New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொல்தமிழர் நாகையும் நாகூரும்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
தொல்தமிழர் நாகையும் நாகூரும்
Permalink  
 


தொல்தமிழர் நாகையும் நாகூரும்

 

 


நாகை மாவட்டம் ஆன்மீகத்திலும் தொன்மைச் சிறப்பிலும் பேறுபெற்ற ஓர் பகுதியாகும். இங்குள்ள நாகூரும் நாகையும் பிரிக்க முடியாத அங்கமாகத் திகழ்கிறது. நாகூர் ஓர் இசுலாமியத் தலமாக இருப்பினும் அனைத்துச் சமயத்தினருக்கும் பொதுமையாக விளங்கி வருவது இதன் தனிச்சிறப்பாகும். தமிழுக்கும் இசுலாத்திற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தொடர்பு இருந்து வருகிறது. ஈசாநபி சகாப்தம் ஆரம்பமாவதற்கு முன்பிருந்தே அராபிய வர்த்தகர்களுக்கும் தென்னிந்தியா, இலங்கை, சீனா போன்ற கீழைத் தேயங்களுக்கும் இடையிலான தொடர்பு ஆரம்பமாகிவிட்டது என்பதனை வரலாற்றாசிரியர்கள் நிறுவுகின்றனர். (நூர்மைதீன், வ.மு.அ. (உ.ஆ) நெஞ்சையள்ளும் நாகையந்தாதி, ப.9) சங்ககால இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்றவற்றில் அவ்வுறவு மக்களைக் குறிப்பதற்கு ‘யவனர்’ என்னும் பதம் பயன்படுத்தப்பட்டது. நாம் இன்று அறிந்துள்ள வரையில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்புதான் இசுலாமியப் புலவர்கள் தமிழில் நூல்கள் இயற்ற ஆரம்பித்தனர். இப்பகுதியில் ஆங்காங்கே பல தர்காக்கள் இருப்பினும் காவிரிச் சமவெளியில் உள்ள நாகூர் தர்காவே புகழ்பெற்ற தர்காவாகவும் இசுலாமியர்களுக்கு இந்தியாவில் ஒரு புனித தலமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் காவிரிக் கரையோரத்து நாகையும் நாகூரும் பற்றி ஆராய்வோம்.

நாகூர் ஆண்டவர்

வடநாட்டில் அலகாபாத் என்னும் பிரயாகை நகரின் பக்கத்திலுள்ள மாலிக்காபூரில் சையது அப்துல் காதிறு ‘சாகுல் ஹமீது நாயகம் பிறந்தார்.(குலாம் காதிறு நாவலர், கர்ஜூல் கராமத்து, ப.4) இவர் ஆற்றிய சமயப்பணி பாராட்டிற்குரியது. இவரை நல்லடக்கம் செய்த இடம் இதுவே. நாகூரில் வாழ்ந்து மறைந்து நாகூரிலேயே அடக்கமாகி இருக்கும் இறைநேசச் செல்வரின் வாழ்நாள்காலம் 1490-1579 என்று பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

நாகூர் ஆண்டவர் என அழைக்கப்படும் சாகுல் ஹமீது பாதுஷா நாகூருக்கு வந்த பொழுது முதன்முதலில் அவரை வரவேற்று குடிசைப் பகுதியில் தங்க வைத்தது மீனவர்கள். இதனால் நாகூர் ஆண்டவர் தர்காவிற்கும் மீனவர்களுக்கும் காலம் காலமாக பிணைப்பு இருப்பதோடு, முதல் மரியாதையும் வழங்கப்படுகிறது. நாகூர் தர்காவிற்கு இடம் கொடுத்ததும் பெரிய மினராவை அதாவது கோபுரத்தைக் கட்டியதும் சரபோஜி மன்னர் காலத்தில் தான். நாகூர் தர்கா இசுலாமிய தலமாக இருந்தாலும் இங்கு அதிகம் வந்து வழிபடுபவர்கள் இந்துக்களே. ஆகையால் இந்துக்கள் வழிபாட்டு முறைப்படி வழிபாடுகளும் நடைபெறுகின்றன. நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழாவில் கொடி ஊர்வலத்தின் போது செட்டியார் சமுகத்தை சேர்ந்த செட்டி பல்லாக்கு இடம்பெறும். நாகூர் ஆண்டவர் சமாதியின் மீது போர்த்தப்படுகின்ற சால்வை பழனியாண்டி பிள்ளை என்ற பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர்களின் வாரிகளே இன்றளவும் வழங்கி வருகின்றனர். 

ஓவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள் இரவு தர்காவில் தங்கிவிட்டுச் செல்கின்றனர்.. ஹமீது காதிர் நாயகம் மறைந்த நினைவு நாளை முன்னிட்டு ஆண்டு தோறும் கந்தூரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த கந்தூரி விழா கடந்த பிப்ரவரி 17 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும். ஆண்டுதோறும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நாகூரில் உள்ள அபிராமி அம்மன் கோயில் திருவாசலிலிருந்து தாரைதப்பட்டையுடன் புறப்படும். முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் வரும்போது, இருபுறங்களிலும் திரளான மக்கள் கூடி நின்று ரதத்தின் மீது மலர்களைத் தூவி பிரார்த்தனை செய்வர்இதில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மத வேறுபாடின்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிப்பர்.

நாகை நகர்

கடல் வணிகத்தைப் பற்றி சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை, தேவாரப் பாடல்கள் குறிப்பிடும் அத்தனை சிறப்புக்களும் ஒரு நிமிடம் நம் கண்முன் காட்சிகளாய் விரிகின்றன. முழுநேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் துறைமுகம். இரவிலும் வெளிச்சத்தை உமிழ்ந்துக்கொண்டு தூங்காத நகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிங்கார மாநகர் இந்த நாகை மாநகர்.

பழங்காலத்து நாகை, ஆயுதமேந்திய காவலர்களால் (“சேண்தார் புரிசைதார்” என்றால் இங்குப் படை என்று பொருள்) கண்காணிக்கப்படும் கடலோரப்பகுதிகள்; பகர்னர்கள் (வியாபாரிகள்) மையம் கொண்டிருக்கும் வியாபார கேந்திரம். “பப்பரர் யவனர் சீனர் சோனகர் முதல பல்லோர்” என்று கம்பன் உரைத்தானே அதுபோன்ற ஒரு Multi-cultural, Multi-Ethnic, Multi-lingual நகரமாகத் திகழ்ந்தது. வெளிநாட்டு பொருட்களும் உள்நாட்டு பொருட்களும் ஏற்றுமதி, இறக்குமதி ஆகின்ற காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும். ஆனை தந்தம், பட்டு நூலிழை, வெற்றிலை, வெட்டிவேர், கனகம் (தங்கம்) , கற்பூரம் வர்த்தகம் பெருமளவில் நடைபெற்றது. மேற்கு மலையிலிருந்து அகிலும் சந்தனமும் தென்கடலிலிருந்து முத்துக்கள், மேற்கடலிலிருந்து பவளம் முதலியன வந்திறங்கும். உரோம நாடுகளிலிருந்தும் அராபிய நாடுகளிலிருந்து பொதிகள் வந்திறங்கும். இவைகளை மீண்டும் கடாரம் (மலேயா), சீனம், சுமத்திரா, ஜாவா தீவுகளுக்கு மறுஏற்றுமதி செய்து வாணிபம் புரிந்தது நம் தமிழர்களே. 

பெரும் பெரும் மலைகள் கடலில் மிதந்து போவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். எவ்வளவு ஒரு பிரமாண்டமான காட்சியாக இருக்கும்? இதைத்தான் “வரையார்வன போல வளரும் வங்கங்கள் கரையார் கடல் நாகை” (1.84.7) என்று பாடுகிறார் திருஞானசம்பந்தர். “வங்கம்” என்றால் பெரியவகை கப்பல்களைக் குறிக்கும். நாகை வணிக செயல்பாடுகளுக்காக இரவிலும் ஒளி உமிழ்ந்து கொண்டிருந்தது. அனைத்து வகை கப்பல்களும் நாகைவழியே வந்துதான் பின்னர் கீழைநாடுகளுக்கு தங்கள் பயணங்களை மேற்கொண்டு தொடர்ந்தன. பண்டங்களைச் சுமந்து கொண்டு வரிசை வரிசையாய் வந்து நிற்கும் பொதிவண்டிகள் முதலியன நாகையைச் சுறுசுறுப்பு வணிக மையமாக செயல்பட வைத்தன. தௌ-இ-சிலு போன்ற சீன மொழிக் குறிப்புகளிலும் நாகப்பட்டினத்தின் துறைமுகச் சிறப்புகள் பேசப்படுகின்றன. “சோழர் காலத்தில் தமிழகத்தின் மிகத் முதன்மையான பன்னாட்டுத் துறைமுகமாக இருந்துள்ளதையும் தொடர்ந்து ஐரோப்பியர் காலம்வரை இவ்வூர் வரலாற்றுச் சிறப்புப் பெற்ற இடமாக விளங்கியதையும் சான்றுகளின் வாயிலாக அறியமுடிகிறது” என்று முனைவர் பா.ஜெயக்குமார் தனது “தமிழகத் துறைமுகங்கள்” (2001) என்ற நூலில் சுட்டுவதைக் காணமுடிகிறது.

வடநாகை (நாகூர்)

காவிரிபூம்பட்டினம்(பூம்புகார்) எப்படி மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்று இரு பிரிவுகளாக இருந்ததோ அதே போன்று நாகூரும் நாகப்பட்டினமும் வடநாகை, தென்நாகை என்று இரண்டு பிரிவுகளாக இருந்தன. வடநாகைக்கும் (நாகூர்) தென்நாகைக்கும் (நாகப்பட்டினம்) இடையே, ஊரின் குறுக்கே அமைந்திருந்த சிந்தாறு, தற்போது பார்ப்பனர்சேரி என்று அழைக்கப்படும் இந்த இடத்தில்தான் அக்காலத்தில் மறையவர் அகரம் அமைத்து (அக்ரகாரம்) வாழ்ந்தனர். பிறகு இது காலப்போக்கில் இது “பால்பண்ணைச்சேரி” ஆகி விட்டது. நாகூரில் வெட்டாறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் இயற்கையாகவே துறைமுகமாக இயங்குவதற்கான அத்தனை அடிப்படை வசதிகளையும் கொண்டிருந்தது. நாகூர் வெட்டாறுக்கு அருகாமையிலிருக்கும் பகுதிகள் வர்த்தக சேமிப்பு கிடங்குகளாக செயல்பட்டன. பண்டக சாலை, கல்பண்டக சாலை என்று பெயர் தாங்கி நிற்கும் வீதிகள் அழிந்துப்போன வர்த்தகச் சுவடுகளின் எச்சங்களாக இன்றும் காட்சி தருகின்றன..“கரி பரித்தொகை மணி துகில் சொரிவதாம் காலத்தால்” என்று இங்கு நடைபெறும் வாணிபத்தைக் குறித்து சேக்கிழார் தனது அதிபத்த நாயனார் புராணத்தில் கூறுகின்றார்.(3994-8.4.3.)

தற்பொழுது நெல்லுக்கடைத் தெரு என்று அழைக்கப்படும் வீதி “வாணியத் தெரு” என்று அழைக்கப்பட்டது. வாணிபத் தெரு என்பதின் மறுபெயர்தான் இது. அரவை மில்களும் செக்கு எண்ணெய்ஆலைகளும் இருந்த இத்தெருவில் வீதி முழுவதும் போரடித்த நெற்களைப் பரப்பி வைத்திருப்பார்கள். “ஆண்டி குளம்” இக்குளத்தில்தான் தென்நாகைக்கு செல்லும் வழியில் ஆண்டிப் பண்டாரங்கள் குளித்து ஓய்வெடுப்பார்கள். ஆண்டி குளத்திற்கும், தர்கா குளத்திற்கும் அடித்தளத்தில் தொடர்புக் குழாய்கள் உள்ளன என்பது ஒரு கூடுதல் தகவல். நாகூர் துறைமுகத்திலிருந்து சங்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தன. சங்குகளில் பலவகையுண்டு. மணிசங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண்சங்கு, பூமா சங்கு, வலம்புரிச் சங்கு - இதுபோன்று பலவகைகள் உண்டு. இவையாவும் தெற்குத் தெருவின் ஒரு பகுதியில் மெருகேற்றல் செய்யப்பட்டன. இக்குறுகிய வீதி “சங்கு வெட்டி சந்து” என்ற பெயரில் இன்றளவும் விளங்கி வருகிறது.

கி. பி. 1794இல் இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு வியாபாரப் பிரதிநிதியாக கல்கத்தாவில் பணிபுரிந்தார் மீரா நயினா என்ற பிரமுகர். நாகூர் துறைமுகம் வழியே இலட்சக்கணக்கான சங்குகள் வங்காளத்திற்கு ஏற்றுமதி ஆனதற்கான அரசு ஆவணங்கள் உள்ளன. வங்காளத்தில் இருந்து திரும்பும் தோணிகளில் அந்த நாட்டு, அரிசி, சீனப்பட்டு, கண்ணாடிச்சாமான், லஸ்தர் விளக்குகள் போன்ற புதுமைப் பொருட்கள் நாகூர் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன நாகூர் துறைமுகத்திலிருந்து ஏற்றுமதியான பிரதான பொருட்கள் கைத்தறித்துணிகள், சங்கு, உப்பு, நெல், கருவாட்டு சிப்பங்கள் தென்னங்கீற்றுகள் முதலியன. இசுலாமிய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலரில் அமீர் அலி என். கேப்டன் எழுதிய ஆய்வுக்கட்டுரையில் இதுபோன்ற பல அரிய தகவல்கள் காணக் கிடைக்கின்றன.

நாகூர் ஆண்டகை நாகூர் வந்து சேருவதற்கு முன்பே இசுலாம் மார்க்கம் இப்பகுதியில் நன்கு தழைத்திருந்தது. ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர், சோழர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்த காலத்தில் தமிழர்களை ‘சூலியா’ (சோழியன் அதாவது சோழநாட்டான்) (Chulia) என்று அழைத்திருக்கின்றனர். சீனப்பயணிகள்கூட ‘Chu-Li-Yen’ என்று குறிப்பிட்டுள்ளனர். தமிழ் முசுலீம்களை சோனகர் என்றும் அழைத்தனர். ஆனால் பிற்காலத்தில் நாகூர் நாகப்பட்டினத்திலிருந்து வந்த தமிழ் முசுலிம்கள் அனைவரும் இச்சொல்லால்தான் அடையாளப்படுத்தப்பட்டனர். இந்த சோழியர்கள் அந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து துணிமணிகள், யானைத்தந்தம், அரிசி, கோதுமை முதலியவற்றைக் கொண்டுவந்து விற்றுவிட்டு, அதற்குப் பதிலாக மிளகு, தகரம், பீங்கான், வாசனைத்திரவியம், பொன் முதலியவற்றை வாங்கிச் சென்று வியாபாரம் செய்து வந்தனர். கி.பி 15 நூற்றாண்டுவாக்கில் மலாயாவில் மலாக்கா நகரம் வணிகச் சந்தையாக சிறந்து விளங்கியது. Chulia Street என்னும் வீதி இன்னமும் காணப்படுகிறது. சீனர்களின் வியாபார கேந்திரமாகவும் திகழ்ந்து வந்ததற்கான ஆதாரங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. தென்னிந்திய வரலாற்று ஏடுகளிலேயே “பகோடா” எனப்படும் சீனர்களின் புத்த ஆலயம் காணப்பட்ட ஒரே ஸ்தலம் நாகூர் மற்றும் நாகப்பட்டினம்தான் என்பது சிறப்பிற்குரியது.

சீனப்பயணி யுவான் சுவாங் நாகூர் வந்துள்ளார். நாகூரைப் பற்றியச் சிறப்புகளைத் தன் பயண அனுபவ நூலில் குறிப்பிட்டுள்ளார். மிகவும் ஆச்சரியப்படுத்தும் செய்தி என்னவெனில் நூறு புத்த மடங்களும் பதினாறாயிரம் புத்தத் துறவிகளும் இப்பகுதியில் வசித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாகூரில் தங்கியிருந்த சீனவணிகர்கள் தங்கள் நாட்டு கல்தச்சு இலக்கணத்திற்கு ஏற்ப இங்கு ஒரு கோயிலைக் கட்டியுள்ளதாகக் குறிப்பு காணப்படுகிறது. இதனை கோபன் நேபார் என்ற மேல்நாட்டு அறிஞரும் தேமாலே என்ற வரலாற்று ஆசிரியரும் பதிவு செய்துள்ளமை அறியத்தக்க செய்தியாகும். வட இந்தியாவில் எப்படி நாளந்தா நகரம் கல்வியின் மையமாகத் திகழ்ந்ததோ அதுபோன்று தென்இந்தியாவில் நாகை அந்நாளில் பெயரோங்கி விளங்கியது. எங்கெங்கு காணினும் கல்வி நிலையங்கள். “கற்றோர் பயில் கடல் நாகைக் காரோணம்“ என்ற ஞான சம்பந்தரின் பாடலிலிருந்து இப்பகுதி மக்களின் கல்வித்தரம் நன்கு புலப்படும்.

அகழாய்வு ஆவணங்கள்

பழங்கற்காலம் தொடங்கி புதிய கற்காலம், பெருங்கற்காலம் சங்க காலம், பல்லவர் காலம், சோழர் காலம் அனைத்துக் காலத்துத் தொல்லியல் ஆதாரங்கள் நாகையில் கிடைத்துள்ளன. 2009ஆம் ஆண்டு தொல்லியல் துறை நாகப்பட்டினத்தில் அகழாய்வு மேற்கொண்டபோது நிறைய அகழாய்வு பொருட்கள் கிடைக்கப் பெற்றன. முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. நாகை நீதிமன்ற வளகாத்தில் நான்கு சதுர மீட்டர் பரப்பளவில் அகழாய்வு மேற்கொண்டதில் 2000 ஆண்டுகளுக்குரிய பண்பாட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. வெண்களிமண்ணாலான புகைபிடிப்பான்கள், 1753 வருடம் பொறித்த டச்சு செம்புக்காசுகள், 16ஆம் நூற்றாண்டு சீனக்களிமண் சில்லுகள், Porcelene சில்லுகளில் மசூலா படகுகளின் உருவமும் தோணிகளின் உருவமும் பொறிக்கப்பட்டிருந்தன. இவ்வகழாய்வில் சோழர் காலக் கூரை ஓடுகள், பானை ஓடுகள் கிடைத்ததோடு ‘ஸ்ரீராஜராஜ’ எனப் பெயருடன் சோழப் பேரரசன் முதலாம் இராசராசனின் செப்புக்காசு ஒன்றும் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 300 மேலான பெளத்த படிமங்கள் நாகையில் கண்டுபிடிக்கப்பட்டன. சென்னை அருங்காட்சியகம், நியூயார்க் நகரத்திலிருக்கும் ராக்ஃபெல்லர் சென்டர் போன்ற இடங்களில் இவைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.

இலக்கியப் பதிவுகளில் நாகை

நாகப்பட்டினத்தின் பழைய பெயர் என்ன என்பதை ஆராய்ந்து வெளிப்படுத்துவது அவசியமான ஒன்றாகும். பூம்புகார் கடலால் கொள்ளப்படுவதற்கு முன் நாகப்பட்டினத்தின் பெயர் “நீர்பெற்று”. சோழர்களின் ஆட்சியின்போது இதன் பெயர் “சோழகுலவல்லிப்பட்டினம்” ராசராசசோழன் ஆட்சியில் “சத்திரிய சிகாமணி” என்றிருந்தது. “நாவல் பட்டினம்” என்ற மற்றொரு பெயர்க்காரணம் மிகவும் சுவையானது. “நாவல்” என்ற சொல் “நாவாய்” என்ற வார்த்தையிலிருந்து உதித்தது. Navy, Naval முதலிய ஆங்கில வார்த்தைகள் “நாவாய்” என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து பிறந்ததுதான். பட்டினம் என்றால் கடற்சார்ந்த ஊர். நாவல் பட்டினம் என்றால் கப்பல் நகரம்.

நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் கண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ ! (புறம்.66)

மேற்கண்ட புறநானூற்றுப் பாடலில் “நாவாய்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் காணலாம். யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள ஒரு இடத்தின் பெயர் நாவாந்துறை (நாவாய்+துறை) புத்த இலக்கியங்களில் இதன்பெயர்”படரிதித்த” என்பதாகும். பாலி மொழியில் பதரி என்றால் இலந்தை என்று பொருள். (அதுதாங்க ஜூஜூபி). பதரி திட்டா என்றால் இலந்தை செறிந்த மேட்டு நிலம் என்று பொருள். பதரிதிட்டா என்ற சொல் படரிதித்த என்று காலப்போக்கில் மருவிப் போனது.

நாகங்கள் மிகுந்த பகுதியாக இருந்ததால் இது “நாகப்பட்டினம்” என்றும், நாகமரம் (புன்னை மரம்) மிகுதியாக காணப்பட்டதால் இது நாகப்படினம் என்றும் பெயர் பெற்றதாக பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. நாகர் இன மக்களுக்கும் இவ்வூருக்கும் இருந்த நெருங்கிய தொடர்பின் காரணமாக இவ்வூர் நாகர்பட்டினம் (நாகர்+பட்டினம்) என்று அழைக்கலாயிற்று என்று ரா.பி.சேதுப்பிள்ளை தனது “தமிழகம் ஊரும்பேரும்” என்ற நூலில் குறிப்பிடுகிறார். “நாகப்பட்டினம்” என்று சொல்வதைக் காட்டிலும் “நாகபட்டினம்” என்று சொல்வதே மிக்க பொருத்தமாகும். நாக்கில் வசம்பு வைத்து தேய்த்தாலும் திருந்தாத டச்சுக்காரர்களில் வாயில் இந்த ஊர் “நேகபேட்டன்” என்று அல்லல் பட்டது தொலமி (Ptolemy) என்ற கிரேக்க அறிஞர் இதனை “நிகாம்” என்றும் “நிக்காவ்வா” (Nikawa) என்றும் அழைக்கிறார். 

நெகமா, நாகானனை, நாகநகரம் என்று புத்த நூல்கள் கூறுகின்றன.

நெகபட்டன் என்று போர்த்துகீசியர்கள் குறிப்பிடுகிறார்கள்

நாகவதனா (Nagavadana) என்று சீனப்பயணி யீஜிங் (Yijing or I-tsing) அழைக்கிறார்.

மலிபட்டான் (Mali-pa-tan) என்று இரச்புத்தீன் அழைக்கிறார்.

நவுட்டபட்டனா (Navwttapattana) என்று கலியாணிப் பட்டயம் கூறுகிறது.

நெகபெட்டாம் (Negapettum) என்று ஆங்கிலேயர்கள் குறிப்பிடுகின்றனர்.

மகேந்திரவர்மன் பல்லவன் காலத்தில் (604-630) வாழ்ந்த அப்பர் திருநாவுக்கரசு நாயனார் “வங்கமலி கடல் நாகை” (தேவாரம் 4.108) என்றே குறிப்பிடுகிறார். அவர் நாகை என்று குறிப்பிடுவது நாகூர், நாகப்பட்டினம் இரண்டு ஒன்றிணைந்த பேரூரை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நாகநாதர் கோயிலில் காணப்படும் கல்வெட்டிலும் “நாகை” என்ற பெயரையே காண முடிகின்றதுவங்கம் என்றால் பெரியவகை கப்பல்களைக் குறிக்கும். கப்பல் என்பதற்கு சங்கத்தமிழில் அம்பி, நாவாய், வங்கம், படகு, தொணி, பங்றி, திமில் என்ற பல்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. வங்கம், நாவாய் இவையிரண்டும் பெரியவகை கப்பல்கள் என்பது சுட்டத்தக்கது..

அப்பர் “நாகை” என்றுதானே குறிப்பிடுகிறார். இதில் நாகூர் எங்கிருந்து வந்தது என்ற கேள்விகள் எழலாம். நியாயமான கேள்வி. மேற்கொண்டுபடித்தால் நாகூரும் நாகையும் வெவ்வேறல்ல என்பது நன்கு விளங்கும். அடுத்து திருஞான சம்பந்தர் என்ன கூறுகின்றார் என்று பார்ப்போம். “வரையார்வன போல வளரும் வங்கங்கள் கரையார் கடல் நாகை” என்று பாடுகிறார்.(1.84.7). பெரிய மலையொன்று கடலில் மிதந்து போவதாக கற்பனை செய்துக் கொள்ளுங்கள். எவ்வளவு பிரமாண்டமான காட்சியாக இருக்கும்? பெரிய கப்பல்களாகிய வங்கம் மலைபோல் நகர்ந்தன என்கிறார் திருஞானசம்பந்தர். சுந்தரர் பாடிய பாடல்களில் யாவும் நாகையை தென்நாகை என்றே குறிப்பிடுகிறார். இதற்கு உதாரணமாக கீழே பத்து பாடல்களை உதாரணம் காட்டியிருக்கிறேன். சுந்தரர், பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 840 – 865) காலத்தைச் சேர்ந்தவர்.

துன்னா மயூரம் சோலைதொறும் ஆட, தூரத் துனைவண்டு
தென்னா என்னும் தென்நாகைத் திருக்காரோணத்து (சுந்தரர், தேவாரம் 7.101.1)

முரைக் கை பவளக்கால் காட்ட மூரி சங்கத்தொடு முத்தம்
திரைக்கை காட்டும் தென்நாகை  (சுந்தரர், தேவாரம் 7.101.2)

முல்லை முறுவல் கொடிஎடுப்ப கொன்றை முகம் மோதிரம் காட்ட
செல்லும் புறவின் தென்நாகைத் திருக்காரோணம் (சுந்தரர், தேவாரம் 7.101.3)

தூண்டா விளக்கு மணி மாட வீதிதோறும் சுடர் உய்க்க
சேண்தார் புரிசைத் தென்நாகை (சுந்தரர், தேவாரம் 7.101.4)

பருவன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர்
தெருவில் சிந்தும் தென்நாகை (சுந்தரர், தேவாரம் 7.101.5)

ஓடை உடுத்த குமுதமே உள்ளங்கை மறிப்ப புறம்கை அனம்
சேடை உடுத்தும் தென்நாகை (சுந்தரர், தேவாரம் 7.101.6)

கொடு மஞ்சுகள் தோய் நெடுமாடம் குலவு மணி மாளிகை குழாம்
இடு மிஞ்சு இதை சூழ் தென்நாகை (சுந்தரர், தேவாரம் 7.101.7)

தொள்ளை ஆம் நல்கரத்து ஆனை சுமந்து வங்கம் சுங்கம் இடத்
தொள்ளும் வேலைத் தென்நாகை (சுந்தரர், தேவாரம் 7.101.8)

முத்தம் கவரும் நகை இளையார் மூரித் தானை முடி மன்னர்
சித்தம் கவரும் தென்நாகை (சுந்தரர், தேவாரம் 7.101.9)

திரை கொண்டு அமரர் சிறந்து இறைஞ்சித் திருக் கோபுரத்து நெருக்கமலர்ச்
சிறைவண்டு அரையும் தென்நாகை (சுந்தரர், தேவாரம் 7.101.10)

தென்துருவம் என்ற ஒன்று இருப்பதினால்தானே மற்றதை நாம் வடதுருவம் என்று அழைக்கிறோம்? கடற்கலம் அணையும் நகரமாக புகழ் பெற்று விளங்கிய நாகையின் தென்பகுதி “தென்நாகை” என்றும், வடக்குப் பகுதியான நாகூர் “வடநாகை” என்று அழைக்கப்பட்டது.

நாகையந்தாதியில்,

தென்னாகை (குலாம் காதிறு, நாகையந்தாதி, பா.எ.39) 
நன்னாகை (குலாம் காதிறு, நாகையந்தாதி, பா.எ.88) 
பொழினாகை (குலாம் காதிறு, நாகையந்தாதி, பா.எ.97) 
அதிநாகை (குலாம் காதிறு, நாகையந்தாதி, பா.எ.91) 
வண்ணாகை  (குலாம் காதிறு, நாகையந்தாதி, பா.எ.95) 
மா நாகை (குலாம் காதிறு, நாகையந்தாதி, பா.எ.98) 

என்று பலவாறு புகழ்ந்து குறிப்பிடப்பட்டுள்ளது. புலவர் தனிநாயகம் நாகூரை,

சாதிப்படித் தண்டலைத் திருநாகை
கான்கெழு தீங்களிப் புண்டரீக
மலர்வன நாகை (நூர்மைதீன், வ.மு.அ. நெஞ்சையள்ளும் நாகையந்தாதி, ப.26)

எனப் பாடிய பாடலிருந்து நாகூர் இயற்கை எழில் கொண்ட இடமாகத் திகழ்வதை அறியமுடிகிறது. மேலும்,

கரும்புங் கமலமுந் தந்தமுத் தேழையர் கைநிறைக்குங்
கரும்புங் கமலமுந் தங்கண் ணுழத்தியர கார்குழற்க 
கரும்புங் கமலமுந் தம்பனை நாகையூர் காஜிகுலூர்
கரும்புங் கடலமுந் தல்லிகச் சூடிஎர் கைப்பிள்ளையே
(குலாம் காதிறு, நாகையந்தாதி, பா.எ.72) 

என்று இறைவனைப் போற்றிய போது அப்பகுதி வளத்தினையும் குலாம் காதிறு குறிப்பிட்டார். இசுலாமிய பெருமக்கள் உலகில் பல பகுதிகளிலிருந்தும் வந்து நாகூர் ஆண்டகையைக் கண்டு தொழுகின்றனர். இசுலாம் மதம் சார்ந்த மக்களைத் தவிர இந்து, கிருத்துவ மக்களும் நாகூரை அடைந்து வணங்குவதைப் பெரும்பேறாகக் கருதுகின்றனர். முற்காலத்தில், மேற்குப் பகுதியிலிருந்த நாகூர் பகுதி “மேலநாகூர்” என்றும் கிழக்குப்புறமிருந்த பகுதி “கீழநாகூர்” என்றும் அழைக்கப்பட்டது. நாகூரில் புலமை வாய்ந்தவர்கள் மிகுதியாக இருந்தமையால் “புலவர்க்கோட்டை” என்ற சிறப்பும் பெயரும் உண்டு. நாகூர் வடநாகையாகவும், நாகபட்டினமும் தென்நாகையாகவும் ஈருடல் ஓருயிராகவே செயல்பட்டன. ஒரு ஊரின் இரண்டு பகுதிகள் மருவூர்ப்பாக்கம, பட்டினப்பாக்கம் என்றழைக்கப் பட்டதைப் போல் நாகூரும் நாகப்பட்டினமும் ஓர் ஊரின் இருகூறாகக் கருதத் தக்கவை என்கிறார் இரா.பி.சேதுப்பிள்ளை. (தமிழகம் ஊரும்பேரும், பக்கம் :36) 1799-ஆம் ஆண்டு தஞ்சாவூர் பகுதி முழுவதும் ஆங்கிலேயர் வசம் ஆனபோது நாகபட்டினமும் நாகூரும் ஒரே நகராகக் கருதப்பட்டது. நாகூர் மாவட்டத் தலைநகராக இருந்தது. பின்னர் நாகப்பட்டினம் மாவட்டத் தலைநகரானது. 

உலக இசுலாமியர்களும் இந்துக்களும் இங்கு ஒவ்வொரு ஆண்டிலும் நடைபெறுகின்ற கந்தூரிக்கு வருவார்கள். இங்கு அடங்கியிருக்கும் ‘சாகுல் ஹமீதை வணங்கிச் செல்வர். காவிரிச் சமவெளியில் சமய வேறுபாடின்றி கூடி சிறப்புச் செய்யும் கோயில் ‘நாகூர் தர்கா’ என்பதால் இக்கோயில் தனிச்சிறப்புப் பெற்று விளங்குகிறது. இந்த தகவல்களை ஆங்கிலேயக் குறிப்பேடுகளில் காண முடிகின்றது. இத்தகைய பல்வேறு தொன்மைச் சிறப்புக்களை ஒருங்கே பெற்றது நாகையும் நாகூரும் ஆகும். மேலும் நாகை பற்றிய பல்வேறு ஆதாரங்களைப் பதிவு செய்வது தமிழ் மக்களின் கடமையாகும்.

துணைநூற்கள்
1.சுப்பிரமணியன்.ச.வே.(ப.ஆ.), சங்க இலக்கியம், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை 2008,
2.தட்சிணாமூர்த்தி.அ., 1980, தமிழர் நாகரிகமும் பண்பாடும், யாழ் வெளியீடு, அண்ணாநகர், சென்னை.
3.ஆ.பெ.இ., மூவர் தேவாரம், 1949, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை
4.தமிழ்வாணன், ம.,செந்தமிழ்க் காவிரியின் வளம், வெற்றிப்பதிப்பகம், சென்னை
5.குலாம் காதிறு, நாகையந்தாதி

drmaha08@gmail.com

 

* கட்டுரையாளர்: முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.) , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard