பேராசிரியர் டி.என்.கணபதி எழுதிய ‘தமிழ்ச் சித்தர் மரபு’ என்கிற நூலை துணைக் கொண்டு பேசுகிறார் ஐயா பேச்சு வியாபாரி அவர்கள். அந்த நூல் முதலில் ஆங்கிலத்தில் வெளிவந்தது. 2004 இல் தமிழில் வந்தது. 2004 நூலுக்கு ஒருவர் அணிந்துரை எழுதியிருக்கிறார். அதில் அவர் சொல்கிறார்: “பொதுவாகச் சித்தர்களைப் பற்றி உயர்வாக ஒரு கருத்து இருந்தாலும் எதிர்கருத்தும் மிக வலுவாகவே சமூகத்தில் நிலவுகிறது. அவர்கள் நாத்திகர்கள், பிராமண எதிர்ப்பாளர்கள், வேத நெறியின் விரோதிகள் , முறை கேடான இரகசிய வழிபாடுகள் உடையவர்கள், சிற்றின்ப உலகியல் தேவைக்கு பேராற்றலை வீணடிப்பவர்கள், பயமுறுத்தும் பாங்கினர் என்று பலப்பல குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது உண்டு. இவற்றைத் தக்க ஆதாரங்களுடன் உடைத்தெறிகிறார் பேராசிரியர். சித்தர்கள் மரபு வேத நெறிக்கு எதிரானதல்ல, சடங்கு நெறிக்கு எதிரானது என்பதை நிறுவுகிறார்.”
இன்னொருவர் 2019 இல் ஒரு காணொளியில் பேசுகிறார்: “நான் சொன்னதுக்கு ஆதாரம் கேட்குறாங்க, நான் ஒரு சின்ன விஷயம் சொல்றேன். ஹ்ம்ம்ம் (மோட்டுவளையை பார்க்கிற பாவனை, யோசிக்கிறாராமாம்) சித்தர்கள் யாரு? அவர்கள் வேதத்தை ஒப்புக் கொண்டவர்களா? வேத மறுப்பாளர்களா? ஸ்ட்ரைட்டா நீங்க நல்லா யோசிச்சு பாருங்க. சித்தர்கள் வேதத்தை ஒத்துக் கொண்டிருந்தா அவங்க பாடும் போது இப்படி பாடுவாங்களா? ’சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே! வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ?’ இன்னும் சில பாடல்கள் என்னால சொல்லவே முடியாது அந்த அளவுக்கு சில பாடல்கள் சித்தர்கள் வேத மரபை கேலி செய்து பேசியிருக்காங்க. இன்னும் ஒரு படி மேல போய் ‘கோவிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா?’ நான் அந்த லெவலுக்கு நியாயப்படுத்தலை. நல்லா கவனிக்கணும். அவங்க என்னா நினைக்கிறாங்க ஒரு மனிதன் தனக்குள்ள இறைவனை உணரணுமே ஒழிய ஒரு கோயில் ஒரு பிம்பம் அப்படீன்னு போய் அதுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீங்கங்கிற கருத்தை பேசுறாங்க. யாரு ? சித்தர்கள். ‘சித்தர்களுக்கு வந்து சரியான பேரு என்ன தெரியுமா? ‘தமிழ் சித்தர் மரபு’ அப்படீங்கிற புத்தகத்துல பேராசிரியர் டி.என்.கணபதி எழுதுறாரு ‘கலகக்கார மரபு’ அப்படீங்கிறாரு. அவுங்க ரிபெல்ஸ் ரிவெல்யூஷனரீஸ் இப்ப எதுக்கு சித்தர்களை பத்தி பேசுறேன்னு யோசிக்கிறீங்களா (எள்ளல்)…அந்த சித்தர்களின் தலைவன் முருகப் பெருமான் சித்தநாதன். இப்ப வேதத்தை ஆதரிக்கிற ஒருவன் வேதத்தை எதிர்க்கிற மரபுக்கு தலைமை தாங்க முடியுமா? தமிழ்நாட்டு வழிபாடு சித்தர் வழிபாடு. அந்த சித்தர்களின் பெருந்தலைவனாகக் கருதப்படுகிறவன் முருகக் கடவுள்.’
காணொளியில் ‘வேதத்தை எதிர்க்கிற மரபு’ என்று சித்தர் மரபை அடையாளப்படுத்தி அதுதான் தமிழ் மரபு என்று சொல்லுகிற ஆசாமி யார் என்பதை சட்டென்று சொல்லிவிடுவீர்கள். வேறு யாருமில்லை. பேச்சு வியாபாரி சுகி.சிவமேதான். ஆனால் 2004 இல் பேரா.டி.என்.கணபதியின் ‘தமிழ்ச்சித்தர் நூல்’ அணிந்துரையில் சித்தர் மரபு வேதநெறிக்கு எதிரானதல்ல என்பதை பேராசிரியர் தக்க ஆதாரங்களுடன் உடைத்தெறிகிறார் என சிலாகித்தவர் யார் என்கிறீர்கள்? அதே அதே அதே சுகி.சிவமேதான்.
நாக்கு என்று மட்டுமில்லை, எழுதும் கையிலும் சிலருக்கு நரம்பிருப்பதில்லை. செல்வம் கொட்டுகிறதா இல்லையா? அது போதுமே. சான்ஸ் கிடைக்கும் என்றால் புகழ் கிடைக்குமென்றால் எப்படி என்றாலும் பேசலாம் எழுதலாம். யாருக்கும் வெட்கமில்லை.
சரி. உங்களுக்குத் தெரியுமா? ஆதி சங்கர பகவத்பாதர் சமஸ்கிருத இலக்கண மறுப்பாளர். ஆமாம்! நம் பேச்செழுத்து வியாபாரியின் தர்க்கத்தை அனுசரித்து சொன்னால் அப்படித்தான் சொல்ல வேண்டும். வேண்டுமென்றால் பாருங்களேன். ஆதி சங்கரர் ‘பஜ கோவிந்தத்தில்’ என்ன சொல்கிறார்? ‘ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே நஹி நஹி ரக்ஷதி டுக்ருஞ்கரணே’ என்கிறார். அதாவது இறுதி காலத்தில் வேர்த்துஇரைப்பு வந்தபோது வியாகரணம் வந்து உதவுமோ என கேட்கிறார். அப்போது அவர் இலக்கண மறுப்பாளராகத்தானே இருக்க வேண்டும்? ‘சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே! வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ?’ என்று சிவவாக்கியர் கேட்பதால் அவர் வேத மறுப்பாளர் ஆகிவிடுவார் என்றால் வியாகரணம் உதவுமா என்று கேட்கிற ஆதி சங்கரர் இலக்கண மறுப்பாளர் தானே? என்ன கொடுமை இது சரவணா? (ஒரிஜினல் சரவண பொய்கை சரவணனை சொன்னேன்)
சிவவாக்கியரை கொஞ்சம் ஆழ்ந்து படித்தாலும் தெரியும். அவர் வேதத்தை ’மறுக்க’வில்லை. வேத நெறியை எதிர்க்கவும் இல்லை. உள்ளர்த்தம் புரியாமல் அதனை உள்நோக்கிய ஆத்மானுபவத்துக்கான கருவியாக்காமல் செய்யாதே என்கிறார். ‘ஓதுகின்ற வேதம்எச்சில்’ என்கிறார். பார்த்தாயா வேதத்தை எச்சில் என்று சொல்லிவிட்டார் எப்படிப்பட்ட வேத மறுப்பாளர்! அடுத்த இரண்டாம் வரியில் மதியும் எச்சில் ஒளியும் எச்சில் என்கிறார். எனவே அவர் வேத மறுப்பாளர் மட்டுமல்ல. ஒளி மறுப்பாளரும் கூட என்று சொன்னால் எவ்வளவு அபத்தமோ என்று எழுதும் போதே, ’ஒளி என்றால் நெருப்பு. எச்சில் என்றால் நீர். எனவே ஆரிய ஒளியே திராவிட நீர்தான் என்று சிவவாக்கியர் சொல்லுகிறார்’ என்று அடுத்து எழுத்து வியாபாரி காணொளி படைப்பாரோ என்று மனம் திடுக்கிடாமல் இல்லை.
இன்னும் இரு வரிகளை எடுப்போம்:
‘விண்டவேதப் பொருளைஅன்றி வேறு கூற வகையிலாக்
கண்டகோயில் தெய்வம்என்று கையெடுப்ப தில்லையே.’
சிவவாக்கியர் வேத மறுப்பாளரென்றால் இந்த வரியை எப்படி பொருள் கொள்ளலாம்? வேதம் என்பதே கூட திரண்டு வந்த தூமையே என சொல்லும் அதே சிவவாக்கியர் ‘விண்பரந்த மந்திரம் வேதம்நான்கும் ஒன்றலோ’ என கூறுவதையும்,
‘சிந்துநீ தெளிவும்நீ சித்திமுத்தி தானும்நீ
விந்துநீ விளைவுநீ மேலதாய் வேதம்நீ
எந்தைநீ இறைவன்நீ என்னை ஆண்ட ஈசனே’
என்று வேதமாக ஈசனே இருப்பதை கூறுவதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும்.
ஒரு விஷயத்தை நம் பேச்செழுத்து வியாபாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். வேதமே தன்னை தானே பகடி செய்யும் தைரியம் கொண்ட நூல்தான். தன் தெய்வங்களை தானே கேள்வி கேட்கும் தைரியம் வேத ரிஷிகளுக்கு உண்டு. சாந்தோக்கிய உபநிடதத்திலும் அதை காணலாம். எனவே வேதத்தை கிண்டல் செய்வதும் சரி, வேதத்தை குறிப்பாக கர்ம காண்டத்தை ஒரு அக பயிற்சியாகக் கொள்ளாதிருப்பதையும் கண்டனம் செய்வதையும் சரி, வேத மறுப்பு என கொள்வது – மரபினை அரைகுறையாக தெரிந்து கொள்வதோ, அல்லது அரசியல் ஆதாயங்களுக்காகவோ அல்லது மதமாற்ற சக்திகளுக்கு துணை போக வேண்டுமென்றே திருட்டுத்தனம் செய்வதோதானே தவிர, உண்மை அல்ல. ஆழ்ந்த ஆராய்ச்சியும் அல்ல. வெறும் சீமான் தனமான மேடை ஆபாசம் மட்டும்தான் அது.
சரி இனி முருகருக்கே வருவோம். என்ன சொன்னார்? முருகன் சித்தர்களின் தலைவர் சார். எப்படி சார் அவர் வேத மறுப்பாளர்களுக்கு தலைவராக இருக்க முடியும்?
மகாபாரதத்தில் பீஷ்ம பர்வத்தில் ஒரு அழகான துதி உள்ளது. அர்ஜுனர், கிருஷ்ணரின் வழிகாட்டுதலினால், தேவியை துதிக்கிறார். அருமையான அந்த துதி ஒவ்வொரு இந்துவும் கட்டாயம் மனனம் செய்ய வேண்டிய துதி. அதன் தொடக்கம்:
’நமஸ்தே சித்த சேனானி ஆர்யே மந்தார வாசினி
குமாரி காளி காபாலி கபிலே கிருஷ்ண பிங்கலே …’
அன்னையின் பெயர் என்ன? சித்த சேனானி. அவள் சித்தர்களை சேனையாக கொண்டவள். அவள் ஆர்யை .. அந்த துதி பாடலில் அர்ஜுனன் சொல்கிறார். அவளது த்வஜம் என்ன தெரியுமா? அது மயில் தோகை பீலிகளால் ஆனது. அவள் யார்? அவள் ஸ்கந்த மாதா. கந்தனின் அன்னை. மட்டுமல்ல அவள் சாவித்ரி, சரஸ்வதி, வேத மாதா, வேதங்களின் அந்தராத்மாவாகவும் இருப்பவள் அவளே.
முருகனின் அன்னை சித்த சேனானியாகவும் வேதமாதாவாகவும் வேதத்தின் ஆத்மாகாவும் இருப்பாள் என்றால் முருகன் சித்த சேனனாகவும் சுப்ரமணியனாகவும் ஏன் இருக்க முடியாது? அதற்கு எதற்கு ஆரிய திராவிட இனவாதமும் அதன் ஒருங்கிணைப்பு என்கிற கதையும் வர வேண்டும்?
தான் தப்ப வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக தான் எழுதியதற்கு, அதுவும் அவர் தன்னை எவருடைய ‘வகுத்த மாணவன்’ என்று சொன்னாரோ அவருடைய நூலுக்கு எழுதிய அணிந்துரையில் தாம் எழுதிய கருத்துக்களுக்கு நேர் மாறாக கருத்துகளை ஏன் தன் ரசிகர்களிடம் பேச வேண்டும்? ஒரே துணிச்சல்தானே? தன்னுடைய ரசிகர் எவரும் தாம் குறிப்பிட்டு செல்கிற புத்தகத்தை வாங்கி படிக்கமாட்டார்கள் என்கிற ஆணவ திண்ணக்கம்தானே? அதாவது தன் ரசிகர்களின் அறியாமையை முதலீடாக்கி தம்மை அறிவுஜீவியாக்கும் இந்த ஒரு நிலை இந்த பேச்சு வியாபாரிக்கு தேவையா என்பதை அவர்தான் யோசிக்க வேண்டும். அது தன் சந்தை மதிப்பை குறைக்காது என்கிற துணிச்சலால் அதை குறித்து யோசிக்க வேண்டிய நேர்மையின் அவசியம் அவருக்கு இல்லை என்பது வேறு விசயம்.