New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புறநானூறு 51-60 -முனைவர். பிரபாகரன்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
புறநானூறு 51-60 -முனைவர். பிரபாகரன்
Permalink  
 


51. கொள்க எனக் கொடுத்த மன்னர் நடுக்கற்றனரே

 
பாடியவர்: ஐயூர் முடவனார் ( 51, 228, 314, 399). இவர் ஐயூர் என்னும் ஊரினர். இவர் முடவராக இருந்ததார் என்பது, தாமன் தோன்றிக்கோனைச் சென்றடைந்து, வண்டியை இழுத்துச் செல்வதற்கு காளைமாடுகள் வேண்டும் என்று இவர் பாடிய பாடலிலிருந்து (399) தெரியவருகிறது. இவர் ஆதன் எழினியையும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனையும், பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியையும் பாடியுள்ளார். இவர் அகநானூற்றில் ஒருசெய்யுளும் ( 216) , குறுந்தொகையில் மூன்று செய்யுட்களும் (123, 206, 322), நற்றிணையில் இரண்டு பாடல்களும் (206, 344) இயற்றியுள்ளார். இவர் பாடல்கள் அனைத்தும் மிகுந்த இலக்கிய நயமுடையவை.
பாடப்பட்டோன்: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி. கூடகாரம் என்பது பாண்டிய நாட்டிலிருந்த ஓரூர். அவ்வூரில் இறந்ததால் இவன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி என்று அழைக்கப்பட்டான். இவன் போர் புரிவதில் பேராற்றல் கொண்டவனாக இருந்தான் என்பது இப்பாடலிருந்தும் இதற்கு அடுத்த பாடலிலிருந்தும் தெரிகிறது.
பாடலின் பின்னணி: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆட்சி புரிந்த காலத்தில், அவன் ஆணைக்குப் பணிந்து திறை செலுத்தி வாழாமல் அவனுடன் பகைமை கொண்டு போரிட்டவர்களின் வலிமையை அழித்து அவர்கள் நாட்டிலும் தன் ஆட்சியை நிலை நாட்டினான். அவன் வலிமையை இப்பாடலில் ஐயூர் முடவனார் பாராட்டுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

நீர்மிகின் சிறையும் இல்லை; தீமிகின்
மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;
வளிமிகின் வலியும் இல்லை; ஒளிமிக்கு
அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி,
5 தண்தமிழ் பொதுஎனப் பொறாஅன் போர்எதிர்ந்து
கொண்டி வேண்டுவன் ஆயின், கொள்கஎனக்
கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே;
அளியரோ அளியர்அவன் அளிஇழந் தோரே;
நுண்பல் சிதலை அரிதுமுயன்று எடுத்த
10 செம்புற்று ஈயல் போல
ஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே.

அருஞ்சொற்பொருள்:
1. சிறை = தடை, கட்டுப்பாடு. 3. வளி = காற்று. 4. ஓர் அன்ன = ஒப்ப. 6. கொண்டி = பிறர் பொருள் முதலியவற்றைக் கொள்ளுதல் (திறை). 8. அளி = இரக்கம்; அளியர் = இரங்கத் தக்கவர்; அளி இழந்தோர் = இரக்கத்தை இழந்தோர். 9. சிதலை = கறையான். 11. உலமறல் = சுழற்சி.

கொண்டு கூட்டு: வழுதி, தமிழ்ப் பொதுவெனப் பொறானாய்க் கொண்டி வேண்டுவனாயின், கொடுத்த மன்னர் நடுக்கற்றனர்; கொடாமையின் அவன் அளியிழந்தோர் , ஒருபகல் வாழ்க்கைக்கு உலமருவோர்; ஆதலான் அவர் அளியோரோ அளியோர் எனக் கூட்டுக.

உரை: நீர் மிகுந்தால் அதைத் தடுக்கக்கூடிய அரணும் இல்லை; தீ அதிகமானால், உலகத்தில் நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாக்கக்கூடிய நிழலுமில்லை; காற்று மிகையானால் அதைத் தடுக்கும் வலிமை உடையது எதுவும் இல்லை; நீர், தீ மற்றும் காற்றைப் போல் வலிமைக்குப் புகழ் வாய்ந்த, சினத்தோடு போர் புரியும் வழுதி, தமிழ் நாடு மூவேந்தர்களுக்கும் பொது என்று கூறுவதைப் பொறுக்க மாட்டான். அவனை எதிர்த்தவர்களிடமிருந்து திறை வேண்டுவான். அவன் வேண்டும் திறையைக் ”கொள்க” எனக் கொடுத்த மன்னர்கள் நடுக்கம் தீர்ந்தனர். அவன் அருளை இழந்தவர்கள், பல சிறிய கறையான்கள் கடினமாக உழைத்து உருவாக்கிய சிவந்த நிறமுடைய புற்றிலிருந்து புறப்பட்ட ஈயலைப்போல, ஒரு பகல் பொழுது வாழும் உயிர் வாழ்க்கைக்கு அலைவோராவர். ஆகவே, அவர்கள் மிகவும் இரங்கத் தக்கவர்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

52. ஊன் விரும்பிய புலி !

 
பாடியவர்: மருதன் இளநாகனார் (52, 55, 138, 139, 349). இவரை மதுரை மருதன் இளநாகனார் என்றும் கூறுவர். இவர் பாடிய பாட்டுக்களை ஆராய்ந்து பார்த்தால் இவர் திருச்செந்தூர் அருகில் பிறந்தவராக இருக்கலாம் என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை குறிப்பிடுகிறார். இவர் மருதத்திணை சார்ந்த பாடல்களை இயற்றுவதில் வல்லவர். இவர் தந்தை பெயர் மருதன். ஆகவே, தந்தையின் பெயர் காரணமாகவும் மருதத்திணைக்குரிய பாடல்களை இயற்றியதாலும் இவர் மருதன் இளநாகனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவரது இயற்பெயர் இளநாகன். இவர் புறநானூற்றில் ஐந்து பாடல்களும், அகநானூற்றில் 23 செய்யுட்களும், கலித்தொகையில் மருதக்கலி எனப்படும் 35 செய்யுட்களும், குறுந்தொகையில் நான்கு (77, 160, 279, 367) செய்யுட்களும், நற்றிணையில் 12 செய்யுட்களும் இயற்றியுள்ளார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி. இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 51-இல் காண்க.
பாடலின் பின்னணி: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, தன் நாட்டை விரிவு படுத்த விரும்பிப் போருக்கு எழுவதை அறிந்த புலவர் மருதன் இளநாகனார், இப்பாடலில், அவன் போருக்குச் செல்வதை, புலி ஊன் விரும்பித் தன் குகையிலிருந்து வெளியே செல்வதற்கு ஒப்பிடுகிறார். மற்றும் அவனை எதிர்ப்பவர்களின் நாடு வளமிழந்து காடாகி அழியும் என்று அவன் போர்செய்யும் ஆற்றலை இப்பாடலில் புகழ்ந்து பாராட்டுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

அணங்குஉடை நெடுங்கோட்டு அளையகம் முனைஇ
முணங்குநிமிர் வயமான் முழுவலி ஒருத்தல்
ஊன்நசை உள்ளம் துரப்ப, இரைகுறித்துத்
தான்வேண்டு மருங்கின் வேட்டுஎழுந் தாங்கு
5 வடபுல மன்னர் வாட அடல்குறித்து
இன்னா வெம்போர் இயல்தேர் வழுதி!
இதுநீ கண்ணியது ஆயின் இருநிலத்து
யார்கொல் அளியர் தாமே? ஊர்தொறும்
மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங்கொடி
10 வயல்உழை மருதின் வாங்குசினை வலக்கும்
பெருநல் யாணரின் ஒரீஇ இனியே
கலிகெழு கடவுள் கந்தம் கைவிடப்
பலிகண் மாறிய பாழ்படு பொதியில்,
நரைமூ தாளர் நாயிடக் குழிந்த
15 வல்லின் நல்லகம் நிறையப் பல்பொறிக்
கான வாரணம் ஈனும்
காடாகி விளியும் நாடுடை யோரே.

அருஞ்சொற்பொருள்:
1.அணங்கு = தெய்வத்தன்மை (அச்சம்); அளை = குகை; முனைஇ = வெறுத்து. 2. முணங்குதல் = சோம்பல் முறித்தல்; ஒருத்தல் = ஆண் புலி (விலங்கேற்றின் பொது). 3. துரப்புதல் = தேடுதல். 5. அடல் = கொல்லுதல். 7. கண்ணுதல் = கருதல். 8. அளியர் = இரங்கத் தக்கவர். 10. உழை = இடம், பக்கம்; மருது = மருத மரம்; வாங்கு = வளைந்த; சினை = கிளை; வலக்கும் = சூழும். 11. யாணர் = புது வருவாய்; ஒரீஇ = நீங்கி, விலகி; இனி = இப்போது, இனிமேல். 12. கலி = ஆரவாரம் (முழவு ஒலித்தல்); கந்தம் = தூண். 13. பொதியில் = அம்பலம் (மன்றம், சபை). 14. நாய் = சூதாடு கருவி. 15. வல் = சூதாடுங் காய்; வல்லின் நல்லகம் = சூதாடும் இடம். 16. வாரணம் = காட்டுக் கோழி. 17. விளிதல் = அழிதல்.

கொண்டு கூட்டு: வழுதி, அடல் குறித்து நீ கண்ணியது இதுவாயின் விளியும் நாடுடையோர் தாம் யார்கொல் அளியர் எனக் கூட்டுக.

உரை: அச்சம் தரும் நெடிய சிகரங்களையுடைய மலையிலுள்ள குகையில் இருப்பதை வெறுத்து, சோம்பல் முறித்து எழுந்த வலிமை நிரம்பிய ஆண்புலி, இரையை விரும்பும் உள்ளத்தால் உந்தப்பட்டு, அது வேண்டிய இடத்தே விரும்பிச் சென்றது போல, வட நாட்டு வேந்தரைக் கொல்லுவதை எண்ணி, கொடிய போரைச் செய்வதற்கேற்ப நன்கு செய்யப்பட்ட தேரையுடைய வழுதி! நீ கருதியது போர் எனின் உன்னை எதிர்த்து நிற்பவர்கள் அனைவரும் இரங்கத் தக்கவர்கள். முன்பு, உன் பகைவர்களின் நாடுகளில், ஊர்தோறும் மீன் சுடுகின்ற புகையினது புலால் நாற்றம், வயல்களின் அருகே உள்ள மருதமரத்தின் வளைந்த கிளைகளைச் சூழ்ந்து இருக்கும். அத்தகைய நீர் வளமும், நிலவளமும், புதுவருவாயும் உள்ள ஊர்கள், இப்பொழுது அந்த வளமனைத்தும் இழந்து காணப்படுகின்றன. மற்றும், அந்நாடுகளில் ஆரவாரமான ஒலியுடன் விளங்கிய வழிபாட்டு இடங்களின் தூண்களிலிருந்து தெய்வங்கள் விலகியதால் வழிபாட்டு இடங்கள் இப்பொழுது பாழடைந்த ஊர்ப்பொது இடங்களாயின. அந்தப் பொதுவிடங்களில், நரையுடன் கூடிய முதியவர்கள் சூதாடும் காய்களை உருட்டிச் சூதாடியதால் தோன்றிய குழிகளில், புள்ளிகள் உள்ள காட்டுக் கோழிகள் முட்டையிடுகின்றன. உன் பகைவர்களின் நாடுகள் இவ்வாறு காடகி அழியும்.

சிறப்புக் குறிப்பு: வழிபாடு நடைபெறும் இடங்களிலுள்ள தூண்களில் கடவுள் தங்கி இருப்பதாக நம்பிக்கை நிலவியது. உதாரணமாக, “கடவுள் போகிய கருந்தாட் கந்தம்” என்று அகநானூற்றுப் பாடல் 307-இல் கூறப்பட்டிருப்பதைக் காண்க.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

53. செந்நாவும் சேரன் புகழும்!

 
பாடியவர்: பொருந்தில் இளங்கீரனார் ( 53). இளங்கீரனார் என்பது இவர் இயற்பெயர். இவர் பொருந்தில் என்ற ஊரைச் சார்ந்தவர். அதனால், இவர் பொருந்தில் இளங்கீரனார் என்று அழைக்கப்பட்டார். இவர் அகநானூற்றில் இரண்டு பாடல்களையும் (19, 351) இயற்றியுள்ளார்.
பாடப்பட்டோன்: சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. இச்சேர மன்னன், சேரன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்றும் அழைக்கப்பட்டான். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 17-இல் காண்க.
பாடலின் பின்னணி: இச்சேர மன்னனின் நாட்டில் இருந்த விளங்கில் என்னும் ஊரைப் பகைவர்கள் முற்றுகையிட்டு, அங்கிருந்த மக்களைத் துன்புறுத்தினர். இவன் யானைப்படையையும் குதிரைப்படையையும் கொண்டு சென்று பகவர்களை வென்று அவ்வூரில் இருந்த மக்களைக் காப்பாற்றினான். தன் வெற்றியைப் புகழந்து பாடப், பெரும் புலவர் கபிலர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மாந்தரஞ்சேரல் இரும்பொறை கூறினான். அதைக் கேட்ட புலவர் பொருந்தில் இளங்கீரனார், தான் தம்மால் இயன்ற அளவில் அவனைப் புகழ்ந்து பாடுவதாகக் கூறி இப்பாடலை இயற்றியுள்ளார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

முதிர்வார் இப்பி முத்த வார்மணல்,
கதிர்விடு மணியின் கண்பொரு மாடத்து
இலங்குவளை மகளிர் தெற்றி ஆடும்
விளங்குசீர் விளங்கில் விழுமம் கொன்ற
5 களங்கொள் யானைக் கடுமான் பொறைய!
விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்;
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை
கைம்முற் றலநின் புகழே என்றும்;
ஒளியோர் பிறந்தஇம் மலர்தலை உலகத்து
10 வாழேம் என்றலும் அரிதே; தாழாது
செறுத்த செய்யுள் செய்செந் நாவின்
வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்
இன்றுளன் ஆயின் நன்றுமன் என்றநின்
ஆடுகொள் வரிசைக்கு ஒப்பப்
15 பாடுவன் மன்னால் பகைவரைக் கடப்பே.

அருஞ்சொற்பொருள்:
1. முதிர் = முதிர்ந்த; வார் = நெடுமையாதல், ஒழுங்கு படுதல்; இப்பி = சிப்பி. 2. பொருதல் = தாக்குதல் (கவருதல்). 3. இலங்குதல் = விளங்கல்; தெற்றி = திண்ணை. 4. விளங்கில் = ஒரு ஊர்; விழுமம் = இடும்பை ( பகைவரால் வந்த இடும்பை). 7. மம்மர் = மயக்கம்; ஒருதலை = உறுதி; கைமுற்றுதல் = முடிவு பெறுதல். 10. தாழாது = விரைந்து. 12. வெறுத்த = மிகுந்த. 13. மன் – கழிவின் கண் வந்த அசைச் சொல்.14. ஆடு = வெற்றி; வரிசை = சிறப்பு. 15. மன், ஆல் – அசைச் சொற்கள்; கடப்பு = கடத்தல் = வெல்லுதல்.

கொண்டு கூட்டு: பொறைய, ”கபிலன் இன்றுளன் ஆயின் நன்று மன்” என்ற நின் ஆடு கொள் வரிசைக் கொப்பப் பகைவரைக் கடப்பை; யான் தாழாது பாடுவேன்; நின் புகழ் விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்; ஆதலான் எமக்குக் கைம்முற்றல; ஒளியோர் பிறந்த இம் மலர்தலை உலகத்து வாழேம் என்றலும் அரிது என மாறிக் கூட்டுக.

உரை: முதிர்ந்து நீண்ட சிப்பியில் உள்ள முத்துப் போல் பரவிக் கிடந்த மணலில் ஒளிவிடும் மணிகளால் கண்ணைப் பறிக்கின்ற மாடங்களில், விளங்கும் வளையல்களை அணிந்த மகளிர், திண்ணைகளில் விளையாடும் விளங்கில் என்னும் ஊர்க்குப் பகைவரால் வந்த துன்பங்களைத் தீர்ப்பதற்காகப் போர்க்களத்தைத் தனதாக்கிக் கொண்ட யானைப்படையையும் விரைந்து செல்லும் குதிரைப்படையையும் உடைய பொறைய! உன் புகழை விரித்துக் கூறினால் அது நீளும்; சுருக்கமாகத் தொகுத்துக் கூறினால் பல செய்திகள் விடுபட்டுப் போகும். ஆதலால், மயக்கமுறும் நெஞ்சத்தையுடைய எம் போன்றவர்களால் உன் புகழை உறுதியாகக் கூற முடியாது. அதனால், கல்வி கேள்விகளில் சிறந்த பெரியோர்கள் பிறந்த இப்பெரிய உலகத்து வாழ்க்கையை வெறுத்து வாழ மாட்டோம் என்று கூறுவதும் இயலாத செயல். ”விரைவாகப் பல பொருள்களையும் அடக்கிய சிறந்த செய்யுட்களை இயற்றும் மிகுந்த கேள்வி அறிவுடைய , புகழ் மிக்க கபிலர் இன்று இருந்தால் நன்றாக இருக்கும்” என்று நீ கூறினாய். உன் வெற்றிச் சிறப்புக்குப் பொருந்தும் முறையில் என்னால் முடிந்தவரை உன் வெற்றியைப் புகழ்ந்து பாடுவேன்.

சிறப்புக் குறிப்பு: “தெற்றி” என்ற சொல்லுக்குப் பெண்கள் கைகோத்து ஆடும் குரவை ஆட்டம் என்றும் பொருள் கொள்ளலாம்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

54. எளிதும் கடிதும்!

 
பாடியவர்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் (54, 61, 167, 180, 197, 394). இவர் கோனாட்டு எறிச்சிலூரைச் சார்ந்த மாடலன் என்பவனின் மகனாகையால் இப்பெயர் பெற்றிருக்கலாம். இவரால் பாடப்பட்டவர்கள்: சேரமான் குட்டுவன் கோதை, சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி, ஏனாதி திருக்கிள்ளி, ஈர்ந்தூர் கிழான் தோயன் நன்மாறன், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், சோழிய ஏனாதி திருக்குட்டுவன். இவர் இனிமையான பாடல்களை இயற்றுவதிலும், வஞ்சப் புகழ்ச்சியாகச் செய்யுள் இயற்றுவதிலும் வல்லவர்.
பாடப்பட்டோன்: சேரமான் குட்டுவன் கோதை (54). கோதை என்பது இவன் இயற்பெயர். இவன் சேர நாட்டின் ஒருபகுதியாகிய குட்ட நாட்டுக்குத் தலைவனாக இருந்தான். ஆகவே, இவன் குட்டுவன் கோதை என்று அழைக்கப்பட்டான்.
பாடலின் பின்னணி: குட்டுவன் கோதையின் கொடைச் சிறப்பையும், ஆட்சிச் சிறப்பையும், அவன் காட்சிக்கு எளியவனாக இருந்ததையும் இப்பாடலில் புலவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.

எங்கோன் இருந்த கம்பலை மூதூர்
உடையோர் போல இடையின்று குறுகிச்
செம்மல் நாளவை அண்ணாந்து புகுதல்
எம்அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே;
5 இரவலர்க்கு எண்மை அல்லது; புரவுஎதிர்ந்து
வானம் நாண வரையாது சென்றோர்க்கு
ஆனாது ஈயும் கவிகை வண்மைக்
கடுமான் கோதை துப்பெதிர்ந்து எழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப்
10 பாசிலைத் தொடுத்த உவலைக் கண்ணி
மாசுண் உடுக்கை மடிவாய் இடையன்
சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லாப்
புலிதுஞ்சு வியன்புலத்து அற்றே
வலிதுஞ்சு தடக்கை அவனுடை நாடே.

அருஞ்சொற்பொருள்:
1. கம்பலை = ஆரவாரம். 2. இடை = காலம் (சமயம்). 3. நாளவை = அரசன் நாட்பொழுதில் வீற்றிருக்கும் அவை (அரசவை). 5. எண்மை = எளிமை; புரவு = கொடை, பாதுகாப்பு; எதிர்ந்து = ஏற்றுக்கொண்டு. 7. ஆனாது = குறையாது. 8. கடு = விரைவு; மான் = குதிரை; துப்பு = வலிமை; எதிர்ந்து = எதிர்த்து, மாறாகத் தாக்குதல். 10. பாசிலை = பச்சிலை; உவலை = தழை; கண்ணி = மாலை. 11. மடிவாய் = சீழ்க்கை ஒலி செய்வதற்கு மடக்கிய வாய். 12. ஆயம் = ஆடுகளின் கூட்டம். 13. துஞ்சுதல் = தங்குதல்.

கொண்டு கூட்டு: எங்கோன் இருந்த மூதூர்ப் புகுதல் இரவலர்க்கு எளிது; அவனுடைய நாடு, மன்னர் நினைக்குங் காலை இடையன் சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லாப் புலிதுஞ்சு வியன்புலத்து அற்று எனக் கூட்டுக.

உரை: எம்முடைய அரசன் இருந்த ஆரவாரமான பழைய ஊரில், அந்த ஊருக்கு உரியவர்கள் போல், காலம் பாராது நெருங்கி, அரசன் வீற்றிருக்கும் நாளவைக்குள் தலைநிமிர்ந்து செல்லுதல் எம் போன்ற இரவலர்க்கு எளிது. அது இரவலர்க்குத்தான் எளிதே அல்லாமல், அவனுடைய பகைவர்களுக்கு எளிதல்ல. கோதை தன் நாட்டின் பாதுகாவலை ஏற்றுக் கொண்டு, மழை பொழியும் வானம் நாணும் வகையில் தன்னிடம் வந்தோர்க்குக் குறையாது கொடுக்கும் கவிந்த கைகளையுடைய வள்ளல். வலிமை மிகுந்த பெரிய கைகளையுடைய அவன் வலிமையை எதிர்த்து, அவன் நாட்டுக்குள் வந்த வஞ்சின வேந்தரை எண்ணும் பொழுது, அவர்களின் நிலை, பசிய இலைகளால் தொடுக்கப்பட்ட மாலையையும், அழுக்குப் படிந்த உடையையும், சீழ்க்கை அடிக்கும் வாயையும் உடைய இடையன் ஒருவன் சிறிய ஆட்டுக்குட்டிகளுடன், நெருங்க முடியாத ஒருபுலி இருக்கும் பெரிய அகன்ற இடத்துக்குள் நுழைவதைப் போன்றது.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

55. அறநெறி முதற்றே அரசின் கொற்றம்

 
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 52-இல் காண்க.
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் (55 - 57,196, 198). இலவந்திகை என்ற சொல்லுக்கு நீர்நிலையைச் சார்ந்த சோலை என்று பொருள். இப்பாண்டிய மன்னன் ஒருஇலவந்திகையில் இருந்த பள்ளியறையில் இறந்ததால் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்று அழைக்கப்பட்டான். இவன் கொடையிலும் வீரத்திலும் சிறந்தவன். இவனைப் பாடிய புலவர்கள்: மதுரை மருதன் இளநாகனார், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார், ஆவூர் மூலங்கிழார், வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்.
பாடலின் பின்னணி: படை வலிமை மிகுந்ததாகவும் சிறப்புடையதாகவும் இருந்தாலும் அரசனுடய வெற்றிக்கு அடிப்படைக் காரணம் அறநெறிதான் என்று மதுரை மருதன் இளநாகனார் இப்பாடலில் நன்மாறனுக்கு அறிவுரை கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: செவியறிவுறூஉ. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.

ஓங்குமலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வெற்றி தந்த
கறைமிடற்று அண்ணல் காமர் சென்னிப்
5 பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல
வேந்து மேம்பட்ட பூந்தார் மாற,
கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகல்மறவரும்என
நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட
10 அறநெறி முதற்றே அரசின் கொற்றம்;
அதனால், நமரெனக் கோல்கோ டாது,
பிறர்எனக் குணங் கொல்லாது,
ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்,
திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும்,
15 வானத்து அன்ன வண்மையும் மூன்றும்
உடையை ஆகி இல்லோர் கையற
நீநீடு வாழிய நெடுந்தகை! தாழ்நீர்
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறைக்
20 கடுவளி தொகுப்ப ஈண்டிய
வடுஆழ் எக்கர் மணலினும் பலவே!

அருஞ்சொற்பொருள்:
1. ஓங்கு = உயர்ந்த; ஞாண் = கயிறு; கொளீஇ = கொண்டு. 2. கணை = அம்பு; எயில் = ஊர், புரம், மதில், அரண்; உடற்றுதல் = அழித்தல். 3.விறல் = வலிமை; அமரர் = தேவர். 4. மிடறு = கழுத்து; அண்ணல் = தலைவன், பெரியவன்; காமர் = அழகு; சென்னி = தலை, முடி. 6.மாறன் = பாண்டியன். 7. கதழ்தல் = விரைதல்; பரிதல் = ஓடுதல்; கலி = செருக்கு; மா = குதிரை. 8. நிமிர் = உயர்ந்த; நெஞ்சு = துணிவு; புகல் = விருப்பம் (போரை விரும்பும்). 9. மாண்டது = மாண்புடையது. 10. கொற்றம் = அரசியல் (ஆட்சி). 11. நமர் = நம்முடையவர். 13. திறல் = வெற்றி, வலிமை. 14. சாயல் = மென்மை. 15. வண்மை = ஈகை. 16. கையறுதல் = இல்லாமற் போதல். 17. நெடுந்தகை = பெரியோன்; தாழ்நீர் = ஆழமான நீர். 18. புணரி = அலைகடல். 20. கடு = விரைவு. 21. வடு = கருமணல்; எக்கர் = மணற்குன்று.

கொண்டு கூட்டு: பூந்தார் மாற, நெடுந்தகை, நான்குடன் மாண்ட தாயினும்
அரசின் கொற்றம் அறநெறி முதற்றே; அதனால், நமரெனக் கோல்கோடாது, பிறர்எனக் குணங் கொல்லாது, ஆண்மையும், சாயலும், வண்மையும் உடையை ஆகி இல்லோர் கையற நீ மணலினும் பலகாலும் நீடு வாழிய எனக் கூட்டுக.

உரை: உயர்ந்த மலையைப் பெரிய வில்லாகவும் பாம்பை நாணாகவும் கொண்டு, ஒரே அம்பில் முப்புரங்களையும் (மூன்று அசுரர்களின் பறக்கும் கோட்டைகளையும்) அழித்து, பெரிய வலிமையுடைய தேவர்களுக்கு வெற்றியைக் கொடுத்த, கரிய நிறமுடைய கழுத்தையுடைய சிவபெருமானின் அழகிய திருமுடியின் பக்கத்தில் உள்ள பிறையணிந்த நெற்றியில் உள்ள கண்போல் மூவேந்தர்களிலும் மேம்பட்ட மாலையணிந்த நன்மாறனே!

கடிய சினத்தையுடைய கொல்லும் யானைப்படை, விரைந்து செல்லும் செருக்குடைய குதிரைப்படை, உயர்ந்த கொடிகளுடைய தேர்ப்படை, நெஞ்சில் வலிமையுடன் போரை விரும்பும் காலாட்படை ஆகிய நான்கு படைகளும் உன்னிடம் சிறப்பாக இருந்தாலும், பெருமைமிக்க அறநெறிதான் உன் ஆட்சியின் வெற்றிக்கு அடிப்படையாகும். அதனால், இவர் நம்மவர் என்று நடுவுநிலைமையிலிருந்து தவறாமல், இவர் நமக்கு அயலார் என்று அவர் நற்குணங்களை ஒதுக்கித் தள்ளாமல், கதிரவனைப் போன்ற வீரம், திங்களைப் போன்ற குளிர்ந்த மென்மை, மழையைப் போன்ற வண்மை ஆகிய மூன்றையும் உடையவனாகி, இல்லை என்பார் இல்லை என்னும்படி நீ நெடுங்காலம் வாழ்க! பெருந்தகையே! ஆழமான நீரையுடைய கடலின் மேல் உள்ள வெண்ணிற அலைகள் மோதும் திருச்செந்தூரில் முருகக் கடவுள் நிலை பெற்றிருக்கும் அழகிய அகன்ற துறையில் பெருங்காற்றால் திரட்டப்பட்ட கருமணலினும், நீ பலகாலம் வாழ்வாயாக.

சிறப்புக் குறிப்பு: புலவர் மதுரை மருதன் இளநாகனார் பாண்டிய மன்னனுக்கு “நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்” என்றும் ஆண்மையும், மென்மையும், வண்மையும் உடையவனாக அவன் இருத்தல் வேண்டும் என்றும் அறிவுரை கூறுவதால் இப்பாடல் செவியறிவுறூஉத் துறையைச் சார்ந்ததாயிற்று.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

56. கடவுளரும் காவலனும்!

 
பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் (56,189, 395). இவர் மதுரைக் கணக்காயனாரின் மகன் என்பதனால் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று அழைக்கப்பட்டார். இவரும் மதுரை நக்கீரர் என்று அழைக்கப்பட்டவரும் ஒருவரே என்பது ஒரு சாரர் கருத்து. வேறு சிலர், மதுரை நக்கீரர் வேறு இவர் வேறு என்பர். இவர் கடைசங்கத்தின் தலைவராக இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் தெளிந்த அறிவும் சிறந்த புலமையும் உடையவர். இவர் புறநானூற்றில் மூன்று செய்யுட்களையும் (56, 189, 395), அகநானூற்றில் 17 செய்யுட்களையும், நற்றிணையில் 7 செய்யுட்களையும், குறுந்தொகையில் 8 செய்யுட்களையும் இயற்றியவர். மற்றும், பத்துப்பாட்டில் முதலாவதாகிய திருமுருகாற்றூப்படையையும் ஏழாவதாகிய நெடுநல்வாடையையும் இய்ற்றியவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. இறையனார் அகப்பொருளுக்கு இவர் எழுதிய உரை மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

குறுந்தொகையில், “கொங்குதேர் வாழ்க்கை” என்று தொடங்கும் பாடலை (குறுந்தொகை - 2) சிவபெருமான் இயற்றியதாகக் கருதப்படுகிறது. அப்பாடலில் பொருள் குற்றம் இருப்பதாக நக்கீரர் கூறியதாகவும், அப்பொழுது சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து தான் யார் என்பதை நக்கீரருக்குத் தெரிவித்தாகவும், நக்கீரர், “நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே” என்று சொன்னதாகவும் திருவிளையாடல் புராணத்தில் கூறப்படுகிறது. (குறுந்தொகை, புலவர் துரை இராசாராம், திருமகள் நிலையம்)
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 55-இல் காண்க.
பாடலின் பின்னணி: உலகம் காக்கும் கடவுளர் சிவன், பலராமன், திருமால், முருகன் ஆகிய நால்வரையும் ஒவ்வொரு வகையில் ஒத்திருப்பதாகக் கூறி, “வேந்தே, மகளிர் தரும் மதுவை அருந்தி இன்பங்களை நுகர்ந்து, உலகின் இருளை நீக்கும் ஞாயிற்றைப் போலவும், திங்களைப் போலவும் நீ நிலைபெற்று வாழ்க” என்று இப்பாடலில் நக்கீரர் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை வாழ்த்துகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பூவை நிலை: மனிதரைத் தேவரோடு ஒப்பிட்டுக் கூறுதல் பூவை நிலை எனப்படும்.

ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்,
கடல்வளர் புரிவளை புரையும் மேனி
அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடி யோனும்,
5 மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புள்கொடி விறல்வெய் யோனும்
மணிமயில் உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும்என
ஞாலம் காக்கும் கால முன்பின்
10 தோலா நல்இசை நால்வர் உள்ளும்
கூற்றுஒத் தீயே மாற்றருஞ் சீற்றம்;
வலிஒத் தீயே வாலி யோனைப்;
புகழ்ஒத் தீயே இகழுநர் அடுநனை;
முருகுஒத் தீயே முன்னியது முடித்தலின்;
15 ஆங்குஆங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும்
அரியவும் உளவோ நினக்கே? அதனால்
இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈயா
யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனை கலத்து ஏந்தி நாளும்
20 ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்கினிது ஒழுகுமதி, ஓங்குவாள் மாற!
அங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றும்
வெங்கதிர்ச் செல்வன் போலவும் குடதிசைத்
தண்கதிர் மதியம் போலவும்
25 நின்று நிலைஇயர் உலகமோடு உடனே.

அருஞ்சொற்பொருள்:
1. ஏறு = காளைமாடு; வலன் = வெற்றி; எரி = ஒளி,நெருப்பு; மருள் - உவமை உருபு; அவிர் = ஒளி. 2. மாற்று = எதிர்; கணிச்சி = சிவனுடைய ஆயுதம்; மணி = நீலமணி; மிடறு = கழுத்து. 3. புரி = முறுக்கு; வளை = சங்கு; புரைதல் = ஒத்தல்; அடல் = கொல்லுதல். 4. அடல் = கொல்லுதல்; நாஞ்சில் = கலப்பை. 5. மண்ணுதல் = கழுவுதல். 6. விறல் = வெற்றி; வெய்யோன் = விருப்பம் உடையவன். 7. மணி = நீலமணி; மாறா = மாறாத. 8. பிணிமுகம் = மயில். 9. முன்பு = வலிமை. 10. தோலா = தோல்வி காணாத. 11. கூற்று = எமன் (இங்கு சிவனைக் குறிக்கிறது). 12. வாலி = வெண்ணிறமுடையோன் (பலராமன்). 13. இகழுநர் = பகைவர். 14. முன்னுதல் = நினைத்தல். 17. அருகுதல் = குறைதல். 20. மடுத்தல் = உண்ணுதல் (ஊட்டுதல்). 23. குடதிசை = மேற்குத் திசை. 25. நிலைஇயர் = நிலைபெறுவாயாக.

உரை: காளைக்கொடியை வெற்றியின் அடையாளமாக உயர்த்திப் பிடித்து, நெருப்புப் போல் ஒளிவிடும் சடையோடும், ஒப்பற்ற கணிச்சி என்னும் ஆயுதத்தோடும், நீலநிறக் கழுத்தோடும் காட்சி அளிப்பவன் சிவபெருமான். கடலில் வளரும் முறுக்கிய சங்கு போன்ற வெண்ணிற மேனியும், கொல்லுதலை விரும்பும் கலப்பையும், பனைக்கொடியும் உடையவன் பலராமன். கழுவப்பட்ட அழகிய நீலமணி போன்ற உடலும், வானளாவ உயர்ந்த கருடக் கொடியும் கொண்டு வெற்றியை விரும்புபவன் திருமால். நீலமணி போன்ற நிறத்தையுடைய மயிற்கொடியும், உறுதியான வெற்றியும், மயிலை ஊர்தியாகவும் (வாகனமாகவும்) கொண்ட ஓளிபொருந்தியவன் முருகன். இந்நான்கு கடவுளரும் உலகம் காக்கும் வலிமையும் அழியாத புகழும் உடையவர்கள். இந்த நால்வருள்ளும், உன்னுடைய நீங்காத சினத்தால் நீ அழிக்கும் கடவுளாகிய சிவனுக்கு ஒப்பானவன்; வலிமையில் பலராமனுக்கு ஒப்பானவன்; புகழில் பகைவரைக் கொல்லும் திருமாலுக்கு ஒப்பானவன்; நினைப்பதை முடிப்பதில் முருகனுக்கு ஒப்பானவன். இவ்வாறு ஆங்காங்கு அந்த அந்தக் கடவுளை ஒத்தவனாக இருப்பதால், உன்னால் செய்ய முடியாத செயலும் உண்டோ? அதனால், இரப்போர்க்கு அரிய அணிகலன்களை வழங்கி, யவனர் நல்ல கலங்களில் கொண்டுவந்த, குளிர்ந்த மணமுள்ள மதுவைப் பொன்னால் செய்யப்பட்ட அழகிய கிண்ணங்களில் ஏந்தி வந்து, ஓளிபொருந்திய வளையல் அணிந்த மக்ளிர் உனக்கு நாள்தோறும் கொடுக்க, அதைக் குடித்து, மகிழ்ச்சியோடு சிறப்பாக இனிது வாழ்வாயாக.

ஓங்கிய வாளையுடைய பாண்டியன் நன்மாறனே! அழகிய ஆகாயத்தில் நிறைந்த இருளை அகற்றும் கதிரவனைப் போலவும் மேற்குத் திசையில் தோன்றும் குளிர்ந்த கதிர்களையுடைய திங்களைப் போலவும் இவ்வுலகத்தோடு நின்று நிலைபெற்று நீ வாழ்வாயாக.

சிறப்புக் குறிப்பு: இப்பாடலில், பாண்டியனை சிவன், பலராமன், திருமால் மற்றும் முருகன் ஆகிய கடவுளர்க்கு ஒப்பிடுவதால், இப்பாடல் பூவை நிலையைச் சார்ந்ததாயிற்று.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

57. காவன்மரமும் கட்டுத்தறியும்!

 
பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் (57, 58,169,171, 353). இவர் புறநானூற்றில் ஐந்து பாடல்கள் இயற்றியது மட்டுமல்லாமல், அகநானூற்றில் மூன்று பாடல்களும் (107, 123, 285), குறுந்தொகையில் ஒரு பாடலும் (297) இயற்றியவர்.
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 55-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒரு சமயம், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் பகைவருடன் போர் செய்வதற்குச் சென்று கொண்டிருந்தான். அவனுடைய வலிமையையும் போர் புரியும் ஆற்றலையும் நன்கு அறிந்த காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், “வேந்தே, உன் வீரர்கள் பகைவர்களின் நாட்டு வயல்களை கொள்ளை கொண்டால் கொள்ளட்டும்; வேண்டுமானால் அவர்களின் ஊர்களுக்குத் தீ மூட்டுக; ஆனால், அவர்களின் காவல் மரங்களை வெட்டுவதைத் தவிர்ப்பாயாக.” என்று இப்பாடலில் அவனுக்கு அறிவுறை கூறுகிறார்

திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: துணை வஞ்சி. பிறரை வெற்றி கொள்ள நிற்பவனுக்குச் சந்து செய்வித்தல்.

வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!
நின்னொன்று கூறுவது உடையேன்; என்னெனின்
5 நீயே, பிறர்நாடு கொள்ளும் காலை அவர்நாட்டு
இறங்குகதிர் கழனிநின் இளையரும் கவர்க;
நனந்தலைப் பேரூர் எரியும் நக்க;
மின்னுநிமிர்ந் தன்னநின் ஒளிறுஇலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்
10 கடிமரம் தடிதல் ஓம்புநின்
நெடுநல் யானைக்குக் கந்தாற் றாவே.

அருஞ்சொற்பொருள்:
1. வல்லார் = திறமையற்றவர்; வல்லுநர் = திறமையுள்ளவர். 3. உரை = சொல்; சாலல் = மிகுதியாதல், மேன்மையுடைத்தாதல். 6. இறங்குதல் = வளைதல்; இளையர் = வேலைக்காரர், வீரர்; கவர்தல் = எடுத்தல் (கொள்ளையடித்தல்). 7. நனம் = அகற்சி; நக்க = சுடுக. 8. இலங்கல் = விளங்குதல். 9. ஒன்னார் = பகைவர்; செகுத்தல் = அழித்தல்; என்னதூஉம் = சிறிதும். 10. கடிமரம் = பகைவர் அணுகாவண்ணம் வளர்த்துக் காக்கப்படும் காவல் மரம்; தடிதல் = வெட்டல்; ஓம்புதல் = தவிர்தல். 11. கந்து = யானை கட்டும் தறி; ஆற்றுதல் = கூடியதாதல்.

கொண்டு கூட்டு: மாற, நின் யானைக்கு கந்து ஆற்றாவாதலால் கடி மரந் தடிதல் ஓம்பு எனக் கூட்டுக.

உரை: திறமையற்றவர்களாக இருந்தாலும் திறமையுடையவர்களாக இருந்தாலும், உன்னைப் புகழ்வோர்க்கு அருள் புரிவதில் நீ திருமாலைப் போன்றவன். சொல்லுதற்கரிய புகழ் பொருந்திய மாறனே! நான் உன்னிடம் ஒன்று கூறுவேன். அது என்னவென்றால், நீ பிறர் நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் பொழுது, அவர்களின் நாட்டில், வளைந்த கதிர்களையுடய வயல்களை உன்னுடய வீரர்களும் கொள்ளை கொள்ளட்டும்; அகன்ற பெரிய இடங்கள் உள்ள பெரிய ஊர்களைத் தீயால் வேண்டுமானால் எரிப்பாயாக; மின்னலைப் போல் ஒளியுடன் விளங்கும் உன்னுடைய நெடிய வேல், பகைவர்களை அழித்தாலும் அழிக்கட்டும்; அவர்களுடைய காவல் மரங்களை வெட்டுவதை மட்டும் தவிர்ப்பாயாக. ஏனெனில், உன் நெடிய யானைகளுக்கு அம்மரங்கள் கட்டுத் தறியாகும் தகுதி அற்றவை.

சிறப்புக் குறிப்பு: காவல் மரங்களை வெட்டினால் போர் முடிவுபெறும். ஆகவே, காவல் மரங்களை வெட்டாமல் இருந்தால், பகைவர்கள் பணிந்து திறை கட்டுவதற்கு உடன்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால், புலவர், காவல்மரங்களை வெட்டுவதைத் தவிர்த்துப் பகைவர்களுடன் சமாதானமாகப் போவதற்கு வழிவகுக்குமாறு இப்பாடலில் பாண்டியனுக்கு அறிவுரை கூறுகிறார். இப்பாடலில், புலவர் சமாதானத்துக்கு வழிகாட்டுவதால், இப்பாடல் துணைவஞ்சி என்னும் துறையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

58. புலியும் கயலும்!

 
பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 57-இல் காண்க.
பாடப்பட்டோர்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும். சோழன் பெருந்திருமாவளவன், குராப்பள்ளி என்னும் இடத்தில் இறந்ததால் சோழன் குராப்பளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்று அழைக்கப்பட்டான். இவன் போர் செய்வதில் வல்லவன். இவன் காலத்தில் வாழ்ந்த சேரமன்னன், கொங்கு நாட்டவர்களின் துணையோடு இவனோடு போரிட்டான். அப்போரில், இச்சோழ மன்னன் வெற்றி பெற்றான். இவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் மிகுந்த நட்புடையவர்களாக இருந்தார்கள்.
பாடலின் பின்னணி: ஒருசமயம், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கே இருந்தனர். அதைக் கண்ட புலவர் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பெருமகிழ்ச்சி அடைந்தார். சோழனும் பாண்டியனும் ஒருங்கே இருந்ததைப் பலராமனும் திருமாலும் ஒருங்கே இருப்பதற்கு ஒப்பிட்டு, “அவர்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்தால் இவ்வுலகம் அவர்கள் கையகப்படுவது உறுதி என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: உடன் நிலை: ஒருங்கே இருக்கும் இருவரைப் பாடுவது உடன் நிலை எனப்படும்.

நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவனே
முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்
கொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது
5 நல்லிசை முதுகுடி நடுக்குஅறத் தழீஇ
இளையது ஆயினும் கிளைஅரா எறியும்
அருநரை உருமின் பெருநரைப் பொறாஅச்
செருமாண் பஞ்சவர் ஏறே; நீயே
அறந்துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே,
10 நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென
வரைய சாந்தமும் திரைய முத்தமும்
இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்
தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே!
பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்
15 நீல்நிற உருவின் நேமி யோனும்என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின் றாஅங்கு
உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி
இந்நீர் ஆகலின் இனியவும் உளவோ?
இன்னும் கேண்மின்நும் இசைவா ழியவே;
20 ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும்
உடனிலை திரியீர் ஆயின் இமிழ்திரைப்
பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே;
அதனால், நல்ல போலவும் நயவ போலவும்
25 தொல்லோர் சென்ற நெறியர் போலவும்
காதல் நெஞ்சின்நும் இடைபுகற்கு அலமரும்
ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது
இன்றே போல்கநும் புணர்ச்சி; வென்றுவென்று
அடுகளத்து உயர்கநும் வேலே; கொடுவரிக்
30 கோள்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி
நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆகபிறர் குன்றுகெழு நாடே.

அருஞ்சொற்பொருள்:
1. கிழவன் = உரியவன். 2. முழுமுதல் = அடிமரம்; கோளி = பூவாது காய்க்கும் மரம்; கொழு நிழல் = குளிர்ந்த நிழல். 3. சினை = கிளை; வீழ் = மரவிழுது. 4. தொல்லோர் = முன்னோர்; துளங்கல் = கலங்கல். 5. முதுகுடி = பழங்குடி; நடுக்கு = நடுக்கம் = அச்சம்; தழீஇ = உள்ளடக்கிக் கொண்டு; அரா = பாம்பு; கிளை = மந்தை. 7. அரு = பொறுத்தற்கரிய; உரும் = இடி; நரை = வெண்மை. 8. செரு = போர்; பஞ்சவன் = பாண்டியன். 9. துஞ்சுதல் = தங்குதல்; உறைந்தை = உறையூர்; பொருநன் = அரசன். 11. வரை = மலை; சாந்தம் = சந்தனம்; திரை = கடல் அலை. 12. இமிழல் = ஒலித்தல்; குரல் = ஒலி ஓசை. 15. நேமி = கடல்; நேமியோன் = திருமால். 17. உரு = அச்சம், நடுக்கம்; உட்கு = அச்சம். 18. இந்நீர் = இத்தன்மை. 19. இசை = புகழ். 20. ஆற்றுதல் = உதவுதல். 21. திரிதல் = மாறுதல். 22. பௌவம் = கடல். 24. நயத்தல் = அன்புசெய்தல், நட்பு கொள்ளுதல், நீதி செய்தல். 26. அலமரல் = வருந்தல். 27. கொடு = வளைவு. 28. கோள் = வலி; மா = புலி; குயிற்றல் = பதித்தல்; தொடு = தோண்டப்பட்ட; பொறி = அடையாளம். 29. கொடுவரி = புலி. 31. கெண்டை = கயல். 32. குடுமி = சிகரம், உச்சி.

கொண்டு கூட்டு: நீயே, காவிரிக் கிழவனை; இவனே பஞ்சவர் ஏறே; நீயே உறந்தைப் பொருநனை; இவனே கூடல் வேந்தே; பனைக் கொடியோனும் நேமியோனும் உடன் நின்றாஅங்கு இருவரும் உடனிலை ஆயின் மாநிலம் கையகப்படும்; அதனால், இன்றே போல்க நும் புணர்ச்சி; பிறர் குன்றுகெழு நாடு கோண்மாவும் கெண்டையும் பொறித்த குடுமிய வாக.

உரை: நீ குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன்; இவனோ, பருத்த அடியுள்ள ஆலமரத்தின் அடிமரம் வெட்டப்பட்டு அழிந்தாலும், அதன் நெடிய நிழல் தரும் கிளைகளை விழுதுகள் தாங்குவதைப்போல், முன்னோர்கள் இறந்தாலும், தான் தளராது, நல்ல புகழுள்ள தன் பழங்குடியைத் தடுமாற்றமில்லாமல் காத்துத், தான் சிறிதே ஆயினும் பாம்பைக் கூட்டத்தோடு அழிக்கும் வெண்ணிற இடிபோல் பகவரைக் காணப் பொறாமல் போரில் சிறந்த பாண்டியர்களில் சிங்கம் போன்றவன்.

நீயோ, அறம் நிலைபெற்ற உறையூரின் தலைவன். இவனோ நெல்லும் நீரும் அனைவருக்கும் எளிதில் கிடைப்பவை என்று கருதி யாவர்க்கும் பெறுதற்கரிய மலையில் விளையும் சந்தனம், கடலில் விளையும் முத்து, முழங்கும் மும்முரசுகள் ஆகியவற்றுடன் தமிழ் பொருந்திய மதுரையில் செங்கோல் செலுத்தும் வேந்தன்.

பால போன்ற வெண்ணிற மேனியும் பனைக்கொடியும் உடைய பலராமனும் நீல நிற மேனியையுடைய திருமாலும் ஆகிய இரண்டு கடவுளரும் ஒருங்கே கூடி இருந்தாற் போல் அச்சம் பொருந்திய காட்சியொடு நீங்கள் இருவரும் விளங்குவதைவிட இனிய காட்சியும் உண்டோ? உங்கள் புகழ் நெடுங்காலம் வாழ்வதாக! மேலும் கேட்பீராக!

நீங்கள் ஒருவர்க்கு ஒருவர் உதவுவீர் ஆகுக. நீங்கள் இருவரும் கூடியிருக்கும் இந்நிலை மாறாதிருப்பின் கடல் சூழ்ந்த, பயனுள்ள இவ்வுலகம் உங்கள் கைவசமாவது உறுதி; ஆதலால், நல்லவர்களாகவும், நடுவுநிலைமை தவறாதவர்களாகவும், உங்கள் முன்னோர்கள் சென்ற நெறியைப் பின்பற்றி, அன்போடு இருந்து, உங்களைப் பிரிக்கத் தவிக்கும் பகைவர்களின் சொற்களைக் கேளாமல், இன்று போலவே என்றும் சேர்ந்திருங்கள். போர்க்களத்தில் மேலும் மேலும் வெற்றிகளைப் பெற்று உங்கள் வேல் உயர்வதாகுக; பிறருடைய நாடுகளிலுள்ள குன்றுகளில், வளைந்த கோடுகளையுடைய புலிச் சின்னமும், பெரிய நீரில் வாழும் கயல்மீன் சின்னமும் பொறிக்கப்படுவதாகுக.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

59. பாவலரும் பகைவரும்!

 
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார் (151,164,165, 205, 209, 294). இவர் பெருந்தலை என்னும் ஊரைச் சார்ந்தவர். பெருந்தலை என்ற பெயரில் தமிழ் நாட்டில் பல ஊர்கள் இருப்பதால் இவர் தமிழ் நாட்டில் எந்தப் பகுதியைச் சார்ந்தவர் என்று உறுதியாகக் கூறமுடியவில்லை என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார். அகநானூற்றில் இவர் இயற்றிய செய்யுள் ஒன்றில் (224) இவர் பெயர் ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் என்று குறிப்பிடப்படுவதால் இவரது பெற்றோர்கள் ஆவூர் மூலம் என்னும் ஊரைச் சார்ந்தவர் என்று கருதப்படுகிறது. இவர் தலை பெரிதாக இருந்ததால் இவர் பெருந்தலை என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார் என்றும் சிலர் கூறுவர்.

வறுமையில் வாடிய புலவர்களில் பெருந்தலைச் சாத்தனாரும் ஒருவர். கடையெழு வள்ளல்கலின் காலத்திற்குப் பிறகு குமணன் என்று ஒருவள்ளல் இருந்தான். அவன் வண்மையாலும் வெற்றிகளாலும் பெரும் புகழ் பெற்றதைக் கண்டு பொறாமை கொண்ட அவன் இளவல் இளங்குமணன் குமணனின் நாட்டைக் கைப்பற்றினான். குமணன் காட்டிற்குச் சென்று அங்கு வாழ்ந்தான். பெருந்தலைச் சாத்தனார் குமணனைக் காட்டில் கண்டு அவனைப் புகழ்ந்து பாடினார். பெருந்தலைச் சாத்தனார்க்கு அளிப்பதற்கு குமணனிடம் பொருள் ஏதும் இல்லாததால் அவன் தன் வாளைப் பெருந்தலைச் சாத்தனாரிடம் கொடுத்துத் தன் தலையை வெட்டி இளங்குமணனிடம் கொண்டுபோய்க் கொடுத்தால் அவன் அவருக்குப் பரிசளிப்பான் என்று கூறினான். பெருந்தலைச் சாத்தனார் குமணனிடமிருந்து வாளை மட்டும் பெற்றுக் கொண்டு இளங்குமணனிடம் சென்று சமாதானம் பேசி குமணனையும் இளங்குமணனையும் ஒருவரோடு ஒருவர் அன்புகொள்ளச் செய்தார்.

இவர் புறநானூற்றில் ஆறு செய்யுட்களும் அகநானூற்றில் இரண்டு செய்யுட்களும் (13, 224) நற்றிணையில் ஒரு செய்யுளும் (262) இயற்றியவர்.
பாடப்பட்டோன்: பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த காலத்தில், அவன் தம்பி வெற்றிவேற் செழியன், கொற்கையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டின் மற்றொரு பகுதியை ஆண்டுவந்தான். கோவலனைக் கள்வன் என்று எண்ணித் தவறாகத் தான் கொலை செய்ததை உணர்ந்த ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் “யானோ அரசன்? யனே கள்வன்” என்று கூறி உயிர் துறந்தான். அவன் உயிர் துறந்த பின், அவன் தம்பி வெற்றிவேற் செழியன், நெடுஞ்செழியனின் நாட்டின் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டான். அவன் சித்திரமாடம் என்ற இடத்தில் இறந்ததால், வெற்றிவேற் செழியன், பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்று அழைக்கப்பட்டன்.
பாடலின் பின்னணி: பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறனின் மாலை சூடிய மார்பையும், தாள் அளவு நீண்ட வலிய கையையும் பாரட்டி, “ வேந்தே, நீ அருள் செய்வதில் சிறந்தவன்; பொய் சொல்லாதவன். பகைவர்க்கு மிகுந்த வெப்பமுள்ள கதிரவனைப் போன்றவன்; எம் போன்றவர்க்குக் குளிர்ந்த திங்களைப் போன்றவன்” என்று புலவர் பெருந்தலைச் சாத்தனார் இப்பாடலில் அவனைப் புகழ்கிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பூவை நிலை: மனிதரைத் தேவரோடு ஒப்பிட்டுக் கூறுதல் பூவை நிலை எனப்படும்.
ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பின்
தாள்தோய் தடக்கைத் தகைமாண் வழுதி!
வல்லை மன்ற நீநயந் தளித்தல்!
தேற்றாய் பெரும! பொய்யே; என்றும்
5 காய்சினம் தவிராது கடல்ஊர்பு எழுதரும்
ஞாயிறு அனையை நின் பகைவர்க்குத்;
திங்கள் அனையை எம்ம னோர்க்கே.

அருஞ்சொற்பொருள்:
1. ஆரம் = மாலை; அணி = அழகு; கிளர்தல் = மிகுதல். 2. தகை = தகுதி. 3. வல்லை = வலிமை உடையவன்; மன்ற = நிச்சயமாக, தெளிவாக; நயந்து அளித்தல் = அருள் செய்தல். 4. தேற்றல் = அறிவித்தல் (சொல்லுதல்); காய்தல் = சினத்தல், சுடுதல். கடல் ஊர்பு = கடலிலிருந்து. 6. அனைய = போன்றாய்.

உரை: மாலை தவழும் அழகு மிகுந்த மார்பையும், முழங்காலைத் தொடுமளவுக்கு நீண்ட கையையும் உடைய மாட்சிமைக்குரிய வழுதி! நீ யாவரும் மகிழும்படி அவர்களுக்கு அருள் செய்வதில் உண்மையாகவே வல்லவன். நீ என்றும் பொய்யே கூறமாட்டய். உன் பகைவர்க்கு, நீ என்றும் கடும் வெப்பம் நீங்காமல் கடலிடத்தே இருந்து கிளர்ந்து எழும் ஞாயிறைப் போன்றவன். எம்போன்றவர்களுக்கு, நீ குளிர்ந்த திங்களைப் போன்றவன்.

சிறப்புக் குறிப்பு: முழங்கால் அளவுக்குக் கைகள் நீண்டு இருப்பது ஆண்களுக்கு அழகு என்று கருதப்பட்டதால், புலவர், “தாள் தோய் தடக்கை” என்று குறிப்பிடுகிறார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

60. மதியும் குடையும்!

 
பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார் (60, 170, 321). உறையூரில் மருத்துவராகவும் புலவராகவும் வாழ்ந்தவர் தாமோதரனார். இவர் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனையும் பிட்டங்கொற்றனையும் பாடியவர்.
பாடப்பட்டோன்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 58-இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்பாடலில், உறையூர் மருத்துவன் தாமோதரனார், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் நாட்டிற்கு உண்டாகும் குறைகளை நீக்கி, நாட்டைக் காப்பதில் பெரு முயற்சியும் உழைப்பும் உடையவனாய் இருப்பதைப் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: குடை மங்கலம்: அரசன் குடையைப் புகழ்ந்து பாடுவது குடை மங்கலம் எனப்படும்.

முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச்
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்
உச்சி நின்ற உவவுமதி கண்டு
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த
5 சில்வளை விறலியும் யானும் வல்விரைந்து
தொழுதனம் அல்லமோ பலவே; கானல்
கழிஉப்பு முகந்து கல்நாடு மடுக்கும்
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரனுடை நோன்பகட்டு அன்ன எங்கோன்
10 வலன்இரங்கு முரசின் வாய்வாள் வளவன்
வெயில்மறைக் கொண்ட உருகெழு சிறப்பின்
மாலை வெண்குடை ஒக்குமால் எனவே.

அருஞ்சொற்பொருள்:
1. நாப்பண் = நடுவே; திமில் = மரக்கலம். 2. செம்மீன் = செவ்வாய், திருவாதிரை; மாகம் = மேலிடம்; விசும்பு = ஆகாயம். 3. உவவு = முழுநிலா (பௌர்ணமி). 4. கட்சி = காடு; மஞ்ஞை = மயில்; சுரம் = வழி; முதல் = இடம். 5. வல் = விரைவு. 6. கானல் = கடற்கரை. 7. கழி = உப்பளம்; மடுத்தல் = சேர்த்தல். 8. ஆரை = ஆரக்கால்; சாகாடு = வண்டி; ஆழ்ச்சி = பதிவு அழுந்துவது. 9. உரன் = வலிமை; நோன் = வலிமை; பகடு = எருது. 10. வலன் = வெற்றி; இரங்கல் = ஒலி; வாய்வாள் = குறி தவறாத.

கொண்டு கூட்டு: உவவுமதி கண்டு, விறலியும் யானும் தொழுதனம் அல்லமோ; எங்கோன், வளவன், வெண்குடை ஒக்கும் எனவே.

உரை: கடலின் நடுவே உள்ள மரக்கலங்களிலுள்ள விளக்குப் போல, சிவந்த வீண்மீன் ஒளிறும் ஆகாயத்தின் உச்சியில் முழு நிலவு இருந்தது. அதைக் கண்டு அந்தச் சுரவழியில் வந்து கொண்டிருந்த, மயில் போன்ற, சில வளையல்களே அணிந்த விறலியும் நானும் விரைந்து பலமுறை தொழுதோம் அல்லவோ? அது ஏன் தெரியுமா? கடற்கரையிடத்து உப்பங்கழியில் விளைந்த உப்பைச் சுமந்துகொண்டு மலை நட்டுக்குச் செல்லும் ஆரக்காலையுடைய வண்டியைக் குண்டு குழிகளின் வழியே இழுத்துச் செல்லும் வலிய காளையைப்போன்றவன் எம் தலைவன். அவன் வெற்றியுடன் முழங்கும் முரசையும், குறி தவறாத வாளையுமுடையவன். வெயிலை மறைபப்பதற்காக அவன் கொண்ட அச்சம் பொருந்திய சிறந்த மாலை அணிந்த குடையைப் போன்றது அந்த முழு நிலா என்று நினைத்து அவ்வாறு தொழுதோம்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard