New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழர் திருவிழாக்கள் சமற்கிருத மயமாக்கப்பட்டமை திருக்கார்த்திகையும் தீபாவளியும்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
தமிழர் திருவிழாக்கள் சமற்கிருத மயமாக்கப்பட்டமை திருக்கார்த்திகையும் தீபாவளியும்
Permalink  
 


தமிழர் திருவிழாக்கள் சமற்கிருத மயமாக்கப்பட்டமை திருக்கார்த்திகையும் தீபாவளியும்

‘தமிழண்ணல்’ டாக்டர் இராம. பெரியகருப்பன்- தமிழியல்துறைத் தலைவர்,

மதுரை காமராசர் பல்கலைக் கழகம்  வெளிவண்ணம்

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இந்தியநாடு முழுமையும் பரவியிருந்த பண்பாடு, நெருங்கிய ஒற்றுமையுடையதாகும். பாரதத்தின் ஒருமைப்பாட்டிற்கு அடிப்படையான அஃது, இன்னும் முழுமையாகக் கண்டறியப்பட்டிலது. ஒன்றின் மேல் ஒன்றாகப் பல அடுக்குகள் வீழ்ந்து கிடக்குமாயின் அடியிலுள்ளது அறியப்படாது. மேற்பரப்பே பலராலும் அறியப்பட்டுப் பேசப்படுமாறு போன்று நிலைமை உளது. அவ்வடிப்படை நாகரிகம் திராவிட நாகரிகமே என்பதற்கு எட்டுணையும் அய்யமின்று. 

சமயம், மெய்ப்பொருள், சடங்குகள், மருத்துவம், நுண்கலை, இலக்கியம் போன்ற ஒவ்வொன்றிலும் ‘சமற்கிருதப்படுத்துதல் (Sanskritization) என்பது, மேற்பரப்பில் காணப்படும் மாற்றமேயாகும். பிறிதொரு வகையாகக் கூறினால் இவை ‘பேரளவில்’ மட்டும் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் எனலாம். ‘பேரளவில்’ என்பது மிகுதியையும் சுட்டும்; ‘பேர் அளவில்’ என்று, பெயரளவில், கலைச் சொற்களின் அளவில், பெயர் மாற்றங்களின் அளவில், அவ்வத்துறை சார்ந்த நூல்களை ஆக்கிப் படைத்துக் கொண்ட அளவில் நிகழ்ந்தவற்றையும் சுட்டும். இன்னும் தெளிவாகச் சொன்னால் சமயம், நுண்கலைகள், தொழில்கள், மருத்துவம், இலக்கியம் போன்றவை பெரிதும் திராவிட மூலதன அடிப்படையின; அவை சமற்கிருத மொழியில் விளக்கப்பட்டுள்ளன-பெயர்த்தெழுதப்பட்டுள்ளன-பாதுகாக்கப்பட்டுள்ளன. 

அதனாலேயே அவை திராவிடர்களுடையன அல்ல என்றாகிவிடா. இன்று ஆங்கிலம் போலச் சமற்கிருதம் ஆள்பவரின் மொழியாகவும் அதனால் பொதுமொழி நிலையிலும் செயற்பட்ட காலகட்டங்கள் பலவாகும். எனவே, பரதமுனிவரின் ‘நாட்டிய சாத்திரம்’ முதல் தீபாவளித் திருநாள்வரை எந்த ஒரு விளைவுக்கும் மூலத் திராவிடத் தொடர்பும் தமிழடிப்படையும் இருந்தும் அவை வடமொழி மேற்பூச்சினை அல்லது ‘வண்ணத்தை’க் காட்டுகின்றன.

பெரும்பாலானவற்றில் திராவிட உள்மூலமும் சமற்கிருத வெளிவண்ணமும் உள. ஒரு சொல் முதல் பெரும்புராணங்கள் வரை, சமுதாயக் கலைத்துறைகள் அனைத்திலும் இவ்விருசார்புமிருப்பதால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு சார்பிலே நின்று, ‘தாம் கண்டதே காட்சி’ என வீண் வம்பில் காலந்தள்ள இடமேற்படுகிறது.

அறிவாளர் மனநிலை

நம் நாட்டில் கலைஞர்கள், கற்றறிந்தவர்கள், சமயவாதிகள், மருத்துவர்கள் எல்லோரும் தத்தமது கலை, கல்வி, சமய, மருத்துவ நுட்பங்களைப் பிறர் அறியாவண்ணம் மறைத்துத் தமக்கும் தமக்கு வேண்டியவர்க்கும் மட்டும் உரிய மறைபொருளாக்கி-முதலீடாக்கிக் கொண்டு தமது வாழ்வினை உயர்த்திக் கொள்ளும் மனப்போக்கினராயிருந்தனர். அதற்காகத் தத்தமது அறிவுடைமைகளைப் பிறர் அறியா வண்ணம் முற்றிலும் மறைத்துக் காத்து, வேண்டும்போது மட்டும் வெளிப்படுத்திக் காசாக்கி வாழ்ந்து போயினர். இதனால் பற்பல நுட்பத் திறன்கள், அவ்வத்திறனுடையார் மறைந்தபோது, தாமும் ‘மறைபொருளா’யிருந்தே மறைந்தொழிந்தன. இத்தனியுடைமை மனப்போக்கிற்கு முன்பு சமற்கிருதம் கைகொடுத்தது; இப்போது ஆங்கிலம் உதவி செய்கிறது. அம்மொழிகளில் கலைச்சொற்கண்டு, எழுதி வைத்துப் பிறரறியாமல் மறைத்து அல்லது பேணிக்காத்து, வேண்டும்போது வெளியிடுவது, ஒருவர் தாம் திறனுடையவர் எனக் காட்டிக்கொள்ள நல்வாய்ப்பாக இருந்தது. இதனாலும் இவை அறிவுடையோர் மொழிகளாக-கலைஞர்களின் கருவியாக-திறனுடையார் ஊடகமாக இந்நாட்டில் விளங்கின. இதனால் இவை ‘அறிவுமொழி’ போலவும் தமிழ் அனைய தாய்மொழிகள் சாதாரணமாக-அன்றாட வாழ்வுக்கு மட்டும் பயன்படும் மொழிகள் போலவும் ‘மொழிச்சாதிகள்’ உருவாயின. இதனை ‘ஆரியச் சூழ்ச்சி’ என்பதை விட, ‘அறிவுடையோர் அனைவரின் சூழ்ச்சி’ என்றால் மிகையாகாது.

கலை இங்கே; விளக்கம் அங்கே

பலவற்றில் நோக்குங்கால் வடிவம் தமிழாக இருக்கும்; வண்ணப்பூச்சு வடமொழியாக இருக்கும். அடித்தளம் திராவிடமாயிருக்கும்; மேற்பரப்பு வடமொழியாக இருக்கும் மேற்பூச்சைக் கண்டதும் எல்லாம் வடமொழியிலிருந்து வந்தன என்று தோன்றும்; மேற்பரப்பைப் பார்த்ததும் ‘சர்வம் சமற்கிருதமயம்’ என்று கூறவே மனம் முந்தும். பரத நாட்டியத்தை எடுத்துக் கொள்ளுங்கள் தென்னாட்டில் தென்திசை நோக்கி வரவர அக்கலை வளர்ந்த வரலாறும் அதன் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய உண்மைகள் புலனாகும். தமிழகக் கோயிற் சிற்பங்களில் நூற்று எட்டுக் காரணங்கள் பற்றிய சிற்பங்கள் உள்ளன. தமிழகத்தே இதற்கெனத் தனி வகுப்பார் இருந்தமை, ‘பொட்டுக் கட்டும்’ வழக்கமிருந்த அண்மைக்காலம் வரை நாடறிந்த செய்தியாகும். 

இந் நாட்டியம் எனப்படும் ‘சதுர்’ தென்னாட்டுக் கலையாகும். தமிழர் சமுதாயத்தில் வேரூன்றிக் கிடக்கும் நாட்டுப்புறவியல் ஆடல் வகைகளில் ஒன்றே அது. ‘சதுர்’ ஆடுவதற்கென்றே ஒரு விரிப்புண்டு. அதைச் ‘சதுர்ச்சமுக்காளம்’ என்பது ஒரு வட்டார வழக்கு. முன்பு சதுர் வைக்காமல் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டதே இல்லை. இறைவனையே ஆடற்கலை வல்லானாகக் கண்ட இக்கலை தொடர்பான செய்திகள் கல்வெட்டுக்களிலும் சிற்பங்களிலும் குவிந்து, பரந்து கிடக்கின்றன. இவற்றைப் பற்றி அய்ந்து, அறிந்து தொகுத்து, வகுத்துக் காட்டிக் காப்பார் இன்றைக்கு வரை எவருமிலர். ஆயின் இவற்றைக் காத்தருளிய பரதமுனிவர் காலத்திலேயே தமிழ் மூலங்கள் வடமொழிக் காப்புப் பெற்ற முயற்சிகள் தோன்றிவிட்டன. இதனால் அக்கலை வடமொழியிலிருந்து வந்தது என்றோ, வடவர்க்கு உரியது என்றோ விவாதிப்பது அறிவுடைமையாகாது. விந்தியத்திற்கு வடக்கே இக்கலை கால் கொண்டிருந்ததில்லை. காசுமீரத்திலிருந்து பரதர் இதை எழுதினாரெனில், அவர் எழுதிய வரலாறுதான் ஆராயப்பட வேண்டுமே தவிர, அக்கலை பல நூற்றாண்டுகளாக விளங்கி வருமிடத்திற்கு உரிமையுடையதாகாது என எழுதிவிடுதல் கூடாது. 

சங்க அக இலக்கியத்திற்கு ஆங்கிலத்தில் ‘ஆய்வேடுகள்’ பல தோன்றியுள்ளன. சில நூற்றாண்டுகட்குப் பிறகு இவ்வாங்கில ஏடுகளில் புகழ்பெற்ற ஒன்றினை வைத்துக் கொண்டு ஒருவர் ‘அகத்திணை மரபு’ தமிழர் அய்ரோப்பியரிடமிருந்து கடன் பெற்றது என விவாதித்தால் எவ்வாறிருக்குமோ அவ்வாறே இதுவும் உளது. கலை ஓரிடத்தில் காலூன்றியிருக்க, அதற்கு விளக்கம் பிறிதொரு மொழியில் இருக்குமானால், அவற்றிடையே ஏற்பட்ட உறவிற்குரிய காரணத்தை உண்மை காணும் மனப்போக்குடன் ஆராயவேண்டும். இதனை அறியாமல் ஒருவர் பரதக்கலை தமிழர்களுடையதன்று என்று ஆய்வுரை எழுதி ‘டாக்டர்’ பட்டம் பெற்றுவிட்டால், அதைக்கண்டு நோவது மட்டும் போதாது. எவரேனும் ஒருவர் தம் வாழ்நாளையே இதற்கென ஒப்படைத்து இக்கலையைக் கற்றும், இதனைப்பற்றிய அனைத்து உண்மைகளையும் தென்னாடு, வடநாடு எங்கும் அலைந்து தொகுத்தும் கல்வெட்டு, சிற்பம், சமூகம் அனைத்தையும் ஊடுருவி ஆராய்ந்தும் உலகிற்கு உண்மையை உணர்த்த வேண்டும். இன்றைய ‘டாக்டர்’ பட்டங்கள் நமக்கு ‘உரிமங்களாக’ உதவுகின்றன. அது போதாது. ‘பரதக் கலை எங்களுடையதே’ என உணர்ச்சிவயப்பட்டு வானதிர முழங்கினாலும் போதாது. தமிழுக்கு உயிரைக் கொடுப்பது என்றால் என்ன? இத்தகைய அடிப்படை ஆய்வுகட்கு வாழ்நாட்களையே துறக்கவும் துணியவேண்டும்.

கருதுகோள் யாது ?

தமிழ் வடிவங்கள் பல வடமொழி வண்ணப் புறப்பூச்சைப் பெற்றுள்ளன; தமிழ் மூலங்கள் பல வடமொழியில் வளர்ச்சி பெற்றுள்ளன என மெய்ப்பிக்க எத்தனையோ சான்றுகள் காட்டலாம். இக்கருதுகோளை (Hypothesis) நிறுவிடும் அளவு சான்றுகள் இருப்பதால் நாம் உணர்ச்சி வயப்படத் தேவையில்லை. நமக்கு வடமொழியுடன் பகை இல்லை. ‘எல்லாம் வடமொழியே; தமிழில் ஒன்றுமில்லை’ என்பார் நெஞ்சிற் போய் உறைக்குமளவு நாம் ஆய்வுரைகளை எழுதிக் குவிக்க வேண்டும்; ஆரவார உரைகளால் இனிப் பயனில்லை. உண்மையை இருசாராரும் ஒப்பும் வண்ணம் நம் ஆய்வுகள் காரண காரியத்துடன் அமைய வேண்டும்.

இந்தியப் பொதுப் பண்பாட்டிற்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் நெருங்கிய ஒற்றுமையுள்ளது. ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டுவரும் திருக்கார்த்திகை, தீபாவலி (தீப+ஆவலி - விளக்கு வரிசை) என்ற இருபெரு விழாக்களுக்குமிடையே உள்ள ஒற்றுமை இதை மெய்ப்பிக்கும். இவ்விரண்டு விழாக்களும் ஒரு காலத்தில் ஒரே விழாவாக இருந்து, பிறகு இரண்டாகப் பிரிந்தன என முடிவு கூறுதற்குத் தக்க சான்றுகள் உள்ளன.

விழாக்களின் அடிப்படை என்ன ?

இந்தியநாடு முழுவதும் தீபாவலி கொண்டாடப்படுகிறது. நாம் அதைத் ‘தீபாவளி’ எனத் தவறாக ஒலிக்கின்றோம். இது வடநாட்டவர்-ஆரியரால் நம்மிடம் புகுத்தப்பட்ட விழா என்றும், நரகாசுரனைத் திருமால் கொன்று உலகைக் காத்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதென்றும் கருதப்படுகிறது. இதில் புத்தாடை பூண்டு, மத்தாப்பூக் கொளுத்தி வெடி வெடித்து, இனிப்புண்டு மகிழ்ச்சி வெளிப்படுத்தப்படுகிறது. வடநாட்டவர்கள் இதனைப் புத்தாண்டுப் பிறப்பாகக் கருதுகின்றனர். வடநாட்டுத் தொழிலதிபர்கள் தீபாவளி பிறந்ததும் புதுக்கணக்கு எழுதுகின்றனர். நாம் இன்று சித்திரை வருடப்பிறப்பில் புதுக்கணக்கு எழுதுவது போன்றது இது. வடநாட்டவர்க்கே உரிய விழாவெனில் தென்னகமெங்கும்-தமிழக முழுவதும் மகிழ்ச்சிப் பெருக்குடன் இவ்விழா கொண்டாடப்படுவதேன்? ஒரு சமூகத்தின் பண்பாடு-சமயம்-உளவியல் இவற்றோடு தொடர்புடையன திருவிழாக்கள். ஒரு சமூகத்தின் மேல் ஒரு திருவிழாவை எளிதில் நுழைத்துவிட முடியாது. அங்கேயே நடைபெறும் விழாவைப் புறத்தாக்குரவால் சிறிது மாற்றியமைக்கலாம். அடிப்படையான சமய மாற்றத்தால் ஒருவர் புதிய விழாக்களை மேற்கொள்ளலாம். சமுதாயம் முழுவதும் கொண்டாடும் விழாவெனில், அது புறத்தேயிருந்து நுழைக்கப்பட்டதா என்பதைச் சற்றே தயங்கி ஆராய்ந்த பிறகுதான் சொல்ல வேண்டும்.

‘நவராத்திரி’ விழாவைத் திருமலை நாயக்கர் தமிழகத்தில் புகுத்தினார் எனக் கூறப்படுகிறது. அது முழு உண்மையன்று, முன்பு தொன்றுதொட்டு வழங்கி வந்த விழாவில் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்ற உண்மையை இவ்வாய்வாளர் பிறிதொரு கட்டுரையில் விளக்கியுள்ளார். பிறந்தநாள் விழாக் கொண்டாடும் மரபு மிகப் பழமையானது தமிழர்களுக்கு. புறத்திணையில் ஒரு துறையாகக் குறிக்கப்பட்டு பல பாடல்களால் அறியவரும் அதனை, ஒருவர் மேனாட்டார் பிறந்தநாளைக் கொண்டாடும் மரபின் தாக்குரவால் இது வந்ததென எழுதிவிடுவாராயின் அது முழு உண்மையாகி விடுமா? பிறந்த நாளில் ‘கேக்கு’ வெட்டுவது வேண்டுமானால் நாம் பிறரிடமிருந்து கற்றதாக இருக்கலாம்.

ஒன்று இரண்டானது

திருக்கார்த்திகை விழாதான் தீபாவலி விழாவென்று ஆயிற்று. தீப+ஆவலி என்றால் விளக்கு வரிசை என்றுதான் பொருள். இரண்டும் இந்திய நாடு முழுவதும் ஒரே பண்பாடாயிருந்த தொன்மை மிக்க காலத்தில் ஒரே விழாவாகக் கொண்டாடப்பட்டு பின்பு பல்வேறு காரணங்களால் இரண்டு விழாக்களாகப் பிரிந்தன. இவற்றுள் தீபாவலியை மட்டும் வடவர் கொண்டாட, தீபாவலி, திருக்கார்த்திகை இரண்டையும் தமிழர்கள் கொண்டாடுகின்றனர்; இந்த உண்மையை உணர்த்துவதே இங்குக் கருத்தாகும்.

 தொன்மை மிக்கது திருக்கார்த்திகை

தென்னாடு முழுவதும், சிறப்பாகத் தமிழகத்திலும் கேரளத்திலும் திருக்கார்த்திகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருஞான சம்பந்தர் திருமயிலைத் திருப்பதிகத்தில், 

“வளைக்கை மடநல்லார் மாமயிலைவண் மறுகில்

துளக்கில் கபாலீச்சுரத்தான் தொல்கார்த்திகை நாள்

தளத்தேந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்

விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்”

என்று குறிப்பிடுகிறார். இதில் விளக்கீடு என்பதே வடமொழியில் தீபாவளி எனக் குறிக்கப்படுகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டிலேயே இது ‘தொல் கார்த்திகைத் திருநாள்’ எனப்படுமாயின், இது மிகப்பழங்காலந்தொட்டுக் கொண்டாடப்பட்டு வருவதென்பது தெள்ளிதிற் புலனாகும். இளம் பெண்களே பெரிதும் மகிழ்ந்து கொண்டாடும் விழாவென்ற குறிப்பும் உணரத்தக்கது.

இது மிகத் தொன்மையான விழா என்பதையும் இதில் விளக்குவரிசையே தீப ஆவலியே-இன்றியமையாச் சிறப்பு என்பதையும் சங்கப் பாடல்களிலேயே அறியலாம். அகநானூற்றில் அவ்வையார்,

“இலையில மலர்ந்த முகையில் இலவம்

கலிகொள் ஆயம் மலிபுதொகுபு எடுத்த

அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி”                  (அகம். 11)

என்று இலவம்பூ வரிசைக்குக் கார்த்திகை விளக்குகளை உவமையாக்குகிறார். ஆரவாரத்தோடு மகளிர் மிகமகிழ்ந்து நீண்ட வரிசைகளில் விளக்கேற்றுவதை இதிற் காணலாம். பாலை பாடிய பெருங்கடுங்கோ கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய கார்த்திகை மாதத்தில் அழகிய நீண்ட விளக்கு வரிசைகளை வைப்பது போலக் கோங்கமலர்கள் பூத்துக் குலுங்குவதைக் கற்பனை செய்கிறார் :

“அறுமீன் பயந்த அறஞ்செய் திங்கள்

செல்சுடர் நெடுங்கொடி போலப்

பல்பூங் கோங்கம் அணிந்த காடே”                     (நற். 202)

கார்த்திகை மாதம் ‘அறஞ்செய் திங்கள்’ எனப்படுகிறது. அறுமீன்-கார்த்திகை நட்சத்திரம், ‘செல்சுடர் நெடுங்கொடி’, ‘அஞ்சுடர் நெடுங்கொடி’ என்பன நீண்ட விளக்கு வரிசைகள் (கொடி - வரிசை) தீப ஆவலி இதன்மொழி பெயர்ப்பே என்பது வெள்ளிடைமலை. நக்கீரர் இவ்விழா முழுநிலவன்று - பவுர்ணமியில் கொண்டாடப்படும் என்ற கருத்தைத் தருகிறார்.

“மழைகால் நீங்கிய மாக விசும்பில்

குறுமுயல் மறுநிறம் கிளர மதிநிறைந்து

அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்

மறுகுவிளக் குறுத்து மாலை தூக்கிப்

பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய

விழவுடன் அயர வருகதில் அம்ம”  (அகம் - 141)

தெருவில் வரிசையாக விளக்கேற்றுவதை ‘மறுகு விளக்குறுத்து’ என்கின்றார் நக்கீரர். இன்றும் தெருவில் முற்றம், வாசலிலும் மதிற்சுவர்கள் மேலும் தானே வரிசை வரிசையாக விளக்கேற்றிவைக்கிறோம். எல்லோரும் கொண்டாடும் மகிழ்ச்சி விழா என்பது இதிலும் சுட்டப்படுகிறது. ‘பாலை வழியில் பொருள் வயிற்பிரிந்ததன் காதலர், நல்ல சகுனம் நேர்வதாலும் இனிய கனவுகள் தோன்றுவதாலும் கார்த்திகை விழாவைத் தன்னுடன் கொண்டாட விரைவில் வருவாராக!’ என்று தனது விழைவைத் தலைவி வெளிப்படுத்துகிறாள். கணவன், மனைவி இருவரும் உடனிருந்து கொண்டாடும் விழாவாக இது குறிக்கப்படுவது, இன்றும் தீபாவளியில் இளம் மணமக்களை உடனழைத்துக் கொண்டாடும் போக்கினை நினைவூட்டுகிறது.

இன்று நாம் காணும் விழாக்களில் இந்தியநாடு முழுவதும் பற்பல வகுப்பாரும் ஒருங்கு கொண்டாடும் விழாவாகத் ‘தீபாவளி’ காணப்படுகிறது. பாலை பாடிய பெருங்கடுங்கோ பிறிதொரு பாடலில் திருக்கார்த்திகையைப் பெருவிழா என்றே குறிப்பிடுகின்றார்.

“அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்

பெருவிழா விளக்கம் போலப் பலவுடன்

இலையில மலர்ந்த இலவமொடு

நிலையுயர் பிறங்கல் மலையிறந் தோரே”                  (அகம், 185)

இது முருகனுடன் தொடர்புடைய விழாவாக இருப்பதுபோலவே குறிஞ்சி நிலமலைகளுடனும் தொடர்புடைய விழாவாகத் திகழ்ந்தது என்பதற்கும் இலக்கியச் சான்றுகள் உள. திருவண்ணாமலைக் கார்த்திகைதீபம் இன்று ஓங்கிய சிறப்புடையது. முத்தொள்ளாயிரத்தில் ‘ஆபுகு மாலை அணிமலையில் தீயேபோல்’ என்று சொக்கப்பனை கொளுத்தப்படும் சிறப்புச் சுட்டப்படும். ‘குன்றின் மேலிட்ட விளக்கு’ என்ற பழமொழி இவ்விழாவினின்றும் பிறந்ததேயாகும். சமண சமயக் காப்பியமாகிய சீவக சிந்தாமணியிலும் இக் ‘குன்றின் மேல் வைக்கும் திருக்கார்த்திகை விளக்கு’ உவமையாகக் கூறப்படுகிறது.

“தார்ப்பொலி தருமதத்தன் தக்கவாறுரைப்பக் குன்றில்

கார்த்திகை விளக்கிட்டன்ன கடிகமழ் குவளைப் பைந்தார்....”

கோங்கம்பூ, இலவம்பூக்களுடன் செங்குவளைப் பூக்களும் கார்த்திகை விளக்கு வரிசையுடன் பொருத்திப் பார்க்கப்படுகின்றன. களவழி நாற்பதிலும், “கார்த்திகைச் சாற்றின் கழிவிளக்கைப் போன்றனவே” என இவ்விளக்குவமை உளது (சாறு-விழா).



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: தமிழர் திருவிழாக்கள் சமற்கிருத மயமாக்கப்பட்டமை திருக்கார்த்திகையும் தீபாவளியும்
Permalink  
 


கொண்டாடும் கால ஒற்றுமை

திருக்கார்த்திகை, தீபாவளி இரண்டும் பெயரொற்றுமை வேறு சில ஒற்றுமைகளினாலேயே ஒன்றாகிவிடுமா?

தீபாவளி அய்ப்பசி மாத அமாவாசையை ஒட்டியும், திருக்கார்த்திகை அதைத் தொடர்ந்துவரும் கார்த்திகை மாதப் பவுர்ணமியை ஒட்டியும் கொண்டாடப்படுகின்றன.

தீபாவளியும் திருக்கார்த்திகையும் 1974, 1975 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் எவ்வெத் தேதிகளில் கொண்டாடப்பட்டன?

தீபாவளி         1974       13-11-74               ஆனந்த,                          உவாநாள்

                                                                        அய்ப்பசி         27           ஒட்டியது

திருக்கார்த்திகை   1974       28-11-74               ஆனந்த,                          நிறைமதி நாள்

                                                                         கார்த்திகை  13                ஒட்டியது

தீபாவளி         1975       2-11-75                இராட்சச,                       உவாநாள்

                                                                  அய்ப்பசி         16           ஒட்டியது

திருக்கார்த்திகை   1975       19-11-75               இராட்சச,                       நிறைமதி

                                                                      கார்த்திகை     13           ஒட்டியது

இரண்டு விழாக்களுக்கும் இடைவெளி பதினைந்து, பதினாறு நாட்களேயாதல் காண்க.

1984இல் 23-10-84-ரக்தாட்சி, அய்ப்பசி 7-உவாநாளை ஒட்டித் தீபாவளி கொண்டாடப்பட்டது. அடுத்த நிறைமதி அதே அய்ப்பசியில் வந்துவிட்டதால் திருக்கார்த்திகை 6-12-84 ரக்தாட்சி, கார்த்திகை 21இல் நிறைமதி நாளை ஒட்டிக் கொண்டாடப்பட்டது. அதனால் இடைவெளி ஒரு மாதமாகிவிட்டது. மீண்டும் 1985இல் இவ்விரு விழாக்களும் கொண்டாடப்படப் போகின்ற நாட்கள் காண்க :

தீபாவளி 1985, 11-11-85 குரோத, அய்ப்பசி 26 உவாநாளை ஒட்டி

திருக்கார்த்திகை 1985, 26-11-85 குரோத, கார்த்திகை 11 நிறைமதியை ஒட்டி

இடைவெளி பதினைந்து நாட்களேயாதல் அறியலாம். இவ்வாறு ஒவ்வொரு முறையும் அய்ப்பசி அமாவாசையை ஒட்டித் தீபாவளியும், தொடர்ந்து வரும் திருக்கார்த்திகைப் பவுர்ணமியில் திருக்கார்த்திகையும் ஏறத்தாழப் பதினைந்து, இருபது நாட்களுக்குள் கொண்டாடப்பட்டு வருகின்றன. முதல் உவாநாள், அடுத்த நிறைமதியை ஒட்டி இவை வருவதால், இவைகளிடை ஒற்றுமை ஏதும் இருக்குமோ என்ற அய்யம் எழுகிறது.

தமிழர்களின் மாதக்கணக்கு

தமிழர்கள் முழுமதியை வைத்தே மாதங்களைக் கணக்கிட்டனர். ஒவ்வொரு முழுமதியும் ஒருமாத நடுவாகக் கருதப்பட்டது. ‘அற்றைத் திங்கள்’ என்றும், ‘தொல்லைத் திங்கள்’ என்றும் கடந்த மாதம் குறிக்கப்பட்டது. கண்ணுக்குத் தெரியும் மூன்றாம் பிறையைக் கண்டதும் புதிய மாதம் பிறந்தமையையும் நாள் வளர்ச்சியையும் எண்ணத் தலைப்பட்டனர். ‘எண்ணாள் பக்கத்துப் பிறை’ எனும்போது எட்டாவது வளர்பிறை நாள் குறிக்கப்பட்டது. இத்தகைய முறையில் மதியானது நட்சத்திரங்களைச் சாரும் முறையை வைத்து நாட்கள் குறிக்கப்பட்டன. சிலப்பதிகாரத்தில், வடநாட்டில் கங்கைக்கரையிலிருந்த காலத்தில், சேரன் செங்குட்டுன் ஒருமுறை வானத்தை நோக்கியபோது, அருகிலிருந்து கணிவஞ்சி நீங்கி ‘எண்ணான்கு திங்கள் ஆயின’ என்றான். 32 மாதங்கள் கழிந்தமை அன்று அவ்வாறு உணர்த்தப்பட்டது.

கார்த்திகைக்கு முதலிடம்

இரண்டாம் சந்திரகுப்த மவுரியன் காலத்தில் (கி.பி. 6ஆம் நூற்றாண்டு) வராகமிகிரர் என்ற வானநூல் அறிஞர் தோன்றி இந்திய நாட்டுக் காலக் கணிப்பில் குறிப்பிடத்தக்க சில மாறுதல்களைச் செய்தார் என்பர்.

அதற்கு முன்பு 27 நட்சத்திரங்களையும் கொண்டு, கார்த்திகை முதலாக எண்ணுகிற பழக்கம் இருந்தது. மணிமேகலையில்,

“இருதிள வேனில் எரிகதிர் இடபத்து

ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின்

மீனத்து இடைநிலை மீனத்து அகவ யின்

போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்”

                (11:40-44)

என்று புத்தர் தோன்றிய வைகாசி விசாக நட்சத்திரம் கூறப்படுகிறது.

புத்தர் வடநாட்டில் பிறந்தார், அவர் பற்றிய கதையும் அங்கிருந்து பெறப்பட்டதே. இதில் இருந்து இளவேனில் என்பது சித்திரை - வைகாசி மாதங்கள் அடங்கியது. இரு மாதங்கள் கொண்டது. இருது இருழூஇருதுழூருது. வடமொழியில் இது ‘ருது’வென வழங்கும். இரண்டு-ரெண்டு ஆவதுபோல் இருது ருதுவாகியிருக்க வேண்டும். தமிழர் ஆண்டுக் கணக்கு மேட-இராசியில் தொடங்கியதாதல் வேண்டும். மேடம் என்பது யாடு, ஆடு என்றெல்லாம் தமிழில் கூறப்படும். அதிலிருந்துதான் யாண்டு, ஆண்டு என்பன மூக்கொலி பெற்றுப் பிறந்தன என்பர். ‘பன்னீராட்டைப் பருவத்தாள்’, ‘ஏழரையாட்டைச் சனி’ என்ற வழக்காறுகளும் காணலாம். வருடை என்பதும் மலையாடு என்றே பொருள்படுமென்றும் அதிலிருந்து பிறந்ததுதான் வருடம் என்றும் டாக்டர் தே.ஆண்டியப்பன் கருதுவார். 

மேற்கண்ட மணிமேகலை அடிகளில் ‘எரிகதிர் இடபம்’ என்பது சூரியன் வந்து நின்ற இடபராசி. அது வைகாசி மாதத்தைச் சுட்டும். 27நட்சத்திரங்களில் முன் பதின்மூன்றுக்கும் பின் பதின்மூன்றுக்கும் இடைப்பட்டது விசாகம் என்பது அடுத்த இரண்டடிகட்கும் தரப்பட்டுள்ள பொருள். கார்த்திகை முதலாக எண்ணினால்தான் பதினான்காவதாக விசாகம் வரும். இன்றைய வராகமிகிரர் முறை அசுவனி முதலாக எண்ணுகிறது. அதன்படி, எண்ணினால் பதினாறாவதாகத்தான் விசாகம் வரும். எனவே, மணிமேகலை குறிப்பிடும் முறை வராகமிகிரருக்கு முற்பட்டது என்பது போதரும்.

தமிழர்களும் முன்பு கார்த்திகை நட்சத்திரம் முதலாக மாதத்தை எண்ணினார்களோ என்ற அய்யத்தைக் கார் நாற்பது ஏற்படுத்துகிறது. அதில் கண்ணங்கூத்தனார் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்:

“நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட

தலைநாள் விளக்கில் தகையுடைய வாகிப்

புலமெலாம் பூத்தன தோன்றி; சிலமொழி

தூ தொடு வந்த மொழி”

இதில் தோன்றிப் பூக்கள் எங்கும் ‘பூத்துக் காட்சியளிப்பதற்குக் கார்த்திகை விளக்குகள்’ உவமை கூறப்பட்டுள்ளன. மேலும், கார்த்திகை நாள் இதன்கண் தலைநாள் எனக் குறிக்கப்பட்டிருத்தலால் அதுவே மாதத் தொடக்க நாளாக இருந்தது போலும் என்பர்.

இன்று ஞாயிறு முதலாக வாரத்திற்கு ஏழுநாளாக எண்ணுகிறோம். முன்பு வாரக்கணக்கு இன்றி, மாதத்திற்கு 27 நட்சத்திரங்களுக்கும் 27நாட்கள் எனக் கொண்டு கார்த்திகை முதலாக எண்ணப்பட்டது என்பர் திரு. ந.ரா. முருகவேள். இன்று திங்கள், செவ்வாய் என்று நாட்பெயர்களைக் குறிப்பிடுவதுபோல முன்பு ‘மகம், ஆதிரை, கார்த்திகை’ என்று நாட்களைக் குறிப்பிட்டனர். தமிழில் ‘நாள்’ என்பதே நட்சத்திரத்தைக் குறிக்கும். நம் உரையாசிரியர்கள் மகத்திற்கொண்டான். ஆதிரையில் வந்தான், கார்த்திகையில் பெற்றான் என்பது போலக் காட்டும் எடுத்துக்காட்டுகளால் இதை உணரலாம் என்பர் டாக்டர் இரா. சாரங்கபாணி. கார்த்திகை நட்சத்திரம் மாதத் தொடக்க நாளாக இருந்ததுபோலக் கார்த்திகை மாதம் ஆண்டுத் தொடக்கமாக இருந்ததும் உண்டு.

வராகமிகிரரின் புதிய கணக்கு

இவ்வாறு நட்சத்திரங்களைக் கொண்டு கணிக்கப்படுகிற சூரிய மாத முறை மாற்றி, வராகமிகிரர் சாந்திரமாத முறையைப் புகுத்தினார். அவர் சந்திரனை மய்யமாக்கிக் கொண்டு வளர்பிறை, தேய்பிறைத் திதிகளை ஆதாரமாக்கி மாதக் கணக்கை வகுத்தார். அவர் கணக்கிற்கும் பழைய கணக்கிற்கும் ஒப்பிட்டபோது பழைய கணக்கில் 15 நாட்கள் கூடுதலாவது புலனாகிறது. எனவே, அப்பதினைந்து நாட்களைத் தள்ளிவிட்டு அவர் கணக்கிட்டதால், அவருடைய மாதமுறை 15 நாட்கள் முன்னே போய்விட்டன. வடநாட்டில் வராகமிகிரர் முறையே பின்பற்றப்படுகிறது. 

திரு. எல்.டி. சுவாமிக்கண்ணு இவ்வாறு பதினைந்து நாட்கள் ஏன் தள்ளப்பட்டன என்ற காரணத்தை விளக்கியுள்ளார் சாந்திர மாதமுறைக்குத் திதி அடிப்படை. திதியும், நாளும் 64 என்ற எல்லையில் சிறிது வேறுபட்டன. திதி 64 கொண்டதற்கு நாளும் 64 என அமையாமல் சிறிது குறைந்து 63.001412384 மட்டுமே வருவதால், இவ்வாறு ஏற்படும் குறைவு, பலநூறு ஆண்டுகள் கழித்து நோக்கினால், 15 நாட்கள் குறையுமென்றே, வராகமிகிரர் அப்பதினைந்து நாட்களைத் தள்ளிவிட்டார். 

வராகமிகிரருக்குப் பிறகு வடநாட்டில் சாலி வாகன சகாப்தம் என்ற புதியமுறை பின்பற்றப்பட்டது. அதன்படி நமக்கு ஆனந்த ஆண்டு (1974- 75) நடந்தபோது, அங்கு சகஆண்டு 1896 நடைபெற்றது; இப்போது நமக்கு ரக்தாட்சி ஆண்டு (1984-85) நடக்கும்போது, அங்கு சாலிவாகன ஆண்டு அல்லது சகஆண்டு 1906 நடக்கின்றது. இதுபோலவே மாதக்கணக்கிலும் நமக்கும் வடநாட்டவர்கட்கும் சுமார் 15 நாட்கள் வரை இடைவெளியுளது. அஃதாவது வடநாட்டில் ஒவ்வொரு மாதமும் பதினைந்து இருபது நாட்கள் முன்னதாகவே பிறந்து விடுகிறது.

மாதங்கள் மாறியமை

1974-1975 பிரமாதீச, ஆனந்த ஆண்டுகளில்

நமக்கு மார்கழி 7 நடக்கும்போது அங்கு புஷ்யம் (தை) என்ற அடுத்த மாதம் பிறந்து விட்டது. நமக்குப் பங்குனி 9 நடக்கும்போது அங்கு சைத்திரம் (சித்திரை) என்ற அடுத்த மாதம் பிறந்துவிட்டது.

நமக்கு அய்ப்பசி 6 நடக்கும்போது அங்கு கார்த்தீகம் (கார்த்திகை) என்ற அடுத்த மாதம் பிறந்துவிட்டது.

1984-ராட்சச ஆண்டு

நமக்கு அய்ப்பசி 7 நடக்கும் போது அங்கு கார்த்தீகம் என்ற அடுத்த மாதம் பிறந்துவிட்டது.

இவற்றிலிருந்து ஏறத்தாழ 22 அல்லது 23 நாட்கள் முன்னதாக அவர்களுக்கு மறுமாதம் பிறந்து விடுவது புலனாகிறது.

ஒருகணம் இப்போது சிந்தியுங்கள். நாம் கார்த்திகை மாதத்தில் கொண்டாடும் திருக்கார்த்திகையைத்தான் அவர்கள் இரண்டு, மூன்று வாரம் முன்னதாகத் தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள்.

1984இல் அல்லது ராட்சச ஆண்டில் இங்கு அய்ப்பசி 7இல் (23-11-84) தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார்கள். வடக்கேயும் அதே நாளில்தான் கொண்டாடினார்கள்.

ஆனால், அவர்கள் அவர்களுக்குரிய கார்த்தீகம் மாதத்தில் முதல்நாள் தீபாவளியைக் கொண்டாடினார்கள். 

1985இல் அல்லது குரோத ஆண்டில் இங்கு அய்ப்பசி 26இல் (11-11-85) தீபாவளியைக் கொண்டாடும்போது, வடக்கேயும் கார்த்தீகம் 20ஆம் நாள் அதாவது அதே நாளில் - தீபாவளியைக் கொண்டாடுவர்.

முடிவுகள் :

இவற்றிலிருந்து பல அடிப்படை உண்மைகள் புலனாகின்றன :

1.            நாம் நம் கணக்குப்படி கார்த்திகை மாதத்தில் தான் (பவுர்ணமியை ஒட்டி) திருக்கார்த்திகையாகிய ‘விளக்கீடு’ விழாவைக் கொண்டாடுகிறோம்.

2.            வடக்கே அவர்களும் அவர்கள் கணக்குப்படி கார்த்தீகம் என்ற கார்த்திகை மாதத்தில்தான் (அமாவாசையை ஒட்டி) தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். அஃதாவது அவர்களுக்கும் இது திருக்கார்த்திகையே - விளக்கீட்டு விழாவேயாகும். கார்த்தீக மாதத்தில் கொண்டாடுவதை நினைவு கொள்க.

3.            இங்கு முழுநிலவு நாளை ஒட்டியும் அங்கு உவாநாளை ஒட்டியும் கொண்டாடப்படும் வேறுபாடு கருதத்தக்கது.

4.            நாம் நம்முடைய திருக்கார்த்திகையையும் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகட்கு மேலாகக் கொண்டாடி வருவதுடன், அவர்களைப் பின்பற்றி அவர்கள் கொண்டாடும் தீபாவளியையும் வேறெனக் கருதிப் பிற்காலந்தொட்டுக் கொண்டாடத் தொடங்கியுள்ளோம். இதனால் பண்டிகை நமக்கு இரண்டாகிவிட்டது.

5.            இதனால் நாம் ஒன்றைப் புத்தாடை பூண்டு, வெடிவைத்து, இனிப்புண்டு மகிழ்ச்சிப் பெருக்கைக் காட்டுவதற்குரிய ஒன்றாகவும், மற்றதை விளக்கு வைத்துக் கொண்டாடும் விழாவாகவும் வேறுபடுத்திக் கொண்டுள்ளோம். முன்னதற்கு நரகாசுரன் கதையைக் கூறி திருமாலை வழிபடும் விழாவாகவும், பின்னதற்கு முருகன் கதையைக் கூறி அவனது பெருமையைப் போற்றி வழிபடும் விழாவாகவும் பின்னணி கூறியும் இவற்றை வேறுபடுத்த முயன்றிருக்கிறோம்.

6.            முருகனுக்குரியது கார்த்திகை நட்சத்திரம். வடநாட்டவர்கள் கார்த்தீக மாதத்திலேயே இதைக் கொண்டாடுவதால், என்னதான் நரகாசுரன் கதையைக் கூறினாலும் அவர்களுக்கும் தொன்மை மிக்க காலத்தில் முருகன் தொடர்பாலேயே இவ்விழா தோன்றியிருக்க வேண்டும் என்பது வெள்ளிடைமலை. மேலும் கார்த்திகை மாதத்தின் திருக்கார்த்திகை நாளை மாதத் தொடக்கமாகவும் ஆண்டுத் தொடக்கமாகவும் கருதிய காலம் ஒன்றுண்டு என்பதைக் கார் நாற்பதால் முன்பு கண்டோம். வடநாட்டவர் தீபாவளியை ஆண்டுப் பிறப்புப்போல் கொண்டாடி, கடைகளுக்குப் புதுக்கணக்கு எழுதி வருவதை அறிவோம். சித்திரை முதல்நாள் புதுக்கணக்கு எழுதும் தென்னாட்டு மரபை ஒத்தது இதுவாகும்.

7.            தெற்கே அய்ப்பசி அமாவாசையை ஒட்டித் தீபாவளியைக் கொண்டாடினாலும் தீபாவளிக்கு மறுநாள் அமாவாசைக்குப் பிறகு, முருகனுக்குரிய சஷ்டி விரதம் தொடங்கி விடுகிறது. இக்கடும் விரதம் ஆறாம் நாள் முடிகிறது. அய்ந்தாம் நாள் முருகன் கோயில்கள் அனைத்திலும் ‘சூரசம்மாரம்’ திருவிழா நடக்கிறது. முருகன் சூரனை வென்றதைக் கொண்டாடும் மக்கள்-நோன்பிருந்து விரதம் செலுத்தும் இக்’கந்தர் சஷ்டி’ விழா, தீபாவளியைத் தொடர்ந்து வருவதால் தீபாவளிக்கும் முருகனுக்கும்கூடத் தொடர்புண்மையைச் சிந்திக்க வேண்டும். திருக்கார்த்திகை முருகனின் பிறந்தநாள் (நட்சத்திரம்) என்பர். சேர நாட்டில் மன்னர்களுக்கு அவர்கள் - பிறந்த நாளின் பெயரே பெயராதலும் சுவாதித் திருநாள், மூலந்திருநாள் என அழைக்கப்படுதலும் அப்பிறந்த நாட்கள் பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டமையும் கருதத்தக்கன. இவ்வகையில் முருகனின் பிறந்தநாள் விழாவாகவும் வெற்றி விழாவாகவும் இத்திருநாட்கள் கொண்டாடப்பட்டுப் பலநூறு ஆண்டுகளாக மாறியும் வேறுபட்டும் அடிப்படையில் ஒற்றுமைப்பட்டும் விளங்கி வருகின்றன.

8.            முருகனின் பிறந்தநாள் (நட்சத்திரம்) ஆறு புள்ளியிட்ட கோலம்போல் அழகுற விளங்கும். அது விளக்குவரிசைபோல் இருப்பதால், விளக்கு வரிசைகளை வைத்து வழிபடும் மரபு தோன்றியிருக்க வேண்டும். வடநாட்டவரும் விளக்கு வரிசையை வைத்தே வழிபடுவது, இதன் தொன்மை அடிப்படை முருக வழிபாடே என்பதை நிலை நிறுத்தும்.

9.            கார்த்திகைத் தீபத்தன்று அல்லது அடுத்தநாள் ‘சகல விஷ்ணுதலங்களிலும் கார்த்திகைத்தீபம்’ என்ற குறிப்பைப் பஞ்சாங்கம், நாட்காட்டிகளில் காணலாம். அதற்கடுத்த நாள் ‘சிவாலயதீபம்’ எனவும் சுட்டப்படுகிறது. திருக்கார்த்திகை விழாவைத் திருமால் வழிபாட்டுடன் இணைத்து, நரகாசுரன் கதையைக் கொண்டுவந்ததற்கும் ஏதேனும் ஓர் அடிப்படை இருந்திருக்க வேண்டும். முல்லைக்குத் தெய்வம் மாயோன்; குறிஞ்சிக்குத் தெய்வம் சேயோன் முல்லையும் குறிஞ்சியும் ஒன்றையடுத்தொன்றாக அமைந்த நிலங்கள். இதனால் இவ்விரு வழிபாடுகளும் இணைய நேர்ந்த இடங்கள் பலவாகும். பரிபாடலிலும் இவ்விரு தெய்வங்கட்கே மிகுதியான பாடல்கள் காணப்படுகின்றன.

10.          இவ்விழாவின் தோற்றம் வளர்ச்சியை உற்றுநோக்கும்பொழுது, முதலில் தமிழ் மயப்படுத்துதல், திராவிட மயமாக்குதல்தான் நடந்துளது; பிறகுதான் சமற்கிருதமயமாக்கப்படுதல் நிகழ்ந்துளது. அங்ஙனம் சமற்கிருதமயமாக்கினாலும் முன்னைய திராவிட மரபுகளை முற்றிலுமாக மறைக்க முடியவில்லை. இங்ஙனமிருக்கவும் உலக ஆய்வுகள் பலவும் மேற்பரப்பைக்கண்டு முடிவுகூறும் ஆய்வுகளாகவே விளங்கி வருகின்றன.

இந்திய நாடு முழுமையும் சென்று, பல்வேறு மொழிகளைப் பேசும் பல்வேறு மாநிலங்களிலும் ஊடுருவி ஆராய்ந்தால் இந்த ஒரு விழாவைப்பற்றி மேலும் பல உண்மைகள், தொல்பொருள் ஆய்வில் கண்டெடுக்கும் மெய்ம்மைகள்போல் கிடைக்கப்பெறும். சமற்கிருத மயமாக்கப்பட்டமை என்பது உள்ளீட்டிலன்று என்ற உண்மையும் உறுதிப்படும்.

(நூல்  - சமற்கிருத ஆதிக்கம்)  பதிப்பாசிரியர் : கி.வீரமணி



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

"தமிழண்ணல்" டாக்டர் இராம. பெரியகருப்பன்

 

தமிழியல்துறைத் தலைவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

 

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் தமிழியல்துறைத் தலைவர் தமிழண்ணல் டாக்டர் இராம.பெரியகருப்பன் உரை வருமாறு:

'வடநூல் உணர்ந்தார்க்கு அன்றித் தமிழ் இயல்பு விளங்காது என்பதும் உணர்ந்து கோடற்கு அன்றே, பாயிரத்துள் 'அய்ந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்று கூறுவதனின்றும் இருமொழியறிவின் இன்றிய மையாத் தன்மையை சிவஞான முனிவர் உணர்ந்தவர்' என்பது பெறப்படுகிறது.

தமிழிலுள்ள 'அரசு' என்ற சொல் பழமையானது. தொல் காப்பியத்தில் அரசர் (1021) என்ற சொல் புறத்திணையியலில் காணப்படுவதுடன், மரபியலிலும் ஆளப்படுகிறது. (1571, 1572, 1574). புறநானூற்றில் அரசு (327, 369) அரைசு (42, 211) எனவரும் இடங்கள் பலவாகும். பொதுவாக அரசன், அரசர், அரசவை, அரசாண்ட, அரசாளன், அரசியல், அரசிளங்குமரர், அரசு, அரசுகட்டில், அரசுவா, அரைசர், அரைசு, அரையன் போன்ற சொல்வடிவங்களைச் சங்க இலக்கியத்தும் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்கள் அனைத்திலும் நூற்றுக்கணக்கான இடங்களிற் காண்கிறோம்.(1) அரசுவா என்பது பட்டத்து யானை; அரச அரா என்பது அரசராகிய பாம்பு. இத்தகைய தொடர்களும் நினைவுகூரத்தக்கன.

திராவிட மொழிகளில் அரசு என்ற சொல் பல்வேறு நிலைகளில் ஆட்சியிலுளது. கருநாடகத்தில் தேவராச அரசு என்று, 'அரசு' என்பது குலப்பெயராகக் குறிக்கப் படுகிறது. அரசு குற்றியலுகரமாதலின் ஒலித்துணை உயிர்களை விட்டுவிட்டு அர்ஸ் ஆகிறது. ஆங்கிலத்தில் அர்ஸ் (Ars) என்று எழுதப்படும்போது, முன்னைய வடிவமே மறக்கப்படுகிறது. அரசன்மனை என்ற சொல் அரமனை என ஒலிக்கப்படுவதே முறை. இன்று தமிழில் அரண்மனை எனல் ஒலிப்பில் நேர்ந்த தவற்றால் விளைந்ததாகலாம். ஏனெனில் மலையாளத்தில் அரமனா என்றும், கன்னடத்திலும், துளுவிலும் அரமனை என்றும் குடகில் அரமனே என்றும், கோடர், தோடர்  மொழிகளில் அர்மன் என்றும், தமிழிலும் பேச்சு வழக்கில் அரமனை என்றும் வழங்குதல் காண்கிறோம். மலையாளத்தில் அரசன், அரயன், அரசம், அரசு எனவும் கோடர் மொழியில் அர்ச் எனவும் தோடர் மொழியில் அர்ஸ் என்றும், கன்னடத்தில் அரச அரசு, அரசி, அரசத்தி (அர சாத்தி), அரமனை என்றும் துளுவில் அரசு, அரசெ என் றும் தெலுங்கில் அருசு என்றும் சமற்கிருதத்தில் ராஜன் என்றும் இச்சொல்வடிவங்கள் காணப்படுகின்றன.(2)

அரசகேசரி, இராசாதிராசன், இராசராசன், இரா சேந்திரன் என்ற பல சொற்கள் இடைக்காலத்து வழக்கிலிருந்தன. ஆண் மகவை அரசு எனல் இன்றும் சில சமூகங்களில் வழக்கிலுள்ளது. தலைமையான மரமொன்றை 'அரசமரம்' என அழைத்தனர்.

அரசன் என்ற சொல்லே அரைசன், அரயன், அரையன் என எழுத்துப் போலியாய் மாறி வழங்குகிறது. சிலம்பில் மலையரையன் என்று கூறப்படுவதைப் பர்வதராஜன் என்பர், முன்றுறை அரையனார் என்பவர் பழமொழி நானூற்றின் ஆசிரியர் ஆவார். அரையர் என ஒரு வகுப்பினர் பெயரும் குறிக்கப்படுகிறது.

வடமொழி எனக் கருதப்படும் ராஜு, ராஜன் என்ற சொற்கள் 'அரசு'  'அரசன்' என்ற மூலச்சொல்லின் திரிபு வடிவங்களேயாம்.

அரசு    அ ர்      அ சு     ராசு      ராஜு

ர் அ      அ சு

அரசன்  அ ர்      அ சன் ராசன் ராஜன்               ராஜா

ர் அ      அ சன்

உயிரிடம் பெயர்தல் என்பது ஓர் ஒலித்திரிபு. டாக்டர் மு. வரதராசனார் தம் மொழிநூலில் மூன்று உயி ரொலிகளைக் கொண்ட, உயிர் முதன் மொழியாக வரும் தெலுங்குச் சொற்களில் உயிரொலி இடம் பெயர்ந்து நிற்பதை விளக்குகிறார். (ப.33) இது திராவிட மொழிகளில் காணப்படும் ஓரியல்பு என்பது உணரத்தக்கது.

அவரு  அ வ் அ ரு     வ் அ    அ ரு

வ் ஆ   ரு     வாரு

இவரு    இ வ்இ ரு    வ் இ    இ ரு

வ் ஈ ரு   வீரு

மேலும் சில தெலுங்குச் சொற்களையும் மு.வ. காட்டுகிறார்:

சுட்டுச்சொற்கள்

அதி னி             அதினி              தானி

இதி னி             இதினி              தீனி

பிற தெலுங்குச் சொற்கள் சில:

உரல்   உரலு  ஓரலு ரோலு

உகிர்   உகிரு ஒகிரு கோரு

இலது               எலது  லேது

'இவற்றில் காணும் மாறுதல் என்ன? முதலில் உள்ள உயிர் இரண்டாமிடத்திற்குப் பெயர்ந்து சென்று, அங்குள்ள உயிரைக் கெடுத்து, அதற்கீடாக நீண்டு நிற்றலே இம்மாறுதலாகும்' என்றும்,  'இத்தகைய மாறுதல் நிகழும் சொற்களை ஆராயுமிடத்து இடையிலுள்ள மெய் ர, ல,வ என இடையின மெய்களாகவே பெரும்பாலும் இருக்கக் காண்கிறோம். அவற்றின் திட்பமின்மையே இம்மாறுதலுக்குக் காரணம் எனலாம்' என்றும் டாக்டர் மு.வ. கூறுவன மனங்கொளத்தக்கனவாம்.

இதே முறையில்தான் அரசு, ராசு என மாறுகிறது. அரசு என்ற சொல்லிலும் மூன்று உயிர் வருதலும் திட்பமில்லா இடையின மெய்யாக இடையிலுள்ள ரகர மெய்யிருத்தலும் காணலாம். தமிழ்நாட்டில் நகரத்தார் மரபில் 'ராசு' என்றும், ராசாச்சி என்றும் இன்றும் வழக்கிலுள்ள பெண்பால் குறிக்கும் மக்கட் பெயர்களைக் காணலாம். அதுபோலவே ராசப்பன், 'ராசாத்தி' என்ற பெயர்களும் உள. இவையே ராஜு, ராஜன், ராஜா, ராஜப்பன், ராஜாத்தி என்றெல்லாம் வடமொழிபோல் ஒலிக்கப்பெற்று ஆட்சி செய்கின்றன. மூலவர் தமிழிலுள்ள அரசரே என்பது. மேற்காட்டியவற்றால் அறியலாகும்.

தேவராஜன், மகராஜன் என்ற சொற்கள் கருதத் தக்கன. தேவ அரசன் என்பது ஒலித்தற்கு இடையீடாகத் தோற்றும் பொழுது தேவராசன் என இம்மாற்றம் எளிதாக அமைகிறது. அரசனுக்கு மகப் பிறந்ததும், மகவு அரசனாகிறது. அம் மக அரசன்தான் மகராசனாகிறது. ஒரு தாய் தன் குழந்தையை வாய்குளிர, மனங்குளிர மகராசா என்று கொஞ்சும்பொழுது மகவாய்ப் பிறந்த அரசையே-தமிழ்ச்சொல்லால் அவ்வாறு கொஞ்சுகிறாள்; மஹாராஜன் என்ற சொல்லுக்கும் இதற்கும் பொருள் வேறுபாடுண்டு. வரதராசன் என எழுதும் பொழுது, வடமொழி ராஜனைத் தமிழ் ஒலிக்கு ஏற்பத் தமிழ்ப்படுத்தி எழுதியதாக இதுகாறும் நினைத்து வருகிறோமே அது தவறு. வரதன்+அரசன் வரதராசன். ஒலித்தற்கு இடர்ப்பாடு நேருமெனின் உயிரிடம் பெயர்ந்து ராசனாகிவிடுகிறது. வரதராசன் என்பதே இயல்பானது. அதனை வரதராஜன் என்பதுதான் வடமொழிக்கு ஏற்ப ஒலித்திரிபு செய்து உச்சரித்தது மட்டுமல்லாமல், அதன்படி எழுதியதுமாகும். சூடு என்பதை ஜூடு எனவும், சாமான் என்பதை ஜாமான் எனவும் கொச்சை வழக்காய் ஒலிப்பது போல் பிறந்ததே அரசு, ராசு ஆகி ராசு, ராஜா ஆன வரலாறாகும்.

அரசன்-அரையர்-ராயன்

அரசன் என்ற சொல் அரைசன், அரையன், அரய்யன் என ஆதல் சங்க நூல்களிலேயே காணப்படுவதாகும். அய்காரக் குறுக்கம் என்பதற்கு ஏற்ப அரய்யன், அரயன் என ஒலிப்பு நிலையில் உச்சரிக்கப்படுவதே முற்கூறிய விதிப்படி ராயன் என மாறுகிறது. இதனால் ராயன் என்பதும் தமிழ்ச்சொல்லே என்பது விளங்கும்.

அரசப்பன்       -              ராசப்பன்

அ(ர)யப்பன்    -              ராயப்பன்

அரய்யன்        -              ராயன், ராய்

தேவராசன் தேவராயன் என மாறும். தமிழ்நாட்டில் ராயவேலூர் தேவராயன் பட்டினம், சேர்வராயன் பட்டணம் என்பனபோல் பல ஊர்ப் பெயர்களைக் காணலாம். புறநானூறு இரண்டாம் பாட்டின் அடியில் எழுதப்பட்டுள்ள கொளு 'சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியது' என்பதாகும். அன்றே எவ்வாறு ராயர் வந்தார் எனத் தமிழறிஞர்கள் அய்யப்பட்டதுண்டு. அரசன், அரயன், ராயன் என்ற வழக்குத்திரிபை உணர்ந்தால் முடிநாகராயர் தொன்மைத் தமிழரே என்ற உண்மை விளங்கும்.

கிருஷ்ண தேவராயன் என மகாராட்டிர மொழியிலேயே 'ராயர்' வழங்குவது எதைக் காட்டுகிறது ? அரசனின் மறுவடிவான 'ராயன்' என்பதும் திராவிட மொழிகள் பலவற்றிலும் காணப்படும் பொதுக் கூறேயாகும். முன்னைய பிராகிருதங்களிலும் இது வழங்கியதாதல் வேண்டும். பரவு பரசு; விரவு விரசு என்பனவற்றையும் கரையல், கரைசல்; பரவல் - பரசல்; உரையல் - உரைசல் என்ற மாற்றங்களையும் எண்ணிப் பார்த்தால் அரையன், அரயன், ராயன் என்பனவே பழமை மிக்க வடிவங்கள் என எண்ணத் தோன்றும். அரவு அரசு, அரயன் அரசன் ஆகியிருக்கலாம். அரவு வலிமையைச் சுட்டிப் பின்பு பாம்பைக் குறித்தது.

கன்னடத்தில் ராயன் எனவும் தெலுங்கில் ராயலு எனவும் மலையாளத்தில் ராய் எனவும் வழங்கும் குலப்பெயர்கள் எல்லாம் இதன்வழிப் போந்தனவேயாம். ராவ் என்ற பெயருடையாரும் 'ராயரேஸ் என்றுதான் அழைக்கப்படுகின்றனர். ராமராவ் என்பதில் வரும் ராவும் ராயும் ஒன்றே. பாவாணர் தம் 'முதல் தாய்மொழி' நூலில்,

அரசு

உரவு  -              அரவு அரசு அரசன்

ஏவு      -              ஏசு

பரவு    -              பரசு

விரவு -              விரசு

அரவு  -              அரசு

அரவு  -              அரைசு அரைசன் அரையன்

(கன்) ராயன், (தெலு) ராயலு, (மாஹி) ராவ் எனத்தரும் காட்டுகள் இவண் நினையத்தகுவன. (பக். 225-226)

அவர் கூறுவதுபோல் அரவு, ராவு, ராவ் என்பதும் பழமையான வடிவமாக இருந்திருக்கக்கூடும் எனத் தோற்றுகிறது. உரவு வலிமை. அதுவே அரவு ஆகி அரசு ஆயிற்றென்று அவர் கருதினாரெனத் தோற்றுகிறது.

'அரசன் சண்முகனார்' என்ற இலக்கணப் பெரும்புலவர், மதுரையை அடுத்த சோழவந்தானில் வாழ்ந்தவர். அரசன் என்பது தந்தை பெயராகுமிடத்தும், அதுவே மன்னனைக் குறிக்குமிடத்தும் அரசன் இன்னார் என வழங்கப்பட்டது. பின்னர் அது ராசன், ராஜன் எனப்பட்டு இராசன் என்று வடமொழியாக்கம் பெற்று எழுதப்பட்டமைபற்றி நாமறிவோம். இங்ஙனம் கொச்சைத் தன்மையுடன் செந்தமிழ்ச் சொற்களை சமற்கிருத மயமாக்கும் போக்கைப் பல்வேறு நிலைகளிற் காணலாம். சிலர் சமற்கிருத மயமாக்கும் (Sanskritization)  என்பதை மேனிலையாக்கம் என மொழி பெயர்ப்பது இங்கு அடிபட்டுப் போகிறது.

அரசனுக்குக் கட்டியங்கூறும்போது 'ராசாதிராச ராச மார்த்தாண்ட ராசகுல திலக' என்றிவ்வாறு அடுக்குங் கால், ஒலித்திரிபு, உலக வழக்கில் இன்றியமையாத தாகிவிட்டது. அதனையே இன்று பெருமையாக இருக்கும் என்று கருதி, 'ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட ராஜராஜ' என்றிவ் வாறு ஒலிக்கலாயினர். ராஜராஜன், ராஜேந்திரன், ராஜாதித்தன் என்பனவெல்லாம் தமிழ் மூலச்சொல் திரிந்து வடமொழிச் செல்வாக்குக் காலங்களில், ஒலித் திரிபு மட்டும் ஏற்றனவே தவிர, அவை அயற் பெயர்களல்ல என்பது மனங்கொள்ளத் தக்கது. செல்வர் என்ற சொல் எவ்வாறு செல்வந்தர் ஆனது? வடமொழித் 'தன்வந்தர்' என்ற சொல் வழக்கைத் தமிழிற் கலந்ததால் விளைந்த வினை இது.

இங்ஙனம் தமிழ், 'அரசை' உணர்வதன் பயன் யாது? 'சேம அச்சி'லுள்ள (புறம். 102) சேமம் என்பதே க்ஷேமம் ஆகிறது. தேம், தேஎம், தேயம் என்பதே தேசம், தேஷ் ஆகிவிடுகிறது. முதுமக்கட் சாடியிலுள்ள சாடி பின்னர் ஜாடி ஆகிவிடுகிறது. சுவடு, சோடியாகிப் பிறகு ஜோடி யாகிறது. துண்டிக்கப்படுகிற துண்டுபோல் வெட்டி யெடுக்கப் படுகிற வேட்டி வேஷ்டி ஆகிறது. பதறுவதால் ஏற்படும் பதற்றம் நம் பதற்றத்தில் பதஷ்டம் ஆகித் தொலைகிறது.

வேகும் கடம் வேங்கடமாகிறது. சங்க காலத்திலேயே கடம்-காடு என்ற சொல்லாட்சி மிகுதி. வேம்கடமாக அது மாற வேங்கடராமன் முதலிய கலவைத் தொடர்கள் தோன்றின. வேங்கடராமன், வெங்கடராமன், வெங்கட் ராமன், வெங்கட்ராம், வெங்கட், வெங்கு என்றும் வெங்கடாசலம், வெங்கிடாசலம், வேங்கடாசலம், வெங் கடேஷ் என்பன போலக் கலந்தும் பிறழ்ந்தும் சமற்கிருத மயமாக்குதல் கொச்சைப்படுத்தும் வழக்கின் பாற்படு மன்றோ? மூலச்சொல் எப்படி வெட்டி, ஒட்டி கட்கட் டாகிறது பாருங்கள் !

சமற்கிருத மயப்படுத்துதல் என்பது பெரும்பாலும் புறப்பூச்சு வண்ணம் போன்றதே; உள்ளீடெல்லாம் தமிழே. மறைக்காட்டை வேதாரண்யம் ஆக்கினால் அஃது அயல்தேசத்து ஊராகிவிடுமா? தமிழர்கட்கு உரிய பரதநாட்டியம் திருத்தணிக்கு அப்பாற் காணப் படாதது. அக்கலை பற்றிய பரதசாத்திரம் வடமொழியிலிருப்பதால், பரதக்கலை தமிழருக்குரிய தல்லாததாகி விடுமா ?

சொற்களைப் பொறுத்தவரை, சமற்கிருதமே தனக்கு அடுத்து வழங்கிய வடநாட்டுப் பாகதங்கள், பைசாச பிராகிருதங்கள், பிராகிருதங்கள் என்றெல்லாம் அழைக்கப்பட்ட வடநாட்டுத் திசை வழக்குகளிலிருந்து கடன்பெற்று வளர்ந்ததாகும். அப்பழம் திசைச் சொற்கள் பல தமிழோடு தொடர்புடையன. எனவே, வடமொழியில் வழங்குவனவெல்லாம் வடமொழிக்கே உரிமையுடையன என்று கருத இயலாது. வடமொழி ஒலிப்பால் ஏற்பட்ட மாறுதல்களும் வடமொழி போலத் தோற்றினும் அவை வடமொழியாகா. மேலும், தமிழக வரலாறு 'ஆறிடு மடுவும் மேடும்' போன்றது. தமிழ் செல்வாக்குப் பெற்றபோது தமிழ் மயப்படுத்துதலும் வடமொழி ஓங்கியபோது சமற்கிருதமயமாக்குதலும் என இவை மாறி மாறி நிகழ்ந்து வந்துள்ளன. வடமொழி அரசாட்சியிலிருப்பார் ஆதரவு பெற்று, மேலோங்கி நின்ற காலங்களில் தமிழ் நாட்டுக்கே உரிய கலைகள், சிற்பம், இசை, மெய்ப்பொருள், அறிவியல், வானநூல், மருத்துவம் எல்லாம் சமற்கிருதமயமாக்கப்பட்டன. அக்காலத்திலெல்லாம் அறிந்தும் அறியாமலும் பல தமிழ்ச்சொற்களும் சமற்கிருதமயமாக்கப்பட்டன. தமிழ் 'அரசு' அதை நன்கு மெய்ப்பிக்கிறதென்பதை நம் மொழியியலறிஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard