New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்தியாவில் சாதிகளின் சதி (சமூகவிஞ்ஞான ஆய்வு)


Guru

Status: Offline
Posts: 24778
Date:
இந்தியாவில் சாதிகளின் சதி (சமூகவிஞ்ஞான ஆய்வு)
Permalink  
 


இந்தியாவில் சாதிகளின் சதி (சமூகவிஞ்ஞான ஆய்வு)

 

 

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?உலகில் வேறெங்கும் இல்லாத சாதியப்படிநிலை இந்தியாவில் மட்டும் எப்படி தோன்றியது. இதற்கான விடைகளைத் தேடி ஏராளமான ஆய்வுகள் நிகழ்ந்து வருகின்றன. பிறப்பால் உயர்வு தாழ்வு போதிக்கின்ற கற்பிதத்தை கற்பனையில் ஏற்றுக்கொண்டால் ஒழிய ஐம்புலன்களால் உணர முடியாத சாதியப் பண்பாட்டை இந்திய மூளைகள் எப்படி சுமந்தன? சங்க இலக்கியங்களில் சாதிப்படிநிலைகள் இல்லை. தொல்காப்பியத்தின் மரபியல் உணர்த்தும் படிநிலைகள் இடைசெருகலோ என்ற ஐயம் தொடர்கிறது. அம்பேத்கர் விளக்கப்படி ஆரியத் தொல்குடிகளிடமிருந்து சாதிப்படிநிலை பண்பாடாகக் கிளர்ந்தது என உணர முடிகின்றது. ஆனால் ஆரியர்கள் தொல்குடிகள் என்ற கூற்று மட்டும் முரணாக அமைகின்றது. சிந்து வெளி நாகரிகம் முதல் பொருந்தல், கொடுமணல், கீழடி அகழாய்வு மற்றும் மரபணு ஆய்வுவரை அனைத்தும் இந்திய வாழ்வியலில் இடையில் நுழைந்தவர்களே ஆரியர்கள் என்பதை நிரூபித்திருக்கின்றன. ஆரியர்களின் சமஸ்கிருதம் இந்திய தாய்மொழிகளில் இடம்பெறாத அந்நிய மொழியென்பதும் மற்றொரு ஆதாரமாகும். எனினும் சாதியப்படிநிலையின் தோற்றம் ஆரியர்களால் உருவாக்கப்பட்ட பண்பாடு என்பதில் முரணில்லை. எனினும் இக்கட்டுரை விளக்க முயல்கின்ற பொருண்மை எதுவெனில் அந்நியராக நுழைந்த ஆரியர்களின் கற்பிதத்தை இந்திய மூளைகள் எதற்காக தங்களின் பண்பாடாக ஏற்றுக்கொண்டன? ஒரு அந்நியரின் கற்பிதம் எப்படி இந்தியர்களின் தனித்துவப் பண்பாடாக உருமாறியது? இவற்றிற்கான விடயங்களே இக்கட்டுரை. ஆரியர்கள் இந்திய மக்களை திராவிடர்கள் என்ற சொல்லில் குறிப்பிட்டதைப்போல இந்தக் கட்டுரையிலும் திராவிடர் என்ற சொல்லே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது.

சமூகவிஞ்ஞான விளக்கப்படி சமூகத்தில் எந்த ஒன்றைப் பற்றிய ஆய்விற்கும் உற்பத்திமுறை பற்றிய ஆய்வு அடிப்படையாகும். சாதியப் பண்பாடு பற்றிய ஆய்விற்கும் இந்த வழிமுறை அவசியமாகின்றது. மனிதகுல வரலாற்றில் சமூகப் பொருளுற்பத்தியின் வளர்ச்சி படிநிலைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம்(தாய்தலைமை சமூகம்)
2. வேட்டை நாகரிகம்
3. கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம்(தந்தை அதிகார சமூகம்)
4. விவசாய நாகரிகம்
5. உற்பத்தி மீதான வணிக நாகரிகம்
6. வணிகத்திற்காகவே உற்பத்தி செய்தல்
7.நிதிமூலதனப்பிரிவு தோன்றிசமூகஉற்பத்தி மீது ஆதிக்கம் செய்தல்
8.   மக்கள் தலைமையின் கீழ்சமூகஉற்பத்தியைக் கட்டமைத்தல்

இவற்றில் சாதியப் பண்பாடு எத்தகைய சமூகப் பொருளுற்பத்தியின் தேவையிலிருந்து தொடங்கியது என்பதை அறிய வேண்டும். எனது கணிப்புப்படி திராவிட நாகரிகத்தில் 4, 5 ஆகிய விவசாயம் மற்றும் வணிக உற்பத்தி நிலையின் இடைக்கட்டத்தில் தொடங்கியிருக்க வேண்டும். இக்காலக் கட்டத்தில் ஆரிய நாகரிகம் மனிதகுல வரலாற்றின் மூன்றாம் கட்டமாகிய கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகமாகவே இருக்கின்றது.

இந்திய மக்களின் தொன்மையான நாகரிகங்களைத் தேடியவரை நமக்கு கிழ்கண்ட முடிவுகள் கிடைக்கின்றன.

திராவிடர்களில் கால்நடை மேய்த்து வாழ்கின்ற மக்கள் இருந்தார்கள். விவசாயம் செய்து விளைவித்து வாழ்கின்ற மக்கள் இருந்தார்கள். காடு சார்ந்த பொருள் சேகரிப்பிலும் வேட்டைத் தொழிலிலும் ஈடுபடும் மக்கள் இருந்தார்கள். உப்பு உற்பத்தியிலும் மீன்பிடிப்பதிலிலும் ஈடுபடும் மக்கள் இருந்தார்கள். அதிகமான நில அடிமைகளைக் கொண்டு நிலப்பிரபுக்களின் விவசாய உற்பத்தி நிகழ்ந்துகொண்டு இருந்தது. நிலப்பிரபுக்களின் தலைமையில் அரசு இருந்தது. நிலங்களையும் நில அடிமைகளையும் விரிவுபடுத்துவதற்கான அரசப் போர்கள் சிறிய அளவில் தொடங்கியிருந்தன. ஆளும் அரசனும் அரச படைகளும் சட்டங்களும் நிலப்பிரபுக்களின் நன்மைகளுக்கேற்ப ஆட்சி செய்தன. பொருள்களை சமூக அளவில் பரிமாறிக்கொள்ளும் சேவைத் தொழிலாக வணிகம் தோன்றி வளர்ந்தது. விவசாயத்தை சார்ந்தும்,அரசுப் படைகளின் தேவைகளைச் சார்ந்தும்,வணிக வளர்ச்சியின் தேவைகளைச் சார்ந்தும் பலவிதமான மக்கள் கைத்தொழில் கலைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்கள். பொருள்களின் பரிமாற்றத்திற்காக வியாபாரிகளின் தலைமையில் சந்தைகள் அமைக்கப்பட்டு இருந்தன. பொருள்கள் முதல் அடிமைகள்வரை அனைத்தும் சந்தையில் வியாபாரம் செய்யப்பட்டன.

வியாபாரத்தில் ஈடுபட்ட வணிகப் பிரிவினர் எல்லை கடந்து வெவ்வேறு அரசுகளின் பகுதிகளுக்குச் சென்று விற்றல் வாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். இதனால் நிலப்பிரபுக்களுக்கு நிகராக வணிகர்கள் வளரத் தொடங்கினார்கள். சொத்துக்களும் வெளியுலகத் தொடர்புகளும் அரசுகளின் செல்வாக்கும் வணிகர்களுக்கு பெருகிக்கொண்டு இருந்தன. தங்களுக்கு நிகராக வணிகர்கள் வளர்வதை நிலப்பிரபுக்கள் எதிர்த்தார்கள். தங்கள் அரசின் மூலமாக அதிக வரி சுமத்தி வணிகர்களை ஒடுக்க முயன்றார்கள். நிலப்பிரபுக்களுக்கு எதிராக அரசின் செல்வாக்கை வளர்த்துக்கொள்ள வணிகர்கள் முயன்றுகொண்டே இருந்தார்கள். நிலப்பிரபுக்களுக்கும் வணிகர்களுக்கும் இடையில் அரசன் திணறிக்கொண்டு இருந்தான்.

அரசனின் திணறலுக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று வளர்ந்து வருகின்ற வணிகர்களின் செல்வாக்கை நிலப்பிரபுக்களின் சார்பாக எதிர்க்க முடியவில்லை. அவர்கள் ஈட்டித்தருகின்ற பலவிதமான பொருட்களை அரசன் விரும்பி வரவேற்கிறான். மேலும் வணிகர்களுக்கு எல்லை கடந்த அரச தொடர்புகள் இருப்பதால் பகைப்பதும் நல்லதல்ல. எனவே நிலப்பிரபுக்களின் விருப்பத்திற்கு மாறாக வணிகர்களின் வளர்ச்சியை ஆதரிக்க வேண்டிய நிலையிலுள்ளான். இரண்டு அரசனைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளவர்கள் நிலப்பிரபுக்கள். அரசன் என்பவன் நிலப்பிரபுக்களில் ஒருவன். வணிகர்கள் தங்களுக்கு நிகராக செல்வாக்கு அடைவதை நிலப்பிரபுக்கள் எதிர்க்கிறார்கள். எனவே அதீதமான வரிகளைச் சுமத்தி வணிகர்களின் வளர்ச்சியை எதிர்க்க வேண்டிய கட்டாயத்திலுள்ளான். எனவே இந்த இரண்டு பிரிவினருக்கும் இடையில் போட்டி வளர்கிறது. அரசன் யாரை ஆதரித்தாலும் எதிர்ப்பு நிச்சயம். நிலப்பிரபுக்களுக்கும் வணிகர்களுக்கும் இடையிலான இத்தகைய இழுபறியில்தான் அரசு திணறிக்கொண்டு இருந்தது. அரசின் திணறல் உருப்பெற்றுக்கொண்டிருந்த காலத்தில்தான் ஆரியர்களின் நுழைவு தொடங்குகிறது.

சமஸ்கிருத மொழியை உச்சரிப்பவர்கள் சற்று தூரத்தில் வந்துகொண்டிருந்தார்கள். கைபர் போலன் கணவாய் வழியாக ஆரியர்கள் வந்துகொண்டு இருந்தார்கள். அவர்கள் கால்நடை மேய்ச்சல் நாகரிகத்தைத்தான் அடைந்திருந்தார்கள். தாய்தலைமை சமூகத்திலிருந்து மாறி சொத்தாதிக்க தந்தை அதிகார சமூகமாகப் பண்பட்டிருந்தார்கள். நெருப்பை புனிதமாக வழிபடுவதும்,இறைச்சிகளை நெருப்பில் இட்டு உண்பதும் தலைசிறந்த வழக்கமாக கொண்டிருந்தார்கள். தந்தை அதிகார சமூகத்தின் அடையாளங்களாக ஆண் கடவுளர்களை உருவாக்கிக்கொண்டு வழிபட்டு வந்தார்கள். ஸ்ரீ என்ற ஒரேயொரு பெண் தெய்வத்தைத் தவிற அனைத்தும் ஆண் தெய்வங்களே. தங்கம்,இரும்பு போன்ற உலோகத்தினாலான பொருட்களைப் பெற்றிருந்தார்கள்.
ஆயுதங்களையும் கருவிகளையும் உடலோடு பிணைத்துக்கொள்வதற்காக கட்டுக் கருவிகளை பயன்படுத்தினார்கள். இக்கருவி தோல்களாலும்,மரநார்களாலும் அமைந்திருந்தன. உணவு சேகரிப்பு கருவிகளையும்,வேட்டைக் கருவிகளையும்,மேய்ச்சல் கருவிகளையும் கால்நடைகள் மீது ஏற்றிக்கொண்டு வந்தார்கள். அவர்களது கால்நடை மேய்ச்சல் நாகரிகத்திலிருந்து பொருள்,உலகம்,ஞானம் பற்றிய புதிய தேடல்களுடன் வந்தார்கள்.முன்னேறும் பாதையெல்லாம் வழிகளாக்கிக்கொண்டு வந்தார்கள். ஆனால் பண்டைய இந்தியாவில் வழிகளை உருவாக்குவது அவர்களுக்கு சவாலாக இருந்தது.

வழக்கமாக அவர்கள் முன்னேறுகின்ற பாதைகளில் காடுகளை அழிப்பார்கள். அச்சமூட்டும் உயிரினங்களை போராடி கொல்வார்கள். அவர்களது கடவுளின் பெயரைச் சொல்லி நெருப்பை வளர்ப்பார்கள். அழித்துப் பெற்றவைகளை நெருப்பில் இட்டு மந்திரம் சொல்வார்கள். மந்திரம் என்பது நம்பிக்கையை வெளிப்படுத்துகின்ற வாசகங்கள் ஆகும். தங்களது தேவைகளை நெருப்பின் மூலமாக கடவுளரிடம் முறையிட்டார்கள். அதேபோல் கிடைப்பவைகளை நெருப்பில் இட்டு தங்கள் கடவுளர்களுக்கு அர்ப்பனிக்கவும் செய்தார்கள்.

இன்று கிடைப்பதுபோல் மாமிசங்களும் பழம் கொட்டை கிழங்குகளும் நிறைவாகக் கிடைக்க வேண்டும் என்று மந்திரம் சொன்னார்கள். கால்நடைகள் மேய்வதாகவும் பெருகுவதாகவும் வேண்டும் என்று மந்திரம் சொன்னார்கள். இயற்கை வளம் சிறக்க மழை வேண்டும் என்று மந்திரம் சொன்னார்கள். எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என்று மந்திரம் சொன்னார்கள். இத்தகைய தேவைகளின் அடிப்படையில் பல்வேறு வர்ணனைகளுடனும் கற்பனைகளுடனும் மந்திரங்களைச் சொன்னார்கள்.
அவர்களால் வீழ்த்தப்பட்ட எதிரிகள் என்பவை வேட்டை மிருகங்கள் மட்டுமல்ல. கால்நடை மேய்ச்சல் நாகரிகத்தை எட்டாத மக்களும் அடங்கியிருந்தார்கள். அதாவது காடு சார்ந்த பொருள் சேகரிப்பிலும் வேட்டையிலும் மட்டுமே ஈடுபட்டு வாழ்ந்த பழங்குடி மக்களும் அடங்கியிருந்தார்கள். தாய் தலைமை சமூகத்திலேயே வாழ்ந்தவர்களும் தந்தை அதிகார சமூகத்தின் ஆரம்பத்தை எட்டியிருந்தவர்களும் அடங்கியிருந்தார்கள். ஆரியர்களால் தங்கள் காடுகளும் உயிரினங்களும் ஆக்கிரமித்து அழிக்கப்பட்டபோது எதிர்த்துப் போராடிய நம் மூதாதையர்களும் அடங்கியிருந்தார்கள்.ஆரிய புராணங்கள் உணர்த்தும் நரகாசூரன், மகாபலி போன்றவர்கள் இத்தகைய பழங்குடிகளின் தலைவர்கள். ராட்சசர்கள் அசுரர்கள் போன்ற பெயர்களில் இந்த முன்னோர்கள் ஆரியர்களால் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பண்டைய இந்தியாவில் வாழ்ந்துகொண்டிருந்த புதிய அசுரர்களாகிய திராவிட அரசர்களை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. தங்களைவிட மேம்பட்ட விவசாய வணிக நாகரிகத்தை அடைந்திருந்த திராவிடர்களை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. நில அடிமைகளையும் அரசு படைகளையும் நேர்த்தியாக வைத்திருந்த திராவிடர்களை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. திராவிடரை அறிந்துகொள்ளாமல் மோதிய ஆரியர்கள் வீழ்த்தப்பட்டார்கள். தப்பியவர்கள் செல்வங்களை இழந்து ஓடினார்கள். இந்த திராவிடர்களை அவர்களால் கடந்துபோகவும் முடியவில்லை,விட்டு ஓடவும் முடியவில்லை. புத்தியற்ற ஆரியர்கள் புத்தியைத் தீட்டிக்கொள்ள கடமைப்பட்டார்கள். மோதல்களைத் தவிர்த்துக்கொண்டு தனியாக ஒதுங்கி வாழ்ந்தார்கள். திராவிட சந்தைகளில் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு திராவிடப் பண்பாட்டைக் கற்றார்கள். ஆரியர்களின் பொருள்,உலகம்,ஞானம் பற்றிய தேடல்களுக்கு சவாலாக இருந்த திராவிட சமூகத்தைக் கற்றார்கள். அவர்கள் கற்றுணர்ந்தவரை நிலத்தை ஆள்பவனே அரசனாக இருந்தான். நிலப்பிரபுக்களது அதிகாரத்தில் அரசு இருந்தது. அதிகாரத்தில் பங்கேற்க வணிகர்கள் முயற்சி செய்துகொண்டு இருந்தார்கள். இருவருக்கும் இடையில் அரசு திணறிக்கொண்டு இருந்தது. இந்த அரச திணறல் என்ற பிரச்சனைகளுக்கு இடையில்தான் இந்திய சமூக மக்களின் வாழ்க்கை மூழ்கிக் கிடந்தது. இழுபறிக்கு இடையில் திணறிக்கொண்டிருக்கும் அரசர்களுக்கு ஆட்சியை எப்படி நிலைபடுத்துவது என்பதே பிரச்சனையாக இருந்தது. இந்தப் பிரச்சனைகளின் வழியாக திராவிட சமூகத்தில் நீந்துவதற்கு ஆரியர்கள் துணிந்துவிட்டார்கள். இழுபறியில் இருந்த அரச அதிகாரத்தை தமக்கு பணியவைக்க ஒரு கோட்பாட்டை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.

புரியாத சமஸ்கிருத மந்திரங்களால் நெருப்பை வணங்கும் ஆரியர்களின் பண்பாட்டை திராவிடர்களும் விநோதமாகவே கவனித்து வந்தார்கள். ஆரியர்களைப் பற்றிய மந்திரவாதிக் கதைகளை நாளெல்லாம் பேசிக்கொண்டு வந்தார்கள். பல தலைமுறைகளாக திராவிட ஆரிய சமரசம் நிகழ்ந்துகொண்டு இருந்தது. ஆரியர்களின் வெற்றிக்காலம் நெருங்கத் தொடங்கியது. அவர்கள் திராவிட சமூகப் பாதையில் தங்களுக்கான வழியை ஏற்படுத்தும் வித்தையைக் கண்டறிந்தார்கள். அதுதான் வர்ணாசிரமப் படிநிலை என்கின்ற நான்கு வர்ணக் கோட்பாடு.

அவர்கள் கணக்குப்படி இந்திய மக்களை நான்காகப் பிரித்தார்கள். வேடிக்கை என்னவென்றால் அந்த நான்கில் அவர்களும் இருக்கிறார்கள். பல தலைமுறைகளாக திராவிடப் பண்பாட்டைக் கற்ற சிந்தனை உழைப்பினால் இந்த உரிமையை எடுத்துக்கொண்டார்கள். 1.அரசன்,2.வணிகன்,3.நிலஅடிமைகள் உள்ளடங்கிய பிற மக்கள். இந்த மூன்று பிரிவிற்கும் தலைமையாக ஆரியர்கள் இருப்பதாகக் கோட்பாட்டை உருவாக்கினார்கள். தலைமை என்றால் அரசனின் ஆட்சிக்கு தலைமை என்ற பொருளில் உணர முடியாதவாறு விளக்கினார்கள். உழைக்காமல் செல்வங்களை அனுபவிக்க வேண்டும் என்ற கொள்கையில் தெளிவாக இருந்தார்கள். ஏனெனில்,அவர்கள் அடைய வேண்டிய பொருளாதார முன்னேற்றங்களை திராவிட சமூகம் கண்டு கரை தேர்ந்திருக்கிறது. இவற்றை நோகாமல் அனுபவிப்பதற்கான முயற்சி மட்டுமே அவர்களுக்கு சவாலாக இருந்தது. அவர்கள் பல்வேறு கூட்டு முயற்சியால் இந்தக் கோட்பாட்டை மெருகேற்றினார்கள். அரசர்கள் ஏற்கும்படி இந்தக் கோட்பாட்டை உறுதிபடுத்தினார்கள்.

அவர்கள் நான்கு வர்ணக் கோட்பாட்டை கடவுளின் பெயரால் விளக்கத் தொடங்கினார்கள். அவர்களின் விளக்கப்படி ஆரியர்கள் தங்களை பிரம்மமாகிய கடவுளுக்கு உரியவர்கள் என்பதாக விளக்குகிறார்கள். பிரம்மம் என்றால் கடவுள். கடவுள் உலகைப் படைத்துக் காக்கின்றார். உலகப் பொருட்கள் அனைத்தும் கடவுள் தீர்மானித்தபடி இயங்குகின்றன. உலகை இயக்குகின்ற கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்படுகிறார். மந்திரங்கள் சமஸ்கிருத வேதங்களுக்கு கட்டுப்படுகின்றன. சமஸ்கிருத வேதங்கள் சமஸ்கிருத மொழி பேசும் எங்களுக்குக் கட்டுப்படுபவை. எனவே நாங்கள் கடவுளின் மொழியால் கடவுளர்களுடன் உறவு கொண்டிருப்பவர்கள். கடவுளர்களை பிரம்மம் என்பதால் பிரம்மத்திற்கு உரிய தங்களை பிராமணர்கள் என்று விளக்குகிறார்கள். வேள்வி செய்வதும்,குலச் சடங்குகள் செய்வதும்,ஆகம விதிப்படி கோயில் அமைப்பதும்,தவம் செய்வதும்,தானம் பெறுவதும்,தர்மங்களைக் கற்றுக்கொடுப்பதும் பிராமணர்களின் கடமைகளாக கடவுளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று விளக்குகிறார்கள். பிராமணர்கள் தங்களது நான்கு வர்ண படிநிலையில் உச்சத்திலுள்ள முதல் படியில் பாதுகாப்பாக அமர்ந்துகொள்கிறார்கள்.

பிராமணர்களுக்கு அடுத்த இரண்டாம் படியில் அரசர்களை அமர்த்துகிறார்கள். அதிகாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் அரச படைகள் பிராமணர்களுக்கு தேவைப்படுகின்றன. அரசன் என்பவன் நிலப்பிரபுக்களின் அதிகாரத்திற்கு உட்பட்டவன். எனவே பிராமணர்களுக்கு நில வருவாய்கள் கைகூடும் நிலை இருக்கின்றன. பிரம்மத்தின் கட்டளைப்படி வர்ணாசிரமக் கடமைகளை சமூகத்தில் பாதுகாப்பதும் நிலங்களை ஆள்வதுமே அரசரின் கடமைகள் என்று விளக்குகிறார்கள். மனுதர்மம், மகாபாரதம், பகவத்கீதை, ராமாயணம் ஆகியன இக்கடமைகளை உணர்த்த எழுந்த இலக்கியங்களே. அரசர்களை சத்திரியர்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.

அரசனுக்கு அடுத்த மூன்றாம் கட்டத்தில் வணிகர்களை அமர்த்துகிறார்கள். பலவிதமான பொருள்களைப் பெற்றுக்கொள்வதற்கு வணிகர்கள் பிராமணர்களுக்குத் தேவைப்படுகிறார்கள். அவர்கள் எல்லைக் கடந்து பயணித்து பொருள்களைக் குவித்துக்கொண்டு வருபவர்களாக இருக்கிறார்கள். எனினும் நிலப்பிரபுக்களின் அளவிற்கு அரச செல்வாக்கு எட்டாதவர்களாக இருக்கிறார்கள். எனவே பிராமணர்கள் தம்மிலிருந்து மூன்றாம் படியில் வணிகர்களை வசதியாக அமர்த்திக்கொள்கிறார்கள். நிலப்பிரபுத்துவ அரசுடன் முரண்பட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான எண்ணங்கள் எழக்கூடாதவாறு பிரம்மத்தின் பெயரால் கட்டளையிடுகிறார்கள். வணிகத்தில் ஈடுபடுதலே வணிகர்களின் கடமையாக இருக்கின்றது. இவர்களை வைசியர்கள் என்பதாக குறிப்பிடுகிறார்கள்.

பிராமணர்கள் தங்களது அதிகாரத்திற்கும் சொத்தாதிக்கத்திற்கும் தேவைப்படாத,முக்கியமில்லாத நில அடிமைகள் கைவினைஞர்கள் மற்றுமுள்ள பெரும் திரளான மக்களை நான்காம் படியிலேயே நிறுத்திக்கொள்கிறார்கள். இவர்களை சூத்திரர்கள் என்கிறார்கள். சூத்திரர்கள் எந்தப் பலன்களையும் எதிர்பார்க்காமல் தங்களது குலத்தொழிலில் ஈடுபட வேண்டும். இதுவே பிரம்மத்தின் கட்டளை என்று விளக்குகிறார்கள்.

எல்லா வர்ணங்களிலும் ஆண்களுக்கு பெண்கள் அடிமைகளாக இருக்கக் கடமைப்பட்டவர்கள் என்று பெண்களை இழிவான நிலையில் வைக்கிறார்கள்.பெண்கள் உயர்வர்ண ஆண்களுக்கு மனைவியாகவோ வைப்பாட்டியாகவோ விலை மாதுவாகவோ வாழலாம். ஆனால் தன் வர்ணத்திலிருந்து கீழுள்ள ஆண்களுடன் பாலுறவு உரிமையில் ஈடுபடுதல் கூடாது. ஏனெனில் பெண்கள் தங்களது வர்ண ஆணுக்கும் மேல்வர்ண ஆணுக்கும் அடிமையாக வாழக் கடமைப்பட்டவர்கள். ஆணுக்கு சொத்தாக மாறும் பெண்கள் அந்த ஆணிற்கு நேர்மையானவர்களாக வாழ்ந்தால் மட்டுமே பிறக்கும் குழந்தைகளின் வர்ணம் காக்கப்படும். எனவே சொத்துரிமை நிலையிலும் பாலுரிமை நிலையிலும் பெண்கள் அடிமைகளாக வாழக் கடமைப்பட்டவர்கள் என்பதாக உணர்த்தப்படுகிறார்கள். நான்கு வர்ணக் கோட்பாட்டு நிலையில் பெண்ணடிமைப் பண்பு இன்றியமையாததாகவே விளக்கப்படுகின்றது. ஒவ்வொரு வர்ணத்தாரும் தனக்கு மேலுள்ள வர்ணத்தாரை பணிபவர்களாகவும் கீழுள்ள வர்ணத்தாரை கட்டுப்படுத்துபவர்களாகவும் செயல்படுவது கடமையாக இருக்கின்றது.

பிரம்மமாகிய கடவுளால் உலகம் படைக்கப்பட்ட காலத்திலிருந்தே இந்த நான்கு வர்ணப் படிநிலைகளும் அவற்றின் கடமைகளும் படைக்கப்பட்டுவிட்டன என்பதாக விளக்குகிறார்கள். மனிதர்கள் பிரம்மத்தின் கட்டளைப்படி பிறப்பால் தீர்மானிக்கப்பட்ட கட்டளைகளைச் செய்வதையே தர்மமாகக் கருதி பிழைக்க வேண்டும். அத்தகைய பிழைப்பினால் மட்டுமே மரணமற்ற பெருவாழ்வை அல்லது பிறவியற்ற பெருவாழ்வை அடைய முடியும் என்று விளக்குகிறார்கள். வர்ணக் கடமைகளைக் கடைபிடிக்கத் தவறினால் உலக வாழ்வில் துன்பங்களே நிலைக்கும் என்பதை வழியுறுத்துகிறார்கள். இத்தகைய சாரங்களை உள்ளடக்கியதாக வர்ணாசிரமக் கோட்பாடாகிய நான்கு வர்ணக் கோட்பாட்டை ஆரியர்கள் படைத்திருக்கிறார்கள். இந்த நான்கு வர்ணமே பின்னாளில் படிநிலையற்ற ஐந்நாம் நிலையை உருவாக்குகின்றது. இந்த நிலையிலுள்ள மக்களைத்தான் பஞ்சமர்கள் என்று அழைக்கிறார்கள். இவர்கள் நான்கு வர்ண மக்களால் ஒதுக்கப்பட்டு மிகவும் இழிவான வாழ்வில் உழல்பவர்கள். குறிப்பாக வர்ணம் கடந்த பாலுறவின் விளைவாகப் பிறந்தவர்கள் என்று விளக்கப்படுகிறார்கள்.




__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: இந்தியாவில் சாதிகளின் சதி (சமூகவிஞ்ஞான ஆய்வு)
Permalink  
 


இந்தக் கோட்பாட்டை ஒவ்வொரு அரசனிடமும் சென்று கடவுளின் பெயரால் விளக்கினார்கள். அதாவது பிரம்மமாகிய கடவுள் தனது உடலிலிருந்து மனிதர்களைப் பிறப்பித்ததாக ஒரு கதையைக் கட்டினார்கள். பிரம்மத்தின் தலையில் பிறந்தவர்கள் பிராமனர்கள். தோள்களில் பிறந்தவர்கள் அரசர்களாகிய சத்திரியர்கள். தொடைகளில் பிறந்தவர்கள் வணிகர்களாகிய வைசியர்கள். கால்களில் பிறந்தவர்கள் உழைக்கும் மக்களாகிய சூத்திரர்கள். பிரம்மத்தின் வேசிகளுக்கு பிறந்தவர்கள் பஞ்சமர்கள். இந்தக் கதையைக் கேட்டு பல அரசர்கள் தாங்காது சிரித்தார்கள். சில அரசர்கள் ஆரியர்களை விரட்டியடித்தார்கள். ஆரிய சூழ்ச்சி வெற்றியடைந்த பின்னாட்களில் தங்களை அவமதித்த இத்தகைய அரசர்களை பழிவாங்க முயற்சித்து புராணக்கதைகளில் இழிவாக சித்தரித்தார்கள். திரிசங்கு, அரிச்சந்திரன் போன்றோர் இவர்களால் சித்தரிக்கப்பட்ட அரசர்களே. ஆனால் பெரும்பாலான அரசர்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார்கள். திணறிக்கொண்டிருந்த அரசர்களுக்கு பிராமணர்கள் விளக்கிய பிரம்மத்தின் கட்டளைகள் மிக வசதியாக இருந்தன. படிநிலைக் கோட்பாட்டின் அடிப்படையில் அரசர்கள் பிறப்பால் அரசாள்வதையே கடமையாகப் பெற்றிருக்கிறார்கள். மக்கள் பிறப்பால் அடிமைகளாக வாழ்வதையே கடமையாகப் பெற்றிருக்கிறார்கள். வணிகர்களுக்கு வணிகமே கடமை என்ற படிநிலைக் கோட்பாட்டின் அதிகாரச் சூழ்ச்சிகளை உணர்ந்து அரசர்கள் செயல்படுத்தினார்கள்.

கடவுளின் பெயரால் பிராமணர்களை அரசர்கள் பணிந்து ஏற்றுக்கொள்வதால் இரண்டுவிதமான நன்மைகள் தென்பட்டன. ஒன்று, பிராமணர்களுக்கு அரசன் பணிவதைப்போல அரசனுக்கு மக்களும்,மேல்வர்ணத்தாருக்கு கீழ்வர்ணத்தாரும் பணிவது இயல்பாகிவிடுகின்றது. இரண்டு, நிலப்பிரபுக்களின் சத்திரிய வர்ணம் வணிகர்களை அதிகாரத்திற்கு எழாதவாறு கட்டுப்படுத்துவதைப்போல கீழ்வர்ணத்தார் எழுச்சி பெறாதவாறு மேல்வர்ணத்தார் கட்டுப்படுத்துவதும் இயல்பாகிவிடுகின்றது. இத்தகைய இயல்புகள் அரசாட்சியை கொந்தளிப்பான சூழல்கள் ஏற்படாதவாறு பாதுகாக்கின்றன என்பதையும் உணர்ந்தார்கள். திணறிக்கொண்டிருந்த அரசர்களுக்கு ஆரியர்களின் வர்ணாசிரமக் கோட்பாடு என்பது ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்தது.
அரசர்களின் முதுகுக்குப் பின்னால் ஆரியர்களின் ராஜ்ஜியம் தொடங்கியது. சமஸ்கிருத மொழிக்குரிய ஆரியர்களைத்தவிர வேறு யாரையும் வர்ணாசிரமக் கோட்பாட்டை நிறுவுவதற்கு அரசர்கள் பயன்படுத்தவே முடியாது. இதற்காகத்தான் ஆரியர்கள் அன்றாட உரையாடல் மொழியிலிருந்து சமஸ்கிருதத்தைத் தவிர்த்தார்கள். இந்தியா முழுமைக்கும் தொழில் இரகசிய ஒருமை மொழியாக சமஸ்கிருதத்தைக் கட்டமைத்தார்கள். இதில் ஆரிய பிராமணர்களின் ஒற்றுமை என்றும் வியப்பிற்குரியதே. ஆரியக் கோட்பாட்டை அரச மதமாக ஏற்றுக்கொண்ட அரசர்கள் பிராமணர்களுக்கு கோயில்களையும் குடியிருப்புகளையும் உருவாக்கிக் கொடுத்தார்கள். அனைத்து சலுகைகளையும் வழங்கினார்கள். பிரம்மதானம்,தேவதானம்,சதுர்வேதிமங்கலம் போன்ற முறையில் நிலங்களும் செல்வங்களும் பிராமணர்களுக்கு சொத்துக்களாக பெருகின.

பிராமணர்கள் எந்த உழைப்பிலும் ஈடுபடாமல் செல்வங்களை அனுபவிக்கக் கற்றுக்கொண்டார்கள். கடவுளின் பெயரால் எண்ணற்ற யாகங்களை நடத்தினார்கள். வர்ணாசிரமக் கோட்பாட்டை நாடெங்கும் பரப்பினார்கள். ஒவ்வொரு வர்ணத்திலும் உள்ள பல்வேறு மக்கள் பிரிவினரும் தொழில் பிரிவினரும் பல்வேறு சாதிப் படிநிலைகளாக விரிவு பெற்றார்கள். நாடெங்கும் படிநிலை சாதிகள் விரிவடைந்தன. எத்தனை விதமான சடங்குகளில் பிராமணர்கள் பங்கேற்கிறார்கள் என்பதிலிருந்து பிராமணர் அல்லாதவர்களின் சமூக மரியாதை சாதிகளாகத் தீர்மானிக்கப்பட்டன. பிராமணர்களின் பார்ப்பனியம் என்பது இரட்டை அரத்தங்களை சாராம்சமாகக் கொண்டிருக்கிறது. ஒன்று ஒருவரை பிறப்பால் அதிகாரம் செய்யக் கடமைப்பட்டவன் என்று ஒப்புக்கொள்ளச் செய்வது. மற்றொன்று பிறப்பால் தன்னை அடிமையாக செயல்பட கடமைப்பட்டவன் என்று ஒப்புக்கொள்ளச் செய்வது. பிராமணர்களை அழைத்து வேள்வி சடங்குகளை நிகழ்த்த தகுதியுள்ள சாதிகள் அக்கறையுடன் முயன்றார்கள். பிராமணப் பண்பாடு படிப்படியாக நிலைபெற்றது.

உழைக்காமல் செல்வங்களை அனுபவிப்பதில் வெற்றி பெற்றபிராமணர்கள் உழைப்பில் ஈடுபட்ட காலங்களில் பயன்படுத்திய பல்வேறு கருவிகளைத் துறந்துவிட்டார்கள். தோலாலும் மரநார்களாலும் பயன்படுத்திய கட்டுக்கருவியை மட்டும் கைவிடத் துணியவில்லை. புனிதநூல் என்று விளக்கிக்கொண்டும் தோள்களில் மாட்டிக்கொண்டும் சட்டை இல்லாமல் திரிகிறார்கள். பிற சாதியினரும் இந்தக் கட்டுக் கருவியை புனிதநூல் என்று நம்பிக்கொண்டு தாங்களும் கட்டிக்கொள்வதற்கு தொடர்ந்து முயல்கிறார்கள். ஆனால் அந்த புனிதநூலின் சூட்சுமம் என்ன தெரியுமா?பிராமணர்களுக்கு ஆழ்மனதில் ஒரு அச்சம் இருக்கின்றது. மக்களுக்கு என்றாவது அறிவு முதிர்ச்சி ஏற்பட்டு உண்மையைக் கண்டுகொண்டால் என்ன செய்வது?வாரிச் சுருட்டியவற்றை முடித்துப்போட்டுக்கொண்டு ஓடுவதற்கு இந்த நூல் பயன்படும் என்ற நம்பிக்கையாக இருக்கலாம்.

இந்திய வணிக நாகரிக வளர்ச்சியைக் காயடித்த இவர்களின் வர்ணாசிரம சாதிப்படிநிலை பண்பாடு நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகிறது. வர்ணிக்க முடியாத அரக்கப் பண்புடன் முதிர்ந்து வருகிறது. வர்ணாசிரம சாதிப்படிநிலை பண்பாட்டின் ஆழ்மனதில் “தான் காயடிக்கப்படுவோமோ!” என்ற பயத்தை 17ம் நூற்றாண்டு உருவாக்கியது. வணிக நாகரிகத்தின் புதிய உருவமாக நுழைந்த கிழக்கிந்தியக் கம்பெனியைச் சமாளிக்க முடியாமல் திணறியது. படிப்படியாக வாலை கால்களுக்கிடையில் ஒடுக்கிக்கொண்டு நிலவேந்தர்களைக் கைவிடத் தொடங்கியது. கம்பெனியின் இலாபவெறிக்கு சேவை செய்யும் செல்லப் பிராணியாக உருமாறியதால் இந்துத்துவம் என்ற பெயரில் பிழைக்கத் தொடங்கியது. சாவின் விளிம்பில் துடித்துப் பிறழும் முதலாளியக் கிழடு தனது மரண பதட்டத்தால் பேரழிவு நடவடிக்கைகளை நிகழ்த்தி வருகின்றது. இதன் நடவடிக்கைகளுக்குச் சேவையாற்றுகின்ற எடுபிடியாக இந்துத்துவம் வளர்ந்து வருகிறது. முசோலினியின் பாசிசமும் ஹிட்லரின் நாசிசமும் முதலாளியக் கிழடை உயிர்த்திருக்கச் செய்ததுபோல சமகால மோடியின் இந்துத்துவமும் சேவையாற்றி வருகிறது. கார்ப்பரேட் இலாப வெறியுடன் இந்துத்துவம் ஒட்டிப்பிணைந்ததால் கார்ப்பரேட் பாசிசமாக உருவெடுக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் உற்பத்தி சக்தியின் பிரமாண்டமான வளர்ச்சியை எட்டியுள்ள சமகாலத்தில் முதலாளியக் கிழடு மரணக்குழியில் வீழ்த்தப்படுவது உறுதியான விளைவாகும். கிழட்டு முதலாளியத்தை வீழ்த்துதல் நோக்கி உலகந்தழுவிய முயற்சியாக மக்கள் தலைமை அரசுகள் உந்தி வளர்கின்றன. இவற்றின் உந்து விசையால் வர்ணாசிரம சாதியப் பண்பாடு காயடிக்கப்பட்டு புதைக்கப்படும் என்பது தீர்க்க தரிசனம். இந்தியாவில் சாதிகளின் சதி உலகளாவிய முதலாளியச் சவத்துடன் உடன்கட்டை ஏறப்போவது உறுதி. இந்தியர்களின் இடது கரங்களில் கொல்லிக் கட்டைகள் சிவந்து எரிகின்றன.

எமது ஆய்வின்படி சாதி என்பது
வணிக சமூக வளர்ச்சியைத் தடுத்து
நிலப்பிரபுத்துவ சமூகம் நீடிப்பதற்காக
ஆரியர்கள் உருவாக்கிய
நான்கு வர்ணக் கொள்கைகளை
அரசர்கள் ஏற்றுமக்களிடம்
சூழ்ச்சிகளால்நடைமுறைப்படுத்திய சதி.

இக்கட்டுரையின் பொருண்மையைச்“சாதி ஸ்வாக” என்ற கதையிலும் விவரித்துள்ளேன். சாதிப்படிநிலையின் உருவாக்கம் குறித்த இக்கட்டுரையின் முடிவைச்சரியென்று ஏற்றுக்கொள்வோர் இதன் மூன்று கோரிக்கைகளைக் கவனிக்க வேண்டும்.

1.சாதிகளின் இருப்பை புனிதப்படுத்தும் வர்ணாசிரம சமஸ்கிருத வேத இலக்கியங்களிலிருந்து இந்திய வரலாறை விளக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும்.

2.திராவிட மக்களின் தாய்மொழிகளால் வெளிப்படுத்தப்பட்டுள்ள இலக்கியங்கள் மற்றும் வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகளிலிருந்து இந்தியர்களின் வரலாறுகள் விளக்கம் பெற முயல வேண்டும்.

3.சமூகமேன்மைக்கான சமூகவிஞ்ஞான முயற்சிகளில் சாதி ஒழிப்பிற்கான சமத்துவச் சமூகத் திட்டங்களில் சகமனிதராக ஒவ்வொருவரும் தோழமையுடன் பங்கேற்க வேண்டும்.

துணை செய்தவை
1.இந்தியாவில் சாதிகள் - டாக்டர். பி.ஆர். அம்பேத்கர்
2.சாதியம் - கோ.கேசவன்
3.மானிடவியல் கோட்பாடுகள் - பக்தவத்சலபாரதி
4.சாதி - தமிழ் விக்கிபீடியா
5.ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தேறிகளே - செ.கார்கி, www.keetru.com
6.ஆரிய வருகை...அறிவியல் சொல்லும் உண்மை - டாக்டர். எழிலன் நாகநாதன் (www.youtube.com)
7.காதல் வரலாறு - புதியவன் (puthiyavansiva.blogspot.in)
8.காதலிலிருந்து கடவுள்வரை - புதியவன் (puthiyavansiva.blogspot.in)
9.அறிவெனும் பெரும் பசி - புதியவன் (puthiyavansiva.blogspot.in)
10.அம்பேத்கர் பார்வையில் இந்து ராஷ்டிரம் ஒழிப்பு1,2
-எழுத்தாளர் வே.மதிமாறன் (www.youtube.com)
11.சாதியம் புகுந்ததும் பெயர்ந்ததும் ஏன்? –எழுத்தாளர் வே.மதிமாறன் (www.youtube.com)
12.பார்ப்பனர் பண்பாட்டு படையெடுப்பு - எழுத்தாளர் வே.மதிமாறன் (www.youtube.com)
13.பெரியாரின் போர்க்குணம் - எழுத்தாளர் வே.மதிமாறன் (www.youtube.com)
14.தந்தை பெரியாரின் வானொலி பேச்சு - (www.youtube.com)
15. BJPமத அரசியலின் உச்சம் - தோழர் மருதையன் (www.youtube.com)
16.மனுதர்மத்தின் கொடூர வரலாறு - விடுதலை இராசேந்திரன் - (www.youtube.com)
17.இந்துமத எதிர்ப்பு ஏன்? -பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (www.youtube.com)
18. இந்து என்பதன் விளக்கம் - பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (www.youtube.com)
19.காரல்மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு - எஸ்.ராமகிருஷ்ணன் (www.youtube.com)
20.மார்க்சியம் என்றால் என்ன? -தோழர் தியாகு (www.youtube.com)
21. பெரியாரியல் சுருக்கமான அறிமுகம் - விடுதலை ராசேந்திரன் (www.youtube.com)
22. பெரியார் மீதான விமர்சனங்கள் - விடுதலை ராசேந்திரன் (www.youtube.com)
23.பழங்குடிகளது ஆழ்மன உணர்நிலையில் தாய் தலைமை சமூகத்தின் எச்சம்–புதியவன் (www.keetru.com)
24.குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்-பிரெடெரிக் எங்கெல்ஸ்.
25.கீழடி அகழாய்வு : பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம் !–அழகு (www.vinavu.com)
26.வால்காவிலிருந்து கங்கைவரை - ராகுல் சாங்கிருத்யாயன்
27. பொதுவுடைமைதான் என்ன? - ராகுல் சாங்கிருத்யாயன்
28. இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் - தேவிபிரசாத் சட்டோ பாத்யாய
29. சமூகவிஞ்ஞானம் விளக்குகின்ற உற்பத்திநிலை குறிப்புகள் - புதியவன்(puthiyavansiva.blogspot.in)
30.நீங்களும் சமூகவிஞ்ஞானி ஆகலாம் – புதியவன் (puthiyavansiva.blogspot.com)
31.சாதி ஸ்வாக – புதியவன்(puthiyavansiva.blogspot.com)
32.தமிழகத்தில் சாதி வளர்ச்சியில் சமணம் அளித்த எதிர்பாராத தாக்கம் – தேன்மொழி(siragu.com)
33.தொல்காப்பியம் ; ஐந்திரத்தின் அத்துமீறல்கள் – கவிதா சரண் (www.keetru.com)
34.திராவிட உணர்வில் ஆரியமாக்கிய வீரவாகு, அரிச்சந்திரன் – முனைவர் சு.குமார் (பதிப்பிக்கப்படாத கட்டுரை)
35.“இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப” சங்ககால ஜாதிகள் – லண்டன் சுவாமிநாதன் (tamilandvedas.com)
36.இந்தியாவில் கம்பெனி ஆட்சி -ta.wikipedia.org
37.சிந்து சமவெளியுடன் தொடர்புடைய தமிழர் ரகசியங்கள் - முனைவர்.ஆர்.பாலகிருஷ்ணன் IAS(www.youtube.com)
38.சிந்து சமவெளி நாகரிகம் -முனைவர்.ஆர்.பாலகிருஷ்ணன் IAS(www.youtube.com)
39. சிவக்குமார்,கே.2016. தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்: இனவரைவியல் நோக்கு. முனைவர் பட்ட ஆய்வேடு. புதுச்சேரி : புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம். https://puthiyavansiva.blogspot.com/2016/10/blog-post_79.html
40. எங்கெல்ஸ், பிரெடெரிக். 2012. மனிதக்குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம். சென்னை : பாரதி புத்தகாலயம்.

puthiyavan1986@gmail.com

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard