New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: குடியானவர்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
குடியானவர்
Permalink  
 


குடியானவர்

 
குடியானவர் - குடி என்ற வேர்ச்சொல்லில் இருந்து உருவான சொல். சாதி என்ற சொல்லால் சாதியைக் குறிக்கும் முன்னரே குடி என்ற சொல்லே பயன்பட்டு வந்துள்ளது. தொல்காப்பியம், திருக்குறள் எல்லாவற்றிலும் ஜாதியை குடி என்றே சொல்லியிருக்கிறார்கள். குடியானவர் என்ற சொல்லின் மேன்மையும் தொன்மையும் விளங்கியிருக்கும். நாடோடி/பழங்குடி வாழ்க்கைக்கு மேம்பட்டவர் குடியானவர். குடியானவர் என்றால் நாடோடி வாழ்க்கையில் இருந்து ஓரிடத்தில் நின்று நிலைத்து வாழ்வதற்கான வாழ்வாதாராங்களை, தனக்கும் தன்னை அண்டி வாழும் பிற சாதிகளுக்கும் உருவாக்கி, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நெறிமுறைகளோடு வாழும் வெள்ளாளர். குடியானவர் என்ற சொல்லிற்கு விவசாயி; குடிகளைக் காப்பவர்; நாட்டின் பிரஜை என்று பல்வேறு பொருள்களில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கொத்துக்காரர், மணியக்காரர், பட்டக்காரர் என்று ஒருவன் எந்த பதவி வகிக்கவும் அடிப்படையில் அவன் குடியானவராக இருத்தல் வேண்டும். கொங்கதேச வரலாறு முழுக்கவே குடியானவர்கள் பட்டக்காரர் பதவி பெற்ற வரலாற்றைப் பல இடங்களில் காண முடியும். கவுண்டன், வெள்ளாளன், காராளன் என்பதுபோல குடியானவர் என்பதும் நம்மை குறிக்கும் ஒரு சொல்.



11707316_1121534221196099_59028694162565

 
 
 
தொல்காப்பியம்:

பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோ
டுருவு நிறுத்த காம வாயில்
நிறையே யாருளே உணர்வொடு திருவென
முறையுறுக் கிளந்த ஒப்பினது வகையே

மேற்கண்ட பாடல் அன்றி பல இடங்களிலும் குடி என்று குலம் குறிக்கப்பட்டுள்ளது.

திருக்குறளில் ஜாதியை (குடி) பற்றிய குறள்கள்  - குடி செயல்வகை, குடிமை என்ற அதிகாரங்களே உண்டு.

இவை மட்டுமின்றி ஏராளமான சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் ஜாதியை குறிக்க குடி என்ற சொல்லே பெரும்பாலும் பயன்பட்டுள்ளது. அக்காலத்து டிக்ஷனரியான பிங்கள நிகண்டும் குடியை குலம், இனம், ஜாதி என்று உறுதி செய்கிறது. தீய பழக்கங்களால் ஜாதியை அழிக்கப்பவர்கள் குடிக்கேடி என்றும் குடிக்கேடன் என்றும் அழைக்கப்பட்டுள்ளனர். அவ்வளவு ஏன், ஜாதிப் பெருமைக்கு பழைய பெயர் குடிச்செருக்கு என்பதேயாகும். மேலும் குடி என்னும் சொல், பல இடங்களில் வசிப்பிடம், ஊர், கிராமம் என்னும் பொருளில் வழங்கப்படுகிறது. குடிக்கூலி (குடக்கூலி என்று திரிந்தது) என்பதும் ஓரிடத்தில் வசித்ததற்கான வாடகை. குடிக்காணம் என்பது வீட்டு வரி. குடிக்காசு என்பது கிராம வரியும், குடிக்காவல் (பாடிகாவல் என்றும் சொல்லப்படுவது) ஊர்க்காவலையும் குறிக்கும்.

குடியானவன் என்ற சொல் வெள்ளாளர் (விவசாயி) என்றும் பிரஜை என்றும் ஓரிடத்தில் நின்று வாழ்பவன் என்ற பொருளிலும் வழங்கப்பட்டு வந்துள்ளது.

குடியானவன், குடி என்ற சொற்களின் மேன்மையும், தொன்மையும் விளங்கியிருக்கும்.

DSC00922.jpg


மேலே கண்ட இலக்கிய மேற்கோள்கள் மூலமே, ஜாதி-ஊர்-விவசாயம்-வசிப்பிடம் போன்றவற்றின் இடையே உள்ள ஒற்றுமை ஓரளவு விளங்கியிருக்க வேண்டும். ஆதியில் மனிதன் உணவு சேகரிப்பவனாகவும், ஓரிடத்தில் நிலைபெறாது இடப்பெயர்ச்சிக்கு ஆட்பட்டவனாக, நாடோடியாக இருந்தான். அடிப்படைத் தேவைகள், வாழ்விடம் எதுவும் உறுதியில்லை என்ற நிலையற்ற வாழ்க்கைச் சூழலால் அவனது வாழ்க்கை முறை இப்படித்தான் என்று வரையறுத்துக் கொள்ள இயலவில்லை.

ஓரிடத்தில் நின்று வாழ அடிப்படைத் தேவைகளாக உணவும் நீரும் வேண்டும். உணவை உற்பத்தி செய்யவும், நீரை முறையாக தேக்கி பயன்படுத்தும் பாசன முறைகளும் வெள்ளாளர்கள் கைத்திறன் ஆதலால், ஊர் அமைப்பை நிறுவி நின்று வாழும் முறையை கொண்டு வந்தவன் விவசாயியான வெள்ளாளன். ஊர் அமைப்பு உருவான பின்னர்தான் நிலையான வாழ்க்கை முறை, பிற தேவைகளுக்கான ஜாதிகளை (18 கட்டுக்கண்ணி சாதிகள்) சேர்த்தது, ஒருவருக்கொருவர் பின்பற்றவேண்டிய சட்டம், சமூக கொள்கைகள், வாழ்க்கைமுறையின் அடிப்படையில் பண்பாடுகள், வழக்கங்கள் அனைத்தும் தோன்றின. சமூகங்கள் இப்படித்தான் உருவாயின. இப்படி நின்ருவாழும் சாதிய சமூக வட்டத்துக்குள் வராதவர்கள், சமூக வாழ்க்கைக்கு விரோதமாக செயல்பட்டு விலக்கப்பட்டவர்கள், OutCaste ஆவர்.

ஆக, குடியானவன் என்றால் சமூக வாழ்க்கைமுறைக்கு வந்தவன் என்றும், ஓரிடத்தில் நின்று வாழ்பவன் என்றும், இந்த பண்பட்ட வாழ்க்கைமுறைக்கு தேவையான அடிப்படைகளை அனைத்து சாதிகளுக்கும் உருவாக்க காரணமான வெள்ளாளர் குடியானவர் என்றும் முதன்மையாக அழைக்கப்பட்டார்.

IMG_1432.JPG

பின்னர்தான் இந்த பெயரின் பெருமையை எண்ணி, இதே சமூக வாழ்க்கை முறைக்கு வந்த பிற சாதிகளும் பின்பற்ற துவங்கின. ஆனால் இன்றளவும் குடியானவர் என்றால் விவசாயம் செய்பவர் வெள்ளாளர் என்ற பொருளே அனைவர் மனதிலும் தோன்றும்.

ஓரிடத்தில் நின்று வாழ்வது சாதாரணமான காரியம் அல்ல. நாடோடி வாழ்க்கையில் உணவு சேகரிப்போடு வேலை முடிந்தது; ஆனால் குடியான வாழ்க்கையில் உற்பத்தியும் செய்து, சேகரித்து, பாதுகாத்து, உற்பத்திக்கான துணை சாதிகளையும் ஆதரித்து, சமூக சட்டங்களை காத்து, ஒருங்கிணைத்து செல்லவேண்டும். அதனால் தான் குடியானவர் என்றாலே, அதிக பொறுப்போடு இருக்க வேண்டியவர், கடினமாக உழைக்கக் கூடியவர், ஒழுக்கமாக இருக்க வேண்டியவர் என்று சொல்கிறார்கள்.

cover%2Bphoto.jpg

சிறிது நேரம் அதிகமாக தூங்கினாலும்கூட,

"குடியான பையன் இந்நேரம் வரைக்கும் தூங்கறதா??" 

என்பார்கள். இந்த வார்த்தையை கேட்காத கவுண்டன் இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி இல்லை என்று சொல்பவன் நிச்சயம் கவுண்டராக இருக்க வாய்ப்பு குறைவு.

அரசர, பிராமணர், வியாபாரிகள் என்று சமுதாயத்தில் யாருக்கு என்ன தேவை என்றாலும் பாதிப்பு, நஷ்டம் என்றாலும் அதை இறுதியாக தாங்குவது குடியானவர்களே. இதை கம்பரும் தனது ஏர் எழுபது நூலில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். அதே கருத்து, மிக எளிமையாக ஒரு பழமொழியாகவும் உண்டு,

"செட்டி நட்டம் குடியானவன் தலையில்"

அதாவது ஒரு செட்டியார் தனது வியாபாரத்தில் நொடிந்தாலும் அதை குடியானவரிடம் விலை குறைக்கச் சொல்லி பேரம் பேசித்தான் சமன்செய்து கொள்ளவேண்டும்.

குடியான பொறுப்புணர்ச்சிக்கு உதாரணமாக,
"குடியான பிள்ள வெளையாட போனாலும் ஒரு கத்த வெறகோட வரும்"

என்ற பழமொழி சொல்வார்கள்.

கேலிக்குகூட ஏதாவது முறையற்ற பேச்சுக்கள் பேசினாலும்,

"குடியானவன் பேசற பேச்சா இது?" 


குடியானவர் நீதியுணர்ச்சிக்கு இதைவிட சிறந்த எடுத்துக்காட்டு வேண்டாம். இது கொங்குப் பகுதியில் சேலம் வட்டத்தில் உலவும் சேகரிக்கப்பட்ட பழமொழி.
"தாய் தந்தை செத்தா பொழைக்கலாம் 
நாணயம் செத்தா பொழைக்கலாமா?"

இன்றும் பெரும்பாலான பகுதிகளில் கவுண்டர்கள் அல்லது பிற வெள்ளாள ஜாதியினர் வாழும் பகுதிகளை குடித்தெரு, குடியான தெரு என்று சொல்வார்கள்.

வெள்ளாளர் அனைவரது ஆதி பாட்டனான மரபாளன் தனது பல பேர்கள் பற்றி வெள்ளாளர்களின் ஆதி குருவான ஸ்ரீ போதாயன மகரிஷியிடம் கேட்டபோது, போதாயனர் குடியானவன் என்பது மரபாளனின் பெயர் என்று கூறி, குடியானவன் என்பதற்கு விளக்கம் கொடுத்தது கீழே,

kudiyanavan.png



bothayana.png
 
அண்ணமார் சாமிகள் கதையில் நல்லதங்காள் தங்கள் குடும்பத்தை குடியானவர் என்று சோழப் பிரதானியிடம் சொல்லும் வாசகம்,

 
"உத்தமியாள் நல்லதங்கை ஏது சொல்வாள் அந்நேரம்
நாங்கள் பட்டிக்காட்டு குடியானவர் எங்களுக்கு பல கறியும் சிக்காது
ஐந்தாறு கறி நினைத்து அண்ணா உண்ணுமினிச் சாதமென்று"

an.png

ஆக குடியானவர் என்பது ஒரு சமூகவியல் சொல்லாகும். இந்த சமூகவியல் சொல்லோடு கொத்துக்காரர், மணியக்காரர், பட்டக்காரர் போன்ற நிர்வாகவியலைக் கலந்து குழப்பிக் கொள்வது தகாது. அந்த நிர்வாகப் பதவிப் பேர்கள் குடும்ப உறவுகளுக்குள் புகுந்த கொங்குப்பகுதிகளில், அன்று முதல் இன்றளவும் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. இதுபோன்ற குழப்பங்கள் கொங்கில் வேறு எங்கும் காணவியலாது. குடியானவர் என்பது வெள்ளாளர், காராளர், குவளைமார்பன், கங்கா குலத்தோர் என்பதுபோல வெள்ளாளர்களுக்கான பெருமைமிகு பொதுப்பேராகும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஜாதியும் வருணமும் மிகச்சிறந்த சமூக கட்டமைப்புகள். அவை மானுட தத்துவத்தை கோட்பாட்டை அடிப்படையாக கொண்டவை. அது புரியாததாலும், ஒன்றோடு மற்றொன்றை போட்டுக் குழம்பிக் கொள்வதாலும், இரண்டையும் தவறாக பயன்பாடுத்துவதாலும் இவை இரண்டும் தனது அடிப்படை தத்துவ சிறப்புத் தன்மையை இழந்து வருகிறது.

ஜாதி வருண கோட்பாடுகளின் அடிப்படை சித்தாந்தம் புரியாதவர்களே ஜாதியை ஒழிப்போம் வருணத்தை ஒழிப்போம் என்று கூக்குரல் இடுகின்றனர்.

ஜாதி என்றால் பிறப்பு, பிறப்பின் அடிப்படையில் ஒருவர் பறையர், அய்யர், வண்ணியர். இவைகளை சாதி, குலம், பெருங்குடும்பங்கள் என்று சொல்லலாம்.

இந்த குல மரபு குழுக்களை வர்ணத்தில் போட்டு குழப்புவதால்தான் இந்த ஜாதி, வர்ணம் எனும் கோட்பாடுகள் அடிப்படை தன்மையை இழக்கின்றன.

ஜாதி என்பது பிறப்பின் அடிப்படையில் உருவாகும் குழுக்கள். ஆனால் வருணத்தின் அடிப்படை என்பது பிறப்பு இல்லை அது ஒருவரின் செயலால் நிர்ணயிக்கப்படுகின்றது.

பிராமணர், சத்திரியர், வாணிகர், வேளாளர் என்பவர்களை பறையர், வண்ணியர், அய்யர் எனும் மூன்று ஜாதிகளிலும் பார்க்கலாம். ஒரே குடும்பத்தில் இந்த நான்கு வகை மனிதர்களை பார்க்கலாம். ஒரே மனிதரிடம் கூட இந்த நான்கு வருணங்களின் தன்மையை பார்க்கலாம்.

தமிழ் இலக்கியங்கள் கூட இந்த நான்கு சமூக அமைப்பு முறை இல்லாமல் எந்த குடியும் இல்லை என்கின்றனர். சமூக விஞ்ஞானிகளும் நவீன சமூக அமைப்பில் ஆசிரியர் (அறவோர்), அரசாட்சி செய்யும் மேலாளர்கள், வானிகர்கள், வேளாண்மை மற்றும் பிற காரியாளர்கள் எனும் சமூக கட்டமைப்பு சமூக இயக்கத்திற்கு அவசியம் என்கின்றனர்.

எவர் ஒருவர் மனதையும் செயலையும் நெறி படுத்தி சிறந்த செயல்களை செய்கிறார்களோ அவர்களே பிராமணர்கள். அந்தணன் என்போன் அறவோன். அறத்தை போதிப்பவர்கள் அந்தணர்கள், அறவோர்கள்.

அய்யர் அய்யங்கார் எல்லாம் அந்தணர்கள், பறையர் எல்லாம் அந்தணர்கள் என்று சொல்லிக் கொள்வதும். வண்ணியர் எல்லாம் சத்திரியர்கள், பறையர் எல்லாம் சத்திரியர்கள் என்று சொல்லிக் கொள்வதும் வருணக் கோட்பாட்டின் அடிப்படை சிந்தாந்தத்தை கேலி கூத்தாக்குகிறது.

சாதியையும் வருண சித்தாந்தத்தையும் மக்கள் சரியான முறையில் பயன் படுத்தும்போது சமத்துவ சமதர்ம சுதந்திர சமூகத்தை உருவாக்கலாம்.

அதை விடுத்து சாதியை ஒழி வர்ணத்தை ஒழி என்று கண்மூடித்தனமாக பேசிக் கொண்டு இருப்பது அறியாமையின் வெளிப்பாடே.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

குடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்

தமிழர்களிடம் சாதி தோன்றியது எப்படி? ஆதியில் தமிழர்கள் சாதி பார்த்தார்களா? இராஜராஜன் காலத்தில் சாதி எப்படி நிலவியது? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் பதிவு.

 
 

குடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்

மிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா?, எப்போது சாதி உருவாக்கப்பட்டது?, ஆதியில் யார் ஆண்ட சாதி?, இராசராச சோழன் எந்தச் சாதி?, சாதியைக் கொண்டு யார் தமிழர் எனக் கண்டுபிடிக்கமுடியுமா? என்பன போன்ற பல கேள்விகள் அண்மைக் காலத்தில் பரவலாக எழுப்பப்படும் கேள்விகளாகக் காணப்படுகின்றன.

அத்தகைய கேள்விகளிற்குப் பதில் காணுமுகமாக தமிழர்களிடம் சாதியின் தோற்றம் பற்றிய ஒரு சுருக்கமான விளக்கமாகவே இக் கட்டுரை அமையும். இதனை முழுமையாகப் பார்ப்பதற்கு தமிழர்களின் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளிலான எழுத்திலுள்ள வரலாற்றினைப் பார்க்கவேண்டும்.

பொதுவாக இலக்கியங்கள் அந்ததந்த காலங்களைப் படம்பிடித்துக் காட்டும் கருவியாகச் சொல்லப்படுவதால், ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் இடைவெளியில் இடம்பெற்ற இரு பாடல்களைக் கொண்டு; இச் சிக்கலினை அணுகுவோம்.

முதலில் இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முன்னர் சங்க காலத்தில் இடம்பெற்ற புறநூனூற்றுப் பாடல் ஒன்றினைப் பார்ப்போம். `அடலருந் துப்பின்…..’ எனத் தொடங்கும் பாடலின் (புறம்335) பின்வரும் வரிகளைப் பாருங்கள்.

‘துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்,
கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே’

இப் பாடல் வரிகளில் புலவர் மாங்குடி கிழார் `துடியன், பாணன், பறையன், கடம்பன்’ என்ற நான்கு குடிகளே சிறந்த குடிகள் என்கின்றார். {இப் பாடலைக் கொண்டே சிலர் “முன்பு பறையர்கள் தான் ஆண்ட சாதி” என தற்போதைய தாழ்த்தும் சாதிகளிற்குப் போட்டியாக, தமது சொந்தச் சாதிப் பெருமையினைப் பேசிவருகின்றார்கள். இது ஏன் தவறு எனப் பின்னர் பார்ப்போம்}.

இப்போது அப்படியே 2000 ஆண்டுகளைக் கடந்துவந்து இன்னொரு பாடலினைப் பார்ப்போம்.  அலை ஓசை (1985) என்ற படத்தில்  “போராடடா ஒரு வாளேந்தடா, வேங்கைகளும் இனித்  தூங்கதடா…” எனத் தொடங்கும் பாடலின் பின்வரும் வரிகளைப் பாருங்கள். {இப் பாடல் அண்மையில் வெளிவந்த பரியேறும் பெருமாள் படத்திலும், ஈழத்தில் போர்க் காலங்களிலும் மீள ஒலித்திருந்த ஒரு பாடல்}

‘இன்னும் இங்கு பள்ளு பறையென
சொல்லும் மடமைகள் உள்ளதடா
நித்தம் சிறு சேரி சிறகுகள்
வேள்வி விறகென மாறுதடா’

இப்போது பள்ளு, பறை என்று சொல்வதே கீழானதும், மடமையானதும் என்ற நிலை வந்துவிட்டது. இவ்விரு பாடல் வரிகளையும் மேலோட்டமாகப் பார்த்தால், சங்ககாலத்தில் சாதியடுக்குகளில் மேலேயிருந்த ‘பறையர்’ போன்ற சாதிகள் தற்போது கீழே வந்துவிட்டது என்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்படலாம் (அவ்வாறு கூறியும் சிலர் அரசியல் செய்கின்றார்கள்).

உண்மை அதுவன்று, உண்மையில் சங்ககாலத்தில் சாதி என்ற சொல்லோ அல்லது அந்தக் கருத்துருவாக்கமோ தமிழர்களிடமில்லை. அவ்வாறாயின் மேற்கூறிய புறநானூற்றுப் பாடல் வரிகள் என்ன? என்ற கேள்வி எழலாம். அப் பாடல் வரியிலேயே அதற்கான பதில் உண்டு. அதுதான் ‘குடி’.  சாதி என்பது குடி-குலம் என்பதிலிருந்து வேறுபட்டது. இதனைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

படிக்க:
♦ இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே ?
♦ ஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் ! | தாகத்தில் தமிழகம் – ஆவணப்படம் !

தமிழர்களிடம் சாதியின் வரலாறு :

சாதி (Caste) என்பது பிறப்பிலடிப்படையிலான தொழிற் பாகுபாட்டினையும், அக மணமுறையினையும் கெட்டியாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட மக்களின் குழுக்களைக் குறிக்கும். இங்கு பிறப்பிலடிப்படையிலான தொழில், அக மணமுறை, மதப்பின்புலம் என்பன சாதியின் அடிப்படைக் கூறுகளாகும்.

இக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட முதலாவது கேள்வியான “தமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா?” என்ற கேள்விக்கான பதில் சாதி என்ற சொல்லிலேயே உண்டு, அதாவது சாதி என்ற சொல்லே தமிழல்ல. அது ஜாதி என்ற வடசொல்லின் கிரந்தம் நீக்கிய வடிவமே (ஜாதகம்- சாதகம் போன்று).

ஜா என்பது ஜனனம் (பிறத்தல்) என்பதுடன் தொடர்புடையது. ஜாதி/ சாதி என்ற சொல் தமிழல்ல என்பது மட்டுமல்ல, அதற்கு இணையான தமிழ்ச்சொல் வேறு எதுவும் கூட வழக்கில் இல்லை (குலம், குடி போன்ற தமிழ்ச்சொற்களின் பொருளினைப் பின்பு பார்ப்போம்).

இப்போது பலர் `சாதி` என்று சொல்லக் கூச்சப்பட்டு/ அவ்வாறு நடித்து சமூகம், சமுதாயம் (சமன்+ஆயம்) என்ற சொற்ளால் சாதியினைக் குறிக்கின்றார்கள். இது முற்றிலும் தவறு; ஏனெனில் அவ்விரு சொற்களும் சமன் என்ற வேர்ச்சொல்லினை அடியாகக் கொண்ட சொற்களாகையால், அவை சமனற்ற சாதி முறையினைக் குறிக்கமாட்டாது (அதே போன்று ஸமூகம் என்ற வடசொல்லும் ‘ஸங்கமித்தல் = ஒன்றுசேர்தல்’ என்பதனைக் குறிப்பதால் அதுவும் பொருத்தமற்றது). அதனால்தான் சொல்கின்றோம் சாதி என்ற சொல்லிற்கு பொருத்தமான தமிழ்ச்சொல்லே இல்லை, ஏனெனில் சாதி தமிழரின் மரபன்று. {தமிழிலுள்ள சாதி என்ற மற்றொரு சொல்லிற்கு உயர்திணையுடன் அறவே தொடர்பில்லை (சாதிமுத்து, சாதிமல்லி போன்றன)}.

சொல்லின் பொருளைப் பார்த்தோம். இப்போது இலக்கியச் சான்றுகளைப் பார்ப்போம். சாதி என்பது பிறப்பினடிப்படையிலானது என முன்னரே பார்த்தோம். இந்த நிலையில் பின்வரும் குறளினைப் பாருங்கள்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” –  (குறள் 972)

இக்குறளானது பிறப்பினால் அனைவரும் ஒருவரே. பிறப்பில் வேறுபாடு இல்லை என்பதை உலகிற்கு உரக்க உரைத்திற்று.

அடுத்ததாக சங்க இலக்கியத்தில் குறுந்தொகையிலுள்ள ஒரு பாடலைப் பாருங்கள்.

“யாயும் ஞாயும் யாரா கியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி யறிதும்,
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே”

இப்பாடலானது தமிழர்களிடையே புறமணமுறை காணப்பட்டதனை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது. புறமணம் உள்ள ஒரு சமூகத்தில் சாதியமைப்பு இருப்பதற்கான சாத்தியமேயில்லை.

இந்த ஒரு பாடல் மட்டுமன்றி சங்கப் பாடல்களில் பலவற்றிலும் {எ.காட்டு- குறுந்தொகை 167 ‘முளிதயிர் பிசைந்த’ , கலித்தொகை 107 ‘அன்னை நோதக்கதோ இல்லைமன் நின் நெஞ்சம்’,….} ஒரு ஆயத்திலுள்ள தலைவியினை ஆயத்திற்கு வெளியேயிருந்து வரும் ஒரு தலைவனே விரும்புகிறான், அதனால் சங்ககாலத்திலிருந்தது புறமணமுறையே என பேரா .கா.சிவத்தம்பி “சங்க இலக்கியம் கவிதையும் கருத்தும்” எனும் நூலில் 85-86 பக்கங்களில் நிறுவுகிறார்.

சங்க காலத்தில் புற மணமுறை காணப்பட்டதனை மேலே பார்த்தோம். அதே போன்று பிறப்பிலடிப்படையிலான தொழிலினை மேற்கொள்ளவில்லை என்பதனையும் ஐங்குறுநூறுவில் இடம்பெறும் பின்வரும் பாடல் காட்டுகின்றது.

‘முள் எயிற்றுப் பாண்மகள் இன் கெடிறு சொரிந்த
அகன் பெரு வட்டி நிறைய, மனையோள்
அரிகாற் பெரும் பயறு நிறைக்கும் ஊர!
மாண் இழை ஆயம் அறியும் நின்
பாணன் போலப் பல பொய்த்தல்லே.’ – (ஐங்குறுநூறு 47)

இப் பாடலில்  பாட்டுப்பாடும் பாணரே  மீன்பிடித்து ஊரில் கொண்டு சென்று, மீனுக்கு நிகர் பயறோ, நெல்லோ கொடுத்துப் பண்டம் மாற்றிக்கொண்ட நிகழ்வினை ஐங்குறுநூறு காட்டும்.

அதே போன்று நக்கீரப்புலவரிற்கோ புலவர் பணி, தந்தைக்கோ கணக்காயர் பணி; புலவரான சீத்தலைச் சாத்தனாரின் தந்தை கூலவாணிகம் தொழில் செய்பவர். இவ்வாறு பல சான்றுகள் சங்ககாலத்தில் பிறப்பிலடிப்படையிலான தொழில் காணப்படவில்லை என்பதனை எடுத்துக்காட்டும்.

மேற்கூறியவற்றை உற்றுப் பார்த்தால் சங்ககாலத்தில் நிலவிய குடி / குலம் என்பதற்கும் இன்றைய சாதி முறைக்குமுள்ள வேறுபாட்டினை அறிந்துகொள்ளலாம். சுருக்கமாகச் சொன்னால் பழங்கால குடிகளிடம் அகமணமுறையோ / கட்டாய பிறப்பிலடிப்படையிலான தலைமுறைத் தொழில்முறையோ இல்லை.

தமிழர்களிடம் சங்ககாலத்தில் காணப்பட்ட குலக்குழுக்கள் (tribes), குடிகள் என்பவற்றைச் சாதியுடன் போட்டுக்குழம்பத்தேவையில்லை, ஏனெனில் அவை உலகெங்கும் பழங்குடி மக்களிடையே காணப்பட்ட பிரிவுகள் போன்றனவையே. அவற்றில் அகமணம், பிறப்பிலடிப்படையிலான தொழில் கட்டாயம் என்பனவில்லை. இதுவே சாதிக்கும்-குடிக்குமுள்ள வேறுபாடாகும்.

படிக்க:
♦ நூல் அறிமுகம் : சாதியற்ற தமிழர் – சாதியத் தமிழர்
♦ கூடிக் கரையும் காகங்களின் கூட்டமாக சாதி ஒழிப்பு மாநாடு

இலக்கியச் சான்றுகளையும் விட முதன்மையானது அகழ்வாய்வுச் சான்றுகளாகும். கீழடி அகழ்வாய்வில் முதல் நான்கு கட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட 12,000 -இற்கும் மேற்பட்ட பொருட்களில் எதுவுமே சாதி – மத அடையாளத்தைக் குறிக்காமலிருப்பது, நமது ‘சங்க காலத்தில் சாதி இல்லை’ என்ற கூற்றினை வலுப்படுத்துகின்றது.

சாதி என்ற சொல்லே சங்கமருவிய காலத்திலேயே முதன்முதலில் சிலப்பதிகாரத்தில் வர்ணங்களை குறித்தே வருகின்றது.

“நால்வகை சாதியும், நலம்பெற நோக்கி “-(வேனில் காதை41)

அடுத்ததாக மணிமேகலையில் இடம்பெறுகின்றது.

“நாமம் சாதி..கிரியையின் அறிவது ஆகும்.”- (சமயக்கணக்கர் 23).

சங்கமருவிய காலத்தில் கூட சாதி என்ற சொல் வர்ணங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழர்களிடம் வந்து சேர்ந்துவிட்டபோதும், சாதி என்ற கோட்பாடானது, இன்றைய பொருளில், அன்றும் உருவாகவில்லை.

தமிழர்களிடம் எங்கிருந்து சாதி வந்தது ?

பார்ப்பனர்களின் தமிழக வருகையுடனேயை சங்கமருவிய காலத்தில் சாதி வருகின்றது. பார்ப்பனர்களிடமும் முதலில் வர்ணங்களே தோன்றுகின்றன. இதனை ரிக் வேதம் புருச சூத்திரம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

வர்ணங்கள் எவ்வாறு சாதியாக மாறுகின்றது என்பதனை அம்பேத்கார் சிறப்பாக Revolution and Counter-Revolution in Ancient India, Annihilation of Caste எனும் நூல்களில் விளக்கியிருப்பார்.

வர்ணங்கள் மேலும் பிரிவுகளாகப் பிளவுற்ற பின் ஜாதி என்ற சொல் முதன்முதலில் பகவத்கீதையில் (1: 42) உத்ஸாதயந்தே ஜாதி தர்மா சாஸ்வத” என வருகின்றது. இவ்வாறு வைதீக மதத்தினூடாகவே சாதி தமிழரிடையே புகுத்தப்பட்டது.

இப்போதெல்லாம் மதவாதிகளில் சிலர் பகவத்கீதை கூறும் வர்ணங்கள் ஜாதிகள் என்பன பிறப்பினடிப்படையிலானதல்ல, அவை குணத்தினடிப்படையிலானவை எனப் புதிய விளக்கம் கொடுக்கிறார்கள். இதற்கு இவர்கள் காட்டும் சுலோகம் “குண-கர்ம விபாசக” (4-13) என்பதாகும். இங்குள்ள குண கர்ம என்பது சாதிக்கு விதித்த வேலையின் குணம் என்பதே. இதற்கு உரை எழுதிய ஆதிசங்கரரும் “ பிறப்பால்” என்றே எழுதியுள்ளார்.

கீதையின் 18 இயலின் 44-47 வது பாடல்களில் நாலு வருணங்களின் பெயர் குறிப்பிடப்பட்டு அவற்றிற்கான தொழில்களும் குறிப்பிடப்படுகிறது. கீதையின்படி ஒரு வர்ணத்தை சேர்ந்த ஒருவர் வேறு ஒரு தொழினை சிறப்பாகச் செய்வார் எனினும் தனது குலத்தொழிலினைவிட வேறு தொழில் செய்யக்கூடாது (ஸ்ரோயான் ஸ்வ-தர்மா விகுண. பர தர்மாத் ஸ்வ-அனுஸ்திதா).

மேலும் இன்னொரு சுலோகமானது (வர்ண சங்கரோ நரகாயைவ, பித்ரு லுப்த பிண்டோதம் க்ரியக) கலப்புமணம் செய்தால் பிண்டம் கூட உங்களிற்கு வந்து சேராது, நரகமே செல்வீர்கள் எனக் கூறுகின்றது.

இவற்றின் மூலம் கீதை சொல்வது பிறப்பினடிப்படையிலான, அகமணமுறையினை வலியுறுத்தும் சாதியமைப்பினையே என்பது தெளிவாகின்றது. இத்தகைய வைதீக (இன்றைய இந்து) சிந்தனைகளையே சாதிகளாக தமிழர்களிடம் கொண்டுவரப்பட்டன. இதற்கு தமிழர்களிடம் ஏற்கனவேயிருந்த குடிப் பெயர்களையே, தமது வர்ணக்கோட்பாட்டிற்கமைய சாதிகளாக பார்ப்பனியம் மாற்றிவிட்டது.

குடிகள் சாதிகளாக்கப்பட்ட வரலாறு :

தமிழர்களிடம் தொழில்களை அடிப்படையாகக்கொண்ட குடிகள் இருந்தது போன்றே, திணைகளை அடிப்படையாகக் கொண்ட குடிகளுமிருந்தன. மனிதர்களின் ஆதித்தொழிலான வேட்டையினைச் செய்தவர்கள் வேடர்கள். அந்தவகையில் பார்த்தால் நமது முன்னோர்கள் யாவருமே வேடர்கள்.

முல்லையில் மேய்ச்சல் வாழ்வில்  ஆடு மாடுகளை பார்த்துக் கொண்டிருந்ததால் நமக்குப் பெயர் கோனார். குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்தவர்கள் குறவர்கள்.  நமது முன்னோர்கள் அத்தனை பெரும் குறவர்களாக இருந்தவர்கள் தான்.  காட்டிற்கும் மலைக்கும் இடையிலே  வாழ்கின்றவர்களிற்கு  இடையர்கள் என்று பெயர்.  மருத நிலத்தில் வேளாண்மை செய்யும் போது அங்கு மேட்டுப் பாங்கான நிலத்தில் குடில்களை அமைத்துக்கொண்டு, பள்ளத்தில் இறங்கி வேலை செய்தோர் பள்ளர்கள். பழந்தமிழ் இலக்கியங்களில் பள்ளு என்றால் உழவு என்ற பொருள் உண்டு. பின்னரே உழவர்கள் வேளாளர்கள் எனப்பட்டனர். பறையோர் என்பது அரசரின் தூதுவர்களையே குறிக்கும்.

இன்றும் ஈழத்தில் பறைதல் என்றால் பேசுதல் என்ற பொருள் உண்டு. அரசரின் ஆணைகளை மக்களிடம் எடுத்துச் செல்லல், தூது செல்லல், போரில் முன்னின்று பறை முழங்கிப் போரினைத் தொடக்கி வைத்தல் எனப் பல சிறப்பான பணிகளை ஆற்றுவோரே ‘பறையர்’ எனப்பட்டார்கள். இத்தகைய சிறப்பான பணிகளை மேற்கொண்டமையாலேயே மேற்கூறிய புறநானூற்றுப் பாடலில் (புறம்335) ‘பறையர் சிறந்த குடி’ எனப் பாடப்படுகின்றது. பறைக்கு பலியிடப்படுவதன் மூலம் தெய்வத்திற்கு நிகராகப் பறை கருதப்பட்டதனை சங்ககால பத்திற்பத்தில் இடம்பெறும் பின்வரும் பாடலில் காணலாம்.

“கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன்பனை
ஆடுநர் பெயர்ந்து வந்து அரும்பலி தூஉய்
கடிப்புக் கண் உறூஉம் தொடித்தோள் இயவர்”- (பதி. 17: 6-7)

சங்கமருவிய காலத்தில் கூட சிலப்பதிகாரத்தில் பறையின் பெருமை பேசப்படுகின்றது.

“பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தன் சாக்கையன்” – நடுகல் காதை வரி 76-77 {பொருள்- சிலம்பில் இக்கூத்தை ஆடியவன் பறையூரைச் சேர்ந்தவன் என்றும், அவ்வூர் நான்மறையோரைக் கொண்டதென்றும் சிலப்பதிகாரம் செப்புகிறது}.

மேற்கூறியவை எல்லாம் குடிகளே தவிர, சாதிகளன்று.

இத்தகைய தமிழ்க் குடிகளினையே, பார்ப்பனியமானது தனது நான்கு வர்ணக் கோட்பாட்டினை அடிப்படையாகக்கொண்டு சாதிகளாக்கியது. இத்தகைய மாற்றம் ஒரே நாளில் இடம்பெறவில்லை. மாறாக பல நூற்றாண்டுகள் கடந்தே இப் படிமுறை மாற்றம் ஏற்பட்டது.

படிக்க:
♦ சோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் !
♦ பரியேறும் பெருமாள் : சாதி ஒழிப்பு உரையாடலைத் துவக்குகிறதா ? மறுக்கிறதா ?

இராச ராச சோழனின் சாதி :

இன்று பல்வேறு சாதிக்காரர்களும் இராச ராச சோழன் தமது சாதி என உரிமை கொண்டாடுகின்றார்கள். உண்மையில் அக் காலத்தில் கூட சாதி முறையானது இறுக்கமடைந்து இன்றைய நிலையினை அடையவில்லை.

சோழர் காலத்தில் சங்ககால நிலமை மாற்றமடைந்து பல ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுவிட்டபோதும், சாதி நிலை இன்று போல மாற்றமடைந்திருக்கவில்லை  என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக சேரிகள் காணப்படுகின்றன. ஒரு வகையில் தொழிலினை அடிப்படையாகக் கொண்ட குலங்கள் மட்டுமே ஒரிடத்தில் சேர்ந்து இருப்பதனை சேரிகள் காட்டுகின்றன (இது சாதி முறையில் ஒரு கட்ட வளர்ச்சிதான்).

அதே நேரம் பறைச்சேரி புறம்பாகவும், தீண்டத்தகாதோர் சேரி புறம்பாகவும் குறிப்பிடப்படுவதால் ‘யார் அந்த தீண்டத்தகாதோர்?’ என்ற கேள்வி ஏற்படுகின்றது. அங்கிருந்த தீண்டத்தகாதோர் இன்னமும் பொது  நீரோட்டத்தில் சேர்ந்திராத வேடுவர்களே என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இராச ராச சோழன் காலத்திலிருந்து காலப்பொறியில் (Time machine)  ஏறி 1,500 ஆண்டுகளிற்கு முன் சென்றால் எல்லோருடைய தொழிலாகவுமிருந்த வேட்டை இன்று தீண்டத்தகாத தொழிலாகிவிட்டது. இப்போது காலப்பொறியில் ஏறி  சோழன் காலத்திலிருந்து இன்னமும் ஒரு ஆயிரம் ஆண்டுகள் பின்னே வந்து, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற்கு வந்தால்; இப்போது வேட்டை என்பது பிரபுக்கள், செல்வந்தர்களின் பொழுதுபோக்கும் மரியாதைக்குரிய பகுதிநேரத் தொழில். இவ்வளவுதான் தீண்டாமை.

மேற்கூறியவாறு சாதி அமைப்பு தனது முழு வடிவத்தினைப் பெறாமையினாலேயே  “இராச ராச சோழன் காலத்தில் சாதிகளே இல்லை” என்று புலவர் செந்தலை ந.கவுதமன் கூறுவார். உண்மை அவ்வாறிருக்க இராசராச சோழன் தேவர் சாதியினைச் சேர்ந்தவர் என கல்வெட்டு அறிஞர்(?) நாகசாமி கூறுவது வழமையான அவரது நஞ்சுக்கருத்தே.

உண்மையில் முத்துராமலிங்கத்தேவர் காலத்திற்கு பின்னரே தேவர் என்ற சாதியே தோற்றம் பெறுகின்றது. முக்குலத்தோர் என்பதுகூட ஏற்கனவே கூறிய மூன்று குடிகளை (பின்நாளில் சாதியாக்கப்பட்ட) ஒன்றாக்கி பின்நாட்களில் ஏற்படுத்திய ஒன்றே. சாதியமைப்பானது ஒரளவிற்கு முழுவளர்ச்சியைப் பெற்றது ஏறத்தாழ ஒரு 800 ஆண்டுகளிற்கு முன்னர்தான்.

‘யார் தமிழன்’ என சாதி அடையாளம் காட்டுமா?

தமிழ்த்தேசியம் பேசுவோரில் சிலர் இப்போது தமிழன் யார் எனக் கண்டுபிடிக்கும் ஒரு கருவியாக சாதியினைப் பயன்படுத்த முனையும் போக்கு அண்மைக் காலமாகக் காணப்படுகின்றது.

இது முற்றிலும் நகைப்பிற்கு இடமானது; ஏனெனில் சாதியே தமிழரிற்கு ஒரு வந்தேறிப் பண்பாடாகக் காணப்பட, எவ்வாறு சாதியைக் கொண்டு தமிழரைக் கண்டுபிடிப்பது? வேண்டுமென்றால் ஒன்று உறுதியாகக் கூறலாம்;  அதாவது யாரெல்லாம் சாதி பார்க்கின்றார்களோ, அவர்கள் எல்லாம் தூய தமிழர்கள் (ஏன் மனிதர்களே) அல்ல {இதற்கான சான்றுகள் நிறையவே மேலே ஏற்கனவே கூறப்பட்டுள்ளன}.

சாதி ஒழிப்பு :

சாதி அறம் சார்ந்த ஒன்றல்ல, மேலும் அது தமிழர்களின் மரபுமன்று. எனவே சாதி ஒழிக்கப்படவேண்டிய ஒன்றாகும். சாதி முறையினை இன்று தாங்கிப் பிடித்திருக்கும் நான்கு தூண்களாக சொந்தச் சாதிப்பற்று, மத நம்பிக்கை, பிறப்பிலடிப்படையிலான தொழில், அக மணமுறை என்பன காணப்படுகின்றன.

இதில் முதலாவதாக தாழ்த்தும் சாதியினரோ அல்லது தாழ்த்தப்படும் சாதியினரோ தமது சாதிப் பற்றினை விட்டொழிக்கவேண்டும் (அதேவேளை தாழ்த்தப்பட்டோர் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒன்றிணைவது தவறன்று, அதேவேளை தாமும் ஒரு காலத்தில் ஆண்டசாதி எனக் கூறுவது தவறானது).

இரண்டாவதாக சாதிமுறையினை வலியுறுத்தும் எந்த மதக்கோட்பாடும் கேள்விக்கு உள்ளாக்கப்படவேண்டும்.

மூன்றவதாக, பிறப்பிலடிப்படையிலான தொழில் செய்வதனை முடியுமானவரைத் தவிர்த்து, எத் தொழில் விருப்பமானதோ/ எதில் திறமையுள்ளதோ, அதனையே செய்ய வேண்டும்.

இறுதியாக, புறமணமுறை ஊக்குவிக்கப்படவேண்டும். அதாவது சொந்தச் சாதி பார்த்து திருமணங்கள் செய்வதனைத் தவிர்க்கவேண்டும். இப் புறமணமுறையானது ஈழப்போரின் போது, விடுதலைப் புலிப் போராளிகளிடையே பெருமளவிற்கு கடைப்பிடிக்கப்பட்டு, அப்போது சாதியானது போராளிகள் மட்டத்திலாவது பெருமளவிற்கு ஒழிக்கப்பட்டிருந்தது. எனவே புறமணமுறையே சாதி முறைக்கான சாவு மணியாக அமையும்.

வி.இ.  குகநாதன்

துணை நின்றவை

  1. `சங்க இலக்கியம் கவிதையும் கருத்தும்` – பேரா .கா.சிவத்தம்பி
  2. `உலகத்தமிழாய்வு மாநாடு 2019 கட்டுரை` – புலவர் செந்தலை ந.கவுதமன்
  3. `அறியப்படாத தமிழ்மொழி` -முனைவர் கண்ணதாசன் இரவிசங்கர்
  4. `Annihilation of Caste`- B. R. Ambedkar
  5. `பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி`- பேரா .கா.சிவத்தம்பி.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 சனாதனமும் திராவிடமும்

By   கோதை ஜோதிலட்சுமி  |   Published on : 25th October 2019 01:52 AM  |   அ+அ அ-   |  

 

சனாதன தர்மம் என்பது பாரத தேசத்தில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் ஒரு வாழ்வியல் முறை. சனாதனம் என்பதற்கு எப்போதும் இருப்பது, நிலைத்திருப்பது, அழிவற்றது என்பதே பொருள். இந்த வாழ்வியல் முறை நிலையானது என்பது அதன் முழுமையான பொருள். அறிவியல் தொடங்கி தத்துவங்கள், கோட்பாடுகள், நம்பிக்கைகள் வரை அனைத்துத் துறைகளையும் தனக்குள் கொண்டு ஒற்றை ஒளியாய் உயர்ந்து பல்லாயிரம் ஆண்டுகள் இங்கே நிலைத்திருக்கும் தத்துவம் அல்லது வாழ்வியல் அறம்.
சனாதனத்துக்கு எதிரான போர், தமிழ்ச் சமூக மரபிற்கு முற்றிலும் மாறான எதிரி நிலையில் இருப்பது சனாதன தர்மம் என்று தற்போது தமிழகத்தில் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்தத் தேசத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தை ஆராய்ச்சி செய்தவர்கள், அதனை திராவிட நாகரிகம் என்று நிறுவுகிறார்கள். கீழடி அகழாய்வும் இன்னும் பல தமிழகத் தொல்லியல் ஆய்வுகளும் நமது தொன்மையைப் பறைசாற்றி வருகின்றன. கலாசாரம், வழிபாடு, அறம் சார்ந்த நம்பிக்கைகள் என்று பாரதம் முழுவதும் இந்த மரபின் தொடர்ச்சி இருப்ப
தாகக் கருத முடியும். 
அதேபோல வேதத்தின் காலத்தைக் கணக்கிடுவதிலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்ற முடிவை அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள். ஒரு தேசத்தில் இரு பெரும் முதுமொழிகள் பயின்று வந்திருக்கின்றன. அந்த மொழி பேசுவோர் தங்களுக்குள் பரிவர்த்தனைகள் செய்துகொண்டு மிகச் சிறப்பு மிக்க ஒரு கலாசாரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதன் நீட்சி இன்றளவும் சற்றும் தொய்வின்றி தேசத்தில் நிலைபெற்றிருக்கிறது.
திராவிடம் என்ற சொல் தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக அதிக அளவில் புழங்கி வருகிறது. தமிழ் என்பது மொழி, தமிழர் என்பது அம் மொழியைப் பேசுவோர், திராவிடம் என்ற கோட்பாடு எப்போது உயிர்பெற்றது? திராவிடம் என்பது தமிழைக் குறிக்கும் சொல் என்கிறார்கள். மனுஸ்மிருதி தொடங்கி பல வடமொழி இலக்கியங்களும் திராவிடர் என்ற சொல்லை தேசத்தின் தென் பகுதியில் வாழ்ந்த மக்களைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தியிருக்கின்றன. ஏழாம் நூற்றாண்டில் தென்னிந்திய மக்களை திராவிடர் என்று குமாரில பட்டர் குறித்தார். 
திராவிட சித்தாந்திகள் ஆரம்பத்தில் தென்னிந்திய மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி பேசும் மக்களையும் பிரதேசத்தையும் குறித்தே திராவிட நாடு என்ற கொள்கையை முன்வைத்தனர். இந்தக்  கொள்கையை தமிழர் அல்லாத பிற மொழி பேசும் தென்னிந்திய மக்கள் ஏற்கவில்லை. அதனால் திராவிடம் என்பது தமிழரை மட்டும் குறிப்பதாக சுருங்கிப் போனது. அதிலும், சில பிரிவினரைப் புறந்தள்ளி இன்னும் சுருக்கப்பட்டது. வடமொழியில் வழங்கும் இந்தச் சொல் வடவரின் ஆதிக்கத்திலிருந்து நம்மவரைப் பாதுகாப்பது என்ற சித்தாந்தத்துக்கான சொல்லாக அமைந்திருப்பதே முரண். 
திராவிடர் என்று கூறிக் கொள்வோர் இறை நம்பிக்கை அற்றவர்களாகத் தங்களை முன்னிறுத்துகிறார்கள். இறை நம்பிக்கை என்பது தமிழ்ச் சமூகத்தில் தொன்றுதொட்டு இருந்து வருவது; யாரோ புகுத்தியது அல்ல. தொல்காப்பியம் தொடங்கி சங்க இலக்கியங்களில் பயின்று இறை சிந்தனை இங்கே வேரூன்றியிருக்கிறது. 
சனாதனத்துக்கு எதிராக நிற்போர் இரண்டு காரணங்களை முன்வைக்கின்றனர். ஒன்று, சனாதனம்தான் இந்த நாட்டில் ஜாதியப் பாகுபாட்டை ஏற்படுத்தி அதனை ஊக்குவித்தும் வருகிறது. மற்றொன்று, மதத்தின் பெயரால் அரசியல், அதனோடு தொடர்புடையதே ஜாதியம் என்றும் சாதிக்கிறார்கள். தமிழர்களின் வாழ்வியல் முறையில் இந்த இரு கோட்பாடுகளும் எப்போது தொடங்கின? இலக்கியங்கள் கூறும் சான்றுகளைப் பார்த்தால் ஜாதியம் என்பது அநாதி காலமாக இருந்து வந்திருக்கிறது. பிறப்பால் ஜாதியைக் கூறுவது, அதற்குள் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்தது ஆகியவை அனைத்தையும் நாம் தொல்காப்பியம் தொடங்கி இன்று வரை காண்கிறோம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்... என்ற கோட்பாட்டை திருக்குறள் லட்சியமாக வைக்கிறது. அந்த லட்சியம் ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் இன்னும் எட்டப்படவில்லை.
தொல்காப்பியத்தில் திருமணம் செய்து கொள்வதற்கான பொருத்தங்களைப் பற்றிக் கூறும்போது ஒத்த குடிப்பிறப்பும்என்றுதான் தொடங்குகிறது. அதேபோல் பிரிவு பற்றிக் குறிப்பிடும்போது ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன என்கிறது. உயர்ந்தோர் என்ற பாகுபாடு இருக்குமேயானால் அதன் எதிர்ப்பதமும் சமூகத்தில் இருந்துதானே தீரும். ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று தமிழ் மூதாட்டி ஒளவையார்  பாடும் ஜாதி என்ற கட்டமைப்பு இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் என்று அவர் குறிப்பிடும்போது, இந்த இரண்டுமே சமூகப் பாகுபாட்டில் இருந்தன என்பதை அறிந்து கொள்ளலாம்.
சங்க இலக்கியங்களிலும் புலவர் பெருமக்களின் பெயர் தொடங்கி ஜாதி மற்றும் அதற்கான சான்றுகள் இருக்கத்தான் செய்கின்றன. இன்றளவும் ஜாதியப் பாகுபாடு தமிழ்ச் சமூகத்தில் புரையோடிப் போன நிலையில் இருக்கிறது. இவை களையப்பட வேண்டும். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் உருவாக நமக்குள் இருக்கும் பிணக்குகள் தீரவேண்டும். ஆனால், இதனை சனாதனம்தான் கற்றுத் தந்தது என்று சாதிப்பதும் ஜாதியம் தமிழரின் மரபு அல்ல என்று வாதிடுவதும் பிரச்னையைத் தீர்ப்பதற்கான வழியாகாது. 
அடுத்து, சமயம் என்பது தமிழருக்கு இருந்ததில்லை என்பதாக ஒரு கருத்தைப் பரப்புகிறார்கள். முற்றிலும் தவறான வாதம். கடவுள் வாழ்த்து இல்லாமல் எந்த இலக்கியமும் காணப்படவில்லை. சனாதனம் கூறும் பல தெய்வ வழிபாட்டை தமிழர் மரபும் நிலப் பாகுபாட்டில் ஒவ்வொரு நிலத்துக்கும் ஒரு தலைமை தெய்வத்தைக் குறிப்பிடுவதைக் காண்கிறோம். நிலத்துக்கான முதற்பொருள் கூறும்போது தெய்வம் எனத் தொடங்குகிறது.முதன்மையானதாக நிற்பது தெய்வம் என்பதை தொல்காப்பியம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
தமிழர் மரபை என்றைக்கும் உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கும் இலக்கண நூலான தொல்காப்பியம் கூறும் தெய்வ நம்பிக்கை, ஊழ் பற்றிய கருத்தும் எதன் பாற்பட்டவை? ஊழ் பற்றிய நம்பிக்கையை சங்க இலக்கியங்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், பெருங்காப்பியங்கள் எனஎல்லாவற்றிலும் காண்கிறோம். மறுபிறப்பு நம்பிக்கை வானியல் சார்ந்த அறிவு, அது சார்ந்த நம்பிக்கைகள் வழிபாட்டு முறைகள் கடவுள் எனும் சொல் ஆகியவை அனைத்தையும் சங்க இலக்கியத்தில் காண்கிறோம். மறுபிறப்பு மேலுலகம் துறவு ஊழ் நீத்தார் கடன் என்று சனாதன தர்மம் பேசும் பலவற்றையும் திருக்குறள் தெளிவாகப் பேசுகிறது. 
வேதநெறி என்பதும் தமிழர் நெறி என்பதும் வேறு வேறானவை என்று சாதிக்க முயற்சிக்கும்போது சங்க இலக்கியங்களில் பயின்று வரும் முனிவர்கள், தேவர்கள், வேதம் பற்றிய குறிப்புகள், யாகம், வேள்வி நடத்தும் விதம் போன்ற பல செய்திகள் பதிவு செய்யப்பட்டிருப்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. சனாதனம் என்றும் தமிழர் நெறி என்றும் எதனையும் பகுத்துக் கூறுவதைக் காட்டிலும் இரண்டுக்குமான பொதுமைகளை ஏற்றுக்கொண்டு இரண்டும் நம்முடையதே என ஏற்பதே சரி.
வேதம் தமிழ் செய்த நம்மாழ்வார் என்று வைணவமும், வேத நெறி தழைக்க சைவத் துறை விளங்க என்று சைவமும் கூறுவதையும் அதைத் தமிழ்கூறும் நல்லுலகம் ஏற்று இன்றுவரை போற்றுவதும் மறுப்பதற்கில்லை. தமிழகத்தில் அமைந்திருக்கும் ஆலயங்களும் சமய இலக்கியங்களும் இந்த மண்ணின் மக்களின் சமயப் பற்றுக்கு எடுத்துக்காட்டு. மத நம்பிக்கைகளிலும் மரபுகளிலும் பொதுமைப் பண்புகள் நிறைந்திருக்கின்றன. சனாதன தர்மம் நான்கு வகை ஜாதியப் பாகுபாடுகளை மட்டுமே சுட்டியிருக்கிறது. ஆனால், இன்றைக்கு ஆயிரக்கணக்கான ஜாதிப் பிரிவுகளும் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற புரையோடிய நிலையும் எங்கிருந்து தோன்றின? 
திராவிடர் என்போர் இந்தத் தர்மத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள் என்ற கொள்கையை முன் வைத்தவர்கள் யார் என்று பார்த்தால், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த, இந்தியாவைக் கண்கொண்டு பார்த்திராத ஐரோப்பியர்கள் அல்லது மதத்தைப் பரப்புவதற்காகத் தென்னகம் வந்த பாதிரியார்கள். ஏன் இத்தகைய வேறுபாடுகளை அவர்கள் கற்பித்தார்கள்?   இதற்கான விடையை நடுநிலையோடு நின்று சிந்தித்து, தரவுகளை ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டியது தமிழ்ச் சமுதாயத்தின் பொறுப்பு.  
நிலவுடைமைச் சமூகம் என்றைக்குத் தொடங்கியதோ அன்றைக்கே மனிதர்களிடையே இது என்னுடையது என்ற சுயநலம், உயர்வு-தாழ்வு கற்பித்துக் கொள்ளப்பட்டது. இதிலிருந்து மாறி சமத்துவ சமூகம் உருவாக வேண்டும் எனும் கருத்தை சனாதன தர்மம், தமிழர் நெறி ஆகிய இரண்டும் போதிக்கின்றன. லோகா சமஸ்தா சுகினோ பவந்து சர்வே ஜனா சுகினோ பவந்து என்கிறது வடமொழி. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் 
பராபரமே (தாயுமானவர்) என்கிறது தமிழ் நெறி. பாரதத்தில் இடத்திற்கேற்ப மொழி மாறுபடலாம்; அறம் மாறுபடுவதில்லை.
கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

இதிகாசங்கள், சங்க இலக்கியங்கள் எவற்றிலும் ஜாதி ஏற்றத்தாழ்வு பெரிதுபடுத்தப்படவில்லை. ஜாதி சண்டைகளும் நடந்தது இல்லை. இடைக்காலத்தில் விதைக்கப்பட்ட சதியும், விதியும் தான் ஜாதியாகிவிட்டது. நம்முடைய இந்து சாம்ராஜ்யத்திற்கு அடித்தளம் இட்ட சிவாஜியையும், அதற்காக நம்மை தயார்படுத்திய விவேகானந்தரையும் ஜாதி, மொழி பார்ப்பதில்லை. மதத்தை நேசித்தவர்கள் உலகத்தால் கொண்டாடப்படுகின்றனர். அவர்களை சில பேர் தவறாக புரிந்து கொண்டு சாதிச்சிறையில் அடைப்பதால் அவர்கள் பெயரை அவமானப்படுத்துகிறார்கள். மதம் என்பது முகம். ஜாதி என்பது முகமூடி. நிரந்தரமானது முகமே. இந்த மண்ணுக்காக போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனை அவன் ஜாதியைச் சேர்ந்த எட்டப்பன் காட்டிக்கொடுத்து தூக்கு மேடைக்கு அனுப்பினான். ஆனால், அவன் தம்பி ஊமத்துரையை மதத்தையும் மண்ணையும் நேசித்த மருதுபாண்டியர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்து காப்பாற்ற முயற்சித்தார்கள். இங்கு காட்டிக்கொடுப்பதற்கு ஜாதியும், உலகப் புகழ் பெற உயர்த்துவதற்கு மத நம்பிக்கையும் தேசப்பற்றுமே உதவும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இந்து மதத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இந்த மதத்தின் ஜாதி அமைப்புகளை ஆதரிக்கிறார்கள். அதை தூண்டுபவர்களை வரவேற்கிறார்கள். அவர்களின் சதி வலையில் இந்து சிக்கிக் கொள்ளக் கூடாது. ஜாதி கொடுமை(வெறி) யை இன்று நாம் துரத்த முயல்கிறோம்,முயல்வோம­்! சாக்கடை இருக்கின்ற இடத்தில் கொசு வருவது போல ஜாதி வெறி என்ற சாக்கடை இங்கே துர்நாற்றம் அடித்துக் கொண்டிருப்பதால் கிறிஸ்தவ மதம் என்ற உதிரத்தை உறிஞ்சும் கொசு தாரளமாக வளர்கிறது. வெளியில் தெரியாமல் அமுங்கிக் கடக்கும்,இந்த ஜாதி அசிங்கம் இன்னும் கூட அரக்க மனம் படைத்த சில இந்துக்களின் மனதில் இருந்துக் கொண்டிருக்கிறது. சில ஈன பிறவிகள் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி ஆதாயம் காண்கின்றனர். பன்றி க்கு சேற்றில் புரள்வது இன்பமாக இருப்பது போல இவர்களுக்கு ஜாதி சண்டையை கிளறுவதில் தான் இன்பம் இருக்கிறது. இவர்கள் மனம் போன போக்கில் இந்துக்கள் மத்தியில் பிளவையும்,வெறுப்பையு­ம் உண்டக்குவதற்க்கு கடந்தகால வரலாறுகளை திரித்து அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பாமர மக்களின் மனதில் விஷத்தை விதைத்து,பாரதத்தை நிரந்தர அடிமை நாடாக (வைத்திருக்க)மாற்ற முயல்கிறார்கள். இவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து ஜாதி சாக்கடைகளை நாம் ஒரேயடியாக மூடி விட விரும்புகிறோம். நீங்கள்... ??? ௭னது நட்பு வட்டத்தில் ஜாதி பதிவுகள் போட்டு ஹிந்து சகோதரர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் துரோகிகளை நட்பு வட்டத்தில் இருந்து விலக்குகிறேன்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard