New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாரதியாரின் ‘இயேசு கிறிஸ்து’ கவிதை


Guru

Status: Offline
Posts: 24778
Date:
பாரதியாரின் ‘இயேசு கிறிஸ்து’ கவிதை
Permalink  
 


பாரதியாரின் ‘இயேசு கிறிஸ்து’ கவிதை

February 1, 2019
By ஜடாயு

“ஹிந்து மத சாரம் அறிந்தவன் பாரதி அவன் சொல்லியிருக்கிறான் இயேசுவின் உயிர்த்தெழுதல் குறித்து” என்கிறார் ஒரு ஃபேஸ்புக் நண்பர். சும்மா மேம்போக்காக பாரதி பாடல்களைப் படித்த நினைவில் சொல்லப்படும் அபத்தமான, சாரமற்ற கூற்று இது.

இயேசு கிறிஸ்து என்று தலைப்பிட்ட மூன்று பாடல்கள் கொண்ட அக்கவிதையில் பாரதி சொல்லும் “உயிர்த்தெழுதல்” சமாசாரத்திற்கும் கிறிஸ்துவ மதக்கோட்பாட்டிற்கும் கிஞ்சித்தும் சம்பந்தமில்லை. உண்மையில் அந்தக் கவிதையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டு மாண்டு போவதையும் பின்பு உயிர்த்தெழுவதையும் முற்றிலும் இந்து தத்துவ சிந்தனைப் போக்கின் அடிப்படையில் குறியீட்டு ரீதியாக பாரதி re-interpret செய்கிறார் என்பதை அதை வாசிப்பவர்கள் எளிதாகவே உணர முடியும். கிறிஸ்தவர்கள் நம்புவதைப் போல அதை ஒரு வரலாற்று சம்பவமாகவோ அல்லது அதன்மூலம் இயேசு அனைவரது பாவங்களை ரத்தத்தால் கழுவியதாகவோ எல்லாம் பாரதி கருதவில்லை. சிலுவையில் அறைவது என்பது அகந்தையைக் கொல்லுதல் என்ற அளவிலேயே சித்தரிக்கிறார்.

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்,
எழுந்து யிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;
நேசமா மரியாமக்த லேநா
நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்.
தேசத் தீர்! இதன் உட்பொருள் கேளீர்:
தேவர் வந்து நமக்குட் புகுந்தே
நாசமின்றி நமை நித்தங் காப்பார்,
நம்அகந்தையை நாம்கொன்று விட்டால். (1)

கவிதை முழுவதும் மரியா மக்தலேனா (Mary Magdalene) என்ற பைபிள் கதாபாத்திரத்தை பாரதி கொண்டு வந்திருக்கிறார். பைபிளில் ஏற்கனவே உள்ளது தான் என்றாலும் அண்மைக்காலங்களில் டாவின்சி கோட் திரைப்படம் மூலம் தான் மரியா மக்தலேனா குறித்த பரவலான அறிதல் வெகுஜன அளவில் ஏற்பட்டது.

அன்புகாண் மரியா மக்தலேநா,
ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து;
முன்பு தீமை வடிவினைக் கொன்றால்
மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்;
பொன்பொலிந்த முகத்தினிற் கண்டே
போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை
அன்பெனும் மரியா மக்தலேநா
ஆஹ! சாலப் பெருங்களி யிஃதே. (2)

ஏசு சிலுவையில் அறையப் பட்டதை “தீமை வடிவினைக் கொல்லுதல்” என்று இந்தப் பாடலில் பாரதி கூறுகிறார். எந்தக் கிறிஸ்தவ மதப்பிரிவுக்காவது இந்தக் கருத்து ஏற்புடையதாகுமா என்ன?

உண்மை யென்ற சிலுவையிற் கட்டி
உணர்வை ஆணித் தவங்கொண் டடித்தால்,
வண்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து
வான மேனியில் அங்கு விளங்கும்
பெண்மைகாண் மரியா மக்த லேநா,
பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து.
நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்
நொடியி லிஃது பயின்றிட லாகும். (3)

The Passion of Christ போன்ற படங்களின் வாயிலாக சிலுவையில் அறைதல் என்ற காட்சியை ரத்தமும் சித்ரவதையும் வலியும் வன்முறையும் நிரம்பியதாக, உணர்ச்சிவசத்தை உண்டாக்குவதாக கிறிஸ்தவர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்துவருகின்றனர். ஆனால், பாரதி அது ஒரு குறியீடு மட்டுமே என்பதை மீண்டும் இந்தப் பாடலில் வலியுறுத்துகிறார். சிவபெருமான் திரிபுரங்களை எரித்த புராணத்தைக் குறித்து “முப்புரம் செற்றனன் என்பர் மூடர்கள்; முப்புரமாவது மும்மல காரியம்” என்று திருமூலர் கூறும் அதே வகையான விளக்கம் தான் இது. அத்துடன் மக்தலேநா – இயேசு இணையை பெண்மை – அறம் என்பதன் வாயிலாக பிரகிருதி – புருஷன் (சாங்கிய தரிசனம்), சிவ – சக்தி, சீன மதங்களின் யிங் – யாங் என்பது போன்ற ஒன்றாக பாரதி சித்தரிக்க முயல்கிறார். இத்தகைய குறியீட்டாக்கம் மூலமாக கிறிஸ்தவ மதத்தில் உள்ள மதமாற்ற/ஆக்கிரமிப்பு வெறித்தனத்தை கொஞ்சம் நீர்த்துப் போகச் செய்யலாம் என்று பாரதி கருதியிருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் கிறிஸ்தவ மதமாற்றம், கிறிஸ்தவ பள்ளிகள் செய்யும் கலாசார/பண்பாட்டு அழிப்பு ஆகியவை பற்றி மிகவும் தீவிரமாகவும் காட்டமாகவும் தனது கட்டுரைகளில் பாரதி எழுதியிருக்கிறார் (உதாரணமாக, மிஷன் பள்ளிகளை விலக்கி வைத்தல் என்ற இந்தக் கட்டுரை – https://goo.gl/wF6SRx).

சர்ச் அதிகாரபீடம், மதவெறி, ஆக்கிரப்பு, காலனியம் ஆகியவை அடங்கிய கிறிஸ்தவத்தின் கோர முகத்திலிருந்து இயேசு கிறிஸ்து என்ற ஆன்மீக ஞானியை மட்டும் தனியாகப் பிரித்தெடுக்கும் சாத்தியம் இருக்கிறது என்ற எண்ணம் கொண்டவர்களாக 19-20ம் நூற்றாண்டுகளின் பல இந்திய சிந்தனையாளர்களும், ஞானிகளும், ஆன்மீகவாதிகளும் இருந்துள்ளனர். ஸ்ரீராமகிருஷ்ணர், ஸ்ரீ ரமண மஹரிஷி, ஸ்ரீஅரவிந்தர் போன்றவர்களின் கருத்துக்களில் கூட இத்தகைய இழையைக் காணமுடியும். அதன் தாக்கமே இந்தப் பாரதி கவிதையிலும் உள்ளது. இவ்வாறான ஒருவகை நல்லெண்ணத்துடன் அவர்கள் முன்வைத்த கருத்துக்கள் உண்மையில் கிறிஸ்தவ மனநிலையில் பெரிய அளவில் எந்தவகையிலும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அதில் ஆச்சரியமே இல்லை. மாறாக, அப்பாவி இந்துக்களைக் குறிவைத்து செய்யப் படும் கிறிஸ்தவ மதமாற்ற பிரசாரங்களில் அந்த சான்றோர்களின் கருத்துக்கள் செலக்டிவ்வாக எடுத்தாளப் பட்டு கிறிஸ்தவத்தால் இன்றளவும் துஷ்பிரயோகம் செய்யப் பட்டு வருகின்றன. அதுதான் கண்ட பலன்.

நமது சமகாலத்தில் கிறிஸ்தவ/இஸ்லாமிய மதங்களையும் அவற்றின் சில கூறுகளையும் நல்லிணக்கம் என்ற பெயரில் சும்மாவாவது புகழ்ந்துரைக்கும் இந்து ஆன்மீகத் தலைவர்கள், அறிஞர்கள், சொற்பொழிவாளர்கள் ஆகியோர் இதிலிருந்து பாடம் கற்க வேண்டும். அத்தகைய தேவையற்ற புகழ்ச்சிகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். பரம சத்தியமும் என்றும் நிலைத்திருக்கும் தர்மமுமாகிய இந்துமதத்தின் கருத்துக்களை நேரடியாக உள்ளது உள்ளபடி எடுத்துரைத்தாலே போதும்; உண்மையான ஆன்மீக நாட்டமும், இந்துப் பண்பாட்டின் மீது மரியாதையும் கொண்ட கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தாமாகத் தேடி வருவார்கள். அப்படி வருபவர்களை ஏற்கவும், இந்து ஆன்மீகத்திலும், இந்து சமூகத்திலும் முறையாக சேர்க்கவுமான வழிகளையும் கட்டமைப்புகளையும் உருவாக்குவதே இந்து ஆன்மீகத் தலைவர்களின் பணியாக இருக்கவேண்டும். அதைவிட்டு, சும்மா அன்னிய மதங்களின் கூறுகளைப் புகழ்வதால் எந்த நல்லிணக்கமும் ஏற்படாது. அத்தகைய புகழ்ச்சிகள் இந்துக்களை மேலும் குழப்பவே பயன்படுத்தப் படும்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard