New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உறங்குவது போலும் சாக்காடு


Guru

Status: Offline
Posts: 24811
Date:
உறங்குவது போலும் சாக்காடு
Permalink  
 


ஒருகுறள் - மறுவாசிப்பு

 

முனைவர் க. பாலசங்கர்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
ஆர்.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
இனாம்குளத்தூர், திருச்சி.

 

tirukkuralreading.jpg

 

முன்னுரை
உலகத்தில் தமிழ் இலக்கணம் போன்று உலகில் எந்தவொரு இலக்கணமும் இல்லை, அந்த அளவிற்குச் சிறப்பு வாய்ந்தது. அதே போன்று இலக்கியமும் சிறப்பு வாய்ந்ததுதான். அதிலும் குறிப்பாக, குறைந்த அடியாக விளங்கும் குறளின் சிறப்பு அளவிடற்கரியது. தமிழ் இலக்கியத்தில் அதிகமாக ஆராய்ச்சி செய்யப்பட்டது என்ற சிறப்பைப் பெற்றது திருக்குறள். எந்தக் காலத்தில் ஆராய்ச்சி செய்யப்பட்டாலும், அதன் பொருள் மாறாமல், மேலும் மேலும் ஆராய்ச்சிக்கு வித்திடும் இலக்கிய நூல் என்று கூறினாலும் அது மிகையில்லை. அப்படிப்பட்ட திருக்குறள் இங்கே மறுவாசிப்பு செயப்படுகிறது.

 

கட்டுடைப்பு (Deconstruction)
மனிதன், உலகம் மற்றும் அர்த்தங்கள் உருவாக்குகின்ற அல்லது மறுஉற்பத்தி செய்யும் போக்குகள் இவற்றுக்கிடையே உள்ள உறவு பற்றிய பேசும் கொள்கை அல்லது கோட்பாட்டுத் தொகுப்பே” என்கிறது பின்அமைப்பியல் (1)

மறுவாசிப்பு என்பதைக் கட்டுடைப்பு என்றும் கூறாலம். வேறு ஒன்றாக வித்தியாசப்படுத்தப்பட்டுள்ள ஒன்று (உதாராணம், நல்லது / கேட்டது) எப்படி அதனுள்ளேயே புகுந்துள்ளது என்றும், விலக்கி வைக்கப்பட்ட ஒன்று எப்படி அதனுள்ளேயே (விலக்கி வைத்த கருவியுனுள்ளேயே) ஊடுருவிக் கிடக்கிறது என்பதையும் ஆராயும் தத்துவார்த்தமுறை” என்று விளக்கப்படுகிறது. (2)

வாசிப்பு என்ற கோட்பாடு, ஒருமுறை வாசிப்பதைப் பற்றிக் கூறவில்லை மறுபடியும் மறுபடியும் படிப்பது என்று கூறுவார் செ. வை. சண்முகம். (3) “மாத்திரை முதலா அடிநிலைகாறும் நோக்குதல்” இதைத் தொல்காப்பியர் நோக்கு என்று கூறுவார்.

இது பொருள் முதல் வாதம் என்றாலும், பொருள் முதல் வாதத்திற்கு அடிப்படைக் காரணம் மொழி. மொழியின் ஆளுமையால் கையாளப்பட்டு அதை ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார். பொருள் முதல் வாதத்தில் எப்படி மேல் / கீழ், மறைக்கப்பட்ட ஒன்று, எப்படி வாசகனால் வாசிக்கப்படுகின்றது என்பதை நோக்கியதாகும். எப்படி மேல் / கீழ் என்று உணரப்படுவதோ அதேபோல் மொழி அமைப்பிலும் ஆசிரியரின் மொழி ஆளுமை மேற்கொள்ளப்படுகிறது.
குறள்
குறள், வெண்பா அமைப்பை உடையது. அதில் ஆசிரியர் வெண்பாவைத்தான் பயன்படுத்த வேண்டும். அதிலும் எதுகை, மோனை, இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை என்று ஒரு கட்டமைப்பை வைத்துள்ளது. அதே போன்று முதல் அடியில் நான்கு சீரும், இரண்டாமடியில் மூன்று சீரும் கையாளப்பட வேண்டும் என்பது விதி. அதை மீறி ஒன்றும் வரக்கூடாது.

இந்தக் குறளில் அடி மோனையும் இல்லை, அடி எதுகையும் இல்லை. ஆனால் சீர் மோனையும் (உறங்கு - உறங்கி) உள்ளது, சீர் எதுகையும் (உறங்கு - உறங்கி) உள்ளது. சீர் மோனையும் சீர் எதுகையும் ஒரூஉ அமைப்பில் அமைந்துள்ளது.

“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு” (குறள் 339)

இந்த யாப்பு அமைப்பில் பயன்படுத்தும் போது மேல் / கீழ் போன்று எதிர்மறை / முரண்கள் வரும் சொற்களாகவும் வரலாம்.

வள்ளுவரைப் பொருத்தளவில் இதைச் செய், இதைச் செய்யாதே, இதைச் செய்தால் இது (நல்லது) நடக்கும், இதைச் செய்தால் இது (கெட்டது) நடக்கும் என்று அறிவுரை கூறுவது போன்ற அமைப்பில் அமைத்திருப்பார். மொழி அமைப்பைப் பொருத்தவரை குறிப்பான் அவசியமாகிறது. குறிப்பான் என்றால் ஒரு அடையாளத்தை வைத்து இதற்கு இது அமைந்துள்ளது என்று கூறுவது. எடுத்துக்காட்டு பெண்பா என்றால் எந்த பா அமைப்பும் அமையாமல், தன் இனமான சீர்கள் மட்டுமே வரவேண்டும் என்ற ஒரு நோக்கத்தைக் கொண்டது என்ற கொள்கை அதில் பொருந்து கிடக்கிறது. அதேபோல் தான் குறிப்பான் - குறிப்பான் (Signifier) அர்த்தம் பொதிந்ததாகப் கருதப்படும் ஒரு சப்தம், உருவம், எழுத்து வடிவம், பொருள், பழக்க வழக்கம் அல்லது உடல் அசைவுகள்” என்று விளக்கம் தரப்படுகிறது. (4) அடையாளத்தைக் கொண்டு அதன் தன்மைகளை ஆராய்ந்து பார்க்கலாம். எடுத்துக்காட்டாக; தீ சுடும் என்று சொன்னால் அந்த வார்த்தைக்குள் தீ சுடும், பிறகு அதனால் காயம் ஏற்படும், அந்தக் காயம் ஆறுவதற்கு நீண்ட நாள் ஆகும் என்பது போன்று நாம் அடுக்கிக் கொண்டே போவது போன்று, இறத்தல் என்ற வார்த்தையைக் கேட்டாலே மக்கள் அஞ்சுகிறார்கள். உயிரோடு இருக்கும் ஒருவன் இனிமேல் வரவே மாட்டான், அவனை இனி பார்க்கவே முடியாது, இனிமேல் எப்பவுமே பார்க்க முடியாது. பார்க்க வேண்டும் என்றால் ஒளிப்படத்தில் தான் பார்க்க வேண்டும் என்ற சிந்தனை எல்லாம் அந்த வார்த்தைக்குள் அடக்கியிருக்கிறது. இதேபோன்றுதான் பிறப்பு என்பதும் முன்பின் அறிமுகமே இல்லாமல் தோற்றமுங்கூட, எப்படி இருக்கும் என்று தெரியாத ஒரு உருவம் கிடைப்பது என்பதை உணத்தும் சொல் இது. இப்படியாக ஒரு வார்த்தையைக் கேட்கும் போது இதுபோன்ற சிந்தனையைத் தெரிவிக்கிறது மறுவாசிப்பு.

 

வேற்றுமை

 

வேற்றுமை என்பது பொருளை வேறுபடுத்துவது. பொருளை வேறுபடுத்த வரும் உருபுகள் வேற்றுமை உருபுகள் எனப்படுகிறது. வேற்றுமை எட்டு என தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்கள் சொன்னாலும் வேற்றுமை உருபு ஆறு தான் என வரையறுக்கின்றன.

திருக்குறளில் இரண்டாம் வேற்றுமைத் தொகையாக அமைந்துள்ள பாடலாக 511, 463, 339 போன்ற பாடல்கள் காணப்படுகின்றன.

“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு” (குறள் 339)

இதில் இரண்டாம் வேற்றுமையாக அமையக்கூடியது. உறங்குவது / விழிப்பது போன்ற சொற்கள் மட்டுமே

உறங்குவது - உறங்குவதைப் போன்றது

விழிப்பது - விழிப்பதைப் போன்றது

சாக்காடு என்பது உறங்குவது (தூங்குவது)போல், பிறப்பு என்பது உறங்கி விழிப்பது போல் என்று விளக்கம் தருகின்றார் வள்ளுவர். மனிதன் ஒவ்வொரு நாளும் இரவு தூங்கி காலையில் எழுந்திருப்பது என்ற ஒரு கருத்தை வள்ளுவர் ஒப்பிடுகின்றார்.


இரவு தூங்குவது - செத்துவிட்டது என்றும், காலையில் எழுந்திருப்பது செத்தவன் மீண்டும் எழுந்திருப்பது என்றும் கூறுகின்றார். தமிழர்கள் ஒரு பழமொழி கூறுவார்கள் “நான் தினமும் செத்துச்செத்துப் பிழைக்கின்றேன் என்று கூறுவதைக் கேட்டு இருக்கலாம். அதேபோல்தான் வள்ளுவரும் இறப்பை இவ்வாறு கூறுகின்றார். உறங்குவது என்பதற்கு முரண் விழிப்பது, விழிப்பது என்பதற்கு முரண் உறங்குவது. இதுபோல் பிறப்பு - இறப்பு என்று இரண்டு கருத்துக்களை விளக்குகிறார். மனிதனுக்குப் பிறப்பு என்பது ஒரு முறைதான் அதுபோல் இறப்பு என்பதும் ஒரு முறைதான். உறங்கும் ஒவ்வொரு மனிதனும் விழிக்கிறான். ஒவ்வொரு உறங்கும் மனிதனுக்கும் விழிப்பு என்ற ஒன்று உறுதி. தொடக்கம் ஒன்று இருந்தால் முடிவு ஒன்று இருந்துதான் ஆகவேண்டும் என்பது விதி.

உறங்கி என்றவற்றுடன் இடைவிடாமல் உறங்குவதுடன் உறங்கி விழிப்பது என்ற கருத்தை முடித்து விட்டார். வாசகனை உறங்கு என்ற சொல்லாலேயே வேறு ஒரு சிந்தனைக்கு இடங்கொடாமல் உறங்குவது சாக்காடு, உறங்கி விழப்பது பிறப்பு என்று கூறிவிட்டார். இதுதான் இந்தக் குறளின் நிலைத்த பெருமை எனலாம். உறங்குவது சாக்காடு என்று சொல்லிவிட்டு விழிப்பது இறந்தது போன்றது என்று சொல்லி இருக்கலாம், ஆனால் வள்ளுவர், அவ்வாறு சொல்லாமல் உறங்கு என்ற அடைமொழியை வைத்தே விழிப்பது என்று சொன்னதுதான் சிறப்புக்கு அடிப்படை. இதுதான் ஒரு நல்ல கவிஞனுக்கு இலக்கணம். சாக்காடு உறங்குவதைப் போன்றது, பிறப்பு உறங்கி விழிப்பதை என்று இருக்கவேண்டும். ஆனால் கவிஞர் பயனிலையை, எழுவாய்க்கும் வேற்றுமைக்கு இடையில் வைத்துள்ளார் என்பது ஒருவகைச் சிறப்பு. இந்த “இடமாற்றத்தை முற்படுத்தல் (Fronting) என்பர் மொழியியலாளர்கள் என்கிறார் அகத்தியலிங்கம் (5)

உறங்குவது - சாக்காடு

(உறங்கி) விழிப்பது - போலும் - பிறப்பு

இதில் இரண்டாம் வேற்றுமை மட்டும் வருவது இல்லை. மூன்றாம் வேற்றுமையும் வரும். “உறங்குவது போலும்” என்பதற்குப் பழைய உரையாசிரியர்கள் அனைவரும் “உறஙகுவதனோடு ஒக்கும்” என்று மூன்றாம் வேற்றுமையாகவும் கூறுவர் என்கிறார் அகத்தியலிங்கம் (6)

எழுவாய் செயப்பொருளோடு ஒத்தது என்ற வினை சேர்ந்தால் மூன்றாம் வேற்றுமை வரும். வேற்றுமை உருபுக்கு அடுத்து “போல்” என்ற பயனிலை வந்தததால் இது இரண்டாம் வேற்றுமை வருவதுதான் சிறப்பு.
தத்துவம்
இந்தக் குறளில் நிலையாமையை வலியுறுத்துகிறார். மனிதனின் பிறப்பு, இறப்பு என்பது அவனவன் ஊழ்வினைக் குறித்து என்பதைத் தத்துவங்கள் குறிப்பிடுவதை இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதே போல் பிறப்பு போன்று, இறப்பும் எதார்த்தமாக நடக்கும் ஒன்று இதனைக் கண்டு அஞ்ச வேண்டாம் என்றும் கூறுகின்றார் அகத்தியலிங்கம் (7) பௌத்தக் காப்பியங்கள், பிறந்தவர் சாதலும், இறந்தவர் பிறத்தலும், உறங்கலும் விழித்தலும் போன்றது என்கிறார் சோ. நா. கந்தசாமி (8) தத்துவக் கருத்துக்களை வெளிப்படுத்தும் போக்காக இருந்தாலும் பிறப்பு, இறப்பு என்பது ஒரு சம்பவம்தான் அதைக் கண்டு அஞ்ச வேண்டாம் என்பது வள்ளுவரின் ஆழந்த கருத்து. நிலையாமையை உணர்த்தினாலும் மறுவாசிப்பு செய்யும் போது பிறப்பு இறப்பு ஒரு முறைதான் ஒவ்வொரு மனிதனுக்கும் வரும். அதனால், இருக்கும்போது இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவவேண்டும் என்றும், இதனைப் பௌத்தக் கருத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் இடம் தருகிறது.
வகையுளி
வகையுளி என்பது அசை, சீர், அடி என்ற மூன்று நிலையிலும் வரும் என்றும், அவை பொருள் தொடர்பு இல்லாமல் ஓசை தொடர்பு உடையது என்றும் கூறுகின்றார் யாப்பருங்கலம் ஆசிரியர். (9)

இதற்கு இளம்பூரணர் செய்யுள் இசை, மொழி இசையோடு மாறுபட்டு வரும் போது முன்னதற்கே (இசை) முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிறார்.

“அருள்நோக்கும் நீரார் அசைசீர் அடிக்கண்
பொருள்நோக்கா(து) ஓசையே நோக்கி மருள்நீக்கி
கூம்பவும் கூம்பாது அலரவும் கொண்டியற்றல்
வாய்ந்த வகையுளியின் மாண்பு”

வகையுளி என்பது யாப்பின் எல்லா நிலையிலும் வரும் என்ற யாப்பருங்கலவிருத்தி கூறினாலும் சீர் வகையுளி மட்டுமே பரவலாக அறியப்பட்டுள்ளது என்கிறார். (9)
உறங்குவது போலும் சாக்காடு
உறங்குவது போலும் என்று பொருள் கொள்ளப்படுகிறது. ஏனென்றால் உறங்குவது போல் என்று பொருள் கொண்டால் தவறாகக் கொள்ளப்படும். எனவேதான் பொருள் கொள்ளும் போது பிரித்துப் பொருள் கொள்வது சிறப்பாகும். இதற்காகத்தான் இலக்கணத்தார்கள் வகையுளி என்ற வகையைக் கூறுகின்றார்கள் எனலாம். யாப்பின் தன்மை கெட்டுப்போகும் என்பதால் ஆசிரியர் இவ்வாறு கையாண்டுள்ளார் என்பது திண்ணம்.

பொருளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதா? அல்லது யாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதா? என்றால் யாப்புக்குத்தான் கொடுக்க வேண்டும் என்பது யாப்பியலாளர்கள் கொள்கை. ஏன் பொருளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால், பொருள் என்பது சொற்களைக் கொண்டும் இப்படித்தான் பொருள் கொள்ள வேண்டும் என்று தாய் மொழியாளர்களுக்குத் தெரியும் என்பதால் இவ்வாறு கூறுகிறார்கள் எனலாம். இது வாசகனுக்குப் படைப்பாளார் விட்டுச் செல்வது. இதுபோன்ற சூழ்நிலையில் அதிகப் பொருள் மாற்றம் ஏற்படும் நேரத்தில்தான் உரையாசிரியர்களின் உரை முக்கியத்துவம் பெறுகின்றன.

 

முடிவுரை

 

* திருக்குறள் பெருமைகளில் பொருள் உணர்த்தும் போக்கிலும் அதுதான் முதன்மை எனலாம். திருக்குறளில் பொருள் பெறுவதற்கான இடைவெளி அதிகம் காணப்படுகிறது. படைப்பாளி குறுகிய அடிகளுக்குள் தான் நினைத்த எல்லாவற்றையும் கூற முடியாத நிலை உள்ளதால் மறுவாசிப்புக் கோட்பாடு இதற்குப் பொருந்தி வருகின்றது என்பதை மேற்கண்ட ஆய்விலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

* திருக்குறளில் வடிவ அமைப்பு என்று பார்க்கும் போது இலக்கணம் முதன்மை பெறுகிறது. அதிலும் குறிப்பாக யாப்பிலக்கணம் முன்னிற்கிறது. நாம் எடுத்துக் கொண்ட ஆய்வின் குறள் இரண்டடி கொண்ட வெண்பா அமைப்பு ஆகும். தொடை நயமும் வகையுளி யாப்பும் அமைந்துள்ளதையும் காணலாம்.

* மொழி இலக்கணம் என்று பார்க்கும் போது வேற்றுமைகள் தொகைகளாக இடம் பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக இரண்டாம் வேற்றுமைகளும், மூன்றாம் வேற்றுமைகளும் வந்துள்ளன.

* கருத்து அடிப்படையில் பௌத்த சமயக் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது என்று மறுவாசிப்பு செய்யும் போது உணரமுடிகிறது.

 

அடிக்குறிப்புகள்

 

1. கேதரின் பெல்ஸி பின் அமைப்பியல் மிகச் சுருக்கமான அறிமுகம், தமிழில் அழகரசன், அடையாளம், புத்தாநத்தம். ப - 7

2. மேலது, ப -162

3. குறள் வாசிப்பு, செ. வை. சண்முகம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். ப - 16

4. கேதரின் பெல்ஸி பின் அமைப்பியல் மிகச் சுருக்கமான அறிமுகம், தமிழில் அழகரசன், அடையாளம், புத்தாநத்தம். ப - 7

5. குறள் மொழி, அகத்தியலிங்கம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். ப -130

6. மேலது, ப -131

7. மேலது, ப -131

8. தமிழும் தத்துவமும், சோ. ந. கந்தசாமி, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். ப-39

9. யாப்பும் நோக்கும், செ.வை. சண்முகம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். ப-55


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard