காலச்சுவடு நவம்பர் 2019ல் வெளிவந்த கட்டுரை:
பழங்காலப் பானையோடுகள் மற்றும் கல்வெட்டுகளின் கதை
இன்று பானை ஓடுகள் மிகவும் புகழ் பெற்று விட்டன. கீழடியில் கிடைத்திருக்கும் பானை ஒடுகளைப் பற்றி பல பதிவுகள் வந்து விட்டன. அகழ்வாராய்ச்சியில் பானை ஓடுகள் கிடைப்பது இது முதல்முறை அல்ல. பெயர்கள் எழுதப்பட்ட பானை ஓடுகள் கிடைப்பதும் இது முதல்முறை அல்ல. அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல், போன்ற இடங்களிலும் பானையோடுகள் கிடைத்திருக்கின்றன. சொல்லப்போனால் உலகெங்கிலும் பானையோடுகள் தோண்டும் போதெல்லாம் கிடைக்கின்றன. உலகின் மிகப்பழைய பானையின் வயது 20,000 ஆண்டுகள். சீனாவில் கிடைத்திருக்கிறது. இந்தியாவில் பானைகள் சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே வனையப்பட்டன.
கீழடியில் கிடைக்கும் பானையோடுகள் பேசப்படுவதின் காரணம் அவற்றின் மீது பொறிக்கப்பட்டிருக்கும் பெயர்கள். முன்னால் கிடைத்த பானையோடுகளிலும் பெயர்கள் கிடைத்திருந்தாலும் கீழடியில் இவை மிக அதிகமாகக் கிடைத்திருக்கின்றன என்ற செய்தியும், அங்கு கிடைத்திருக்கின்ற கரித்துண்டின் வயது கிமு ஆறாம் நூற்றாண்டு என்ற செய்தியும் இங்கு கிடைத்திருக்கும் பானையோடுகளை மிக முக்கியமானதாக ஆகின்றன. இவற்றை ஆதாரமாக வைத்துக் கொண்டு கரித்துணடின் வயதை பானையோடுகள் மேல் ஏற்றி இந்தியாவிலேயே எழுதும் முறை தமிழ்நாட்டில்தான் கண்டு பிடிக்கப்பட்டது என்று சில தமிழ் அறிஞர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். கரித்துண்டின் அதே வயதை பானை ஓடுகள் மீது ஏற்ற முடியாது. அது எந்த அடுக்கில் கிடைத்ததோ அந்த அடுக்கின் வயதைத்தான் அதில் கிடைக்கும் மற்ற பொருட்களுக்குக் கொடுக்க முடியும். அதற்கும் பல நிபந்தனைகள் இருக்கின்றன. நாம் அந்த விவாதத்திற்குள் செல்ல வேண்டாம். நாம் பானை ஓடுகளில் எழுதியிருப்பவை என்ன என்பதைப் பற்றிப் பேசுவோம். அவற்றைப் பற்றி மற்றைய வரலாற்று அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றிப் பேசுவோம். எழுத்துக்கள் பானையோடுகளில் மட்டும் அல்ல, கல்வெட்டுகளிலும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. எனவே பானையோடுகளை மட்டும் நாம் கருத்தில் கொள்ள முடியாது. கல்வெட்டுகளில் என்ன எழுதப்பட்டிருக்கின்றன என்பதையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும்.
எழுத்தைக் கண்டு பிடித்தவர்கள் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்க மாட்டார்கள். எழுத்தைக் கொண்டு மொழியை வளப்படுத்த முயல்வார்கள். எழுதுவதில் பழக்கம் ஏற்பட ஏற்பட எழுதும் முறையிலும், எழுதப்பட்டிருப்பவற்றின் உள்ளடக்கங்களிலும் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் ஏற்படும். உதாரணமாக ஒன்றாம் வகுப்பு மாணவன் எழுதுவதிலும், முனைவர் பட்டம் பெற்றவர் எழுதுவதிலும் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் இருக்கும் என்பதை ஒன்றாம் வகுப்பு மாணவன் கூட அறிவான். அவ்வாறு தமிழில் எழுத்தும் எழுதியிருப்பவற்றின் உள்ளடக்கமும் வளர்ச்சி அடைந்ததா என்ற கேள்வியையும் நாம் கேட்க வேண்டும்.
அதற்கு முன்னால் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது இது: எழுத்து வளர்ச்சியடைய வேண்டுமானால் அதன் தேவை மக்களுக்கு இருக்க வேண்டும். தமிழகத்தில் அப்படிப்பட்ட தேவை இருந்ததா? யாருக்கு அது இருந்திருக்க முடியும்?
பரவலான எழுத்தறிவு தமிழகத்தில் இருந்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றனவா?
நான் என்னுடைய ‘தமிழ், வடமொழிகள், கீழடி – ஆதாரங்களின் வெளிச்சத்தில்’ கட்டுரையில் உலகில் எங்கும் அந்தக் காலகட்டத்தில் பரவலாக எழுத்தறிவு இருக்க வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால் கீழடியில் கிடைத்த பானையோடுகளை வைத்துக் கொண்டு சிலர் சொல்வது இது: பானையில் பானையின் சொந்தக்காரர்தான் எழுதியிருக்க வேண்டும்;பானை எளியவர் பயன்படுத்துவது; எல்லாப்பானைகளின் சொந்தக்காரர்களும் பானைகள் மீது எழுதியிருக்க வேண்டும்; எனவே எழுதப் படிக்கத் தெரிந்திருப்பது பரவலாக இருந்திருக்க வேண்டும். மகாதேவனும் இதைச் சொல்கிறார். ஆனால் எழுத்துகள் எல்லாப்பானைகளிலும் கிடைக்கவில்லை. சில பானைகளிலேயே கிடைக்கின்றன. பானைகளை எதற்காகப் பயன்படுத்தினார்கள் என்பதும் நமக்குத் தெரியாது. அவை சடங்குகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட பானைகளாக இருக்கலாம். மேலும் பானையில் பெயரை பானையின் சொந்தக்காரர்தான் எழுதியிருக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. இன்றும் பாத்திரங்களில் பெயரை நாமே பொறித்துக் கொள்வதில்லை. அதற்கென்றே இருப்பவரின் உதவியைத்தான் நாடுகிறோம்.
மேலும் முக்கியமான ஒன்றை மறந்து விடுகிறோம். பானையில் எழுதுபவர் எழுத எப்படி, எங்கே கற்றுக் கொண்டார்? அவர் எதை வைத்து எழுதக் கற்றுக் கொண்டார்? எதில் எழுதினார்? கல்வியறிவு என்பது அவருக்கு ஏன் தேவையாக இருந்தது? இவற்றிற்கெல்லாம் பதில்கள் கிடைத்த பிறகுதான் தமிழகத்தில் கல்வியறிவு பரவலாக இருந்தது என்ற நிலைப்பாட்டை எடுக்க முடியும்.
கிரேக்க சமுதாயத்திலும் கல்வி அறிவைப் பரப்ப தீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனாலும் கீழ்தட்டு மக்களுக்கும் கைவினைஞருக்க்கும் கல்வியைக் கொண்டு சேர்க்க முடியவில்லை. வில்லியம் ஹாரிஸ் எழுதிய Ancient Literacy என்ற புத்தகம் சொல்வது இது:
The conclusion which should be drawn from all this is that archaic Greece reached no more than a rather low level of craftsman’s literacy. It would be astonishing if as much as IO% of the population as a whole was literate in the sense defined earlier. ( பழங்கால கிரேக்கத்தில் கைவினைஞரின் எழுத்தறிவு மிகவும் குறைவாகத்தான் இருந்தது என்ற முடிவிற்குத்தான் வர வேண்டும். பொதுமக்களிடையே எழுத்தறிவு 10 சதவீதத்திற்கு மேல் இருந்தால் ஆச்சரியப்பட வேண்டும்). தமிழ்நாடு விதி விலக்காக இருந்தது என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. கிரேக்க நாட்டிலும் பானை எழுத்துக்கள் பரவலாகக் கிடைக்கின்றன. கிமு எட்டாம் நூற்றாண்டிலிருந்தே கிடைக்கின்றன.
எனவே தமிழகத்தில் பரவலான எழுத்தறிவு இருக்க வாய்ப்பில்லை என்றே இப்போது கிடைத்திருக்கும் ஆதாரங்களைக் கொண்டு கூற முடியும்.
அப்படியென்றால் பானைகளில் யார் எழுதினார்கள்? அதை அறிய பானையோடுகளில் எழுதப்பட்டிருப்பவை என்ன என்பதைப் பார்க்க வேண்டும்
பானையோடுகளில் எழுதப் பட்டிருப்பவை என்ன?
முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது பானையோடுகளில் அனேகமாக பெயர்கள் மட்டும் பொறிக்கப்பட்டிருக்கின்றன என்பதை. பானைகளின் காலம் துவங்குவது கிமு ஆறாம் நூற்றாண்டு என்றே எடுத்துக் கொண்டாலும் கிபி மூன்றாம் நூற்றாண்டு வரை எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானைகள் கிடைக்கின்றன. அதாவது தொள்ளாயிரம் ஆண்டுகள்! அவற்றில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பெயர்களே பொறிக்கப் பட்டிருக்கின்றன.
இவற்றைக் கருத்தில் வைத்துக் கொண்டு வரலாற்று அறிஞர் சுப்பராயுலு என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.
Pottery Inscriptions of Tamil Nadu – A Comparative View என்ற மிக அருமையான கட்டுரையை அவர் ஐராவதம் மகாதேவன் பாராட்டு மலரில் எழுதியிருக்கிறார்.
அவர் சொல்பவை இவை:
1. பானையில் தமிழின் 18 மெய்யெழுத்துகளும் கிடைக்கின்றன
2. உயிர் எழுத்துக்களில் அ, ஆ, இ, உ, ஊ, எ, ஒ இவை சொற்களின் முதல் எழுத்துகளாகக் கிடைக்கின்றன. ‘ஆ’ மிக அரிதாகவே கிடைக்கிறது.
3. சொற்களின் நடுவில் அ, ஆ, இ, ஈ, உ ஊ, எ, ஏ, ஐ கிடைக்கின்றன. ‘ஓ’ இதுவரை எங்கும் கிடைக்கவில்லை.
4. ஆனால் பிராகிருத மொழி எழுத்துகள் (ஷ, ஸ, ஹ போன்ற) பதினொன்று கிடைக்கின்றன. பிராகிருதப் பெயர்களை எழுத பிராகிருத எழுத்துகளையே சில சமயங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
5. எழுத்துக்களைப் பொறிக்கும் விதமும் அதிக வளர்ச்சியடைந்ததாகத் தெரியவில்லை.
6. எழுதியிருப்பவற்றைப் படிப்பதற்கும் சில விதிகள் தெரிந்தால்தான் படிக்க முடியும். ‘ஸாதனதை அனதவான’ என்று எழுதியிருப்பதை ஸாதந்தை அந்தவன் என்று படிக்க வேண்டும். ‘அனதாவான அதன’ என்று எழுதியிருப்பதை அந்தவன் அதன் என்று படிக்க வேண்டும். ‘காணணான அதன’ என்று எழுதியிருப்பதை கண்ணன் அதன் என்று படிக்க வேண்டும் ‘முலான பெற அனதானன ஊம (ணெ)’என்பதை முலன் பெற அந்தனன் ஊம (ணெ) என்று படிக்க வேண்டும்.
7. அவர் அட்டவணைப் படுத்தியிருக்கும் 270 பானையோடுகளில் 192 ஒரு சொல் கொண்டவை;64 இரு சொற்கள் கொண்டவை; 8 மூன்று சொற்கள் கொண்டவை; 5 நான்கு சொற்கள் கொண்டவை. ஒரே ஒரு ஓட்டில்தான் ஆறு சொற்கள் இருக்கின்றன.
(கீழடியில் கிடைத்தவை எல்லாம் ஒரு சொல் கொண்டவையாகத்தான் இருக்கின்றன என எண்ணுகிறேன்.)
8. மொத்தப் பெயர்களில் ஐந்தில் ஒரு பங்கு பிராகிருதப் பெயர்கள். தமிழ்ப்படுத்தி எழுதப்பட்ட பிராகிருதப் பெயர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், பாதி பிராகிருதப் பெயர்கள்.
9 கிடைத்த பெயர்களில் இருபதைத் தருகிறேன்: 1. விஸாகி 2. கித்த. 3. மாஸாபாக 4. மாகிசம்ப 5 இலோகிபா 6. டகாஸி. 7. குவிரன் அதன் 8. தூகா 9. அந்தைய சம்பன் அகல் 10. ஸந்ததன் 11. ஸாசா 12. லிகன். 13 வாருணி. 14. ஸாதன். 15. தேவா. 16. அஸூ 17 ரஜக 18 சமுதஹ 19 யகமித்ரஸ 20. மதினகா
இவை தமிழ்ப்பெயர்கள் என்று சொல்ல முடியுமா? (கீழடியில் கிடைத்த பெயர்களுக்கும் இப்பெயர்களுக்கும் உள்ள் ஒற்றுமையைப் பார்க்க வேண்டும் – ‘குவிரன் அதன்’ ‘அதன்’ போன்ற பெயர்கள்.)
10. கொடுமணலில் ‘நிகம’ என்ற பெயர் பொறித்த பானை கிடைத்திருக்கிறது. நிகம என்றால் வர்த்தகர்களின் குழுமம்.
இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு சுப்பராயுலு பிராகிருதம் பேசும் வணிகர்கள் அசோகப்பிராமி (பிராமி என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் தெளிவிற்காக அசோகப்பிராமி என்று சொல்கிறேன்) எழுத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்ததாகச் சொல்கிறார். தமிழில் எழுதும் முறை பிராகிருத மொழியின் தாக்கம் பெற்றிருக்கின்றது என்பதையும் அவர் மிகத் தெளிவாகச் சொல்கிறார்.
எழுத்தின் தேவை அந்தக் காலகட்டத்தில் அதிகமாக வணிகர்களுக்கு மட்டுமே இருந்தது. எனவேதான் வணிகர்கள் புழங்கும் இடங்களில் அதிகமாக எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையோடுகள் கிடைக்கின்றன.
இப்போது கல்வெட்டுகளுக்கு வருவோம்.
கல்வெட்டுகள் என்ன சொல்கின்றன?
தமிழ் பிராமியிலிருந்துதான் அசோகப் பிராமி பிறந்தது என்று சொல்பவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றி அறியாதவர்கள். தன்னுடைய புகழ் பெற்ற நூலான Early Tamil Epigraphy என்ற நூலில் கிமு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கிபி ஆறாம் நூற்றாண்டு வரை நமக்குக் கிடைத்திருக்கும் தமிழ் பிராமி மற்றும் வட்டெழுத்துக் கல்வெட்டுகளைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். மொத்தம் 121 கல்வெட்டுகள். நான் முந்தையக் கட்டுரையில் சொன்னதைப் போல இவை அனைத்தையும் ஒரு A4 அளவுத் தாளில் எழுதி விடலாம்.
அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்
மாங்குளம் கல்வெட்டு- கிமு இரண்டாம் நூற்றாண்டு:
கணிய் நந்தாஅஸிரிய்இ
குவ்அன்கே தம்மம்
இத்தாஅ நெடுஞ்செழியன்
பணஅன் கடல்அன் வழுத்திய்
கொட்டுபித்தஅ பளிஇய்
பொருள்: பார்! நந்தஸிரி குவன் கணிக்கு அளித்த கொடை. இக்குடில் கடலன் வழுதி (என்ற பெயருள்ள) நெடுஞ்செழியனின் பணியாளரின் ஆணையால் குடையப்பட்டது.
இன்னொரு மாங்குளம் கல்வெட்டு:
கணிஇ நதஸிரிய் குவ(ன்)
வெள்அறைய் நிகமது
காவிதிஇய் காழிதிக அந்தை
அஸூ தன் பிணஉ கொடுபிதோன்
பொருள்: நந்தஸ்ரீ குவன், கணத்தின் தலைவன்(கணி). அந்தை அஸூதன், முத்துகளைக் கண்காணிப்பவன், வெள்ளறை வணிகர் குழுமத்தின் தலைவன் (காவிதி -அரசு கொடுக்கும் பட்டம்) கொடுத்த குகை.
அரிட்டாபட்டி – கிமு இரண்டாம் நூற்றாண்டு:
நெல்வெளிஇய் சிழிவன் அதினன்
வெளியன் முழாகை கொடுபிதோன்
பொருள்: நெல்வேலி சிழிவன் அதினன் வெளியன் கொடுத்த குகை,
கிமு இரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் அனைத்தும் இதே போன்றுதான் இருக்கின்றன. அனேகமாக எல்லாம் ஒரு வரிதான் (மாங்குளம் கல்வெட்டுகளைத் தவிர). . கிமு ஒன்றாம் நூற்றாண்டிலும் இதே கதைதான். ஆகப்பெரிய கல்வெட்டு சித்தன்னவாசலில் இருக்கிறது.
எருமிநாடு குமுழ்ஊர் பிறந்த கவுடிஇ
தென்கு சிறுபொசில் இள
யர் செய்த அதிட்அனம்
பொருள்: எருமை நாசு குமுழூரில் பிறந்த கவுதி(க்கு) (காவிதி). தென்கு சிறுபொசில் இளையர் செய்த இருக்கை (அதிட்டானம்).
கிபி ஒன்றாம் நூற்றாண்டின் ஆகப்பெரிய கல்வெட்டு இது திருப்பரங்குன்றத்தில் இருக்கிறது.
எருகாடுர் இழகுகுடும்பிகன் பொலாலையன்
செய்தா(ன்) ஆய்சயன் நெடுசாதன்
பொருள்: பொலாலையன் (தந்த பரிசு). எருக்காட்டில் இருக்கும் (குடும்பிகன்) ஆய்ச்சயன் நெடுச்சாத்தன் செய்தது.
ஜம்பை கல்வெட்டு:
ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பளி
பொருள்: சத்தியபுத்தன் (புத்திரன்) அதியன் நெடுமான் அஞ்சி கொடுத்த பள்ளி.
கிபி இரண்டாம் நூற்றாண்டு கல்வெட்டுகளிலும் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை.
புகளூர் கல்வெட்டு:
முதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய்
கோ ஆதன் செல்லிரும்பொறை மகன்
பெருங்கடுங்கோன் மகன் (இ)ளங்
கடுங்கோ (இ)ளங்கோ ஆக அறுத்த கல்
பொருள்: முதிய அமணத்துறவி யாற்ற்றூர் செங்காயபன் இருப்பிடம். இக்கல் குடையப்பட்டது இளங்கடுங்கோ, ஆதன் செல் இரும்பொறை மகன் பெருங்கடுங்கோவின் மகன் இளவரசனாக ஆகிய போது.
கிபி நான்காம் நூற்றாண்டு நேகனூர்பட்டி கல்வெட்டைப் பார்ப்போம்:
பெரும்பொகழ்
சேக்கந்தி தாயியரு
சேக்கந்தண்ணி செ
யிவித்த பள்ளி
பொருள்: இக்குடில் சேக்கந்தி அண்ணி, பெரும்பொகழ் சேக்கந்தியின் தாயாரால் செய்விக்கப்பட்டது.
பானைகளில் இருக்கும் பெயர்களில் பல கல்வெட்டுகளிலும் இருக்கின்றன. குவிரன், அதன் போன்ற பெயர்கள். அனேகமாக வணிகர்களின் பெயர்கள். சமணப் பெயர்கள்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் நாம் தமிழ் பிராமியின் பிறப்பை ஆராய வேண்டும்.
தமிழ் பிராமி எவ்வாறு பிறந்தது?
அறுநூறு ஆண்டுகள் கல்வெட்டுகள் அனைத்தும் ‘இவருக்கு இவர் கொடுத்தது’ என்ற வகையில்தான் இருக்கின்றன. இவற்றோடு பானையோடுகளின் மொழியையும் சேர்த்துக் கொண்டால் 1000/1200 வருடங்களில் கிடைத்திருக்கும் ஆதாரங்கள் நம் கையில் இருக்கின்றன. இக்காலகட்டத்தில்தான் சங்க இலக்கியம் தோன்றியது. அழகாக, நுண்ணுணர்வோடு உலகமே மெச்சத்தக்க படைப்புகள் தமிழில் பிறந்தன. ஆனால் அவற்றின் தாக்கம் எழுத்தில் ஏன் கிடைக்கவில்லை? ஏன் இவ்வளவு பிழைகளோடு கல்வெட்டு மற்றும் பானையோட்டுப்பதிவுகள் இருக்கின்றன? இவற்றிற்கும் சங்கத் தமிழுக்கும் ஏன் தொடர்பே இல்லாதது போல் இருக்கிறது?
இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது தமிழ் மொழியின் எழுத்து வளர்ச்சி பல நூற்றாண்டுகளாக – கிபி ஐந்தாம் நூற்றாண்டு வரை – குறிப்பிடத்தக்கதாக இல்லை என்பது நன்றாகத் தெரிகிறது. இதே காலகட்டத்தில் பிராகிருத, சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள் இந்தியா முழுவதும் மிகப் பரவலாக, அழகிய சொல்லாட்சிகளோடு கிடைக்கின்றன. பல்லவக் கல்வெட்டுகளும் முதலில் பிராகிருதத்திலும் பின் சமஸ்கிருதத்திலும் எழுதப் பட்டிருக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பானை ஓடுகளிலும் பிராகிருத மொழியைக் குறிக்கும் பிராமி எழுத்துகள் மிகவும் எளிதாகக் கலந்திருக்கின்றன என்பதையும் நாம் பார்த்தோம்.
இதனால்தான் ஐராவதம் மகாதேவன் தமிழ் பிராமி அசோகப் பிராமியிலிருந்து பிறந்தது என்று சொல்கிறார்: தமிழ் பிராமி கல்வெட்டுகளின் பரிணாம வளர்ச்சி குறிப்பாக அதன் முந்தைய ஆண்டுகளில் வடக்குப்பிராமி, தெற்குபிராமியை ஒப்பிடும்போது மிகவும் மெதுவாக நிகழ்ந்தது என்றும் சொல்கிறார்.
அவர் சொல்பவை:
1. தமிழ் பிராமியின் 26 எழுத்துக்களில் 22 எழுத்துக்கள் அசோகப் பிராமியின் எழுத்துக்களைப் போல அப்படியே அல்லது கிட்டத்தட்ட அப்படியே இருக்கின்றன.
2. தமிழ் எழுத்து வரிசைப் படுத்தியிருப்பதும் அசோகப் பிராமியை ஒத்தே இருக்கிறது.
3. தமிழின் கூடுதல் எழுத்துகளான ‘ற’ ‘ன’ ‘ழ’ ‘ள’போன்றவற்றை தொல்காப்பியர் வல், மெல், இடையெழுத்துகளின் வரிசைகளில் கடைசியில் சேர்த்திருக்கிறார்.
மகாதேவன் காட்டும் கால அட்டவணை இது
அசோகப் பிராமி
(கிமு மூன்றாம் நூற்றாண்டு)
தமிழ் பிராமி
(கிமு இரண்டாம் நூற்றாண்டு)
வட்டெழுத்து
(கிபி ஐந்தாம் நூற்றாண்டு)
தமிழெழுத்து
(ஏழாம் நூற்றாண்டு)
மகாதேவனைக் கடந்து நாம் செல்ல வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். நிச்சயம் செல்ல வேண்டும். ஆனால் அதற்கு நம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். மகாதேவனின் புத்தகத்தைப் போன்று வலுவான சான்றுகளுடன் உலக வரலாற்று, அகழ்வாரய்ச்சி, கல்வெட்டு, மொழி வல்லுனர்களின் பார்வைக்கு கொண்டு வரும்படியான புத்தங்களை எழுத வேண்டும். தமிழ் ஊடகங்களிலும் மாநாடுகளிலும் பேசி கைதட்டுகள் வாங்குவது எளிது. ஆனால் அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் வேலை.
கீழடி மொழி வரலாற்றைத் திருப்பிப் போடுகிறதா?
இதுவரை கிடைத்திற்கும் சான்றுகளை வைத்துப் பார்த்தால் நிச்சயம் இல்லை.
கீழடியில் கிடைத்திருக்கும் பானையோடுகளிலும் புதிதாக ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அவை அனைத்தும் பெயர்களையே குறிக்கின்றன. பழைய பெயர்கள். தமிழ் பிராமியிலிருந்து அசோகப் பிராமி பிறந்தது என்பதற்கான எந்தத் தடையமும் கீழடி பானையோடுகளிலிருந்து கிடைக்கவில்லை. வலுவான சான்றுகள் கிடைக்கும் வரை ‘தமிழ் பிராமியிலிருந்து பிறந்த அசோகப் பிராமி பெரும் வளர்ச்சி அடைந்தது ஆனால் தமிழ் பிராமி மட்டும் 1200 ஆண்டுகளாக கிட்டத்தட்ட ஒரே நிலையில் இருந்தது’ என்ற நிலைப்பாடு தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்காது. அது தர்க்கப்பூர்வமாகவும் சரியாகாது.
தமிழ் பிராமியில் விரிவாக, தேர்ந்த தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டுகளைத் தேட வேண்டும். அவை கிடைத்தால், அவற்றின் காலம் கிமு மூன்றாம் நூற்றாண்டிற்கு முந்தையது என்று அறுதியிடப்பட்டால், தமிழின் வரலாறு மாற்றி எழுதப்பட வாய்ப்பு இருக்கிறது. பானைத்துண்டுகள் அதைச் செய்ய முடியாது.
பி ஏ கிருஷ்ணன்
கட்டுரை எழுத உதவிய நூல்கள்:
Early Tamil Epigraphy – Iravatham Mahadevan Cre-A, Harvard, 2003
Pottery inscriptions of Tamil Nadu – A comparative view, Y Subbrayulu, in Airavati, Varalaru.com, 2008
Ancient Literacy, William Harris, Harvard University Press, 1989