New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கலித்தொகையில் மெய்ப்பாடுகள்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
கலித்தொகையில் மெய்ப்பாடுகள்
Permalink  
 


கலித்தொகையில் மெய்ப்பாடுகள்

 

 

- முனைவர் த.அன்புச்செல்வி, உதவிப்பேரசிரியர், மொழித்துறை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.), கோயமுத்தூர் - 641 028 -சங்க இலக்கியங்கள் காலம் நமக்குத் தந்த அரிய பெட்டகமாகும். சங்க இலக்கியங்கள் கற்பனையாகவும், பொய்யாகவும் அமையாது, அப்போதைய தமிழர்களின் வாழ்வை அப்படியே படம் பிடித்துக் காட்டும் காலக்கண்ணாடியாக அமைந்துள்ளது. அன்றைய சமுதாய மக்கள் தங்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை தகவமைத்து, அதற்கேற்ப வாழ்வை நல்வழியில் செலுத்தி வாழ்ந்துள்ளனர்.

மெய்ப்பாடுகள்
மக்கள் தங்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை உணர்வுகள் வழி வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு மனிதனின் உடலின்கண் தோன்றும் உணர்வுகளின் வெளிப்பாடே மெய்ப்பாடு ஆகும்.  நமது உள்ளத்தில் நிகழும் உணர்வுகளைப் புறத்தார்க்கும் புலப்படும் வண்ணம் வெளிப்படுத்தல் மெய்ப்பாடாக மிளிர்கிறது. இந்த மெய்ப்பாடுகள் சங்க இலக்கியங்களில் ஒன்றான கலித்தொகையில் எவ்வாறு எடுத்தாளப்படுகிறது என்பதை இக்கட்டுரை வழி காண்போம்.

மெய்ப்பாடுகளும், நிலைக்களன்களும்
மெய்ப்பாடுகள் எட்டுவகை உணர்வுகளைக் காட்டுவதாகத் தொல்காப்பியர்,

“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெயப்;பா டென்ப”                    (தொல்.மெய்:247)

என்கிறார். இதில் உள்ள ஒவ்வொரு மெய்ப்பாடுகளும் தனக்கென நிலைக்களன்களைக் கொண்டு தோன்றும்.

நகையும், நகைப்பொருளும்
முதற்கண், நகை எனும் மெய்ப்பாட்டைக் காணுமிடத்து எள்ளல், இளமை, பேதைமை, மடன் எனும் நான்கையும் நிலைக்களனாகக் கொண்டு அமைகிறது. இதனை,
“எள்ளல் இளமை பேதைமை மடன்என்று
உள்ளப் பட்ட நகைநான் கென்ப”                 (தொல்.மெய்:248)

என்னும் நூற்பா எடுத்துக்காட்டுகிறது.
எள்ளல்
எள்ளல் என்பது இகழ்ச்சிக் குறிப்பாகவோ, நகை மொழியாகவோ, கேலி பேசுவதாகவோ அமையும். எள்ளலுக்கு ஏற்புடையதாக கலித்தொகையில்; காணுமிடத்து தலைவனுக்கு, தலைவியிடம் அன்பு ஏற்பட அவனோ தலைவியின் அருளை நாடுகின்றான். அப்போது தோழி, தலைவியைப் பார்த்து, நீ அருள்செய்யாது கைவிட்டால், பலரும் சிரித்து நகையாட, இகழப்படும் மடன்மா ஏறி விடுவான் போலும், நாம் பலவாறு எள்ளி நகையாடினாலும் அவன் போகாக் குணம் உடையவன் போல் தெரிகிறது, என்பதை

“ஒண்தொடீ! நாண் இலன் மன்ற இவன் - ஆயின், ஏஎ!
பல்லார் நக்கு எள்ளப்படு மடல்மா ஏறி”              (கலி:61:20-21)
என்றும்

“எள்ளி நகினும் வரூஉம், இடை இடை”                  (கலி:61:25)

என்றும் காட்டப்படுகிறது. இவ்வகையில் எள்ளல் பொருள் இப்பாடலில் இடம்பெற்றுள்ளதை அறியலாம்.

இளமை:
இளமை, இங்கு பிள்ளைத்தன்மையைக் குறித்து அமைந்துள்ளது. தலைவியானவள், குறவர் சிறுகுடியில் குழந்தை இன்மையான் வருந்திப் பெற்ற செல்வம் உடையாருடைய மகள் ஆவாள். ஆகவே அவளை,

“வழைவளா; சாரல் வருடை நன்மான்
குழவி வளா;ப்பவர் போல, பாராட்டி”                  (கலி:50:21-22)

பேண வேண்டும். ஏனெனில், அவள் தனது குழந்தைத் தன்மையினின்றும் மாறாத தன்மை கொண்டவள் ஆவாள். மேலும் மற்றொரு பாடலில் தலைவன் தனக்கு நோய் ஏற்பட, அந்நோய் குறித்து கேட்கும் அருள் இவளுக்கு இல்லை என அயலார் பழிக்க, நீ இன்னும்

“பொய்தல மகளையாய், பிறர்மனைப் பாடி”                  (கலி:59:16)

விளையாட்டு மகளைப் போல இருப்பது சாரீதானோ? எனக் கேட்கிறான் தலைவன். அதாவது தனது பிள்ளைத்  தன்மையினின்றும் மாறாதவளாகத்  தலைவி விளங்குகிறாள் என்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

பேதைமை:
தலைவனிடம் உள்ள அன்பால் தலைவி தலைவன் கூறுவதை ஆராயாது உண்மை என நம்பி இருந்தவள் தற்போது தன் பேதைமை தன்மையில் இருந்து மீண்டு வந்து உண்மை உணர்வதாகக் கலித்தொகைப் பாடல் காட்டுகிறது.

“பலபல கட்டுரை பண்டையின் பாராட்டி
இனிய சொல்லி, இன்னாங்குப் பெயர்ப்பது
இனி அறிந்தேன”                               (கலி:14 : 9)

இப்பாடலில,; பண்டைய நாளில் இனிய மொழிகளைக் கூறிப் பாராட்டினீர், எம்மை வருத்தாதே இனிமையாகப் பேசிவிட்டதை, தான் நம்பிவிட்டேன், இப்போது துன்பம் தருமாறு பேசுகின்றீர், பேச்சு மாறுபாடுகின்றது என்பதை இப்பொழுது அறிந்து கொண்டேன், என்ற செய்தி ‘கேட்;டதனை உய்த்துணராது மெய்யாகக் கோடல்’ என்னும் பேதைமை நிலைக்களனை எடுத்துரைக்கின்றது.

மடன்:
தலைவன் சின்மொழியாய்! கனங்குழாய்! சுணங்கினாய்! என்று பலவாறு விளித்துப் புகழ்ந்தும் தலைவி யாதொன்றும் கூறாது கவிழ்ந்து நிலத்தையே பார்த்து நின்றனள். பின்னர், தோழியரை நினைப்பவள் போல தலைவனின் அறிவைத் தன்னிடத்தே அகப்படுத்திக் கொண்டு, தன் மனையிடத்தே மீண்டு போனாள் என்பதை,

“இனையன கூற, இறைஞ்சுபு நிலம் நோக்கி
நினையுபு நெடிது ஒன்று நினைப்பாள் போல், மற்று ஆங்கே
துணை அமை தோழியர்க்கு அமர்த்த கண்ணள்,
மனைஆங்குப் பெயர்ந்தாள், என் அறிவு அகப்படுத்தே”      (கலி:57:21-24)

என்றபாடலில், அறிவிக்க அறிதலும்; அவ்வாறு அறிந்ததைப் பிறர்க்கு அறிவிக்க இயலாததுமாகிய எளிதில் நம்பும் இயல்பான மடன் என்னும் பொருள் அழகாகப் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.

அழுகை:
கெடுதலில்லாத நிலையையுடைய அழுகை என்னும் மெய்ப்பாடு இளிவு, இழவு, அசைவு, வறுமை என்னும் நான்கையும் நிலைக்களானக் கொண்டு தோன்றும் அதனை,

“இழிவே இழவே அசைவே வறுமையென
விளிவில் கொள்கை அழுகை நான்கே”              (தொல்.மெய்:249)

என்னும் தொல்காப்பியச் சூத்திரம் எடுத்து இயம்புகிறது.

இழிவு:

இழிவு என்னும் மெய்ப்பாட்டு நிலைக்களன் பிறரால் இகழப்பட்டு எளியராதலாகிய தாழ்வு நிலையைக் குறிப்பதாக வரும்.

“தொலைவுஆகி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு”       (கலி:2:11)

“இல் என, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு”            (கலி:2:75)

“இடன்இன்றி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு”       (கலி:2:19)

அதாவது, பொருள் தொலைத்தவர்களுக்கும், பொருள் இல்லாதவர்களுக்கும், இல்வாழ்க்கைக்கு வேண்டிய பொருள் இல்லை என்றும் கூறி வந்தவர்களுக்கும் சிறிதும் பொருள் கொடாதிருத்த்ல் இளிவானதாகும், என்கிறது இப்பாடல் வரிகள். பிறாரீடம் தனக்கு உதவி செய்யும்படி கேட்பது ஒருவரின் தாழ்வுநிலையாகும். இப்பாடலில் உதவி கேட்பவரின் தாழ்வுநிலையையும், உதவிசெய்யாமல் இருப்போரின் தாழ்வுநிலையையும் சுட்டிக்காட்டுகிறது.

இழவு:
தாய், தந்தை முதலிய சுற்றத்தாரையும், பொருளையும் இழத்தலாகிய இழவு என்னும் மெய்ப்பாட்டு நிலைக்களனானது,
“தப்பித்தான், பொருளே போல், தமியவே தேயுமால்,
ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான், மற்றுஅவன்
எச்சத்துள் ஆயினும், அஃது எறியாது விடாதே காண்
கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்
தாள் இலான் குடியே போல், தமியவே தேயுமால”             (கலி:149:5-9)

என்ற பாடலில் உணர்த்தப்படுகிறது. ஏனெனில் குற்றமுடையவன் அவனுடைய செல்வங்களை எவ்வாறு இழப்பான் என்பதை அழகாக எடுத்துரைக்கிறது.

அசைவு:
அசைவு என்பது முந்தைய நல்ல நிலை கெட்டு தன்னிலை தாழ்தலை விளக்குகிறது.

“தொல் எழில் தொலைவு இவள் துயர் உழப்ப, துறந்து நீ
வல்வினை வயக்குதல் வலித்திமன், வலிப்பளவை
நீள் கதிர் அவிர்மதி நிறைவு போல் நிலையாது
நாளினும் நெகிழ்பு ஓடும் நலன் உடன் நிலையுமே?”        (கலி:17:5-8)

இப்பாடலில், இவள் பழைய அழகெல்லாம் கெட்டு நிலவின் நிறைவு தேய்வதைப் போல, நாள்தோறும் நிலைகெட்டு கெடும் அழகு என வர்ணிக்கும் இவ்வரிகளில் அசைவு என்னும் மெய்ப்பாடு தெளிவுபடுத்துகிறது.

வறுமை:
வறுமையைக் கூறுமிடத்து இல்லாமையைப் பதிவுசெய்கிறது. கலித்தொகைப் பாடல் ஒன்றில் வறுமைக் காலத்தும் தலைவன் தலைவியும் எவ்வாறு ஒன்றிக்கலந்து பிரியாது வாழ்கிறார்களோ அவ்வாழ்வினையே சிறந்த இல்வாழ்க்கையாக எடுத்துக்காட்டுகிறது,

“இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார்
வளமை விழைதக்கது உண்டோ? உள நாள்,
ஒரோஒ கை தம்முள் தழீஇ, ஒரோஒகை
ஒன்றன் கூறுஆடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை”                   (கலி:18:7-11)

இதில் வறுமை என்னும் மெய்ப்பாட்டுப்பொருள் சிறப்பாக அமைந்துள்ளது.

இளிவரல்:
இளிவரல் என்னும் மெய்ப்பாடு,
“மூப்பே பிணியே வருத்த மென்மையொடு
யாப்புற வந்த இளிவரல் நான்கே”                (தொல்.மெய்:250)

என்ற நான்கு விதமான பொருளையும் வெளிப்படுத்துகிறது.

மூப்பு:
இளிவரல் என்னும் மெய்ப்பாட்டில்; முதலில் வருவது மூப்பே. இளமைக் காலத்தில் செய்த செயலை எல்லாம் முதுமைக்காலத்துச் செய்ய இயலாமையால் இளிவரல் தோன்றும்.

“தொல் நலம் இழந்தோள், நீணை எனப் புணர்ந்தவள்”      (கலி:100:20)

இங்கு நீ புணரும் துணை என்று கருதியவள் இவள் தற்போது தன் பழைய நலத்தையும் இழந்தவளாகக் காணப்படுகிறாளே என அவளின் இளிவரலைத் தெளிவுபடுத்துகிறது.

பிணி:
பிணி என்பது நோய்பட வருந்துதல், கலித்தொகையில் தலைவியின் கடைசி நாள் வந்துவிட்டதோ எனக் கூறும்படி காமநோய் தந்து அவளின் அழகிய தோள் வாடிப் போகும்படி சிதைத்தாய் என தலைவனிடம் தோழிக் கூறுவதாக இப்பாடல் அமைகிறது.

“கடை எனக் கலுழும் நோய் கைம்மிக, என்தோழி
தடையின திரண்ட தோள் தகைவாட, சிதைத்ததை?”       (கலி:45:14-15)

இதில்  நோய்பட வருந்தும் பிணி என்னும் மெய்ப்பாட்டு நிலைக்களனைத் தலைவி மூலம் எடுத்துரைக்கிறது.

வருத்தம்:
“அருஞ்செலவு ஆர்இடை அருளிவந்து அளிபெறாஅன்
வருந்தினென் எனப்பல வாய்விடூஉம், தான்;;;;;;என்ப”            (கலி:46:14-15)

இதில் தலைவன் அல்ல குறியினால் வருத்தம் பலவற்றையும் சூழும் மனத்தோடு வருந்தி நிற்கின்றான். அதற்குத் தலைவி பொறுப்பு அல்லள், எனத் தோழி கூறுவதாக இப்பாடல் அமைகிறது. இங்கு தலைவன் மனச்சோர்வு அடைந்தான் என்பதைத் தோழி வாயிலாகக் காட்டி வருத்தம் என்னும் உணர்வை விளக்கியுள்ளது.

மென்மை:
மென்மை என்பது இயலாமை என்னும் மெய்ப்பாட்டுத் தன்மையாக அமைகின்றது.

“வாடிய பு+வோடு வாரல் எம்மனை? என
ஊடி இருப்பேனாயின், நீடாது”                   (கலி:75:19-20)

“விருந்து எதிர் கொள்ளவும் பொய்ச்சூள் அஞ்சவும்
அரும்பெறல் புதல்வனை முயங்கக் காணவும்
ஆங்கு அவிந்து ஒழியும், என் புலவிதாங்காது”        (கலி:75:27-29)

இங்கு தலைவன், பரத்தையிடம் சென்று வருவதை அறிந்து அவனிடம் ஊடல் கொள்ளக் கருதி, மாறுபட்டிருப்பேனாயினும் அது தலைவன் விருந்தோடு வரும் பொழுதும், பொய்ச்சத்தியம் செய்வானே என அஞ்சுமிடத்தும் தன் மகனை அணைத்துக் கொண்டு தூங்குவதைக் காணுமிடத்தும் அது இயலாமல் போகிறது என்று தோழியிடம் தலைவி தனது இயலாமையைக் கூறுவதாக இப்பாடல் அமைந்து மென்மை என்னும் இயல்பை எடுத்தியம்பப்படுகிறது.

மருட்கை:

மருட்கையின் நிலைக்களன்களைக் காணுமிடத்து
“புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே”                (தொல்.மெய்:251)

என்னும் தொல்காப்பியச் சூத்திரம் விளக்குகிறது.

புதுமை:
மருட்கை என்னும் மெய்ப்பாட்டின் முதல் பொருளாக அமைவது புதுமையாகும். புதுமை என்பது யாதோன்றானும் எவ்விடத்தும் எக்காலத்திலும் தோன்றாததோர் பொருள் தோன்றிய வழி வியத்தலாகும்.

“நனவினான், ஞாயிறே! காட்டாய் நீ ஆயின்
புனை ஈன்ற மா ஊர்ந்து, அவன் வர, காடன்
கணை இரப்பேன், கால் புல்லிக் கொண்டு”            (கலி:147:58-60)   

தலைவன் தலைவியை மடலேறிப் பெறும் வழக்கம் உண்டு. ஆனால் இல்லத்தைக் கடந்து வந்து ஊரிலுள்ளாரை விளித்துக் கூறுதல் பொருட்டு, தலைவி மடல் ஏறுவதாகக் கூறுவது புதுமை என்னும் மெய்ப்பாட்டை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

அச்சம்:
முரண்படுதல் அமையாத அச்சமானது,
“அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே”                  (தொல்.மெய்:252)

என்னும் வகையில் அமைந்துள்ளதாக தொல்காப்பியம் காட்டுகிறது.

அணங்கு:
அச்சம் என்னும் மெய்ப்பாட்டில் முதலில் வருவது அணங்கு எனும் உணர்வாகும். அணங்கு என்பது யாரும் கண்டு உயிருடன் மீள முடியாத அழகின் எல்லையானது காண்பாரை வருத்தும் உரு என்கின்றனர். தலைவியின் அழகைக் கண்டு மயங்கி வருத்தம்; மிக்க நெஞ்சழிந்தேன், அவளது அழகு அணங்காகி மேலும் மேலும் என்னை வருத்தும் காமநோயாக மாறுவதை தலைவியிடம் சொல்லிக் காட்டினும் அறியாதவளாக இருக்கிறாள் அது அவளது தவறு இல்லை எனத் தலைவன் கூறுவதாக,

அல்லல் கூர்ந்து அறிவுற, அணங்காகி அடரும் நோய்
சொல்லினும் அறியாதாய்! நின் தவறு இல்லானும்         (கலி:58:15-16)

என்று இப்பாடல் அமைகிறது.

விலங்கு:
அடுத்ததாக விலங்கு என்று வரும்பொழுது கலித்தொகையில் தலைவன் தான் செல்லும் வழியில் விலங்குகளின் அச்சுறுத்தல் மிகுதியாக இருப்பதாகத் தலைவியிடம் கூறுவதாக அமைக்கப்பட்டுள்ளது.

பால் மருள் மருப்பின் உரல் புரை பாவு அடி,
ஈர் நறுங்கமிழ் கடாஅத்து, இனம் பிரி ஒருத்தல்
ஆறு கடி கொள்ளும் வேறு புலம்படர்ந்து                (கலி:21:1-3)

என்னும் வரிகள் இதனை விளக்கும்

கள்வர்:
கள்வர் எனக் கூறுமிடத்து, வழிசெல்வோர் பொருளைப் பறித்தும், உயிரைப் பறித்தும் கொடுஞ்செயல் புரிவோர் எனக்கூறுப்படுகிறது. இதனை,
வலிமுன்பின், வல்லென்ற யாக்கை புலிநோக்கின்

……………………………………………………
துள்ளுநா;க் காண்மார் தொடர்ந்து, உயிர்வௌவலின்       (கலி:4:1-5)

என்றும்

இடுமுள் நெடுவேலி போல, கொலைவர்
கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த
கடுநவை ஆர் ஆற்று                          (கலி:12:1-3)

என்றும் காட்டுவழியில் கொலைஞர்கள் செய்யும் கொடுமையை விளக்கியுள்ளது.

இறை:
இறை என விளக்குமிடத்து, இங்கு தந்தையர், ஆசிரியர், அரசர் எனக் குறிக்கப்படுகிறது. முன்னர் வருத்தமுற்று, பின்னர்த் தன்னை நிழலாக அடைந்த குடிமக்களுக்கு நெஞ்சு வருந்தாதபடி, அவர்களைப் பேணிக் காத்து உலகத்தார் புகழ்ந்து பாராட்டும் தன்மை பெற்ற இறையைப் பற்றி,

ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி
வெல் புகழ் உலகு ஏத்த,                       (கலி:26:11-12)

என்ற வரி விளக்கி நிற்கிறது.

பெருமிதம்:
கல்வி தறுகண் புகழ்மை கொடையெனச்
சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே                 (தொல்.மெய்:253)

இங்கு சொல்லப்பட்டுள்ள பெருமிதம் கல்வி, தறுகண், புகழ்மை, கொடை என்னும் பொருளைக் காட்டிவருகிறது.

கல்வி:
வழுவின் சொற்களைச் சொல்லாதபடி தெள்ளிய நாவினாலே வல்லார்முன் சொல்லுதல் வல்லோனாகிய என்னைப் பிறர் கல்லாதவனாக் காட்டுவதை

வல்லார்முன் சொல்வல்லேன் என்னைப் பிறர்முன்னர்க்
கல்லாமை காட்டியவள்                    (கலி:141:19-20)

என்று விளக்கப்படுகிறது. இதில்,கல்வி என்னும் மெய்ப்பாட்டுப்பொருள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

தறுகண்:
அறத்தைச் சாராதவர்கள் மடல் ஏறுவதாக நூல்கள் கூறியுள்ளன. அதுபோல தானும் துணிந்து மடலேறுவன்  என தலைவன் கூறுவது,

அடன்மா மேல் ஆற்றுவேன் என்னை மடன்மாமேல்
மன்றம் படர்வித்தவள்                          (கலி:141:9-10)

இவ்வரிகளில் தெளிவுபடுத்துகிறது. இங்குத் தவைனின் மனத்திண்மை தெளிவாகக் காட்டப்படுகிறது.

கொடை:
உலகத்தையே பாதுகாக்க முயலும் உள்ளத்தைக் காட்டுமிடத்து, தான் எப்பாடுபட்டேனும் உலகைக் காப்பேன் என்கிறான் தலைவன். அச்செய்தியை,

புரவூக்கும் உள்ளத்தேன் என்னை இரவூக்கும்
இன்னா இடும்பை செய்தாள்                    (கலி:141:12-14)

என்று விளக்குகிறது. தனது உயிரும், உடம்பும், உறுப்பும் முதலிய எல்லாப் பொருளும் கொடுக்கும் கொடையின் பொருளைத் தலைவன் வாயிலாகக் காட்டப்பட்டுள்ளது.

வெகுளி:
வெறுத்தலால் வரும் வெகுளியை,
உறுப்பறை குடிகோள் அலைகொலை என்றன
வெறுப்ப வந்த வெகுளி நான்கே                 (தொல்.மெய்:254)

என்னும் நான்கு பொருளால் காட்டுகிறார் தொல்காப்பியர்.

உறுப்பறை:
உறுப்பறை என்பது அங்கமாயினவற்றை அறுத்தல் என்னும் பொருளில் வருகிறது. அதனை

முறம்செவி மறைப் பாய்பு முரண் செய்த புலிசெற்று       (கலி:52:1)

இங்கு மாறுபாடுசெய்த புலியைச் சினந்து தாக்கியதாகக் கூறப்படுவது உறுப்பறை என்னும் மெய்ப்பாட்டு நிலைக்களனாக உள்ளது.

குடிகோள்:
குடிகோள் என்பது கீழ்வாழ்வாரை நலிதலாகும். இதனை,
நடுவு இகந்து ஒரிஇ நயன் இல்லான் வினை வாங்க
கொடிது ஓர்த்த மன்னவான் கோல்போல               (கலி:8:1-2)

என்பது அரசன் தன் கீழ் வாழும் குடிமக்களை நலிதற்பொருட்டு பாடப்பாடுவதாக அமைந்துள்ளது.

அலை:
வளைந்த வரிகளை உடைய புலி தன்னைத் தாக்க அதனை வென்றது யானை, வென்ற வருத்தத்தோடே நெடிய மலையிடத்து உறங்கா நின்றது. துயில் கொண்ட யானை நனவிலே தான் செய்ததது மனத்து நினைத்திருந்ததனால் கனவிலும் வேங்கை வரக்கண்டது, கண்டு கடுகவெருவி எழுந்தது.

கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு
நெடுவரை மருங்கின் துஞ்சும் யானை
நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின்
கனவில் கண்டு, கதுமென வொரீஇ                  (கலி:49:1-4)

இப்பாடலில் அலை என்னும் மெய்ப்பாட்டில் காணப்படும் வைதலும் புடைத்தலுமாகிய பொருளை விலங்குகளின் உணர்வுவழி காட்டப்பட்டுள்ளது.

கொலை:

கொல்லுதற்கு ஒருப்படுதல் என்னும் பொருளை உணர்த்தும் கொலையானது, அறிவும் புகழும் முதலாயினவற்றைக் கொன்று செயல்படும் தன்மையாகவும் காட்டப்படுகிறது.

அலவுற்றுக் குடி கூவ, ஆறு இன்றிப் பொருள் வெஃகி
கொலை அஞ்சா வினைவரால் கோல் கோடியவன் நிழல்
உலகு                                   (கலி:10:5-7)

இங்கு குடிமக்கள் வருத்தமுற்று ஓலமிட கொலைத் தொழிலுக்கும் அஞ்சாத, அரசு வினைஞர்களால், நெறியின்றி பொருளைப் பெற்றுச் செங்கோல் வளைந்து ஆட்சிநடத்தும் அரசன், தனது குடிமக்களையே கொல்வதற்கு ஒருப்படும் நிலையை எடுத்துரைப்பதன் வழி கொலையின் பொருள் தெளிவுபடுத்தப்படுகிறது.

உவகை:

துன்பத்தை நீக்கும் மகிழ்ச்சி எனும் மெய்ப்பாடு
செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென
அல்லல் நீத்த உவகை நான்கே                 (தொல்.மெய்:255)

என்று செல்வநுகர்ச்சி, ஐம்புலன் நுகர்ச்சி, வாழ்க்கை நுகர்ச்சி, மற்றும் ஒன்றுசேர்ந்து ஆடும் விளையாட்டு ஆகியவற்றை விளக்குகிறது.

ஐம்புலன் நுகர்ச்சி:
தலைவியின் உறுப்புகளை வர்ணித்து ஒருசேர தலைவன் ஐம்புலன் நுகர்ச்சியைப் பெற்றது போன்ற தன்மையையும் அதனைத் தலைவியும் ஏற்றது போன்றும் இவ்வரிகள் காட்டுகிறது.

நுதலும் முகனும் தோளும் கண்ணும்
……………………………..
தொழுலும் தொழுதான், தொடலும் தொட்டான்         (கலி:55:7-19)

இப்பாடல் வரிகள் உணர்வுகள் வழியே ஐம்புலன் நுகர்ச்சியை விளக்குகிறது.

புணர்வு:
புணர்வு என்பது அன்போடு இருவர் இணைந்து வாழும் வாழ்க்கை நுகர்ச்சி. வெறும் உடலால் ஏற்படும் காமப்புணர்ச்சி மட்டுமே குறிக்காது, அன்போடு இணைந்து வாழும் வாழ்க்கைப் புணர்ச்சியைச் சுட்டுகிறது. அந்த வகையில், இளமையும் இருவர் உள்ளத்தே ஒத்த காமத்தையும் ஒன்றாகப் பெற்றவர்கள் பொருட் செல்வத்தை மட்டுமே விரும்புவர்கள் அல்லர், வறுமைக்காலத்தும் ஒருவரை ஒருவர் தம்முள் தழுவியும், ஒன்றிக் கலந்து பிரியாதும் இருப்பவர்களுடைய வாழ்க்கை நுகர்ச்சியை,

இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார்
வளமை விழைதக்கது உண்டோ? உள நாள்
ஒரோஒ கை தம்முள் தழீஇ, ஒரோஒகை
ஒன்றன் கூறுஆடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை                 (கலி:18:7-11)

எனக் காட்டுகிறது இப்பாடல்.

விளையாட்டு:
வையை ஆற்றின் உயர்ந்த இழுமணலிடத்தே அமர்ந்து ஆடுகின்ற நுகர்ச்சியை விளக்குமிடத்து,
தைஇய மகளிர் தம்ஆயமோடு அமர்ந்து ஆடும்
வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும்             (கலி:27:19-20)

என்றும்,
புல்லினத்து ஆயர் மகளிரோடு எல்லாம்
ஒருங்கு விளையாட                         (கலி:111:5-6)   

என்றும் எடுத்துக்காட்டப்படுகிறது. இதில் உவகையின் விளையாட்டு என்னும் மெய்ப்பாட்டு நிலைக்களன் விளக்கப்படுகிறது. தொல்காப்பியர் பகர்ந்த மெய்ப்பாடுகள் கலித்தொகையின் பாடல் கூற்றுகளில் வெளிப்பட்டுள்ளமையை இவ் ஆய்வு கூற விழைகிறது. யாப்பு வகையைத் தன் பெயராகப் பெற்ற கலித்தொகையில் அகவுணர்வுகள் அதிகமாக பதிவுசெய்யப்பட்டுள்ளன. அக உணர்வுகளை தொல்காப்பியத்தின் மெய்ப்பாடுகளோடு இணைத்துப் பார்க்கும்படியான கருத்துக்களையும் பதிவுசெய்கிறது. தலைவன், தலைவி, தோழி, பாங்கன் இவர்களின் கூற்றுகளின் வாயிலாகவும் அறியமுடிகிறது. சங்க இலக்கியங்களில் கலித்தொகை இவ்வகையான ஆய்வுக்கு மிகப்பொருத்தமானதாக இருக்கும் என்பதில் ஐயப்பாடு எதுவும் இல்லை எனவும் கூறலாம்.   

துணைநின்றவை
1. தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணர், சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை.
2. கலித்தொகை, அ.விசுவநாதன் (உரை.), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

anbujoseph1995@gmail.com

* கட்டுரையாளர் :- முனைவர் த.அன்புச்செல்வி, உதவிப்பேரசிரியர், மொழித்துறை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.), கோயமுத்தூர் - 641 028 -



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard