New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Tamil Grammar - தமிழ் இலக்கணம்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Tamil Grammar - தமிழ் இலக்கணம்
Permalink  
 


 Tamil Grammar - தமிழ் இலக்கணம்

 


ஒரு மொழிக்குச் சிறப்பை, அழகைக் கொடுப்பது இலக்கணம். உயிருள்ள எந்த மொழிக்கும் இலக்கணம் இன்றியமையாதது. மொழி சிதைந்து அழகு குன்றிச் சீர் கெட்ட நிலையை அடையாது காப்பது இலக்கணமாகும்.

இலக்கியமும் இலக்கணமும்

இலக்கியம் தாய்; இலக்கணம் சேய். இலக்கியம் தேமாங்கனி; இலக்கணம் தீஞ்சுவைச்சாறு. இலக்கியம் பெருவிளக்கு; இலக்கணம் அதன் ஒளி. இலக்கியம் எள்; இலக்கணம் எண்ணெய். இந்த உறவு முறையை-பிணைப்பு முறையை நம் முன்னோர் நன்கு அறிந்து தெளிந்திருந்தனர்.

இதனாலேயே,

`இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே
எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே
எள்ளினுள் எண்ணெய் எடுப்பது போல
இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம்.'

எனக் கூறிப் போந்தனர். எனவே, இலக்கியப் பெருந் தருவின் நிழலில் எழுந்து நிற்பதே இலக்கணம் என்பது பெறப்படும். இலக்கியமும் இலக்கணமும் வேறுபட்ட நிலையுடையன அல்ல; ஒருவழிப்பட்ட ஒற்றுமையுடையனவே ஆகும்.


இலக்கணத் தோற்றம்:

இலக்கியம் பலவாய்ப் பல்கிப் பெருகி வளரத் தலைப்படும் காலத்தில் மொழியினை ஒழுங்கு படுத்த எண்ணும் மூதறிவாளர் கண்ட முறையே இலக்கணமாகும். இவர்கள், தாம் வாழும் காலத்திற்கும் அதற்கு முன்பும் உள்ள மொழி வழக்கு அனைத்தையும் அறிந்து வகைப்படுத்திக் கூற முயல்வார்கள். இம்முயற்சியின் விளைவே இலக்கணத் தோற்றம் எனலாம். தொல்காப்பியர் முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி இலக்கணம் வகுத்தார் எனச் சிறப்புப் பாயிரம் செப்புகின்றது. பாணினிமுனிவர், வேதம் முதலிய வடமொழி நூல்களைக் கற்றுத் தேர்ந்து அவற்றின் சாரத்தைப் பிழிந்து பாணினியமாக வடித்துக் கொடுத்தார் என்று கூறுவர். எனவே நூல்கள் பல எழுந்த பின்பே நூல்களின் பண்பு நுவலும் இலக்கணங்களும் தோன்றியிருத்தல் வேண்டும். இதுகாறும் கூறியவற்றைக்கொண்டு இலக்கியங்களின் மொழியமைப்பைக் கொண்டு மட்டும் இலக்கணம் தோன்றியது என முடிவு கட்டி விடுதல் கூடாது. இலக்கணத் தோற்றும், இலக்கியத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதன்று. வழக்கு மொழியின் வாழ்வையும் வளத்தையும் மதித்து அதனையும் தழுவி ஒழுகும் உயர்வுடையது. இதனால்தான், தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம், `வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடித்' தொல்காப்பியம் தொகுக்கப் பெற்றது என அந்நூலின் இயல்பினை எடுத்துரைக்கின்றது. இலக்கணப் புலவர்கள் இலக்கிய அமைப்பினை மட்டும் தழுவி, உலக வழக்கினை உதறித் தள்ளிவிட வேண்டும் என்ற உள்ளம் படைத்தவர்கள் அல்லர். அவர்களது பரந்த நோக்கமெல்லாம் மொழி ஒரு திறப்பட்டுச் செல்ல வேண்டும் என்பதே. இதனால், அவர்கள், தம் காலங் கடந்த புலமையை ஒரு கட்டுக்குள் அடக்கிக் கொண்டு வாழாமல், இரு வேறு வழக்கின் இயல்பினையும் அறிந்து ஏற்பன ஏற்றுத் தள்ளுவன தள்ளி இலக்கணப் படைப்புக்களை ஈந்துள்ளார்கள்.


இலக்கணம் - சொல்லாராய்ச்சி

இலக்கணம் என்னும் சொல், லக்ஷணம் என்னும் வடமொழிச் சொல்லின் சிதைவு என்பர். ஆனால் வடமொழியில் நாம் கருதும் இலக்கணத்தை லக்ஷணம் என்று சொல்வதில்லை. வியாகரணம், சப்த சாஸ்திரம் என்று கூறுவார்கள். இதனால் இலக்கணம் என்னும் சொல், லக்ஷணம் என்பதன் சிதைவு என்பது பொருந்தாது. இலக்கு என்னும் தமிழ்ச்சொல், அணம் என்னும் விகுதிபெற்று இலக்கணம் என ஆயிற்று என்று கோடலே பொருந்தும். இச்சொல் சிறந்த தமிழ்ச்சொல்லே; இலக்கணம் என்ற சொல்லினை முதன் முதல் வழங்கியவர் தொல்காப்பியனாரே ஆவர். இவர், இச்சொல்லினை, `பல பொருளை உய்த்துணர்ந்து அவற்றின் இயல்பினை உள்ளவாறு அறிவித்தற்குக் காட்டப்படும் வரையறை' என்ற பொருளிலேயே ஆட்சி செய்துள்ளார். சிலர், புலம் என்னும் சொல், தமிழ் இலக்கணத்தைக் குறிக்கும் என்பர். இதற்குச்சான்றாகப் `புலம் தொகுத்தோனே போக்கறுபனுவல்' என்னும் பனம்பாரனார் கூற்றைக் காட்டுவர். வேறு சிலர், இயல் என்பது இலக்கணத்தினைக் குறிக்கும் தமிழ்ச்சொல் என்பர்.


இலக்கணத்தால் ஏற்படும் நன்மை

இலக்கணத்தை ஏன் படிக்க வேண்டும்? அதனால் ஏற்படும் நன்மை என்ன? என்று இன்று சிலர் கேட்க முற்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஏற்ற விடையினை அளிக்க வேண்டியது நம் பொறுப்பாகும்.


இலக்கணத்தால் என்ன நன்மை என்பதற்கு ஆறுமுக நாவலர் அவர்கள், பிழையறப் பேசவும் எழுதவும் உதவுவது இலக்கணம் என அழகாக விடை கூறியுள்ளார்கள். மனிதன், தன் எண்ணத்தினை வெளிப்படுத்தப் பயன்படும் கருவிகளுள் எழுத்தும் பேச்சும் தலைசிறந்தன. இவ்விரண்டுமின்றேல் வாழ்வேது? வளர்ச்சியேது? இத்தகைய வாழ்வோடு இணைந்த பேச்சினையும் எழுத்தினையும் ஒழுங்குபடுத்தித் தரும் சாதனமாக இலக்கணம் இலங்குகின்றது.

எழுத உதவுவதோடு படிக்கவும், உதவுவது இலக்கணமாகும். இலக்கண அறிவு இன்றேல் ஒரு நூலையும் நாம் படித்தல் இயலாது. இந்த முடிபு, தமிழினைத் தாய் மொழியாகக் கொண்ட நமக்கு அவ்வளவு எளிதில் புலப்படாது. ஏனெனில், தமிழ், வழக்கில் இருக்கும் வளமான மொழி. ஆனால் வடமொழி, இலத்தீன், கீரீக் முதலியவற்றில் உள்ள நூல்களை உணர வேண்டுமாயின், இலக்கண அறிவு மிகமிக இன்றியமையாததாகும். அப்பொழுதுதான், அம்மொழிகளை நாம் புரிந்து கொள்ள முடியும்.

பொருளினைத் தெளிவாக அறிந்து கொள்ளுதற்கு உரியதும் இலக்கணம் ஆகும். இம்முறையில் இலக்கணம் செய்யுள் வழக்குக்கு மட்டுமன்று; பேச்சு வழக்குக்கும் இன்றியமையாதது என்பதனை அறிதல் வேண்டும். உதாரணமாக ஒன்றனைக் காண்போம். வாழைபழம் என்பதற்கும் வாழைப் பழம் என்பதற்கும் வேறுபாடு உண்டு. வாழைபழம் என்பது, வாழையும் பழமும் என உம்மைத் தொகையாகப் பொருள்படும். வாழைப்பழம் என்பது வாழையினது பழம் என வேற்றுமைத் தொகையாகப் பொருள்படும். இந்த வேறுபாட்டுணர்ச்சியை அறிந்து கொள்ள இலக்கணம் உதவுகின்றது; நன்மை செய்கின்றது.

மொழியினைக் கட்டிக்காத்துச் செம்மொழியாக்கும் பேராற்றலும் இலக்கணத்திற்கு உண்டு. ஒரு மொழி, பல்வேறு கிளை மொழிகளாகப் பிரிந்து போய்விடாமல், ஒருமொழி என்ற கூட்டுக்குள் நிறுத்திவைக்க இலக்கணம் முயல்கிறது. இப்பணியில் இலக்கணம் மன்னவனைப் போல ஆட்சி செய்கிறது. தமிழைப் பேசுவோர் எங்கிருந்தாலும், எவ்வாறு பேசினாலும் எழுத்துலகில் ஒன்றுபட்டு நிற்கக் காண்கிறோம். பேச்சு மொழி புரியாவிடினும் எழுத்து மொழி இனிமை தரப் பார்க்கிறோம். இதற்குக் காரணம், எழுத்து மொழியில் ஏற்பட்ட ஒற்றுமையேயாகும். இவ்வொற்றுமை இலக்கணத்தால் விளைந்தது எனலாம். இலக்கணம் மட்டும் இல்லாதிருக்குமானால், இன்றிருக்கும் பேச்சுத்தமிழ், எத்துணையோ கிளைமொழிகளாகத் தனித்தனி புரிந்து விடும். இந்தப் பிரிவைத் தடுத்து, ஒற்றுமையை நிலை நிறுத்துவது இலக்கணமாகும். இக்கொள்கையினைச் சில மொழி நூலார்கள் ஒப்பமாட்டார்கள். பேச்சுத் தமிழுக்கும் இலக்கணம் கண்டு அதனையும் வளர்க்க வேண்டும் என்று கூறுவார்கள். இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் `பேச்சுத் தமிழ்க் காதல்' எத்தகையது என்பது புரியவில்லை. தமிழில், எழுத்துத் தமிழும் பேச்சுத் தமிழும் இடைவெளி கொண்டவனாய், இருவேறு மொழிகள் போன்றனவாய்ச் செல்லவில்லை. பெரும்பாலும் ஒற்றுமைப்பட்டே செல்கின்றன. மேலும் பேச்சுத் தமிழ், சார்ந்திருக்கும் இடத்தால் வேறுபாடு சிறிது அடைந்துள்ளது. இப்பேச்சுத் தமிழினை அப்படியே எழுதுதல் வேண்டும் என எண்ணி எழுதியவர்கள் ஏற்றம் பெறவில்லை; வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பேச்சுத் தமிழை வளர்த்து அதனால் பல கிளை மொழிகள் உருவாக மொழியியலார்கள் வழி வகுத்துக் கொடுத்து விடுதல் கூடாது.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard