New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொல்தமிழில் ஞாயிறு


Guru

Status: Offline
Posts: 24762
Date:
தொல்தமிழில் ஞாயிறு
Permalink  
 


தொல்தமிழில் ஞாயிறு

 

 

முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னைபரந்த உலகில் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் ஓர் அரிய முதல்வன் ஞாயிறு. அஞ்ஞாயிற்றினைத் தமிழ் இலக்கியங்கள் ஆழ்வான், இனன், உதயன், ஊழ், எரிகதிர், கதிரவன், ஒளியவன், ககேசன், காலை, தபனன், திவாகரன், தாமரை நண்பன், சூதன், சோதி, தினகரன், பகலவன், பரிதி, சூரியன், செங்கதிரோன் எனப் பல்வேறுபெயர்களில் குறிப்பிடுவதைக் காணலாம். ஞாயிற்றினை வழிபடும் வழக்கம் அதிகரித்திருப்பதற்குக் காரணம். ஆணவ இருளில் அழுந்திக் கிடக்கும் உயிர்கட்குத் தன் இன்னருள் ஒளி கொடுத்து அவ்விருளைப் போக்கி அறிவிற்கு உட்பட்ட செய்கைகளைக் கிளர்வித்து இயக்கும் இறைவனையொப்பப் புறவிருளில் மறைபட்டுக் கிடக்கும் மண்ணுயிர்த் தொகைகட்குத் தன்னொளி அளித்து கண்ணொளி விளக்கி அவற்றின் அறிவிச்சை செய்கைகளை எடுத்து இயம்புவது ஞாயிறு என்னும் பலவனே எனலாம்.

இலக்கியத்தில் ஞாயிறு
பண்டைய இலக்கியத்தில் ஞாயிறு ஒரு மகாசக்தியாகப் போற்றப்படுகிறது. அஞ்ஞாயிறு தமிழ் மக்கள் வாழ்வில் பெருமதிப்பிற்குரிய அற்புத விளக்காகத் திகழ்கிறது. வெம்மைக்கு ஞாயிறும், தண்மைக்குத் திங்களும், வண்மைக்கு வானமும் உவமிக்கப்படும் புறப்பாடல்,

“ஞாயிற்றன்ன வெந்திற லாண்மையும்
திங்களன்ன தன்பெருஞ் சாயலும்
வானத் தன்ன வண்மையும் மூன்றும்
உடைய தாகி” (புறம் 55: 13 – 16)

சிறக்குமாறு பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மருதனிள நாகனார் வாழ்த்துகிறார். இங்கு புலவர் ஞாயிற்றிற்கே முதலிடம் கொடுக்கிறார்.

“முந்நீர் மீ மிசை பலர் தொழத் தோன்றி
ஏமுர விளங்கிய சுடர்” (நற்றிணை 283: 6-7)

“தயங்குதிரை பெருங்கடல் உலகுதொழத் தோன்றி
வயங்குகதிர் விரிந்த உருவு கெழு மண்டிலம்” (அகம் 263:1-2)

இவை ஞாயிற்றினைப் போற்றும் சங்கப்பாடலாகும்.

சூரியனின் வெளிவட்டமாகிய பல லட்சம் பாகை (2,000,000 டிகிரி கெல்வின்) வெப்பமுள்ள ஒளிக்கதிர்ப் பாபத்தை ‘நெடுஞ்சுடர்கதிர்’ என்றும், தகதகக்கும் பரப்பினை ‘வெப்ப ஒளிப்படலம்’ என்றும் அதன் உட்புறமே ‘கனல் அகம்’ எனறும் இன்றைய அறிவியல் குறிக்கிறது. ஆனால் பண்டையத் தமிழ்ப்பாடலிலேயே கதிரவனின் உள்ளகம் கொதித்துக்கொண்டிருக்கும் அனற்கடல் என்பதைக் கன்னம் புல்லனார் எனும் புலவர், “ வான மூழ்கிய வயங்கொளி நெடுஞ் சுடர்க்
கதிர்காயத்(து) எழுந்(து) அகம் கனலி ஞாயிறு” (நற். 163: 9 – 10)

என்று அறிவியல் உணர்வுடன் பதிவுசெய்துள்ளார். பதிற்றுப்பத்தில் ஒளிப்புயல் வீசும் ஞாயிறுதரும் வெண்மை நிற ஒளியையும் புற ஊதாக்கதிரையும் இணைத்துக் கூறிய புலவர்,

“பசும்பிசிர் ஒள்ளழல் ஞாயிறு” (பதிற் 7: 5 – 6)

எனும் இலக்கியச் சொல்லால் சுட்டுவதைக் காணமுடிகிறது. தாலமியின் ‘பூமி நாயகக் கொள்கை’ க்கு எதிர் முழக்கமாகப் பிற்காலத்து நிறுவப்பட்ட கெப்ளரின் ‘ஞாயிறு’ நாயகக் கொள்கையானது,

“வாழ் நிற விசும்பில் கோள்மீன் சூழ்ந்த
இளங் கதிர் ஞாயிறு” (சிறுபாண். 242 – 243)

எனும் சங்க இலக்கியப் பாடலுக்கு உள்ளுறைப் பொருளாக ஒலிக்கக் காண்கிறோம். இதன்மூலம் தமிழர்கள் ஞாயிற்றிற்கு அளித்த முக்கியத்துவம் விளங்கும்.

ஞாயிறு வழிபாடு
நமக்கும்   மேல்   ஏதோ   ஒரு மகத்தான   சக்தி   உண்டு   என்பது மட்டும் நமக்கு   தெரிகிறது. அதற்கு   கடவுள்   என்று   பெயர் சூட்டியுள்ளோம். இதுதான்   கடவுள் என்று   குறிப்பிட்டு  சொல்ல  கடவுளுக்கு எந்த  வடிவமும்  கிடையாது. அனைத்து உருவங்களும்  மனிதனால்  உருவாக்கப்பட்டவை  தான். எப்படி காற்றை   நம்மால்   பார்க்க முடியாதோ அதே போல் கடவுளையும்  நம்மால்  பார்க்க முடியாது . அதை  உணரத்தான்  முடியும். இன்று  கோயில்களில்  காணப்படும் அதிகப்படியான   கூட்டம்   நமக்கு எதை   உணர்த்துகிறது   என்றால்  மக்கள்   மனத்தில்   ஏற்ப்பட்டுள்ள
பயத்தை   காட்டுகிறது . நாட்டில் தவறுகள்  பெருக  பெருக , அதை  மறைக்க  மனிதன்  கடவுளை நாடுகிறான் . பிரார்த்தனை, வேண்டுதல்கள்  மூலம்  அதை
நிறைவேற்றிக்  கொள்கிறான். கோயிலுக்கு  செல்லும்   அனைவரும்
ஏதாவது  ஒரு  கோரிக்கையுடன் தான்   செல்கிறோம் . அவ்வகையில் ஞாயிறு வழிபாடு மக்களிடத்தில் முக்கியத்துவம் பெற்றுத்திகழ்கிறது.

உலகம் எல்லாம் ஏதோ ஒரு வகையில் சூரிய வழிபாடு இருந்தது என்றாலும் இந்துக்கள் மட்டும் தான் ஞாயிற்றைத் தனிப்பெரும் கடவுளாக வழிபட்டனர். அஞ்ஞாயிற்றைத் தமிழர்கள் மாபெரும் கடவுளாகப் போற்றியதில் மேலோங்கி சிறப்பிடம் பெறுகின்றனர். பரந்து விரிந்தும் சர்வத்திற்கும் சாட்சியாகவும் அஞ்ஞான இருளை போக்குவதாகவும் கால தேச வர்த்தமானத்தால் பாதிக்கப்படாததாகவும் எழுந்து நிற்பது ஞாயிறு.

ரிக் வேதம் சூரியனை அக்னியின் முதல்வன் என்று போற்றுகிறது.

யசூர் வேதம் சகல உலகத்தையும் காப்பவன் என்று பாடி பணிகிறது.

சாம வேதம் உலகத்தை ஒளிர்விப்பவன் என கீதம் இசைக்கின்றது.

சதபத பிரம்மானம் சூரியனை சோதி பிழம்பு என்றும் தங்க ஆரங்களால் ஆன வட்டம் எனவும் வியந்து போற்றுகிறது.

பவிச புராணம், பிரம்ம புராணம், வராக புராணம், மச்ச புராணம், அக்னி புராணம், கருட புராணம், பவிசோதிர புராணம், காளிகா புராணம், மார்க்கண்டேய புராணம் ஆகிய பழம்பெரும் புராணங்களில் சூரிய வழிபாட்டின் மேன்மைகள் விவரிக்கப்படுகின்றன.

முருகனின் தோற்றமும் பெருமையும் கூறும் நக்கீரப்பெருமான்,

“உலகம் உவப்ப வலனேர்பு திருதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு
ஓவற விமைக்கும் சேணவிளங் கவிரொளி” (திருமுருகு:1 – 3)

என்று செவ்வேல் குமரனுக்குப் பரிதியை உவமை கூறினார். மேலும் ஞாயிறு இல்லையென்றால் ஒளியில்லை, வளியில்லை, முகிலில்லை, மழையில்லை, புனலில்லை, பயிரில்லை, உடம்பில்லை, உணர்வில்லை, மகிழ்ச்சியில்லை சொல்லப்போனால் ஒன்றுமே இல்லை. அதனாலேயே ஞாயிற்றினை மக்கள் கண்கண்ட தெய்வமாகப் போற்றுகிறார்கள்.

கதிரவனை வழிபடும் வழக்கம் தமிழகத்தில் எக்காலத்தில் தோன்றியது என்று அறுதியிட்டு கூற முடியாது. பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே தோன்றிய ‘தமிழரின் சேமவைப்பு’ எனப்படும் தொல்காப்பியத்தில்,

“கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றுங்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” (தொல்.பொருள்.புறம்,நூ-33)

எனச் சொல்லப்படுவதால் இந்நூல் தோன்றுவதற்கு வெகுகாலத்திற்கு முன்பே கதிரவனை வழிபடும் வழக்கு இருந்திருக்க வேண்டும் என்பது நன்கு தெளிவுபடுத்துகிறது.

தொல்காப்பிய அகத்திணையியலுக்கு உரைகூறும் நச்சினார்க்கினியர், சூரியனை “எல்லா நிறத்திற்கும் பொதுதெய்வம்” என்று கூறுகிறார்.

இறையனார்களவியல் உரையில் அதன் ஆசிரியர், “தொல்காப்பியனார் பாலைக்கு நிலம் வேண்டிற்றிலர்; வேண்டாமையின் தெய்வமும் வேண்டிற்றிலர். பிறர் பகவதியையும், ஆதித்தனையும் தெய்வம் என்று வேண்டுவர்”. என்று கூறுகிறார்.

மேற்கண்ட இரு வேறு நூல்களும் ஞாயிற்றினை வழிபடும் வழக்கம் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது என்பது மேலும் வலுப்பெறும்.

தென்னிந்திய கல்வெட்டுத் துறை 1926-27ஆம் ஆண்டின் அறிக்கையில், முதல் குலோத்துங்கன் காலத்திலிருந்துதான் [கி.பி.1070-1120] தமிழகத்தில் ஞாயிற்றினை வழிபடத் தொடங்கினார்கள் என்று கூறுகிறார்கள். இக்கருத்து பொருந்துவதாக இல்லை. இதனை நிரூபிக்க முந்தைய சான்றுகளே போதுமானவை.

முதல் குலோத்துங்கனுக்கு நெடுஆண்டு முந்தித் தோன்றிய நூல்களுள் நற்றிணையும் ஒன்று இதில்,

“பசுங்கதிர் மதியமொடு சுடர்கண்ணாக” (நற்,கடவுள் வாழ்த்து.4)

என்று சுட்டப்பட்டுள்ளது. இளங்கோவடிகள் தனது சிலப்பதிகாரப் பாட்டிலே,

“ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்” (சிலம்பு.மங்கலவாழ்த்து.4)

எனப் போற்றி வணங்கியுள்ளார். இந்நூலின் உரையில் அடியார்க்கு நல்லார்,

“பாலைக்குத் தெய்வம் பரிதியஞ் செல்வனும்
திகரியஞ் செல்வியுமெனக் கொள்க”

என்று குறிப்பிடுகிறார். தேவாரப் பாடலில் அப்பர் பெருமான் குறிப்பிடுகையில்,

“அருக்கன் பாதம் வணங்குவ ரந்தியில்
அருக்கரைனுரு வல்லனோ”

எனச் சொல்வதால் ஞாயிற்றை வழிபடும் தொன்மை தெளிவுபெறும்.

முத்தமிழ் காப்பியமாகப் போற்றப்படும் சிலப்பதிகாரக் கானாத்திறமுரைத்த காதையின் பாடலடியில்,

“பகல் வாயிலுச்சிக் கிழான் கோட்டம்”(சிலம்பு,கானா.உ.கா: 10-11)

என்று பயின்றுவருகிறது. இங்கு ஒரு கோயில்பெயர் உள்ளது. உச்சிக்கிழான் என்பவன் சூரியன்,

“பகல்வாயில் உச்சிக்கிழான் என்பது பகல்பொழுதுக்கு வழியான
உச்சிக்கிழான்” – சிலப்பதிகாரம்: அரும்பதவுரையாசரியர் உரை.

“கீழ்த்திசையில் தோன்றுகின்ற சூரியன் கோயில்”
– சிலப்பதிகாரம்: அடியார்க்கு நல்லார் உரை.

இதன் மூலம் முதலாம் குலோத்துங்க சோழனுக்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பே ஞாயிறு வழிபாடு இருந்தது விளங்கும்.

பழைய தஞ்சை மாவட்டத்திற்குற்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தின் காவிரி ஆற்றங்கரையில் நவக்கிரக கோயில்கள் கிராமந்தோறும் ஒவ்வொரு கோயிலாக அமைந்துள்ளது. வடஇந்தியாவில் ஞாயிற்றிற்கு பல கோயில்கள் உள்ளன. ஆனால் தென்னிந்தியாவில் ஞாயிற்றிற்கு ஒரேயொரு கோயில் மட்டுமே உள்ளது. அதுவே சூரியனார்கோயில் ஆகும். இக்கோயில் கல்வெட்டில்,

“குலோத்துங்க சோழ மாத்தாண்டாலையத்து சூரியதேவர்”

என்று எழுதப்பட்டுள்ளது. இதன்மூலம் குலோத்துங்க சோழனுக்கு முற்பட்ட காலத்திலேயே இக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது என்பது புலனாகும்.

காலம் தவறாது தொடர்ந்து ஞாயிறு தோன்றுவதும், மறைவதும் தடைபடாது நிகழ்வித்து பல்வகை உயிரினங்களையும் காப்பாற்றி வருவதால் மானிட உலகில் ‘ஞாயிறு’ ஒரு மகாசக்தியாக விளங்குகிறது. ஈடு இணையில்லா ஞாயிற்றின் அருமை தெரிந்த தமிழர்கள் அதற்கென நன்றி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் தை மாதம் ஒன்றாம் தேதி தமிழர்கள் சூரியப்பொங்கலாகக் கொண்டாடி வருகின்றனர். பொங்கல் வைக்கும் முன் கிழக்கே உதயமாகும் சூரியனை வணங்கி, பொங்கல் சமைப்பர் பால் பொங்கி வரும்போது ஓங்கிய குரலில் “பொங்கலோ பொங்கல்” என்று ஞாயிற்றுக்கு கேட்குமாறு சத்தமிட்டு நன்றி செலுத்தி வணங்கி மகிழ்வர். மேலும் ஞாயிற்றினை தமிழ் இலக்கியங்களிலும் ஓர் நீங்காப் பாடுபொருளாகத் தமிழறிஞர்களும், புலவர்களும் பாடி வந்துள்ளனர். இதன் வழி தமிழர்களின் வாழ்வில் ஞாயிறு மேலான சிறப்பிடம் பெற்றுத் திகழ்வது தெள்ளென விளங்கும்.

துணைநூற்கள்
பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும், உ.வே.சா பதிப்பு, திராவிடாத்தாசர அச்சுக்கூடம். 1889.
சங்க இலக்கியம் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும், சைவசித்தாந்த மகாசமாஜம், சாது அச்சுக்கூடம், சென்னை. 1940.
இறையானாரகப்பொருள், ச. பவானந்தம்பிள்ளை, பவானந்தர் கழகம். 1939.
சிலப்பதிகாரமூலமும் அரும்பதவுரையும் அடியாயார்க்கு நல்லாருரையும் உ.வே.சா பதிப்பு, தமிழ்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.1985.
அப்பர் தேவாரம், ஆறுமுக விலாச அச்சுக்கூடம், சென்னை.1898.

drmaha08@gmail.com

* கட்டுரையாளர் - - முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113 -



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard