ஒரு முறை நானும் எழுத்தாளர் பாலா கருப்பசாமியும் அவரது நூலகத்தில் வைத்து பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு இலக்கியத்தில் தொடங்கி இலக்கியவாதிகளிடம் சென்று இறுதியாக அவர்கள் முன்வைக்கும் தத்துவ மரபில் சென்று சேர்ந்தது. தனக்குத் தெரிந்து இந்தியத் தத்துவ மரபைச் சார்ந்து தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் எழுத்தாளர்கள் அனைவரும் தங்களை அத்வைதிகள் என்றே சொல்லிக் கொள்கிறார்கள், இதற்கான காரணம் என்னவென்று பாலா கேட்டார். எல்லா நதிகளும் கடலைச் சேருவது போல ஞான மரபில் ஆர்வம் உடைய நவீன எழுத்தாளர்கள் பெரும்பாலும் அத்வைத சித்தாந்தத்திற்குத் தான் சென்று சேருகின்றனர். அன்று பாலாவிற்கு அளித்த பதிலையே தொகுத்து ஒரு சிறு குறிப்பு எழுதலாம் என்று தோன்றியது. அதன் விளைவே இந்தக் கட்டுரை.
நாம் மேற்கொண்டு படைப்பாளிகள் அத்வைதத்தின் மீது கொண்டிருக்கும் ப்ரேமையை குறித்து ஆராய்வதற்கு முன் இங்கு நாம் பயன்படுத்தும் “அத்வைதம்” என்ற சொல்லைக் குறித்து சிறிது புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக, அத்வைதம் குறித்த அனைத்து உரையாடல்களிலும் நான் செவ்வியல் – சங்கர அத்வைதத்தின் வழிமுறைகள் வேறு, இன்று எழுத்தாளர்களும் பல நவீன சிந்தனையாளர்களும் முன் வைக்கும் அத்வைதத்தின் வழிமுறைகள் வேறு என்பதை அழுத்திச் சொல்வதுண்டு. இவற்றின் இடையே உள்ள வேறுபாடுகளை திருத்தமாக வெளிக்கொண்டுவர செவ்வியல் அத்வைதம் X நவ அத்வைதம் என்ற பாணியில் பார்க்க வேண்டும். இந்தக் கட்டுரையில் எழுத்தாளர்கள் ஈடுபாடு காட்டும் அத்வைதம் குறித்து பேசும் போதெல்லாம் நான் முன் வைப்பது நவ அத்வைதத்தையே. செவ்வியல் அத்வைதத்தின் அடிப்படை கொள்கைகள்படி விதிப்படி துறவறத்தை ஏற்றுக்கொண்ட இரு பிறப்பாளன் மட்டுமே அத்வைத சாதனையில் ஈடுபட முடியும். எனவே, இன்று தங்களை அத்வைதிகள் என்று முன்வைக்கும் பலரும் அறிந்தோ அறியாமலோ நவ அத்வைதத்தைத் தான் பின்பற்றுகிறார்கள். இனி படைப்பாளிகளை இயல்பாகவே அத்வைதம் ஈர்ப்பதற்கான காரணங்களை பார்ப்போம்:
1) அத்வைதத்தை போல ஒரு எழுத்தாளனின் / படைப்பாளியின் அகங்காரத்திற்கு உணவிடும் வேறு ஒரு தத்துவ மரபு இருக்குமா என்று தெரியவில்லை. இலக்கியம் படைப்பதாலேயே தானும் ஒரு வகை தெய்வம் தான் என்ற கருத்தை ஆழ் மனதில் அறியா சூல் போல் சுமந்து திரியும் எழுத்தாளர்களுக்கு “நான் பிரம்மம்” என்னும் கருதுகோள் மிகுந்த உள எழுச்சியைத் தருவது இயல்பே. முழுமையான சரணாகதியை கோரும் பிரபத்தி மார்க்கம் போன்றவற்றுடன் இதனை ஒப்பிட்டுப் பார்க்க இந்தத் தன்மை தெளிவாகப் புரியும்.
2) அத்வைதம் மிகுந்த அறிவாற்றல் உள்ளவர்களால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய விஷயம் என்பது பொது நம்பிக்கை. உலகம் மாயை என்பதோ எல்லாம் ப்ரம்ம மயம் என்பதோ பாமரர்களுக்குப் புரியும் விஷயம் அல்ல என்பது பொதுவான கருத்து. படைப்பாளிகள் அசாதாரணர்கள். பாமரத் தன்மைகளை கொள்ளாதவர்கள். பல நேரங்களில் படைப்பாளிகள் தாங்கள் இந்த உப்புப் புளி சர்க்கரை வட்டத்தைத் தாண்டியவர்கள் என்று உரத்து கூற வேண்டியுள்ளது. அத்வைதத்தைக் குறித்து வாசிக்கத் தொடங்கும் போதே அதன் தனித்தன்மையும் அறிவார்ந்த சவால்களும் தங்களுடைய சிக்கலான தத்துவமாக அதனை அடையாளம் காண வைக்கிறது.
3) அத்வைதம் மட்டுமே முதிர்ந்த ஞான மார்க்கம் என்றும் ஏனையவை முதிரா கனவுகள் என்றும் எண்ணும் எழுத்தாளர்கள் இயல்பாகவே அத்வைதத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
4) ஏனைய தத்துவப் பள்ளிகள் கூறும் முக்தி படைப்பாளிகளுக்கு ரசிப்பதில்லை. கல்பகோடி காலம் ஏதோ ஒரு தெய்வ உலகில் வசிப்பது என்பது அயர்ச்சி தரும் விஷயமாகப் படுகிறது. எந்த வித குணங்களும் அற்ற பிரம்மமே தான் என்று உணர்ந்து பிரம்மத்தில் லயித்து செயல் செயலின்மை என்பதை எல்லாம் தாண்டி இருப்பது தான் சிறப்பானது என்று தோன்றுகிறது. இதுவும் சரி, சூனியவாதமும் சரி படைப்பாளிகளுக்கு உள் இயல்பிலேயே மறைந்து இருக்கும் சுய அழிப்பு விசையின் மற்றொரு வெளிப்பாடே.
5) உலகியல் வாழ்க்கையும் அது தொடர்பான விஷயங்களும், அற்பத் தேவைகளும் படைப்பாளிகளை தொடர்ந்து துன்புறுத்திய வண்ணமே இருக்கக் காண்கிறோம். வானில் பறக்கும் பறவையை கல்லால் அடித்து வீழ்த்துவதற்கு ஒப்பானது ஒரு கவியிடம் அடுத்த மாத வீட்டு வாடகைக்கு வழி செய்துவிட்டாயா என்று கேட்பது. இது மட்டும் இல்லாமல் படைப்பாளிகளை லௌகீக வெற்றியைக் கொண்டு மட்டுமே எடை போட சமூகம் முயல்கிறது. தன் முன் விஸ்தரிக்கப்படும் லௌகீக வெற்றிகளின் கதைகள் பல நேரங்களில் அவனை /அவளை எரிச்சல் அடையச் செய்கின்றன. இது தவிர, தன் கண் முன் நடக்கும் தீமைகளையும் வீழ்ச்சிகளையும் தடுக்க இயலாததால் வரும் மனச்சோர்வு தனி. “அநித்தியம் அசுகம் லோகம் சர்வம் மாயா” என்பது இச்சூழலில் அவர்கள் மனதிற்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாகச் செயல்படுகிறது.
6) அத்வைதம் என்பது புரிதலையும் உணர்தலையும் அடிப்படியாகக் கொண்ட ஞான மரபு. இதில் ஒரு முறை அந்தத் தத்துவ மரபின் மகத்தான உண்மையை அறிந்து கொண்டால் போதும். நவ அத்வைதத்தில் தொடர்ந்த சாதனை ஏதும் வலியுறுத்தப்படவில்லை. நான் கடவுள் என்று உணர்ந்தால் போதும். மற்றபடி, ஜப தபங்களுக்கான அவசியம் இல்லை. எனவே, இது அனுஷ்டிப்பதற்கு எளிதான கொள்கையாகவும் இருக்கிறது.
7) நவ அத்வைதத்தில் சடங்குகள் இல்லை, விஷேச ஆச்சாரம் இல்லை. இது படைப்பாளிகளின் முற்போக்கு முகத்தைத் தக்க வைக்கப் பெரிதும் உதவுகிறது. விஷிட்டாத்வைதத்தை தேர்ந்தெடுக்கும் ஒரு எழுத்தாளர் நெற்றி நிறைய திருமண் அணியாமல் இருக்க இயலாது. அத்வைதத்தில் இத்தகைய புறச் சின்னங்களுக்கான தேவை இல்லை. இது பலருக்கும் வசதி.
8) நவ அத்வைதம் என்பதே இந்தியர்கள் சிலை வழிபாட்டாளர்கள் அல்ல என்று காலனிய ஆண்டைகளுக்கு நிறுவுவதற்காக முன்னெடுக்கப்பட்ட ஒரு மரபு தான். படைப்பாளிகள் பலரும் தங்களை ஹிந்துவாக காட்டிக்கொள்ளும் போதே ‘ மூட சிலை வழிபட்டாளன்’ என்ற முத்திரை விழுமா என்று பதறவும் செய்கிறார்கள். நவ அத்வைத நிலைப்பாடு என்பது இத்தகைய மூடத்தனங்களை தாண்டிய தங்கள் அடையாளமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.
9) இவர்கள் தங்களுடையதாக முன்வைக்கும் அத்வைதத்தில் குரு மரபிற்கு பெரிய அவசியம் இல்லை. நான்கு புத்தகங்களே குரு தரும் ஞானத்தை தந்து விடும் என்ற எண்ணம் உண்டு. தீக்ஷையை வலியுறுத்தும் ஏனைய மரபுகளில் குருவைப் பணிய வேண்டும். இது பெரும்பாலான படைப்பாளிகளின் அகங்காரத்திற்கு ஒத்து வருவதில்லை. (ஜெயமோகனைப் போன்றவர்கள் விதிவிலக்குகள்)
10) மிக முக்கியமான மற்றொரு காரணம் இந்தியப் தத்துவங்களைக் குறித்து அறிய விரும்புபவர்களுக்கு அத்வைத நூல்களே அதிகம் கிடைக்கின்றன. பெரும்பாலும் நூல்கள் வழியாக மட்டுமே தத்துவத்தைப் புரிந்து கொள்ள முயலும் அறிவுஜீவிகளுக்கு அத்வைதத்தை விட்டால் வேறு வழி இல்லை.
11) பலருக்கும் அத்வைதத்தைத் தவிர்த்த வேதாந்தப் பள்ளிகள் இருக்கின்றன என்பதே தெரிவதில்லை. ஆங்கிலத்தில் அதிகமும் கிடைப்பது அத்வைத நூல்கள் தான். சில எழுத்தாளர்கள் / படைப்பாளிகள் mystic-கள் மீது ஈடுபாடு கொண்டிருந்ததையும் தி. ஜானகிராமன் போன்றவர்கள் ஸ்ரீ வித்யா உபாசனை போன்றவற்றை கைக்கொண்டதையும் இங்கு நினைவு கூறலாம். ஆனால், அவையும் அத்வைதத்தில் வந்த சேர்ந்தன. தினசரி வாழ்வில் கலை வழியாக நம்மால் துய்க்கப்படும் இன்பம் என்பது பரமானந்தத்தைப் புரிந்து கொள்வதற்கான ஒரு முன்வெளிப்பாடு தான் என்னும் அத்வைத அழகியல் வாதம் உள்ளது. ஆனால், அதன் செல்வாக்கு படைப்பாளிகள் மீது இருக்கும் என்று தோன்றவில்லை.
ஒரு குறிப்பிட்ட துறையைச் சேர்ந்தவர்கள் அதிகமாக ஒரு தத்துவப் பள்ளியைத் தேர்ந்தெடுப்பதற்கு தர்க்க ரீதியாக சில காரணங்கள் இருக்கக்கூடும் என்று எண்ணினேன். அவற்றை வரிசைப்படுத்தும் முயற்சியை செய்துள்ளேன். மேற்கொண்டு வரும் விவாதங்கள் புதிய விடைகளைத் தர வாய்ப்புண்டு.