திருக்குறளை கொளுத்தச் சொன்ன பெரியார்!
– ஓவியர் வேணு கோபால் சர்மா
1964ஆம் ஆண்டு பாரதி தாசன் மறைந்த போது பெரியார் அவர்கள் இரங்கலும் தெரிவிக்க வில்லை. இறுதிச் சடங்கிலும் கலந்து கொள்ள வில்லை. ஆனால் பாரதிதாசன் மறைவுக்குப் பிறகு திருவள்ளுவர், பாரதிதாசனை ஒப்பிட்டு பேசத் தொடங்கினார். பாரதி தாசனை உயர்த்தியும், திருவள்ளுவரை தாழ்த்தியும் பேசியதோடு, வள்ளுவர் படமே இருக்கக் கூடாது என்று பேசி வந்தார்.
பாரதிதாசன் உயிரோடு இருந்திருந்தால் வள்ளுவரை தனக்கு எதிராக நிறுத்தும் பெரியாரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பை கட்டாயம் தெரிவித்திருப்பார்.
பெரியாரும், பாரதிதாசனும் ஒரே மேடையில் பேசிய நிகழ்வுகள் பலவுண்டு. திருக்குறளுக்கு எதிராக பெரியார் பேசிய போதெல்லாம் பாரதிதாசன் உடன்பட மறுத்தும் கூச்சலுக்கு இடையே ஓங்கியும் பேசியுமுள்ளார்.
இது குறித்து திருவள்ளுவர் படம் வரைந்து தமிழகமெங்கும் கொண்டு சேர்த்த ஓவியர் வேணு கோபால் சர்மா அவர்கள் பெரியாரின் திருக்குறள் எதிர்ப்பை தான் எழுதிய கட்டுரை ஒன்றில் பதிவு செய்துள்ளார். இவர் பாரதிதாசனின் உற்ற நண்பருமாவர். அது பின்வருமாறு:
“இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த நேரம். சென்னை நகர மக்களெல்லாம் குடிபெயர்ந்து வேற்றூர்களுக்குச் சென்று கொண்டிருந்தனர். திருச்சி தேவர் ஹாலில் சுயமரியாதை மாநாடு ஒன்று நடைபெற்றது. திருவாளர்கள் செளந்தர பாண்டியன், பெரியார் ஈ.வெ.ரா., பட்டுக்கோட்டை அழகிரி சாமி, ஈழத்தடிகள், அறிஞர் அண்ணா, போன்ற பெரிய தலைவர்கள் அம்மாநாட்டில் கலந்து கொண்டனர். பாவேந்தரும் மேடையில் இருந்தார். மற்றொரு நாற்காலி வரச்சொல்லி என்னை அழைத்து அருகில் உட்கார வைத்துக் கொண்டார். நெற்றியில் குங்குமம் அணிந்து ஆத்திகக் கோலத்துடன் அமர்ந்திருந்த என்னை எல்லோரும் ஒரே மாதிரியாகப் பார்க்கத் தொடங்கினர். யாரோ ஒரு சு.ம. தோழர் பாவேந்தரின் அருகில் வந்து “யாரிவர்?” என்று மெதுவாகக் கேட்டும் விட்டார்.
பாவேந்தர் அந்தத் தோழரைப் பார்த்து “அவரா? அவர் ஓர் உலகம்!போ!போ! என்று கூறினார். எதிர்ப்புக்கு அஞ்சாத அவர் துணிச்சலை நான் வியந்தேன். அவர் மீது நான் கொண்டிருந்த மரியாதை பன்மடங்கு உயர்ந்தது.
அப்போது பெரியார் ஈ.வெ.ரா. குடியரசில் இராமாயண ஆராய்ச்சி எழுதிக் கொண்டிருந்த நேரம். மாநாட்டு மேடையில் இராமாயணத்தைக் கடுமையாக தாக்கியதோடு கொளுத்தவும் செய்தார். இராமாயணத்தைப் போலவே குறளும் வைதீகத்தை ஆதரிப்பது என்று சொல்லி அதையும் கடுமையாக விமர்சனம் செய்தார். அதையும் கொளுத்த வேண்டும் என்று சொன்னார். ஆனால் பாவேந்தருக்கு அக்கருத்து உடன்பாடு இல்லை. திருக்குறளின் அடிப்படையில் கழகத்தை அமைக்க வேண்டும் என்பது அவர் கருத்து.”
( வேணு கோபால் சர்மா எழுதிய “உள்ளத்தில் எழுதிய ஓவியம்” கட்டுரை. கவிஞர் முருகு சுந்தரம் தொகுத்த “பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்” நூலிலிருந்து. பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிடு. )
அவரைப் போலவே , பாரதிதாசனின் மற்றொரு நண்பர் மதுரை தனுஷ்கோடி ராஜு என்பவர். இவர் மதுரையில் பாரதிதாசன் மன்றம் அமைத்து நடத்தியவர். மதுரையில் பாரதிதாசனுக்கு மணி விழா நடத்த முற்பட்டவர். அன்றைய சென்னை மாகாண முதல்வர் குமாரசாமி அவர்களிடம் பாரதிதாசனை அழைத்துச் சென்று பாராட்டு பெற்றுத் தந்தவர். அவர் எழுதிய கட்டுரை பின்வருமாறு:
“விருது நகரில் திருக்குறள் மாநாடு. பெரியார் பேசும் போது ” மற்ற புராண இதிகாசங்களைப் போலத் திருக்குறளும் மோசந்தான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காட்டுமிராண்டிக் காலத்தில் எழுதப்பட்ட இந்நூல் இந்தக் காலத்துக்குப் பொருந்தாது. இதுவும் தமிழருக்கு ஒவ்வாத நூலே!” என்று கூறினார்.
பெரியாருக்குப் பின் பேச எழுந்த பாவேந்தர் பெரியார் பேச்சை மறுத்தார். லேசாகக் கூட்டத்தில் அதிருப்திக் குரலும் , ஆரவாரமும் எழுந்தது. பாவேந்தர் பேச்சை முடித்துக் கொண்டார். பிற்பகல் நிகழ்ச்சிக்குப் போக வேண்டாம் என்று கூறி இவரைத் தடுத்து நிறுத்தி விட்டோம்.”
(மதுரை தனுஷ்கோடி ராஜூ எழுதிய “நோபிள் பரிசு கிடைத்திருக்கும்” கட்டுரை. கவிஞர் முருகு சுந்தரம் தொகுத்த “பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்” நூலிலிருந்து. பாரதி தாசன் பல்கலைக்கழகம் வெளியிடு.)
பெரியார் திருக்குறளை எதிர்த்த காலத்திலேயே அதனை ஆதரித்து பாரதிதாசன் பேசியுள்ளார் என்பது வெள்ளிடை மலை. இது தெரிந்தும் பெரியார் வள்ளுவத்தை எதிர்க்க பாரதிதாசனை கேடயமாக பயன்படுத்தியதை தெரியாமல் செய்த செயலாக எண்ணத் தோன்றவில்லை.