New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ்நாட்டில் அய்யனார் வழிபாடு


Guru

Status: Offline
Posts: 24778
Date:
தமிழ்நாட்டில் அய்யனார் வழிபாடு
Permalink  
 


தமிழ்நாட்டில் அய்யனார் வழிபாடு

 

 

ஆய்வுகட்டுரை வாசிப்போமா?தமிழ் இலக்கியங்களில் இறைவழிபாடு முறையில் நோக்கிடும்போது தமிழகமக்களின் பழமையும், ஆய்வுக்குட்பட்ட பல செய்திகளும் புலப்படுகின்றன. வழிபாடு என்பது பின்பற்றுதல் என்ற பொருளினைத் தரும். பலதரப்பட்ட கடவுள்களைச் சைவசமயத்தினர் வணங்கி வருகின்றனர். இறைவனை நேரில் காண இயலாததாகி இருப்பினும் இறைவனுக்குப் படையல் இடுவதும், தன்னையும், தமது குடும்பத்தாரையும் காக்கும் சக்தியாக எண்ணியும் வழிபட்டு வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தெய்வமாக அமையப்பெற்ற அய்யனார் வழிபாடு குறித்து இவ்வாய்வுக்கட்டுரை அமையப்பெறுகிறது.

அய்யனார் விளக்கம்
அய்யனாரைப் பல சாதி சமயத்தினரும் வழிபாடு செய்துவருகின்றனர். அய்யனார் என்ற சொல்லானது அய்(ஐ) அன், ஆர் என்ற மூன்றால் ஆனதாகும். இதில் ஐ என்ற எழுத்து தலைவன் என்றும் அன் என்பது ஆண்பால் ஈறு ஆகும். ஆர் என்பது மரியாதைக்குரிய விகுதியாகும். பழங்காலம் முதற்கொண்டே அய்யனார் வழிபாடு தமிழகத்தில் இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் இலக்கியங்களில் இருக்கின்றன. சமணர்கள் கோயிலிலும் அய்யனார் தெய்வத்தைப் பரிவாரத் தெய்வமாய் வைத்து வழிபட்டு  வந்திருக்கின்றார்கள். அவர்கள் இவரைப் பிரம்மயட்சணர் என்றும் அழைத்து வருகின்றார்கள். யானை வாகனம் அவருக்குரியது என்றும் கூறி வழிபட்டு வருகின்றனர். தமிழகத்திலுள்ள சிறுதெய்வ வழிபாடு முழுவதும் அழகர்மலையிலுள்ள பதினெட்டாம்படி கருப்பர் வழிபாட்டிற்குக் கட்டுப்பட்டதேயாகும். அய்யனார் கோயில்களில் இருக்கும் தெய்வச்சிலைகள், எல்லாம் களிமண்ணால் செய்யப்பட்டு சூளையில் வைத்துச் சுட்டுச் செய்யப்பட்டவைகளாய் இருந்து வருகின்றன.(நன்றி-வலைத்தளம்)

சைவமும்,வைணவமும் ஒருங்கிணைந்ததுபோல அய்யனாரின் பிறப்பு அமைந்துள்ளது. அய்யப்பனே அய்யனார் எனவும், சாஸ்தா எனவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. சாத்தன்', அல்லது 'சாத்தனார்' என்னும் பெயர் 'சாஸ்தா' என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. 'சாஸ்தா' என்பது புத்தருக்குரிய பெயர்களுள் ஒன்று என்பது 'அமரகோசம்', 'நாமலிங்கானுசாசனம்' முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும். எனவே, 'சாஸ்தா' என்னும் சொல்லின் திரிபாகிய 'சாத்தன்' என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பெயரைப் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர். பண்டைக் காலத்தில், அதாவது கடைச்சங்க காலத்தில், தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் 'சாத்தன்' என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களினின்றும் தெரியவருகின்றது.   காப்பியச் சிலம்பில் சாஸ்தாவைப் பற்றிப் பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன. கனாத்திறமுரைத்தகாதையில் பாசண்டச் சாத்தன் பற்றிய குறிப்பும் வரலாறும் வருகிறது. சாத்தன் கோயிலை சிலம்பு புறம்பணையான் கோட்டம் என்கின்றது. அங்கு வழிபாடு நிகழ்தலையும், அத் தெய்வம் தம்மை அண்டியவரைக் காத்து நிற்பதையும் சிலம்பு கூறுகிறது.

மேலும் சிலம்பில், “தேவர் கோமான் ஏவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை” எனக் குறிக்கப்பட்டிருப்பது சாஸ்தாவா அல்லது அவரது பரிவார தேவதையான கருப்பண்ணசாமியா? என்பது ஆராய வேண்டியிருக்கிறது. அந்த பூதம், இந்திரனின் ஏவலால் பூமிக்கு வந்ததாகவும், நிணத்துடன் பொங்கல் முதலிய படையல்களை ஏற்றுக்கொள்வதாகவும் சிலம்பு கூறுகின்றது. மேலும் மறக்குலத்தினர் அந்தபூதத்திற்கு அவரை, துவரை போன்ற பயிர்வகைகளையும் படைத்து,மலர் தூவி, புகை எழுப்பி வாழ்த்தினர் எனக் குறிப்பிடுகின்றது. அய்யனார் மற்றும் சாஸ்தாவிற்கு பெரும்பாலும் சைவப் படையலே. கருப்பண்ணசாமிக்கே இரத்த பலி உண்டு. அதுபோல சாம்பிராணிப் புகையும், பலியும் கருப்பண்ணசாமிக்கே சிறப்பாக உரித்தானது. மேலும் வீரர்கள், வில், வேல், வாள், ஈட்டி போன்றவற்றை அந்த பூதம் முன் வைத்து வெற்றி வேண்டி வழிபட்டதாகவும் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இப்பொழுதும் கருப்பண்ணசாமி வில், வேல், வாள், ஈட்டி பலவேறு ஆயுதங்களைத் தாங்கியவராகத் தான் காட்சி அளிக்கின்றார். அந்தப் பூதம் தான் பிற்காலத்தில் கருப்பண்ணசாமியாக மாறி இருக்க வேண்டும் என்றும் அந்த பூதத்தை ஏவலாகக் கொண்ட, யானை வாகனம் உடைய இந்திரன் தான் பிற்காலத்தில் அய்யனாராக வழிபாடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருத இடமுள்ளது. அதாவது இந்திர வழிபாடே அய்யனார் வழிபாடாக மாற்றம் பெற்றிருக்க வேண்டும் என்று கருத இடமுள்ளது என வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தி ஆய்வுக்குரியது.

ஆலங்குளத்தில் அமைந்துள்ள வன்னிசெண்பகசாஸ்தா கோயிலில் சாமியாடும்போது ஒருவரின்மேல் இறைவன் இறங்கி குறி சொல்வதாக ஐதீகம் உண்டு. இதனைச் சாத்தன் வருகிறது! எனக் குறிப்பிடுவர். இக்கோயிலில் அய்யனாருக்கு இரு பக்கமும் நாகர் சிலைகளும் அமைந்துள்ளன. சாத்தனார் என்ற பெயருக்கு அய்யப்பன் என்ற அர்த்தமும் உண்டு என்கிறார் பௌத்த அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி. பத்மாசுரனை அழிக்க அவதாரம் எடுத்த விஷ்ணுவிற்கும்,சிவனுக்கும் பிறந்த குழந்தை அய்யப்பன் என்பது கதையாக வழங்கப்பட்டுவருகிறது. குழந்தையைக் கையில் அளித்தமையால் ‘கையனார்‘ என்பது அய்யனாராக மாறியிருக்கலாம் என எண்ணுவதற்கு இடம் உண்டு.

அய்யனாரின் பழமை
அய்யனாருடன் கருப்பண்ணசாமியும் இணைந்தே காணப்படுகின்றனர்.கருப்பண்ணசாமி காவல் தெய்வமாகி நிற்கின்றார்.இவர் வெள்ளைக்குதிரையில் கையில் அரிவாளுடன் ,நாய் உடன்வர,ஊரைக் காவல் செய்வதாக நம்பப்படுகிறது. அய்யனார் 218 பெயரில் உள்ளதாக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாஸ்தா என்ற தலைப்பின்கீழ் 46 பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.ஆய்வுகள் சாஸ்தா,அய்யனார்,அய்யப்பன் –இவர்கள் அனைவரும் ஒன்றே எனக் குறிப்பிடுகின்றன.

மேருமலை என்பது 82 ஆயிரம் யோசனை(காதம்) உயரம் உடையது.மேருமலை சக்கரவாள மலைத்தொடருக்கு உட்பட்ட இடம் என்றும்,வேறு சில இடங்களில் உள்ளது எனவும் பலதரப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன.1

இந்தியக்கடலுக்குள் செல்லும் 90 டிகிரி மலைப்பகுதிகளில் வைடூரிய மலை இருந்தது. அம்மலைத்தொடரின் தென்பகுதியில் தென்மதுரை இருந்தது என்றும்,சிவனுக்கும்,மீனாட்சிக்கும் பிறந்த உக்கிரகுமாரபாண்டியன் அந்த மலைத்தொடரைச் செண்டால் அடித்து இரத்தினங்களை எடுத்தான் என்று திருவிளையாடல்புராணம் கூறுகிறது. செண்டு என்பது தங்கத்தால் ஆன வளைந்த தடியின் முனயில் பந்து போன்ற அமைப்புடையது என ஆய்வுகளின்வழி அறிய இயலுகிறது. இத்தகைய செண்டினைக் கையில் ஏந்தியபடி அய்யனார் பலஇடங்களில் அமைந்துள்ளார்.அய்யனாரே உக்கிரகுமார பாணடியனா!அல்லது அதைப்போன்றே செண்டினைப் பாண்டியன் பரம்பரையினர் ஏற்று வந்துள்ளனரா என்பது சரிவரப் புலப்படவில்லை. வடநாட்டில் புட்கலாபுரம் என்ற ஊர் அமையப்பெற்றுள்ளது. இவ்வூர் தென்னன் என்ற பாண்டியனால் ஆளப்பட்டது.புட்கலை இருந்துளளமையால் இவ்வூர் அப்பெயரினைப் பெற்றிருக்கலாம். புட்கலை என்பவள் குறித்து இருவேறுபட்ட கருத்துகள் ஆய்வுலகில் இடம்பெற்றுள்ளன. சத்யபூரணர் என்ற மகரிஷியின் புதல்விகள் எனப் பூரணை,புட்கலையைக் குறிப்பிடுவர். தெய்வ அம்சம் பொருந்திய ஆணை மணக்க விரும்பிய இப்பெண்கள் இறைவனை நோக்கிக் கடுந்தவம் செய்தமையால் இறைவன் அய்யனாரை மணக்க அருள் புரிநததாக வரலாறுகள் எடுத்தியம்புகின்றன. அய்யனார் வெள்ளையானையில் இருப்பதுபோலவும்,வெள்ளைக்குதிரையில் இருப்பதுபோலவும் இருவேறு வடிவங்களில் இடம் பெற்றுள்ளார்.கொச்சியை ஆண்ட பஞ்சகனின் மகள் பூரணை எனக் குறிப்பிடப்படுவதுண்டு. புட்கலையின் தந்தை நேபாளநாட்டினைச் சார்ந்த பளிஞன் எனத் தெரியவருகிறது. இவன் சாபமிட்டதால்தான் சாஸ்தா அய்யப்பனாக அவதரித்ததாகக் கதை உண்டு. இத்தகைய பலவகைப்பட்ட செய்திகளின்வழி அய்யனாரின் பழமை தெளிவாகிறது. கற்குவேல் அய்யனாரும், மேலப்புதுக்குடியில் அமைந்துள்ள அருஞ்சுனை காத்த அய்யனாரும் சகோதரர்கள் எனப் பதிவு செயயப்பட்டுள்ள கருத்து சிறப்பானது.(H.R.Pate,tinneveli Manuel,1916)

மேலும், குறிப்பிட்ட சாதியினைச் சார்ந்தவர்கள் பங்காளிகளாக இருந்தமுறைமை குறித்தும் தெளிவாக ஆ.தசரதன் ஆய்ந்து விளக்கியுள்ளார். (அருஞ்சுனைகாத்த அய்யனார்.,தமிழ் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையம்.,சென்னை-41.,1995) தேரிமணற்குன்றுகள் உருவான கதை குறித்தும்,நன்னன் மாங்கனி கதைபோன்றே அருஞ்சுனைகாத்த அய்யனாருக்கும் கதை இருப்பதை இதன்வழிஅறிய இயலுகிறது. அக்காலத்தில் செய்த தொழிலின் அடிப்படையிலேயே மக்கள் வாழ்ந்து வந்துள்ளமையால் பிரிவுகளும் அவ்வாறே இருந்திருக்கிறது. மக்களுடைய அறியாமையினால் சாதிப்பிரிவுகள் உருவானதால் அவை குலவழிபாடுகளாக உருமாறியுள்ளதைக் காண இயலுகிறது. சோழர்கள் காலத்தில் அய்யனார் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைந்தேறியுள்ளது.இங்கு அமைந்துள்ள தேரிமணல் மிகவும் கனிமவளம் நிறைந்தது என ஆய்வாளர்களால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றே எனக் கூறினாலும் மக்கள் தங்கள் வழிபாட்டினை வேறுபாடு காட்டி அமைத்து வந்துள்ளமை புலனாகிறது.

முடிவுரை
காலமாற்றத்தினால் புவியில் ஏற்பட்டுள்ள பல  மாற்றங்களினாலும்,மக்களின் அறியாமை காரணமாக தொன்மையான ஆதாரங்களைச் சிதைப்பதாலும் பல அரிய செய்திகள் ஆய்வுலகில் இடம்பெறுவதில்லை. இதனால் மொழியின் தொன்மையினை அறிய இயலாதநிலை ஏற்பட்டுள்ளதை அறிய இயலுகிறது. மதம் என்பது மக்கள் தங்களை நல்வழிப்படுத்த ஏற்படுத்தப்பட்ட நல்ல வழிமுறை. காலப்போக்கில் மக்கள் தங்கள் வசதிக்கேற்றபடி இடப்பெயர்வாலும்,வேறுபல முறைமைகளினாலும் அவர்களது வழிபாட்டுமுறையினை மேற்கொள்கின்றனர். இதனால் மதவேற்றுமை மிகுந்து காணப்பட்டகாலத்தில் வழிபாட்டிற்குரிய இடங்களை அழித்தும் வாழ்ந்துவந்துள்ளது ஆய்வுகளின்வழி தெளிவாகிறது. அய்யனார் என்பவர் சோழர்கள் காலத்தில் வழிபாடு செய்யப்பட்டவராக இருப்பினும் காலத்தினால் மிகவும் பழமையானவர் என்பது இவ்வாய்வுக் கட்டுரையின்வழி புலப்படுத்தப்பட்டுள்ளது.

1. http://thamizhselva.blogspot.in/2014/02/), (http://thamizhan-thiravidana.blogspot.in/2010/12/17

prlakshmitamil@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard