நூல் - பெண் தெய்வ வழிபாடு - தோற்றமும் வளர்ச்சியும்
ஆசிரியர் - டாக்டர் மு.நளினி / டாக்டர் இரா.கலைக்கோவன்
பதிப்பகம் - டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்று மையம், சி-87, பத்தாம் குறுக்குத் தெரு, தில்லைநகர் (மேற்கு) திருச்சிராப்பள்ளி - 620017
விலை - ரூ.120/=
(புத்தகத்தைப் பெற விழைவோர் புத்தகத் தொகையுடன் அஞ்சல் செலவிற்கென ரூபாய் 30 சேர்த்து வரைவோலையை (DD) மையத்தின் பெயரில் எடுத்து மைய முகவரிக்கு அனுப்பவும். காசோலைகள் எனில் வங்கிக் கழிவிற்கென ரூ.20 சேர்த்து அனுப்பவும்.)
"பெண் தெய்வ வழிபாடு - தோற்றமும் வளர்ச்சியும்" என்னும் ஆய்வு நூல் அண்மையில் தஞ்சையில் நடந்த முப்பெரும் விழாவில் திருச்சி மா.இராசமாணிக்கனார் வரலாற்று மையத்தால் வெளியிடப்பெற்றுள்ளது.
நூலில் மொத்தம் பத்து ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களில் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் பெண் தெய்வ வழிபாட்டின் தொடக்க நிலைகளையும் வளர்ச்சியையும் அதனைச் சார்ந்த முற்காலச் சிற்பங்களையும் ஆராயும் இரண்டு கட்டுரைகள் முதல் பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டு கட்டுரைகளுமே சிங்கப்பூர் உருத்திர காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக எழுதப்பெற்றதாக நூலாசிரியர் தெரிவிக்கிறார்.
நூலுக்குத் தலைப்பை வழங்கியிருக்கும் முதல் கட்டுரையான பெண் தெய்வ வழிபாடு நூலுக்கே மகுடமாகவும் அமைந்துள்ளது. தாய் தெய்வ வழிபாட்டில் ஆரம்பிக்கும் சமுதாயத்தின் முதல்நிலைச் சிந்தனைகள், சங்ககால மக்களால் அறியப் பெற்ற கொற்றவை, உமையின் வரவு, சிலப்பதிகாரம் சுட்டும் பெண் தெய்வ வழிபாட்டுச் சிந்தனைகள், அன்னையர் எழுவரின்(சப்த மாதர்கள்) அறிமுகம் என்று நூல் பிழறாமல் தமிழ்ச் சமுதாயத்தால் போற்றப்பட்ட பெண் தெய்வங்களையும் அவற்றின் வழிபாட்டுக்கூறுகளையும் இலக்கியங்களின் துணைகொண்டு முன்வைக்கிறார் ஆசிரியர். இக்கட்டுரையில் காணப்படும் அரிய தரவுகளை அடுக்க ஆரம்பித்தால் கிட்டத்தட்ட மொத்தக் கட்டுரையையுமே முன்வைக்கவேண்டி வந்துவிடும் என்பதால் அந்த முயற்சியைக் கைவிடுகிறோம்.
முதல் படிப்பில் சர்வ சாதாரணமாகத் தெரியும் இதுபோன்ற இலக்கிய வரிகளில் நூலாசிரியரின் பார்வை படும்போது பிரமிக்கத்தக்க புதிய அர்த்தங்களும் பரிணாமங்களும் முகிழ்ப்பது ஆசிரியரின் ஆழ்ந்த அறிவாற்றலுக்குத் தக்க சான்றாகும். அதிலும் "மறையேத்தவே நிற்பாய்" என்னும் சிலம்பின் வேட்டுவ வரிகளுக்கு ஆசிரியர் கொடுக்கும் விளக்கம் - சற்று கொச்சையாகச் சொல்வதானால் - நெத்தியடி !
வெறும் தெய்வங்கள் அவற்றைச் சார்ந்த வழிபாட்டு நெறிகள் என்று மட்டும் ஆராயாமல் இந்தத் தெய்வங்களை வாழ்த்தி வணங்கிய சமுதாயம், அதில் ஏற்பட்டுக் கொண்டிருந்த மாற்றங்கள் என்று கட்டுரை படைக்கப்பட்டிருப்பதால் வரலாற்று நோக்கில் சமூகவியல் மாற்றங்களையும் புரிந்து கொள்கிறோம். குறிப்பாக ஆரியஞ்சார்ந்த சிந்தனைகள் தமிழ்ச்சமுதாயத்தில் நுழைந்த பாங்கினை ஆசிரியர் இலக்கிய வரிகளின் மூலம் முன்வைக்கும் பகுதிகள் மீண்டும் மீண்டும் படித்து ருசிக்கத் தக்கன.
கட்டுரையின் பிற்பகுதியில் காளியும் அன்னையர் எழுவர் வழிபாட்டு முறைகளும் ஆராயப் பெறுகின்றன. இதிலும் காளி முதலில் அன்னையர் எழுவருள் ஒருவராக இடம்பெற்று ("அறுவர்க்கு இளைய நங்கை" - சிலம்பு) பின்னர் தனக்குரிய இடத்தை சாமுண்டிக்கு தாரை வார்த்து விடுவது போன்ற அரிய செய்திகள் உண்டு. ஆசிரியரின் கோயில் மற்றும் படிமவியல் சார்ந்த பின்புலம் கட்டுரையின் தரவுகளுக்குப் பெரியதொரு பலத்தைத் தருகிறது.
மேற்கொண்டு இக்கட்டுரையில் உள்ள பற்பல செய்திகளைப் பற்றி எழுதத் தோன்றினாலும் நூலில் உள்ள பிற கட்டுரைகளைப் பற்றிப் பேச வேண்டுமென்பதால் மேலே நகர்கிறோம்.
பனைமலை தலகிரீசுவரர் கோயிலின் அரிய பல்லவர்கால ஓவியத்தை அட்டையில் தாங்கி நிற்கும் பெண் தெய்வ வழிபாடு புத்தகம்
இரண்டாவது கட்டுரையான "பெண் தெய்வங்களின் தொன்மையான சிற்பங்கள்" என்னும் கட்டுரையை முதல் கட்டுரைச் சிந்தனைகளின் தொடர்ச்சியாகவே கொள்ளலாம். இக்கட்டுரையில் தமிழகமெங்கிலுமுள்ள பண்டைய கோயில்களின் இடம்பெற்றுள்ள பெண் தெய்வங்களின் தொன்மையான சிற்பங்கள் ஈண்டு விளக்கப்படுகின்றன. பல்லவர் சிற்பத்தில் முதன் முதலாக உமை அறிமுகமாகும் இடம், துர்க்கையாக மாற்றம் பெற்ற கொற்றவை முதன்முதலில் தோன்றும் மகேந்திரர் காலக் குடைவரை, அன்னையர் எழுவரின் தொல் சிற்பங்கள் என்று இக்கட்டுரையும் முந்தைய கட்டுரைக்குக் குறையாத விறுவிறுப்புடனே செல்கிறது. நாடெங்கிலும் பராமரிப்பின்றிக் கிடக்கும் பழங்காலக் கோயில்களின் சிற்பங்களை சிரமம் பாராது ஆசிரியர்கள் நாட்கணக்கில் மாதக்கணக்கில் அலைந்து திரிந்து ஆராய்ந்திருப்பது கட்டுரையின் ஒவ்வொரு பக்கத்திலும் தெளிவாகும் உண்மையாகும். பல்லவர் காலச் சிற்பங்களோடு பாண்டியர் மற்றும் முத்தரையர் காலப் பெண் சிற்ப வடிவங்களும் ஆராயப் பெற்றுள்ளன.
"தொன்மையான சிற்பங்கள்" என்று ஆய்வு அமைந்துவிட்டதால் சோழர்காலப் பெண் தெய்வச் சிற்பங்கள் ஆராயப்படவில்லை போலும். அற்புதமான கலைநுணுக்கத்தோடு பல்வேறு சோழர்காலக் கோயில்களில் இடம்பெற்றிருக்கும் பெண் தெய்வச் சிற்பங்கள் பற்றிய ஆய்வை ஆசிரியரிடமிருந்து விரைவில் எதிர்பார்ப்போம்.
புத்தகத்தில் கடைசியாக அமைந்திருந்தாலும் ஏறக்குறைய பெண் தெய்வ வழிபாடு கட்டுரையின் அணுகுமுறையுடனுடனே எழுதப்பட்டிருப்பதால், புத்தகத்தின் கடைசி இரண்டு கட்டுரைகளை அடுத்தபடியாக நோக்குவோம்.
ஒன்பதாவது கட்டுரையான "பிள்ளையார் வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும்" கட்டுரையை கிட்டத்தட்ட முதல் கட்டுரைக்கு ஈடாகச் சொல்லலாம். சங்க இலக்கியங்களிலும் சங்கம் மருவிய காலத்திலும்கூட இடம்பெறாமல் தேவார அருளாளர்கள் காலத்தில் அறிமுகமாகும் பிள்ளையார் காலம் செல்லச் செல்ல ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் அரசமரங்களின் கீழெல்லாம் இடம்பெறக்கூடிய அளவிற்கு இஷ்டதெய்வமாகிவிட்டது தமிழ்நாட்டின் மற்றுமொரு ஆச்சரியம்.
தமிழகத்தின் முதல் பிள்ளையாராக திருச்செங்காட்டங்குடிக்காரரை சொல்லிக்கொண்டிருக்கிறோமல்லவா ?
"அவர் முதல்வர் இல்லை சார் !" என்கிறார் நூலாசிரியர் மெதுவாக.
மதுரை / காரைக்குடி செல்லும் லாரி பஸ்களை தினந்தோறும் பத்திரமாகக் கொண்டுபோய்ச் சேர்க்கும் பிள்ளையார்பட்டிக்காரர்தான் தமிழகத்தில் இன்றைக்குக் கிடைக்கும் முற்காலப் பிள்ளையாராம்...இதற்குக் கல்வெட்டு ஆதாரமே உள்ளதாம் !(இதைக்கேட்டதும் நமக்கு ஒரு இனம்புரிதாத சந்தோஷமே ஏற்பட்டுவிட்டது....! ஏனெனில் பிள்ளையார்பட்டிக்காரர் நமக்கு மிகவும் வேண்டப்பட்டவர். காரைக்குடியில் பொறியியல் பட்டயக்கல்வி படிக்கும் காலத்தில் நமது அரைகுறை வழிபாட்டை ஏற்றுக்கொண்டு கடைசியில் போனால் போகிறதென்று ஒரு டிகிரியும் வாங்கிக்கொடுத்துவிட்டார்.. வரப்பிரசாதி !)
பத்தாவது கட்டுரையான "காலத்தால் முற்பட்ட பிள்ளையார் சிற்பங்கள்" பழைய பாண்டிய / முத்தரையர் குடைவரைப் பிள்ளையார்களை ஒரே வீச்சில் அலசி ஆராய்ந்துவிடுகிறது. இதிலும் நமது நேசத்திற்குரிய பிள்ளையார்பட்டிப் பிள்ளையாரைப் பற்றிய அரிய தரவுகள் உண்டு.
* பிள்ளையார்ப் பட்டிக் குடைவரை வலப்புறம் நீண்டது. அங்கு ஹரிஹரர், சிவலிங்கம் எல்லாம் உண்டு. ஆனால் ஏனோ பிள்ளையாரை மட்டுமே வழிபடும் வகையில் கோயில் நிர்வாகம் அமைப்பை அமைத்துள்ளது. (பிள்ளையாருக்குப் பக்கத்தில் இத்தனை தெய்வ உருவங்கள் உண்டு என்பதே நமக்கு இப்போதுதான் தெரியவந்தது !)
* பிள்ளையார் கைகளில் இருப்பது படங்களில் காட்டப்படுவதுபோல் சிறிய லிங்கம் இல்லை - சிதைந்த மோதகம் !
* இவருடைய பெயர்கூட கற்பக விநாயகர் இல்லையாம் - தேசிவிநாயகப் பிள்ளையாராம் ! அடக் கடவுளே !
மேற்கண்ட கட்டுரைகளைப் படிப்பவர்கள் கையோடு கடைசிப் பக்கங்களையும் புரட்டி அங்குள்ள அரிய புகைப்படங்களையும் ஒரே மூச்சில் பார்த்துவிட்டு வருவது நலம். அதிலும் இராஜசிம்மேசுவரம் துர்க்கை, தக்கோலம் ஜலநாதீசுவரம் துர்க்கை, செவல்பட்டி (குழந்தைப்) பிள்ளையார் முதலியோரை பார்த்துக்கொண்டே இருக்கலாம். (எவரைப் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் குன்றத்தூர் சாமுண்டியை மட்டும் தப்பித்தவறி பார்த்து விடவேண்டாம் - இராத்திரி தூக்கம் வராது.... படு பயங்கர உருவம் !)
சரி, ஒன்று இரண்டு மற்றும் ஒன்பது பத்து கட்டுரைகளைப் பற்றிப் பேசியாயிற்று. மீதமிருக்கும் ஆறு கட்டுரைகளை சற்று நோக்குவோம்.
மூன்றாவது கட்டுரையாக அமையும் கல்வெட்டறிக்கைகள் பற்றிய கட்டுரை, இதுவரை மத்திய தொல்லியல் அளவீட்டுத் துறையினரால் பதிப்பிக்கப்பட்டிருக்கும் South Indian Inscriptions மற்றும் Annual Report on Epigraphy பற்றிய தகவல்களை ஆதியோடந்தமாக விரித்துரைக்கிறது. குறிப்பாக கல்வெட்டுத்துறை ஆங்கிலேய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட புதிதில் அதன் முதல் தென்னிந்திய ஆய்வாளராகப் பொறுப்பேற்ற ஹூல்ஷின் பணிகளையும் அவரைத் தொடர்ந்து வந்த வெங்கையா, கிருஷ்ண சாஸ்திரி முதலானோரின் அரும்பெரும் பணிகளையும் முன்வைக்கிறது.
பராமரிப்பு என்னும் தலைப்பில் இவ்வறிக்கைகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் செய்திகள் இவ்வறிஞர்கள் பல்வேறு கோயில்களில் கல்வெட்டுக்களை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகளை தெளிவாக்குகின்றன. அவர்தம் எச்சரிக்கைகளையும் மீறி கல்வெட்டுக்களை இருந்த இடம் தெரியாமல் அழித்த திருப்பணியாளரை வையத் தகுந்த வார்த்தைகளை சென்னையின் மகத்தான பரிபாஷையில்தான் தேடவேண்டும்.
மாதிரிக்கு வெங்கையாவின் வேண்டுகோள் ஒன்றை கட்டுரையிலிருந்து தருகிறோம் : "The Adhipuriswara temple at Thiruvorriyur is unique in not having come within the destructive purview of the Nattukkottai Chettis. The temple must, in my opinion, be protected scrupulously for any possible danger to it by vandelistic hands"
இதற்கு அடுத்ததாக அமைந்துள்ள இரு கட்டுரைகளும் வரலாற்றாய்வாளர்கள், வரலாறு பட்ட மேற்படிப்பு மாணவர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் கல்வெட்டுக்கள் மற்றும் கோயில் கட்டுமானங்களை ஆராயப்புகும்போது மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நெறிமுறைகளை முன்வைக்கிறது.
இக்கட்டுரைகளைப் பற்றி நூலாசிரியர் தமது முன்னுரையிலேயே அழகாகக் குறிப்பிட்டுள்ளார் :
"கல்வெட்டுக்களைப் படிக்கும் ஆர்வம் எல்லோருக்கும் உள்ளது. ஆனால் அதற்கான உழைப்பு பெரும்பாலோரிடத்தில் இல்லை. ஆர்வமும் உழைப்பும் உள்ளவருக்கு சரியான வழிகாட்டுதல் கிடைப்பதில்லை. இக்குறையை அகற்றவே கல்வெட்டுக்கள் தேடல் தெளிதல் பதிப்பித்தல் கட்டுரை வெளியிடப் பெற்றது"
"கோயிற்கலை ஆய்வு நெறிமுறைகள் தொடக்கநிலை ஆய்வாளர்களுக்குப் பயன்படக்கூடிய வழிகாட்டல் கட்டுளை. கோயில்களைப் பற்றி ஆய்வு செய்யும் மாணவர்களுள் பெரும்பாலானோர் கோயிற்கலைகளைப் பற்றிய அடிப்படைத் தெளிவுகூட இல்லாமல் ஆய்வு முடித்துப் பட்டங்கள் பெறும் சூழ்நிலை தமிழ் நாட்டில் உள்ளது........கோயிற்கலைகளில் பயிற்சியூட்டத்தக்க அடிப்படை நூல்கள் தமிழிலோ ஆங்கிலத்திலோ இல்லாமை ஒரு பெருங்குறையே. இக்கட்டுரை அக்குறையை ஓரளவிற்கேனும் நீக்குமென்று நம்புகிறோம்.."
ஆறாவது கட்டுரையாக மலரும் "தலைப்பறை, மத்தளம், சிரட்டைக் கின்னரி" - பண்டைய இசைக்கருவிகள், கலைஞர்கள் பற்றிய அரிய தரவுகளை முன்வைக்கும் ஒரு அற்புதமான கட்டுரை. இதில் தலைப்பறை என்பது மட்டும் கருவியில்லை - பதவி ! மற்ற வாத்தியக்கலைஞர்களை வழிநடத்தும் மேலான பொறுப்பில் இருந்தவர்களே தலைப்பறையாக அழைக்கப்பட்டனர். இவர்களுக்குக் ஊதியமும் அதிகம் !
ஏழாவது மற்றும் எட்டாவது கட்டுரைகள் உருத்திர கோடீசுவரர் மற்றும் அரும்பாவூர்க் கோயில்கள் சம்மந்தமான விரிவான கள ஆய்வில் கிடைத்த கல்வெட்டுச் செய்திகளை உள்ளடக்கியவை. இவற்றை நேயர்களே படித்து இன்புறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மொத்தத்தில் "பெண் தெய்வ வழிபாடு" தமிழர் வாழ்வில், வரலாற்றில் சிறதளவேனும் ஆர்வமிருக்கக்கூடிய அனைவரும் படித்து சுவைத்து இன்புறவேண்டிய அரிய ஆய்வு நூல் என்பதில் ஐயமில்லை.