலைக் கழகங்களில் ‘சமூகவியல்’ ‘மானுடவியல்’  ஆய்வுக்குச் செல்வதற்கான வழிமுறை என்பது இந்து- இந்திய எதிர்ப்பு அரசியல்.”  அது என்ன “இந்து-இந்திய எதிர்ப்பு அரசியல்”? இந்துத்துவ எதிர்ப்பு அரசியலைத்தான் அப்படி குறிப்பிடுகிறார். இந்துத்துவவாதிகள் எப்போதுமே அவர்களை எதிர்ப்பதை இந்து மதத்தை, இந்தியாவை எதிர்ப்பதாகத்தான் கூறுவார்கள்.

உதாரணமாக ஜெயமோகனின் நண்பர் அரவிந்தன் நீலகண்டனும், ராஜீவ் மல்ஹோத்திராவும் இணைந்து “உடையும் இந்தியா” என்ற நூலை எழுதினார்கள். அதில் குறிப்பாக திராவிடம் என்ற கருத்தாக்கம் அந்நிய சதியால் நிதியால் உருவானது என்று எழுதியிருந்தார்கள். ஆசிரியர் வீரமணி அதற்கு மறுப்பாக ஒரு நூல் எழுதினார். அதன் தலைப்பு “உடையும் இந்தியாவா? உடையும் இந்துத்துவாவா?” என்பதுதான். இந்த அரசியல் மிகவும் தெளிவாகத்தான் இருக்கிறது. இன்றைய இந்துத்துவ அரசியலின் மிகப்பெரிய பிரச்சினையே ஆரியர்கள் மத்திய ஆசிய பகுதியிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் என்று கூறப்படுவதும், அதற்குமுன்னால் இங்கே இருந்தவர்களுள் திராவிடர்களும் உண்டு என்பதும், சிந்துவெளி சின்னங்களுக்கும், தமிழ் தொல்லியல் தடயங்களில் காணப்படுபவற்றிற்கும் உள்ள தொடர்புகள் குறித்து பேசப்படுவதும்தான். ஆரிய, வேத கலாசாரத்தை இந்தியாவின் ஒற்றை மூலமாகக் கட்டமைப்பது அவர்களுக்குத் தேவையாக இருப்பதால் திராவிடம் என்ற பார்ப்பனீய எதிர்ப்பு கோட்பாடு, அரசியல் இந்திய-இந்து விரோதமாகத்தான் இருக்கும்.

இதை நான் இங்கு விளக்குவதற்குக் காரணம் நான் சிந்தனையாளனாக, ஆய்வாளனாக மாறுவதற்குக் காரணமாக இருந்த ஒரு சம்பவம் 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. அது “பெரியாரியம்: தத்துவத்தை வரையறுத்தலும், நடைபெறவேண்டிய விவாதமும்” என்ற கட்டுரையை நிறப்பிரிகை பத்திரிகையில் நான் எழுத நேர்ந்தது. அதுவரை இலக்கியம், திரைப்படச் சங்கங்கள், நவீன நாடகம் என பல்வேறு திசைகளில் கவனம் செலுத்திவந்த நான், ஆய்வாளனாகவும், எழுத்தாளனாகவும் மாற தீர்மானித்த தருணம். பெரியார் என்ற ஆகிருதி தோற்றுவித்த வியப்பும், அவரை வாசித்த அனுபவம் அளித்த உத்வேகமும்தான் என்னை துணிந்து ஆய்வுப்புலத்தை நோக்கி நகர்த்தியது. அதுவரை நான் ஏதோ சில வேர்மட்ட கலாசார நடவடிக்கைகளில்தான் என் வாழ்நாளை செலவழிக்க வேண்டும் என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன். ஜெயமோகன் புனைந்து கூறுவது போல என்னை “நக்சலைட் செயல்பாட்டாளரான பிராமணர்” என்று காட்டிக்கொண்டதில்லை. (அது எப்படி பிராமணணாகவும், நக்சலைட் செயல்பாட்டாளராகவும் ஒரே நேரத்தில் காட்டிக்கொள்வது? அத்துடன் குறை என்று பெயர் வைத்துக்கொண்டு பிறப்பை மறைக்கவேறு செய்யவேண்டும். ஏதோ ஸ்பை திரில்லர் படத்தில் நடித்தது போல இருக்கிறது). நான் பழகிய மார்க்ஸீய லெனினீய இயக்கத்தோழர்கள் இதைக் கேட்டால் சிரிப்பார்கள். எல்லா இடதுசாரி இயக்கங்களிலும் எனக்கு நண்பர்கள் இருந்தார்கள். எல்லோரிடமும் கோட்பாட்டு ரீதியாக விவாதித்திருக்கிறேன். மார்க்ஸிய லெனினீய இயக்கத் தோழர்கள் அதிக பட்சம் என்னை பெட்டி பூர்ஷ்வா சிந்தனையாளன், ஜனநாயக ஆதரவு சக்தி என்று வேண்டுமானால் கணித்திருப்பார்கள்.

நிறப்பிரிகை பத்திரிகையும், அ.மார்க்ஸ், ரவிகுமார், பொ.வேலுசாமி உள்ளிட்ட பல நண்பர்களின் தொடர்பும்தான் நான் எழுத முனைவதற்கான, தொடர்ந்து வாசிப்பதற்கான தூண்டுதல்களை தந்தது என்றால் மிகையாகாது. அதன் விளைவாகத்தான் பெரியாரியம் கட்டுரையை எழுத நேர்ந்தது. குறிப்பாக பெரியாரை விரிவாக வாசிப்பதற்கான தூண்டுதலை ஒரு ப்ரவொகேஷனாக தந்தது கோ.ராஜாராம். வாசிக்க உதவி செய்து பங்கேற்றது கிராமியன். கட்டுரையை என்னையே எழுதச்சொல்லி உற்சாகப் படுத்தியது அ.மார்க்ஸ். இப்படியாகத்தான் 1993 ஆம் ஆண்டு பெரியாரியம் கட்டுரை காரணமாக ஆய்வாளனாகவும், திராவிட இயக்க ஆதரவாளனாகவும் மாறினேன் என்று கூறவேண்டும். சிறுபத்திரிகை சூழலில் நண்பர்கள் எல்லோரும் அறிந்ததுதான் இது. அந்த சூழலில் புழங்கிக் கொண்டிருந்த ஜெயமோகனுக்கும் அவசியம் தெரிந்திருக்கும். மறந்தாரோ, மறைக்கிறாரோ, அவர் பிரச்சினை. ஆனால் “இந்து-இந்திய” எதிர்ப்பு என்று இந்துத்துவ எதிர்ப்பை சரியாகத்தான் சுட்டிக் காட்டுகிறார்.  எனக்கும், ஜெயமோகனுக்குமான தத்துவார்த்த, கருத்தியல் முரண்கள் துலக்கமடையும் புள்ளி பெரியார் என்றால் மிகையாகாது. என்னுடைய பெரியாரிய, திராவிட இயக்க ஆதரவான சிந்தனையுலக ஆய்வுலகச் செயல்பாட்டை பலவீனப்படுத்தும் ஆசையில்தான் ஜெயமோகன் என்னைக் குறித்து எழுதும்போதெல்லாம் என் ஜாதி அடையாளத்தை சுட்டிக்காட்டுவார். நான் அதுபோன்ற ஒரு செயலை யாருக்கும் செய்வதில்லை. என் பிறப்பு சார்ந்த அடையாளத்தை மறைப்பதும் இல்லை.

பெரியார் கட்டுரை எழுதியபின் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள சென்னைக்கு குடிபெயர்ந்தேன். அந்த கட்டுரை எழுதியவன் என்ற அடையாளத்துடன் எம்.எஸ்.எஸ்.பாண்டியனை சந்தித்தேன். அவருடைய நட்பும், வழிகாட்டுதலும் தொடர்ந்து வாசிக்கவும், கல்விப்புலம் நோக்கிய நகர்விற்கும் உதவியாக இருந்தது. ஒரு குறுகிய கால பகுதி நேர ஆய்வில் அவருடன் ஈடுபட்டேன்; தமிழ் சினிமா குறித்த கருத்தரங்கத்திற்கான பூர்வாங்க தயாரிப்பிற்கான ஆய்வு அது. அதன் பின்னர் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் டெவலப்மண்ட் ஆல்டர்நேடிவ்ஸ் என்ற நிறுவனத்தில் ஆண்தன்மை (masculinity) குறித்த ஆய்வில் ஜெயரஞ்சன், ஆனந்தி ஆகியோருடன் இணைந்துகொண்டேன். பலபேர் இணைந்து செய்த நிறுவன ரீதியான ஆய்வு அது. அதற்குக் காரணம் என்னுடைய பல்வேறு கவனிக்குவிப்பு கோட்பாட்டு புலங்களில் பாலியல் கட்டுமானமும் ஒன்று என்பதும், அது குறித்து நான் கணிசமாக வாசித்து வந்தேன் என்பதும்தான். இந்த ஆய்வு நடந்ததும், கட்டுரை எழுதியதும் நான் பட்டமேற்படிப்புக்கு செல்வதற்கு முன்னால். ஜெயமோகன் தரும் எல்லா தகவல்களும் பிழை என்பதுடன், உள்நோக்கம் கொண்டு செய்யும் திரிபுகளாகவும் இருப்பது வியப்பளிக்கவில்லை. அவர் இதை பலருக்கும் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறார்.

“Work, Caste, Competing Masculinities: Notes from a Tamil Village” என்ற கட்டுரை எஸ்.ஆனந்தி, ஜெ.ஜெயரஞ்சன், ராஜன் கிருஷ்ணன் என்ற பெயரில் நான் ஆகிய ஆகிய மூவரால் எழுதப்பட்டது, எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லியில் வெளியான ஆண்டு 2002. இந்த கட்டுரைக்கான கள ஆய்வு 1999-2001 ஆண்டுகளில் பலரால் மேற்கொள்ளப்பட்டது, நானும் ஒரு சில குழு விவாதங்களுக்கு சென்று அந்த ஊரில் உள்ள மக்களை சந்தித்தேன். கட்டுரை பல கட்டங்கள், பல வரைவுகளை தாண்டி நிறைவு செய்யப்பட்டது. எம்.எஸ்.எஸ்.பாண்டியன் இறுதி வடிவம் பெறுவதற்கு நிறைய ஆலோசனைகள் வழங்கினார். அவருடைய பங்கேற்பும் கணிசமாக இருந்தது. இந்த கட்டுரை வந்தபிறகு பேராசிரியர். லட்சுமணன் இதற்கு விரிவான மறுப்பு ஒன்றை அதே EPW பத்திரிகையில் எழுதினார். அவருடன் அதன்பின்னும் உரையாடலில்தான் இருக்கிறேன். கல்விப்புல ஆய்வுகளில் இதுபோன்ற மறுப்புகளும், மாற்றுக் கோணங்களும் முக்கியமானவை. என்னைப் பொறுத்தவரை ஆய்வுகளில் அறுதி உண்மைகளை காண்பது என்பது சாத்தியமல்ல. சில குறிப்பிட்ட அம்சங்கள் நம் பார்வைக்கு வரும்போது அவற்றைக் குறித்து நாம் எழுதுகிறோம். அது பிறருடைய சிந்தனைக்கும், தொடர்ந்த ஆய்விற்கும் பயன்பட வேண்டும் என்பதுதான் குறிக்கோள். இந்த கட்டுரை, அந்த கட்டுரைக்கு வந்த பேராசிரியர் லட்சுமணனின் மறுப்பு ஆகியவற்றை உள்ளடக்கி, அதன் பல அம்சங்களை ஏற்றுக்கொண்டு, நான் மேலும் சிந்தித்து வந்துள்ளேன். ரட்கர்ஸ் பல்கலைகழகத்து கருத்தரங்கம் ஒன்றில் “Touching Untouchability: Dalit Situations and Theoretical Horizons” என்ற ஒரு கட்டுரையை வாசித்தேன். அது 2006 ஆம் ஆண்டு ஒரு நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. இப்படியாக கல்விப்புல செயல்பாடு என்பது தொடர் செயல்பாடாகத்தான் இருக்கும்.

ஜெயமோகனின் துண்டு துண்டாக மேற்கோள்களைப் போட்டு விமர்சிக்கும் போக்கு தவறானது என்றாலும், கட்டுரையை குறித்து ஒரு சில வார்த்தைகள் கூறுவது தவறில்லை. நாங்கள் மாஸ்குலினிடி என்ற கோணத்தை முதன்மைப்படுத்தி, எப்படி ஒரு தலித் இளைஞர் குழு ஆண்தன்மையை கட்டமைத்துக் கொள்கிறது என்பதை எங்கள் ஆய்வில் கவனத்திற்கு வந்ததன் அடிப்படையில் எழுதினோம். அதை சமூக பொருளாதார மாற்றங்களின் பின்புலத்திலும், ஜாதி அதிகாரம் தகர்வதின் பின்புலத்திலும் வைத்து புரிந்துகொள்ள முயற்சி செய்தோம். பாலியல் ஆய்வுகளில் இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்கள் அதாவது ஆண்/தலித்/வர்க்கம், பெண்/ஜாதி/வர்க்கம் ஆகியவை பலவிதமாக வெட்டுத் தோற்றங்கள் கொள்வதை intersectionality என்று குறிக்கிறார்கள். ஆண்தன்மையை விமர்சித்தால் அது தலித் இளைஞர்களை விமர்சிப்பதாகத் தோன்றும். மேலும் ஒரு குறிப்பிட்ட குழுவினரிடம் காணப்பட்டஅம்சங்களை எழுதுவது ஏதோ ஒட்டுமொத்த சமூகத்தை குறித்தும் எழுதிவிட்டதுபோலும் வாசிக்கப்படுகிறது. கத்திமேல் நடப்பதுதான் இது. முழுவதும் மாஸ்குலினிடி, அதாவது ஆண் என்ற பாலியல் கட்டுமானம் குறித்த சிந்தனைகளின் பின்புலத்தில்தான் இந்த கட்டுரையின் பிரச்சினைப்பாட்டை புரிந்துகொள்ள முடியும். அதிகாரம் பெறுதலின் வடிவம் ஏன் ஆண்தன்மை கொள்கிறது என்ற கேள்வியாகவே இதை புரிந்துகொள்வது நலம்பயக்கும்.

உதாரணமாக சமீபத்தில் “Modi & a Beer” என்ற குறும்படம் ஒன்று ரஞ்சித்தின் நீலம் அமைப்பின் படமாக யூடியூபில் வெளியாகியிருந்தது. அதில் ஒரு பார்ப்பன பெண்ணும், பிற்படுத்தப்பட்ட சமூக ஆணும் காதலர்களாக ஒரு பாருக்கு செல்வார்கள். அவர்கள் திருமணத்தைக் குறித்து பேசுவார்கள். அந்தப் பெண் சங்கிகள் போல “தலித்துகளை நீங்கள்தான் வன்முறைக்கு ஆட்படுத்துகிறீர்கள்; நாங்கள் எந்த வன்முறைக்கும் போனதில்லை” என்று பார்ப்பனீய மீட்புவாதம் பேசுவார். விவாதத்தின் போக்கில் அந்த இளைஞன் ஆணாதிக்க மனோபாவத்தில் அந்த பெண்ணின் நடத்தையை விமர்சித்துப் பேசி விடுவான். அந்த பெண் உறவை முறித்துக்கொண்டு சென்றுவிடுவார். பல நுட்பமான குறியீடுகளைக் கொண்ட இந்த படம் நம் சமூக முரண்களின் பன்முகத்தன்மையை சுட்டிக்காட்டுவதாக உள்ளது. குறிப்பாக ஆண்தன்மை, ஆணாதிக்கம் என்று வந்துவிட்டால் எல்லா சமூக அடையாளங்களுமே பிரச்சினைக்குரிய அம்சங்களை கொண்டவைதான். ஒவ்வொரு சமூகத்திலும் ஆண்தன்மை கட்டமைப்பு பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக நிகழ்கிறது. தொடர்ந்து விவாதிக்கப்பட வேண்டிய அம்சம் இது.

தன் சுயத்தை உறுதிபட கட்டமைத்துக்கொள்வது என்ற ஆதிக்க எதிர்ப்பு நடைமுறையில் ஆண்தன்மை என்பதும் மையப்படத்தான் செய்கிறது. அதன் சில அம்சங்களை கள ஆய்வில் கண்ணுற்றதால் அவற்றை சுட்டிக்காட்டி எழுத நினைத்தோம். ஆனால் கட்டுரையை வாசித்த சிலர் நாங்கள் தலித் இளைஞர்களை பொதுமைப்படுத்தி குற்றம் சாட்டுவதாக நினைத்துவிட்டார்கள். அப்படி வாசிப்பது பயனற்றது, பிழையான முடிவுகளுக்கு இட்டுச்செல்வது. ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட சூழலில், ஆண்தன்மை பெறும் வடிவம் குறித்து விவாதிப்பதுதான் எங்கள் நோக்கமே தவிர, தலித் இளைஞர்களை பொதுமைப்படுத்தி வன்முறையாளர்கள் என்று சித்தரிப்பதல்ல. ஜெயமோகன் masculinity என்ற வார்த்தையையே ஆண்திமிர் என்று மொழிபெயர்க்கிறார். மேலும் entice என்ற வார்த்தையை தவறான பொருளை குறிப்பதாகக் கூறுகிறார். கவர்வது, வசீகரிப்பது, மயக்குவது எல்லாம் காதலில் ஒரு அங்கம்தானே. அதெல்லாம் காதல் செய்வதன் வடிவங்களே தவிர நாடகக் காதல் அல்ல. உண்மையான சத்தியமான காதலிலும் இந்த அம்சங்கள் உண்டு. கண்ணோடு கண் நோக்குவதும், தோற்றமும், நடையுடை பாவனைகளும் காதலின் முக்கிய அம்சங்கள். காலம் காலமாக நிலவிய ஜாதீய ஒடுக்குமுறையை மறுத்து சுய உருவாக்கம் செய்யும்போது அதில் ஆண்தன்மையை ஆற்றல் மிக்கதாக கட்டமைப்பது எப்படி இடம் பெறுகிறது என்பதையே நாங்கள் பரிசீலிக்க விரும்பினோம். இதில் ஜாதி மறுப்புக் காதலர்களை இழிவு படுத்தும் நோக்கம் எதுவும் கிடையாது. காதல் கதைகள் எல்லாமே இனிமையானவை அல்ல; அது ஏற்படுத்தும் மன அழுத்தங்களும், விரும்பத்தகாத விளைவுகளும் எத்தனையோ. கட்டுரையை அதன் முழு வடிவில் படித்து விமர்சிப்பவர்களுடன் உரையாடுவதில் எனக்கு தயக்கம் எதுவும் இல்லை. ஆனால் அதை திரிபு வேலை செய்யும் ஜெயமோகனுக்காக செய்ய வேண்டியதில்லை. முழுமையாக கட்டுரையை படித்து விமர்சித்து எழுதும் யாருடனும் விவாதிக்கலாம். அதன் நிறை, குறைகளை பொறுமையாக விவாதிப்பதில் எந்த மனத்தடையும் எனக்கு இல்லை. விமர்சனங்களை ஏற்பதும், நம் எழுத்துக்களை சுய விமர்சனத்துடன் மீள் பரிசீலனை செய்வதும் இன்றியமையாத அறிவுலகப் பண்புகள். இன்றைய நிலையில் அந்த கட்டுரை எழுதப்பட்டால் அது மிகவும் மாறுப்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு. இனவரைவியல் ஆய்வின் அடிப்படையில் கட்டுரை எழுதுவதில் பல சிக்கல்கள் உள்ளன. அந்த முறையையில் தொடர்பான பிரச்சினைகளையும் சேர்த்துதான் சிந்திக்க வேண்டும். அது குறித்தும் வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுவேன்.

எம்.எஸ்.எஸ்.பாண்டியன், ஆனந்தி, ஜெயரஞ்சன், நான் ஆகிய யாருமே அந்த ஒரே ஒரு கட்டுரையை மட்டும் எழுதியவர்கள் அல்ல. அதற்கு முன்னும் பின்னும் அரசியல் குறித்தும், ஜாதீயக் கட்டுமானத்தின் பிரச்சினைகள் குறித்தும், தலித் ஒடுக்குமுறை குறித்தும் தொடர்ந்து எழுதி வந்துள்ளோம். பேசி வந்துள்ளோம். அவை பல அச்சில் வெளியாகியுள்ளன; பொதுக்களத்தில் இருக்கின்றன. நான் பொதுவாக நல்லவன் என்று நிரூபிக்க மெனக்கெடுவதில்லை. சமூகம் சீர்தூக்கிப் பார்த்து புரிந்துகொள்ளும் என்ற நம்பிக்கையில்தான் இயங்குவேன். உதாரணமாக இளவரசன் கொலையுண்டபோது முகநூலில் நிறைய பதிவுகளைச் செய்தேன். ஆங்கிலத்தில் “ILAVARASAN: AT A DEADLY NEW JUNCTION OF CASTE AND ELECTORAL POLITICS” என்ற கட்டுரையை எழுதினேன். இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. இந்த தலைப்பை கூகுளில் கட் அண்ட் பேஸ்ட் செய்யவும். அப்போதும் ஒரு நண்பர் தலித்துகளுக்கும், இடைநிலை சாதியினருக்கும் மோதல் அதிகரிக்கும்போது பார்ப்பனர்கள் ஏன் மகிழ்கிறார்கள் என்று என்னை குத்திக்காட்டுவதுபோல முகநூலில் எழுதினார். நம் சமூகத்தின் முரண்கள் கடுமையானவை. தொடர்ந்து மற்றமையை மதித்து உரையாடும்போதுதான் மெள்ள மெள்ள நாம் புதிய சிந்தனை வெளியை, விமர்சன சிந்தனையை மீட்டெடுக்க முடியும்.

பார்ப்பனரல்லாத ஜாதிகளை, தலித்தல்லாத ஜாதிகளாக தலித் பார்வையிலிருந்து விமர்சிக்கும்போது பல புதிய கோணங்களும், பிரச்சினைகளும் எழுகின்றன. இவற்றைக் குறித்து நான் “பார்ப்பனரல்லாதோரும், தலித் அல்லாதோரும்: இரண்டு திரைப்படங்களும், ஒரு நூலும்” என்ற கட்டுரையை உயிர்மை இதழில் எழுதியுள்ளேன். என்னுடைய “எதிர்புரட்சியின் காலம்” என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. எதற்காக சொல்கிறேன் என்றால் தலித் ஒடுக்குமுறை குறித்து பல்வேறு கோணங்களில் தொடர்ந்து எழுதி வருவதையும் சுட்டிக்காட்டத்தான். இடைநிலை ஜாதிகளுக்கும், தலித் தொகுதிகளுக்கும் உள்ள முரணை, திராவிட அரசியலுக்கும் தலித் அரசியலுக்கும் உள்ள முரணாக சித்தரிக்க இந்துத்துவ சக்திகள் தொடர்ந்து முயல்வதையும், பார்ப்பனீய மீட்பு வாத சக்திகள் அதற்குத் துணைபோவதையும் விவாதிக்கத்தான் வேண்டும். சமூக அரசியல் பிரச்சினைகளை விவாதிப்பதில் ஆயாசம் கொள்ள முடியாது.

எம்.எஸ்.எஸ்.பாண்டியன் இன்று நம்மிடையே இல்லாததால் அவர் குறித்து சில வார்த்தைகள் அவரை அறியாதோருக்காக கூற வேண்டி உள்ளது. பாமாவின் நாவல், ரவிகுமார், ராஜ்கெளதமன் விமர்சனங்கள் என தலித் எழுத்துக்களை சர்வதேச கவனத்திற்குக் கொண்டு சென்றவர் பாண்டியன். அவருடைய “Brahmin and Non Brahmin: Genealogies of Tamil Political Present” என்ற நூலின் இறுதிப்பகுதியில் எப்படி பார்ப்பனரல்லோதார் என்ற அடையாளம் தோன்றுவதற்கான வரலாற்று நியாயங்கள் இருந்ததோ, அதே போன்ற வரலாற்று நியாயம் தலித் என்ற அரசியல் அடையாளத்திற்கும் உண்டு என அழுத்தம் திருத்தமாக எழுதியவர். ஆனால் அதெல்லாம் நூலை முழுமையாகப் படித்தால்தான் புரியும். அவதூறு செய்வதற்கு எதையும் வாசிக்க வேண்டிய அவசியமில்லை.

நாடக க் காதல் என்று ராமதாஸ் கூறியதற்கும், தலித்துகளுக்கு எதிரான வன்முறைக்கும், ஆணவக் கொலைகளுக்கும் எங்கள் EPW கட்டுரை காரணம், தூண்டுதல் என்பது வக்கிரமான, மிகையான சித்தரிப்பு என்பதை சமூக அரசியல் வரலாறு தெரிந்த யாரும் புரிந்துகொள்வார்கள். சமூக மாற்றம் என்பது பல்வேறு முரண்களைக் கொண்ட பிரம்மாண்டமான வரலாற்றுத் தொடர் நிகழ்வு. மானுடவியல் ஆய்வு முயற்சிகள் ஓடும் நீரில் ஒரு கை நீரென ஒரு தருணத்தில் காணக்கிடைப்பதை வைத்து சிந்திப்பது.

ஜெயமோகன் ஒரு முறை நள்ளிரவில் என்னை ஒரு நெடுஞ்சாலை ஓர பேருந்து நிறுத்தத்தில் சந்தித்ததை நினைவுகூர்ந்துள்ளார். எனக்குமே எதிர்பாராத  இனிமையான சந்திப்பாகத்தான் அது இருந்தது. என் நினைவில் தங்கியுள்ளபடி நட்பாகவே பேசிக்கொண்டோம். அந்த சந்திப்பு நிகழ்ந்த ஆண்டு 2010. அப்போதும் நான் தலித் மக்கள் தொகுதிகள் குறித்த கள ஆய்வில்தான் இருந்தேன். ஆனால் வேறு ஆய்வு. பொருளாதார முன்னேற்றத்தில் தலித் மக்கள் எப்படி விடுபட்டுப் போகிறார்கள் என்பதை பல்வேறு கோணங்களில் பலரும் ஆராயும் ஒரு ஆய்வுப் பணி அது. அதன் முடிவில் நான் எழுதிய கட்டுரையும் ஜெயமோகனுக்கு நிச்சயம் பிடிக்காது. தலித் கிறிஸ்துவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது தவறானது என்பதை விளக்கும் கட்டுரை அது. Caste and Religion in the Age of the Nation State: Certain Polemical Blinders and Dalit Situations என்பது அதன் தலைப்பு. இணையத்தில் யாரும் வாசிக்கக் கிடைக்கும். இந்த தலைப்பை கூகுளில் கட் அண்ட் பேஸ்ட் செய்யவும். அதிலும் பலருக்கு பல கருத்து மாறுபாடுகள் தோன்றலாம். நிச்சயம் அவற்றை செவிமடுக்கவும், அதிலிருந்து பயிலவும் தயாராக இருப்பேன்.

அந்த ஒரு EPW கட்டுரையை சுட்டிக்காட்டிவிட்டதால், அவர் எழுத்தைக் குறித்த என்னுடைய விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்துவிட்டதாக ஜெயமோகன் நினைக்கலாம். இது ஒரு திசைதிருப்பல் என்றுதான் நான் கருதுகிறேன். எந்த விவாதமும் என்னைப் பொறுத்தவரை தனிநபர்களுக்கு இடையில் நடப்பதல்ல. தத்துவ நோக்குகளுக்கும், கருத்தியல்களுக்கும் நடக்கும் விவாதம்தான் அது. ஜெயமோகன் அவர் எழுத்துக்களை குறித்த விமர்சனத்தையும் எதிர்கொள்ளப் பழகுவதுதான் ஆரோக்கியமானது.